46
22-7-2012 இல் நடைபெற்ற ‘வாசிப்பு மனநிலை விவாதம்-2’ நிகழ்வு பற்றிய விபரம்.
எமது ‘பாரம்பரிய நடைமுறைக்கு ஒழுக’ குறிப்பிட்ட நேரம் பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவித்த நிகழ்வானது 1மணித்தியாலம் தாமதித்தே ஆரம்பமானது.
தேவதாசன் அவர்கள் இந்நிகழ்வில் பேசப்பட இருக்கும் ‘ஆறாவடு’, கசகறணம்’எனும் இரண்டு நாவல்களின் முக்கியத்துவம் பற்றிய ஓர் அறிமுகத்தை செய்தார். அதில் குறிப்பாக விமல் குழந்தைவேல் அவர்களின் படைப்பாற்றல் குறித்துப் பேசும்போது குழந்தைவேலின் முதலாவது நாவலான ‘வெள்ளாவி’யின் தனது வாசிப்பு அனுபவத்தூடாக அவரது இரண்டாவது ‘கசகறணம்’நாவலை வாசிக்கும்போது படைப்பாளியின் படைப்பாற்றல் மேலோங்கியிருப்பதை தன்னால் இனங்காணக்கூடியதாக கூறினார். அத்தோடு ‘கசகறணம்’ நாவலின் உள்ளடக்கத்தையும் சுருக்கமாக கூறினார். சயந்தன் அவர்களின் ‘ஆறாவடு’ நாவலின் இன்றைய அவசியம் குறித்தும் அந்நாவல் கூறும் தகவல்களும், அதில் இடம் பெறும் உரையாடல்களும் மிகச் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் கூறினார்.
ஆறாவடு’ நாவல் குறித்த தனது வாசிப்பு மனநிலை அனுபவத்தை நண்பர் அரவிந் அப்பாத்துரை அவர்கள் பாகிர்ந்து கொண்டார். அரவிந் அப்பாத்துரை அவர்கள் மொழி பெயர்ப்பாளராகவும்,தொடர்ச்சியாக நாவல்கள் கவிதைகள் என பல நூல்களை எழுதிவரும் ஓர் இலக்கிய ஆர்வலருமாகும். தனது ‘ஆறாவடு’ வின் வாசிப்பு அனுபவத்தை இவ்வாறு கூறுகின்றார்:
” இந்நாவலில் வரும் விடயங்கள் பலராலும் அறியப்பட்ட விடயமாக இருப்பினும் பலாராலும் பேசப்படாத விசயமாகவும் இருக்கின்றது. முடிவடைந்த ஓர் போர்க்கால சூழலை வாஞ்சையுடனும்,மதிப்புடனும் பதிவுசெய்யும் ஓர் நாவலாக நான் இதை பார்க்கின்றேன்.இதில் இரண்டு விதமான கதை நகர்வதை நான் பார்க்கின்றேன் ஒன்று சமூகத்தின் பிரச்சனை குறித்து பேசுவதான ஒரு போக்காகவும்,மற்றொரு வகையில் தனிமனிதனின் வாழ்க்கை முறையை அடிப்படையாக அமைந்த ஒரு போக்காகவும் நான் இதைப் பார்க்கின்றேன். double storylineஆக இந்த நாவல் சென்று கொண்டிருக்கின்றது. நீர்கொழும்பிலிருந்து இற்றாலி நோக்கி பயணம் செய்யும் தனிமனித வாழ்க்கை முறையைக்கொண்ட ஒரு கதை சொல்லப்படுகின்றபோதும்,இதில் சமூகப்பிரச்சனை பற்றிக் கூறப்படும் சம்பவங்களே மிக முக்கியமான விசயமாக நான் பார்க்கின்றேன். அதாவது 30 வருடங்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த ஒரு யுத்தப் பிரதேசத்தில் அதிகாரங்கள் யார் கைகளில் இருந்தன, அவ்வதிகாரங்களானது எவர் நலன்களுக்காக பிரயோகிக்கப்பட்டன என்ற விடயமே இந்நாவலில் துல்லியமாக பேசப்படுகின்ற விடயமாக நான் கருதுகின்றேன். இந்த நூல் வந்து எனக்கு மிக நெருக்கமான நூல் என்று சொல்லலாம். ஏன் தெரியுமா..இதே கதையை நானும் எழுதியிருக்கின்றேன். ‘திரு நீலசதிர்’ எனும் எனது நாவலிலும் இதே கதை வருகின்றது. எனது நாவலிலும் நீர்கொழும்பிலிருந்து இற்றாலி நோக்கி வரும் பயணம் சித்தரிக்கப்படுகின்றது. இரண்டிற்கு மிடையிலேயான உள்ளடக்கங்களில் சில வேறுபாடுகள் இருந்தாலும் எனது நாவலில் வரும் சில சம்பவங்கள் ’ஆறாவடு’ நாவலிலும் வருகின்றது என்பது முக்கியம். ஆறவடுவின் 9வது அத்தியாயத்தில் வரும் தேவி எனும் பாத்திரமும், 10வது அத்தியாயத்தில் வரும் பெரிஐயா எனும் பாத்திரங்களின் வகையிலேயே எனது நாவலில் வரும் லதா,றாதா எனும் பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. எனது நாவலை சயந்தன் அவர்கள் படித்திருப்பாரோ தெரியாது இருந்தபோதும் இலக்கியத்தில் இவ்வாறான் ஒன்றை ஒன்று தழுவிய சுயமான நெருக்கம் என்பது விமர்சனப்போக்கிற்கு மிக ஆரோக்கியமானதாகவே நான் கருதுகின்றேன். மேலும் ’ஆறாவடுவில்’ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதான விமர்சனம் என்பது சரியாக முன்வைக்கப்படவில்லை. அதில் ஒரு மென்மையான போக்கு கடைபிடிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம், தமிழ் செல்வன் புகலிட மக்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு ஓடியவர்கள் எமக்கு பயன் அற்றவர்கள் என்பதாக கூறப்படுகின்றது. பிரபாகரன் அப்படியல்ல போராட்டத்தை முன்னெடுக்கக்கூடியவர்கள் புகலிட மக்களே என்று தீர்க்க தரிசனமாக அவர் கூறியிருக்கின்றார் என்பதாக நாவலில் வலியுறத்தப்படுகின்றது.”
