அரசு பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களிலே மிகச் சிறப்பானதென இல்லையேல், மிகச் சிறப்பானவற்றுள் ஒன்றெனக் கொள்ளத்தக்கக் கருத்துரை 1875 மார்ச் 18_28 தேதியிட்டு பெபெலுக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதத்தின் பின்வரும் வாசகத்தில் காணப்படுகிறது. நமக்குத் தெரிந்த வரை இந்தக் கடிதம் பெபெலால் 1911_ல் வெளிவந்த தமது நினைவுக் குறிப்புகளின் (Aus meinem Leben) இரண்டாம் தொகுதியில் தான் வெளியிடப்பட்டது, அதாவது இக்கடிதம் எழுதியனுப்பப்பட்டதற்கு முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிற்பாடுதான் வெளியிடப்பட்டது என்பதை இங்கு நாம் இடைக்குறிப்பாய்ச் சொல்ல வேண்டும்.
மார்க்ஸ் முன்பு பிராக்கேயிற்கு 28 எழுதிய புகழ் பெற்ற கடிதத்தில் விமர்சனம் செய்யும் அதே கோத்தா வேலைத் திட்ட நகலை விமர்சித்து எங்கெல்ஸ், பெபெலுக்கு எழுதினார். குறிப்பாய் அரசு பற்றிய பிரச்சனை குறித்து எங்கெல்ஸ் எழுதினார்:
“…சுதந்திர மக்கள் அரசு என்பது சுதந்திர அரசாய் மாற்றப்பட்டிருக்கிறது. அதன் இலக்கண வழிப் பொருளில், சுதந்திர அரசு என்பது தனது குடிமக்கள் சம்பந்தமாய் சுதந்திரமாயுள்ள அரசாகும். ஆகவே எதேச்சதிகார அரசாங்கத்தைக் கொண்ட அரசாகும். அரசு பற்றிய வெறும் பேச்சையே _ குறிப்பாய், அரசெனும் சொல்லின் சரியான பொருளில் அரசாய் இருக்காத கம்யூனுக்குப் பிற்பாடு _ விட்டுவிட வேண்டும். சோஷலிச சமுதாய அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட பிறகு அரசு தானாகவே தேய்ந்து [sich auflost] மறைந்துவிடுமென்று புரூதோனுக்கு29 எதிரான புத்தகமும் பிற்பாடு கம்யூனிஸ்டு அறிக்கையும் தெள்ளத் தெளிவாய்க் கூறிய போதிலும் அராஜகவாதிகள் ‘மக்கள் அரசு’ என்பதனைக் குறிப்பிட்டுச் சலிப்பும் அருவருப்பும் ஊட்டத்தக்க அளவுக்கு ஓயாது அதனை நம் முகத்திலே எறிந்து வருகிறார்கள். அரசு என்பது இடைக்காலத்துக்கு மட்டுமே உரிய அமைப்பாகையால், போராட்டத்தில், புரட்சியில் வன்முறை மூலம் எதிராளிகளை அடக்கி வைப்பதற்குரிய அமைப்பாகையால், ‘சுதந்திர மக்கள் அரசு’ என்பதாய்ப் பேசுவது கிஞ்சித்தும் பொருளுடையதாகாது. பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு தேவையாயிருக்கும் வரையில், தனது எதிராளிகளை அடக்கி வைக்கும் பொருட்டே அல்லாமல் சுதந்திரத்தின் நலன்களுக்காக அதற்கு அரசு தேவைப்படவில்லை. சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமானதுமே அரசு அரசாய் இல்லாதொழிகிறது. ஆகவே எல்லா இடங்களிலும் அரசு என்பதற்குப் பதிலாய் “கம்யூன்’ என்னும் பிரெஞ்சு சொல்லுக்குப் பிரதியாய் அமையக்கூடிய “மக்கட் சமுதாயம்’ (Gemeinwesen) என்கிற நல்லதொரு பழைய ஜெர்மானியச் சொல்லை உபயோகிக்கலாமென நாங்கள் ஆலோசனை கூற விரும்புகிறோம். (ஜெர்மானிய மூலத்தில் பக்கங்கள் 321-_22.)
