"

28

இலக்கியங்களை நான் அதிகம் வாசித்ததில்லை. இதில் ஈழ இலக்கியங்களை எங்கே? ஆனால், ஒருக்காலும் மறக்கமுடியாத ஈழத்துக் கதை ஒன்று என் நினைவில் உண்டு. அநேகமாக, அப்போது நான்காவது படித்துக் கொண்டிருந்தேன். எந்த புத்தகம் என்று தற்போது நினைவில் இல்லை.

ஒரு சிறுமி வயதுக்கு வந்திருப்பாள். அவளது சடங்குக்காக மிகுந்த பரபரப்புடன் இருப்பாள் அவளது தாய். பலரை அழைப்பது, சாமர்த்திய சடங்குக்காக பொருட்களை வாங்குவது, வீட்டை அலங்கரிப்பது, அதற்காக காசு சேர்ப்பது என்று மிகுந்த பிரயத்தனப்படுவாள். இறுதியில் அந்த நாளும் வரும். அந்தோ, விழா நடக்க வேண்டிய அன்று வீடே அலங்கோலமாகி கிடைக்கும். வீட்டில் பொருட்கள் தாறுமாறாக இறைந்து கிடக்கும். அலங்கரிக்கப்பட்ட வீட்டிலிருந்து அழுகைதான் வெடித்து எழும்பும். ’அழுதால் செத்துப்போன பெண் திரும்பி வரப்போகிறாளா”வென்று ஊராரும்,உறவினரும் அந்த தாய்க்கு ஆறுதல் சொல்லுவார்கள். அதற்கு, அந்த தாய் சொல்லுவாள், “எண்ட மகள் போராடி செத்திருக்க வேணுமையா, போராடி செத்திருக்க வேணும்” . மீதியை சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

அமைதிப்படையின் அட்டூழியங்களை பற்றி பெரியவர்கள் பேசுவதை கேட்டிருந்த எனக்கு இந்த கதை ஏற்படுத்திய வலியை, உணர்வுகளை எப்படி சொல்வதென தெரியவில்லை.அதே வலிகளை, மனதை கனக்கச் செய்யும் உணர்வுகளைத் தந்தது, தற்போது வாசித்த, சயந்தனின், “ஆறாவடு”. முகந்தெரியாத அந்த தாயை, பெயர் தெரியாத அந்த சிறுமியை மறக்கமுடியாதது போல இனி அமுதனை, அகிலாவை, நிலாமதியை,வெற்றியை,தேவியை, சுபத்திரையை அவளது மகள் மைதிலியை, பெரியய்யாவை எல்லாவற்றுக்கு மேலாக சின்னபெடியனை மறக்கமுடியாது என்று தோன்றுகிறது. சயந்தனின், ”ஆறாவடு ”நாவல் காட்டும் மனிதர்கள் இவர்கள்.

”அரசியல் வகுப்பின் முதல்நாள் “யுத்தம் என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன?” என்றொரு கேள்வியை படிப்பிக்க வந்தவர் என்னைப் பார்த்துக் கேட்டார். நான் எழுந்து நின்று யோசித்தேன். பிறகு, “யுத்தம் என்றால் அடிபடுறது. அரசியல் என்றால் அடிபாட்டை நிப்பாட்டிப் போட்டு பேச்சுவார்த்தைக்கு போறது” என்று சொன்னேன்.

பதிலுக்கு அவர் இப்படிச் சொன்னார். “யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம்” (நாவல் பக். 73)

இப்படி, போரும்,அரசியலும் அன்றாடம் அலைக்கழித்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை, உண்மை நிகழ்வுகளை மக்களின் பார்வையில் சொல்லுகிறது இந்த நாவல். மக்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்துக்கொண்டே இருக்கிறார்கள். பக்கத்து ஊருக்கு, பக்கத்து நாட்டுக்கு, கடலுக்கு என்று போர் மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. துரத்துகிறது. இதில், முக்கியமானது வள்ளம்.

இலங்கையிலிருந்து இத்தாலிக்குச் செல்லும் பயணத்தில் தொடங்குகிறது நாவல். அதில், முன்னாள் போராளி முதல் சின்னப்பெடியன் வரை, முன்னாள் சிங்கள ராணுவ வீரன் பண்டார வரை அடக்கம். நீர்க்கொழும்புவிலிருந்து துவங்கும் இந்த பயணம் சொகுசான அயல்நாட்டு வாழ்க்கையை எதிர்நோக்கிச் செல்லும் சொகுசான பயணமல்ல. நிலத்தில் குண்டு போடும் அரசின்  ஒடுக்குமுறைகள் என்றால் கடலில் இயற்கையின் விளையாட்டு. இது நடுவில், கடற்கொள்ளையர்கள். பயணத்தின் நடுவில் ஏற்படும் மரணங்கள்.மக்கள் தோணியில் தப்பித்து வருவதை நாம் செய்தியாகத்தான் அறிந்திருப்போம். அனுபவமாக வாசிக்கும்போது பகீரென்கிறது. அதோடு, மண்ணைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும், அவர்களது நம்பிக்கை, கவலை, எதிர்பார்ப்புகள்,சாதிய ஒடுக்குமுறைகள் பற்றியும் இந்த நாவல் வெளிப்படுத்துகிறது.

அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் அந்த மண்ணை ஆக்கிரமிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு காலகட்டத்தின் உண்மைநிகழ்வுகளே இந்த நாவல். இந்திய அமைதிப்படை வருகின்றது என்றதும் மக்கள் தமது கனவு நனவாகிவிடும் என்று நம்பிக்கை கொள்கிறார்கள். ”இனி தமிழீழம்தான்” என்று கொண்டாடுகிறார்கள். ஆனால், வெந்த புண்ணில் வேலாக, அவர்களது நம்பிக்கை வேட்டையாடப்படுகிறது. அந்த போராட்டத்தில் பலியான மக்களின் வாழ்க்கை, வள்ளத்தில் புலம்பெயரும் மக்களின் வாழ்க்கை என்று கடல் மீது தத்தளிக்கும் படகு போல தத்தளிக்கிறது வாழ்க்கை. போராளிகளை நேசித்து அவர்களை காப்பாற்றிய மக்களின் துணிவு, ஆமிக்காரர்களிடமிருந்து புத்தி சாதுரியத்துடன் செயல்பட்ட மக்கள் என்று காயங்களோடும், குருதியோடும், அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் என்று பலவாறாக வெளிப்படுகிறது வாழ்வனுபவங்கள்.

அகதிகளாக கோயிலில் தஞ்சமடைகிறார்கள் மக்கள். அபிஷேகக் கிணறில் குளித்ததைத் தொடர்ந்து பறைசாதிகள் என்று கோயிற்காரர் அவர்களை அவமானப்படுத்துகிறார். பயந்துக்கொண்டிருந்த மக்களில் ஒரு இளைஞன் கோபமாக வெளியேறுகிறான். வரும்போது அவனுடன் இரண்டு இயக்கக்காரர்கள் வருகிறார்கள். அடுத்த சில நொடிகளில், கோயிற்காரர் மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறார். கோயிலில் தங்கியிருக்கும்போது சுபத்திரையின் மகள் வயதுக்கு வந்துவிடுகிறாள். கதவுக்கம்பிகளில் செருகப்பட்டிருந்த அம்மனின் பட்டுத்துணிகள் சுபத்திரையின் கண்களின் படுகிறது. “அம்மாளாச்சி! நீயும் ஒரு பொம்பிளைதானே, குற்றம் குறையளை பெரிசுபடுத்தாமல் விடு” என்று காளியை வேண்டிக்கொள்கிறாள், சுபத்திரை. ஒரு போர், இடம்பெயர்வு மக்களின் வாழ்க்கையில்,அவர்களது விழுமியங்களில் ஏற்படுத்தும் தாக்கங்கள்…..

போர் வேண்டுமென்று ஒரு தலைமுறை தீர்மானிக்கிறது. அதற்கடுத்து, விரும்பியோ விரும்பாமலோ போர் அவர்கள் வாழ்வை ஆக்கிரமித்து விடுகிறது.நாவலில் ”இயக்கம்” என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. “இயக்கம்” மக்களோடு மக்களாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இயக்கம் மக்களை விட்டு விலகி செல்கிறது. அதில், நேரு மாமாவின் கேரக்டர் மிகவும் முக்கியமானதாக படுகிறது. ஒருவேளை அதுதான் சனங்களின் குரல் போல. மக்களின் அமைதி/சமாதானத்துக்கான விருப்பம், துயரம், கருத்து,அச்சுறுத்தல் என்று எதற்கும் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது. அப்பாவி மக்கள் ஒரு பக்கம், அரசியல் ஒரு பக்கமுமாக பிரிந்துவிடுகிறது. நாவல் நடக்கும் காலகட்டத்தை, இந்தியப்படை இலங்கை மண்ணில் இறங்கியதிலிருந்து வெளியேறும் வரையிலான வரலாற்றை – மக்களின் அனுபவங்களாக பதிவு செய்திருக்கிறது, ஆறாவடு.

மக்களின் போராட்ட எழுச்சியை, அரசியல் உணர்வை மழுங்கச் செய்யும் சிங்கள அரசின் உத்திகள், அந்த சிடிகளை மக்களிடமிருந்து திரும்பப்பெற்று அதனை முறியடிக்கும் இயக்கத்தின் செயல்பாடுகள், இயக்கத்துக்குள் காதல், மற்ற இயக்கத்துடனான முரண்பாடுகள்,இயக்கத்தில் பெண்கள், குழந்தைப் போராளிகள் என்று ஈழத்து போராட்ட வாழ்வியலை இந்த நாவல் தெளிவாக காட்டுகிறது.

