*************************************************************************************
குரு பரம்பரையின் பெருமைகளையும், காந்தாரியின் நன்னடத்தைகளையும், விதுரரின் ஞானத்தையும், குந்தியின் நிலையான தன்மையையும் வியாசர் முழுமையாக பிரதிபலித்திருக்கிறார். அந்த பெருமுனிவர் {வியாசர்} வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தெய்வீகத்தன்மையையும், பாண்டவர்களின் நேர்மையையும், திருதராஷ்டிரன் மகன்களின் தீய செயல்களையும் விவரித்திருக்கிறார்.
பாரதத்தையும் அதன் பெரும் கிளைக்கதைகளையும் இருபத்துநாலாயிரம்
{24,000} செய்யுள் அடிகளைக் கொண்டு வியாசர் உரைத்தார். அதன்பிறகு, நூற்று ஐம்பது {150} செய்யுள் அடிகள் கொண்ட சுருக்கத்தைப் படைத்தார். இவற்றை முதலில் தனது மகன் சுகருக்கு கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு தனது சீடர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு அதன் இன்னொரு படைப்பாக மொத்தம் அறுபது லட்சம்
{60,00,000} செய்யுளடிகளைக் கொண்ட படைப்பை படைத்தார். அதில் முப்பது லட்சம்
{30,00,000} செய்யுளடிகள் தேவலோகத்தில் அறியப்பட்டுள்ளது. பதினைந்து லட்சம்
{15,00,000} செய்யுளடிகளை பித்ருக்களின் உலகம் அறிந்திருக்கிறது. பதினான்கு லட்சம்
{14,00,000} கந்தர்வலோகத்திலும், ஒரு லட்சம்
{1,00,000} மானுட உலகத்திலும் அறியப்பட்டிருக்கிறது. நாரதர் தேவர்களுக்கு உரைத்தார், தேவலன் பித்ருக்களுக்கு உரைத்தார், கந்தர்வர், யக்ஷர், ராட்சதர்கள் ஆகியோருக்கு சுகர் உரைத்தார், இந்த
மானுட உலகிற்கு வியாசரின் சீடரான வைசம்பாயனர் உரைத்தார். சௌதியாகிய நான் பாரதத்தை திரும்பச் சொல்லும்போதும் அந்த ஒரு லட்சம் {1,00,000} செய்யுளடிகளையும் முழுமையாகச் சொல்கிறேன்.
யுதிஷ்டிரன், நேர்மையும் ஒழுக்கமும் உள்ள ஒரு பெரிய மரம்,
அர்ஜூனன் அந்த மரத்தின் நடுப் பாகம்,
பீமசேனன் அந்த மரத்தின் கிளைகள்,
மாத்ரியின் இரு மைந்தர்கள்
{நகுல,சகாதேவன்} முழுமையடைந்த பழங்களும் பூக்களும் ஆவார்கள்.
கிருஷ்ணன், பிரம்மா, அந்தணர்கள் ஆகியோர் அந்த மரத்தின் வேர் போன்றவர்கள்.
பாண்டு தனது ஞானத்தாலும் பராக்கிரமத்தாலும் பல நாடுகளைத் தன் எல்லைக்குள் கொண்டு வந்த பிறகு, முனிவர்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதிக்குள் வேட்டையாடச் சென்றான். தனது துரதிர்ஷ்டத்தால் (பேறின்மையால்), காமத்தில் திளைத்திருந்த இரு மான்களை வேட்டையாடியதால் அவனுக்கு
{பாண்டுவுக்கு} சாபம் கிடைத்தது. அந்த சாபத்தின் காரணமாக, பாண்டு தனது மனைவிகளுடன்
{குந்தி,மாத்ரியுடன்} கூட முடியாமல் போனது.
தர்மதேவன், வாயு, இந்திரன் மற்றும்
அஸ்வினி இரட்டையர்களை அறிந்த அந்த இரு மனைவிமார்கள்
{குந்தியும்,மாத்ரியும்} அவர்களிடம் குழந்தைகளைப் பெற்றனர். அந்த கானத்திலிருந்த முனிவர்கள், தாயின் {குந்தியின்} அரவணைப்பில் கானகத்தில் வாழ்ந்த அந்த குமாரர்களை, திருதராஷ்டிரனும் அவன் மைந்தர்களும் இருந்த அவைக்கு அழைத்துக் கொண்டு போய், ”இவர்கள் எங்களது சீடர்கள். இவர்கள் உங்கள் மைந்தர்கள், உங்கள் சகோதரர்கள் மற்றும் உங்கள் நண்பர்கள்.
