"

அவ்க்சேன்தியெவ், நி. தி. [Avksentyev, N.D.] (1878–1943) _ சோஷலிஸ்டு-புரட்சியாளர் தலைவர்களில் ஒருவர், அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர். முதல் உலகப் போரின் போது சமூக–தேசிய வெறியராய் இருந்தார். 1917 பிப்ரவரி முதலாளித்துவ–ஜனநாயகப் புரட்சிக்குப் பிறகு அனைத்து ருஷ்ய விவசாயிகள் பிரதிநிதிகளது சோவியத்தின் நிர்வாகக் குழுவின் தலைவரானார். இரண்டாவது கூட்டு இடைக்கால அரசாங்கத்தில் உள்நாட்டு அமைச்சராகவும், பிறகு எதிர்ப்புரட்சி நிறுவனமான ‘ருஷ்யக் குடியரசின் இடைக்கால சபையின்’ (பூர்வாங்க நாடாளுமன்றம்) தலைவராகவும் இருந்தவர். அக்டோபர் சோஷலிசப் புரட்சிக்குப் பிற்பாடு பல எதிர்ப்புரட்சிக் கலகங்களுக்கு ஏற்பாடு செய்தவர்.
எங்கெல்ஸ், பிரெடெரிக் [Engels, Frederick] (1820–1895) – விஞ்ஞானக் கம்யூனிசத்தின் மூலவர்களில் ஒருவர். சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் தலைவர், போதனாசிரியர். கார்ல் மார்க்சின் நண்பரும் போராட்டத் தோழரும் ஆவார்.
கார்னெலிசன், கிறிஸ்டியன் [Cornelissen,Christian] – டச்சு அராஜகவாதி, பி.அ. கிரப்போத்கினைப் பின்பற்றியவர். மார்க்சியத்தை எதிர்த்துப் போராடினார். முதல் உலகப் போரின்போது தேசிய வெறியர்.
காவுத்ஸ்கி, கார்ல் [Kautsky, Karl] (1854–1938) – ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சியின், இரண்டாவது அகிலத்தின் தலைவர்களில் ஒருவர்; தமது அரசியல் வாழ்க்கையின் தொடக்கப் பகுதியில் மார்க்சியவாதியாய் இருந்தவர்; பிற்பாடு மார்க்சியத்தைக் காட்டிக் கொடுத்தவர். சந்தர்ப்பவாதத்தின் மிகவும் அபாயகரமான, மிகவும் தீமையான வகைகளில் ஒன்றான மையவாத (காவுத்ஸ்கிவாத) நிலையின் சித்தாந்தவாதி. ஜெர்மன் சமூக–ஜனநாயகவாதிகளின் தத்துவார்த்த இதழான Die Neue Zeit இன் பதிப்பாசிரியர்.
முதல் உலக யுத்தத்தின் போது (1914–1918), காவுத்ஸ்கி மையவாதக் கொள்கையைப் பின்பற்றினார்; தமது சமூக–தேசியவெறிக் கொள்கையை சர்வதேசியத்தைப் பற்றிய வாய்வீச்சைக் கொண்டு மூடி மறைத்தார்.
அதீத ஏகாதிபத்தியம் என்பதான பிற்போக்குவாதத் தத்துவத்தை முன் வைத்தவர்.
கிரப்போத்கின், பி.அ. [Kropotkin, P.A.] (1842–1921) – அராஜகவாதத்தின் பிரபல தலைவர்களிலும் சித்தாந்தவாதிகளிலும் ஒருவர். முதல் உலகப் போரின் போது (1914–1918) தேசிய வெறியர். நாடு கடத்தப்பட்டுப் பல ஆண்டுகள் வெளிநாடுகளில் இருந்த பின் 1917-ல் ருஷ்யாவுக்குத் திரும்பினார். அவருடைய முதலாளித்துவக் கருத்தோட்டங்கள் இன்னும் மறையவில்லை என்றாலும், 1920-ல் ஐரோப்பியத் தொழிலாளர்களுக்கு வெளியிட்ட ஒரு கடிதத்தில், அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்டார்; சோவியத் ருஷ்யாவுக்கு எதிரான ஆயுதப்படைத் தலையீட்டைத் தடுக்கும்படி தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கிராவெ, ழான் [Grave, Jean] (1854-1939) – பிரெஞ்சுக் குட்டி முதலாளித்துவ சோஷலிஸ்டு, அராஜகவாதத்தின் ஒரு தத்துவவாதி. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அராஜக- சிண்டிக்கலிஸ்டு நிலையை ஏற்றார். முதல் உலகப்போரின் போது சமூக–தேசிய வெறியராய் இருந்தவர்.
