29
கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வாசிப்பதை முழுமையாக தள்ளி வைத்திருந்தேன். 2002ம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்தபோது நண்பர் ஒருவர் “கெரில்லா” என்ற குறுநாவலை அறிமுகப்படுத்தியிருந்தார். நீண்ட காலத்தின் பின் முதன் முதலாக ஒரே மூச்சில் வாசித்த தமிழ் நாவல் அது. அப்பொழுதுதான் சோபாசக்தி என்ற ஒரு எழுத்தாளர் அவரது எழுத்துக்கள் மூலமாக அறிமுகமானர். ஆனால் அதுவே கடைசியாக வாசித்த குறுநாவல் எனலாம். மற்றும் படி இந்தப் பத்துவருடங்களில் ஓசோவின் நூல்களையும் மற்றும் சில நூல்களையும் தவிர, வாசித்த நாவல்கள் இரண்டு மட்டுமே. அதுவும் அவை ஆங்கில நாவல்கள். ஒன்று The Alchemist by Paulo Coelho மற்றது Eat Pray Love by Elizabeth M. Gilbert. இவையிரண்டும் வாசித்தமைக்கு காரணம் அன்றைய பொழுதில் அவை எனது தேடலுக்கு நெருக்கமாக இருந்தது எனலாம்.
மிக அண்மையில் இலக்கியத்தில் ஆர்வமாக இருக்கும் நண்பர்களின் நெருக்கம் காரணமாக, அவர்களது (குறிப்பாக இளங்கோவி(டீசே) மற்றும் மெலிஞ்சி) சிறுகதைகளையும் நாவல்களையும் வாசிக்கும் சந்தர்ப்பம் மீண்டும் உருவாகி உள்ளது. அந்தவகையில் மெலிஞ்சி முத்தனின் “வேருலகு” தான் நான் மீண்டும் நீண்ட காலத்தின்பின் முதன் முறையாக வாசித்து முதல் தமிழ் குறுநாவல் எனலாம். ஒரு காலத்தில் நாம் வாழ்ந்த, ஈழத்தின் வட பகுதிப் பற்றைக் காடுகளுக்கு தன் எழுத்துக்களினுடாக என்னை அழைத்துச் சென்றிருந்தார். ஆனால் அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் தத்துவ மற்றும் மெய்ஞான விசாரணை செய்பவை. அவை தொடர்பாக நிச்சயமாக ஒரு குறிப்பை எழுதவேண்டும். ஆகவே அவரது எழுத்துக்கள் தொடர்பாக மேலதிக விபரங்களை எழுதுவதைத் தவிர்க்கின்றேன்.
இக் கட்டுரையில், தற்பொழுது, வேலைக்கான பயணத்தின் போது, வாசித்து முடித்த, சயந்தனின் “ஆறாவடு” தொடர்பான எனது அனுபத்தை எழுதுகின்றேன். இது எனது முதல் வாசிப்பின் அடிப்படையிலானது. ஏன னில் மீண்டும் ஒருமுறை வாசிக்கும் பொழுது வேறு ஒரு அனுபவம் ஏற்படலாம். எனது இலக்கிய நண்பர்கைளைப் போலவே, சயந்தனின் எழுத்துக்களின் அறிமுகம் மிக அண்மையிலையே கிடைத்தது. அவரது எழுத்துக்கள் நம்மை ஆர்வமாகவும் ஆனந்தமாகவும் வாசிப்பதற்கும் சிந்திப்பதற்கும் துண்டுபவை என்றால் மிகையல்ல. “ஆறாவடு”வும் அதை ஏற்படுத்தியது.
