எங்கெல்ஸ் தொடர்ந்து கூறுகிறார்:
“… புராதன மக்களின் (குலங்கள் அல்லது கணங்களின்) ஒழுங்கமைப்பு6 போலல்லாது, அரசு முதலில் அதன் குடிமக்களைப் பிரதேச வாரியாகப் பிரிக்கிறது,,,’’
இந்தப் பிரிவினை நமக்கு ‘இயல்பானதாய்த்’ தோன்றுகிறது. ஆனால் தலைமுறைகள் அல்லது குலங்களின் பிரகாரம் அமைந்த பழைய ஒழுங்கமைப்பை எதிர்த்து நீண்ட நெடும் போராட்டம் இதற்கு அவசியமாயிருந்தது.
“… ஒரு பொது அதிகாரம் நிறுவப்பட்டது இரண்டாவது சிறப்பியல்பாகும். இந்தப் பொது அதிகாரம் முன்பு போல இப்பொழுது மக்கள் நம்மை ஆயுதமேந்தியோராய் ஒழுங்கமைத்துக் கொள்வதற்கு நேரடியாக ஒத்ததாயில்லை. இந்தத் தனி வகைப்பட்ட பொது அதிகாரம் ஏன் தேவையாயிற்று என்றால், சமுதாயம் வர்க்கங்களாய்ப் பிளவுண்ட பிற்பாடு தானாகவே இயங்கும் மக்களது ஆயுதமேந்திய ஒழுங்கமைப்பு சாத்தியமற்றதாகி விட்டது… இந்தப் பொது அதிகாரம் ஒவ்வொரு அரசிலும் இருந்து வருகிறது. இது ஆயுதமேந்திய ஆட்களை மட்டுமின்றி, புராதன [குலச்] சமுதாயம் அறிந்திராத பொருளாயதத் துணைச் சாதனங்களையும் சிறைச்கூடங்களையும், எல்லா வகையான பலாத்கார ஏற்பாடுகளையும் கொண்டதாகும்….’’
அரசு எனப்படும் ‘சக்தி’ சமுதாயத்திலிருந்து உதித்தது, ஆனால் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை இருத்திக் கொள்கிறது, சமுதாயத்துக்குத் தன்னை மேலும் மேலும் அயலானாக்கிக் கொள்கிறது என்கிற இக்கருத்தை எங்கெல்ஸ் தெளிவுபடுத்துகிறார். இந்தச் சக்தி பிரதானமாய் எவற்றால் ஆனது? சிறைக்கூடங்களையும் இன்ன பிறவற்றையும் தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனி வகைப் படைகளால் ஆனது அது.
ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகள் என்பதாய் நாம் பேச முழு நியாயம் உண்டு, ஏனெனில், அரசு ஒவ்வொன்றுக்கும் உரியதான இந்தப் பொது அதிகாரம் ஆயுதம் தாங்கிய மக்களுக்கு, அவர்களது ‘தானே இயங்கும் ஆயுதமேந்திய ஒழுங்கமைப்புக்கு’ ‘நேரடியாக ஒத்ததாயில்லை’.
தற்போது ஆதிக்கம் புரியும் அற்பவாதக் கண்ணோட்டத்தின்படி, சிறிதும் கவனிக்கத் தேவையற்றதென்றும் பழக்கப்பட்டு சர்வ சாதாரணமாகி விட்டதென்றும் கருதப்படும் ஒன்றை, வேர்விட்டு ஆழப் பதிந்ததோடு இறுகிக் கெட்டிப் பிடித்தவை என்றும் சொல்லத்தக்க தப்பெண்ணங்களால் புனிதமென உயர்த்தி வைக்கப்படும் இதனை, மாபெரும் புரட்சிகர சிந்தனையாளர்கள் எல்லோரையும் போலவே எங்கெல்சும் வர்க்க உணர்வு படைத்த தொழிலாளர்களுடைய கவனத்துக்குக் கொண்டு வருகிறார். நிரந்தரச் சேனையும் போலீசும் தானே அரசு அதிகாரத்தின் பிரதான கருவிகள், இவ்வாறின்றி வேறு எப்படி இருக்க முடியும்?