அதோடு, முக்கியமாக, சயந்தனின் ’எள்ளல் நடை’ பற்றி சொல்லியே ஆக வேண்டும். இதனை நான் சொல்லுவதைவிட, அவரது எழுத்துகள் சொல்லுவதுதான் சரியாக இருக்கும்.

“பெண் போராளிகள் சண்டை செய்கிறார்கள். பெரிய மோட்டார் பீரங்கிகளை கட்டியிழுக்கிறார்கள். தற்கொலைப் படையாகவும் இருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் இயக்கத்தில் இருக்கும் வரைதான் நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. நாங்கள் கேள்விப்பட்ட அளவில், இயக்கத்தில் இருந்து பிறகு வெளியேறி திருமணம் செய்த பெண்போராளிகள் கூட திரும்பவும், உங்களது தமிழ் சமூக வழக்கத்தின்படிதானே வாழ வேண்டியுள்ளது. இன்னும் சொன்னால், திருமணத்துக்குப் பிறகு தங்களது கணவர்களிடம் அடிவாங்குகிற முன்னாள் பெண் போராளிகளைக் கூட நாங்கள் சந்தித்திருக்கிறோம். பரந்துப்பட்ட சமூக நோக்கில் ஏன் இந்த விடயத்தில் உங்களால் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியவில்லை. பெண் விடுதலையை அனுபவிக்க வேண்டும் என்றால் இயக்கத்தில் இருக்க வேண்டுமென்ற நிபந்தனை உள்ளதா….”

தலையை வறு வறு என்று சொறிய வேண்டும் போல எனக்குத் தோன்றிற்று. வெளிநாட்டு ஆட்களின் முன் அப்படி நடந்துக்கொள்வது நாகரிகமில்லை என்பதால் சொறியவில்லை. இப்படியெல்லாம் கேள்விகள் உள்ளன என்பது ஆச்சரியமாக இருந்தது. தமிழ் பத்திரிக்கையாளர்கள் ஒருபோதும் இப்படிக் கேட்டதில்லை. அவர்கள் தயங்கி தயங்கி கேட்கிற ஒரே கேள்வி, “தலைவர் எப்பொழுது சண்டையை தொடங்குவார்” என்பதே. நாங்களும் “அண்ணை தொடங்கிற நேரத்துல்ட தொடங்குவார்” என்று முடித்துவிடுவோம்.

ப்ரெஞ்சுப் பெண்மணி எனது பதிலுக்காக மொழிபெயர்ப்பவரை பார்த்தபடி நின்றார். நான் எழுந்து நின்றேன். அவர்கள் எதிர்பார்த்த இயல்பை என்ன வழியிலேனும் கொண்டு வர முயன்றேன். அலட்சியமான பார்வையொன்றை அவர்களைத் தவிர்த்து வெளியே வீசினேன். பிறகு பதிலைச் சொன்னேன், “ இப்பிடியான கேள்விகளுக்கு நீங்கள் தமிழினி அக்காவைத்தான் தொடர்பு கொள்ளவேணும்”.(நாவல் பக்: 134)

எனக்கு பெரிய இலக்கிய ஆர்வமெல்லாம் இருந்ததில்லை. எளிய மக்களின் வாழ்க்கையை, அவர்களது வாழ்வியலை பற்றி பேசும் இலக்கியங்களை இதுவரை வாசித்திராததே அதற்கு காரணமாக இருக்கலாம். ”ஆறாவடு ” அப்பாவி மக்களின் வாழ்க்கையை, அவர்களது போராட்டத்தை, இடப்பெயர்வின்
துயரை, உறவுகளின் இழப்பை, வலியை பற்றி பேசுகிறது. அதனாலேயே, ”ஆறாவடு” நாவலை இலக்கியம் என்ற வரையறைக்குள் கொண்டு வருவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. (கொஞ்சம் சயந்தன் ஸ்டைல்ல ட்ரை பண்ணேன்!)

சயந்தனை அவரது ”சாரலின்” பதிவுகள் மூலம்தான் அறிந்திருக்கிறேன். அதுவும்,  கிண்டல்,நக்கல் வகை பதிவுகள் மற்றும் ஒலிப்பதிவுகள் மூலம் (பிட்டு/சொதியை மறக்க முடியுமா?!) மேலும், ’பிச்சை வேண்டாம்,நாயைப் பிடி’ என்ற அவரது பதிவு புகழ்பெற்றது. பதிவரிலிருந்து நாவலாசிரியராக பதவி உயர்வு பெற்றிருக்கும் சயந்தனுக்கு வாழ்த்துகள்!

License

Icon for the Public Domain license

This work (ஆறாவடு by aaraavadu) is free of known copyright restrictions.

Share This Book