"

24

ஈழத்தில் கவிதை அரசியல் மயப்பட்டிருப்பது போலவே இலக்கிய விமர்சனமும் அதி அரசியல்மயப்பட்டதாகத்தான் இருக்கிறது. கோவிந்தனின் புதியோர் உலகம் நாவலின்பின் முக்கியத்துவம் பெற்ற, விவாதிக்கப்பட்ட நாவல்களாக ஷோபா சக்தியின் கொரில்லாவும், விமல் குழந்தைவேலின்கசகறணம் போன்றனவும்தான் இருக்கின்றன. ஈழத்தின் அரசியல் விமர்சனத்தில் செயல்படுகிற அதே மன அமைவுதான் இலக்கிய விமர்சனத்திற்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலி ஆதரவு-எதிர்ப்பு எனும் இரு துருவப் பார்வையில் இருந்து ஏதேனும் ஒரு துருவத்தைச் தேர்ந்து கொண்டு எழுதுவதுதான் ஈழ இலக்கியத்தின் அரசியல்சார் தீவிரப் பண்பு எனும் மனநிலையாகவும் இது நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவு அல்லது விடுதலைப்புலிகளின் ராணுவ-அரசியல் வீழ்ச்சி என்பதன்பின் இத்தகைய இருதுருவப் பார்வை காலாவதியாகிவிட்டது என்பதையோ, அல்லது குறைந்தபட்சம் கடந்து செல்லப்படவேண்டும் என்பதையோ உணராத பார்வை ஈழ இலக்கிய விமர்சனத்தின் துரதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசியலுக்கும் அல்லது கருத்தியலுக்கும் மனிதனுக்குமான உறவுதான் என்ன? மனிதனது அடிப்படை இயல்புகளையும் வேட்கைகளையும் அவனது இருத்தலியல் பதட்டங்களையும் அவனது விடுதலைத் தேட்டங்களையும் அரசியல் உறவுகளாகக் குறுக்கிவிட முடியுமா என்ன? அரசியல் சட்டகங்களாலும் அதனது திசைவழியினாலும் முழுக்கவும் பற்றிப் பிடித்துவிடக் கூடியதாகவா மானுட வாழ்வின் ஓட்டம் இருக்கிறது? மனிதன் முதலா, மனிதனை விளக்குவதற்காகத் தோன்றிய கருத்தியல் சரிகளும், அரசியல் சரிகளும் முதலா? இது அடிப்படையான வாழ்வியல் கேள்வி.

அரசியலை முதன்மைப்படுத்துகிறவர்கள் தவறவிடுகிற, இலக்கியவாதிகளுக்கும் தத்துவவாதிகளுக்கும் அதி அக்கறைக்கு உரிய கேள்வி இதுதான்.

அரசியலில் அதி அக்கறை கொண்ட தமிழ்நதியின் கானல் வரி, அரசியலை எள்ளலுடன் பார்க்கிற உமா வரதராஜனின்மூன்றாம் சிலுவை என, பாலுறவும் மீறலும் சார்ந்த இரு நாவல்களையும் வாசித்த அதே தருணத்தில்தான் செயந்தனின் ஆறா வடு நாவலையும் நான் வாசித்தேன். கடந்த முப்பதாண்டுகளின் அரசியல் உற்பவத்தினால் அலைக்கழிந்த, அதே அழிவினுள் வாழ்ந்த மனிதர்கள்தான் கானல்வரியையும் மூன்றாவது சிலுவையையும் தந்திருக்கிறார்கள். முப்பது ஆண்டுகால இடப்பெயர்வின் வலியும் அழிவும் புலப்பெயர்வும் இந்த இருநாவல்களதும் அரசியல் சாரா மனிதர்களின் பின்னால் மூடுபனிபோல் கவிந்திருக்கவே செய்கிறது.

அரசியலில் நேரடியான பங்காளர்களாக இல்லாவிட்டாலும் பார்வையாளர்களாக அதிலிருந்து தம்மைத் துண்டித்துக்கொள்ள முடியாத அவர்களது இருத்தலை இந்த இரு நாவல்களிலும், அதனது பிரதியில் தெறிப்புகள்போல அங்கங்கே நாம் காணமுடியும்.

