"

2

சங்கிரக பர்வம் | ஆதிபர்வம் - பகுதி 2 அ

S. Arul Selva Perarasan

Sangraha Parva | Adi Parva – Section 2 In Tamil

(அனுக்ரமானிகா பர்வம்)

பதிவின் சுருக்கம் : சமந்த பஞ்சகம் குறித்து முனிவர்கள் வினவுவது; சமந்த பஞ்சகம் உருவான வரலாற்றைச் சௌதி சொல்வது; பரசுராமர் க்ஷத்திரியர்களைக் கொன்றது; க்ஷத்திரியர்களின் இரத்தத்தால் உருவான ஏரி; அக்ஷௌஹிணி என்பதற்கு விளக்கம்; எவர் எவர் தலைமையில் போர் எத்தனை நாட்கள் நடந்ததென்ற விளக்கம்; மஹாபாரதத்தின் உட்கட்டமைப்பு எப்படி உப பர்வங்களாகப் பிரிந்திருக்கின்றன என்பதற்கான விளக்கம்; உப பர்வங்களின் பெயர்களும் அதில் வரும் செய்திகளும்; பதினெட்டு பர்வங்களின் சுருக்கம் …

“முனிவர்கள் ‘ஓ சூதரின் குமாரா {சௌதியே}, நீ சொன்ன சமந்த பஞ்சகம் {Samanta-panchaka = குருசேத்திரம்} என்ற இடத்தைப் பற்றி முழுமையாக அறிய விரும்புகிறோம்.’ என்று கேட்டார்கள்.சௌதி {Sauti} சொன்னார், “நான் உச்சரிக்கும் இந்தப் புனிதமான விவரிப்பைக் கேளுங்கள் அந்தணர்களே, நீங்கள் அந்த சமந்த பஞ்சகத்தைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் தகுதி வாய்ந்தவர்களே. திரேதா யுகத்திற்கும் {Treta Yuga}, துவாபர யுகத்திற்கும் {Dwapara Yuga} இடைப்பட்ட காலத்தில் அனைத்து ஆயுதங்களையும் உபயோகிக்கத் தெரிந்த ஜமதக்னியின் {Jamadagni} மகன் ராமன் (பரசுராமன்); க்ஷத்திரியர்களின் தொடர்ச்சியான அநீதிகளைப் பொறுக்கமுடியாமல் க்ஷத்திரியர்களின் குலத்தையே அழித்தான். அந்த க்ஷத்திரிய குலத்தின் குருதியைக் கொண்டே, இந்த சமந்த பஞ்சகம் என்ற ஐந்து ஏரிகள் உண்டாக்கினான்.

 

அவன் {பரசுராமன்} கோபத்தால் வெல்லப்பட்டு, அந்த ஏரியின் அருகே நின்று க்ஷத்திரியர்களின் ரத்தத்தைக் கொண்டு, தனது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினான் என்பதை அறிய வருகிறோம். ஒரு நாள் அவனது {பரசுராமனது} முன்னோர்களில் முதன்மையானவரான ரிசீகர் {Richika} என்பவர் மற்ற முன்னோர்களையும் அழைத்துக் கொண்டு அவனிடம் {பரசுராமனிடம்} வந்து ‘ஓ ராமா {பரசுராமா}, ஓ அருள் நிறைந்த ராமா, பிருகுவின் மைந்தனே, உன்னுடைய அஞ்சலியை ஏற்றுக் கொண்டோம். ஓ பலம்வாய்ந்தவனே, அருள் உன்னை நிறைக்கட்டும். ஓ ஒப்புயர்வற்றவனே, நீ விரும்பும் வரத்தைக் கேள்’ என்று கேட்டார் {ரிச்சிகர்}.

ராமன்{பரசுராமன்},”ஓ பாட்டன்களே, நீங்கள் உண்மையிலே என் அஞ்சலியினால் திருப்தியடைந்தீர்களேயானால், இந்த க்ஷத்திரியர்களைக் கொன்றதால் எனக்கு ஏற்பட்ட பாவங்கள் கரைய வேண்டும். இந்த சமந்த பஞ்சகம் புனிதமான இடமாக உலகம் முழுவதும் புகழ்பெற வேண்டும்’ என்றான். அதற்கு முன்னோர்கள் ‘அப்படியே ஆகட்டும் மைந்தனே, நீ அமைதி பெறுவாய்’ என்றனர். ராமனும் {பரசுராமனும்} அமைதியடைந்தான்.


அந்த காலத்திலிருந்து, அந்த இடம் சமந்த பஞ்சகம் என்று புனித பூமியாகக் கொண்டாடப்படுகிறது. {இதே போன்று} ஒவ்வொரு இடத்தின் பெயரும் அந்த இடத்தில் நடந்த ஏதாவதொரு நிகழ்வினை ஞாபகங்களாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று ஞானமுள்ளோர் சொல்கின்றனர். துவாபர யுகத்திற்கும், கலியுகத்திற்கும் {Kali Yuga} இடைப்பட்ட காலத்தில் அந்த சமந்த பஞ்சகத்தில்தான் கௌரவப்படைகளும் பாண்டவப்படைகளும் {Kauravas and Pandavas} மோதிக்கொண்டன. அந்த இடத்தில்தான் பதினெட்டு {18} அக்ஷௌஹிணி {Akshauhini} படைகளும் போர் செய்யும் ஆர்வத்தில் அணிவகுத்து இருந்தன. அந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததால் அவர்கள் அனைவரும் அதே இடத்தில் மரணமடைந்தார்கள். ஓ அந்தணர்களே! மூவுலகத்திலும் கொண்டாடப்படுவதும், புனிதமானதும் உற்சாகத்தை அளிக்கக்கூடியதுமான அந்த இடத்திற்கான பெயர்க்காரணத்தை சொல்லியாயிற்று’ என்றார்.

முனிவர்கள், “’ஓ! சூதரின் குமாரனே {சௌதியே}, அக்ஷௌஹிணி என்பது என்ன? அதில் எத்தனை குதிரைகள், காலாட்கள், தேர்கள், யானைகள் இருக்கும். முழுவதும் கூறு,” என்றனர்.

 

சௌதி சொன்னார், ‘ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்கள், மூன்று குதிரைகள் அடங்கியது ஒரு பத்தி, மூன்று பட்டிகள் ஒரு சேனாமுகம், மூன்று சேனாமுகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படும். மூன்று குல்மாக்கள் ஒரு கணம், மூன்று கணங்கள் ஒரு வாகினி, மூன்று வாகினிகள் சேர்ந்தது ஒரு பிருதனை என்றழைக்கப்படும். மூன்று பிருதனாக்கள் சேர்ந்தது ஒரு சம்மு, மூன்று சம்முக்கள் ஒரு அனீகினி, பத்து அனீகினிக்கள் சேர்ந்ததுதான் ஒரு அக்ஷௌஹிணி. ஓ அந்தணர்களே, கணிதவியலாளர்கள், ஒரு அக்ஷௌஹிணியில் இருபத்து ஓராயிரத்து எண்ணூற்று எழுபது {21870} தேர்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும் {21870}, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்றி ஐம்பது {109350} காலாட்படைவீரர்களும்,  அறுபத்தைந்து ஆயிரத்து அறுநூற்று பத்தும் {65610} குதிரைகளும் ஆகும். ஓ அந்தணர்களே! இதுதான் ஒரு அக்ஷௌஹிணியின் கணக்காகும் என்று எண்களின் இலக்கணப்படிச் சொல்கிறார்கள். இந்தக் கணக்குப்படி கௌரவர்களும் பாண்டவர்களுமாக பதினெட்டு{18} அக்ஷௌஹிணி படைகள் இருந்தன.

 

பல அற்புதங்களைச் செய்யும் காலமானது, கௌரவர்களின் செயல்களின் காரணமாக அவர்கள் அனைவரையும் அங்கு {சமந்த பஞ்சகத்திற்கு} கூடி வரச்செய்து, அங்கேயே அனைவரையும் அழித்தது. ஆயுதங்கள் தாங்கிய பீஷமர் பத்து{10} நாட்கள் போரை நடத்தினார்.  துரோணர், கௌரவர்களின் வாகினிகளை ஐந்து{5} நாட்கள் காப்பாற்றினார். எதிரிப்படைகளைச் சிதறடிக்கும் கர்ணன் இரண்டு{2} நாட்கள் போர் நடத்தினான். சல்லியன் அரை{1/2} நாள் போரை நடத்தினான். அதன் பிறகு பீம துரியோதன கதாயுத்தம் அரைநாள்{1/2} நடந்தது. அந்த நாளின் இறுதியில் அசுவத்தாமனும் கிருபரும், இரவில் தூங்கிக்கொண்டிருந்த யுதிஷ்டிரனின் படைகளை ஆபத்தை உணராமல் கொன்றொழித்தனர்.

 

‘ஓ சௌனகரே, உமது வேள்வியில் மறுவாசிப்பு செய்யப்படும் உன்னதமான பாரதம், இதற்கு முன்னால் ஜனமேஜயனின் வேள்வியில் வியாசரின் புத்திசாலி சிஷ்யரால் {வைசம்பாயனரால்} மறுவாசிப்பு செய்யப்பட்டது. இந்த பாரதம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பௌஷிய, பௌலோம, ஆஸ்தீக பர்வங்களில் பல புகழ்வாய்ந்த மன்னர்களைப் பற்றி முழு நீளத்தில் விவரங்களைத் தருகிறது. இது {மஹாபாரதம்} புலன்களால், எண்ணத்தால், பயன்படுத்தும் வார்த்தைகளால் வித்தியாசமானவரால் {வியாசரால்} விவரிக்கப்பட்ட படைப்பு. இதில் பலதரப்பட்ட குணங்களும், சமயச்சடங்குகளும் சொல்லப்பட்டுள்ளன. ஞானமுள்ளவர்களால், இது மோட்சத்தை விரும்பும் மனிதர்களின் “வைராக்கியம்” எனும் மனநிலையைத்தரும் என்று ஏற்கப்பட்டுள்ளது.

