"

1870_ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில், கம்யூனுக்குச் சில மாதங்கள் முன்பு, மார்க்ஸ் பாரிஸ் தொழிலாளர்களை எச்சரித்தது தெரிந்ததே _ அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான எந்த முயற்சியும் நம்பிக்கை இழந்தோரின் அசட்டுத் துணிச்சலே ஆகுமென்று எச்சரித்தார்15. ஆயினும் 1871 மார்ச்சில் தொழிலாளர்கள் தீர்மானகரமான போரில் இறங்கும்படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டு, அவர்களும் இதை ஏற்றுக் கொண்டுவிட்டபோது, எழுச்சி எதார்த்த உண்மையாகிவிட்டபோது, பாதக அறிகுறிகள் தென்பட்டுங்கூட, மார்க்ஸ் அளவிலா ஆர்வத்தோடு பாட்டாளி வர்க்கப் புரட்சியை வரவேற்றார். மார்க்சியத்தை விட்டு ஓடி அவக்கேடுற்ற ருஷ்ய ஓடுகாலி பிளெஹானவ் 1905 நவம்பரில் தொழிலாளர், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து எழுதிவிட்டு, ஆனால் 1905 டிசம்பருக்குப் பிற்பாடு மிதவாதியின் பாணியில் “அவர்கள் போர் தொடங்கியிருக்கக் கூடாது’’ என்று ஓலமிட்டது போல, பகட்டுப் புலமையொடு நெறி முறை பேசிக் “காலத்துக்கு முன்னதாகவே துவக்கப்பட்ட’’ இயக்கமென்று மார்க்ஸ் கண்டனம் கூறிக் கொண்டிருக்கவில்லை.
“விண்ணைச் சாடியவர்கள்’’ என்று கம்யூனார்டுகளை மார்க்ஸ் போற்றினார்16. ஆனால் அவர் கம்யூனார்டுகளின் வீரத்தை ஆர்வமொடு பாராட்டியதுடன் நின்று விடவில்லை. வெகு ஜனப் புரட்சி இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை என்றாலுங்கூட, அது அளவு கடந்த முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று அனுபவமாகுமென, உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் குறிப்பிட்டதொரு முன்னேற்றமாகுமென, நூற்றுக் கணக்கான வேலைத் திட்டங்களையும் வாதங்களையும் காட்டிலும் முக்கியமான நடைமுறைச் செயலாகுமெனக் கருதினார். மார்க்ஸ் இந்தப் புரட்சி இயக்கத்தின் அனுபவத்தைப் பகுத்தாராயவும், அதனிடமிருந்து போர்த் தந்திரப் படிப்பினைகள் பெறவும், இந்த அனுபவத்தின் அடிப்படையிலே தமது தத்துவத்தை மறுபரிசீலனை செய்து பார்க்கவும் முற்பட்டார்.
கம்யூனிஸ்டு அறிக்கைக்கு மார்க்ஸ் தேவையெனக் கருதிய ஒரேயொரு ‘திருத்தம்’, பாரிஸ் கம்யூனார்டுகளின் புரட்சிகர அனுபவத்தின் அடிப்படையிலே அவர் செய்ததாகும்.
கம்யூனிஸ்டு அறிக்கையின் புதிய ஜெர்மன் பதிப்புக்கு அதன் இரு ஆசிரியர்களும் கையொப்பமிட்டு எழுதிய கடைசி முன்னுரை 1872 ஜூன் 24 ஆம் தேதியிடப்பட்டதாகும். இந்த முன்னுரையில் அதன் ஆசிரியர்களான கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் கம்யூனிஸ்டு அறிக்கையின் வேலைத்திட்டம் “சில விவரங்களில் காலங் கடந்ததாகி விட்டது’’ என்று குறிப்பிட்டு விட்டு, மேலும் கூறுவதாவது:
“…கம்யூனானது முக்கியமாய் ஒரு விவரத்தை, அதாவது ‘ஏற்கெனவே உள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டுவிட முடியாது’ என்பதை, நிரூபித்துக் காட்டிற்று…’’
இந்த வாசகத்தில் ஒற்றை மேற்கோள் குறியிட்டுக் காட்டப்படும் சொற்களை ஆசிரியர்கள், மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலிலிருந்து அப்படியே எடுத்துக் கையாளுகின்றனர்.
இவ்வாறாக, பாரிஸ் கம்யூனின் தலைமையானதும் அடிப்படையானதுமான ஒரு படிப்பினையை, கம்யூனிஸ்டு அறிக்கையில் ஒரு முக்கிய திருத்தமாய்ப் புகுத்தும்படி அவ்வளவு பிரம்மாண்டமான முக்கியத்துவமுடையதாய் மார்க்சும் எங்கெல்சும் கருதினர்.
