"

41

சிலகாலமாக இணையத்திலும் தமிழ் வாசகர்கள் மத்தியிலும் அதிகமாகப் பேசப்பட்ட புத்தகம் ஆறாவடு. நண்பர் சயந்தனின் முதல் நாவல். அண்மையில் லண்டனில் நடந்த ஆறாவடு வெளியீட்டுவிழாவின் போது சயந்தனின் கையால் இந்த நாவலை வாங்கியது மறக்கமுடியாத அனுபவம். வெளியீட்டு விழாவில் வாசிக்கத் தொடங்கி இடையில் இன்னொரு நண்பருடன் நிலக்கீழ் புகையிரத்ததில் பயணித்ததால் மீண்டும் பஸ்ஸில் வாசிப்பைத் தொடர்ந்து வீடு வருமுன்னர் வாசித்துமுடித்துவிட்டேன்.

1987ல் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் (ஜெயமோகனின் வரிகளில் சொன்னால் பாலியல் வல்லுறவே தெரியாத அல்லது செய்யாத இராணுவம்) காலத்தில் தொடங்கி 2003ல் ஜீஎல் பீரிஸும் பாலா அண்ணையும் தாய்லாந்து புக்கட் நகரில் மரக்கன்று நடும் வரை அமுதன் என்ற முன்னாள் போராளியின் கதைதான் இந்த ஆறாவடு.

இந்த நாவலானது நீர்கொழும்பில் தொடங்கி எரித்திரியாவில் முடிவடைகின்றது. 21 அத்தியாயங்கள் நீளும் இந்த நாவலில் பெரும்பாலும் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சிறுகதையாகவும் கருதலாம். இதைப் பலர் பல இடங்களில் விமர்சித்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை சயந்தன் பல கிளைக்கதைகளை ஒன்றாகச் சேர்த்து எம் வரலாற்றை நாவலாகத் தந்திருக்கின்றார்.

அமுதன் என்ற பெயருடைய ஒரு இளைஞன் தான் கதையின் நாயகன். 2002 ரணில் விக்கிரமசிங்க காலத்தில் இயக்கத்தை விட்டு வெளிநாட்டுக்குப் போக முனையும் இளைஞன். அவனது காதலியின் பெயர் அகிலா. இவரின் உதவியுடன் தான் அமுதன் வெளிநாட்டுக்கு நீர்கொழும்பிலிருந்து களவாக இயந்திரப் படகில் செல்லவிளைகின்றான்.;

அமுதன் என்பது அவனின் இயக்கப்பெயர். இந்த தமிழ்ப் பெயர் பம்பலை எல்லாம் சயந்தன் தனக்கே உரிய நக்கல் பாணியில் எழுதியிருக்கின்றார். சைக்கிள் கடைக்கு ஒட்டகம் எனப் பெயர் மாத்தியது எல்லாம் கதை ஓட்டத்தினூடு வருகின்றது. ஒட்டகம் எனத்தான் ஞாபகம் வருது கோப்பாயிலோ இருபாலையிலோ ஒரு சைக்கிள் கடைக்கு ப்ரியா ஒட்டகம் எனப் பெயிரிட்டுவிட்டு ஒட்டகத்தின் படமும் வரைந்திருந்தார்கள்.

தானும் தன்ரை பாடும் என இருந்த அமுதனை இந்திய இராணுவத்தினர் ஒரு தலையாட்டி தன் சொந்தப் பிரச்சனைக்காக தலையாட்டிவிட கைது செய்கின்றார்கள். பின்னர் அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஈபிஆர்எல்எவ் முன்னாள் வடகிழக்கு மாகாண முதலைமைச்சர் வரதராஜப் பெருமாளின்(வரலாறு முக்கியம்) அணியினர் தம்முடன் வலுக்கட்டாயமாகச் சேர்க்கின்றார்கள்.

ஆனாலும் ஏனைய ஈபி தலைவர்களையோ தொண்டர்களையோ போலில்லாமல் அமுதன் அப்பாவியாக இருந்த படியால் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் புலிகளுடன் இணைகின்றான். அங்கே பரந்தாமன் என்ற அவனி இயற்பெயர் அமுதனாக மாறுகின்றது.