இவர்கள் பாண்டவர்கள்,” என்று சொல்லி அவர்களிடத்தில் ஒப்படைத்துவிட்டு தங்கள் இருப்பிடம் திரும்பினார்கள்.
பாண்டுவின் புதல்வர்கள் என்று அறிமுகப்படுத்தப்படுவதை கௌரவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மக்கள் ஆனந்தத்தில் கத்தினர். சிலர் அவர்கள் பாண்டுவின் புதல்வர்கள் அல்ல என்றனர்; சிலர் அவர்கள் பாண்டுவின் புதல்வர்கள்தான் என்றனர். சிலர் பாண்டு இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன, இதை எப்படி நம்பவது? என்றனர். எல்லா திசையிலும் கூச்சலும் குழப்பமுமாய் இருந்தது. ”அவர்கள் எல்லா வகையிலும் வரவேற்கப்படுகிறார்கள். தெய்வீக உணர்தலால் பாண்டுவின் குடும்பத்தை காணுங்கள்! அவர்கள் வரவேற்கப்படட்டும்!” என்று எல்லாபுறங்களிலிருந்தும் கேட்குமாறு கண்களுக்கு தெரியாத தேவதூதர்களின் ஒலி, விண்ணை முட்டும் அளவுக்கு கணீரெனக் கேட்டது. நறுமணத்துடன் கூடிய பூமழை பொழிந்தது. சங்குகளும், மேளங்களும் முழங்கின. இளவரசர்கள் வருகையில் இந்த ஆச்சரியமூட்டும் சம்பவங்கள் நடந்தன. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி, தங்கள் மனநிறைவைப் பிரதிபலிக்க கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் தேவலோகத்தை எட்டும் அளவுக்கு இருந்தது.
வேதங்கள் முழுமையையும், சாத்திரங்கள் பலவற்றையும், பாண்டவர்கள் அங்கேயே கற்றனர். அவர்கள் எல்லோராலும் மதிக்கப்பட்டனர். எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ்ந்தனர்.
முக்கிய மனிதர்கள் அனைவரும்
யுதிஷ்டிரனின் ஒழுக்க சுத்தத்திலும், அர்ஜுனனின் வீரத்திலும், குந்தியின் அடக்கத்திலும், நகுல சகாதேவர்களின் பணிவிலும் திருப்தியடைந்திருந்தனர். மக்கள் அனைவரும் இளவரசர்களின் தலைமைப் பண்பு மற்றும் மற்ற குணநலன்களைக் கண்டு வியந்து மகிழ்ந்தனர்.
பிறகு ஒரு நாள்
அர்ஜுனன், அரசர்கள் நிறைந்த சபையில், கடினமான வில் போட்டியில் வென்று
கிருஷ்ணை {திரௌபதி} என்ற பெண்ணை சுயம்வரத்தில் வென்றான். அதிலிருந்து, மிகச்சிறந்த வில்லாலிகளும் அவனை {அர்ஜுனனை} மதித்தனர். போர்க்களங்களில் அவன் சூரியனைப் போன்று எதிரிகளை அடக்கினான். தனது அரசன் (தனது அண்ணன்-
யுதிஷ்டிரன்) நடத்திய ராஜசூய யாகத்திற்காக அண்டை நாட்டு இளவரசர்கள் எல்லோரையும் வென்றான்.
வாசுதேவனின்
{கிருஷ்ணனின்} ஆலோசனைகளைக் கேட்டு,
பீமசேனன் மற்றும்
அர்ஜுனன் ஆகியோரது வீரத்தால் மகத நாட்டு மன்னன்
ஜராசந்தனை அழித்து,
யுதிஷ்டிரன் தனது ராஜசுய யாகத்தை தொடர்ந்தான்.