இவ்வாறான பார்வையுடன், நாவலில் தன்னை பாதித்தை சில பாத்திரங்களினதும், சம்பவங்களினதும் தன்மைகளையும் விபரித்து கலந்துரையாடலில் தொடர்ந்து பேசுவதாக தனது உரையை நிறைவு செய்தார்.
கலந்துரையாடலின் சுருக்கம்
மனோ: உங்கட நாவல் வெளிவந்தது எந்தக்காலம்.
அரவிந் அப்பாத்துரை: 2009 இல் யுத்தம் முடிந்த பிற்பாடு.
மனோ: இங்க வந்து ஆறாவடுவில் சொல்லப்படும் பிரதான கதை என்பது நீர்கொழும்பிலிருந்து இற்றாலிக்கு வரும் பயணம் என்பதல்ல. 30 வருடத்திற்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தின் விளைவுகளால் பாதிப்பிற்குள்ளான ஒர் சமூகத்தின் அவலத்தை பிரதிபலிப்பதே இதனது பிரதான உள்ளடக்கமாக நான் பார்க்கின்றேன். அந்த சமூகப் பிரச்சனையை இந்த நாவல் பிரதானமாக பேசுவதால்தான் நாங்களும் இங்கு கூடியிருந்து பேசவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. அந்த அவலத்தை சொல்வதற்காக எடுத்துக்கொண்ட ஒரு வழிமுறைதான் இந்த இற்றாலிப் பயணம். அந்தப் பயணமே இதனது பிரதான அம்சம் அல்ல. அவர் இந்த இற்றாலிப் பயணத்திற்கு பதிலாக வேறு உத்திகளைக் கூட அவர் கையாண்டிருக்கலாம். இங்கு பரிசில இருந்து செல்வரட்ணம் என்பவரால் ‘முற்றம்’ எனும் சஞ்சிகையில் ‘அகதியாக ஆசைப்படுதல்’ எனும் கதை தொடராக எழுதப்பட்டு வந்தது. அந்தக் கதையும் இலங்கையிலிருந்து இற்றாலிக்கு வருவதான ஒரு பயணக்கதையாகவே இருந்தது. அந்தக்கதைக்கும் உங்களது நாவலுக்கும் தொடர்புள்ளதாக கருதலாமா?
அரவிந் அப்பாத்துரை:இருக்கலாம், இப்பவந்து பார்த்தீர்களென்றால் இலங்கையிலிருந்து இற்றாலி வருவதான கதையை பலர் எழுதும் பட்சத்தில் அக்கதைகள் எவ்வாறான தனித்துவங்களை கொண்டிருக்கும் என்பதுதான் இங்கு முக்கியம். என்னுடைய கதைகள் எல்லாமே double storyகதைகளாகவே இருக்கும். பிரதான கதை என்பது அங்கிருந்து வெளிக்கிட்டு இங்கு வருவதுதான் கதை ஆனால் அதற்குள் பல்வேறு சமூகப் பிரச்சனைகளை கூறுவதாக அமைந்திருப்பதுதான் இதிலுள்ள முக்கியத்துவம். நீங்கள் கூறுவதுபோல் நேர்கோட்டு கதைசொல்லும் பாணியையும் பயன் படுத்துகின்றார்கள். இதில் பயணத்தில் ஆரம்பித்து பல்வேறு சமூகப் பிரச்சனைகளும் பேசப்படுகின்றது. இதில் வரும் புத்தி ஜீவிகள் என்று சொல்லப்படுபவர்களது சந்தர்ப்பவாத போக்கை இந்த நாவலில் நேரு ஐயா எனும் பார்த்திரத்தினூடாக மிக நன்றாக சித்தரித்திருக்கின்றார்.
இப்படியான மனிதர்களை நான் நேரிலே பார்த்தும் இருக்கின்றேன். இந்த நேரு ஐயா எனும் பாத்திரம் பொதுவாக மக்களின் அக்கறையுடன் உரையாடுவதாக சித்தரிக்கும் அதேநேரத்தில் அவரது சந்தர்ப்பவதா போக்காக புலிகளின் மேடைகளில் பிரபாகரனை புகழ்ந்து பேசுவதாகவும் காட்டப்படுகின்றது. மற்றது என்னுமொரு முக்கியமான விசமாக நான் பார்க்கின்றேன் என்னவேன்றால் இந்த 30 வருடத்திற்கு மேலான யுத்த அவலத்தால் சிங்கள மக்கள் எவ்வாறு தமிழ் மக்களை புரிந்துகொண்டுள்ளனர். தமிழ் மக்கள் சிங்கள மக்களை எவ்வாறு புரிந்து கொண்டுள்ளனர் என்பதற்காரன காரணங்களும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.