கெட்டு, ழூல் [Guesde,Jules] (பேசில், மத்தியூ) (1854–1922) – பிரெஞ்சு சோஷலிஸ்டு இயக்கம், இரண்டாவது அகிலம் இவற்றின் அமைப்பாளர்கள், தலைவர்களில் ஒருவர். 1901-ல் கெட்டும் அவரைச் சேர்ந்தோரும் பிரான்சின் சோஷலிஸ்டுக் கட்சியை நிறுவினர். 1905-ல் இக்கட்சி சீர்திருத்தவாத பிரெஞ்சு சோஷலிஸ்டுக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய பிரெஞ்சு சோஷலிஸ்டுக் கட்சி ஆயிற்று. பிரான்சில் மார்க்சியக் கருத்துக்களைப் பரப்பவும், சோஷலிஸ்டு இயக்கத்தை வளர்க்கவும் கெட்டு தீவிரமாகப் பணியாற்றியவர்.
வலதுசாரி சோஷலிஸ்டுகளுடைய கொள்கைகளை எதிர்த்துப் போராடுகையில், தத்துவார்த்தப் பிரச்சனைகளிலும் போர்த்தந்திரப் பிரச்சனைகளிலும் குறுங்குழுவாத முறைகளை அனுசரித்துப் பல தவறுகள் புரிந்தார். முதல் உலகப்போர் ஆரம்பமானதும் சமூக–தேசியவெறி நிலையை ஏற்று, பிரெஞ்சு முதலாளித்துவ அரசாங்க உறுப்பினர் ஆனார்.
குகல்மன், லுத்விக் [Kugelmann, Ludwig] (1830–1902) – ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதி, கார்ல் மார்க்சின் நண்பர். 1848–49ல் ஜெர்மனியில் நடைபெற்ற புரட்சியில் பங்கெடுத்துக் கொண்டவர். முதலாவது அகிலத்தின் உறுப்பினர்.
கே, அ.யூ. [Ghe, A.Y.] (1879–1919) – ருஷ்ய அராஜகவாதி. அக்டோபர் சோஷலிசப் புரட்சிக்குப் பின் சோவியத் ஆட்சியை ஆதரித்தார்.
கேரென்ஸ்கி, அ.பி. [Kerensky, A.F] (1881–1970) – சோஷலிஸ்டுப்-புரட்சியாளர் கட்சியின் உறுப்பினர். 1917-ல் பிப்ரவரி முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிக்குப் பின் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தில் நீதி, யுத்தம், கடற்படை ஆகியவற்றுக்கான அமைச்சராகவும் பிற்பாடு தலைமை அமைச்சராகவும், தலைமைத் தளபதியாகவும் இருந்தார். அக்டோபர் சோஷலிசப் புரட்சிக்குப் பின் சோவியத் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்டார்; 1918-ல் வெளிநாடு போய்விட்டார்.
கோல்ப், வில்ஹெல்ம் [Kolb, Wilhelm] (1870–1918) – ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதி, கடைக்கோடியான சந்தர்ப்பவாதி, திருத்தல்வாதி.
செம்பா, மார்செல் [Sembat, Marcel] (1862-1922) – பிரெஞ்சு சோஷலிஸ்டுக் கட்சியின் சீர்திருத்தவாதத் தலைவர், பத்திரிகையாளர். முதல் உலகப் போரின் போது சமூக -தேசியவெறியர். 1914 ஆகஸ்டிலிருந்து 1917 செப்டம்பர் வரை பிரான்சின் ஏகாதிபத்திய ‘தேசியப் பாதுகாப்பு அரசாங்கத்தில்’ பொது மராமத்து அமைச்சராய் இருந்தவர். ஆன்டான்ட் நாடுகளின் சோஷலிஸ்டுகளை சமூக–தேசியவெறிக் கொள்கையின் அடிப்படையில் ஐக்கியப்படுத்த 1915 பிப்ரவரியில் கூட்டப்பட்ட லண்டன் மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டார்.
