"

“கம்யூனானது நாடாளுமன்ற உறுப்பாயில்லாமல் செயலாற்றும் உறுப்பாய், ஒருங்கே சட்டமன்றமாகவும் நிர்வாகக் குழுவாகவும் செயல்படும் உறுப்பாய்த் திட்டமிடப்பட்டது’’ என்று மார்க்ஸ் எழுதினார்.
“…ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர், நாடாளுமன்றத்தில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களை அடக்கியொடுக்குவதென [க்ஷிமீக்ஷீ-uஸீபீ க்ஷ்மீக்ஷீtக்ஷீமீtமீஸீ] மூன்று அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு தரம் தீர்மானிப்பதற்குப் பதிலாய், அனைத்து மக்கள் வாக்குரிமையானது கம்யூன்களாய் வகுக்கப் பெற்ற மக்களுக்கு _ எந்த ஒரு முதலாளியும் தனது தொழிலுக்குத் தொழிலாளர்களையும் ஃபோர்மன்களையும் கணக்கர்களையும் தேடிக் கொள்ள தனியார் வாக்குரிமை பணியாற்றுகிறதல்லவா, அது போல _ பணியாற்ற வேண்டும்.’’
நாடாளுமன்ற முறை குறித்து 1871_ல் அளிக்கப் பெற்ற சிறப்பு மிக்க இந்த விமர்சனமுங்கூட, வெகுவாய் மலிந்து விட்ட சமூக-தேசியவெறியின் காரணமாகவும் சந்தர்ப்பவாதத்தின் காரணமாகவும் இப்போழுது மார்க்சியத்தின் ‘மறக்கப்பட்ட வாசகங்களில்’ ஒன்றாகிவிட்டது. அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பதையே தொழிலாய்க் கொண்டோரும், பாட்டாளி வர்க்கத்துக்குத் துரோகம் புரிவோரும், தற்காலத்துச் ‘செயல்முறை’ சோஷலிஸ்டுகளும் நாடாளுமன்ற முறை பற்றிய எல்லா விமர்சனத்தையும் அராஜகவாதிகளிடத்தே விட்டுவைத்து விட்டனர். இந்த அதிசயமான காரணத்தால் நாடாளுமன்ற முறை பற்றிய எல்லா விமர்சனத்தையுமே அவர்கள் ‘அராஜகவாதமென’ பறைசாற்றுகிறார்கள்!! ‘முன்னேறிய’’ நாடாளுமன்ற நாடுகளைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர், ஷெய்டெமன்களையும் டேவிட்களையும் லெகின்களையும் செம்பாக்களையும் ரெனொடேல்களையும் ஹேண்டர்சன்களையும் வண்டர்வேல்டேகளையும் ஸ்டானிங்குகளையும் பிராண்டிங்குகளையும் பிஸ்ஸொலாட்டியையும் அவர் சகாக்களையும் போன்ற ‘சோஷலிஸ்டுகளிடம்’ அருவறுப்புக் கொண்டு அராஜகவாத சிண்டிகலிசத்துக்கு _ இது சந்தர்ப்பவாதத்தின் உடன் பிறந்த இரட்டையே ஆயினுங்கூட _ மேலும் மேலும் ஆதரவு தெரிவிப்பதில் வியப்பில்லை.
ஆனால் மார்க்சுக்குப் புரட்சிகர இயக்கவியலானது, பிளெஹானவும் காவுத்ஸ்கியும் ஏனையோரும் ஆக்கிக் கொண்டு விட்ட வெற்று ஜம்பமாகவோ விளையாட்டுக் கிலுகிலுப்பையாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை ‘பன்றித் தொழுவமே’ ஆயினுங்கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ள, முக்கியமாய் நிலைமை புரட்சிகரமானதாய் இல்லை என்பது தெளிவாய்த் தெரியும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் திராணியற்றதாய் இருந்ததென்பதற்காக அராஜகவாதத்திடமிருந்து தயவு தாட்சண்யமின்றி முறித்துக் கொள்ள மார்க்சுக்குத் தெரிந்திருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து விமர்சிக்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது.
ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டுமெனச் சில ஆண்டுகளுக்கு ஒரு தரம் தீர்மானிப்பதே முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் மெய்யான சாரப் பொருள் _ நாடாளுமன்ற -அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட முடியரசுகளில் மட்டுமின்றி, மிகவும் ஜனநாயகமான குடியரசுகளிலுங்கூட இதுவேதான் நிலைமை.
அரசு குறித்த பிரச்சனையைப் பரிசீலிப்போமாயின், இந்தத் துறையில் பாட்டாளி வர்க்கத்தின் முன்னுள்ள பணிகளின் கண்ணோட்டத்தில் அரசுக்குரிய நிறுவனங்களில் ஒன்றாகிய நாடாளுமன்ற முறையைப் பரிசீலிப்போமாயின் நாடாளுமன்ற முறையை விட்டொழிக்கும் வழி என்ன? நாடாளுமன்ற முறையைத் தவிர்ப்பது எப்படி?
மறுபடியும் கூறுகிறோம்: கம்யூனை ஆராய்ந்து மார்க்ஸ் எடுத்துரைத்த படிப்பினைகள் அப்படி அடியோடு மறக்கப்பட்டு விட்டதால், இன்றைய ‘சமூக- ஜனநாயகவாதியால்’ (அதாவது, சோஷலிசத்தின் இன்றைய துரோகியால்) நாடாளுமன்ற முறை பற்றிய அராஜகவாத அல்லது பிற்போக்கு விமர்சனத்தைத் தவிர்த்த வேறு எந்த விமர்சனத்தையும் உண்மையில் புரிந்து கொள்ள முடிவதில்லை.
நாடாளுமன்ற முறையை விட்டொழிப்பதானது பிரதிநிதித்துவ உறுப்புக்களையும் தேர்தலையுமே விட்டொழிப்பதாகாது. பிரதிநிதித்துவ உறுப்புக்கள் வெறும் வாய்ப்பேச்சுக் கூடங்களாய் இருப்பதை மாற்றி அவற்றைச் ‘செயலாற்றும்’ உறுப்புக்களாக்க வேண்டுமென்பதே இதன் பொருள். ‘கம்யூனானது நாடாளுமன்ற உறுப்பாயில்லாமல் செயலாற்றும் உறுப்பாய், ஒருங்கே சட்டமன்றமாகவும் நிர்வாகக் குழுவாகவும் செயல்படும் உறுப்பாய்த் திட்டமிடப்பட்டது.’
‘நாடாளுமன்ற உறுப்பல்ல, செயலாற்றும் உறுப்பு’ _ தற்கால நாடாளுமன்றத்தினருக்கும் சமூக- ஜனநாயகத்தின் நாடாளுமன்றச் ‘செல்லப் பிள்ளைகளுக்கும்’ இது சரியான சவுக்கடி! அமெரிக்கா முதல் சுவிட்சர்லாந்து வரை, பிரான்ஸ் முதல் பிரிட்டன், நார்வே வரை இவ்வாறு எந்த நாடாளுமன்ற நாட்டை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்நாடுகளில் எல்லாம் ‘அரசுக்குரிய’ மெய்யான வேலை திரைக்குப் பின்னால் நடத்தப்படுகிறது; இலாகாக்களும் அமைச்சகச் செயலகங்களும் படைத் தலைமையகங்களும் இதை நடத்துகின்றன. ‘பொது மக்களை’ ஏய்ப்பதற்கென வாய்ப்பேச்சுப் பேசுவதே நாடாளுமன்றத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணி. இதுவே உண்மை என்பதை முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசாகியுள்ள ருஷ்யக் குடியரசுங்கூட புலப்படுத்துகிறது _ மெய்யான நாடாளுமன்றம் ஒன்றை இக்குடியரசு