என் வாழ்வில் ஏழு வருடங்கள் (83-90) மட்டுமே வாழ்ந்த மண் அது. ஆனால் துடிப்பாகவும், நடந்தும், சைக்கிளில் ஓடித்திரிந்தும் வாழ்ந்த ஒரு மண்ணுக்கு நூலாசிரியர் சயந்தனின் எழுத்துக்களினுடாக மீண்டும் சென்றேன். மேலும், அக் காலத்தின் நினைவுகளுக்கும், எனது இளமைக்காலத்திற்கும் என்னை அழைத்துச் சென்றார். அப்பொழுது சோவியத்தின் போராட்ட கால நூல்களான, தாய், வீரம் விளைந்தது, அன்னை வயல், …. எனப் பல ரஸிய நூல்களை அதிகம் வாசித்த காலம் எனலாம். அக் கதைகளில் பெரும்பாலாக வரும் பிரதான காதாப்பாத்திரம் பவால் என்பவராக இருக்கும். அவரை நாமாக கற்பனை செய்து, நாமும் நமது விடுதலை போராட்டத்திலும் அவ்வாறெல்லாம் செயற்பட வேண்டும் என கனவு கண்ட காலம் அது. ஆனால் அவ்வாறான ஒரு அனுபவத்தை நாம் பெற முடியாது, நமது குறுகிய வர்க்க குணம் அல்லது தப்பிக்கும் மனம் அல்லது புலிகளின் தலைமை கட்டமைத்த குறுகிய சிந்தனை அல்லது காலம் அந்த மண்ணைவிட்டு என்னைப் போன்ற பலரை தூக்கியெறிந்தது. இதனால் நாம் அனுபவிக்க முடியாது கனவு மட்டுமே கண்ட, அந்தக் காலத்தை இந்த குறுநாவல் மீண்டும் என் கண்முன் கொண்டு வந்தது. இது, நமது விடுதலைப் போராட்டத்தில் நாம் பங்குபற்ற முடியாவில்லையே என்ற ஏக்கத்தை, என் மனதில் இருந்த “ஆறாவடு”வை மீண்டும் கிளரிவிட்டது. விளைவாக, எனக்குள் ஒரு குற்றவுணர்வையும், அவர்கள் மீது கோவத்தையும் உருவாக்கியது. ஆனாலும் சோவியத் நாவல்களை வாசித்ததைப் போலவே ஆர்வமாக இதையும் வாசித்தேன்.
ஆசிரியர் பல இடங்களில் பிரதான பாத்திரத்தைக் “இவன்” என குறிக்கின்றார். இதன் மூலம் இந்த “இவன்” எவனாகவும் (மட்டுமல்ல எவளாகவும்) இருக்கலாம் என்பதையே நான் உணர்ந்தேன். ஏனனில் “இவன்” போன்ற பல “அவன்”களை நாம் கண்டிருக்கின்றோம்… கதைத்திருக்கின்றோம்.. .அவர்களுடன் பழகியிருந்திருக்கின்றோம்… வாழ்திருக்கின்றோம்… இந்த “இவன்” என்பது அனைவரும் அடையாளப்படுத்தக்கூடிய ஒரு பொதுவான அடையாளம். அந்த மண்ணில் வாழ்ந்த காலங்களில், ஏதாவது ஒரு கணங்களிலாவது நாமும் கூட “இவனா”க இருந்திருக்கின்றோம். நமது நண்பர்கள் உறவுகள் இருந்திருக்கின்றார்கள். இந்த “இவனின்” வாழ்க்கையும், “அவன்” காலத்தில் அவனைச் சுற்றி நடந்த நிகழ்வுகளையும், “அவனது” பார்வையுடனாக முன்வைக்கப்படுகின்றது. ஆகவேதான் சுமதியும் மற்றவர்களும் கூறுவதுபோல் ஒவ்வொறு பகுதிகளும் தனித்தனி சிறுகதைகளாகவும் மற்றும் சம்வங்களின் தொகுப்புகளாகவும் இருக்கின்றன. ஆனால் இவ்வாறான ஒரு உணர்வு முதல் பகுதிகளில் மட்டுமே தோன்றியது. பின், அவற்றிக்கிடையேயான ஒரு உறவு ஆழமாக ஒடுவதை உணரக்கூடியதாக இருந்தது.
இந்த “இவனின்” மனசாட்சியாகவே நேரு ஐயா என்கின்ற மொழிபெயர்ப்பாளரின் பாத்திரம் இருப்பதாக கருதுகின்றேன். ஆகவேதான் இந்த “இவன்” என்பதுதான் தூருவ நிலைகளுக்கு (கருப்பு வெள்ளை அல்லது சிகப்பு நீலம் எனவும் கொள்ளலாம்) அப்பாற்பட்ட, உண்மையான யதார்த்தமான மனித வாழ்வில் நடமாடுகின்ற காதாப்பாத்திரங்கள் என்றால் மிகையல்ல. இதனைத்தான் சாம்பல் இலக்கியம் படைக்கின்றது எனக் கூறுகின்றார்களாயின் அது வரவேற்கத்தக்கதே.