 

அறிய வேண்டியவற்றில் சுயமும் ஒன்று. அதிகம் விரும்பப்படுவதில் வாழ்வும் ஒன்று. அதேபோல் தான், இந்த வரலாறும் பிரம்மத்தை அறிவதற்கு உதவும். இது எல்லா சாத்திரங்களிலும் முதன்மையானது. உடலைச் சுமந்து செல்லும் கால்களைப் போல இந்த வரலாற்றை நம்பியிருக்காத ஒரு கதையும் தற்கால உலகத்திலும் கிடையாது. நல்ல குடியில் பிறந்த முதலாளிகளை எப்படி வேலைக்காரர்கள் கொண்டாடுவார்களோ, அப்படியே பாரதம் பல புலவர்களால் கொண்டாடப்படுகிறது. எப்படி வார்த்தைகள் உயிரெழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும் கொண்டு பல தரப்பட்ட உலக ஞானங்களையும், வேத ஞானங்களையும் காட்டுகிறதோ, அப்படியே பாரதமும் உயர்ந்த ஞானத்தைக் காட்டுகிறது.

 

‘ஓ துறவிகளே, கேளுங்கள். ஒப்புயர்வற்ற ஞானத்தை, உள்ளார்ந்த அர்த்தத்தோடு, நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படுமாறு, வேதக்கருத்துகளை உள்ளடக்கி, புகட்டுகின்ற பாரதம் பர்வங்கள் என்ற பல பகுதிகளாகப் பிரிந்து, மேற்கண்ட அனைத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றது.

 

முதல் பர்வம் அனுக்கிரமானிகா என்றழைக்கப்படுகிறது; இரண்டாவது சங்கிரகா; அடுத்து பௌசியா, அடுத்து பௌலமா, அடுத்து ஆதிவம்சவதரனா. அடுத்து வருவது அற்புதமான உணர்ச்சிகரமான சம்பவங்களைக் கொண்ட சம்பவா. ஜாதுகிருகதகா (அரக்கு மாளிகைக்கு நெருப்பு வைத்தல்) என்பது அடுத்து வருவது. அடுத்து ஹிடிம்பபதா பர்வம் (ஹிடும்ப வதம்). அதற்கடுத்து பகாபதா (பகாசுரன் வதம்), அடுத்து சித்திரரதா. அடுத்து திரௌபதியைத் தனது க்ஷத்திரிய திறமைகளால் அர்ஜூனன் வெல்லும் சுயம்பவரா (பாஞ்சாலி சுயம்வரம்). அடுத்து வைவாஹிகா (திருமணம்). அடுத்து வருவது விதுரகமனா (விதுரரின் வருகை), ராஜ்யலாபா (அரசைப் பெறுவது), அர்ஜூன பனவாசா (அர்ஜூனன் வனவாசம்), அடுத்து சுபத்திரா ஹரனா (சுபத்திரை களவு). இதற்கெல்லாம் அடுத்து ஹரனா-ஹரிகா, காண்டவ-தஹா (காண்டவ வன தகனம்), மய தர்சனா (அசுர சிற்பி மயனை சந்தித்தல்). அதற்கடுத்து வருவது சபா, மந்திரா, ஜராசந்தா, திக்விஜயா (தொடர் போர்). திக்விஜயத்திற்கு அடுத்து ராஜசூய யாகா, அர்க்கியாஹரனா (அர்க்கிய திருடுதல்), சிசுபாலபதா (சிசுபால வதம்). இதற்கெல்லாம் அடுத்து தியுதா (சூதாடுதல்), அனுதியுதா (சூதாட்ட தொடர்ச்சி), ஆரண்யகா, கிரிமிரபதா (கிரிமிரன் வதம்). அர்ஜூன விகமானா (அர்ஜூனனின் பயணங்கள்), கைராதி;

 

கடைசியில் அர்ஜூனனுக்கும் வேடன் உருவத்தில் இருந்த மஹாதேவருக்குமிடையில் நடந்த போர். அதற்கடுத்து இந்திரலோகவிகமனா (இந்திரலோகப் பயணம்); அறம் மற்றும் நற்பண்புகளின் புதையலான மிகவும் சோகமான நளபகியான (நளனின் கதை). அடுத்து தீர்த்தயாத்ரா, ஜடாசூரன் மரணம், யக்ஷர்களுடன் போர். நிவாடகவாசர்களுடனான போர், அஜகரா, மார்கண்டேய சமஸ்யா (மார்கண்டேயரைச் சந்தித்தல்). திரௌபதி சத்தியபாமா சந்திப்பு, கோஷயாத்ரா, மிர்கா சுவப்னா (மானின் கனவு). பிரகதாரன்யகா மற்றும் ஐந்தரதுருமனா கதைகள். திரௌபதி ஹரனா (திரௌபதி அபகரிப்பு), ஜயத்ரதா பிமோக்ஷனா (ஜயத்ரதன் விடுதலை). அடுத்து வருவது கற்புக்கரசி சாவித்திரியின் கதை.

 அதன்பிறகு ராமனின் கதை. அடுத்த பர்வம் குண்டல ஹரணா (காதணி திருட்டு) என்று அழைக்கப்படும். அதற்கடுத்து “ஆரண்யா”, அதற்கடுத்து “வைராதா”. அதன்பிறகு பாரண்டவர்கள் செய்திருந்த ஒப்பந்தப்படி ஒருவருட தலைமறைவு வாழ்க்கை. பிறகு கீசக வதம். அதன்பிறகு விராட தேசத்தை கௌரவர்களிடம் இருந்து காப்பாற்றுவது. அதற்கடுத்து விராடனின் மகளுடன் அபிமன்யு திருமணம். அதன்பிறகு, நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய உத்தியோக பர்வம். அதன்பிறகு “சஞ்சய யானா” (சஞ்சயனின் வருகை). அதற்கடுத்து வருவது “பிரஜாகரா” (திருதராட்டிரனின் தூக்கமின்மை). அடுத்து புதிராக இருக்கும் தெய்வீக தத்துவங்களின் தன்மையறிதல் “சனத்சுஜாதா”. அடுத்து “யானாசத்தி”, அதற்கடுத்து கிருஷ்ணனின் வருகை. அதன்பிறகு மாதாலியின் கதை, “கலவா”. அதன்பிறகு “சாவித்திரி”, “வாமதேவர்”, “வைனியா” ஆகியோரின் கதைகள். அதன்பிறகு “ஜமதக்னயா” மற்றும் “ஷோதாசரஜிகா” கதைகள். அதன்பிறகு கிருஷ்ணனின் அரசவை வருகை. அதன்பிறகு பிதுல்லபுத்ரசாசனா. அதன்பிறகு சேனைகளைப் பார்வையிடல், பிறகு ஷேதாவின் கதை. அதன்பின் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது உயர்பிறப்பாளன் கர்ணனுடன் வாக்குவாதம்.

அதன்பிறகு, இருபக்கமும் படைகளின் அணிவகுப்பு. அடுத்து ரதி மற்றும் அதிரதர்களின் எண்ணிக்கை. அடுத்து பாண்டவர்களின் கோபத்தைத் தூண்டும் உலூகனின் தூது. அடுத்து அம்பையின் கதை. அடுத்து உணர்ச்சிமயமான கௌரவப்படைத்தலைவர் பீஷ்மரின் கதை. அதற்கடுத்து ஜம்பு தீபம் பூமியில் உண்டான கதை, தீவுகளின் உருவாக்கம். அதன்பிறகு “பகவத் கீதை”, பிறகு பீஷ்மரின் மரணம். துரோணர் படைத்தலைமை ஏற்பது. சன்சப்தகர்களின் அழிவு, அபிமன்யுவின் மரணம், அர்ஜூனன் ஜெயத்ரதனைக் கொல்வதாக உறுதி ஏற்பது. ஜெயத்ரதன் மற்றும் கடோத்கஜனின் மரணம். அதன்பிறகு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது யாரும் எதிர்பாராத துரோணரின் திடீர் மறைவு. நாராயணக் கணையை ஏவுவது. அதன்பிறகு கர்ணன் மற்றும் சல்யனின் மறைவு.

அதன்பிறகு துரியோதனன் ஏரிக்குள் மூழ்குவது. பிறகு பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடந்த கதை யுத்தம். அதன்பிறகு, சரஸ்வதா, புண்ணிய இடங்களின் வர்ணனை மற்றும் வரலாறு. அதன்பிறகு கௌரவர்களின் தீய செயல்களைப் பற்றிய வர்ணனையான சௌப்திக பர்வம். அடுத்து ஐசிக பர்வம், “ஜலபிரதனா” முன்னோர்களுக்கு (இறந்தவர்களுக்கான) அஞ்சலி, பெண்களின் அழுகை. அதன் பிறகு கௌரவர்களுக்கு தகன காரியங்களை விளக்கும் “சிரதா”. அதன்பிறகு யுதிஷ்டிரனை வஞ்சகமாக ஏமாற்ற நினைத்து அந்தணனின் உருவத்தில் வந்த ராட்சசன் சார்வாகனின் அழிவு. பிறகு ஞானமுள்ள யுதிஷ்டிரனின் பட்டமேற்பு.

