இந்த வாக்குவாதம் 1873_ல் நடைபெற்றது. புரூதோனியவாதிகளை23, “சுயாட்சியாளர்களை’ அல்லது “அதிகார எதிர்ப்பாளர்களை’ எதிர்த்து மார்க்சும் எங்கெல்சும் இத்தாலிய சோஷலிஸ்டு ஆண்டு வெளியீடு ஒன்றுக்குக் கட்டுரைகள் வழங்கினர். 1913_ஆம் ஆண்டில் தான் இந்தக் கட்டுரைகள் ஜெர்மன் மொழியில் Neue Zeit இல் வெளிவந்தன 24.
அரசியலை நிராகரிப்பதற்காக அராஜகவாதிகளைக் கிண்டல் செய்து மார்க்ஸ் எழுதினார்: “தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டம் புரட்சிகர வடிவங்களை ஏற்குமாயின், முதலாளித்துவ வர்க்கத்தாரின் சர்வாதிகாரத்துக்குப் பதிலாய்த் தொழிலாளர்கள் தமது புரட்சிகர சர்வாதிகாரத்தை நிறுவிக்கொண்டார்களாயின் அவர்கள் கோட்பாடுகளை இழிவுபடுத்திப் பயங்கரக் குற்றமிழைப்பவர்கள் ஆகிவிடுகிறார்கள். எப்படியென்றால் தமது ஆயுதங்களைத் துறந்து அரசை ஒழித்திடுவதற்குப் பதிலாய், அவர்கள் கேவலம் தமது அன்றாட அற்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் முதலாளித்துவ வர்க்கத்தாரது எதிர்ப்பை நசுக்குவதற்காகவும் அரசுக்குப் புரட்சிகரமான இடைக்கால வடிவம் ஒன்றை அளிக்கிறார்கள்….’’(Neue Zeit, மலர் 32, இதழ் 1, 1913-_14, பக்கம் 40.)25
அராஜகவாதிகளுக்கு மறுப்புக் கூறுகையில், இவ்வகையான அரசு “ஒழிப்பை’ மட்டுமே மார்க்ஸ் எதிர்த்துப் போராடினார்! வர்க்கங்கள் மறையும்போது அரசும் மறையும் அல்லது வர்க்கங்கள் ஒழிக்கப்படும்போது அரசும் ஒழிக்கப்படும் என்னும் கருத்தை அவர் எதிர்க்கவே இல்லை. அவர் எதிர்த்தது எல்லாம், தொழிலாளர்கள் ஆயுதப் பிரயோகத்தை, ஒழுங்கமைந்த பலாத்காரத்தை, அதாவது அரசை, “முதலாளித்துவ வர்க்கத்தாரது எதிர்ப்பை நசுக்குவதற்காகப்’ பயன்படுத்திக் கொள்வதற்குரிய அரசைக் கைவிட்டு விட வேண்டுமென்ற கூற்றைத்தான்.
அராஜகவாதத்துக்கு எதிரான தமது போராட்டத்தின் மெய்ப்பொருள் திரித்துப் புரட்டப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, பாட்டாளி வர்க்கத்துக்குத் தேவைப்படும் அரசு “புரட்சிகரமான இடைக்கால வடிவம்’ கொண்டதென்பதை மார்க்ஸ் தெளிவாய் வலியுறுத்திக் கூறினார். பாட்டாளி வர்க்கத்துக்குத் தற்காலிகமாகவே அரசு தேவைப்படுகிறது. அரசு ஒழிக்கப்படுவதென்ற குறிக்கோளைப் பொறுத்தமட்டில் நாம் அராஜகவாதிகளுடன் சிறிதும் கருத்து வேற்றுமை கொண்டதில்லை. இந்தக் குறிக்கோளை அடைவதில் சித்தி பெறுவதற்காக, சுரண்டலாளர்களுக்கு விரோதமாய் அரசு அதிகாரத்தின் கருவிகளையும் சாதனங்களையும் முறைகளையும் தற்காலிகமாய் நாம் உபயோகித்துக் கொண்டாக வேண்டுமென, வர்க்கங்களை அழிக்க ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் தற்காலிகச் சர்வாதிகாரம் எப்படி அவசியமோ அதே போல இதுவும் அவசியமென நாம் வற்புறுத்துகிறோம். அராஜகவாதிகளை எதிர்த்துத் தமது நிலையை எடுத்துரைக்க மார்க்ஸ் மிகக் கூர்மையான, மிகத் தெளிவான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்: முதலாளிகளுடைய ஆதிக்கத்தைக் கவிழ்த்ததும் தொழிலாளர்கள் “தமது ஆயுதங்களைத் துறந்துவிட’’ வேண்டுமா? அல்லது முதலாளிகளுடைய எதிர்ப்பை நசுக்குவதற்காகத் தமது ஆயுதங்களை அவர்களுக்கு எதிராக உபயோகிக்க வேண்டுமா? என்று கேட்கிறார். ஒரு வர்க்கம் பிறிதொன்றை எதிர்த்து முறையாய் ஆயுதங்களை உபயோகிப்பதென்பது அரசின் “இடைக்கால வடிவம்’ அல்லாது வேறு என்ன?