செர்னோவ், வி.மி. [Chernov, V. M.] (1876–1952) – சோஷலிஸ்டு-புரட்சியாளர் கட்சியின் தலைவர்களிலும் தத்துவவாதிகளிலும் ஒருவர். முதல் உலகப் போரின் போது இடதுசாதிப் பதப் பிரயோகங்களில் ஈடுபட்டார் என்றாலும், உண்மையில் சமூக–தேசியவெறி நிலைகளையே அனுசரித்தார். 1917 மே-ஆகஸ்ட் மாதங்களில் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தில் விவசாய மந்திரியாக இருந்தார்; நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமான நிலத்தை எடுத்துக் கொண்ட விவசாயிகளைக் கொடுமையாய் அடக்கும் கொள்கையைப் பின்பற்றினார்.
ஸென்ஸீனோவ், வி. மி. [Zenzinov, V. M] (பிறப்பு-1881) – சோஷலிஸ்டு-புரட்சியாளர் கட்சியின் தலைவர்களில் ஒருவர். இக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர். முதல் உலகப் போரின் போது “தாயகப் பாதுகாப்பு’’ போர்த் தந்திரத்தை ஆதரித்தவர். 1917-ல் பெத்ரொகிராத் சோவியத்தின் செயற்குழு உறுப்பினரானார். முதலாளித்துவ வர்க்கத்துடன் கூட்டு சேர வேண்டும் என்றார். சோஷலிஸ்டு – -புரட்சியாளர்களுடைய ஏடான தியேலொ நரோதாவின் ஆசிரியர்களில் ஒருவர்.
ஸ்கோபெலெவ், மி.இ. [Skobelev, M. I.] (1885–1939) – 1903 முதலாய் மென்ஷிவிக்காய் சமூக–ஜனநாயக இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டவர். முதல் உலகப்போரின் போது மையவாத நிலையை அனுசரித்தார். 1917 பிப்ரவரி முதலாளித்துவ- ஜனநாயகப் புரட்சிக்குப் பின் பெத்ரொகிராத் சோவியத்தின் துணைத்தலைவரும், முதல் அமர்வினது மத்தியச் செயற்குழுவின் துணைத்தலைவரும் ஆனார் – 1917 மே யிலிருந்து ஆகஸ்டு வரை முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தில் தொழிலாளர் துறை அமைச்சராய் இருந்தார்.
ஸ்டானிங்கு, தொர்வால்டு [Stauning, Thorwald] (1873-1942) – டச்சு அரசுப் பிரமுகர்; டச்சு சமூக–ஜனநாயகக் கட்சி, இரண்டாவது அகிலம் இவற்றின் வலதுசாரித் தலைவர்களில் ஒருவர்; கட்டுரையாளர். முதல் உலகப்போரின் போது சமூக–தேசிய வெறியர். 1916–20ல் டச்சு முதலாளித்துவ அரசாங்கத்தில் இலாகா இல்லாத அமைச்சர். பிறகு சமுக–ஜனநாயக அரசாங்கத்துக்கும், முதலாளித்துவத் தீவிரவாதிகள், வலதுசாரி சமூக–ஜனநாயகவாதிகளின் கூட்டு அரசாங்கத்துக்கும் தலைமை தாங்கினார்.
ஸ்டிர்னர், மாக்ஸ் [Stirner, Max] (1806–1856) – ஜெர்மன் தத்துவவியலாளர், முதலாளித்துவத் தனித்துவவாதம், அராஜகவாதம் ஆகியவற்றின் சித்தாந்தவாதி.
ஸ்துரூவே, பி.பெ. [Struve, P. B] (1870–1944) – முதலாளித்துவப் பொருளியலாளர், கட்டுரையாளர், காடெட்டுக் கட்சியின் தலைவர்களில் ஒருவர். 1890-ஆம் ஆண்டுகளில் ‘சட்டப்பூர்வ மார்க்சியத்தின்’ பிரபல பிரதிநிதிகளில் ஒருவர். மார்க்சின் பொருளாதார, தத்துவவியல் தத்துவங்களுக்குத் ‘திருத்தங்களை’ முன்வைத்தார்; மார்க்சியத்தையும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் முதலாளித்துவ நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முயன்றார்.
ஸ்பென்சர், ஹெர்பர்ட் [Spencer, Herbert] (1820–1903) – ஆங்கிலேயத் தத்துவவியலாளர், உளவியலாளர், சமூகவியலாளர், பிரபல நேர்காட்சிவாதி. சமுதாயத்தைப் பற்றிய அங்ககத் தத்துவம் எனப்படுவதன் மூலவர்களில் ஒருவர்.