அடுத்து “கிரகபிரவிபாகா”, அடுத்து “சாந்தி”, அதற்கடுத்து “ராஜதர்மனுசாசனா”, அதன்பிறகு “அபதர்மா” பிறகு “மோட்சதர்மா” அடுத்து வருவன “சுகபிரசன அபிகாமனா”, பிரம்ம பிரசனனுசாசனா”, துர்வாசரின் மூலம் (அவரின் பிறப்பு), மயனுடன் விவாதம். அடுத்து “அனுசாசனிகா”, பிறகு “பீஷமர்” மோட்சமடைவது. அதன்பிறகு பாவங்களை அழிக்கும் “குதிரைபலி”. அதன்பிறகு தெய்வீக தத்துவங்களைச் சொல்லும் “அனுகீதை”. அதன்பின் தொடர்வன “ஆசிரமவாசா”, இறந்து போன தங்கள் மக்களின் ஆவியைக் காணும் “புத்ரதர்சனா”, அடுத்து நாரதர் வருகை. அடுத்து கொடுமையான குரூரமான சம்பவங்கள் நடக்கும் “மௌசலா”. அடுத்து “மஹாபிரஸ்தானிகா” அதன்பிறகு மோட்சமடைதல். அதன்பிறகு வருவது “கீல்வன்சா” புராணம். கடைசியாக வருவன குதூகலமான குழந்தை கிருஷ்ணனும், கம்சனின் அழிவும் அடங்கிய “விஷ்ணு பர்வா”. அதன்பிறகு எதிர்காலத்தை முன்னுரைக்கும் “பவிஷ்யபர்வா”

 

மேற்கண்டவை உயர்ந்தபிறவியான வியாசர் அருளிய நூறு{100} பர்வங்களின் சுருக்கமே. அதன் தொடர்ச்சியாக அவையனைத்தையும் பதினெட்டு{18} பர்வங்களாகப் பிரித்து நைமிச வனத்தில் இந்தச் சூதன் {சௌதி} பின்வருமாறு சொல்கிறான்.

{1வது பர்வம்_சுருக்கம்} ‘ஆதிபர்வத்தில் பௌசியா, பௌலோமா, ஆஸ்தீகா, அதிவன்சவதரா, சம்வா, அரக்கு மாளிகை எரியூட்டல், இடும்பன் வதம், அசுரர்கள் பகன் மற்றும் சித்ரரதன் வதம், திரௌபதி சுயம்வரம், அதைத்தொடர்ந்து அவள் {திரௌபதி} திருமணத்தை முன்னிட்டு நடக்கும் போர், விதுரரின் வருகை, அர்ஜூனன் நாடுகடத்தல், சுபத்திரை அபகரிப்பு, பரிசு மற்றும் சீர்வரிசை, காண்டவ வனம் எரிந்துபோதல், அசுர சிற்பி மயனுடனான சந்திப்பு.

 

பௌசிய பர்வத்தில் உதங்கரின் மேன்மை சொல்லப்படுகிறது. பௌலமாவில் பிருகு மைந்தர்களின் மேன்மை சொல்லப்படுகிறது. ஆஸ்தீக பர்வத்தில் கருடன் மற்றும் நாகங்களின் பிறப்பு, ஆழிக் கடைதல் {பாற்கடல் கடைதல்}, தெய்வீகக் குதிரை உச்சைசிரவாவின் பிறப்பு, ஜனமேஜயனின் நாகவேள்வியில் விவரிக்கப்படும் பரதனின் பரம்பரை ஆகியன. சம்பவ பர்வத்தில் பல மன்னர்கள், நாயகர்கள் மற்றும் கிருஷ்ணதுவைபாயணரின் (வியாசரின்) பிறப்பு, தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகங்கள், பறவைகள் மற்றும் அனைத்து உயிரினங்களின் பிறப்பு. அடுத்து பரதனின் வரலாறு, அவனது பரம்பரை, கண்வரின் ஆசிரமத்தில் சகுந்தலை இருப்பது, பகீரதி நதியின் பெருமை. சந்தனுவின் இல்லத்தில் வசுக்களின் பிறப்பும், அவர்கள் மோட்சமடைதலும், மேலும் இந்த பர்வத்தில் பீஷ்மரின் பிறப்பு, மற்ற வசுக்களது சக்திகளின் பகுதிகளை தன்னுள் {பீஷ்மர்} அடக்குவது. அவரது {பீஷ்மரது} அரசபதவி அண்டுவதில்லை என்ற உறுதியேற்பு, பிரம்மச்சரியம் கொள்வது, சித்திராங்கதனைப் பாதுகாப்பது, அவனது {சித்திராங்கதனது} மறைவிற்குப் பிறகு விசித்திரவீரியனைப் பாதுகாப்பது. அவனை {விசித்திரவீரியனை} அரியணையில் அமர்த்துவது, தர்மதேவன் ஆணிமாண்டவ்யரின் சாபம் பெற்றதால் மனிதனாகப் {விதுரனாகப்} பிறப்பது. வியாசர் மூலம் திருதராட்டிரன் மற்றும் பாண்டுவின் பிறப்பு, பாண்டவர்களின் பிறப்பு, துரியோதனின் திட்டத்தால் பாண்டவர்கள் வாரணாவதம் செல்வது. விதுரரின் எச்சரிக்கை, சுரங்கம் தோண்டுவது, புரோச்சனன் மடிவது, அரக்கு மாளிகை எரிவது, இடும்பியைச் சந்தித்தல், இடும்பனை வதம் செய்வது. கடோத்கஜனின் பிறப்பு, பாண்டவர்கள் வியாசரைச் சந்திப்பது, அவரின் ஆலோசனைகளை ஏற்பது, ஏகச்சக்கர நகரத்தில் தலைமறைவாக வசிப்பது, அசுரன் பகன் வதம், திரௌபதி மற்றும் திருஷ்டத்யுமனனின் அமானுஷ்ய பிறப்பு, வியாசரின் அறிவுரைப்படி திரௌபதி சுயம்வரத்தில் பங்கேற்பதற்காக பாண்டவர்கள் பாஞ்சாலம் செல்லத் தீர்மானிப்பது. பகீரதி நதிக்கரையில் அங்காரபர்னன் என்ற கந்தர்வனிடம் அர்ஜூனனின் வெற்றி, கந்தர்வன் தபதி, வசிஷ்டர் மற்றும் அவரவரின் வரலாறுகளைச் சொல்வது.

பாண்டவர்கள் பாஞ்சாலம் செல்வது, அனைத்து மன்னர்கள் முன்னிலையிலும் கொடுத்த குறியை அடித்து, திரௌபதியை வென்றெடுப்பது. சல்லியன், கர்ணன் ஆகியோர் அர்ஜூனனிடம் தோற்பது. மற்ற அரச முடியுள்ளவர்கள் அனைவரும் பீமனிடமும் அர்ஜூனனிடமும் தோற்பது. பலராமனும் கிருஷ்ணனும் பாண்டவர்களை அடையாளம் காண்பது. ஒரு குயவனின் இல்லத்தில் அவர்களைக் காண்பது. திரௌபதி ஐவருக்கு மனைவியாவதா? என்று துருபதன் மறுப்பது. ஐந்து இந்திரர்களைப் பற்றிய அற்புதமான கதை, அசாதாரண திரௌபதி திருமணம், திருதராஷ்டிரனனின் மைந்தர்கள் விதுரரைப் பிரதிநிதியாக அனுப்புவது, விதுரர் கிருஷ்ணனைப் பார்ப்பது, காண்டவபிரஸ்தம் பாண்டவர்களுக்கு ஒதுக்கப்படுவது. அவர்களது பாதி நாடு ஆளுமை, சுந்தன் உபசுந்தன் வரலாறு. யுதிஷ்டிரனும் திரௌபதியும் தனிமையில் இருப்பதைக் கண்டதால் அர்ஜூனன் தானே நாடு கடப்பது, அர்ஜூனன் நாகத்தின் மகளான உலூபியைச் சந்திப்பது, அர்ஜூனன் புண்ணிய தலங்கள் செல்வது. வப்ருவாகனனின் பிறப்பு, பிரபாசா என்ற புண்ணிய தலத்தில் மாதவனும் அர்ஜூனனும் சந்திப்பது. சுபத்திரை கடத்தப்படுதல். சுபத்திரையைச் சீருடன் இந்திரப்பிரஸ்தம் அனுப்பிவைத்தல். அபிமன்யு கருவிலேயே பாடம் கேட்பது. யஜ்னசேனிக்கு குழந்தைகள் பிறப்பு, அர்ஜூனன் திரௌபதியுடன் யமுனைக்கு உல்லாசப் பயணம் செல்வது. காண்டீபத்தை அடைதல், காண்டவ வனம் எரிதல், அர்ஜூனனால் மயன் காப்பாற்றப்படுதல். சாரங்கி என்ற நாகம் தீயிலிருந்து தப்பித்து, மந்தபாலன் என்ற முனிவரை ஈன்றெடுத்தல், ஆகியவற்றைக் கொண்ட இந்த முதல் பர்வமான ஆதிபர்வம் இருநூற்றி இருபத்தேழு {227} அதிகாரங்களைக் கொண்டது.