நிறுவிக் கொள்ளும் முன்னரே கூட நாடாளுமன்ற முறையின் இந்தக் கேடுகள் யாவும் உடனடியாகவே வெளிப்பட்டு விட்டன. கேடுகெட்ட குட்டி முதலாளித்துவ அற்பவாதத்தின் வீரர்களானோர் _ ஸ்கோபெலெவ்களையும் த்ஸெரெத்தேலிகளையும், செர்னோவ்களையும் அவ்க்சேன்தியெவ்களையும் போன்றோர்- அருவறுப்பு மிக்க முதலாளித்துவ நாடாளுமன்ற முறையிலே சோவியத்துகளையும் நச்சுப்படுத்தி அவற்றை வெறும் வாய்ப்பேச்சுக் கூடங்களாய் மாற்றுவதில் வெற்றியுங்கூட பெற்றுவிட்டனர். சோவியத்துகளில் ‘சோஷலிஸ்டு’ அமைச்சர்கள் வாய்வீச்சுக்களாலும் தீர்மானங்களாலும் நாட்டுப்புறத்து ஏமாளிகளை ஏய்த்து வருகிறார்கள். ஒருபுறம் சோஷலிஸ்டுப் புரட்சியாளர்களிலும் மென்ஷிவிக்குகளிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமானோருக்குப் பசையுள்ள, சிறப்புக்குரிய பதவிகளான ‘சன்மானங்கள்’ கிட்டும் பொருட்டும், மறுபுறத்தில் மக்களுடைய ‘கவனம்’ திசை திருப்பப்பட்டுக் ‘கவரப்படும்’ பொருட்டும் அரசாங்கத்தினுள் ஓயாத ஆள் மாற்றம் நடந்தேறுகிறது. இதற்கிடையில் அமைச்சகச் செயலகங்களும் படைத் தலைமையகங்களும் ‘அரசுக்குரிய’ வேலைகளை ‘நடத்துகின்றன.’
ஆளும் சோஷலிஸ்டுப் -புரட்சியாளர் கட்சியின் ஏடான தியேலொ நரோதா18 அண்மையில் ஒரு தலையங்கத்தில் _ ‘எல்லோருமே’ அரசியல் விபசாரத்தில் ஈடுபட்டிருக்கும் ‘உயர் குலத்து’ மாந்தரது ஒப்பிலா நேர்மையோடு _ ஒப்புக் கொண்டது: ‘சோஷலிஸ்டுகள்’ தலைமை தாங்கும் அமைச்சகங்களிலுங் கூட அதிகாரிகளாலான அமைப்பு எந்த மாற்றமுமின்றி அப்படியே இருக்கிறதென்றும், பழைய பாணியிலேயே வேலை செய்து புரட்சிகர நடவடிக்கைகளைத் ‘தங்குதடையின்றி’ சீர்குலைத்து வருகிறதென்றும் ஒப்புக் கொண்டது! இந்த ஒப்புதல் வாக்குமூலமின்றியே, அரசாங்கத்தில் சோஷலிஸ்டு-ப் புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் பங்கு கொள்வதன் நடைமுறை வரலாறே இதனை நிரூபிக்கவில்லையா? ஆயினும் அமைச்சரவையில் காடெட்டுகளுடைய சகவாசத்தால் செர்னோவ்களும் ருசானவ்களும் ஸென்ஸீனவ்களும் தியேலொ நரோதாவின் பிற ஆசிரியர்களும் இப்படி வெட்கங் கெட்டவர்களாகி ஏதோ அற்ப விவரத்தைக் குறிப்பிடுவது போல ‘தமது’ அமைச்சகங்களில் எதுவும் மாற்றமின்றி அப்படியே இருப்பதாய்க் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்!! கிராமப்புற ஏழை எளியோரை ஏய்க்கப் புரட்சிகர -ஜனநாயகச் சொல்லடுக்குகள், முதலாளிமார்கள் ‘மனம் மகிழ’ அதிகார வர்க்க ஆட்சியும் செயலகங்களுக்கு வழக்கமான இழுத்தடிப்பும் _ இதுதான் ‘நேர்மை மிக்க’ கூட்டு அமைச்சரவையின் சாராம்சம்.