மனோ: பொதுவாக நாம் எந்த நாவலை, சிறுகதைகளை படித்தாலும் எங்களை கவர்ந்த எங்களை வீட்டு நீங்காத சில அம்சங்கள் இருக்கத்தான் செய்யும். அவ்வாறான ஒரு மன நிலையில் தான் நீங்களும் பேசுகின்றீர்கள் அவ்வாறு உங்களுக்கு பிடித்த சில விடயங்கள் குறித்தே நீங்கள் பேசுகின்றீர்கள் அது நல்ல விசயமே. மற்றது நீங்கள் குறிப்பிட்ட நேரு ஐயா எனும் பார்த்திரத்தை நான் ஒரு முரண்பட்ட பாத்திரமாக பார்க்கவில்லை. இந்த நேரு ஐயா பாத்திரத்தையே நான் இந்த நாவல் ஆசிரியராக பார்க்கின்றேன். இந்த நாவல் வந்து மிக பவுத்திரமாக, மென்மையாக சமூகத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் நாவலாக இருக்கின்றது. எமது சமூகத்தில் வந்து நாம் எதைப்பேசினாலும் ஒரு தமிழ்த் தேசிய ஓட்டத்தைகாணலாம். தமிழரசுக் கட்சி, கூட்டணி, விடுதலைப்புலிகள் இவைகளே தமிழ் முகமாக இருக்கின்றது. இவற்றை விமர்சிப்பதற்கு அப்பால் இதுதான் யதார்த்தம். இந்த ஓட்டத்தில் வந்து இதற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தக்கருத்தும் நிராகரிக்கப்படும். அதே ஓட்டத்தில் செல்லுகின்ற சின்ன சின்ன அசைவுகளும் பெரிய மாற்றங்களை கொண்டு வரும். இந்த நாவலில் முக்கியமாக நேரு பாத்திரத்தின் ஊடாக சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கியமான கருத்துக்களும், நாவலை கவனம் கொள்ளும் கருத்துக்களுமாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் குறித்த விமர்சனத்தை மிக நுட்பமாக நேரு பாத்திரத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களே தம்மைத் தாமே உணர்ந்து கொள்ளும் வகையில் அந்த விமர்சனங்கள் அமைந்திருக்கின்றன.
நண்பர் சோபாசக்தி அவர்கள் கனக்க எல்லாம் எழுதுவார். அவர் விடுதலைப்புலிகள் பற்றி எழுதும்போது அது ஒரே அடியாக இருக்கும். புலிகள் தரப்பில் எந்த அசைவும் நிகழாது. எதிர் தரப்பினரை திருப்திப்படுத்துவதாகவும், அதோடு மாற்று இலக்கியம்,மறுத்தோடி இலக்கியம் படைப்பது போன்ற பதிவுகளே அவரது படைப்புகளில் துல்லியமாக தென்படும். ஆனால் ‘ஆறாவடு’ போன்ற நாவல்களால் சமூத்தில் முக்கியமான அசைவுகள் நிகழும். அந்த வகையில் இந்த நாவலில் விடுதலைப் புலிகள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் ஒன்று இரண்டு விமர்சனங்களாக இருப்பினும் அவை மிக முக்கியமான விமர்சனம். அதை இல்லை என்று மறுக்க முடியாது.
அசுரா: இப்ப வந்து நாங்கள் இதை நாவல் என்ற கருத்து நிலையில் வைத்து உரையாடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ‘ஆறாவடு’ குறித்து பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற விமர்சனங்களின்படி இது ஒரு நாவலே அல்ல. இது பல சிறுகதைகளை இணைத்து ஒருவாக்கப்பட்ட ஒன்று என்கின்ற கருத்து நிலை பற்றி மனோ நீங்க என்ன நினைக்கின்றீர்கள்.
மனோ: இதை வந்து சிறுகதைகளின் தொகுப்பாகவும் நான் வாசித்திருக்கின்றேன்.இதில் ஒவ்வொன்றும் தனிப்பட்ட சிறுகதைகள் தான். இலக்கியத்தில் வந்து நாவல், சிறுகதை, கவிதை போன்ற கட்டமைப்பிற்குள் வைத்து வாசிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதை ஒருவர் நாவல் என்று சொல்லலாம், நாவல் இல்லை என்று சொல்லலாம். எனக்கு வந்து ஒரு நல்ல இலக்கியமாக படுகின்றது. சில சில விமர்சனங்களுக்கு அப்பால் எழுத்துச் செழுமையும், எனக்கு வாசிப்பு உந்துதலையும் தந்துள்ளது. நான் நன்றாக ரசித்திருக்கின்றேன். இது நாவலா, நாவல் இல்லையா என்ற விடயம் எனக்கு அவசியம் இல்லை.