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்த மிகப் பெருவாரியான ஐரோப்பியர்களுடைய கண்ணோட்டத்தின்படி_இவர்களுக்காகவே எங்கெல்ஸ் எழுதினார், இவர்கள் எந்தவொரு பெரும் புரட்சியையும் அனுபவித்து அறியாதவர்கள் அல்லது அருகிலிருந்து பார்த்திராதவர்கள்_இது வேறு எப்படியும் இருக்க முடியாது. ‘தானாகவே இயங்கும் மக்களது ஆயுதமேந்திய ஒழுங்கமைப்பு’ என்றால் என்னவென்பது அவர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. சமுதாயத்துக்கு மேலானதாய் நின்று மேலும் மேலும் அதற்குத் தம்மை அயலானாக்கிக் கொள்ளும் ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகள் (போலீசும் நிரந்தரச் சேனையும்) அவசியமாகியது ஏனென்று கேட்டால், மேற்கு ஐரோப்பிய, ருஷ்ய அற்பவாதிகள் ஸ்பென்சர் அல்லது மிகைலோவ்ஸ்கியிடமிருந்து கடன் வாங்கிய சில தொடர்களைக் கூறி, மேலும் மேலும் சிக்கலாகி வரும் சமுதாய வாழ்வையும், பணிப் பிரிவினையும், பிறவற்றையும் குறிப்பிட முற்படுகிறார்கள்.
இவ்வாறு குறிப்பிடுவது ‘விஞ்ஞான வழிப்பட்டதாய்த்’ தோன்றுகிறது. மிகவும் முக்கியமான, அடிப்படையான உண்மையை, அதாவது இணக்கம் காண முடியாத பகை வர்க்கங்களாய்ச் சமுதாயம் பிளவுண்டு விட்டதென்ற உண்மையைக் கண்ணில் படாதபடி மூடி மறைத்து சாதாரண மனிதனைத் தூக்கத்தில் இருத்த இது பயன்படுவதாகி விடுகிறது.
இந்தப் பிளவு உண்டாகாமல் இருந்திருந்தால், ‘தானாகவே இயங்கும் மக்களது ஆயுதமேந்திய ஒழுங்கமைப்பு’, அதன் சிக்கலினாலும் அதன் உயர் நுட்பத்திறனாலும் பிறவற்றாலும் தடிகள் ஏந்திய குரங்கு மந்தை அல்லது புராதன ஒழுங்கமைப்பிலிருந்து வேறுபட்டிருக்கும். ஆயினும் இது போன்ற ஓர் ஒழுங்கமைப்பு அப்பொழுதும் சாத்தியமாகவே இருந்திருக்கும்.
நாகரிகச் சமுதாயம் பகை வர்க்கங்களாய், அதுவும் இணக்கம் காண முடியாத பகை வர்க்கங்களாய்ப் பிளவுண்டதால்தான் இது சாத்தியமற்றதாகியது. இவ்வர்க்கங்கள் ‘தானாகவே இயங்கும்’ ஆயுதபாணிகளாய் இருப்பின், இவற்றினிடையே ஆயுதமேந்திய போராட்டம் மூண்டு விடும். அரசு உதித்தெழுகிறது, தனி வகைப் படைகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு புரட்சியும் அரசுப் பொறியமைவை அழிப்பதன் மூலம், வர்க்கப் போராட்டத்தை ஒளிவு மறைவின்றி நமக்குப் புலப்படுத்திக் காட்டுகிறது; ஆளும் வர்க்கம் தனக்குச் சேவை புரியக் கூடிய ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனி வகைப் படைகளை மீட்டமைக்க எப்படி முயலுகிறது என்பதையும், ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்குவோருக்குப் பதிலாய் ஒடுக்கப்பட்டோருக்குச் சேவை புரியக் கூடிய இப்படிப்பட்ட ஒரு புதிய ஒழுங்கமைப்பைத் தோற்றுவித்துக் கொள்ள எப்படி முயலுகிறது என்பதையும் நமக்குத் தெளிவாய்க் காட்டுகிறது.
மாபெரும் புரட்சி ஒவ்வொன்றும் நடைமுறையில், திட்டவட்டமாகவும், இன்னும் முக்கியமாய் வெகுஜனச் செயல் அளவிலும் நம் முன் எழுப்பும் அதே பிரச்சனையை, அதாவது ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட ‘தனிவகைப்’ படைகளுக்கும் ‘தானாகவே இயங்கும் மக்களது ஆயுதமேந்திய ஒழுங்கமைப்புக்கும்’ இடையிலான உறவு பற்றிய பிரச்சனையை மேற்கூறிய மேற்கோளில் எங்கெல்ஸ் தத்துவார்த்த வழியில் எழுப்புகிறார். ஐரோப்பிய, ருஷ்யப் புரட்சிகளின் அனுபவம் இந்தப் பிரச்சனைக்கு எப்படித் திட்டவட்டமான முறையில் பதிலளிக்கிறது என்பதை நாம் பார்ப்போம்.
இப்பொழுது எங்கெல்சின் விளக்கத்துக்குத் திரும்பலாம்.