முதலாளித்துவ சமுதாயத்தின் ஊழல் மலிந்த, நாற்றம் பிடித்த நாடாளுமன்ற முறைக்குப் பதிலாய், கம்யூனானது கருத்துச் சுதந்திரமும் விவாதச் சுதந்திரமும் ஏமாற்று வித்தையாய்ச் சீரழிந்துவிடாத உறுப்புக்களைத் தோற்றுவிக்கிறது. எப்படியெனில் நாடாளுமன்றத்தினர் தாமே வேலை செய்யவும், தாம் இயற்றும் சட்டங்களைத் தாமே செயல்படுத்தவும், உண்மையில் சாதிக்கப் பெற்ற பலன்களைத் தாமே சோதித்துப் பார்க்கவும், தம்மைத் தேர்ந்தெடுத்த தொகுதியோருக்கு நேரடியாகத் தாமே பொறுப்புக் கூறவும் வேண்டியதாகிறது. பிரதிநிதித்துவ உறுப்புக்கள் தொடர்ந்து நிலவுகின்றன; ஆனால் நாடாளுமன்ற முறை ஒரு தனிவகை அமைப்பாய், சட்டமியற்றுவதற்கும் செயல்படுத்துவதற்கும் இடையிலான உழைப்புப் பிரிவினையாய், பிரதிநிதிகளது தனிச் சலுகை நிலையாய் நிலவவில்லை. பிரதிநிதித்துவ உறுப்புக்கள் இல்லாமல் ஜனநாயகத்தை, பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையும் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால் நாடாளுமன்ற முறை இல்லாமல் ஜனநாயகத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியாது, கட்டாயம் பார்க்கவும் வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தை நாம் விமர்சித்துக் கண்டிப்பது வெறும் சொல் அளவிலான விமர்சனமாய் நின்று விடக் கூடாதெனில், முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டுமென்ற விருப்பம், மென்ஷிவிக்குகள், சோஷலிஸ்டு- புரட்சியாளர்கள் விவகாரத்திலும், மற்றும் ஷெய்டெமன்கள், லெகின்களின் விவகாரத்திலும், செம்பாக்கள், வண்டர்வேல்டேகளின் விவகாரத்திலும் இருப்பது போல தொழிலாளர்களுடைய வாக்குகளைக் கவருவதற்கான வெறும் ‘தேர்தல்’ முழக்கமாயிராது நமது திடமான உள்ளப் பூர்வமான விருப்பமாய் இருந்தால் கட்டாயம் நாம் இவ்வாறே செய்ய வேண்டும்.
கம்யூனுக்கும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும் அவசியமான அந்த அதிகாரிகளின் பணிகள் குறித்துப் பேசுகையில் மார்க்ஸ் அவர்களை ‘எந்த ஒரு முதலாளியின்’ ஊழியர்களுடன், அதாவது சாதாரண முதலாளித்துவத் தொழில் நிலையத்தின் ‘தொழிலாளர்கள், போர்மன்கள், கணக்கர்களுடன்’ ஒப்பிடுவது கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கதாகும்.