அசுரா: இந்த ஆறாவடு நாவல் குறித்து வெளி வந்த அனைத்து விமர்சனங்களையும் நான் அவதானித்து வருகின்றேன். அந்த வகையில் கனடாவில எமக்கு தெரிந்த நண்பர் வின்சன்போல் அவர்களது இந்நாவல் குறித்த விமர்சனமானது எனக்கு மிகவேதனையை தந்தது. ஒரு இலக்கியப் படைப்பை இது நாவல் இல்லை, நாவல் எனும் பெயருக்குரிய எந்த தகுதியும் கொண்டதல்ல என்ற வகையில் கூறியதோடு, இப்பிரதியில் உள்ள பல்வேறு முக்கிய அம்சங்களையும் கவனம்கொள்ள தவறிவிட்டார்.புகலிடத்தில் வெளிவந்த பல சஞ்சிகைகள் சிலரது எழுத்துக்களை தகுதியற்றவை, தரமற்றவை, கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவை, என நிராகரித்திருந்தன.அப்படைப்பாளர்களையும் அவர்களது படைப்புகளையும்,அதன் தனித்துவங்களையும் கவனத்தில் கொண்டு இவ்வாறாக ஒற்றை நிலைப்பாட்டில் நிராகரிக்கும் படைப்புகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்திற்காகவே ‘நாட்டாமை’ எனும் ஒரு சஞ்சிகை வெளிவருவதற்கு காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் வின்சன்போல் அவர்கள். பின்நவீனத்துவ அறிமுகத்தோடு, பன்முகப் பார்வை குறித்தும் அதனது முக்கியத்துவம் குறித்தெல்லாம் பேசிய ஒருவர் ஒரு இலக்கியப்பிரதியை அடையாளத் தகுதி காரணமாக நிராகரித்ததென்பதே எனது வேதனையாகும். அவர் மட்டுமல்ல புகலிடத்தில் பலரும் ‘ஆறாவடு’ நாவல் அல்ல, அது அரசியலை பேசவில்லை என்பதாகவே தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதில் ‘ஆறாவடு’மீதான எனது வாசிப்பு அனுபவம் என்ன என்பதையும் நான் கூறவேண்டும் இது நாவலா நாவல் இல்லையா, சிறுகதைத் தொகுப்பா, அரசியலை பேசுகின்றதா இல்லையா போன்ற கருத்து நிலையை இப்பிரதியில் நான் தேடவில்லை. நாவல் என்பதற்கான எழுத்தாழுமைகள் தனித்துவமானது. குறிப்பாக தமிழில் எமக்குத்தெரிந்த மூத்த நாவலாசிரியராக எஸ்.போ அவர்களைக் கூறலாம். பல படைப்பாளர்களுக்கு ஆதர்சமாகவும் எஸ்.போ அவர்கள் இருந்துவருகின்றார். சயந்தன் போன்றவர்கள் எழுதும் இவ்வாறான பிரதிகளின் முக்கியத்துவம் என்ன? இதில் நாவலுக்கான நுண்ணிய தகுதிகளையெல்லாம் நாம் தேடவேண்டிய அவசியமில்லை. சமூகத்தில் நிகழ்ந்த அவலமும், அந்த அவலத்தின் பங்குதாரர்களின் குற்ற உணர்வுகளோடும், மனச்சாட்சிகளுடனும் உரையாடும் ஒரு உளவியில் தொகுப்பாகவே நான் ‘ஆறாவடுவை’ புரிந்துகொண்டேன். உதாரணத்திற்கு ஒன்றைக் கூறலாம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் நாவற்குழியில் நெரிபட்டு நிற்கும்போது இயக்கமும் வானில் வந்து அம்மக்களுக்குள் நின்று தமக்கு வழிவிட்டு விலகுமாறு மிரட்டும்போது, உங்களை அடையாளம் கண்டு கெலி எங்களுக்கு மேலேயெல்லோ குண்டு போடப்போறாங்கள் என மக்கள் இயக்கத்தை திட்டுகின்றார்கள். இதை மக்கள் கூறும்போது இயக்கத்திலுள்ள அமுதனுக்கு இயக்கத்தில் கோபம் வருகின்றது. அதே கணம் தானும் இயக்கம்தானே என எண்ணுகின்றபோது மக்கள் மீது அவனுக்கு கோபம் வருகின்றது. இயக்கம் எனும் அதிகார உளவியலுக்கும், மக்கள் எனும் மானுட நேசத்தின் வெளிப்பாட்டு உளவியலும் இந்த உரையாடலில் மிக நுட்பமாக, துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்றது வந்து புலிகளில் இணைந்து போர்புரிந்தவர்கள் எல்லோரையும் விடுதலைப்புலிகளின் அதிகாரத்தலைமைகளுடன் தொடர்பு படித்தி பார்க்க முடியாது ஒருவர் புலிகளில்இணைந்து கொண்டதற்கான காரணங்கள் பல வகையாக இருந்திருக்கின்றது.
வாலைப்பிடித்து விலகமுடியாது இருந்தவர்கள், காதலில் விரக்தியுற்று புலிகளில் இணைந்தவர்கள், பெற்றோரை மிரட்டுவதற்காக புலிகளில் ஐக்கியமானவர்கள் என பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் புலிகளில் இணைந்தவர்களையெல்லாம் புலிகளின் அதிகார மையத்துடனும், அவர்களுது அரசியல் அபிலாசைகளுடனும் தொடர்புடையவர்களாக கருதிவிடமுடியாது. இவ்வாறான பல்வேறு மனநிலையில் உள்ளவர்களின் உளவியைலை பேசுவதாகவே நான் இந்த ‘ஆறாவடு’ எனும் இலக்கியப் பிரதியை பார்க்கின்றேன். எமது சமூகத்தில் நிகழ்ந்த அவலங்களை பேசுகின்ற ஓர் மனச்சாட்சிதான் ‘ஆறாவடு’. எனவே இவ்வாறான பிரதிகளை நாவல் என்றோ, சிறுகதைத்தொகுப்பென்றோ அடையாளப்படுத்தாமல் இவ்வாறான இலக்கியப் படைப்புகளை தனித்துவமான ஒரு அடையாளத்தில் வகைப்படுத்தமுடியாதா?
மனோ: இல்லை இது என்னவாகவும் இருந்துவிட்டு போகட்டும் வின்சன்போல் நாவல் இல்லை என்றதற்காக இது நாவ்ல இல்லை என்றாகிவிடாது.
அசுரா: வின்சன் போல் மட்டுமல்ல அநேகமானோர் இதை நாவல் இல்லை என்றே கூறுகின்றனர்.