ஈழ விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்பாளர்களாக ஆக்கப்படாத, பார்வையாளர்களாக மட்டுமே நிறுத்தப்பட்ட, பல வேளைகளில் விடுதலைப் போராட்டத்தில் பலவந்தமாக உள்ளீர்க்கப்பட்ட தன்னிலைகளாகத்தான் பெரும்பாலுமான ஈழமக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். தமது பிரக்ஞைபூர்வமான பங்கேற்பு இல்லாமலேயே அவர்கள் அதனுள் அமிழ்த்தப்பட்டார்கள். இத்தகைய அந்நியமான மனிதர்களைப் பற்றிய நாவல்தான் செயந்தனின் ஆறா வடு நாவல். இத்தகைய மனிதர்களை சதத்ஹாசன் மண்டோவின் படைப்புக்களில் நாம் அதிகமும் காணமுடியும்.

மண்டோவின் படைப்புக்களின்; அடிநாதம் இந்து-முஸ்லீம் வன்முறை. இங்கு தமிழ்-சிங்கள வன்முறை. அதனோடு இயங்கங்களுக்கு இடையிலான வன்முறை. அல்லது இந்திய-இலங்கை-விடுதலைப் புலிகளுக்கு இடையிலான வன்முறை.

அரசியல் தோல்வி குறித்த பகுப்பாய்வு கருத்தியலாளனுக்கு எங்கிருந்து துவங்குகிறதோ அதே புள்ளியில் இருந்துதான் மானுடப் பேரழிவும், மானுடர்தம் அவலமும் குறித்த ஆற்றாமையும் கலைஞனின் வழி பீறிட்டு வெளியாகிறது.

கோவிந்தன் துவங்கி விமல் குழந்தைவேலின் நாவல் வரை அந்த நாவல்களில் அறிமுகமாகும் பிரதான கதை மாந்தர்களில்; பலர் இயக்க அரசியலில் ஈர்க்கப்பட்டவர்கள். நிறைய அரசியல் பேசுபவர்களாக, இயக்கத்தின் ஸ்தாபன வடிவம், அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசுபவர்களாக, தேர்ந்துகொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாக, எதிர்காலம் குறித்து பதட்டங்களை வெளியிடுபவர்களாக இருக்கிறார்கள். குறிப்பிட்ட இந்த நாவல்களில் நாம் நுழைவதற்கு முன்பாகவே இவர்கள் அரசியல் மயப்பட்ட மனிதர்களாக நமக்கு அறிமுகமாகிறார்கள். இவர்கள் அரசியல்மயப்படுவதற்கு முன்பாக, போராளிகளாக வெளியுலகு இவர்களை அடையாளம் காண்பதற்கு முன்பாக, இவர்கள் என்னவாக இருந்தார்கள்? இவர்கள் எவ்வாறு போராட்டத்தினுள் ஈர்க்கப்பட்டார்கள்? இவர்கள் அரசியல் கல்வி பயிற்றுவிக்கப்படவர்களாக இருந்தார்களா? அல்லது யதேச்சையாக அமைப்புக்குள் தூக்கிவீசப்பட்டவர்களாக, அல்லது பலவந்தமாக அமைப்பினுள் உள்வாங்கப்பட்டவர்களாக இருந்தார்களா? அல்லது நம்பிக்கையினால் மட்டுமே வழிநடத்தப்படும் மந்தைகளின் பகுதிகளாக இருந்தார்களா?

இன்று திரும்பிப் பார்க்கிறபோது ஈழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைக்கும் போராளிகளானவர்களுக்கும்- ஆக்கப்பட்டவர்களுக்குமான இந்த உறவு போராட்டத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற, அதனது அரசியலைத் தீர்மானிக்கிற அடிப்படையான உறவாக இருக்கிறது. போராளிகள் என்பவர்கள், அவர்களோடு இரத்த உறவுகள் கொண்ட வெகுமக்கள,; போராட்டத்தின் பிரக்ஞைபூர்வமான பங்காளிகளாக இருந்தார்களா அல்லது பார்வையார்களாக மட்டுமே வைக்கப்பட்டிருந்தார்களா எனும் மிக அடிப்படையானதொரு கேள்வியையும்; நாம் இன்று கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

எனில் போராட்டத்திலிருந்து மிக இயல்பாகவே அந்நியமாகி இருந்த, வெளியாட்களாக இருந்த இந்த வெகுமக்கள் போராட்;டத்தினுள் ஈரக்கப்பட்டபோது அவர்கள் கொடுத்த விலை என்ன? அந்த சாதாரணர்களுக்கு என்ன நேர்ந்தது? இவர்கள்தான் ஈழத்தின் பெரும்பான்மையான மக்கள் எனில் அவர்களது வாழ்வு, அந்த வாழ்வின் முக்கியத்துவம், போராட்டம் குறித்து வெளியாகின இதுவரைத்திய நாவல்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா? ஈழப் பிரச்சினை குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியான நாவல்கள் என எனது வாசிப்பில் இருந்து சொல்வதானால், இல்லை என்பதுவே எனது பதில்.

