"

‘…தேசிய நிறுவன ஒழுங்கமைப்புப் பற்றிய சுருக்கமான உருவரையில் _ இந்த ஒழுங்கமைப்பை வளர்த்து விரிவாக்கக் கம்யூனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை _ மிகச் சிறிய கிராமத்துக்குங்கூட கம்யூன்தான் உரிய அரசியல் வடிவமாய் இருக்குமென்று அது மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது…’ கம்யூன்கள் பாரிசில் ‘தேசியப் பிரதிநிதிக் குழுவைத்’ தேர்ந்தெடுப்பதாய் இருந்தன.
‘…ஒரு சிலவே ஆயினும், மத்திய அரசாங்கத்திடம் இனியும் எஞ்சி இருக்கக்கூடிய முக்கியமான பணிகள் _ வேண்டுமென்றே திரித்துக் கூறப்பட்டுள்ளது போல _ ஒழித்துக் கட்டப்பட்டுவிட மாட்டா. மாறாக, கம்யூனுடைய, அதாவது முற்றிலும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களான அதிகாரிகளுக்கு அவை மாற்றப்படும்…
‘…தேசிய ஒற்றுமை குலைக்கப்பட்டுவிடாது; மாறாக, கம்யூன் அமைப்பால் அது ஒழுங்கமைக்கப்படும். இந்த ஒற்றுமையின் உருவகமாய் வேடம் தரித்து, ஆனால் தேசத்தைச் சாராமல் சுயோச்சையானதாகவும் அதற்கு மேம்பட்டதாகவும் இருக்க விரும்பிய அரசு அதிகாரம், தேசத்தின் உடலில் புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரம் ஒழிக்கப் படுவதன் மூலம் தேசிய ஒற்றுமை எதார்த்த உண்மையாக்கப்படும். பழைய அரசாங்க அதிகாரத்தின் வெறும் அடக்கு முறை உறுப்புக்கள் வெட்டியெறியப்பட்டு, அதேபோதில் அதன் நியாயமான பணிகள் சமுதாயத்தை விட மேம்பட்டதாய் நிற்க உரிமை கொண்டாடிய இந்த அதிகாரத்திடமிருந்து பிடுங்கப் பெற்று, சமுதாயத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களான ஊழியர்கள் வசம் மீட்டளிக்கப்படும்.’’
மார்க்சின் இந்தக் கருத்துரைகளைத் தற்கால சமூக -ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதிகள் புரிந்து கொள்ள எந்த அளவுக்குத் தவறிவிட்டார்கள் _மறுத்துவிட்டார்கள் என்றால் இன்னும் பொருத்தமாயிருக்கும் _ என்பதற்கு ஓடுகாலி பெர்ன்ஷ்டைனது ஹெரஸ்திராதிய புகழ் பெற்ற19 சோஷலிசத்தின் முதற்கோள்களும் சமூக -ஜனநாயகவாதிகளுடைய கடமைகளும் என்னும் புத்தகம் தெளிவான எடுத்துக்காட்டாகும். மார்க்சின் மேற்கூறிய வாசகம் குறித்துத்தான் பெர்ன்ஷ்டைன் எழுதினார்; “இதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை’’ இந்த வேலைத் திட்டம் “இதன் சாராம்சக் கூறுகள் யாவற்றிலும் புரூதோனின் கூட்டாட்சிக் கோட்பாட்டை மிகவும் ஒத்திருக்கிறது… மார்க்சுக்கும் ‘குட்டி முதலாளித்துவ’ புரூதோனுக்குமிடையே [சிலேடைப் பொருளில் தொனிக்க வேண்டுமென்று ‘குட்டி முதலாளித்துவ’ என்னும் சொல்லை பெர்ன்ஷ்டைன் மேற்கோள் குறிகளிட்டு உபயோகிக்கிறார்] ஏனைய யாவற்றிலும் எவ்வளவுதான் வேறுபாடு இருப்பினும், இந்த விவகாரங்களில், அவர்களுடைய வாத முறைகள் மிக மிக நெருங்கி வந்துவிடுகின்றன’’. நகராண்மைக் கழகங்களுடைய முக்கியத்துவம் அதிகரித்து வருவது மெய்தான் என்று பெர்ன்ஷ்டைன் மேலும் தொடர்ந்து எழுதுகிறார். இருப்பினும் “மார்க்சும் புரூதோனும் நினைக்கிற மாதிரி தற்கால அரசுகளை இப்படி அடியோடு கலைத்து [Auflosung] அவற்றின் ஒழுங்கமைப்பை இப்படி முற்றிலும் மாற்றுவதும் [Umwandlung] (கம்யூன்களால் அனுப்பப்பட்ட பிரதிநிதிகளாலான மாநில அல்லது மாவட்டச் சபைகளுடைய பிரதிநிதிகளைக் கொண்டு தேசிய சபை அமைக்கப்படும்படி), இதன் விளைவாய்த் தேசியப் பிரதிநிதித்துவத்துக்கான பழைய முறையை மறையச் செய்வதுமே ஜனநாயகத்தின் முதற் பணியாய் இருக்குமென்பது சந்தேகத்துக்குரியதாகவே எனக்குத் தோன்றுகிறது’’. (பெர்ன்ஷ்டைன், முதற்கோள்கள், ஜெர்மன் பதிப்பு, 1899, பக்கங்கள் 134, 136.)
“புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரத்தை ஒழிப்பது’’ பற்றிய மார்க்சின் கருத்தோட்டங்களைப் புரூதோனின் கூட்டாட்சிக் கோட்பாட்டுடன் போட்டுக் குழப்புவது முழுக்க முழுக்க அபாண்டமேயாகும்! ஆனால் இந்தக் குழப்படி ஏதோ தற்செயலாய் நிகழ்வதல்ல. ஏனெனில் மத்தியத்துவத்துக்கு எதிராய்க் கூட்டாட்சிக் கோட்பாடு குறித்து இங்கு மார்க்ஸ் பேசவேயில்லை, எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் செயல்படும் பழைய, முதலாளித்துவ அரசுப் பொறியமைவை நொறுக்குவது பற்றியே பேசுகிறார் என்பது எந்தச் சந்தர்ப்பவாதிக்கும் புலப்படாதுதான்.
இந்தச் சந்தர்ப்பவாதிக்குப் புலப்படுவதெல்லாம் குட்டி முதலாளித்துவ அற்பத்தனமும் ‘சீர்திருத்தவாதச்’ சக்தியும் மலிந்துவிட்ட சூழலில் தன்னைச் சுற்றிலும் தான் காண்பதுதான், அதாவது ‘நகராண்மைக் கழகங்கள்தான்’! பாட்டாளி வர்க்கப் புரட்சி குறித்துச் சிந்திக்கும் பழக்கத்தையே இந்தச் சந்தர்ப்பவாதி விட்டொழித்துவிட்டார்.
இது நகைக்கத்தக்கதே. ஆனால் இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவெனில் இந்த விவகாரத்தில் யாருமே பெர்ன்ஷ்டைனை எதிர்த்து வாதாடவில்லை. பலரும் பெர்ன்ஷ்டைனை எதிர்த்து வாதாடியிருக் கிறார்கள் _ முக்கியமாய் ருஷ்ய வெளியீடுகளில் பிளெஹானவையும் ஐரோப்பிய வெளியீடுகளில் காவுத்ஸ்கியையும் குறிப்பிடலாம். ஆயினும், இந்த விவகாரத்தில் மார்க்ஸை, பெர்ன்ஷ்டைன் திரித்துப் புரட்டியது குறித்து இவர்களில் எவரும் எதுவுமே கூறியதில்லை.