‘புதிய’ சமுதாயம் ஒன்றைத் தாமே கற்பனை சக்தியால் தோற்றுவித்துக் கொண்டார், அல்லது கண்டுபிடித்துக் கொண்டார் என்கிற பொருளில் மார்க்சிடம் கற்பனைவாதத்தின் சாயல் இம்மியும் கிடையாது. இல்லை, பழைய சமுதாயத்தின் உள்ளிருந்து புதிய சமுதாயம் பிறப்பதையும், முன்னது பின்னதாய் மாறிடும் வடிவங்களையும் இயற்கையான வரலாற்று நிகழ்ச்சிப்போக்காய் அவர் ஆராய்ந்தார். வெகுஜனப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான அனுபவத்தைப் பரிசீலித்து, அதனின்று நடைமுறைப் படிப்பினைகள் பெற முயன்றார். மாபெரும் புரட்சிகர சிந்தனையாளர்கள் எல்லாருமே ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய மாபெரும் இயக்கங்களின் அனுபவத்திலிருந்து தயக்கமின்றிக் கற்றறிந்து கொண்டது போலவே அவர் கம்யூனிலிருந்து ‘கற்றறிந்து கொண்டாரே’ அன்றி, (‘அவர்கள் போர் தொடங்கியிருக்கக் கூடாது’ என்று பிளெஹானவ் கூறியதைப் போலவோ, ‘வர்க்கமானது உரிய வரம்புக்கு உட்பட்டாக வேண்டும்’ என்று த்ஸெரெத்தேலி கூறியதைப் போலவோ) பகட்டுப் புலமை வாய்ந்த ‘ஞான உபதேசம்’ செய்ய முற்பட்டதில்லை.
உடனடியாகவும் எல்லா இடத்தும் முற்றாகவும் அதிகார வர்க்க ஆட்சியை அழித்தவிடுவது முடியாத காரியம். அது ஓர் ஆகாயக் கோட்டையே ஆகும். ஆனால் பழைய அதிகார வர்க்க இயந்திரத்தை உடனடியாகவே நொறுக்குவதும், எல்லா வகை அதிகார வர்க்க ஆட்சியையும் படிப்படியாய் ஒழித்திட வழிகோலும் புதிய இயந்திரத்தை உடனே அமைத்திடத் தொடங்குவதும் ஆகாயக் கோட்டை அல்ல, கம்யூனின் அனுபவமாகும்; புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்குரிய நேரடியான, உடனடியான பணி இது.
‘அரசு’ நிர்வாகத்தின் பணிகளை முதலாளித்துவம் எளிதாக்கிவிடுகிறது. ‘நாட்டாண்மை புரிவது’ விட்டொழிக்கப்படுவதும், யாவும் பாட்டாளி வர்க்கத்தினர் (ஆளும் வர்க்கமாய்) ஒழுங்கமையும் விவகாரமாகிவிடுவதும் இதனால் சாத்தியமாகிறது. இவ்வாறு ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம் சமுதாயம் அனைத்தின் பெயரில் ‘தொழிலாளர்களையும் போர்மன்களையும் கணக்கர்களையும்’ சம்பளத்துக்கு அமர்த்திக் கொள்ளும்.
நாம் கற்பனைவாதிகள் அல்ல. நிர்வாகம் அனைத்தையும், கீழ்ப்படிதல் அனைத்தையும் உடனடியாகவே விட்டொழித்து விடலாமென நாம் ‘கனவு காணவில்லை’. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்குள்ள கடமைகளைப் புரிந்து கொள்ளாததே இந்த அராஜகவாதக் கனவுகளுக்கு அடிப்படை. இவை மார்க்சியத்துக்கு முற்றிலும் புறம்பானவை. உண்மையில் மக்கள் வேறு விதமானோராய் மாறுகிற வரை சோஷலிசப் புரட்சியை ஒத்திப் போடுவதற்கே இவை வகை செய்கின்றன. இல்லை, மக்கள் தற்போது இருக்கும் இதே நிலையிலேயே, கீழ்ப்படிதலையும், மேற்பார்வையையும், ‘போர்மன்களையும், கணக்கர்களையும்’ விட்டொழிக்க முடியாதவர்களாயுள்ள மக்களது இதே நிலையிலேயே, நாம் சோஷலிசப் புரட்சி நடத்த விரும்புகிறோம்.