மனோ: நாவல் என்று எழுதப்பட்டதெல்லாம் ஒரு தரமான நாவலுக்குரிய தகைமைகளை பெற்றிருக்கின்றதா? இல்லையே?
சோபாசக்தி: சரி நான் ஒரு கருத்தை சொல்லுகின்றேன். வந்ததற்கு நானும் சொல்லத்தானே வேணும். விமர்சனத்தில் வந்து இரண்டு விதமான விமர்சனத்தை பொதுவாக சொல்லுவார்கள். ஓன்று இரசனை விமர்சனம்,மற்றொன்று கோட்பாட்டு விமர்சனம். இரசனை விமர்சனத்திற்கு வந்து கா.சு, நகுலன் போன்றவர்களையும், கோட்பாட்டு விமர்சனத்திற்கு கைலாசபதி,சிவத்தம்பி போன்றவர்களையும் சொல்லுவார்கள். அது எமக்கு தேவையில்லை. எல்லோருக்கும் பிடித்த ஒரு எழுத்தாளர் இருக்கமுடியாது. தமிழிலும் இல்லை, உலகத்திலும் இல்லை. டானியல் எங்களுக்கு பிடித்த எழுத்தாளர். டானியலுக்கு எழுதத்தெரியாது என பலர் சொல்லுவார்கள். சுந்தரராமசாமி கூட சொல்லுவார் டானியலுக்கு எழுதத்தெரியாது என்று. எஸ்.போ கூட டானியலை ஒரு எழுத்தாளராக ஏற்றுக் கொள்வதில்லை. சுந்தரராமசாமி ஒரு எழுத்தாளர் இல்லை என்று சொல்பவர்களும் பலர் இருக்கின்றார்கள். எல்லோருக்கும் பிடித்ததாக ஒரு பிரதி இருப்பதில்லை. அவரவர் இரசனைக்கு ஏற்ப, அவரவர் அரசியல் கோட்பாடுகளுக்கு ஏற்பவே பிரதிகளை அணுகுவார்கள். எங்களுக்கு டானியலின் ‘பஞ்சமர்’ நாவல் வந்து ஒரு வேதாகமம். ஆனால் பார்ப்பனர்களுக்கு வந்து அது மாறாகத் தெரியும். தளையசிங்கம் அவர்கள் கூட டானியலின் எழுத்துக்களை பிரச்சார இலக்கியம் என ஒதுக்கிவிடுவார். எஸ்.போ அவர்களின் எழுத்தை நச்சிலக்கியம் என்று கூறுபவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் எஸ்.போ அவர்களும் எங்களுக்கு முக்கியமான எழுத்தாளர். சுந்தரராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகள் வந்து தமிழில் திருப்புமுனை நாவல் என இன்றுவரை சொல்லுபவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் ஜே.ஜே சில குறிப்புகளை வயிறு பத்தி எரிந்து கொண்டே வாசித்தோம். ஏனெனில் அதுவந்து ஒரு கொம்யூனிஸ்ட் எதிர்ப்பு நாவல். ஒரு எழுத்தாளன் அழகாக எழுதுகின்றான் அழகில்லாமல் எழுதுகின்றான்,துல்லியமாக எழுதுகின்றான் துல்லியமற்று எழுகின்றான் என அனைத்தையும் தாண்டி அவன் அறம் சார்ந்து, உண்மை சார்ந்து எழுதவேண்டும் என்பதே என்னைப்பொறுத்த வரையில் முக்கியமானது. இந்த நாவல் வரும்போது முதலாவது விமர்சனம் என்னுடைய விமர்சனமாகவே இருந்தது. இது வந்து அழகான இலக்கியப் பிரதி மிகச் சின்ன வயதில் ஆச்சரியம் தரக்கூடிய வகையில் எழுதியிருக்கின்றார். கவனமான எடிட்டிங், நறுக்கான எழுத்துக்கள். ஆனால் இது ஒரு அரசியலற்ற நாவல் இந்த நாவல் தனக்கென்று சொந்தமான அரசியலை பேசவில்லை. ஒரு நாவல் கண்டிப்பாக ஒரு அரசியல் பொயின்ட் எடுக்கவேண்டும் எண்ற எந்த அவசியமும் இல்லை. ஆனால் நான் அதை எதிர்பார்ப்பேன். நான் அப்படித்தான் எழுதுவேன். இந்த நாவல் அப்படி எழுதாதது குற்றமும் அல்ல. இதுதான் என்ர விமர்சனம். நான் அதை எதிர்பார்ப்பேன். அவ்வளவுதான். இந்த நாவலில் வரும் நேரு ஐயாவின் உரையாடலைத்தான் இந்த நாவலும் பேசுது. நேரு ஐயாவின் மனதிற்கு தெரியும் செய்வதெல்லாம் பிழை என்று. ஆனால் அவர் மேடையில் வேறொன்றை பேசுவார். காசுக்காக எதையும் செய்வீர்களா எனும் கேள்விக்கு ஒப்கோஸ்ட் என சொல்லுவார். எனக்கு இந்த நாவலூடாக மட்டும் தான் சயந்தனை தெரியுமென்றில்லை. கடந்த எட்டு,ஒன்பது வருடமாக நான் இவரை கவனித்துக்கொண்டு தான் வருகின்றேன்.
அறம் சார்ந்த கேள்வி என்று வரும்போது முள்ளிவாய்க்கால் என்ற சம்பவம் நடந்திருக்காவிட்டால், விடுதலைப்புலிகளின் தலைமை அழிந்திருக்காவிட்டால் இப்படி ஒரு காலச் சூழல் மாறாவிட்டால் இந்த நாவல் வந்திருக்குமா? இதுதான் நான் சொல்லும் அறம் சார்ந்த கேள்வி என்பது. அவ்வளவுதான்.