இந்தக் கடிதம், இதற்குச் சில வாரங்களுக்குப் பின்பு தான் மார்க்ஸ் எழுதிய ஒரு கடிதத்தில் (மார்க்சின் கடிதம் 1875 மே 5 ஆம் தேதியிடப்பட்டது) விமர்சிக்கப்பட்ட அதே கட்சி வேலைத் திட்டத்தைத் தான் குறிப்பிடுகிறது என்பதையும், அவ்வமயம் எங்கெல்ஸ் லண்டனில் மார்க்சுடன் வசித்து வந்தார் என்பதையும் மனதிற் கொள்ள வேண்டும். ஆகவே கடைசி வாக்கியத்தில் எங்கெல்ஸ் “நாங்கள்’ என்று குறிப்பிடுவதன் மூலம் தன் சார்பிலும் மற்றும் மார்க்சின் சார்பிலும் ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் தலைவருக்கு “அரசு’ என்னும் சொல்லை வேலைத் திட்டத்திலிருந்து எடுத்து விட்டு அதற்குப் பதில் “மக்கட் சமுதாயம்’ என்னும் சொல்லைக் கையாளும்படி ஆலோசனை கூறுகிறார் என்பதில் ஐயமில்லை.
சந்தர்ப்பவாதிகளுடைய வசதிக்காக வேண்டி பொய்யாய்த் திரித்துப் புரட்டப்பட்டுவிட்ட இன்றைய “மார்க்சியத்தின்’ தலைவர்களிடம், வேலைத்திட்டத்தில் இத்தகைய ஒரு திருத்தம் செய்ய வேண்டுமென்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டால் “அராஜகவாதம்’ என்பதாய் ஏக கூச்சல் அல்லவா எழுப்புவார்கள்!
அவர்கள் கூச்சல் எழுப்பட்டும். அது அவர்களுக்கு முதலாளித்துவ வர்க்கத்தாரிடமிருந்து புகழ்மாலைகள் பெற்றுத் தரும்.
நாம் நமது வேலையைச் செய்து செல்வோம். நம்முடைய கட்சியின் வேலைத் திட்டத்தில் திருத்தம் செய்கையில், உண்மையிடம் மேலும் நெருங்கிச் செல்லும் பொருட்டு, திரித்துப் புரட்டப்பட்டவற்றைக் களைந்தெறிந்து மார்க்சியத்தை மீட்டமைக்கவும் தொழிலாளி வர்க்கம் அதன் விடுதலைக்காக நடத்தும் போராட்டத்துக்குப் பிழையின்றி மேலும் சரியானபடி வழிகாட்டும் பொருட்டு, எங்கெல்ஸ், மார்க்சின் ஆலோசனையைத் தவறாமல் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கெல்ஸ், மார்க்சின் ஆலோசனையை எதிர்ப்பவர்கள் யாரும் போல்ஷிவிக்குகளிடையே இருக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஒரேயொரு சங்கடம் வேண்டுமானால் எழலாம் _ சொல்லைக் குறித்து ஒரு வேளை சங்கடம் எழலாம். ஜெர்மன் மொழியில் “மக்கட் சமுதாயம்’ என்று பொருள் படும் இரு சொற்கள் உள்ளன. இவை இரண்டில் தனியொரு மக்கட் சமுதாயத்தை அல்லாமல் மக்கட் சமுதாயங்களது கூட்டமைப்பை, அவற்றின் முழுமையையும் குறிக்கும் சொல்லை எங்கெல்ஸ் உபயோகித்தார். ருஷ்யனில் இது போன்ற ஒரு சொல் இல்லை. “கம்யூன்’ என்னும் பிரெஞ்சுச் சொல்லும் குறைபாடுகள் உடையதே என்றாலும், இதையே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கலாம்.
“கம்யூனானது அரசெனும் சொல்லின் சரியான பொருளில் அரசாய் இருக்கவில்லை’ _ தத்துவ வழியில் இது எங்கெல்ஸ் அளித்திடும் மிக முக்கிய நிர்ணயிப்பு. மேலே கூறப்பட்டுள்ளதற்குப் பிற்பாடு இந்த நிர்ணயிப்பு தெள்ளத் தெளிவாய் விளங்கும் ஒன்று. கம்யூனானது அரசாய் இருப்பது முடிவுற்றுக் கொண்டிருந்தது, ஏனெனில் அது பெரும்பான்மை மக்களையல்ல, சிறுபான்மையினரை (சுரண்டலாளர்களை) மட்டுமே அடக்க வேண்டியிருந்தது. முதலாளித்துவ அரசுப் பொறியமைவை அது நொறுக்கிவிட்டது. தனி வகை வன்முறை சக்திக்குப் பதிலாய் மக்கள் தாமே செயலரங்குக்கு வந்து விட்டனர். இவை யாவும் அரசெனும் சொல்லின் சரியான பொருளிலிருந்து விலகிச் செல்வதைக் குறிப்பவை ஆகும். கம்யூன் உறுதியாய் நிலை பெற்றிருந்தால், அரசுக்குரிய எல்லாச் சாயல்களுமே தாமாகவே “உலர்ந்து உதிர்ந்திருக்கும்’; அரசின் நிறுவனங்களைக் கம்யூன் “ஒழிக்க’ வேண்டியிருந்திருக்காது _ இந்நிறுவனங்கள் வேலையற்றனவாகி இயங்காது ஓய்ந்து போயிருந்திருக்கும்.