ஆனால் ஆசிரியர் இந்த “இவனை” குறிப்பாக காதல் தொடர்பான சம்மாசனைகளில் போது மட்டும் அவனது பெயரை அமுதன் எனப் பயன்படுத்தியே அதிகமாக குறிப்பிடுகின்றார். இது காதல் என்பது ஒவ்வொரு மனிதரினதும் தனப்பட்ட விடயம் மட்டுமல்ல அது ஒரு தனித்துவமான சுய அனுபவம் என்பதை குறிப்பது எனலாம். பொதுவாக அனைவருக்கும் காதலர் உணர்வு உண்டு. ஆனால் அந்த உணர்வு தனிப்பட்டது. பொதுவானதல்ல. என்பதைக் குறிப்பதற்காகவே அவ்வாறு பயன்படுத்துகின்றார் என புரிந்துகொள்கின்றேன். இதுவே தனிமனிதரை குறிப்பான கணங்களில் பொது அடையாளங்களிலிருந்து வேறுபடுத்தி பிரித்துவிடுகின்றது எனலாம். அதாவது பொதுவெளிக்கும் தனிமனித வெளிக்குமான முரண்பாடு உருவாகின்ற புள்ளியாகவும் ஆரம்பிக்கின்றது.
வெற்றியைப் (வெற்றியண்ணையைப்) போல, ஈழத்தின் ஒவ்வொரு ஊர்களிலும் ஒருவர் அக் காலங்களில் இருந்திருக்கின்றனர். குறிப்பாக இந்திய இராணுவ காலத்தின் போது அவர்கள் பிரபயல்யமானவர்களாக இருந்திருக்கின்றார்கள். எனது அனுபவத்தில் உதாரணமாக குறிப்பிடுவதாயின், நாவற்குழிப் பொருப்பாளராக இருந்த அருள் மற்றும் கரவெட்டிப் பொருப்பாளர்களாக இருந்த சுக்கிலாவும் செங்கதிரும் இருந்தனர். இவர்கள் அனைவரும் அடக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். இந்திய இராணுவம் வருவதற்கு முன்பு, புலிகள் மற்ற இயக்கங்களைப் போல நிறைய அங்கத்தவர்களை உள்வாங்கியவர்களல்ல. ஆகவே சிலவேளைகளில் ஒரு ஊருக்கு ஒரு புலி மட்டுமே இருந்த காலங்கள் அது. உதாரணமாக நாவற்குழியில் அருள் மட்டுமே நீண்ட காலமாக ஒரு புலி அங்கத்தவராகவும் அந்த ஊரின் பொருப்பாளராகவும் இருந்தார். இறுதியாக இந்திய இராணுவத்துடனான சண்டை ஒன்றில் மரணமடைந்தார். அப்பொழுது புலி அங்கத்தவர்கள் (பிற இயக்கங்கள் இருந்த காலத்திலும் அவர்களும் கூட) பொது மனிதர்களுடன் பொது மனிதர்களாக இருந்தார்கள். அவர்கள் கேட்காமலே பொது மனிதர்கள் அவர்களைப் பாதுகாத்து ஆதரவளித்து வந்தனர். ஆனால் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன் போராளிகளாக காடுகளுக்குள் சென்ற, பொது மனிதர்களுடன் வாழந்த புலி அங்கத்தவர்கள், இராணுவ சீருடையணிந்து ஒரு தேசத்தின் இராணுவமாகவே வெளியே வந்தனர். இந்தக் குறிப்பான மாற்றம் அவர்கள் மக்களிலிருந்து அந்தியமாகினர் என்பதற்கான ஒரு குறியீடு எனலாம். இவ்வாறு ஒரு இராணுவமாக கட்டமைக்கப்பட்டமைதான் நமது விடுதலைப் போராட்டம் தோற்றமைக்கான ஒரு காரணமா? விடுதலைப் போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் இந்த மாற்றம் தொடர்பாக கவனம் எடுக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன்.
இது போன்று பல காரணங்களால் உருவான, புலிகளின் தலைமைக்கும், அதன் அங்கத்தவர்களுக்கும், மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை மட்டுமல்ல தன அக முரண்பாடுகளையும் பல இடங்களில் (உ+ம்: பக்- 31 ) அழகாக கூறிச் செல்கின்றார் ஆசிரியர். இதேபோல், இளங்கோ (டீசே தமிழன்) குறிப்பிட்டதுபோல், இக் குறுநாவல் நடைபெறும் காலப்பகுதியில் நடைபெற்ற மிக முக்கியமானதும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிர்மறை விளைவை ஏற்படுத்தியதுமான ஒரு நிகழ்வு, முஸ்லிம் மக்களை உடனடியாக வெளியேற்றியமை. இதேபோல், தமிழ் பேசும் மனிதர்களை, தாம் போன இடத்திற்கெல்லாம் தம்முடன் இடப்பெயர்ந்து கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றமையால் உருவான பாதகமான விளைவுகள். இவை எல்லாம் புலிகளின் தலைமை செய்த பல தவறுகளில் பாரிய சில தவறுகள். ஆனால் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் பேசும் மனிதர்களுக்கு தமது உடைமைகள் அனைத்தையும் எடுத்துச் செல்வதற்கான உரிமை இருந்தது. ஆனால் முஸ்லிம் மக்களுக்கு அந்த உரிமையையும் மறுத்திருந்தனர். இவ்வாறான ஒரு நிகழ்வை எப்படி தவறவிட்டார் ஆசிரியர் என்பது முக்கியமான ஒரு கேள்வி. இது விமர்சனத்திற்கு உட்பட்டதாகும்.