ஷெய்டெமன், ஃபிலிப் [Scheidemann, Philip] (1865–1939) – ஜெர்மன் சமூக–ஜனநாயகக் கட்சியின் அதீத வலதுசாரி சந்தர்ப்பவாதப் பிரிவின் ஒரு தலைவர். முதல் உலகப்போரின் போது சமூக–தேசிய வெறியர். ஜெர்மனியில் 1918-ல் நடைபெற்ற நவம்பர் புரட்சியின் போது, மக்கள் பிரதிநிதிகள் அவை எனப்பட்ட அவையின் உறுப்பினராகினார். ஸ்பார்ட்டகஸ் நிறுவனத்தைச் சேர்ந்தோருக்கு எதிராகப் படு கொலைச் செயல்களை ஊக்குவித்தார். 1919 பிப்ரவரியிலிருந்து ஜூன் வரை வெய்மர் குடியரசின் கூட்டு அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கினார். 1918-க்கும் 1921-க்கும் இடையில் ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கொடிய முறையில் நசுக்க ஏற்பாடு செய்தோரில் ஒருவர். பிறகு முனைப்பான அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொண்டார்.
ஹெகல், கியோர்கு வில்ஹெல்ம் ஃபிரீட்ரிஹ் [Hege, Georg] (1770–1831) – மாபெரும் ஜெர்மன் தத்துவவியலாளர், புறநிலைக் கருத்துமுதல்வாதி, ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கத்தின் சித்தாந்தவாதி. இயக்கவியலை மிக விரிவான, ஆழமான முறையில் செப்பம் செய்தார், இது தத்துவவியலுக்கு ஹெகல் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொண்டு.. ஹெகலின் இயக்கவியல், இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் தத்துவார்த்தத் தோற்றுவாய்களில் ஒன்றாகியது. எனினும் ஹெகலின் பொதுவான பழமைவாத இயக்க- மறுப்புத் தத்துவவியலுடன் நெருங்கிப் பிணைப்புக் கொண்டிருந்த அவருடைய இயக்கவியல், கருத்து முதல்வாதத் தன்மையதாய் இருந்தது.
ஹேண்டர்சன், ஆர்தர் [Henderson, Arthur] (1863–1935) – பிரிட்டிஷ் தொழிற் கட்சி, பிரிட்டிஷ் தொழிற்சங்க இயக்கம் இவற்றின் ஒரு தலைவர். முதல் உலகப் போரின் போது சமூக–தேசிய வெறியராய் இருந்தார். பிரிட்டிஷ் முதலாளித்துவ அரசாங்கங்களில் சிற்சில சமயம் மந்திரிப்பதவி வகித்தவர்.
ஹைண்ட்மன், ஹென்றி மாயர்ஸ் [Hyndman, Henry Myers] (1842–1921) – ஆங்கிலேய சோஷலிஸ்டு; சீர்திருத்தவாதி. 1881-ல் ஜனநாயகக் கூட்டவையை நிறுவினார். பிற்பாடு 1884-ல் இது சமூக- ஜனநாயகக் கூட்டவையாகத் திருத்தியமைக்கப்பட்டது 1900–1910ஆம் ஆண்டுகளில் அவர் சர்வதேச சோஷலிஸ்டு பியூரோவில் உறுப்பினராக இருந்தார் 1916 வரை பிரிட்டிஷ் சோஷலிஸ்டுக் கட்சியின் தலைவர்களில் ஒருவர் ஏகாதிபத்திய யுத்தம் குறித்து சமூக–தேசியவெறி நிலை ஏற்றதற்காக அவர் 1916-ல் சால்பர்டில் நடைபெற்ற இக்கட்சியின் மாநாட்டில் கண்டிக்கப்பட்டார்.
டுராட்டி, ஃபிலிப்போ (1857–1932) – இத்தாலியத் தொழிலாளர் இயக்கத்தில் பங்கு கொண்டவர்; இத்தாலிய சோஷலிஸ்டு கட்சி ஸ்தாபகர்களில் (1892) ஒருவர்; அதன் சீர்திருத்தவாத வலதுசாரிப் பகுதியின் தலைவர்.
டூரிங், ஒய்கென் (1833-1921) – ஜெர்மன் தத்துவவியலாளர், பொருளியலாளர், குட்டி முதலாளித்துவச் சித்தாந்தவாதி.
டேவிட், எடுவார்டு (1863–1930) – ஜெர்மன் சமூக–ஜனநாயகத்தின் வலதுசாரித் தலைவர்களில் ஒருவர்; திருத்தல்வாதி. தொழிலில் பொருளியலாளர். 1903-ஆம் ஆண்டு முதல் ஜெர்மன் நாடாளுமன்றமாகிய ரைஹஸ்டாகில் உறுப்பினர். உலகப் போரின் போது (1914–1918) சமூக–தேசிய வெறியர்.