அரவிந் அப்பாத்துரை: இல்லை இந்த நாவலில் அரசியல் பேசப்பட்டிருக்கின்றது. ஒரு இலக்கியப்படைப்பிற்கான சிறம்பம்சத்திற்கு மூன்று கூறுகள் இருக்கின்றன. எப்படியென்றால் விவாதத்தில் நிலை நாட்டப்பெற வேண்டிய விடயம் (thesis) விவாதத்தில் நிலைநாட்ட மறுக்கும் விடயம், (antithese) கூட்டிணைப்பு விடயம் (synthesis) இந்த நாவலில் இந்த விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றது எப்படியென்று சொன்னால்: முதலில் விடுதலைப்புலிகள் நல்லவர்கள் (thesis) இரண்டாவது விடுதலைப்புலிகள் கெட்டவர்கள் (antithese) மூன்றாவது விடுதலைப்புலிகள் கெட்டவர்களும் தான் நல்லவர்களும் தான் (synthesis) என்பது. இந்த மூன்று விடயங்களும் இங்கு பேசப்படுகின்றது. இது வந்து நேரடியாக அரசியல் முரண்பாடுகளை மட்டுமே பேசும் நாவல் அல்ல. அரசியலை நேரடியாக முன்வைக்கும் நோக்கம் இதில் இல்லை. இருப்பினும் மேற்கூறிய மூன்று அரசியல் நிலைப்பாடுகளை நாம் இதில் காணலாம்.
சோபாசக்தி: மூன்று நிலைப்பாடுகள் என்பது நிலைப்பாடுகள் இல்லை என்பதுதானே?
வாசுதேவன்: மூன்று நிலைப்பாடுகளை மறுக்கின்ற நீங்கள் மார்க்சிய தியறியையே தூக்கி வீசுகின்றீர்கள்.
சோபாசக்தி: மார்க்சிய தியறியா?
வாசுதேவன்: ஹெகல் வந்து இந்த மூன்று நிலைப்பாட்டை வைத்துத்தான் ஒரு தத்துவத்தை முன்வைக்கின்றார்.
சோபாசக்தி: அது ஹெகலியம்.
வாசுதேவன்: அதே தத்துவத்தை மார்க்ஸ் வந்து பொருளாதாரத்திற்கு முன்மொழிகின்றார். இந்த மூன்று நிலைப்பாடுகளை இல்லையென்றால் மார்க்சியம் சீரோ.
சோபாசக்தி: அவர் இந்த மூன்று நிலைப்பாடுகளை சொல்லுகின்றார் அல்லவா, நான் சொல்லுகின்றேன் இந்த மூன்று நிலைப்பாட்டில் ஏதாவதொன்றை தேர்ந்து கொள் என்று. அதுதான் எனது தேர்வாக இருக்கும்.
வாசுதேவன்: மூன்று நிலைப்பாடும் எப்போதும் உறுதியாக இருக்காது. ஏனென்று சொன்னால். எதிலிருந்து தொகுப்பு கருத்து வருகின்றதோ: கருத்து, எதிர்கருத்து, தொகுப்புக் கருத்து என்பதாக.இந்த தொகுப்பு கருத்தே திரும்பவும் எதிர் கருத்தாக மாறக்கூடிய சூழல் இருக்கு. இதைத்தான் இயங்கியல் என்பது. இந்த கருத்து முதல்வாத கோட்பாட்டை மார்க்ஸ் பொருளாதாரத்திற்குள் அடக்கினார். இந்த முறை இல்லை என மறுத்தால் முற்றாக மார்க்சியத்தை மறுப்பதாகும்.
சோபாசக்தி: இப்படி பேசலாம். நடைமுறையில் இருந்து ஒன்றை சொல்லுகின்றேன். லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டார். சமாதான காலத்தில் கொல்லப்பட்ட முதலாவது கொலை. கதிர்காமரை கொலை செய்தவர்கள் என்று கேள்வி வந்தபோது புலிகள் கொலைசெய்திருப்பார்கள் ஒன்று. அரசாங்கம் கொலை செய்திருக்கும் இரண்டு. இல்லாது போனால் அவரே தற்கொலை செய்திருப்பார் மூன்று. இந்த மூன்றையும் முன்வைத்து விட்டு நீங்கள் ஒதுங்கிவிட முடியாது. நீங்கள் ஒரு உண்மைக்கு வரவேண்டும். அல்லது கண்டாவது பிடிக்க முயற்சிக்கவேண்டும்.
வாசுதேவன்: இதில் ஒரு விசயத்தை நீங்கள் கவனிக்கவேணும் அவர் ஒரு நாவல் ஆசிரியர். எல்லாத்திற்கும் அப்பால் நல்ல இலக்கிய வாதி. இந்த பொய் விவாதத்திற்குள் நான் வரவில்லை.
சோபாசக்தி: அது என்ன பொய் விவாதம்.
வாசுதேவன்: பொய் விவாதம் என்பது: இது என்ன பகுதி, இது நாவலாக இருக்குமா? கவிதையாக இருக்குமா என்பதெல்லாம் ஒரு பொய் விவாதம்.
சோபாசக்தி: இரண்டு மணி நேரமாக நாங்கள் கஸ்ரப்பட்டு விவாதித்துக் கொண்டிருக்கின்றோம் நீங்கள் அதை பொய் என்று ஆக்கிவிட்டீர்கள்.