துரியோதனன் அந்த யாகத்திற்கு வந்தான். பாண்டவர்கள் செல்வத்தில் செழிப்பதைக் கண்டான். பரிசுப்பொருட்கள், விலையுயர்ந்த கற்கள், பொன், நகைகள், கால்நடைச் செல்வம் {மாடுகள்}, யானைகள், குதிரைகள், கண்கவர் ஆடைகள், மெல்லிய ஆடைகள், சால்வைகள், தோலாடைகள், ரங்கு என்ற வகை மான் தோலாலான தரைவிரிப்புகள் என, இவற்றை எல்லாம் கண்டு பொறாமை கொண்டான். அவனுக்கு {துரியோதனனுக்கு} அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்டாலே பிடிக்கவில்லை. அசுரத்தச்சன் மயனின் கைவண்ணத்தில் ஆன மாளிகைக்கு அவன் {துரியோதனன்} சென்றான். பிரம்மிப்பு அடைந்தான். சில இடங்களைச் சரியாக கவனிக்காமல் அவன் {துரியோதனன்} விழுந்தான். அதைக் கண்டு, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் பீமசேனன் சிரித்து விட்டான்.
துரியோதனன் எதிலும் விருப்பமில்லாமல் கவலையோடு இருப்பது திருதராஷ்டிரனுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, சில காலம் கழித்து, துரியோதனன் மீது வைத்திருந்த பாசத்தால், பாண்டவர்களுடன் சதுரங்கம் ஆட திருதராஷ்டிரன் சம்மதம் தெரிவித்தான். வாசுதேவன் {கிருஷ்ணன்} இந்த தகவலை அறிந்து ஆத்திரமடைந்தான். கோபத்தில் சலிப்படைந்து, எந்த பிரச்சனையிலும் அவன் {கிருஷ்ணன்} தலையிடவில்லை, ஆனால் என்ன நடக்கிறது என்பதை மட்டும் கண்காணித்தான். விதுரர், பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரைப் பற்றி நினைக்காமல், ஒருவரும் அறியாமல் அந்த க்ஷத்திரியர்கள் ஒருவரையொருவர் கொல்வதற்கு வழிவகுத்தான் {கிருஷ்ணன்}.
{குருஷேத்திரப் போரில்} ‘‘பாண்டவர்கள் ஜெயித்தார்கள்” என்ற கெட்ட செய்தியை திருதராஷ்டிரன் கேள்விப்பட்டான். துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனியின் செயல்களை நினைத்துப் பார்த்தான், பிறகு சஞ்சயனை {திருதராஷ்டிரனின் தேரோட்டியும் அமைச்சருமான சஞ்சயனை} அழைத்து பின்வரும்படி உரைத்தான்.
”நீ என்னை புறக்கணிக்கலாம். நீ சாத்திரங்களில் ஞானம் கொண்ட வல்லவன். நான் சொல்வதைக்கேள். நான் போரை விரும்பவில்லை. நான் எனது பிள்ளைகளிடமும் {கௌரவர்களிடமும்}, பாண்டுவின் பிள்ளைகளிடமும் {பாண்டவர்களிடமும்} வித்தியாசம் பார்க்கவில்லை. என் பிள்ளைகள் எனக்கு வயது முதிர்ந்ததால், என்னை இழிவாகக் கருதி போரைத் துவக்கினர். எனது புத்திர பாசத்தால் அவற்றையெல்லாம் பொறுத்தேன். எனது மகன் துரியோதனன் பாண்டவர்களின் செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டான். அந்த மாளிகையில் அவன் {துரியோதனன்} நகைப்புக்குள்ளாக்கப்பட்டதை அவனால் தாங்க முடியவில்லை. காந்தர மன்னனின் {சகுனியின்} துணை கொண்டு சூதாட்டத்தில் கபடமாக பாண்டவர்களை தோற்கடித்தான்.