சமூக-_ஜனநாயகவாதியான ஒவ்வொருவரும் தன்னைத் தானே கேட்டுப் பார்க்கட்டும்: அராஜகவாதிகளுக்கு எதிரான வாக்குவாதத்தில் அரசு பற்றிய பிரச்சனையை அவர் இப்படியா எடுத்துரைத்து வந்துள்ளார்? இரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த அதிகார பூர்வமான மிகப் பெரும்பாலான சோஷலிஸ்டுக் கட்சிகள் இப்படியா எடுத்துரைத்து வந்துள்ளன?
எங்கெல்ஸ் இன்னும்கூட விவரமாகவும் ரஞ்சகமாகவும் இதே கருத்துக்களை விளக்குகிறார். முதலில் அவர் புரூதோனியவாதிகளுடைய குழப்படிக் கருத்துக்களை நையாண்டி செய்கிறார். புரூதோனியவாதிகள் தம்மை “அதிகார- எதிர்ப்பாளர்களாய்’ அழைத்துக் கொண்டவர்கள், அதாவது அவர்கள் எல்லா வகையான அதிகாரத்தையும், கீழ்ப்படிதலையும், ஆட்சியையும் நிராகரித்தவர்கள். ஓர் ஆலை அல்லது ரயில் அல்லது விரிகடலில் செல்லும் கப்பலை எடுத்துக் கொள்வோம் என்கிறார் எங்கெல்ஸ். இயந்திர சாதனங்களை உபயோகித்துக் கொள்வதையும் மிகப் பலரது முறையான ஒத்துழைப்பையும் அடிப்படையாய்க் கொண்ட சிக்கலான இந்தத் தொழில்நுட்ப நிலையங்கள் ஓரளவு கீழ்ப்படிதலும், ஆகவே ஓரளவு அதிகாரமும் அல்லது ஆட்சியும் இன்றி, இயங்க முடியாதென்பது தெளிவாய் விளங்கவில்லையா?
“…மிகவும் ஆவேசமான அதிகார -எதிர்ப்பாளர்களுக்கு எதிராய் நான் இந்த வாதங்களை எழுப்புகையில் எனக்கு அவர்கள் தரவல்ல ஒரேயொரு பதில் இதுதான்:’ ஓ, அது சரிதான், ஆனால் இங்கு நாங்கள் எங்கள் பிரதிநிதிகளுக்கு வழங்குவது அதிகாரம் அல்ல, பொறுப்புரிமையைத்தான் அளிக்கிறோம்!’ இந்த ஆட்கள் ஒரு பொருளின் பெயரை மாற்றுவதன் மூலம் அப்பொருளையே மாற்றி விடுவதாய் நினைத்துக் கொள்கிறார்கள்…’’26
இவ்விதம் அதிகாரம், சுயாட்சி ஆகியவை சார்புநிலைத் தொடர்களே என்பதையும், அவற்றின் பிரயோக அரங்கு சமுதாய வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் மாறுபடுகிறது என்பதையும், அவற்றைச் சார்பிலா முழு முதலானவையாய்க் கொள்வது அறிவுடைமையாகாது என்பதையும் விளக்கிவிட்டு, எங்கெல்ஸ் இயந்திர சாதனங்கள் பயன்படுத்தப்படும் அரங்கும் பெருவீதப் பொருளுற்பத்தியும் இடையறாது விரைவடைவதையும் குறிப்பிடுகிறார். பிறகு அதிகாரத்தைப் பற்றிய பொது விவாதத்திலிருந்து அரசெனும் பிரச்சனைக்குச் செல்கிறார்.
“சுயாட்சிக் கோட்பாட்டாளர்கள் வருங்கால சமுதாய அமைப்பானது பொருளுற்பத்தி நிலைமைகள் தவிர்க்க முடியாததாக்கும் வரம்புகளுக்குள் மட்டுமே அதிகாரம் இயங்க அனுமதிக்குமென்று சொல்வதோடு நின்றிருந்தார்களானால், அவர்களுடன் உடன்பாட்டுக்கு வர முடிந்திருக்கும். ஆனால் அதிகாரத்தை அவசியமாக்கும் உண்மைகளை எல்லாம் பார்க்காமலே கண்களைக் கெட்டியாய் மூடிக் கொண்டு ஆவேசமாய் இச்சொல்லை எதிர்த்துப் போராடுகிறார்கள்.