ஆனால் கீழ்ப்படிதலானது, சுரண்டப்படுவோரும் உழைப்பாளர் களுமானோர் அனைவரின் ஆயுதமேந்திய முன்னணிப் படைக்கு, அதாவது பாட்டாளி வர்க்கத்துக்குக் கீழ்ப்படிதலாய் இருத்தல் வேண்டும். அரசாங்க அதிகாரிகளது தனிவகை ‘நாட்டாண்மையை’ ‘போர்மன்கள், கணக்கர்கள்’ இவர்களது எளிய பணிகளாய் மாற்றுவதற்கு உடனடியாகவே, இத்தருணமே தொடங்கிவிட முடியும், தொடங்கவும் வேண்டும். இந்த எளிய பணிகள் ஏற்கனவே சராசரி நகரவாசியின் ஆற்றலுக்கு முற்றிலும் உட்பட்டவையே ஆனதால், ‘தொழிலாளர்களுக்குரிய சம்பளம்’ பெற்று இவற்றைத் திறம்படச் செய்ய முடியும்.
தொழிலாளர்களாகிய நாம் முதலாளித்துவம் ஏற்கனவே தோற்றுவித்திருப்பதன் அடிப்படையிலே பெருவீதப் பொருளுற்பத்தியை ஒழுங்கமைத்து நிறுவுவோம். தொழிலாளர்களான நம்முடைய சொந்த அனுபவத்தை ஆதாரமாய்க் கொண்டும், ஆயுதமேந்திய தொழிலாளர்களது அரசு அதிகாரத்தின் துணையுடன் கண்டிப்பான, உருக்கு உறுதி கொண்ட கட்டுப்பாட்டை நிலைநாட்டியும் இதனைச் செய்திடுவோம். அரசு அதிகாரிகளுடைய பாத்திரத்தைப் பொறுப்புள்ள, விலக்கப்படக் கூடிய, சாதாரணச் சம்பளம் பெறும் ‘போர்மன்களும், கணக்கர்களுமாய்’ இருந்து (எல்லா வகைகளையும் ரகங்களையும் தரங்களையும் சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்களது உதவியுடன் தான்) நமது உத்தரவுகளை நிறைவேற்றுவது மட்டுமான பாத்திரமாய்க் குறைத்துவிடுவோம். இதுவே நமக்குரிய பாட்டாளி வர்க்கக் கடமை. பாட்டாளி வர்க்கப் புரட்சியைச் சித்தி பெறச் செய்வதில் இதுவே நாம் செய்யத் தொடங்கக் கூடியதும் செய்யத் தொடங்க வேண்டியதும் ஆகும். பெருவீதப் பொருளுற்பத்தியின் அடிப்படையிலே அமைந்த இத்தகைய ஒரு துவக்கம் ஏற்படுமாயின், அதுவே அதிகார வர்க்கம் அனைத்தும் படிப்படியாய் ‘உலர்ந்து உதிர்ந்து விடுவதற்கு’ இட்டுச் செல்லும். மேலும் மேலும் எளிதாகி வரும் கண்காணிப்பு, கணக்கு வைப்பு வேலைகள் கிரமப்படி ஒவ்வொருவராலும் செய்யப்பட்டு, பிறகு நிலையான பழக்கமாகி, முடிவில் மக்களில் ஒரு தனிப் பகுதியோருக்குரிய தனிவகை வேலைகளாய் இருக்கும் நிலை மறைந்தொழிந்து விடும்படியான ஒழுங்கு முறை _ அடைப்புக் குறிகளிட்டுக் காட்டப்பட வேண்டியில்லாத ஒழுங்கு முறை, கூலியுழைப்பு அடிமை முறையின் சாயல் இம்மியும் இல்லாத ஒழுங்கு முறை _ படிப்படியாய்த் தோற்றுவிக்கப்படுவதற்கு இட்டுச் செல்லும்.