எப்பொழுது, அரசர்கள் முன்னிலையில்,
அர்ஜுனன் தனது வில்லம்பால் இலக்கை அடித்து கிருஷ்ணையின்
{திரௌபதியின்} கைபிடித்தான் என்று கேள்விப்பட்டேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, மதுவம்சத்து
சுபத்திரையை அர்ஜுனன் துவாரகையில் கைபிடித்தான் என்று கேள்விப்பட்டேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை. எப்பொழுது, தனது தெய்வீக அம்பால்
காண்டவ வனத்தில் இந்திரனின் மழையைத் தடுத்து
அக்னி தேவனை மகிழ்வித்தான், என்று கேள்விப்பட்டேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, குந்தியும் அவள் மைந்தர்களும் {பாண்டவர்களும்} அரக்கு மாளிகையில் இருந்து தப்பிச் சென்றார்கள் என்று கேள்விப்பட்டேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை. எப்பொழுது, மகத மன்னன் ஜராசந்தன் பீமனால் கொல்லப்பட்டான் என்று கேள்விப்பட்டேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, பாண்டவர்கள் ராஜசுய வேள்வி நடத்தினார்கள் என்று கேள்விப்பட்டேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, திரௌபதி தனது தீட்டு காலத்தில் கண்ணீருடன் சபை நடுவில் இழுத்து வரப்பட்டாளோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை
எப்பொழுது, தீய துட்சாதனன் திரௌபதியின் ஒற்றை ஆடையை உருவ முற்பட்டு தோல்விகண்டானோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, யுதிஷ்டிரன்
சூதாட்டத்தில் தோற்கடிக்கப்பட்டும் பலம் பொருந்திய தம்பிகள் அவனுக்கு {
யுதிஷ்டிரனுக்கு} சேவகம் செய்தார்களோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, அழுதுகொண்டிருந்த பாண்டவர்கள் தனது அண்ணனை {
யுதிஷ்டிரனை} பின்தொடர்ந்து சென்று, பல துயரங்களை சந்தித்து அதிலிருந்த மீண்டார்கள் என்று கேள்விப்பட்டேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, யுதிஷ்டிரனுக்கு
சனாதர்களின் ஆதரவும், ஒழுக்கத்தில் சிறந்த அந்தணர்களின் ஆதரவும் கிட்டியது என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, அர்ஜுனன் முக்கண்ணனுடன்
{சிவனுடன்} போர் புரிந்து அவர் பாராட்டுதலைப்பெற்று
பாசுபத அஸ்திரத்தைப் பெற்றான் என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, நீதிமானான அர்ஜுனன் தேவலோகம் சென்று இந்திரனிடம் இருந்து பல தெய்வீக ஆயுதங்களைப் பெற்றான் என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, வானவர்களாலும் வெல்ல முடியாத காலகேயர்களையும் பௌலமர்களையும் அர்ஜுனன் வென்றான் என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, அர்ஜுனன் இந்திரனுக்கு உதவி செய்ய தேவலோகத்தில் அசுரர்களுடன் போர் புரிந்து வெற்றிவாகையுடன் வந்தான் என்பதை அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, கர்ணனின் ஆலோசனையின் பேரில் எனது பிள்ளைகள் {கௌரவர்கள்} கோஷயாத்திரை சென்றபோது கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டு, அர்ஜுனனால் விடுவிக்கப்பட்டார்கள், என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது,தர்மதேனின் கேள்விகளுக்கு யுதிஷ்டிரன் பதிலளித்தான் என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, பாண்டவர்கள் திரௌபதியுடன் விராடனின் எல்லைக்குள் மறைந்திருந்த காலத்தில் எனது பிள்ளைகள் {கௌரவர்கள்} அவர்களை {பாண்டவர்களைக்} கண்டுபிடிக்கத் தவறினார்கள், என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, எனது மூத்த வீரர்களையும்
அர்ஜுனன் தன்னந்தனியாக விராடத்தில் வென்றான், என்று அறிந்தேனோ அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, உலகத்தை அளந்த யது வம்சத்து வாசுதேவன் {கிருஷ்ணன்} பாண்டவர்களின் நலனில் குறியாக இருந்தான் என்பதை அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, மத்ய தேசத்து அரசன், தனது மகள் உத்தரையை அர்ஜுனனுக்கு மணமுடித்துக் கொடுக்க முன்வந்து, அர்ஜுனன் அவளை {உத்தரையை} தன் மகனுக்கு {அபிமன்யுவுக்கு} மணமுடித்தான் என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, சூதாட்டத்தில் தோற்ற யுதிஷ்டிரன், தனது செல்வங்களையெல்லாம் இழந்தும், கானகத்தில் இருந்து தனது தொடர்புகளிலிருந்து எல்லாம் துண்டிக்கப்பட்டும் ஏழு {7} அக்ஷௌஹிணி படை திரட்டினான், என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கை இல்லை.