வாசுதேவன்: பொய்யான விவாதம் என்று எதை குறிப்பிட்னே என்றால், இது நாவலே இல்லை என்ற கேள்வியை நாம் எழுப்புவோமென்றால் எத்தனையோ வகையான நாவல்களை வகைப்படுத்துவதற்கான தேவையில்லாது ஒதுக்கிவிடும். நாவல் எனும் வகைப்படுத்தலுக்குள் எத்தனையோ வகையான நாவல்கள் இருக்கின்றது. இதை மறுக்கும் பார்வையைத்தான் பொய்யான விவாதம் என்று சொல்லுகின்றேன். முதலில் நல்ல இலக்கியம், அழகியல் சார்ந்த எழுத்து என்பதற்கு பிற்பாடு இந்த நாவலின் கருத்து நிலைப்பாடு என்னவென்ற நிலைக்கு வந்தோமென்றால் இது சமூகத்தின் உளவியலை ஆய்வு செய்கின்றது. நாவல் வாசிக்காதபடியால் அவர் (அசுரா) சொன்னதிலிருந்து நான் சொல்லுகின்றேன் நாவற்குழி சம்பவத்தில் ஒருவனின் மனநிலை மாற்றம் எப்படி நிகழ்கின்றது.
சோபாசக்தி: நீங்க நாவலை வாசிக்கவில்லையா?
வாசுதேவன்: நான் வாசிக்கவில்லை நான் என்ன சொன்னேன் இப்ப, இல்லாது போனால் மிக ஆழமாகப்போயிருப்பேன்.
சோபாசக்தி: இல்ல அதை ஜீரணிக்க கஸ்டமாக இருந்தது அதுதான். சரி சரி..
வாசுதேவன்: நீங்கள் பேசியதிலிருந்து பேசுகின்றேன். இதில் இரண்டு விசயம் உள்ளடக்கம், வடிவம். வடிவத்தைப்பற்றியே நீங்கள் இவ்வளவு நேரமும் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். பிறகு உள்ளடக்கத்தில் வந்து சொல்லுகின்றீர்கள் அரசியல் இல்லை என்று. என்னைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு விசயத்தையும் எடுத்துகொண்டால் நான் முழுசாக வாசிக்காது போனாலும் சில பக்கங்களை வாசித்ததிலிருந்து, எழுத்தில் அழகியல் மிக கவர்ச்சியாக இருந்தது. ஆனால் இவர் (அசுரா) சொன்னமாதிரி ஒரு உளவியலை பேசுது. அந்த உளவியலுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடோ, அல்லது ஒரு இன்ஸ்பெக்டர் விசாரிப்பதுபோல் இதற்கு யார் குண்டுவைத்திருப்பார்கள். யார் கொன்றிருப்பார்கள் போன்று இது ஒரு துப்பறியும் நாவலுமல்ல. இது ஒரு சமூக உளவியலை வெளிப்படுத்துகின்ற வகையிலும் அதைபிரயோகிக்கின்ற அழகியல் என்ன என்பதுதான் முக்கியமாக பார்க்கவேண்டிய விடயமாக நான் பார்க்கின்றேன்.
சோபாசக்தி: நாவல் வந்து சமூக உளவியலை வெளிப்படுத்துவதாக சொல்ல ஏலாது. நாவல் வந்து நாவல் ஆசிரியரின் நிலையைத்தான் வெளிப்படுத்துகின்றது.
வாசுதேவன்: நாவல் ஆசிரியரும் சமூக மனிதன் தானே!!
சோபாசக்தி: அவர் சமூக மனிதன்தான் அந்த வகையில் சரிதான். இந்த நாவலில் விவரிக்கப்படும் அனைத்து விடயங்களையும் நாவலாசரியர் அருகில் இருந்து பார்த்தவரல்ல. அவர் அவ்வாறு யோசிக்கின்றார், கற்பனை பண்ணுகின்றார். அவர் சமூகத்தை நோக்குகின்ற உளவியல் எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறே நாவலின் உளவியலாகவும் பெரும்பாலும் அமையும். இதைத்தான் நான் எனக்கு தெரிந்த படைப்பு நுட்பம்,உண்மை என்று கருதுகினறேன். எனக்கு பெரிய ஆச்சரியம் வந்து இந்த சின்ன வயசில மிக குறைவாக எழுதின ஒருவர் திடீரென இப்படி ஒரு நாவலை, கட்டுக்கோப்பாகவும், இறுக்கமாகவும் எழுதினது. இதில் தேவையில்லாத வசனம் என்று எதுவும் இல்லை. எனக்கு படிக்கும்போது சில குழப்பம் இருக்கும் அது வேற பிரச்சனை. இது வந்து ஒரு நாவலாகவும் இலக்கியப்பிரதியாகவும் இருக்கின்றது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அண்மையில் சசீவன் அவர்கள் பேசியதையும் கேட்டேன்அவர் சொல்லுகின்றார் இது வந்து ஒரு நாவலாக இல்லை ஒரு தொகுப்பாகவே இருக்கின்றது என்று. அதுசரி இருக்கலாம். அது அவரது பார்வை. இது ஒரு அழகான இலக்கியப் பிரதி என்பதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. ஆனால் இந்த நாவல் பேசுகின்ற அறம் சார்ந்ததுதான் எனது கேள்வி. இது குறித்து நான் ஏற்கனவே விளங்கப்படுத்தியிருக்கின்றேன் என நினைக்கின்றேன் இனி மேற்கொண்டு பேசுங்க.