இந்த வெளியில்தான் செயந்தனின் நாவல் மிக ‘நுட்பமான சித்தரிப்புகளுடன்’ பிரவேசிக்கிறது. போராட்டத்திலிருந்து அந்நியமான இந்த மனிதர்களின் வாழ்வு குறித்துத்தான் ஆறா வடு பேசுகிறது.

சிலர் இது புலி எதிர்ப்பு நாவல் இல்லை என அறிந்து ஆறுதல் கொள்வதற்கும், பிறர் இது புலி ஆதரவு நாவல் இல்லை என ஆறுதல் கொள்வதற்கும், இந்த இரு நம்பிக்கைகளுக்கும் மாறாக அரசியல் நீக்கப்பட்ட நாவல் இது என்று கொள்ளப்படுவதற்கும் என எல்லாவிதமான வெளிகளையும் இந்த நாவல் விட்டுச்சென்றிருக்கிறது. காரணம் புலி ஆதரவு-புலி எதிர்ப்பு எனும் இருதுருவ நிலைபாட்டில் எந்தவொரு துருவத்தையும் சாராமல் – அவ்வாறான சார்பு நிலையே ‘சரியான’ அரசியல் என இருதுருவத்தினரும் ‘இன்னும்’ பேசிவரும் சூழலில் – இயல்பாகவே ‘போராட்டத்திலிருந்து அந்நியமான மனிதர்களின் மனச்சார்பிலிருந்து’ மட்டுமே ஆறா வடு நாவல் பேசுகிறது.

ஈழப் போராட்டம் குறித்த புனைவுகளில் இந்த நாவலின் முக்கியத்துவமும் தனித்துவமும் இதுதான்.

நாவல் 1983-2003 வரையிலான இருபதாண்டுக் காலகட்டத்தை தனது கதைக்களனாகக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் அடிப்படையில் அரசியல் விலங்குகள் அல்லர் எனக் கொள்வோமாயின், அரசியல் சாரா மனிதர்கள் பற்றியதுதான் இந்த நாவல். பிரதான கதை சொல்லியான ஐயாத்துரைப் பரந்தாமன் என்கிற இவான் என்கிற அமுதனின், அவனது நண்பர்களான தேவபாலு, சந்திரன் என்பவர்களின் கதை இது. அமுதனின் சோலாப்பூர் செருப்பைத்திருடும் நந்தகுமாரன், அதற்காக அவனை மிரட்டும் அமுதன், செருப்புத்திருடனான நந்தகுமாரன் இந்திய அமைதிப் படையினரினிடம் சொல்லி அமுதனும் அவனது நண்பர்களும் கைதுசெய்யப்படுவதன் வழி, விடுதலைப்புலிகளாக அவர்களுக்கு அரசியல் அடையாளம் தரப்படுகிறார்கள்.

கோழி திருடிச் சமைத்து உண்டுவிட்டுத் திரிகிற பையன்கள் இப்படித்தான் அரசியலுக்குள் வருகிறார்கள்.

முதலில் இந்திய அமைதிப்படைக்கு இணக்கமாக ஆகிறவர்கள், இந்திய அமைதிப்படை வெளியேறி விடுதலைப்புலிகள் தமிழ் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறபோது இவர்களில் அமுதன் விடுதலைப்புலிப் போராளி ஆகிவிடுகிறான்.

தேவபாலு தமிழ் விரோதியாக்கப்பட்டு விடுதலைப் புலிகளால் கொல்லப்படுகிறான். சந்திரன் சித்திரவதைகளுக்கு ஆளாகிறான்.

பெரும்பான்மைச் சமூகத்தவர்களால் நக்கலடிக்கப்படும் பெருத்த மார்புகள் கொண்ட நிலாமதி ஆமிதவிரவும் கண்டவர்களையும் சுடுகிற விடுதலைப் புலிப்போராளியான வெற்றியிடம் தனக்கான மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெறுகிறாள். கிரானைட்- தனது பெருத்த மார்புகள்-இந்திய அமைதிப்படையினருக்கெதிரான அவளது சினம், அவளது மரணம் இதன் பின்னிருந்தது நிச்சயமாக அவளது அரசியல் நம்பிக்கைகள் இல்லை.