எப்பொழுது, நாரதர் கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் நர நாராயணர்கள் என்று வெளிப்படுத்தி. அவர் {நாரதர்}, அவர்களை {கிருஷ்ணனையும்,அர்ஜுனனையும்} பிரம்மலோகத்தில் பார்த்ததாக தெரிவித்தாரோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, கிருஷ்ணன் குருவம்சத்திடம் மானிடர் நன்மைக்காக
தூது வந்து வெறுங்கையுடன் சென்றானோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, கர்ணனும் துரியோதனனும் கிருஷ்ணனை சிறைபிடிக்கச் சென்று அவனது
விஸ்வரூப தரிசனத்தில் இந்த அண்டத்தையே கண்டார்கள், என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, பிருதையின் (குந்தியின்) சோகத்துக்கு கிருஷ்ணன் ஆறுதல் கூறினான், என்று ஆறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, சந்தனுவின் மகன் பீஷ்மரும் பாண்டவர்களுக்கு ஆதரவாகப் பேசி, பரத்வாஜரின் மகன் துரோணர் பாண்டவர்களை வாழ்த்தினாரோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, கர்ணன் பீஷ்மரைப் பார்த்து, ”நீர் போர்புரியும் வரை நான் போரிடமாட்டேன்,” என்று சொல்லி படையில் இருந்து விலகினானோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிகையில்லை.
எப்பொழுது, வாசுதேவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன், காண்டீவம் {வில்} ஆகிய மூன்று பெரும் சக்திகளும் இணைந்தது என்று அறிந்தேனோ! அப்பொழுதே வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை.
எப்பொழுது, அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் தனது விஸ்வரூப தரிசனத்தைக் காண்பித்தானோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை. பத்தாயிரம் ரதசாரதிகளை ஒரே நாளில் அழிக்கும் பீஷ்மர் ஒரு பாண்டவரையேனும் கொல்லவில்லை என்று எப்போது அறிந்தேனோ! அப்போதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, பீஷ்மர் தன்னை வெல்ல தானே வழி சொன்னாரோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, சிகண்டியை முன்னிறுத்தி அர்ஜுனன் பீஷ்மரை புண்படுத்தினான், என்பதை அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, ஷோமகா இனத்தை ஒரு சிலராக உள்ள குழுவாக சுருக்கிய கிழத்தலைவன் பீஷ்மர், காயமடைந்து அம்பு படுக்கையில் படுத்தாரோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, பீஷ்மர் அம்புப்படுக்கையில் தாகத்திற்கு தண்ணீரை அர்ஜுனனிடம் கேட்டு, அதற்கு
அர்ஜுனன் தனது அம்பால் பூமியைத் துளைத்து அவர் தாகத்தை தணித்தான் என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, வாயு, இந்திரன், சூரியன் ஆகியோர் குந்தி பிள்ளைகளுக்கு ஆதரவாக இணைந்தனர், என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, அற்புத போர் வீரர் துரோணர் ஒரு பாண்டவரையேனும் கொல்லவில்லை என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, குருட்டு கௌரவர்கள் குழந்தை அபிமன்யுவை சூழ்ந்து கொண்டு கொன்றுவிட்டு சந்தோஷத்தில் குதித்து, ஜயந்தனை அர்ஜுனனின் கோபத்திற்கு ஆளாக்கினார்கள், என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, கர்ணன், பீமனை வென்று, தனது வில்லால் இழுத்துச் சென்றும், அவனைக் {பீமனைக்} கொல்லாமல் விட்டான் என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, துரோணர், கிருதவர்மன், கிருபர், கர்ணன், துரோணரின் மகன், சல்ய மன்னன் ஆகியோர் இருந்தும் ஜயந்தன் கொல்லப்பட்டான், என என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, கர்ணன் அர்ஜுனனுக்காக தான் வைத்திருந்த சக்தி ஆயுதத்தை கடோத்கஜன் மீது ஏவினான் என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, திருஷ்டத்யுமனன் போர் நெறிமுறைகளைத் தகர்த்து தியானத்தில் இருந்த துரோணரைக் கொன்றான், என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கை இல்லை.