 

இருநூற்றி இருபத்தேழு {227} அதிகாரங்களில் எட்டாயிரத்தி எண்ணூற்றி எண்பத்திநான்கு{8884} பாடல்கள் (சுலோகங்கள்) உள்ளன.

{2வது பர்வம்_சுருக்கம்} இரண்டாவது வரும் நீண்ட பகுதியானது சபா பர்வமாகும். இதில் பாண்டவர்கள் கட்டிய அரசவை {சபா மண்டபம்}; லோகபாலகர்கள் குறித்த நாரதரின் வர்ணனை; ராஜசூய யாகத்திற்கான தயாரிப்பு, ஜராசந்த வதம், பாண்டவர்களின் படையெடுப்புகள்; ராஜசூய யாகத்திற்கு மற்ற அரசர்களின் வருகை; சிசுபாலன் வதம், துரியோதனனைப் பார்த்து பீமன் கேலி, துரியோதனனின் கோபம், துக்கம், பொறாமை, சூதாட்டத்திற்கு திட்டமிடல், யுதிஷ்டிரன் சகுனியிடம் தோல்வியுறல், துக்கத்திலிருந்த திரௌபதிக்கு திருதராஷ்டிரன் விடுதலை அளித்தல், துரியோதனன், யுதிஷ்டிரனை மீண்டும் சூதாட அழைத்தல், யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் வனவாசம் புகுதல், இதுவே வியாசரால் அமைக்கப்பட்ட சபா பர்வமாகும். இந்த பர்வம் எழுபத்தி எட்டு{78} பகுதிகளாகப் பிரிந்து இரண்டாயிரத்தி ஐநூற்றி ஏழு {2507} பாடல்களுடன் {சுலோகங்களுடன்} உள்ளது.

 {3வது பர்வம்_சுருக்கம்} அதன்பிறகு மூன்றாவதாக வருவது ஆரண்யக பர்வம். இந்த பர்வத்தில் பாண்டவர்கள் யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து கானகம் புகுதல், தௌமியரின் சொல் கேட்டு யுதிஷ்டிரன் சூரிய வழிபாடு செய்தல், சூரியனிடம் அந்தணர்களுக்கு உணவும் நீரும் கொடுக்க அட்சயப் பாத்திரத்தைப் பெறுதல், திருதராஷ்டிரனால் விதுரர் கானகம் புகுவது, விதுரர், வனத்தில் பாண்டவர்களைச் சந்திப்பது, துரியோதனன் பாண்டவர்களுக்கு வனத்திலும் தொந்தரவு கொடுப்பது, வியாசர் அதைத் தடுப்பது, சுரபியின் வரலாறு, மைத்திரேயரின் வரவு, திருதராஷ்டிரனுக்கு மைத்திரேயர் நீதி உரைத்தல், திருதராஷ்டிரனுக்கு மைத்திரேயரின் சாபம், பீமனால் கிர்மீரன் வதம், யுதிஷ்டிரன் சகுனியின் வஞ்சகத்தால் சூதாட்டத்தில் தோற்றதைக் கேள்வியுற்ற பாஞ்சாலர்களும் விருஷ்ணி குலத்தவரும் {யாதவ குலத்தவரும்} வருகை.
தனஞ்சயன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனிடம் தன் கோபத்தைச் சொல்வது, மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} திரௌபதி தனது துயரை உரைத்தல், கிருஷ்ணன் சமாதானம் செய்தல், சௌபனின் வீழ்ச்சியை முனிவர் சொல்வது, கிருஷ்ணன் சுபத்திரையையும், அவள் குழந்தையையும் {அபிமன்யுவையும்} துவாரகைக்கு அழைத்துப் போவது. திருஷ்டத்யும்னன் திரௌபதியின் மகனை பாஞ்சாலம் அழைத்துப் போவது, அழகான துவைத வனத்திற்கு பாண்டுவின் மைந்தர்கள் செல்வது, பீமன், யுதிஷ்டிரன், திரௌபதி விவாதம், வியாசரின் வருகை, பிராதிசிம்ரிதி என்ற சக்தியை யுதிஷ்டிரனுக்கு அளித்தல், பாண்டவர்கள் காம்யக வனம் செல்வது, சக்தி வாய்ந்த அஸ்திரங்களைத் தேடி அர்ஜூனன் அலைவது, வேடுவ ரூபத்தில் இருக்கும் மகாதேவருடன் {சிவனுடன்} அர்ஜூனன் போர்புரிவது. லோகபாலகர்களை அர்ஜூனன் சந்திப்பது, அவர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெறுவது, அர்ஜூனன் இந்திரலோகம் செல்வது, இதைக் கேள்வியுற்ற திருதராட்டிரன் அமைதியிழப்பது.
முனிவர் பிரகதஸ்வரிடம் யுதிஷ்டிரனின் அழுகையும், துயருரைப்பும், இந்த இடத்தில்தான் துயர்நிறைந்த நள தமயந்தியின் கதையும், நளனின் குணச்சிறப்பும் சொல்லப்படுகின்றன. அதே பெருமுனிவரிடம் இருந்து யுதிஷ்டிரன் பகடையின் (சூதாட்டத்தின்) இரகசியம் அறிதல், மேலுலகிலிருந்து பெருமுனி லோமசர் வருகை, அர்ஜூனன் இந்திரலோகத்தில் இருப்பதைத் தெரிவிப்பது. பாண்டவர்கள் புண்ணிய இடங்களுக்குச் செல்வது. நாரதருடன் புண்ணிய ஸ்தலமான புடஸ்டா செல்வது. இந்திரன் கர்ணனிடம் காதணிகளை வாங்குவது, கயாவின் பெருமை,

 

அகத்தியர் வாதாபியை சாப்பிடுவது, அகத்தியர் லோபாமுத்திரையுடன் இருப்பது, ரிஷ்யசிருங்கர் பிரம்மச்சரியத்தை ஏற்பது, ஜமதக்னி முனிவரின் மைந்தன் இராமனின் {பரசுராமனின்} கதை, கார்த்தவீரியனின் கதை, ஹேஹேயர்களின் கதை, புனித பூமியான பிரபாசத்தில் பாண்டவர்களும் விருஷ்ணிகளும் சந்திப்பது, சுகன்யாவின் கதை, பிருகு முனிவரின் மகன் சியவணனின் கதை, சியவணரின் இளமை, பருந்து புறா கதை, சிபிச்சக்கரவர்த்தியின் கதை, இந்திரன் சிபியைச் சோதிப்பது, ஜனகரின் வேள்வியில் அஷ்டகவக்கிரனின் கதை, அஷ்டவக்கிரனிடம் வந்தின் தோல்வியுறுவது, யவக்கிரீதியின் கதை,
நாராயண ஆசிரமத்திற்குப் பாண்டவர்கள் செல்வது, பீமன் கந்தமாதனத்தில் உள்ள வாசமலரைப் பறிக்கச் செல்வது, பீமன் வாழைத்தோப்பில் பவானாவின் குமாரன் {வாயு மைந்தன்} அனுமானைச் சந்திப்பது, பீமன் தடாகத்தில் குளித்து மலர்களைப் பறிப்பது, பீமன் ராட்சதர்களிடமும், அனுமானுடன் கூடி யக்ஷர்களிடம் போரிடுவது, ஜடா என்ற அசுரனை பீமன் வதம் செய்வது, விருஷபர்வாவின் கதை, பாண்டவர்கள் குபேரனைச் சந்திப்பது, ஆயுதங்களைப் பெற்று திரும்பிக் கொண்டிருந்த அர்ஜுனனை மற்ற பாண்டவர்கள் சந்திப்பது. ஹிரண்யபர்வத்தில் நிவாதகவசர்களிடம் அர்ஜூனன் போரிடுவது, ஒரு பெரிய பாம்பு {நகுஷன்} பீமனை அபகரிப்பது, அதன் கேள்விகளுக்கு விடையளித்து யுதிஷ்டிரன் பீமனை மீட்பது. வாசுதேவன் {கிருஷ்ணன்} பாண்டவர்களைச் சந்திப்பது, மார்க்கண்டேயர் வருகை, வேனனின் மகன் பிருதுவின் வரலாறு. சரஸ்வதி மற்றும் முனிவர் தார்க்ஷியரின் கதை, மத்சியாவின் {மீனின்} கதை, மார்க்கண்டேயர் சொல்லும் கதைகள், இந்திரத்தியும்னன் மற்றும் துந்துமாரனின் கதை, பத்தினியின் கதை, அங்கிரசு முனிவரின் கதை, திரௌபதி சத்தியபாமா உரையாடல், துவைதவனத்திற்கு பாண்டவர்கள் திரும்புதல், துரியோதனன் பசுக்களைக் கவர்ந்து பிடிபடுவது, அர்ஜூனன் அவனை {துரியோதனனை} விடுவிப்பது. யுதிஷ்டிரனின் கனவு, பாண்டவர்கள் காம்யக வனத்திற்கு மறுபடியும் செல்வது விரீஹித்ரௌணிகனின் கதை. துர்வாசரின் கதை,

 

ஜயத்ரதன் திரௌபதியைக கடத்துவது, பீமன் அவனைப் பிடித்து முடியை சிரைப்பது, ராம – ராவண கதை, சாவித்ரியின் கதை, இந்திரன் கர்ணனின் குண்டலங்களைப் பெற்று அதற்கு பதிலாக சக்தி ஆயுதத்தைக் கொடுப்பது. ஆரண்யாவின் கதை. இவையே மூன்றாவது பர்வமான ஆரண்யக பர்வத்தில் வருவன. இருநூற்றி அறுபத்தி ஒன்பது{269} பகுதிகளுக்குள் பதினோராயிரத்தி அறுநூற்றி அறுபத்தி நாலு{11664} பாடல்களைக் {சுலோகங்களைக்} கொண்டது இந்த பர்வம்.