“அதிகார -எதிர்ப்பாளர்கள் அரசியல் அதிகாரத்தை எதிர்த்து, அரசை எதிர்த்து, கூச்சலிடுவதோடு நிறுத்திக் கொண்டால் என்ன? வருகிற சமுதாயப் புரட்சியின் விளைவாய் அரசும் அதனுடன் அரசியல் அதிகாரமும் மறைந்து விடுமென்று, அதாவது பொதுப் பணிகள் அவற்றின் அரசியல் குணத்தை இழந்து சமுதாய நலன்களைக் கண்காணித்துக் கொள்ளும் வெறும் நிர்வாகப் பணிகளாகி விடுமென்று எல்லா சோஷலிஸ்டுகளும் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதிகார_எதிர்ப்பாளர்கள் அரசியல் வழியிலான அரசினை, அதைப் பெற்றெடுத்த சமூக உறவுகள் அழிக்கப்படுவதற்கு முன்பே, ஒரே மூச்சில் உடனடியாக அழித்துவிட வேண்டுமெனக் கோருகிறார்கள். அதிகாரத்தை ஒழித்திடுவதே சமுதாயப் புரட்சியின் முதற் செயலாயிருக்க வேண்டுமெனக் கோருகிறார்கள்.
“இந்தக் கனவான்கள் எப்பொழுதாவது ஒரு புரட்சியைப் பார்த்திருக்கிறார்களா? புரட்சியைப் போல அதிகார ஆதிக்கம் செலுத்தும் எதுவுமே இருக்க முடியாது. துப்பாக்கிகளும் துப்பாக்கிக் குத்தீட்டிகளும் பீரங்கிகளும் கொண்டு _ இவை யாவுமே மிகக் கடுமையான அதிகார ஆதிக்கச் சாதனங்கள் _ ஒரு பகுதி மக்கள் எஞ்சிய பகுதியின் மீது தமது சித்தத்தைத் திணிக்கும் செயலே புரட்சி. வெற்றி பெறும் தரப்பு தனது படைபலம் பிற்போக்குவாதிகளிடத்தே உண்டாக்கும் குலைநடுக்க பயங்கரத்தின் மூலமாய்த் தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டாக வேண்டும். பாரிஸ் கம்யூன், முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு எதிராய் ஆயுதமேந்திய மக்களுடைய அதிகாரத்தைப் பிரயோகிக்காதிருந்தால் அதனால் ஒரு நாளுக்கு மேல் நீடித்திருக்க முடியுமா? அதிகாரத்தைப் பிரயோகித்ததென்று கண்டிப்பதற்குப் பதில் இந்த அதிகாரத்தை மிகச் சொற்பமாகவே உபயோகித்தது என்றல்லவா அதன் மீது குற்றம் சாட்ட வேண்டும்? ஆகவே இரண்டில் ஒன்றுதான் உண்மை: ஒன்று அதிகார -எதிர்ப்பாளர்கள் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள் _ அப்படியானால் அவர்கள் குழப்பம் உண்டாக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை; அல்லது அவர்கள் தெரிந்தே பேசுகிறார்கள் என்றால், பாட்டாளி வர்க்கத்தின் இலட்சியத்துக்குத் துரோகம் புரிகின்றனர். இரண்டில் எதுவாயினும், அவர்கள் பிற்போக்குக்குப் பணியாற்றுவோரே ஆவர்.’’ (பக்கம்39.)27
இந்தக் கருத்துரை குறிப்பிடும் பிரச்சனைகள் அரசு உலர்ந்து உதிருகையில் அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இருக்கும் உறவுநிலை சம்பந்தமாய்ப் பரிசீலிக்கப்பட வேண்டியவை (அடுத்த அத்தியாயம் இதற்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது). சமுதாயப் பணிகள் அரசியல் பணிகளிலிருந்து வெறும் நிர்வாகப் பணிகளாய் மாற்றப்படுதலும், “அரசியல் வழியிலான அரசுமே’ இப்பிரச்சனைகள். கடைசியில் குறிக்கப்பட்ட “அரசியல் வழியிலான அரசு’ என்னும் தொடர் குறிப்பாய்த் தவறான வழியில் அர்ததப்படுத்தப்படக் கூடியது. இத்தொடர் அரசு உலர்ந்து உதிரும் நிகழ்ச்சிப் போக்கைச் சுட்டிக்காட்டுகிறது: இந்த நிகழ்ச்சிப் போக்கின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், உலர்ந்து உதிர்ந்து கொண்டிருக்கும் அரசு அரசியல் தன்மையல்லாத அரசாய் அழைக்கப்படக் கூடியதாகி விடுகிறது.