துகான்–பரனோவ்ஸ்கி, மி. இ. (1865–1919) – ருஷ்ய முதலாளித்துவப் பொருளியலாளர்; 1890ஆம் ஆண்டுகளில் ‘சட்டப்பூர்வ மார்க்சியத்தின்’ பிரதிநிதிகளில் ஒருவர். 1905–1907 ஆண்டுகளில் நடந்த புரட்சியின் போது காடெட்டுக் கட்சி உறுப்பினர். அக்டோபர் புரட்சிக்குப் பிறகு உக்ரைனில் எதிர்ப்புரட்சி வேலைகளில் முனைப்புடன் ஈடுபட்டார்.
த்ஸெரெத்தேலி, இ.கி (1881–1959) – ஒரு மென்ஷிவிக் தலைவர். முதல் உலகப்போரின் போது மையவாத நிலையை அனுசரித்தார். 1917 பிப்ரவரி முதலாளித்துவ–ஜனநாயகப் புரட்சிக்குப் பின், முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தில் தபால் தந்தி அமைச்சராகவும் பிறகு உள்துறை அமைச்சராகவும் இருந்தார். போல்ஷிவிக்குகளுக்கு எதிரான கொடிய அடக்குமுறைக்கு ஊக்கமூட்டியோரில் ஒருவர். அக்டோபர் சோஷலிசப் புரட்சிக்குப் பிறகு, ஜார்ஜியாவில் மென்ஷிவிக்குகளின் எதிர்ப்புரட்சி அரசாங்கத்துக்குத் தலைவர். பிறகு வெளிநாடுகளுக்கு ஓடினார்.
நெப்போலியன், முதலாம் (போனப்பார்ட்) (1769_-1821) _ 1804 முதல் 1814 வரையிலும் 1815லும் பிரெஞ்சுப் பேரரசர்.
நெப்போலியன் மூன்றாம் (போனப்பார்ட், லுயீ) (1808–1873) – 1852 முதல் 1870 வரை பிரெஞ்சுப் பேரரசர், முதலாம் நெப்போலியனுடைய மைத்துனர்.
பக்கூனின், மி. அ. (1814-1876) – நரோதியம், அராஜகவாதம் இவற்றின் சித்தாந்தவாதிகளில் ஒருவர். 1840-ல் ருஷ்யாவை விட்டு வெளியே சென்றார். ஜெர்மனியில் 1848–49 ஆண்டுகளின் புரட்சியில் பங்கு எடுத்துக் கொண்டார். முதலாவது அகிலத்தில் உறுப்பினராய் இருந்து மார்க்சியத்தின் கடும் பகைவராய்ச் செயல்பட்டார். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் அடங்கலாய் எல்லா வகையான அரசையும் அவர் நிராகரித்தார். உலக வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்துக்குள்ள பாத்திரத்தைப் புரிந்து கொள்ளத் தவறிய அவர் சுயேச்சையான தொழிலாளி வர்க்கக் கட்சி நிறுவப்படுவதை எதிர்த்தார்; தொழிலாளி வர்க்கம் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடக் கூடாதென்னும் கருத்தை ஆதரித்தார்.
பல்ச்சீன்ஸ்கி, பி.இ. (1875-1929) – பொறியாளர், ‘புரொதூகல்’ சிண்டிக்கேட்டை நிறுவியவர். வங்கி முதலாளிகளுடன் நெருங்கி இணைப்புக் கொண்டவர். 1917 பிப்ரவரி முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிக்குப் பின் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தில் வர்த்தகம், தொழில் துறை அமைச்சரானார். தொழில் துறை முதலாளிகளுடைய சீர்குலைவு வேலைகளுக்கு ஏற்பாடு செய்தவர், ஜனநாயக நிறுவனங்களை எதிர்த்துப் போராடியவர்.
பிஸ்ஸொலாட்டி, லியொனிதா (1857-1920) இத்தாலிய சோஷலிஸ்டுக் கட்சியின் நிறுவனர்களிலும், அதன் வலதுசாரி சீர்திருத்தவாதப் பிரிவின் தலைவர்களிலும் ஒருவர். 1912-ல் இத்தாலிய சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்; ‘சமூக -சீர்திருத்தவாதக் கட்சியை’ நிறுவினார். முதல் உலகப்போரின் போது சமூக–தேசிய வெறியராய் இருந்து, ஆன்டான்ட் அரசுகளுக்கு ஆதரவாய் இத்தாலிய போரில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றார். 1916-லிருந்து 1918-வரையில் இலாகா இல்லாத அமைச்சராய் இருந்தார்.