{4வது பர்வம்_சுருக்கம்} அதன்பிறகு வருவது விராட பர்வமாகும். இதில் பாண்டவர்கள் விராட தேசம் செல்வது, ஒரு பெரிய மரப்பொந்தில் தங்கள் ஆயுதங்களை மறைப்பது. அந்தத் தேசத்தில் தலைமறைவாக வாழ்வது. திரௌபதியிடம் காமம் {இச்சை} கொண்ட கீசகனின் வதம், துரியோதனன் திறமையான உளவாளிகளை நியமிப்பது, பாண்டவர்களைக் கண்டுபிடிக்க உத்தரவிடுவது, உளவாளிகளின் இயலாமை, விராட தேசத்து பசுக்களை கௌரவர்கள் கவர்வது, பீமன் காப்பது, மறுபடியும் பசுக்களை கௌரவர்கள் கவர்வது, அர்ஜூனன் தன்னந்தனியாக அந்தப் படையை வென்று பசுக்களை மீட்பது, உத்தரையை தனது மகன் அபிமன்யுவுக்காக விராடனிடம் அர்ஜூனன் பெறுவது ஆகியவை இந்த நான்காவது பர்வமான விராட பர்வத்தில் அடங்கும். பெருமுனி வியாசர் அறுபத்தி ஏழு{67} பகுதிகளாக இதைப் பிரித்து, இரண்டாயிரத்து ஐம்பது{2050} பாடல்களுக்குள் {சுலோகங்களுக்குள்} இதை அடக்கியுள்ளார்.

 

{5வது பர்வம் சுருக்கம்}

“ஐந்தாவதாக வருவது உத்யோக பர்வம். உபப்பிலாவியம் என்ற இடத்தில் பாண்டவர்கள் வெற்றியின் மீது ஆசை கொண்டு இருக்கும்போது, துரியோதனனும் அர்ஜுனனும் ஒரே நேரத்தில் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} சென்று “இந்தப் போரில் உன் துணையை எங்களுக்கு அளிக்க வேண்டும்,” என்றனர். கிருஷ்ணன் “மனிதர்களில் முதன்மையானவர்களே! ஒருபுறம் போர் புரியாத ஆலோசகராக நானும், மற்றொருபுறம் ஒரு அக்ஷௌஹிணி படையும் இருக்கிறது. இதில் உங்கள் இருவரில் யாருக்கு எதைக் கொடுப்பது?” என்றான். முட்டாள் துரியோதனன் படைகளைக் கோரினான். அர்ஜுனன் போரிடாத ஆலோசகராக கிருஷ்ணனை ஏற்றான். அதன்பிறகு, மத்திர நாட்டின் மன்னன் {சல்லியன்} பாண்டவர்களுக்குத் துணையாக படையை அனுப்ப, அதை {அப்படையை} துரியோதனன் வஞ்சகமாக தனது விருந்தோம்பலை அளித்து வரம் கேட்கிறான். வரமாக சல்யனின் துணையைக் கொண்ட நிகழ்ச்சி வருகிறது. சல்யன் துரியோதனனிடம் இப்படி வார்த்தையைக் கொடுத்துவிட்டு பாண்டவர்களிடம் வந்து நடந்த நிகழ்ச்சியையும் சொல்லி, இந்திரனின் வெற்றிக் கதை {இந்திரனுக்கு விருத்திராசுரனுக்கும் நடைபெற்ற போர்} ஒன்றையும் சொல்லி பாண்டவர்களைத் தேற்றுகிறான்.

அதன்பிறகு, பாண்டவர்களின் புரோகிதர் கௌரவர்களிடம் செல்லுதல் வருகிறது. அதன்பிறகு மன்னன் திருதராஷ்டிரனிடம் பாண்டவர்களின் புரோகிதர் சொல்லும் இந்திரனின் வெற்றிக்கதையைக் கேட்ட பின் {திருதராஷ்டிரன்} தனது புரோகிதரான சஞ்சயனை பாண்டவர்களிடம் அமைதியேற்பட அனுப்புகிறான். இங்கேதான் பாண்டவர்களையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} அவர்களது நண்பர்களையும் பற்றிக் கேள்விப்படும் திருதராஷ்டிரனின் தூக்கமற்ற நிலை விவரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில்தான் உண்மை பிறழாத விதுரர் திருதராஷ்டிரனிடம் நல்ல ஆலோசனைகளைக் கூறும் சம்பவம் வருகிறது. மேலும் இந்த இடத்தில்தான் கவலையில் மூழ்கியிருக்கும் மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} ஆன்மிகத் தத்துவங்களின் உண்மைத் தன்மையை {விதுரர்} விவரிக்கிறார். அடுத்த நாள் காலையில் சஞ்சயன், வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் உடல் மற்றும் மனக் குறிப்புகளைப் பற்றி மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} தெரிவிக்கிறான்.

அப்போதுதான் அன்பாலும், அமைதிக்கான ஆசையாலும் உந்தப்பட்ட ஒப்புயர்வற்ற கிருஷ்ணன், தானே கௌரவத் தலைநகரான அஸ்தினாபுரத்திற்குச் சென்று அமைதியை வேண்டுகிறான். இரு தரப்புக்கும் நன்மையைத் தரக்கூடிய கிருஷ்ணனின் ஆலோசனைகள் துரியோதனனால் மறுக்கப்படுகின்றன.

இந்த இடத்தில் தம்போத்பவனின் கதை சொல்லப்படுகிறது. உயர்ந்த உள்ளங்கொண்ட மாதலி தனது மகளுக்குக் கணவனைத் தேடுகிறான். அதன்பிறகு காலவ முனிவரின் கதை வருகிறது, அதன்பிறகு விதுலையின் பயிற்சிகளும் ஒழுக்கமுறைகளும் வருகின்றன. மன்னர்களின் முன்னிலையில், துரியோதனன் மற்றும் கர்ணனின் தீச்சொற்களைப் பொறுக்காது, தனது யோக வலிமையால் கிருஷ்ணன் விஸ்வரூபக் காட்சி தருகிறான். அதன்பிறகு கிருஷ்ணன் தனது தேரில் கர்ணனை அழைத்துப் போய் அறிவுரை கூறுகிறான். கர்ணன் தற்பெருமையால் {கர்வத்தால்} அதை மறுக்கிறான். பிறகு கிருஷ்ணன் அஸ்தினாபுரத்துப் பகைவர்களிடமிருந்து உபப்பிலாவியத்திற்குத் திரும்பி பாண்டவர்களிடம் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறான். அதன்பிறகு பகைவர்களை அடக்குபவர்களான பாண்டவர்கள் போருக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்கின்றனர்.

 

அதன்பிறகு இருதரப்பும், போருக்கு எப்படித் தயாராகி போர்க்களம் நோக்கி வந்தனர் என்ற விவரிப்பு வருகிறது. போருக்கு முன்பு உலூகனை துரியோதனன் பாண்டவர்களிடம் தூதனுப்புகிறான். பல்வேறு பிரிவுகளின் தேரோட்டிகள் கதை அதன்பிறகு வருகிறது. அதன்பிறகு அம்பையின் கதை. போர் தயாரிப்புகளும், அமைதி ஏற்பாடுகளுமான இவையனைத்தும் மஹாபாரதத்தின் ஐந்தாவது பர்வமான உத்யோக பர்வத்தில் வருகின்றன. ஓ துறவிகளே! மாமனிதர் வியாசர் நூற்று எண்பத்து ஆறு{186} பிரிவுகளில் ஆறாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு{6698} பாடல்களில் {சுலோகங்களில்} விவரித்துள்ளார்.

 

{6வது பர்வம் சுருக்கம்}

“அதன்பிறகு சொல்லப்பட்டிருப்பது அற்புதமான நிகழ்வுகள் கொண்ட பீஷ்ம பர்வம். ஜம்பூ என்ற இடம் உருவான வரலாற்றை சஞ்சயன் கூறுவது, யுதிஷ்டிர சேனையின் பெரிய பின்னடைவும், பத்து நாட்கள் நடந்த கொடூரப் போரும் வருகின்றன. உயர்ந்த உள்ளங்கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாட்டனுக்காக விட்டுக்கொடுக்கும் அர்ஜூனனின் தந்திரத்தை அவனிடம் {அர்ஜுனனிடமிருந்து} இருந்து விரட்டுகிறான். அர்ஜூனனைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி, பீஷ்மரைத் தானே கொல்வதாகக் கூறுகிறான் கிருஷ்ணன். அர்ஜுனன் சிகண்டியைத் தன் முன்னால் நிறுத்தி பீஷ்மரைத் தனது கூர்மையானக் கணைகளால் துளைக்கிறான். பீஷ்மர் தேரிலிருந்து விழுகிறார். பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கிறார். இந்தப் பெரிய பர்வமனது மஹாபாரதத்தில் ஆறாவது பர்வமாக அறியப்படுகிறது. நூற்றுப் பதினேழு{117} பிரிவுகளில், ஐயாயிரத்து எண்ணூற்று எண்பத்தெட்டு{5888} பாடல்களில் இவையனைத்தும் விவரிக்கப்படுகின்றன.