வாசுதேவன்: இதில் ஒரு சின்ன விடயத்தை நான் கூறுகின்றேன். எழுத்தில் இருக்க்கூடிய அறம் சார்ந்த விடயங்கள் என்ன என்பது குறித்து. என்னைப் பொறுத்தவரையில் எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அறம் என்பது தான் நம்புகின்ற விடயத்திற்கு நேர்மையாக இருப்பதென்பதுதான். கட்டாயமாக பொதுவான அறம் என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை. அந்தவகையில் இந்த அறம் சார்ந்தது என்ற கருத்தியலை எடுத்துக் கொண்டால் மற்றவனை விட நான் கொஞ்சம் புத்திக்கூர்மை உள்ளவனென்றால், அல்லது ஒரு தந்திர உணர்வு எனக்கு இருக்குமென்றால், அல்லது அறிவியல் நிறுவல்களை தவிர்த்து தந்திர உபாயாமான வகையில் ஒரு கருத்தை கட்டமைப்பவனாக இருப்பின் அதை அறம் சார்ந்ததாக என்னால் காட்டமுடியும். ஒவ்வொரு வாசகனுமே அறம் சார்ந்த ஆய்வுகளை தீர்மானிக்கமுடியும். அறம் என்று பொதுவாக ஒன்றும் இருக்க முடியாது. அறிவியல் நேர்மை என்று சில வேளை சொல்லலாம்.
சோபாசக்தி: சமூக அறம் என்று ஒன்று இருக்கல்லோ. ஒருவனை ஒருவன் கொல்லக்கூடாது இது ஒரு சமூக அறம் அல்லோ. 16 வயதிற்குட்பட்டவர்களை இராணுவத்தில் இணைக்கக் கூடாது இது ஒரு சமூக அறமல்லோ. பிடிக்கின்றவனுக்கு அது சரியாகத் தெரியும். சமூகத்திற்கென்று ஒழுங்கான நியதி உண்டு அந்த சமூக அறம் பற்றித்தான் நான் சொல்ல வருகின்றேன்.
வாசுதேவன்: இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது ஒரு கோட்பாடு.
சோபாசக்தி: அதைத்தான் நான் சொல்லவாறன்.
வாசுதேவன்: இயங்கு நிலையில் இருப்பவர்கள், அதை செயல்படுத்துபவாகள், சமூக உறுப்பினர்கள் அதை எப்படி செய்வார்கள் என்பதை நாம் வெளியிலிருந்து பார்க்கின்றோம். அப்படி பார்க்கும்போது நாம் அறம் சார்ந்த தீர்ப்பை வழங்குகின்றோம். ஆனால் அவர்களும் தாம் சார்ந்த தீர்ப்பை அறமாக கொள்வார்கள்.
சோபாசக்தி: அவருக்கான அறமும், எனக்கான அறமும், பொது அறமும், பொதுக் களத்தில் மோதுவதா? அவரவர் தமக்கான அறங்களுடன் இயங்குவதை அனுமதிப்பது கஸ்டம்.
வாசுதேவன்: நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அப்படித்தான் சமூகம் இயங்குகின்றது. அதற்கெதிராக குரல் எழுப்புவது நியாயம். ஆனால் உலகிலுள்ள அனைத்து சமூகமும் இவ்வாறு தான் இயங்குகின்றது.
அரவிந் அப்பாத்துரை: இது நாவல் இல்லை என்ற விடயம் பற்றி எனது ஒரு அனுபவத்தைக் கூறுகின்றேன். எனது ‘பூர்வீக சதிர்’ எனும் நாவலை திருப்பூரில் வெளியிடுவதற்கு எழுத்தாளர் திரு.ராமகிருஸ்ணனை அழைத்திருந்தேன். அவர் இது ஒரு நாவலே அல்ல என்று கூறியதோடு இதற்காக ஒரு கூட்டம் நடத்துவதே வேஸ்ட் என்று கூறினார். எனது நாவல்களுக்குள்ளே ‘பூர்வீக சதிர்’ நாவலே மிக சிறந்த நாவலாக அமைந்திருப்பதாக நான் கருதுகின்றேன். இந்த ராமகிருஸ்ணன் எனக்கு ஒரு புத்திமதியும் கூறினார் என்ன தெரியுமா? நீங்கள் எல்லாம் வெளிநாட்டில் வாழ்கின்றீர்கள் அங்குள்ள இலக்கியவாதிகளை பின்பற்றி எழுத முயற்சி செய்யுங்கள் அதுதான் நமக்கு இன்ரெஸ்ட் ஆக இருக்கும் என்று கூறினார். அப்ப அவருடைய மனநிலையை பாருங்க! தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு அயல் நாட்டு மாயை என்று ஒன்றிருக்கு. வெளிநாட்டு இலக்கியத்தை காப்பி பண்ணி எழுதினால்தான் அதை எழுத்து என்று ஒத்துக்கொள்கின்றார்கள். சுயமான அழகியலை படைக்கமுடியாதென்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டார்கள்.
சோபாசக்தி: அது யாரோ சில நபர்கள் அப்படி கருதுகின்றனர். இப்ப எங்கட டானியல், எஸ்.போ எல்லாம் ஒழுங்காத்தான் எழுதினார்கள்..
அரவிந் அப்பாத்துரை: ஆமா அவர்கள்பெரிய எழுத்தாளர்கள்.
சோபாசக்தி: ராமகிருஸ்ணனை கூப்பிட்டது உங்கட தப்பு அவரை என்னத்திற்கு நீங்க கூப்பிட்ட நீங்க.
வாசுகன்: எழுத்துகளில் மட்டுமல்ல பல துறைகளிலும் இவ்வாறான கருத்து நிலவுகின்றது.