சிங்களப் படையினரிடமிருந்து தமது பெண்குழந்தைகளைக் காக்க ஓடித்திரியும் தாய்க்கோழி சுபத்திரை, இடப்பெயர்வின் இடைநடுவில் பூப்பெய்தும் அவளது புதல்வி மைதிலி, தற்கொலைப் பேராளியாகி மாண்டுபோன தனது கடைக்குட்டித் தம்பியைத் தேடித்திரியும்  பெரியய்ய ஐயா,  அரசுக்கும் சனத்துக்குமான நிரந்தரமான முரணுறவு போன்றதுதான்  புகலிடப் பயணிகளுக்குச் சலுகை உள்ளுர் மக்களுக்கு வரிச்சுமை என இயங்கும் விடுதலைப்புலிகள் நிர்வாகத்திற்கும் சனங்களுக்குமான உறவு எனும் மொழிபெயர்ப்பாளர் நேரு, இந்தியப் படையினரால் கர்ப்பமடைந்து, விடுதலைப்புலிகளாலா அல்லது இந்தியப் படையினராலா என உறுதிப்படுத்திக் கொள்ள முடியாதபடி சுட்டுக் கொல்லப்படும் மனம்பேதலித்த பெண்ணான தேவி, தனது குடும்பத்தினருக்காகச் சம்பள உத்திரவாதம்தரும் சிங்களப் படையில் சேர்ந்து ராணுவத்தை விட்டு ஓடிப்போகும் பண்டார,  வுpடுதலை இயக்கம் குறித்த மனோரதியமான எண்ணங்கள் கொண்ட கனடியத்தமிழ்ப் பெண் சுகன்யா, கடல் நடுவில் அனாதரவாக மடியும் சின்னப்பொடியன், தாடி வைத்த இபிடிபி என நம்பப்படும் காதலில் தோல்வியற்றவன், காதலித்து மணம்முடித்து இயக்கத்திலிருந்து வெளியேற நினைத்து விடுதலைப் புலி இயக்கத்தவரால் மூன்று வருடம் தண்டனை பெற்ற போராளி, வேறுபட்ட தெருக்கொலைகளின் சாட்சியமான கடைக்காரர் ஆனந்தியப்பு என மிகமிகச் சாதாரண மனிதர்களின் வாழ்வு குறித்த கதைதான் ஆறா வடு.

இந்த அரசியல் மிருகங்கள் அல்லாத சாதாரண மனிதர்களின் உறவுகள்தான் போராளிகளாக, தியாகிகளாக, காட்டிக் கொடுப்பவர்களாக, துரோகிகளாக, மாறி மாறி அதிகாரம் பெறும் இயக்கத்தவர்களால், அரச ஆயுத அமைப்புக்களால் வேறு வேறு அடையாளம் தரப்படுபவர்களாக மாற்றப்படுகிறார்கள்;.

போராட்டத்திலிருந்து ‘அந்நியமான’ இந்த மனிதர்களின் வழி போராட்ட அனுபவங்கள் சொல்லப்பட்டதானாலேயே முக்கியத்துவமடைகிற நாவல் ஆறா வடு. இவர்கள் அந்நியமாக்கப்பட்டதன் பின்னுள்ள அரசியலை, இன்று விடுதலை அரசியல் பேசுபவர்கள் நிதானமாக அலச வேண்டிய உளவியல் பார்வையின் அவசரத்தை, ஆறா வடு நாவல் கோரி நிற்கிறது.

வெகுமக்களின் இந்த அந்நியமாக்கப்பட்ட நிலையே போராட்டத்தின் வீழ்ச்சிக்கான விதைகளையும் கொண்டிருக்கிறது என ஒருவர் இனம்காணமுடியும். இந்த வகையிலும் ஆறா வடு நாவல் போராட்டம் குறித்த உளவியல் ஆவணமாக இருக்கிறது. நாவலின் கூறுமறையாக எங்கும் பரவியிருக்கிற அங்கதம் என்பது இந்த உளவியலின் வெளிப்பாடுதான். அந்நியமாக இருப்பதன் கைத்த மனநிலைதான் விரக்திநிலையில் இங்கு அங்கதமாக வெளிப்படுகிறது. இந்த அங்கதத்தின் தொனி கொண்டாட்ட மனநிலையில் ஆனதல்ல, மாறாக அது கசந்த மனதின் வெளிப்பாடு.

நாவலின் கட்டமைப்பில், சித்தரிப்பில், பின்பாகத்திலான அத்தியாயங்களில் சமநிலையில்லை. முன் அத்தியாயங்களோடு ஒப்பிட, புனைவுத்தன்மை குறைந்த, விவரணப்படத்தன்மையிலான அவசரஅவசரமான சித்திரிப்பை பின் அத்தியாயங்கள் கொண்டிருக்கின்றன. குறிப்பாக சுபத்திரை, மைதிலி போன்றவர்களுடன் ஒப்பிட, அதை விடவும் முக்கியத்துவம் கொண்ட பாத்திரச் சித்தரிப்பாக வந்திருக்க வேண்டிய தேவியின் பாத்திரம் அவசரமாகக் கடந்து போகப்படுகிறது.