எப்பொழுது, மாத்ரியின் புதல்வன் நகுலன், துரோணரின் மகனுடன் {அசுவத்தாமனுடன்} சரிக்கு சமமாக மல்லுக்கட்டி ரதத்தோடு துரத்தினான், என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, துரோணரின் இறப்பை அறிந்து, அவரது மகன் {அஸ்வத்தாமன்} நாராயண அஸ்திரத்தை முறை தவறி பயன்படுத்தி பாண்டவர்களைக் கொல்லாமல் தோல்வியுற்றான் என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, பீமசேனன் தனது தம்பியான துட்சாதனனின் இரத்தைத் குடித்தான், அவனை யாராலும் தடுக்க முடியவில்லை என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கை இல்லை.
எப்பொழுது, போர்க்களத்தில் நிகரற்ற, வீரத்திற்கு பஞ்சமில்லாத
கர்ணனை அர்ஜூனன் கொன்றான். என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, யுதிஷ்டிரன் வீரர்களான துரோணரையும், துட்சாதனனையும், கிருதவர்மனையும் வீழ்த்தினான், என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, கிருஷ்ணனாலும் எதிர்கொள்ளப்படாத மதுரா மன்னன் யுதிஷ்டிரனால் கொல்லப்பட்டான், என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, சகுனி பாண்டு மைந்தன் சகாதேவனால் கொல்லப்பட்டானோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, துரியோதனன் தனது பலத்தையெல்லாம் இழந்து மயக்க நிலையில் ஒரு ஏரிக்குச் சென்று அதன் நீராலேயே அரண் அமைத்து இருந்தான் என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, பாண்டவர்கள் கிருஷ்ணனுடன் அந்த ஏரிக்கரைக்குச் சென்று துரியோதனனை அவமதிக்கும் வகையில் அவனிடம் பேசினார்கள், என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கை இல்லை.
ஏப்பொழுது, கதாயுதப் போரில் கிருஷ்ணனின் அறிவுரையின் பேரில்
பீமன் துரியோதனை போர் நெறிகளை மீறி அடித்துக் கொன்றான் என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, துரோணரின் மைந்தன்
{அஸ்வத்தாமன்} பாஞ்சாலர்களையும் திரௌபதியின் மக்களையும் அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது கேவலமான முறையில் கொன்றான், என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, அஸ்வத்தாமன் எய்த ஐசிகா அஸ்திரம் உத்தரையின் கர்பத்தில் இருந்த கருவை {பரீக்ஷித்தை} காயப்படுத்தியது என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, அஸ்வத்தாமன் எய்த பிரம்மாஸ்திரத்தை அர்ஜூனன் திரும்பப்பெற்று ”சஷ்டி” என்று உச்சரித்து அஸ்வத்தாமனின் தலையில் இருந்த நகை போன்ற ஒரு பொருளை பறித்தான் என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
எப்பொழுது, விராடனின் மகள் {உத்தரையின்} வயிற்றில் இருந்த கருவை {பரீக்ஷித்தை} அஸ்வத்தாமன் தாக்கியதால் துவைபாயணரும் {வியாசரும்}, கிருஷ்ணனும் சாபம் கொடுத்தார்கள் என்று அறிந்தேனோ! அப்பொழுதே எனக்கு வெற்றியில் நம்பிக்கையில்லை.
”அந்தோ! பிள்ளைகளை இழந்து, பேரப்பிள்ளைகளை இழந்து, பெற்றோரை இழந்து, உடன்பிறந்தோரை இழந்து வாடும்
காந்தாரியின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. பாண்டவர்களின் இந்த வேலை மிகவும் கடினமானது. எதிரிகள் இல்லாத அரசாங்கத்தை அடைந்துவிட்டார்கள் அவர்கள்”.”அந்தோ!
போரின் விளைவாக வெறும் பத்து பேர் தான் மீந்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். 3 பேர் கௌரவர்கள் தரப்பிலும், 7 பேர் பாண்டவர் தரப்பிலும் மீந்தார்கள். இந்தக் கோரமான போரில்
18 அக்ஷௌஹிணி க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். என்னைச் சுற்றிலும் ஒரே இருளாக உள்ளது. எனது நினைவு தடுமாறுகிறது, சூதா! {சஞ்சயா}! என் மனது சஞ்சலமடைகிறது.”