 

{7வது பர்வம் சுருக்கம்}

“அதன்பிறகு அற்புதமான நிகழ்வுகள் நிறைந்த பர்வமாகிய துரோண பர்வம் வருகிறது. முதலில் துரோணரிடம் படைத் தலைமையை ஒப்படைப்பது, யுதிஷ்டிரனைப் பிடிப்பதாக துரியோதனனைத் திருப்திப் படுத்துவதற்காக துரோணர் சூளுரைப்பது. சம்சப்தகர்களையும் பகதத்தர்களையும் அர்ஜூனன் வீழ்த்துவது, தனியாக ஆதரவில்லாமல் ஜெயத்திரதன் உட்பட பல வீரர்களிடம் அகப்பட்டுக்கொண்டு அபிமன்யு மரணமடைதல், மகனின் மரணத்திற்கப்பால் அர்ஜுனன் ஏற்படுத்திய அழிவு. ஜெயத்திரதனின் முடிவு. யுதிஷ்டிரனின் உத்தரவின் பேரில் பீமன் மற்றும் சாத்யகி ஆகியோர் கௌரவப்படைக்குள் புகுந்து அர்ஜுனனைத் தேடுவது. மீந்திருந்த சம்சப்தகர்களின் அழிவு.அலம்புசன், சுருதாயு, ஜலசந்தன், சௌமதத்தன், விராடன், தேர்ப்படைப் போராளி துருபதன், கடோத்கசன் இன்னும் மற்றவர்களின் மரணங்கள் துரோண பர்வத்தில் விவரிக்கப்படுகின்றன. அஸ்வத்தாமன் தனது தந்தையின் மரணத்தால் கோபங்கொண்டு நாராயணக் கணையை ஏவுதல்.(மூன்று நகரங்களை) அழித்ததில் ருத்ரனின் பெருமை. கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் பெருமைகளை வியாசர் வந்து விவரித்தல் ஆகியவை, மஹாபாரதத்தின் ஏழாவது பர்வமான துரோண பர்வத்தில் வருகின்றன. மொத்தம் நூற்று எழுபது{170} பிரிவுகளில் எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது {8909} பாடல்களில் {சுலோகங்களில்} இவை பராசர மைந்தன் வியாசரால் தொகுக்கப்பட்டுள்ளன.

 

“இதன் பிறகு அற்புதமான கர்ண பர்வம் வருகிறது. {8வது பர்வம்_சுருக்கம்}. சல்லியன் கர்ணனுக்குத் தேரோட்டியாகப் பணியமர்த்தப்பட்டது, திரிபுரன் என்ற அசுரனின் வீழ்ச்சி பற்றிய வரலாறு, போருக்குப் புறப்படுமுன்பு கர்ணனுக்கும் சல்லியனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம்,  கர்ணனை அவமானப்படுத்த அன்னத்தையும் காக்கையையும் ஒப்பிட்டு {சல்லியன்} கதை சொல்வது, அஸ்வத்தாமன் கையால் பாண்டியன் இறப்பது, தண்டசேனன் மற்றும் தண்டன் {Darda = Danda என்று நினைக்கிறேன்} மரணம்.

 

ஆபத்து என்றறிந்தும் கர்ணனிடம் தனித்து யுதிஷ்டிரன் போர் புரிவது, அர்ஜுனனும் யுதிஷ்டிரனும் கோபத்துடன் பேசிக்கொள்வது, கிருஷ்ணன் அவர்களை அமைதிப்படுத்தல் ஆகியன இந்தப் பர்வத்தில் வருகின்றன. பீமன் துச்சாதனனுடைய மார்பைக் கிழித்து, அவனுடைய இருதயத்தின் இரத்தத்தைக் குடிக்கும் காட்சி விவரிக்கப்படுகிறது. பின்பு அர்ஜுனன் நேருக்கு நேராக கர்ணனிடம் போர் புரிந்து அவனை {கர்ணனை} வீழ்த்துவது வருகின்றது. மஹாபாரதத்தின் எட்டாவது {8} பர்வமான இந்தப் பர்வம் அறுபத்து ஒன்பது{69} பிரிவுகளில் நாலாயிரத்து தொண்ணூற்று அறுபத்து நான்கு{4964} பாடல்களில் {சுலோகங்களில்} விவரிக்கப்பட்டுள்ளது.

 

அடுத்ததாக அற்புதமான பர்வமான சல்லிய பர்வம் {9வது பர்வம்_சுருக்கம்}. எல்லா பெரிய வீரர்களும் வீழ்ந்த நிலையில் மத்திர மன்னன் சல்லியன் கௌரவப்படைக்குத் தலைவனாக நியமிக்கப்படுகிறான். பலப் போர்வீரர்களின் போர்க்காட்சிகள் இந்த பர்வத்தில் விவரிக்கப்படுகின்றன. சல்லியன், யுதிஷ்டிரனின் கையில் வீழ்கிறான். இந்த பர்வத்தில்தான் சகாதேவனின் கையால் சகுனி மரணத்தைத் தழுவுகிறான். படையில் சிறு குழுக்களே எஞ்சியிருக்க துரியோதனன் தடாகத்துக்குச் சென்று தன்னை தண்ணீருக்கிடையில் மறைத்துக் கொள்கிறான். தந்திரத்தால் எப்படி பீமன் துரியோததனை இகழ்ந்த வார்த்தைகளால் பேசி {தடாகத்தைவிட்டு} வெளியே வர வைக்கிறான் என்ற விவரிப்பு வருகிறது. அதன் பிறகு பீம துரியோதன கதாயுதப் போர் துவங்குகிறது, துரியோதனனை பீமன் தொடையில் அடித்து வீழ்த்துகிறான். இவை அனைத்தும் இந்த பர்வத்தில் வருகின்றன. மொத்தம் ஐம்பத்து ஒன்பது{59} பிரிவுகளில் மூவாயிரத்து இருநூற்று இருபது{3220} பாடல்களில் {சுலோகங்களில்} வியாசர் இவற்றை விவரிக்கிறார்.

 

இதன் பிறகு வருவது பயமுறுத்தும் நிகழ்வுகள் கொண்ட சௌப்திக பர்வம் {10வது பர்வம்_சுருக்கம்} .

 

பாண்டவர்கள் சென்றவுடன், பெரிய வீரர்களான கிருதவர்மன், கிருபர், துரோண மைந்தன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் தொடை உடைந்து, இரத்தத்தில் நனைந்து கிடக்கும் துரியோதனனைக் காண்கின்றனர். இந்தக் காட்சியைக் கண்ட துரோணரின் மைந்தன் {அசுவத்தாமன்} கோபங்கொண்டு “பாஞ்சாலர்கள், திருஷ்டத்யுமனன், பாண்டவர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளைக் கொல்லாமல் போர்க்கோலம் அகற்றுவதில்லை” என்று சபதமேற்கிறான். பிறகு மூவரும் துரியோதனனை விட்டுவிட்டு கதிர் அடங்கும் வேளையில் கானகத்துக்குள் நுழைகின்றனர்.

 

ஒரு பெரிய ஆலமரத்தடியில் அவர்கள் மூவரும் உட்கார்ந்திருக்கையில், ஒரு ஆந்தை பல காக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கொல்வதைக் காண்கின்றனர். இக்காட்சியைக் கண்ட அஸ்வத்தாமன், இதயம் நிறைந்த கோபத்தால் பாஞ்சாலர்களைப் பழி வாங்குவது என்று உறுதி செய்கிறான். பாஞ்சாலர்கள் கொட்டகையின் வாசலை ஒரு இராட்சசன் காவல் காக்கிறான். அசுவத்தாமனின் போர்க்கருவிகள் அவனிடம் செயலிழப்பதைக் கண்டு மனதில் முக்கண் ருத்திரனை வழிபட்டு அவனைக் {ருத்திரனைக்} குளிர்விக்கிறான்.