திரும்பவும் எங்கெல்சின் இந்தக் கருத்துரையில் சிறப்பு முக்கியத்துவமுடையதாய் விளங்குவது, அராஜகவாதிகளை எதிர்த்து அவர் பிரச்சனையை எடுத்துரைக்கும் முறையே ஆகும். எங்கெல்சின் சீடர்களெனக் கூறிக் கொள்ளும் சமூக -ஜனநாயகவாதிகள் அராஜகவாதிகளை எதிர்த்து இப்பொருள் குறித்து 1873_ முதலாய் லட்சக்கணக்கான முறை வாதாடியிருக்கிறார்கள், ஆனால் மார்க்சியவாதிகள் வாதாடத்தக்க, வாதாட வேண்டிய முறையில் அவர்கள் வாதாடியதே இல்லை. அரசு ஒழிக்கப்பட வேண்டியது பற்றிய அராஜகவாதக் கருத்து குழப்படியானது, புரட்சிகரமல்லாதது _ இதுவே எங்கெல்சின் வாதம். புரட்சியை அதன் எழுச்சியிலும் வளர்ச்சியிலும், பலாத்காரம், அதிகாரம், ஆட்சி, அரசு ஆகியவை குறித்து அதற்குரிய பிரத்தியேகப் பணிகளுடன் பார்க்க அராஜகவாதிகள் தவறிவிடுகிறார்கள்.
தற்கால சமூக-_ஜனநாயகவாதிகள் அராஜகவாதத்தைப் பற்றி வழக்கமாய் கூறும் விமர்சனம் முற்றிலும் அவலமான குட்டி முதலாளித்துவ அற்பத்தனமாய்ச் சிறுமையுற்றுவிட்டது: “அரசை நாங்கள் அங்கீகரிக்கிறோம், ஆனால் அராஜகவாதிகள் அங்கீகரிப்பதில்லை!’ என்பதாகிவிட்டது. இத்தகைய அவலம், சிறிதளவேனும் சிந்தனை ஆற்றலும் புரட்சி மனோபாவமும் கொண்ட தொழிலாளர்களை அருவருப்புக் கொண்டு விலகி விடச் செய்வது இயற்கையே. எங்கெல்ஸ் கூறுவது முற்றிலும் வேறு. சோஷலிசப் புரட்சியின் விளைவாய் அரசு மறைந்துவிடும், எல்லா சோஷலிஸ்டுகளும் இதை ஒத்துக் கொள்கிறார்கள் என்று அவர் வலியுறுத்துகிறார். பிறகு புரட்சியெனும் பிரச்சனையைப் பிரத்தியேகமான பிரச்சனையாய்க் கொண்டு பரிசீலிக்கிறார். இந்தப் பிரச்சனையைத்தான் சந்தர்ப்பவாதம் காரணமாய் சமூக-_ஜனநாயகவாதிகள் வழக்கமாய்த் தட்டிக்கழித்து, இதனை அராஜகவாதிகளே “வகுத்துரைக்கும்’ வண்ணம் முற்றிலும் அவர்கள் கைக்கு விட்டு விடுகிறார்கள். எங்கெல்ஸ் அரசெனும் பிரச்சனையைப் பரிசீலிக்கையில், நேரே அதன் மைய விவகாரத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்: கம்யூனானது அரசினுடைய _ அதாவது ஆயுதம் தாங்கி ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தினுடைய _ புரட்சிகர ஆட்சியதிகாரத்தை இன்னும் அதிகமாய்ப் பிரயோகித்திருக்க வேண்டாமா என்று கேட்கிறார்.
புரட்சியின்போது பாட்டாளி வர்க்கத்துக்குள்ள ஸ்தூலமான பணிகள் குறித்த பிரச்சனையைத் தற்போது ஆதிக்கத்திலுள்ள அதிகாரபூர்வமான சமூக-_ஜனநாயகமானது அற்பவாத முறையில் ஏளனம் செய்து, அல்லது அதிகம் போனால் “வருங்காலம் இதைத் தெரியப்படுத்தும்’’ என்று குதர்க்கவாதம் பேசித் தட்டிக்கழித்து, வழக்கமாய்ப் புறக்கணித்துள்ளது. தொழிலாளர்களுக்குப் புரட்சிகரப் போதனையளிக்கும் பணியினை விட்டொழிக்கிறார்களென அராஜகவாதிகள் இத்தகைய சமூக-_ஜனநாயகவாதிகள் குறித்துக் கூறியது முற்றிலும் நியாயமே. வங்கிகள், அரசு இவை இரண்டும் குறித்துப் பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்? இதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மிகவும் ஸ்தூலமான முறையில் ஆய்ந்தறிவதற்காக, கடந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அனுபவத்தை எங்கெல்ஸ் பயன்படுத்திக் கொள்கிறார்.