“அராஜகவாதிகள் ‘மக்கள் அரசு’ என்பதனை… நம் முகத்திலே எறிந்து வருகிறார்கள்.’’ யாவற்றுக்கும் மேலாய், பக்கூனினையும் ஜெர்மன் சமூக_-ஜனநாயகவாதிகள் மீது அவர் தொடுத்த தாக்குதல்களையும் மனதிற் கொண்டே எங்கெல்ஸ் இதைக் கூறுகிறார். “சுதந்திர மக்கள் அரசைப்’ போலவே “மக்கள் அரசும்’ அதே அளவுக்கு அபத்தமும், சோஷலிசத்திலிருந்து தடம் புரளுவதும் ஆகுமாதலால், இத்தாக்குதல்கள் நியாயமானவையே என்று எங்கெல்ஸ் ஒப்புக் கொள்கிறார். அராஜகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் சமூக_ஜனநாயகவாதிகளுடைய போராட்டத்தைச் சரியான பாதையிலே செலுத்தவும், இந்தப் போராட்டத்தைக் கோட்பாட்டு அடிப்படையில் பிழையற்றதாக்கவும், “அரசு’ பற்றிய சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை அதனிடமிருந்து அகற்றவும் எங்கெல்ஸ் முயன்றார். துரதிர்ஷ்டவசமாய் எங்கெல்சின் கடிதம் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு மூலையிலே முடக்கப்பட்டு விட்டது. இந்தக் கடிதம் வெளியிடப்பட்ட பிற்பாடும் கூட காவுத்ஸ்கி, எந்தத் தவறுகள் குறித்து எங்கெல்ஸ் எச்சரித்தாரோ அதே தவறுகளைத் தொடர்ந்து செய்து வந்தார்.
பெபெல் 1875 செப்டம்பர் 21_ஆம் தேதியிட்ட கடிதத்தில் எங்கெல்சுக்குப் பதிலளித்தார். இந்தக் கடிதத்தில் வேறு பலவற்றுடன்கூட, அவர் நகல் வேலைத்திட்டம் பற்றி எங்கெல்ஸ் கூறிய அபிப்பிராயத்தைத் தாம் “பூரணமாய் ஒத்துக் கொள்வதாகவும்’, விட்டுக் கொடுக்கும் மனோபாவத்திற்காக லீப்னெஹ்ட்டைத் தாம் கண்டித்ததாகவும் எழுதினார் (பெபெலின் நினைவுக்குறிப்புகள், ஜெர்மன் பதிப்பு, 2 ஆம் தொகுதி, பக்கம் 334). ஆனால் நமது குறிக்கோள்கள் என்னும் பெபெலின் பிரசுரத்தை எடுத்துக் கொள்வோமானால், அரசு பற்றிய முற்றிலும் தவறான கருத்துக்களை அதில் காண்கிறோம்.
“அரசானது… வர்க்க ஆதிக்கத்தை அடிப்படையாய்க் கொண்ட நிலை நீக்கப்பட்டு மக்கள் அரசாய் மாற்றப்பட வேண்டும்’’ (ஹிஸீsமீக்ஷீமீ ஞீவீமீறீமீ, ஜெர்மன் பதிப்பு, 1886, பக்கம் 14).
பெபெல் பிரசுரத்தின் ஒன்பதாவது (ஆம், ஒன்பதாவது) பதிப்பில் இது அச்சிடப்பட்டது! இப்படி விடாப்பிடியாய்த் திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வந்த அரசு பற்றிய சந்தர்ப்பவாதக் கருத்துக்கள் ஜெர்மன் சமூக_-ஜனநாயகவாதிகளைப் பிடித்துக் கொண்டுவிட்டதில், முக்கியமாய் எங்கெல்சின் புரட்சிகர விளக்கங்கள் ஜாக்கிரதையாய் மூலையில் முடக்கப்பட்டுவிட்டதாலும், வாழ்க்கை நிலைமைகள் யாவும் அவர்களை நெடுங்காலத்துக்குப் புரட்சியிலிருந்து “விலக்கி வைத்து’ இருந்ததாலும் இக்கருத்துக்கள் அவர்களைப் பீடித்துக் கொண்டுவிட்டதில் வியப்பில்லை.