நல்ல சண்டைப்போராளியான அமுதன் ஒரு காலத்தில் ஒரு யுத்தத்தில் தன் ஒரு காலை இழக்கின்றான். இதன் பின்னர் அவன் பொய்க்காலுடன் அரசியல் பணிகளில் ஈடுபடுகின்றான். இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்காவுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் 2002ல் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர் அமுதன் வன்னியில் இருந்து அமுதன் அரசியல் பணிகளுக்காக யாழ்ப்பாணம் செல்கின்றான். அங்கே அகிலா மேல் காதல் கொண்டு பின்னர் அந்தக் காதலுக்காக இயக்கத்தை விட்டு விலகி ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு களவாகச் செல்லமுயல்கின்றான். அமுதன் ஐரோப்பியநாட்டுக்குச் சென்றானா? அவனது கடல்ப் பயண திகில் அனுபவங்கள் என்ன? என்பதை ஆறாவடு நாவலை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

அமுதனின் இந்தக் கதையினூடாக எம் மண்ணில் ஒரு காலத்தில் நடந்த பல நிகழ்வுகளை சயந்தன் கண்முன்னே கொண்டுவருகின்றார். சில சம்பவங்களை அழகாக பதிவு செய்த சயந்தன் சில சம்பவங்களை ஏனோ ஒரு வரியில் முடித்துக்கொண்டார் உதாரணமாக யாழ்ப்பாணம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது பாரிய இடப்பெயர்வு நந்திக்கொடி ஏற்றப்பட்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்திய சயந்தன் அந்த அத்தியாய முடிவில் “நந்திக் கொடி ஏத்திய இராமலிங்கத்தை இயக்கம் சுட்டது அதற்கு ஒரு மாதம் பிந்தி செம்மணி செக்பொயிண்டில் கிருஷாந்தியின் சைக்கிளை இராணுவம் மறிந்தது.” என மொட்டையாக முடிக்கின்றார்.

கிருஷாந்தி யார்? அவருக்கு என்ன நடந்தது? என்பது அடுத்த அத்தியாயத்தில் எழுதியிருப்பார் என நினைத்துப் பக்கத்தைப் புரட்டினால் ஏமாற்றம் தான் கிடைத்தது. நிச்சயமாக கிருஷாந்தியின் அவலத்தை சயந்தன் பதிவு செய்திருக்கவேண்டும். இல்லையென்றால் அதை ஒரு வரியில் எழுதி இருக்ககூடாது. ஈழப்பிரச்சனை நன்கு தெரிந்தவாசகர்களால் இவற்றை ஊகிக்கமுடியும் ஆனால் பிரச்சனை தெரியாதவர்கள் என்ன விடயம் இது என தலையைப் பிடுங்கவேண்டி இருக்கும்.

இந்திய இராணுவத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்த வெற்றி என்ற போராளியை நான் என் வாழ்க்கையின் கண்டிருக்கின்றேன். அதேபோல இந்திய இராணுவம் இருக்கும் போது பரமசிவன் கழுத்துப் பாம்பாக இருந்த ஈபிஆர்எல்எவ் குழுவினரும் இந்திய இராணுவம் வெளியேறியபின்னர் என்னசெய்வது எனத் தெரியாமல் அமுதன் போல இயக்கத்துடன் இணைந்தவர்களும் அப்பாவி மக்களுக்குத் தொல்லை கொடுத்தது பல புலி உறுப்பினர்களின் மரணத்துக்கு காரணம் என‌ மின்கம்பத்தில் மரணத்தை தழுவியவர்கள். ஓடித்தப்பியவர்கள் எனப் பலரும் இந்தக் கதையில் உலாவும் நிஜமான பாத்திரங்களே.

சயந்தனின் நக்கல் எழுத்து நடை ஏற்கனவே இணைய வாசகர் அறிந்ததே. அதை நடையுடன் இந்த நாவலையும் எழுதியிருப்பதால் பல இடங்களில் வாய்விட்டே சிரித்தேன். பஸ்சில் பக்கத்தில் இருந்த ஜமேக்கன் பெண் அடிக்கடி நான் சிரிப்பதைப் பார்த்து இன்னொரு இருக்கையில் போய் அமர்ந்த கொடுமையும் சயந்தனால் எனக்கு ஏற்பட்டது.

டில்ஷான் தேநீர்ச் சாலைப் சும்மா தேநீர்ச் சாலையாக மாறிய‌ பகிடி உங்கடை எங்கடை நம்பர் பிளேட் பகிடி, இரத்தத்தில் காதல் கடிதம் எழுதிய கூத்து எனப் பல இடங்களில் சயந்தன் சிரிக்க வைப்பதுடன் இவை எல்லாம் ஒரு காலத்தில் நடந்தவையே என மீண்டும் நினைக்கவும் வைக்கின்றார்.

அந்தக் காலத்தில் அந்த மரணம் மலிந்த மண்ணில் வாழ்ந்த ஜீவராசிகளில் நானும் ஒருவன் என்பதால் கதையின் ஓட்டத்துடன் மிக இலகுவாக கலப்பதுடன் பல சம்பவங்கள் எங்கள் ஊரில் அல்லது பகுதியில் நடந்த சம்பவங்களுடன் ஒத்துப்ப்போவதாகவும் உள்ளது. இதுதான் சயந்தனுக்கு கிடைத்த வெற்றி.

License

Icon for the Public Domain license

This work (ஆறாவடு by aaraavadu) is free of known copyright restrictions.

Share This Book