பிஸ்மார்க், ஓட்டோ எடுவார்டு லியோப்போல்டு (1815-1898) – பிரஷ்யாவின், ஜெர்மனியின் அரசுப் பிரமுகரும் ராஜதந்திரியும். சின்னஞ் சிறு அரசுகளாய்ப் பிரித்திருந்த ஜெர்மன் அரசுகளைப் பிற்போக்குவாத பிரஷ்ய ஜங்கர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் பலவந்தமாய் ஒன்றிணைப்பதே பிஸ்மார்க்கின் தலைமையான குறிக்கோள். 1871 ஜனவரியில் ஜெர்மன் முடிப்பேரரசின் தலைமை அமைச்சரானார். நிலப்பிரபுத்துவ ஜங்கர்களின் நலன்களுக்கு ஏற்ப 29 ஆண்டுக் காலத்துக்கு ஜெர்மனியின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கையை வகுத்து நடத்திச் சென்றவர்; அதே போது ஜங்கர்களுக்கும் பெரு முதலாளிகளுக்குமிடையே ஒற்றுமையை உறுதி செய்து கொள்ளவும் முயன்றவர். தொழிலாளி வர்க்க இயக்கத்தை நசுக்கி விட வேண்டுமென்று 1878- ல் சோஷலிஸ்டு–எதிர்ப்புச் சட்டம் இயற்றியவர். ஆனால் இந்தச் சட்டத்தின் மூலம் அவர் இதைச் செய்ய முடியாமற் போன பின், வெகுஜனங்களை ஏமாற்றும் வாய்வீச்சுத் திட்டமாகச் சமூகக் காப்புறுதித் திட்டத்தை வகுத்து, தொழிலாளர்களில் சில பகுதியோருக்குக் கட்டாயச் சமூகக் காப்புறுதிக்கான சட்டங்களை இயற்றினார். ஆனால் இந்த அற்பக் கவனங்களைக் கொண்டு தொழிலாளர் இயக்கத்தைப் பிளவுபடுத்துவதற்கான பிஸ்மார்க்கின் முயற்சிகள் தோல்வியடைந்தன. 1890-ல் அவர் அரசாங்கத்திலிருந்து விலக்கப்பட்டார்.
பிராக்கே, வில்ஹெல்ம் (1842–1880) – ஜெர்மன் சோஷலிஸ்டு, புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர். ஐசனாச்சர் கட்சியின் (1869) நிறுவனர்களிலும் தலைவர்களிலும் ஒருவர்.
பிரெஷ்கோ பிரெஷ்கோவ்ஸ்கயா, எ.க. [(1844–1934) – சோஷலிஸ்டு புரட்சியாளர் கட்சியின் நிறுவனர்களிலும் தலைவர்களிலும் ஒருவர். அதன் கடைக்கோடி வலதுசாரியைச் சேர்ந்தவர். 1917 பிப்ரவரி முதலாளித்துவ–ஜனநாயகப் புரட்சிக்குப் பிறகு இடைக்கால அரசாங்கத்தை ஆதரித்தார். ஏகாதிபத்தியப் போரை ‘வெற்றிகர முடிவுக்குத்’ தொடர்ந்து நடத்திச் செல்ல வேண்டும் என்றவர்.
பிராண்டிங்கு, கார்ல் யால்மர் (1860-1825) – ஸ்வீடனின் சமூக–ஜனநாயகக் கட்சி, இரண்டாவது அகிலம் இவற்றின் தலைவர்களில் ஒருவர். சந்தர்ப்பவாத நிலைகளை ஏற்றவர். முதல் உலகப் போரின் போது சமூக-தேசிய வெறியர். 1917-ல் ஈடனின் மிதவாத–சோஷலிஸ்டுக் கூட்டு அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டார்
பிளெஹானவ், கி.வ. (1856–1918) – ருஷ்ய, சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த பிரமுகர்களில் ஒருவர். ருஷ்யாவில் மார்க்சியத்தை முதன்முதல் பரப்பியவர். முதலாவது ருஷ்ய மார்க்சியக் கழகமான ‘உழைப்பு விடுதலைக்’ குழுவை 1883-ல் ஜெனீவாவில் நிறுவியவர். நரோதியத்தையும் சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தில் திருத்தல்வாதத்தையும் எதிர்த்துப் போராடினார். இந்நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இஸ்க்ரா செய்தியேடு, ஸார்யா சஞ்சிகை இவற்றின் ஆசிரியர் குழுவில் இருந்தார்.
பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டத்தைப் பாதுகாக்கவும் பரப்பவும் 1883க்கும் 1903-க்கும் இடையில் பிளெஹானவ் பல நூல்களை எழுதினார். ஆயினும் அப்பொழுதே அவர் பல கடும் பிழைகள் புரிந்தார்; இவை அவருடைய பிற்கால மென்ஷிவிக் கருத்தோட்டங்களுக்கு வித்திட்டன. ருஷ்யாவின் சமூக–ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் இரண்டாவது காங்கிரசிற்குப் பிறகு பிளெஹானவ் சந்தர்ப்பவாதம் குறித்து சமரசப் போக்கை அனுசரித்தார்; பிற்பாடு மென்ஷிவிக்குகளுடன் சேர்ந்து கொண்டார். முதல் ருஷ்யப் புரட்சியின் போது (1905–1907) பிரதான பிரச்சனைகளில் மென்ஷிவிக் நிலையை ஏற்றார். முதல் உலகப் போரின் போது சமூக–தேசியவெறி நிலைகளுக்கு மாறிவிட்டார். 1917 பிப்ரவரி முதலாளித்துவ–ஜனநாயகப் புரட்சிக்குப் பிறகு ருஷ்யாவுக்குத் திரும்பியதும், மென்ஷிவிக்குகள் -பாதுகாப்புவாதிகளின் தீவிர வலதுசாரிக் குழுவான ‘எதீன்ஸ்த்வோ’ குழுவுக்குத் தலைமை தாங்கினார். போல்ஷிவிக்குகளையும் சோஷலிசப் புரட்சியையும் எதிர்த்தார்; சோஷலிசத்துக்கு மாறிச் செல்ல ருஷ்யா இன்னும் பக்குவ நிலையில் இல்லை என்று நினைத்தார். அக்டோபர் சோஷலிசப் புரட்சி குறித்து அவர் எதிர்மறைப் போக்கை அனுசரித்தார் என்றாலும், சோவியத் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போராடவில்லை.
புரூதோன், பியேர் ழொஸேப் (1809-1865) – பிரெஞ்சுக் கட்டுரையாளர், பொருளியலாளர், சமூக-வியலாளர், குட்டி முதலாளித்துவச் சித்தாந்தவாதி. அராஜகவாதத்தின் மூலவர்களில் ஒருவர்.
பெபெல், ஔகுஸ்ட் (1840–1913) – ஜெர்மன் சமுக-ஜனநாயகம், சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கம் இவற்றின் பிரபலத் தலைவர்களில் ஒருவர்.
பெர்ன்ஷ்டைன், எடுவார்டு [ஙிமீக்ஷீஸீstமீவீஸீ, ணிபீuணீக்ஷீபீ] (1850-1932) – ஜெர்மன் சமூக–ஜனநாயகக் கட்சி, இரண்டாவது அகிலம் இவற்றின் கடைக்கோடியான சந்தர்ப்பவாதப் பகுதியின் தலைவர். சீர்திருத்தவாதம், திருத்தல்வாதம் இவற்றின் தத்துவவாதி. 1870-ஆம் ஆண்டுகளின் நடுப் பகுதியில் சமூக–ஜனநாயக இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ள முற்பட்டார். 1881–1889 ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் சமூக–ஜனநாயகக் கட்சியின் மைய ஏடான ஞிவீமீ ஷிஷீக்ஷ்வீணீறீ-பீமீனீஷீளீக்ஷீணீt இன் (‘சமூக–ஜனநாயகவாதி’) ஆசிரியராக இருந்தார். 1896–1898 ஆம் ஆண்டுகளில் (‘புதிய காலம்’) சஞ்சிகையில் ‘சோஷலிசத்தின் பிரச்சனைகள்’ என்னும் தலைப்பில் கட்டுரைத் தொடர் ஒன்றை வெளியிட்டார். பிற்பாடு இக்கட்டுரைகள் ‘சோஷலிசத்தின் முதற்கோள்களும் சமூக-ஜனநாயகத்தின் கடமைகளும்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகமாய் வெளிவந்தன. புரட்சிகர மார்க்சியத்தின் தத்துவவியல், அரசியல், பொருளாதார அடிப்படைகளை இக்கட்டுரைகளில் அவர் திருத்த முற்பட்டார். முதலாளித்துவத்தில் தொழிலாளர்களுடைய பொருளாதார நிலையை உயர்த்துவதை நோக்கமாய்க் கொண்ட சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதே தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பிராதன கடமையாகுமென அவர் கூறினார். ‘இயக்கமே அனைத்தும், இறுதிக் குறிக்கோள் ஒரு பொருட்டல்ல’ என்ற சந்தர்ப்பவாத சூத்திரத்தை முன்வைத்தார். முதல் உலகப் போரின் போது மையவாத நிலையை அனுசரித்தார்; சர்வ தேசியம் குறித்து வாய் வீச்சடித்துத் தமது தேசிய வெறிப் போக்கை மறைத்துக் கொள்ள முயன்றார்.