எரித்திரியக் கடற்கரைக்குள் நுழைகிற இறுதி அத்தியாயம் நாவலை சர்வதேசிய அரசியல் தளத்தினுள் கொண்டு நிறுத்துகிறது. இது, நாவலின் மிகப் பெரும் செய்தி. ஈழப் போராட்டமும் அதனது மனிதர்களும் அவர்களது அனுபவங்களும் தனித்த தீவுத்தன்மை கொண்டவைகள் இல்லை.

ஓரு முனையில் ஈழ விடுதலைப் போராட்டம் தவிர உலகின் அனைத்து விடுதலைப் போராட்டங்களும் நேர்த்தியானவை, சரியானவை என்கிற பிரமை பெரும்பாலுமான கண்மூடித்தனமான விடுதலைப் புலி எதிர்ப்பாளர்களால் கட்டி எழுப்பப்படுகிறது. குறிப்பாக பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் புனிதமானது, ஈழப் போராட்டம் பாசிசம் என்பார்கள் இவர்கள்.

பிறிதொரு முனையில் எந்தவிதமான விமர்சனமும் அற்ற விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், தமது தலைமையில் அனைத்தும் சரியாகவே நடந்தது, உலகினர் அனைவரும் தம்மைப் புரிந்து கொள்ளாது தவறு செய்தார்கள் எனும் நிலைபாட்டை மேற்கொள்வார்கள். இவை இரண்டுக்கும் அப்பால் இனத்தேசிய விடுதலைப் போராட்டம் என்பது, அதனது அனுபவங்கள் என்பது உலக அரசியல் செயல்போக்கின் ஒரு அங்கம், அதனை அந்தச் செயல்பாக்கில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறது இறுதி அத்தியாயம்.

முன்னாள் விடுதலைப் புலிப் போராளி ஒருவனால் அவனது மரணத்தின் போது கைவிடப்படும் பைபர் கிளாஸ் செயற்கைக் கால், எரித்திரிய முன்னாள் விடுதலைப் போராளியான, போராட்டத்தில் கால் ஊனமாகின இத்ரிஸ் கிழவனை எவ்வாறு சென்றடைந்தது என்பதனை அவன் அறிவானா? நாம் அறிவோம். இத்ரிஸ் கிழவனது வாழ்வை நாம் தொடர்ந்து செல்வோமானால், அவன் ஏதேனும் ஒரு இடத்தில் அமுதனைச் சந்திப்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும். நாவல் இந்தப் பிரபஞ்ச தரிசனத்துடன் முடிகிறது.

நாவலின் ‘இலக்கிய’ மேதைமைக்கும், அரசியலற்ற இந்நாவல் சொல்லும் ‘அரசியலுக்கும்’ இதுவரைத்திய ஈழத்து அரசியல் நாவல்களில் சொல்லப்படாத இந்த உரைநடை சான்று : ஆயுதாரிகளைக் கண்டதும் கைகளை உயர்த்தியபடி லேக் ஹவுஸ் ஊழியர்கள் ஒரு மூலைக்குள் ஒதுங்கியிருந்தனர். அவர்களை அங்கிருந்து வெளியேறிப் போகுமாறு சைகை செய்தார்கள். தாகத்தில் நா வறண்டு போயிருந்தது. நீர்க்குழாயின் அருகில் வாயை வைத்து கைகளால் ஏந்தித் தண்ணீர் குடித்தார்கள். க்ளுக் க்ளுக் என்ற சத்தத்தோடு தொண்டைக் குழிக்குள் தண்ணீர் இறங்கிப் போனது. பிறகு அவர்கள் சயனைட் குப்பியைக் கடித்து உடைத்தபோது மெல்லிய கண்ணாடித்துண்டுகள் நாக்கையும் கடைவாய் உதட்டையும் வெட்டிக் கிழித்து இரத்தம் வரப் பண்ணியிருந்தன. அப்பொழுது தம்மிடமிருந்த மீதிக் குண்டுகளையும் அவர்கள் உடலோடு அணைத்து வெடிக்க வைத்தனர் (பக்கம் : 101).

License

Icon for the Public Domain license

This work (ஆறாவடு by aaraavadu) is free of known copyright restrictions.

Share This Book