இந்தச் சந்தர்ப்பவாதி புரட்சிகர வழியில் சிந்திக்கவும் புரட்சி குறித்து நினைக்கவும் அறவே மறந்துவிட்டதால், அவர் ‘கூட்டாட்சிக் கோட்பாட்டை’ மார்க்சுக்குரியதாகக் கற்பித்துக் கூறுகிறார், அராஜகவாதத்தின் மூலவரான புரூதோனுடன் மார்க்சை இணைத்துக் குழப்புகிறார். மரபு வழுவாத மார்க்சியவாதிகள் என்றும் புரட்சிகர மார்க்சியத் தத்துவத்தின் காவலர்கள் என்றும் கூறிக் கொள்ளும் காவுத்ஸ்கியையும் பிளெஹானவையும் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் அவர்கள் மௌனம் சாதித்துவிடுகின்றனர்! மார்க்சியத்துக்கும் அராஜகவாதத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு குறித்து அளவு மீறிக் கொச்சையான கருத்துக்களை வெளியிடுவது காவுத்ஸ்கிவாதிகள், சந்தர்ப்பவாதிகள் ஆகிய இரு சாராருக்குமுரிய குணாதிசயமாய் இருப்பதற்கான மூல காரணங்களில் ஒன்று இங்கு அடங்கியுள்ளது. இதை நாம் பிற்பாடு திரும்பவும் விவாதிப்போம்.
கம்யூனுடைய அனுபவம் குறித்து மார்க்ஸ் கூறும் மேற்கண்ட கருத்துரைகளில் கூட்டாட்சிக் கோட்பாட்டின் சாயல் சிறிதும் காணப்படவில்லை. சந்தர்ப்பவாதி பெர்ன்ஷ்டைன் காணத் தவறும் அதே விவரத்தில் தான் மார்க்ஸ் புரூதோனுடன் உடன்பாடு கொண்டிருந்தார். பெர்ன்ஷ்டைன் அவர்களிடையே ஒற்றுமை இருக்கக் கண்ட விவரத்தில் மார்க்ஸ் புரூதோனுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.
தற்கால அரசு இயந்திரம் ‘நொறுக்கப்பட வேண்டும்’ என்பதே இருவருடைய நிலையும் _ இதில் மார்க்ஸ் புரூதோனுடன் உடன்பாடு கொண்டிருந்தார். இந்த விவரத்தில் மார்க்சியத்துக்கும் அராஜகவாதத்துக்கும் (புரூதோன், பக்கூனின் ஆகிய இருவரின் அராஜகவாதத்துக்கும்) இடையே கருத்து ஒன்றுமை இருப்பதைச் சந்தர்ப்பவாதிகளோ காவுத்ஸ்கிவாதிகளோ காண விரும்பவில்லை. ஏனெனில் இங்கிருந்து தான் அவர்கள் மார்க்சியத்திடமிருந்து விலகி ஓடினர்.
கூட்டாட்சிக் கோட்பாடு பற்றிய பிரச்சனையில்தான் மார்க்ஸ் புரூதோனுடனும் பக்கூனினுடனும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் (பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்). கூட்டாட்சிக் கோட்பாடு அராஜகவாதத்தின் குட்டி முதலாளித்துவக் கருத்துக்களிலிருந்து தர்க்க வழியில் இயல்பாய்ப் பெறப்படும் ஒன்று. மார்க்ஸ் மத்தியத்துவவாதி. மேலே தரப்பட்ட அவருடைய கருத்துரைகளில் மத்தியத்துவத்திலிருந்து எவ்விதத்திலும் அவர் விலகிச் சென்றுவிடவில்லை. அரசு பற்றிய அற்பத்தனமான ‘மூடபக்தியில்’ மூழ்கிக் கிடப்போரே முதலாளித்துவ அரசுப் பொறியமைவை அழிப்பது மத்தியத்துவத்தை அழிப்பதாகுமென நினைத்துத் தவறிழைக்க முடியும்!
