"

38

ஈழ போர்ச்சூழலையட்டி எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளை அறைகூவல், கையறுநிலை கதறல்கள் என்று இரண்டே வகைக்குள் அடைத்துவிடலாம்தான். அப்படி இரண்டுவகைக்குள்ளாகவே அடங்கிவிட்ட படைப்புகளிலும்கூட குறிப்பிடத்தக்க ஒளித்தெறிப்புகள் நிறைய உண்டு. வெஞ்சினமும் கழிவிரக்கமும்கூட உயர்வான இலக்கியங்களுக்குள் உள்ளடங்கும் கலைத்தன்மை கொண்டவையே. எனினும் இன்னபிற கூறுகளையும் தமது இலக்கியப் படைப்புகளுக்குள் தன்வயப்படுத்திக்கொள்ள இயலாததொரு சூழலில் ஈழத்திலும் புகலிடங்களிலுமாக எழுதப்பட்டவற்றின்மீது ஒன்றிரண்டு விதிவிலக்குகளைத் தவிர பெரும்பாலும் வெறும் உணர்ச்சிப்பதிவுகள் என்றொரு கருத்து நெடுங்காலமாக நிலவிவந்தது. அவ்விமர்சனத்திற்கு அழுத்தமாக மறுப்பாக தனது முதல் நாவலான “ஆறாவடு”வை முன்வைத்திருக்கிறார் சயந்தன்.

படகுப்பயணத்தில் இத்தாலியை அடைந்து எப்படியாவது உயிரைத் தக்கவைத்துக்கொள்ள துடிக்கும் அய்யாத்துரை பரந்தாமன் என்ற போராளியின் விருப்பங்களும் முயற்சிகளும் அதன்காரணமான பயணங்களும் அறிமுகமாகும் மனிதர்களும் எதிர்கொள்ளும் இன்னல்களும் இடையிடையே அவன் அசைபோடும் நினைவுகளுமாய் இந்நாவல் உருப்பெற்றிருக்கிறது.

அய்யாத்துரை தனது புதுச்செருப்பை திருடிப்போனவனை மிரட்டி திருப்பிக்கொடுக்கச் சொல்ல, அத்திருடனோ திருடிய செருப்பை வாங்கியவனிடம் போய் அய்யாத்துரையை போராளி என்று கைகாட்டுகிறான். திருட்டுச் செருப்பை வாங்கிய திருடன் இந்திய அமைதிப்படை வீரன். அவன் உண்மையை உணர்ந்ததன்பின் அய்யாத்துரையை துன்புறுத்துவதோடு நிறுத்திக்கொண்டு உயிரோடு அனுப்பிவைக்கிறான்.

செருப்புத் திருடனை துரோகியென்று குற்றம்சாட்டிக் கொல்கிறான் வெற்றி. இயக்கத்தைச் சேர்ந்த அவனது சாகசங்களும் அவனது வேண்டுகோளை ஏற்று அவனுக்கு உதவிகள் செய்யும் நிலாமதியும் அவளது சமயோசிதமும் அங்க அளவுகள் குறித்த மனவேதனைகளும் மரணமும் நாவலின் பிறிதொருபுறம் கிளைவிரிக்கிறது. வெற்றியின் தாயும் தங்கைகளும் ஏதிலிகளாய் படும் இன்னல்களோடு இயக்க பரப்புரை நாடகங்களில் நடிக்கும் சிவராசன் தமது பெண்பிள்ளைகளோடு படும் இன்னல்களும் கிளையின் கிளைகளாய்…

வாழும் ஊர் யுத்தக்களமாக பக்கவாதத்தில் கிடக்கும் வயோதிகத்தாயை அழைத்துச்செல்ல வகையற்று பிள்ளைகளோடு இடம்பெயரும் சிவராசன் மீண்டும் இல்லம் திரும்பும் காட்சிகள் குலைநடுங்கவைக்கும் கொடுமை.