கடந்த நூற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகளில் வேடிக்கையான ஜெர்மன் சமூக -ஜனநாயகவாதி ஒருவர் அஞ்சல் பணித் துறையை சோஷலிசப் பொருளாதார அமைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாய்க் குறிப்பிட்டார். இது மிகவும் சரிதான். தற்போது அஞ்சல் பணித் துறை அரசு -முதலாளித்துவ ஏகபோக முறையில் அமைந்த தொழிலாய் இருந்து வருகிறது. ஏகாதிபத்தியமானது எல்லா டிரஸ்டுகளையுமே இதையொத்த நிறுவனங்களாகப் படிப்படியாய் மாற்றி வருகிறது. இவற்றில் அதே முதலாளித்துவ அதிகார வர்க்கம் தான், அளவு மீறிய வேலைப் பளுவுக்கும் பட்டினிக்கும் இலக்காகி அவதியுறும் ‘சாதாரண’ உழைப்பாளி மக்களுக்கு மேலானதாய் நிற்கிறது. ஆனால் சமூக நிர்வாகத்தின் கட்டமைவு ஏற்கனவே இவற்றில் தயாராய் இருக்கிறது. முதலாளிகளை நாம் வீழ்த்தி இந்தச் சுரண்டலாளர்களுடைய எதிர்ப்பை ஆயுதமேந்திய தொழிலாளர்களது இரும்புக்கரம் கொண்டு நசுக்கி, தற்கால அரசின் அதிகார வர்க்க இயந்திரத்தை நொறுக்கியதும், உன்னத முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கட்டமைவு, ‘புல்லுருவி’யிடமிருந்து விடுவிக்கப்பட்டு நம் கைக்குக் கிட்டிவிடும், ஒன்றுபட்ட தொழிலாளர்கள் தாமே இந்தக் கட்டமைவைத் திறம்பட இயங்கச் செய்ய முடியும். இத்தொழிலாளர்கள் தொழில்நுட்ப நிபுணர்களையும் போர்மன்களையும் கணக்கர்களையும் சம்பளத்துக்கு அமர்த்திக் கொள்வார்கள்; அவர்கள் எல்லோருக்கும், பொதுவாய் ‘அரசு’ அதிகாரிகள் எல்லோருக்கும் எப்படியோ அதேபோல, தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களையே தருவார்கள். எல்லா டிரஸ்டுகள் சம்பந்தமாகவும் உடனடியாகவே நிறைவேற்றப்பட்டதும் உழைப்பாளி மக்கள் சுரண்டலிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுவார்கள். ஏற்கனவே கம்யூனானது நடைமுறையில் செய்யத் தொடங்கியதைக் (குறிப்பாய் அரசை அமைத்திடுவது சம்பந்தமாய்) கணக்கில் எடுத்துக் கொண்டு வகுக்கப் பெற்ற பணி இது.
பொருளாதாரம் அனைத்தையுமே அஞ்சல் பணித் துறையைப் போல ஒழுங்கமைத்த, தொழில்நுட்ப நிபுணர்கள், போர்மன்கள், கணக்கர்கள், முற்றும் எல்லா அதிகாரிகளும் ‘தொழிலாளருக்குரிய சம்பளத்துக்கு’ அதிகமல்லாத சம்பளம் பெறச் செய்த, அனைத்தையுமே ஆயுதமேந்திய பாட்டாளி வர்க்கத்தின் கண்காணிப்பிலும் தலைமையிலும் இருத்த வேண்டும் _ இதுவே நமது உடனடிக் குறிக்கோள். இதுவே நமக்குத் தேவையான அரசும், பொருளாதார அடித்தளமும். நாடாளுமன்ற முறையை ஒழித்து, பிரதிநிதித்துவ உறுப்புக்களை விடாமல் பாதுகாக்கப் போவது இதுவே. இந்த உறுப்புக்களை முதலாளித்துவ வர்க்கம் ஆழ்த்திய இழிநிலையிலிருந்து உழைப்பாளி வர்க்கங்களை விடுவிக்கப் போவது இதுவே.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

அரசும் புரட்சியும் Copyright © 2014 by jayend16; லெனின்; and Vladimir Ilyich Lenin is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book