சில சமயங்களில்_உதாரணமாய் வட அமெரிக்காவின் சில பகுதிகளில்_இந்தப் பொது அதிகாரம் பலவீனமாய் இருப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார் (முதலாளித்துவச் சமுதாயத்தில் அரிய விதிவிலக்காய் இருந்த ஒன்றை, வட அமெரிக்காவில் ஏகாதிபத்திய காலகட்டத்துக்கு முன்பு கட்டற்ற குடியேற்றக் குடியினர் பெருவாரியாய் இருந்த சில பகுதிகளை இங்கு அவர் மனதிற் கொண்டுள்ளார்). ஆனால் பொதுவாய்க் கூறுமிடத்து இந்தப் பொது அதிகாரம் வளர்ந்து வலிமையுறுகிறது என்று குறிப்பிடுகிறார்.
“… அரசினுள் எந்த அளவுக்கு வர்க்கப் பகைமைகள் மேலும் கடுமையாகின்றனவோ, அக்கம் பக்கத்து அரசுகள் பெரிதாகி அவற்றின் மக்கள் தொகை பெருகுகின்றனவோ, அதே அளவுக்குப் பொது அதிகாரம் வளர்ந்து வலிமையுறுகிறது. இன்றைய ஐரோப்பாவைக் கவனித்தால் போதும், இது தெளிவாகிவிடும். இங்கு பொது அதிகாரம் சமுதாயம் அனைத்தையும், அரசையும் கூட விழுங்கிவிடுமோ என்று அஞ்சத்தக்க அளவுக்கு வர்க்கப் போராட்டமும் நாடு பிடிக்கும் போட்டாபோட்டியும் அதைத் தீவிரமாய் வளரச் செய்திருக்கின்றன…’’.
கடந்த நூற்றூண்டின் தொண்ணூறாம் ஆண்டுகளின் தொடக்கப் பகுதியில் எழுதப்பட்டது இது. எங்கெல்சின் கடைசி முன்னுரை 1891 ஜூன் 16_ஆம் தேதியிடப்பட்டதாகும். ஏகாதிபத்தியத்துக்கான மாற்றம்_டிரஸ்டுகளின் முழு ஆதிக்கத்துக்கும் பெரிய வங்கிகளின் சர்வ வல்லமைக்கும் மிகப் பெரிய அளவிலான காலனியாதிக்கக் கொள்கைக்கும் இன்ன பிறவற்றுக்குமான மாற்றம்_அப்பொழுதுதான் பிரான்சில் ஆரம்பித்துக் கொண்டிருந்தது; வட அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் இந்த மாற்றம் இன்னும் கூட பலவீனமாகவே இருந்தது, இதற்குப் பிற்பட்ட காலத்தில் ‘நாடு பிடிக்கும் போட்டாபோட்டி’ பிரம்மாண்டமான அளவுக்கு மும்முரமாகிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டின் தொடக்கத்துக்குள் ‘நாடு பிடிக்கும் போட்டியாளர்களிடையே’, அதாவது கொள்ளைக்காரப் பேரரசுகளிடையே உலகம் பூராவுமே பங்கிடப்பட்டுவிட்டதால் இந்தப் போட்டாபோட்டி மேலும் கடுமையாகிவிட்டது. இதன் பின் இராணுவ, கடற்படைப் போர்க்கருவிகள் நம்ப முடியாதபடி வளர்ந்துவிட்டன; பிரிட்டன் அல்லது ஜெர்மனி உலகெங்கும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்பதற்காக, கொள்ளையின் பாகப் பிரிவினைக்காகக் கட்டவிழ்த்து விடப்பட்ட 1914_1917 ஆம் ஆண்டுகளின் கொள்ளைக்கார யுத்தத்தைத் தொடர்ந்து சமுதாயத்தின் எல்லா சக்திகளையும் நாசகர அரசு அதிகாரம் ‘கபளீகரம் செய்வது’ படுபயங்கர விபத்தாகிவிடும் அளவுக்கு முற்றிவிட்டது.
‘நாடு பிடிக்கும் போட்டாபோட்டி’ வல்லரசுகளுடைய அயல்நாட்டுக் கொள்கையின் மிக முக்கிய தனி இயல்புகளில் ஒன்றாகுமென்று 1891_லேயே எங்கெல்சினால் சுட்டிக் காட்ட முடிந்தது. ஆனால் 1914_1917 ஆம் ஆண்டுகளில் இந்தப் போட்டாபோட்டி பன்மடங்கு கடுமையாகி ஏகாதிபத்திய யுத்தத்தை மூண்டெழச் செய்தபோது சமூக -தேசிய வெறிக் கயவர்கள் ‘தமது சொந்த’ முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்ளைக்கார நலன்களின் பாதகாப்பைத் ‘தாயகப் பாதுகாப்பு’, ‘குடியரசின், புரட்சியின் பாதுகாப்பு’’ என்பன போன்ற சொல்லடுக்குகளால் மூடி மறைத்து வருகிறார்கள்.