சந்தர்ப்பவாதிகள் மார்க்சியத்தைக் கொச்சையாக்குதல்
சமுதாயப் புரட்சியின்பால் அரசுக்கும், அரசின்பால் சமுதாயப் புரட்சிக்குமுள்ள போக்கு பற்றிய பிரச்சனையிலும், மற்றும் பொதுவில் புரட்சி என்னும் பிரச்சனையிலும் இரண்டாவது அகிலத்தின் (1889_1914) தலைமையான தத்துவவாதிகளும் நூலாசிரியர்களும் மிகச் சொற்ப கவனமே செலுத்தினர். ஆனால் சந்தர்ப்பவாதம் படிப்படியாய் வளர்ந்து 1914_ல் இரண்டாவது அகிலம் தகர்ந்து விழுவதற்கு இட்டுச் சென்ற நிகழ்ச்சிப்போக்கின் மிகவும் குறிப்பிடத்தக்க விவரம் என்னவெனில், இந்த ஆட்களின் நேர் எதிரே இப்பிரச்சனை எழுந்தபோதுங்கூட இவர்கள் இதைத் தட்டிக் கழிக்க முயன்றனர் அல்லது கவனியாது ஒதுங்கினர்.
அரசுடன் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள்ள போக்கு பற்றிய பிரச்சனையைத் தட்டிக் கழித்ததன் விளைவாய் _ சந்தர்ப்பவாதத்துக்கு அனுகூலம் புரிந்து அதனை வளர வைத்த இந்தத் தட்டித் கழித்தலின் விளைவாய் _ மார்க்சியம் திரித்துப் புரட்டப்பட்டது என்றும், அறவே கொச்சையாக்கப்பட்டது என்றும் பொதுவில் கூறலாம்.
இந்த அவல நிகழ்ச்சிப்போக்கின் முக லட்சணத்தைச் சுருக்கமாகவேனும் குறிப்பிட்டுக் காட்டும் பொருட்டு, மார்க்சியத்தின் மிகப் பிரபல தத்துவவாதிகளான பிளெஹானவையும் காவுத்ஸ்கியையும் எடுத்துக் கொள்வோம்.