சௌதி சொன்னார், ”திருதராஷ்டிரன் இந்த வார்த்தைகளால் தனது விதியை நொந்து கொண்டு துக்கக் கடலில் மூழ்கி தன் நினைவை இழந்தான். பிறகு தெளிவடைந்து சஞ்சயனிடம் இவ்வாறு பேசினான்.
”இவ்வளவும் நடந்து முடிந்துவிட்டது. ஓ சஞ்சயா இனி ஒருக்கணமும் தாமதியாமல் என் உயிரை விட விரும்புகிறேன். நான் இனியும் உயிர்வாழ்வதில் எந்த பலனையும் நான் காணவில்லை.”
சௌதி சொன்னார், ”நல்ல விவேகியான கவல்கனனின் புதல்வன் (சஞ்சயன்) துக்கத்தால் வாடிக்கொண்டு, பாம்பைப் போல் பொறுமிக்கொண்டிருந்த திருதராஷ்டிரனிடம் இவ்வாறு கூறினான்,”ஓ மன்னா! இதுவரை வியாசராலும் நாரதராலும் சொல்லப்பட்டவர்கள் மாபெரும் பலம்பொருந்தியவர்கள். பெரிய ராஜ குடும்பங்களில் பிறந்தவர்கள், தெய்வீக ஆயுதங்களைத் தன்னகத்தே கொண்டு, இந்திரனின் லட்சணங்களையும் கொண்டு இந்த பூமியை தங்கள் நீதியினாலும், யாகங்களாலும் பெற்றிருந்தும் உன்னைப் போல வருந்தினர். அவர்கள் சைப்யன், ஸ்ருஞ்சயன், சுஹோத்ரன், ரந்திதேவன், கக்ஷீவந்தன், பாஹ்லீகன், தமனன், சைத்யன், சர்யாதி, அஜிதன், நளன், எதிரிகளை அழிக்கும் விசுவாமித்திரர், பெரும் பலம் கொண்ட அம்பரீஷன், மருத்தன், மனு, இக்ஷவாகு, கயன், பரதன், தசரதன் மைந்தன் ராமன், சசிபிந்து, பகீரதன், கிருதவீரியன், ஜனமேஜயன், நற்செயல்கள் செய்த யயாதி ஆகியோர் யாகங்களால் மட்டும் அல்ல, தேவர்களாலும் அருளப்பட்டவர்கள். இந்த இருபத்துநான்கு{24} மன்னர்களும் பிள்ளைகளின் பிரிவால் பெரிதும் துக்கப்பட்டவர்கள், என்று நாரதர் சைப்பியனிடம் விவரித்திருக்கிறார். இவர்களைத் தவிர இன்னும் பலர் இருக்கின்றனர்.
புரு, குரு, யது, சூரன், பெரும் புகழ் கொண்ட விஷ்வஸ்ரவன், அணுஹன், யுவனாஸ்வன், ககுத்ஸ்தன், விக்ரமி, ரகு, விஜயன், விரிஹோத்ரன், அங்கன், பவன், சுவேதன், பிருபத்குரு, உசீனரன், சத-ரதன், கங்கன், துலிதுஹன், துருமன், தம்போத்பவன், பரன், வேனன், சகரன், சங்கிருதி, நிமி, அஜேயன், பரசு, புண்டரன், சம்பு, புனிதமான தேவா-விருதன், தேவாஹ்வயன், சுப்ரதீகன், பிருஹத்ரதன், மஹத்சகன், வினிதாத்மன், சுக்கிரது, நிஷாத மன்னன் நளன், சத்தியவிரதன், சாந்தபயன், சுமித்திரன், தலைவன் சுபலன், ஜானுஜங்கன், அனரண்யன், அர்க்கன், பிரியபிருத்யன், சுசி-விரதன், பலபந்து, நிர்மர்த்தன், கேதுசிருங்கன், பிருஹத்பலன், திருஷ்டகேது, பிருஹத்கேது, திருப்தகேது, நிராமயன், அவிக்ஷித், சபலன், தூர்த்தன், கிருதபந்து, திரிதிசுத்தி, மஹாபுராண-சம்பவியன், பிரத்யங்கன், பரஹன், சுருதி ஆகிய இவர்களையும், இவர்களைப் போன்றோர் பலரையும் நாம் அறிவோம். என்னதான் அவர்கள் பலசாலிகளாகவும், அறிவு