இந்த குறுநாவல் மீது இவ்வாறான விமர்சனங்கள் இருப்பினும், இது முழுக்க முழுக்க ஒரு தேசத்தின், அடக்கி ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் வாழ்வையும் அதன் அரசியலையும் பின்னிப்பிணைந்து வெளிக் கொண்டு வந்திருக்கின்றது. லங்கா ராணி….புதியதொரு உலகம்…( விரும்பினால் கெரில்லா) …போன்று, ஒவ்வொரு காலகட்டத்தின் பதிவுகளாக வந்த நாவல்களின் வரிசையில், இதுவும் குறிப்பிட்ட ஒரு காலத்தைப் பதிவு செய்திருக்கின்றது. இதை எவ்வாறு அரசியல் நீக்கம் செய்யப்பட்ட நாவல் என சோபாசக்தி கூறுகின்றார் என்பது தான் விளங்கவில்லை. விளக்குவரா?
கடல் பயணம் தொடர்பான பகுதிகள் மிகவும் யதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தன. அந்த சிறுவனும் பெரியய்யையாவும் என் நினைவைவிட்டு இன்னும் செல்கின்றார்களில்லை. ஆம், அவர்களின் இறப்பும் இன்னுமொரு “ஆறாவடு”வை உருவாக்கியது அல்லது கிளரியது எனலாம். அதேவேளை, கடற் பயணம் தொடர்பான இறுதிப் பகுதியின் கடைசிப் பந்தி (பக்.187) தேவையற்றதாகவே படுகின்றது. இது “இவனின்” யதார்த்த்த்திற்கு ஒவ்வாத அதித கற்பனையாகவே இணைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழ் பேசும் மனிதர்கள் மட்டுமல்ல சிங்களம் பேசும் மனிதர்களும் இவ்வாறு தாம் வாழும் நாட்டை விட்டு கடல் வழியாக வெளியேறும் இன்றைய சுழலில் முக்கியமானதே. ஆனால் இந்தக் குறுநாவலின் பெரும்பகுதி கடற்பயணம் மட்டுமல்லவே. அப்படியிருக்கும் பொழுது, இந்த குறுநாவலை, சேரன் மைக்கல் ஓன்டாச்சியின் நாவலுடன் ஒப்பிட்டு முக்கியமானது என ஒரு சிறு குறிப்பை ஏன் எழுதினார்? நான் மைக்கல் ஒன்டாச்சியின் நாவலை வாசிக்காமையினால், இது தொடர்பான மேலதிக புரிதலைப் பெறுவதற்கு, தனது குறிப்பு தொடர்கான விரிவான விளக்கத்தை தருவாரா சேரன்?
நாவலின் இறுதிப் பகுதி நமது போராட்டம் சர்வதேளவிற்கு சென்றுள்ளது எனவும் எடுக்காலாம். அல்லது நமது போராட்டத்தினாலும் அதன் விளைவுகளாலும், சர்வதேச சமூகங்கள், தமது நலன்கள் மட்டும் நிறைவேறினால் போதும் எனக் குறிப்பதாகவும்… அதுவே அவர்களுக்கு மகிழ்வானது எனவும் கொள்ளலாம்.
இக் கட்டுரையே முதன் முதலாக ஒரு இலக்கியப் படைப்பு தொடர்பாக நான் எழுதிய கட்டுரை என நினைக்கின்றேன். ஆகவே தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். இதைத் தவிர, இந்த குறுநாவல் தொடர்பான வேறு விமர்சனங்கள் எனக் கூறினால், கிரிசாந்தியின் படுகொலை (பக்.33) வலிந்து இடைச் செருகலாக இணைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடலாம். இதற்கு மாறாக அதனையும் ஒரு சிறுகதையாக எழுதியிருந்திருக்கலாம். இதைத் தவிர மேலும் பல கருத்துக்களும் உணர்வுகளும் பகிர்வதற்கு இருந்தாலும் இத்துடன் நிறுத்திவிடுகின்றேன். இவ்வாறான விமர்சனங்களுக்கு அப்பால், எனது மனதில் ஒரு “ஆறாவடு”வை மீண்டும் இந்த குறுநாவல் ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.