 

பிறகு கிருதவர்மனையும், கிருபரையும் அழைத்துக் கொண்டு இரவு வேளையில் யாரும் எதிர்பாராத நேரத்தில், திரௌபதி மைந்தர்கள் அனைவரையும், திருஷ்டத்யுமனுடன் கூடிய பாஞ்சாலர்கள் அனைவரையும் அவர்களது உறவினர்களுடன் சேர்த்துக் கொல்கிறான். ஐந்து பாண்டவர்களையும், சாத்யகியையும் தவிர்த்து மற்ற அனைவரும் இறக்கின்றனர். பிள்ளைகள், தமையன், தந்தை ஆகியோரின் பிரிவால் துயருற்ற திரௌபதி உண்ணாதிருந்து சாக முடிவு செய்து, தனது கணவர்களின் முன்னால் அமர்கிறாள். திரௌபதியின் வார்த்தைகளில் இரக்கமடைந்த பீமசேனன், தனது கதையை எடுத்துக் கொண்டு அசுவத்தாமனைத் தேடுகிறான். பீமசேனன் மீதிருக்கும் பயத்தாலும், விதியின் வசத்தாலும் அசுவத்தாமன் பாண்டவர்கள் அனைவரையும் அழிக்கும்படி உத்தரவு கொடுத்து தெய்வீகக் கணையொன்றை ஏவுகிறான். கிருஷ்ணன் அசுவத்தாமனின் வார்த்தைகளைக் கேட்டு “இது நடக்காது” என்று சொல்லி அந்தக் கணையை அர்ஜுனனைக் கொண்டு செயலிழக்க வைக்கிறான். துவைபாயணரும் {வியாசரும்}, கிருஷ்ணனும் மாறி மாறி அசுவத்தாமனுக்கு சாபம் கொடுக்கின்றனர். அசுவத்தாமனிடம் அவனது தலையில் பிறப்பிலிருந்தே இருக்கும் நகையொன்றை அறுத்தெடுத்து, அவனைத் துரத்தி விட்டு, துயரத்தில் இருக்கும் திரௌபதியின் முன்பு தங்கள் வெற்றி குறித்து பெருமை கொள்கின்றனர் பாண்டவர்கள். இப்படித்தான் பத்தாவது {10} பர்வமான சௌப்திக பர்வம் சொல்லப்படுகிறது. மொத்தம் பதினெட்டு{18} பிரிவுகளில் எண்ணூற்று எழுபது{870} பாடல்களில் {சுலோகங்களில்} சௌப்திக பர்வத்தை விவரிக்கிறார் வியாசர். இந்த பர்வத்தில் சௌப்திக மற்றும் ஐஷிக பர்வங்கள் பெருமுனிவரால் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இதன்பிறகு துயர்நிறைந்த ஸ்த்ரீ பர்வம் {11வது பர்வம்_சுருக்கம்} சொல்லப்படுகிறது. மைந்தர்களின் பிரிவால் துயருற்றிருந்த, தீர்க்கதரிசனப் பார்வை கொண்ட திருதராஷ்டிரன் முன்னால் “இது பீமன்” என்று கிருஷ்ணன் ஒரு இரும்புச் சிலையைக் காட்ட, பீமன் மீதிருந்த கோபத்தால் அந்தச் சிலையை இறுகப் பற்றித் தூள் தூளாக்குகிறான் திருதராஷ்டிரன். விதுரன் திருதராட்டிரனின் கோபத்தை அமைதிப்படுத்தி, உலகப்பற்றை விடச்சொல்லி அறிவுறுத்துகிறான்.

 

அடுத்து திருதராஷ்டிரன் தனது இல்லத்தில் உள்ள பெண்மணிகளை அழைத்துக் கொண்டு, போர் நடந்த இடத்திற்கு செல்லும் காட்சி விவரிக்கப்படுகிறது. காந்தாரியும் திருதராஷ்டிரனும் கோப மிகுதியால் மயக்கம் கொண்டு நினைவிழப்பது. திரும்பிவராத தங்கள் கணவர்களைத் தேடிக் கொண்டு க்ஷத்திரியப் பெண்மணிகள் போர்பூமிக்கு வந்து சடலங்களைத் தேடுவது. கிருஷ்ணன், காந்தாரிக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்வது. சடலங்களுக்கு யுதிஷ்டிரன் இறுதிச்சடங்கு செய்வது, குந்தி கர்ணனைத் தனது மகன் என்று வெளிப்படுத்துவது. இவையனைத்தும் இந்த பதினொராவது பர்வமான ஸ்த்ரீ பர்வத்தில் விவரிக்கப்படுகின்றன. உணர்வுள்ள நெஞ்சங்களில் கண்ணீரை வர வைக்கும் பர்வம் இது. மொத்தம் இருபத்து ஏழு{27} பிரிவுகளில் எழுநூற்று எழுபத்தைந்து{775} பாடல்களில் {சுலோகங்களில்} இந்த பர்வம் விவரிக்கப்படுகிறது.

 

பனிரெண்டாவதாக சாந்தி பர்வம் {12வது பர்வம்_சுருக்கம்} வருகிறது. யுதிஷ்டிரன் தனது உறவினர்களைக் கொன்றதைக் குறித்து வருந்துவது. பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தபடியே அரசனின் கடமைகளை விளக்கி, பீஷ்ம நீதியை அளிப்பது ஆகியன இந்த பர்வத்தில் வருகின்றன. மொத்தம் முந்நூற்று முப்பத்தொன்பது {339} பிரிவுகளில் பதினாலாயிரத்து எழுநூற்று முப்பத்திரண்டு {14732} பாடல்களில் {சுலோகங்களில்} இது விவரிக்கப்படுகிறது.

 

வரிசையில் அடுத்தது அனுசாசன பர்வம். {13 வது பர்வம்_சுருக்கம்}. பீஷ்ம நீதியைக் கேட்டு யுதிஷ்டிரன் எப்படி தன்னை மாற்றி அமைத்துக் கொண்டான் என்றும், நீதிகளுக்கும், தர்மங்களுக்கும், பொருளீட்டு தர்மங்களுக்குமான விதிகள், தனிப்பட்ட கடமைகள் ஆகியன பற்றி இந்த பர்வத்தில் அலசப்படுகின்றன. இந்த பர்வத்தில் அந்தணர்கள் மற்றும் பசுக்களின் பெருமைகள் பலவாறாக அலசப்படுகின்றன. காலம் மற்றும் இடத்தின் பரிமாணங்கள் குறித்தும் இந்த பர்வம் விரிவாக அலசுகிறது. பீஷ்மர் நல்லுலகம் செல்வது இந்த பர்வத்தில் வருகிறது. இந்த பதிமூன்றாவது பர்வத்தில் பலதரப்பட்ட மனிதர்களின் கடமைகள் குறித்த நிறைய விளக்கங்கள் உள்ளன. நூற்று நாற்பத்தாறு {146} பிரிவுகளில் எட்டாயிரம் {8000} பாடல்களில் {சுலோகங்களில்} இந்த பர்வம் விவரிக்கப்படுகிறது.

 

அதன்பிறகு வருவது பதினான்காவது பர்வமான அஸ்வமேதிக பர்வம் {14 வது பர்வம்_சுருக்கம்}. இதில் சம்வர்த்தம் மற்றும் மருத்தத்தின் அற்புதமான கதை விவரிக்கப்படுகிறது. பாண்டவர்கள் தங்கப் புதையலைக் கண்டடைவது. அஸ்வத்தாமனின் கணையால் கருவில் எரிந்து போன குழந்தையை கிருஷ்ணன் மீட்டெடுத்து பரீக்ஷித்தாகப் பிறப்பிப்பது, குதிரை வேள்விக்கான போரில் அர்ஜூனனின் பல நாடுகளைப் பிடிப்பது. சித்திராங்கதையின் {அர்ஜுனனுக்கு சித்திராங்கதைக்கும் பிறந்த} மைந்தன் பப்ருவாகனனுடன் அர்ஜுனன் போர். குதிரை வேள்வியில் கீரிப்பிள்ளையின் செயல்பாடு ஆகியன அஸ்வமேதிக பர்வத்தில் வருகின்றன. நூற்று மூன்று {103} பிரிவுகளில் மூவாயிரத்து முன்னூற்று இருபது {3320} பாடல்களில் {சுலோகங்களில்} இந்த பர்வம் விவரிக்கப்படுகிறது.

 

அதன்பிறகு வருவது பதினைந்தாவது பர்வமான ஆசிரமவாசிகா பர்வம் {15வது பர்வம்_சுருக்கம்}. திருதராஷ்டிரன் நாட்டைத்துறந்து, தனது மனைவி காந்தாரி மற்றும் விதுரனுடன் கானகமேகுவது. மூத்தவர்களுக்கு என்றும் மதிப்பளிக்கும் பிருதை {குந்தி} இதைக் கண்டு தனது மைந்தர்களின் {பாண்டவர்களின்} அவையைத் துறந்து அவர்களுடன் தானும் சேர்ந்து கானகமேகுவது. தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் ஆவிகளுடன் மன்னன் திருதராஷ்டிரன் உரையாடுவது ஆகியன ஆசிரமவாசிக பர்வத்தில் வருகின்றன. அதன்பிறகு கவலைகளை விடுத்து புண்ணியமளிக்கும் காரியங்களில் திருதராஷ்டிரன் இறங்குவது. விதுரன் அருள்நிலையை அடைவது. கவல்கணனின் புதல்வன் சஞ்சயன் இந்த பர்வத்தில் அருள் நிலையை அடைகிறான். யுதிஷ்டிரன் நாரதரின் வருகையால் விருஷ்ணி குல {யாதவ குல} அழிவைப் பற்றி அறிகிறான். இந்தப் பர்வம் நாற்பத்திரண்டு{42} பகுதிகளில், ஆயிரத்து ஐநூற்று ஆறு {1506} பாடல்களில் {சுலோகங்களில்} விவரிக்கப்படுகிறது.