இந்த முக்கிய திருத்தம் சந்தர்ப்பவாதிகளால் திரித்துப் புரட்டப் பெற்றிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்டு அறிக்கையின் வாசகர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு, ஏன் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்குங்கூட, இதன் பொருள் அநேகமாய்த் தெரிந்திருக்காது எனலாம். இந்தப் புரட்டலைப் பிற்பாடு, புரட்டல்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தனி அத்தியாயத்தில், நாம் பரிசீலிப்போம். மேலே தரப்பட்ட மார்க்சின் புகழ் மிக்க வாக்கியத்துக்குத் தற்போது சகஜமாய் அளிக்கப்படும் கொச்சையான ‘வியாக்கியானத்தை’ மட்டும் இங்கு குறிப்பிடுவதுடன் நிறுத்திக் கொள்கிறோம். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்கு மாறாய், மெதுவாய்ப் பையப் பைய வளர்ச்சி காணும் கருத்தினை மார்க்ஸ் இங்கு வலியுறுத்துகிறார் என்பதாய் ‘வியாக்கியானம்’ அளிக்கப்படுகிறது.
ஆனால் இதற்கு நேர் எதிரானதே உண்மை. ‘ஏற்கெனவே உள்ள அரசுப் பொறியமைவைத்’ தொழிலாளி வர்க்கம் கைப்பற்றுவதோடு மட்டும் நிற்காமல், அதை அழித்தொழித்திடவும் நொறுக்கவும் வேண்டுமென்பதே மார்க்ஸ் கூறும் கருத்து.
1871 ஏப்ரல் 12_ல், அதாவது கம்யூன் நடைபெற்ற அதே காலத்தில், குகல்மனுக்கு மார்க்ஸ் எழுதினார்:
“…எனது புரூமேர் பதினெட்டின் கடைசி அத்தியாயத்தைப் பார்த்தால், பிரெஞ்சுப் புரட்சியின் அடுத்த முயற்சி இனி முன்பு போல அதிகார வர்க்க- இராணுவப் பொறியமைவை ஒருவர் கையிலிருந்து இன்னொருவர் கைக்கு மாற்றுவதாய் இருக்காது, அதை நொறுக்கிடுவதாகவே இருக்குமென நான் கூறுவதைக் காண்பீர்கள்’’ [அழுத்தம் மார்க்சினுடையது _ மூலத்தில் இருப்பது Zerbrechen], “ஐரோப்பியக் கண்டத்து நாடுகளில் மெய்யான மக்கள் புரட்சி ஒவ்வொன்றுக்கும் இது முன் நிபந்தனையாகும். வீரமிக்க நமது கட்சித் தோழர்கள் பாரிசில் இதைத்தான் செய்ய முயன்று வருகிறார்கள்’’. (Neue Zeit, மலர் 20, இதழ் 1, 1901_-02, பக்கம் 709.) (குகல்மனுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதங்கள் இரண்டுக்குக் குறையாத பதிப்புகளில் ருஷ்யனில் வெளிவந்திருக்கின்றன; இவற்றில் ஒன்று நான் பதிப்பித்து முன்னுரை எழுதியதாகும்.)
“அதிகாரவர்க்க -இராணுவப் பொறியமைவை நொறுக்கிடுவது’ _ இச்சொற்கள் புரட்சியின்போது பாட்டாளி வர்க்கம் அரசு சம்பந்தமாய்ச் செய்ய வேண்டிய பணிகள் குறித்த மார்க்சியம் கூறும் பிரதான படிப்பினையைச் சுருக்கமாய் எடுத்துரைக்கின்றன. இந்தப் படிப்பினையைத்தான், தற்போது ஆதிக்கத்திலுள்ள காவுத்ஸ்கிவாதம் மார்க்சியத்துக்கு அளிக்கும் ‘வியாக்கியானம்’அடியோடு புறக்கணிப்பதோடு, அப்பட்டமாய்த் திரித்துப் புரட்டியுமுள்ளது!
மார்க்ஸ் குறிப்பிடும் புரூமேர் பதினெட்டில் இது பற்றிய முழு வாசகத்தையும் ஏற்கெனவே நாம் மேலே மேற்கோளாய்க் கொடுத்திருக்கிறோம்.
