27
சயந்தனின் ஆறா வடு நாவலின் முதல் அத்தியாத்தினை படித்தும் எனது உடலும் மனமும் பதற ஆரம்பித்தது. இனி தொடர்ந்து படிப்பதா வேண்டாமா என்று கேள்வி என்னுள்எழுந்தது? ஏதோ ஒரு விதத்தில் 1987 முதல் 2003 வரையிலான காலத்தில் ஈழப் போரினை நெருக்கமாக நேசித்து நான் ஊடாடி வந்ததால் இந்த நாவல் எதனை விவரிக்கப்போகின்றது என்றுஎனது மனக்கண்ணில் விரிந்ததால் இந்த உதறல் எழுந்தது.மூன்று ஆண்டுகள் முன்பு இருந்தால், நாவலைப் படிக்காமல் மூடிவைத்து விட்டு இருப்பேன். அத்தகைய மனச்சோர்வு அப்போழுது இருந்தது. இன்றும் ஓரே மூச்சில் படித்து விட்டேன். ஈழத்தமிழின் சிலச் சொற்களைத் (எனக்கு) தவிர செறிவான மொழி, நடை ஓட்டம் நாவலில் இருந்தது.
அகிலன் என்பவரின் உயிர் வேட்கைகான வாழ்க்கையானது நாவலாகவும், இன்று பல சிறுகதைகளும் இணைக்கப்பட்டதானபடைப்பு இந்த நாவல் உள்ளது. தமிழீழப் படைப்பு இலக்கிய உலகின் விரல் விட்டு எண்ணக்கூடிய நாவல்களில் ஆறா வடு முக்கியமானதாக விளங்கும்.
சிங்கள இராணுவம், இந்திய அமைதிப் படையின் படுகொலைகளைப் பற்றியும், விடுதலைபுலி உட்பட்ட இயக்கங்களையும் பற்றியும், போரின் அழிவினிலிருந்து தப்பி ஓடும் மக்களைப் பற்றியும் இந்த நாவல் விவரிக்கிறது. அமைதிப்படை ( I.P.K.F) என்ற பெயரில் ஆக்கிரமிப்பு படையாக விளங்கிய இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த மனித உரிமை மீறல்களை, படுகொலைகளை துல்லியமாக படம் பிடித்துக் காட்டவது எனக்கு முக்கியமாக படுகின்றது. ஈழ விடுதலை இயக்கம் இன்று மிகப் பெரும் பின்னடைவிற்கு காரணம் இந்திய அரசை நட்பாக கருதியதுதான். இன்றும் கூட விடுதலைப் புலி ஆதரவளர்கள் இந்தியாவை நட்பாக கருதுவது தொடர்ந்தால் இன்னும் எதிர்காலத்தில் ஈழ விடுதலையும் அம்மக்களும் சந்திக்கப்போகும் பிரச்சனைகள் பல உள்ளதாகவே தோன்றுகிறது.“இந்தியாவின் கொட்டைமாதிரி கீழே கிடக்கிற அய்லன்டில் இருந்துகொண்டு ஆட்டமாடா போடுறீங்க” என்று அறிவித்துஇந்திய அமைதிப் படை அங்கு செய்த படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், துரோக குழுக்கள், தலையாட்டிகள் போன்றவைகளை சயந்தன் தனது பட்டறிவின் அனுபவத்தை விவரிப்பதைப் படிக்கையில் நெஞ்சம் பதறுகிறது. I.P.K.F பற்றி எனக்கு தெரிந்து இவ்வளவு நுட்பமாக பதிவு செய்த்தது இந்த நாவலாகத்தான் இருக்கும்.
மற்றொன்று விடுதலை புலிகள் இன்று சந்திந்துள்ள பேரிழப்புகளுக்கு காரணமாக இருக்கும் காரணிகளை அந்த இயக்கத்தில் உள்ளிருந்த காதபாத்திரஙகள், நிகழ்வுகள் மூலமாக தொட்டு விமர்ச்சித்து சயந்தன் செல்கிறார். அரசியல் செயல் பாடுகளை இராணுவத்தின் சாகசங்களுக்கு கீழாக வைத்த உத்தி,நட்பு சக்திகளை எதிர்களாக்கியது, மக்கள் திரளுக்கும்போராளிகளுக்குமான இடைவெளி, மற்றும் மனித உறவுகளைபற்றிய, சமூக சிக்கல்களான சாதி, பெண் விடுதலை பற்றிய புரிதல் போதாமைகள் ஆகியவற்றை நாவல் தொட்டு செல்கிறது.இன்று முடிவுக்கு வரமுடியாவிட்டாலும் மனந்திறந்து விவாதிக்க வேண்டிய விடுதலைபுலிகள் மீதான பல விமர்சனங்களை இந்த நாவல் நம்முன் விட்டு செல்கிறது.
இரண்டாம் உலகப்போரில் காலை இழந்த பின்பு, கட்டை காலுடன் பாசிச எதிர்ப்பு போரில் பங்குகொண்ட வீரனின் கதையை சொல்லும் நாவலான “உண்மை மனிதன் கதை”விவரிக்கும் நுட்மான பதிவுகள், போரில் ஒரு காலை இழந்து ரப்பர் காலால் நடக்கும் அமுதன் என்ற போராளியின் நுட்பமான மன உணர்வுகளின் பதிவுகள் போதாமை உள்ளதாக உணர்கிறேன்.
செய்திகள், வரலாறு, படைப்பு இலக்கியம் ஆகிய மூன்றுமே அந்த அந்த காலகட்டத்தின் சித்தரிப்புகளாக இருந்தாலும் படைப்பு இலக்கியத்திற்கு செய்திகள், வரலாறு போன்று இல்லாமல் கூடுதல் கடமை ஒன்று உண்டு. விடுதலை போர் பற்றிய பல இலக்கியப்படைப்புகள் மனிதகுல விடுதலையின் மீதான நம்பிக்கைகளுக்கு ஒளிவீசச்செய்வதாகவே இருந்துள்ளன. ஆனால் நம்பிக்கையுடன் இருண்மையையும் கலந்தாக ஆறா வடு நாவல் படைக்கப்பட்டுஉள்ளது. இன்றைய தமிழீழத்தின் நிலைமையும், சூழலும் பெரும் அவலமும், சொற்ப நம்பிக்கையும் சேர்ந்தாக இருப்பதால் அதை தாண்டி படைப்புகள் இருக்க இயலாது.
இந்த சனவரியில் வெளியான எனது சிறுகதை தொகுப்பான “ஆறாத ரணம்” கையொழுத்தில் படித்த நண்பர்ஓவியர் ஜீவாமணி என்னிடம் “உங்களின் மன உளச்சல், மனபாரத்தை இதன் மூலம் இறங்கியா விட்டதல்லவா” என்று சொன்னார். ஆறா வடு என்ற புதினம் மூலம் ஈழத்தின் பெரும் மனித அவலத்தையும், அங்குள்ள உயிர் வாழ்வதற்கான வேட்கையையும் சயந்தன் தனது மனச்சுமையில்ருந்து இறங்கி வைத்ததுள்ளதாக எனக்குப் படுகிறது. மனிதகுல விடுதலையும், தமிழீழ விடுதலையும் நேசிப்பவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய படைப்பு இந்த நாவல்.