 

அதன்பிறகு வலிநிறைந்த நிகழ்வுகள் கொண்ட மௌசல பர்வம் {16வது பர்வம்_சுருக்கம்}. இதில், சிங்கம் போன்ற இருதயம் கொண்டு, பலப் போர்களங்களில் பெற்ற விழுப்புண்களை மார்பில் கொண்ட, விருஷ்ணி குல {யாதவ குல} நாயகர்கள், ஒரு அந்தணனின் சாபத்தால், குடிவெறியில் ஒருவரை ஒருவர் கோரைப் புற்களால்  அடித்துக் கொண்டு உப்புக்கடலருகே அழிந்து போதல், பலராமரும் கிருஷ்ணனும் தங்கள் குலம் அழிந்து போவதைக் கண்டுவிட்டு அவர்கள் நேரமும் வந்ததெனத் திரும்புதல். அர்ஜுனன் துவாரகைக்குச் சென்று விருஷ்ணிகள் இல்லாத நகரத்தின் வெறுமையைக் கண்டு துயருறுதல். வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு கடற்கரை அருகே தாங்கள் குடித்த இடத்திலேயே மாண்டு கிடக்கும் விருஷ்ணிகளின் சடலங்களைத் தகனம் செய்துவிட்டு, கிருஷ்ணன் மற்றும் பலராமன் ஆகியோரது சடலங்களைத் தகனம் செய்கிறான் அர்ஜூனன். அர்ஜுனன், துவாரகையில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வரும் வேளையில் கள்ளர்களிடம் அகப்படுகிறான். தனது காண்டீவம் மற்றும் தனது தெய்வீகக் கணைகள் செயலிழந்ததை உணர்கிறான். வியாசரிடம் ஆலோசனை செய்து, யுதிஷ்டிரனிடம் சென்று சன்யாச தர்மத்தை ஏற்கப்போவதாகச் சொல்கிறான். இதுதான் பதினாறாவது{16} பர்வமான மௌசல பர்வம். எட்டு {8} பகுதிகளில் முன்னூற்று இருபது {320} பாடல்களில் {சுலோகங்களில்} இந்தப் பர்வத்தை விளக்குகிறார் வியாசர்.

 

அடுத்தது, மஹாபிரஸ்தானிகா {17வது பர்வம்_சுருக்கம்}, பதினேழாவது பர்வம் {17}. மனிதர்களில் சிறந்தவர்களான பாண்டவர்கள் தங்கள் நாட்டைத் துறந்து திரௌபதியிடம் சென்று கடைசி நெடும்பயணத்திற்கு (மஹாபிரஸ்தானம்) அழைக்கின்றனர். கடலில் சிவப்பு நீரில் இருந்து வெளிப்படும் அக்னியை சந்திக்கின்றனர். அக்னி தேவனின் வேண்டுகோளுக்கிணங்க அர்ஜுனன் அக்னியை வலம் வந்து, தெய்வீக ஆயுதமான காண்டீபத்தை அவனிடம் ஒப்படைக்கிறான். ஒருவர் பின் ஒருவராக விழும் தனது தம்பிகளையும், அடுத்து விழும் திரௌபதியையும் விட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் யுதிஷ்டிரன் செல்கிறான். இதுவே மஹாபிரஸ்தானிக பர்வமாகும். இது மூன்று{3} பகுதிகளில் முன்னூற்று இருபது {320} பாடல்களில் {சுலோகங்களில்} விவரிக்கப்படுகிறது.

 

அடுத்து வரும் பர்வம் இயல்புக்குமீறிய தெய்வீக நிகழ்வுகள் கொண்ட சுவர்க்க பர்வம் {18வது பர்வம்_சுருக்கம்}. யுதிஷ்டிரனை அழைத்துப் போக தெய்வலோகத் தேர் வந்தும், தன்னுடன் கடைசி வரை வந்த நாய் மீது எற்பட்ட அன்பால், அதில் ஏற மறுக்கிறான். யுதிஷ்டிரனின் நேர்மையை மெச்சி தனது மாற்றுருவத்தைக் களைத்து தர்மதேவன் காட்சி அளிக்கிறான்.அதன் பிறகு நல்லுலகம் ஏறும் வழியில் மிகுந்த வலியை உணர்கிறான் யுதிஷ்டிரன். தெய்வீகத் தூதுவர் நரகத்தைக் காண்பிக்கின்றனர். யமனின் ஆட்சிக்குட்பட்ட இடத்தில் யுதிஷ்டிரன் தனது தம்பிகளின் இருதயம் பிளக்கும் அழுகுரல்களைக் கேட்கிறான். பிறகு தர்மதேவதையும் இந்திரனும் பாவிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைக் காண்பிக்கின்றனர். அதன்பிறகு கங்கையில் மூழ்கி தனது பூவுடலைத் துறந்து இந்திரன் முதலான தேவர்களுடன் இன்பமயமாக இருக்கிறான் யுதிஷ்டிரன். இந்த பர்வம் ஆறு {6} பகுதிகளாக இருநூற்று ஒன்பது {209} பாடல்களில் {சுலோகங்களில்}  விவரிக்கப்படுகிறது.

 

மேற்குறிப்பிட்டவை பதினெட்டு {18} பர்வங்களின் சுருக்கமாகும். பிற்சேர்கையில் ஹரி வம்சம், பவிஷ்யா ஆகியன வருகின்றன. ஹரி வம்சத்தில் பனிரெண்டாயிரம் {12000} பாடல்கள் {சுலோகங்கள்} உள்ளன. இதுவே பர்வ சங்கரஹா என்ற பகுதியின் அங்கமாகும்.

 

சௌதி சொன்னார் “பதினெட்டு {18} அக்ஷொணி படைகள் இந்தப் போரில் கலந்து கொண்டன. இந்தப் போர் பதினெட்டு {18} நாட்கள் கொடூரமாக நடந்தது. ஒருவன் நான்கு வேதங்களும் அங்கங்களும் உபநிஷத்துகள் அத்தனையும் அறிந்தும் பாரதம் அறியவில்லை என்றால் அவனை விவேகமுள்ளவன் என்று கருத முடியாது. ஒப்பற்ற நுண்ணறிவுள்ள வியாசர், பொருள், அறம் மற்றும் இன்பம் ஆகியவற்றை விளக்கி பாரதத்தைப் படைத்தார். இந்த வரலாற்றைக் கேட்டவர்கள் வேறு வரலாறுகளை எவர் சொன்னாலும் கேட்க விரும்பார். கோகிலப் பறவையின் {குயிலின்} இனிமையானக் குரலைக் கேட்ட எவரும் காக்கையின் அலறலைக் கேட்க விரும்பார். எப்படி ஐம்பூதங்களால் மூன்று உலகங்களும் உண்டாயிற்றோ, அப்படியே பல புலவர்களின் திறமைகள் இந்த அற்புதமானத் தொகுப்பால் வளர்கின்றன (உண்டாகின்றன). எப்படி நான்கு வகையான உயிரினங்களும் தான் வசிக்க ஒரு வெளியை நாடி இருக்கின்றனவோ அப்படியே எல்லா புராணங்களும் இந்த வரலாற்றை நாடியே உள்ளன. எப்படி புலன்கள் அத்தனையும் மனத்தைச் சார்ந்து இருக்கின்றனவோ அப்படியே அனைத்து நற்செயல்களும் நற்பண்புகளும் இந்த ஆய்வைச் சார்ந்து இருக்கின்றன. இந்த வரலாற்றுடன் இணைப்பில்லாத ஒரு கதையும் தற்கால உலகத்தில்கூட காணக்கிடைக்காது. அடிமைகள் தங்கள் முதலாளிகளை எப்படிக் கொண்டாடுவார்களோ அப்படி, எல்லாப் புலவர்களும் பாரதத்தைக் கொண்டாடுவார்கள். எப்படி இல்லற தர்மத்தை மற்ற மூன்று தர்மங்கள் விஞ்ச முடியாதோ அப்படி இந்தப் பாடல் தொகுப்பை எந்தப் பாடலாசிரியரின் {கவிஞரின்} பாடல்களும் {செய்யுளும்} விஞ்ச முடியாது.

 

“ஓ துறவிகளே, செயலற்றத் தன்மையை உலுக்குபவர்களே, உங்கள் இருதயம் அறத்தில் நிலைத்திருக்கட்டும். அடுத்த உலகத்திற்குச் செல்பவனுக்கு ஒரே உற்ற நண்பன் அறமே. பொருளையும் மனைவிமாரையும் கொண்டாடும் மிகுந்த புத்திசாலிகள் கூட அவற்றைத் தனது உடைமையாக்க இயலாது. துவைபாயணரின் {வியாசரின்} உதடுகளால் உச்சரிக்கப்பட்ட பாரதம் தன்னிகரில்லாதது. அது தன்னியல்பிலேயே புனிதமானதும் அறம் சார்ந்ததுமாய் இருக்கிறது. இது பாவங்களை அழித்து நன்மைகளைத் தருகிறது.

 

இந்த பாரதம் உரைக்கப்படும் போது கேட்ட யாவரும் புஷ்கரை ஆற்றில் நீராட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு அந்தணன் பகலில் தனது புலன்களால் செய்த பாவங்கள், மாலையில் பாரதம் படிப்பதால் விலகுகின்றன. செயல்களால், சொற்களால், மனத்தால் செய்யும் பாவங்கள் அதிகாலையில் பாரதம் படிப்பதால் விலகுகின்றன. கொம்புகளில் தங்கத் தகடு பொருத்தப்பட்ட ஆயிரம் பசுக்களை, வேதம் மற்றும் அனைத்துத் துறைகளையும் அறிந்த அந்தணனுக்குத் தானமளிக்கும் ஒருவனும்,  தினமும் பாரதத்தைக் கேட்பவனும் ஒரே கதியையே அடைகின்றனர். எப்படி கப்பல் வைத்திருப்பவனால் கடலைக் கடக்க முடிகிறதோ, அப்படியே இந்த பெரிய வரலாற்றை பர்வ சங்கரஹா என்ற இந்தப் பகுதி கடக்க உதவும்.

 மஹாபாரதத்தின் ஆதிபர்வத்தில் வரும் சங்கரஹா பர்வம் என்ற இந்தப் பகுதி இப்படியே நிறைவடைகிறது.