பாட்டாளி வர்க்கத்தினரும் ஏழை விவசாயிகளும் அரசு அதிகாரத்தைத் தாமே மேற்கொண்டு, முற்றிலும் சுதந்திரமாய்த் தம்மைக் கம்யூன்களில் ஒழுங்கமைத்-துக் கொண்டு, மூலதனத்தைத் தாக்குவதிலும், முதலாளிகள் எதிர்ப்பை அடக்குவதிலும் தனியார் உடைமைகளாயிருக்கும் ரயில் பாதைகளையும் ஆலைகளையும் நிலத்தையும் இன்ன பிறவற்றையும் தேசம் அனைத்தின், சமுதாயம் முழுமையின் உடைமைகளாய் மாற்றுவதிலும் எல்லாக் கம்யூன்களுடைய செயலையும் ஒன்றுபடுத்திக் கொண்டால், அது மத்தியத்துவம் இல்லாமல் பிறகு என்ன? சிறிதும் முரணில்லாத ஜனநாயக மத்தியத்துவத்தோடு, பாட்டாளி வர்க்க மத்தியத்துவமும் இல்லாமல் பிறகு என்ன?
மனமுவந்த முறையிலான மத்தியத்துவம், கம்யூன்கள் தாமே மனமுவந்து ஒரு தேசமாய் ஒன்றிணைவது, முதலாளித்துவ ஆதிக்கத்தையும் முதலாளித்துவ அரசுப் பொறியமைவையும் அழித்திடுவதற்காகப் பாட்டாளி வர்க்கக் கம்யூன்கள் மனமுவந்து ஒன்றாய் ஒன்றிவிடுவது சாத்தியமே என்பதை பெர்ன்ஷ்டைன் நினைத்துக்கூடப் பார்க்க இயலாதவராய் இருக்கிறார். எல்லாக் குட்டி முதலாளித்துவ அற்பவாதிகளையும் போல பெர்ன்ஷ்டைன் மத்தியத்துவத்தை முற்றிலும் மேலிருந்தே, முற்றிலும் அதிகாரிகளாலும் இராணுவக் கும்பலாலும் மட்டுமே பலவந்தமாய்த் திணிக்கப்பட்டு நிலை நிறுத்தப்படும் ஒன்றாகவே கற்பனை செய்துகொள்கிறார்.
மார்க்ஸ் தமது கருத்துக்கள் திரித்துப் புரட்டப்படுமென முன்னறிந்து வைத்திருந்தாற் போல, கம்யூனானது தேசிய ஒற்றுமையை அழிக்க விரும்பிற்று, மத்திய அதிகாரத்தை ஒழிக்க விரும்பிற்று என்னும் குற்றச்சாட்டு மனமறிந்து வேண்டுமென்றே செய்யப்படும் ஏமாற்றாகுமெனத் தெளிவுபட வலியுறுத்தினார். வேண்டுமென்றே தான் மார்க்ஸ் ‘தேசிய ஒற்றுமை… ஒழுங்கமைக்கப்படும்’ என்று குறிப்பிட்டார். முதலாளித்துவ, இராணுவ, அதிகார வர்க்க மத்தியத்துவத்தை எதிர்த்து உணர்வு பூர்வமான, ஜனநாயக வழிப்பட்ட, பாட்டாளி வர்க்க மத்தியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆனால் கேட்க விரும்பாதவர்களைப் போன்ற டமாரச் செவிடர்கள் வேறு யாருமில்லை. அரசு அதிகாரம் அழிக்கப்பட வேண்டும், புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் இருப்பதை வெட்டியெறிய வேண்டும் என்பது தான் தற்கால சமூக- ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதிகள் கேட்க விரும்பாத உண்மையாகும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

அரசும் புரட்சியும் Copyright © 2014 by jayend16; லெனின்; and Vladimir Ilyich Lenin is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book