மேற்கூறிய மார்க்சின் வாதத்தில் குறிப்பாய் இரு விவரங்கள் கருத்துக்குரியனவாகும். முதலாவதாக, அவர் தமது முடிவைக் கண்டத்து நாடுகளுக்கு மட்டும் பொருந்துவதாய் வரம்பிட்டுக் கொள்கிறார். 1871_ல் இது புரிந்து கொள்ளக் கூடியதே. அப்பொழுது பிரிட்டன் இராணுவவாதக் கும்பலும், பெருமளவுக்கு அதிகார வர்க்கமும் இல்லாத கலப்பற்ற முதலாளித்துவ நாட்டுக்குரிய எடுத்துக்காட்டாகவே இருந்து வந்தது. ஆகவே பிரிட்டனை மார்க்ஸ் விலக்கிக் கொண்டார். ‘ஏற்கெனவே உள்ள அரசுப் பொறியமைவை’ அழித்தொழிக்க வேண்டுமென்ற முன் நிபந்தனை இல்லாமலே அன்று பிரிட்டனில் புரட்சி, மக்கள் புரட்சியுங்கூட, நடைபெறுவது சாத்தியமாய்த் தோன்றியது, உண்மையில் சாத்தியமாகவும் இருந்தது.
இன்று, 1917_ல், முதலாவது ஏகாதிபத்திய யுத்தம் நடைபெறும் காலத்தில், மார்க்ஸ் முன்பு வரம்பிட்டது பொருந்தாததாகிவிட்டது. பிரிட்டன், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும், இராணுவவாதக் கும்பலும் அதிகார வர்க்கமும் இல்லாதவை என்கிற பொருளில் அனைத்து உலகிலும் ஆங்கிலோ_-சாக்சன் ‘சுதந்திரத்தக்கு’ மிகப் பெரிய கடைசிப் பிரதிநிதிகளாய் விளங்கிய இவ்விரு நாடுகளும், யாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்தி யாவற்றையும் நசுக்கும் அதிகார வர்க்க- இராணுவ அமைப்புகளாலான இரத்தக் கறை படிந்த படு மோசமான அனைத்து ஐரோப்பியச் சகதியில் முழுகிவிட்டன. இன்று பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் கூட, ‘ஏற்கெனவே உள்ள அரசுப் பொறியமைவை’ (1914-_17 ஆம் ஆண்டுகளில் இது இந்நாடுகளில் ‘ஐரோப்பிய’, பொதுவான ஏகாதிபத்தியப் பூரண நிலையை எய்திவிட்டது) நொறுக்குவதும், அழித்தொழிப்பதும் “மெய்யான மக்கள் புரட்சி ஒவ்வொன்றுக்கும் முன் நிபந்தனையாகும்’’.
இரண்டாவதாக, அதிகார வர்க்க -இராணுவ அரசுப் பொறியமைவை அழித்தொழிப்பது “மெய்யான மக்கள் புரட்சி ஒவ்வொன்றுக்கும் முன் நிபந்தனையாகும்’’ என்று மார்க்ஸ் கூறும் ஆழ்ந்த கருத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். ‘மக்கள்’ புரட்சி என்னும் கருத்து மார்க்சிடமிருந்து வருவது விந்தையாய்த் தோன்றுகிறது. ஆகவே தாம் மார்க்சியவாதிகளாய்க் கருதப்பட வேண்டுமென விரும்பும் ஸ்துரூவேயைப் பின்பற்றுவோராகிய ருஷ்யப் பிளெஹானவ்வாதிகளும் மென்ஷிவிக்குகளும் இந்தத் தொடர் மார்க்ஸ் ‘கைதவறி’ எழுதியதெனக் கூறுமளவுக்குச் சென்றாலும் செல்லலாம். இவர்கள், முதலாளித்துவப் புரட்சி, பாட்டாளி வர்க்கப் புரட்சி ஆகிய இரண்டு மட்டுந்தான் ஒன்றுக்கொன்று எதிராய் இருக்க முடியும் என்னும் அளவுக்கு மார்க்சியத்தைக் கேவலமான மிதவாத முறையில் திரித்து விடுகிறார்கள்; மேலும் இந்த எதிர் நிலையையும்கூட கிஞ்சித்தும் உயிரில்லாத முறையில்தான் புரிந்து கொள்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகளை உதாரணங்களாய் எடுத்துக் கொண்டால், போர்த்துகீசிய, துருக்கிப் புரட்சிகள் இரண்டும் முதலாளித்துவப் புரட்சிகளே என்பதை நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும். ஆனால் இவை இரண்டில் எதுவும் ‘மக்கள்’ புரட்சியல்ல; ஏனெனில் எதிலும் மக்களில் பெருந் திரளானோர், மிகப் பெருவாரியானோர் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தமது சொந்தப் பொருளாதார, அரசியல் கோரிக்கைகளை எழுப்பிச் செயலூக்கத்துடன் சுயேச்சையாய் முன்வரவில்லை. இதற்கு மாறாக 1905-_07 ஆம் ஆண்டுகளின் ருஷ்ய முதலாளித்துவப் புரட்சி, போர்த்துகீசிய, துருக்கிப் புரட்சிகளுக்குச் சில நேரங்களில் கிடைத்தது போன்ற ‘பிரமாதமான’ வெற்றிகள் பெறவில்லை என்றாலுங்கூட, இது ‘மெய்யான மக்கள்’ புரட்சி என்பதில் ஐயமில்லை; ஏனெனில் பெருந் திரளான மக்கள், அவர்களில் பெரும்பான்மையினர், ஒடுக்குமுறையாலும் சுரண்டலாலும் நசுக்கப்பட்ட மிகவும் ‘அடிநிலை’ சமுதாயத் தொகுதியோர் சுயேச்சையாய்க் கிளர்ந்தெழுந்து தமது சொந்தக் கோரிக்கைகளின் முத்திரையை, ஒழிக்கப்பட்டு வந்த பழைய சமுதாயத்துக்குப் பதிலாய் ஒரு புதிய சமுதாயத்தைத் தமது சொந்த வழியில் கட்டியமைப்பதற்கான தமது முயற்சிகளின் முத்திரையை இப்புரட்சியின் போக்கு அனைத்திலும் பதித்தனர்.
