மூலம்
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
எளிய தமிழில்
அன்னையவளை எங்கள் அபிராமி வல்லியை அகிலஉலகும்
அரும்பியவளை மாதுளச் செந்நிறத்தவளை புவிமுழுதும்
அடக்குபவளை அங்குச பாசம் கரும்பு வில்லும் திருக்கரத்தில்
அணிந்தவளை வழிபட அடியார்க்கொரு தீங்கில்லையே
அனுதினமவளை தொழுவோம் தொழுதே எழுவோம்
அபிராமி அந்தாதி நூறு பாடல்கள் நிறைவுற்றது
அவளை அவளருளால் அழகுப் பண்ணால் துதிக்கப் பண்ணியதற்கு அத்தனை பெருமையும் அவளையே சாரும். நூறு நாள் தொடர்ச்சியாய் இதைச் செய்ய விக்னங்கள் இல்லாமல் நடத்திக் கொடுத்த குழந்தை தெய்வம் விநாயகரை நமஸ்கரிக்கின்றேன். அவள் சொல் அவள் பொருள் அடியேன் ஒரு பூஜாரி அவ்வளவே. அர்ச்சிக்கத் தூண்டி அர்ச்சிக்க வைத்து அருள் செய்தவள் அவளே. அவள் தாள் பணிவோம்.