நிறைந்தவர்களாகவும் இருந்தாலும், அனைத்து மகிழ்ச்சிகளையும் உதறித் தள்ளிவிட்டு உன் பிள்ளைகள் செய்தது போல் அவர்கள் பிள்ளைகள் செய்த வினையால் மரணத்தைத் தழுவினர். அவர்கள் எல்லோரும் மிகவும் நல்லவர்களாயிருந்தும், பெரிய பலவான்களாகவும், கருணை உள்ளவர்களாகவும், உண்மை பேசுபவர்களாகவும், சுத்தமானவர்களாகவும், தன்னடக்கம் உள்ளவர்களாகவும் இருந்தும், பல பெரிய முனிவர்களால் அவர்கள் புகழப்பட்டிருந்தும், அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது. உன் பிள்ளைகள் தீயன விரும்புபவர்களாகவும், பேராசையுள்ளவர்களாகவும், செல்வத்தின் மேல் மோகம் உள்ளவர்களாகவும் இருந்தனர். நீ சாத்திரங்களில் தேர்ச்சி கண்டவன், புத்திகூர்மையுள்ளவன், நல்லவன். சாத்திரங்களின் அறிவைத் துணைகொண்டு சிந்திப்பவர்கள் இப்படி உன்னைப் போல் கவலை கொள்ளமாட்டார்கள். நீ விதியின் பின்னால் செல்கிறாய். உன்னை விதி இழுக்கிறது. நிலைப்பதும் அழிவதும் காலத்தின் கைகளில் உள்ளது. எல்லா நல்லதும் கெட்டதும் காலங்களினால் ஆகிறது. அனைத்தும் உறங்கும்போதும் காலம் மட்டுமே விழிப்புடன் இருக்கிறது. காலத்தை எவராலும் வெல்ல முடியாது. ஆகையால் நீ உன் கவலையை விடு.”
சௌதி சொன்னார் ”கவல்கனனின் புதல்வன் {சஞ்சயன்} பிள்ளைகளுக்காக கவலைகொண்ட திருதராஷ்டிரனுக்கு, இப்படி அறிவுரை கூறி, அவன் மனம் அமைதியடையச் செய்தான். இந்த சம்பவங்களையெல்லாம் எடுத்து துவைபாயனர் ஒரு புனிதமான உபநிஷத்தை உருவாக்கினார்.
”பாரதத்தைப் படிப்பது புனிதமானது. ஒரு அடியாவது முழு நம்பிக்கையுடன் ஒருவன் இதைப் படிப்பானாயின், அவனுடைய பாவங்கள் அனைத்தும் விலகும். நம்பிக்கையுள்ள, ஆன்மிக மனிதன், இந்த முகவுரையை படித்தால் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவான். அவனைத் துயரங்கள் அணுகாது. தயிரிலிருந்து வெண்ணை, வேதங்களிலிருந்து ஆரண்யகம், மருந்துகளிலிருந்து அமுதம், நீரிலிருந்து கடல், அப்படியே வரலாறுகளிலிருந்து பாரதம் எனக் கொள்க”.
”முற்காலங்களில் நான்கு வேதங்களை {ரிக், யஜூர், சாம, அதர்வணம்} ஒரு புறமும், பாரதத்தை ஒருபுறமும் துலாக்கோலில் வைத்து வானவர்கள் பார்த்தனர். அதில் பாரதமே கனமுள்ளது என்ற முடிவுக்கு வந்தனர். அப்படி நான்கு வேதங்களைக் காட்டிலும் பெரிய பாரதத்தை, உலகத்தினர் மஹாபாரதம் என்று அழைத்தனர். இப்படி கருத்திலும் கனத்திலும் அதிகமுள்ள மஹாபாரதத்தை அறிந்தவன் எந்த துன்பங்களுக்கு ஆளாகமல், அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டவனாவான்.