ஐரோப்பாவில் 1871_ல் கண்டத்து நாடு எதிலும் பாட்டாளி வர்க்கம் மக்களில் பெரும்பான்மையாய் இருக்கவில்லை. ‘மக்கள்’ புரட்சியானது, பெரும்பான்மையோரை மெய்யாகவே தன் போக்கிலே இழுத்துச் செல்லும் புரட்சியானது பாட்டாளி வர்க்கம், விவசாயிகள் ஆகிய இரு பகுதியோரையும் தன்னுள் கொண்டதாய் இருந்தால்தான் இவ்வாறு ‘மக்கள்’ புரட்சியாய் இருந்திருக்க மடியும். இவ்விரு வர்க்கங்களையும் ஒடுக்கியும் நசுக்கியும் சுரண்டியும் வருகிறது என்பதால் இரண்டும் ஒன்றிணைக்கப்படுகின்றன. இந்தப் பொறியமைவை நொறுக்குவது, இதை அழித்தொழிப்பது மெய்யாகவே ‘மக்களுக்கு’, அவர்களில் பெரும்பான்மையோருக்கு, தொழிலாளர்களுக்கும் பெரும் பகுதி விவசாயிகளுக்கும் நலம் பயக்கிறது என்பதுதான், ஏழை விவசாயிகள், பாட்டாளிகளின் சுதந்திரமான கூட்டணிக்கு “முன் நிபந்தனையாகும்’’. இது போன்ற கூட்டணி இல்லாதவரை ஜனநாயகம் நிலையற்றதாகவே இருக்கும்; சோஷலிச மாற்றம் ஏற்படுவது சாத்தியமல்ல.
பாரிஸ் கம்யூன் இத்தகைய கூட்டணியை நோக்கி மெய்யாகவே நடை போட்டது என்பது பிரசித்தமானது. ஆனால் பல உள்நாட்டு, வெளிநாட்டுக் காரணங்களால் அது தனது குறிக்கோளை வந்தடைய முடியாமற் போய்விட்டது.
ஆகவே மார்க்ஸ் ‘மெய்யான மக்கள் புரட்சி’ குறித்துப் பேசுகையில் குட்டி முதலாளித்துவப் பகுதியோரின் தனி இயல்புகளைச் சிறிதும் உதாசீனம் செய்யாமல் (இவர்களைப் பற்றி அவர் நிறையவும் அடிக்கடியும் பேசினார்) ஐரோப்பாவில் 1871_ல் கண்டத்து நாடுகள் மிகப் பெருவாரியானவற்றில் வர்க்கங்களுடைய பலத்தின் ஒப்புநிலையைத் துல்லியமாய்க் கணக்கில் எடுத்துக் கொண்டார். மறுபுறத்தில் அவர் அரசுப் பொறியமைவை ‘நொறுக்குவது’ தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகிய இருசாராரின் நலன்களுக்கும் அவசியமென்று, இவர்களை இது ஒன்றுபடுத்துகிறதென்று, ‘புல்லுருவியை’ அகற்றி விட்டு அதனிடத்தில் புதிய ஒன்றை அமைத்திடும் பொதுவான பணியை இது இந்த இருசாரார் முன்னும் வைக்கிறதென்று கூறினார்.
அமைத்திட வேண்டிய இந்தப் புதிய ஒன்று எது?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

அரசும் புரட்சியும் Copyright © 2014 by jayend16; லெனின்; and Vladimir Ilyich Lenin is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book