செருப்புத் திருடன் கொலையாக மீண்டும் அமைதிப்படை வீரர்களால் துன்புறுத்தப்படும் அய்யாத்துரை தவிர்க்கவே இயலாமல் அமைதிப்படையின் ஆதரவு அமைப்பில் சேர வேண்டியதாகிறது. அமைதிப்படை வெளியேறுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த அதன் ஆதரவு அமைப்பு செய்யும் ஏற்பாடுகள் கண்களில் நீர்நிறைந்து இமைமுட்டும் வேளையிலும் இதழோரம் புன்னகையை வரவழைப்பவை.

அமைதிப்படை ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவன் இயக்க வீரனாக மாறும் திருப்பங்கள் ஈழ விடுதலைப் போராட்ட யுத்தக் குழுக்களுக்களுக்கு இடையேயான சிக்கல்களை மிகைப்படுத்தாமல் எதார்த்தத்தை தெளிவாக்குகிறது. வெறும் புனைவுச் சுவைக்காகவே பிரபல தமிழ் எழுத்தாளர் ஒருவர் தாமிரம், செம்பு, இரும்பு என்று கைக்கு வந்தவாறெல்லாம் போராளிகளையும் அவர்கள் சார்ந்த இயக்கங்களையும் செயல்பாடுகளையும் சித்தரித்ததைப் படித்தபோது எழுந்த கொதிப்பை ஏறக்குறைய ஒருவருட காலத்திற்குப் பிறகு சயந்தனின் ஆறாவடுதான் அமைதிப்படுத்தியிருக்கிறது.

இயக்கத்தைப்பற்றி இந்நாவல் விரிவாக பேசும்போதும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிவிடவில்லை. அதன் பலவீனங்களும் பகடியாய் வாசகனுக்கு விளக்கமாகிவிடுகிறது. தவறுகளும் தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டப்படுகிறது. இயக்கத்தின் எதிர்ப்புறமாய் அரசுப்படை வீரர்களின் மனநிலையும் போரை விரும்பவில்லை என்பது உணர்த்தப்படுகிறது.

அய்யாத்துரை அமுதனாக மாறியபின் அவன் எதிர்கொண்ட யுத்தக்களங்கள், அதன் ஆறாத வடுக்கள், பூத்துக் குலுங்கும் காதல் உணர்வுகள் என்று ஒரு தனிமனிதனின் வாழ்க்கை வழியே மானுட வாழ்வனுபவத்தின் வெவ்வேறு நிலைகளையும் கோடிக்காட்டிச் செல்கிறார் சயந்தன். கதைமாந்தர்கள் குறித்த முழுவிவரங்களையும் சொல்லிவிட்டு சம்பவங்களையும் உரையாடல்களையும் வளர்த்துப்போகிற வழமையான கதைசொல்லும் முறையை கவனமாக தவிர்த்திருக்கிறார். உள்ளே செல்ல செல்ல மேலும் மேலும் தன்னை விரிவாக்கிக்கொள்கிற கதையும் மாந்தர்களும். எனவே இருநூறு பக்கங்களில் எழுதப்பட்டிருந்தாலும்கூட ஒரு பெரும்புதினத்திற்குரிய சகல தகுதிகளும் இந்த நாவலுக்கு இருக்கிறது.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் தொடர்முயற்சியின் முதற்கட்டத்தில் வெற்றி பெற்றிருக்கும் வேளையில் இந்த நாவலில் வரும் ஒரு வாக்கியம் தொடர்ந்து என் மனதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. அரசியல் பயிற்சி வகுப்பில் தமிழ்ச் செல்வன் பகிர்ந்துகொண்டதாய் குறிப்பிடப்படும் அச்சம்பவம் இந்நாவல் உணர்த்த விழையும் மையமில்லை என்றபோதும்கூட…

“அண்ணை கொஞ்ச நேரம் என்னைப் பாத்திட்டுச் சொன்னார். தமிழ்ச்செல்வன், நீ இருந்து பார்… எங்கடை போராட்டத்தை கடைசியா இந்தப் புலம்பெயர்ந்த மக்கள்தான் கைகளில் தாங்குவினம் என்று. அண்ணையின் தீர்க்கதரிசனம்தான் கடைசியா வெண்டது.”

License

Icon for the Public Domain license

This work (ஆறாவடு by aaraavadu) is free of known copyright restrictions.

Share This Book