பெனெகக், ஆன்டனி (1873–1960) – டச்சு சமூக-ஜனநாயகவாதி; 1910 முதலாய் ஜெர்மன் இடதுசாரி சமூக–ஜனநாயகவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார், அவர்களுடைய பத்திரிகைகளில் செயல் முனைப்பு வாய்ந்த பங்காற்றி வந்தார். முதல் உலகப்போரின் போது சர்வதேசவாதியாகச் செயல்பட்டார், ஸிமர்வால்டு இடதுசாரிக் கட்சியின் தத்துவார்த்த ஏடாகிய Vorbote ஐ (‘முன்னோடி’) வெளியிடுவதில் பங்கு கொண்டார். 1918–21 ல் நெதர்லாந்து கம்யூனிஸ்டுக் கட்சியில் உறுப்பினராயிருந்தார்; கம்யூனிஸ்டு அகிலத்தின் வேலையில் பங்கு கொண்டார். அதிதீவிர இடதுசாரிக் குறுங்குழுவாதப் போக்கைப் பின்பற்றினார்.
பத்ரேசவ், அ.நி. (1869–1934) – மென்ஷிவிக் தலைவர்; முதல் உலகப்போரின் போது சமூக–தேசிய வெறியர். அக்டோபர் சோஷலிசப் புரட்சிக்குப் பிற்பாடு வெளிநாடு சென்றுவிட்டார்.
பொமியலோவ்ஸ்கி, நி.கெ. (1835–1863) – பெயர் பெற்ற ருஷ்ய எழுத்தாளர், ஜனநாயகவாதி. ருஷ்யாவின் எதேச்சதிகார- வர்க்கப் பழக்க வழக்கங்களையும் வன்முறைகளையும் தான்தோன்றித்தனத்தையும் தமது நூல்களில் தாக்கினார்.
போனப்பார்ட், லுயீ – மூன்றாம் நெப்போலியனைப் பார்க்கவும்.
மாண்டிஸ்கியே, சார்லெஸ் லுயீ (1689-1755) – பிரபல பிரெஞ்சு முதலாளித்துவ சமூகவியலாளர், பொருளியலாளர், எழுத்தாளர். பதினெட்டாவது நூற்றாண்டின் முதலாளித்துவ அறிவு இயக்கவாதி, சட்டமுறை முடியாட்சியின் தத்துவவாதி.
மார்க்ஸ், கார்ல் (1818–1883) – விஞ்ஞானக் கம்யூனிசத்தின் தந்தை, ஒப்பற்ற சிந்தனையாளர், சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் தலைவர், போதனாசிரியர்.
மிகைலோவ்ஸ்கி, நி.க. (1842–1904) – மிதவாத நரோதியத்தின் பிரபல தத்துவவாதிகளில் ஒருவர். பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நேர்காட்சிவாதத் தத்துவவியலாளர், அகநிலை மரபைச் சேர்ந்த சமூகவியலாளர். 1892-ல் மார்க்சிய- எதிர்ப்பு சஞ்சிகையான ரூஸ்கொயே பகாத்ஸ்த்வோவுக்குப் பொறுப்பாளர் ஆனார்.
மில்லரண்டு, அலெக்சாண்டர் எத்தியேன் (1859-1943) பிரெஞ்சு அரசியல்வாதி. 1890-ஆம் ஆண்டுகளில் சோஷலிஸ்டுகளின் ஆதரவாளராகி, பிரெஞ்சு சோஷலிஸ்டு இயக்கத்தின் சந்தர்ப்பவாதப் போக்குக்குத் தலைமை தாங்கினார். 1899-ல் வால்டெக் -ருசோவின் பிற்போக்குவாத முதலாளித்துவ அரசாங்கத்தின் உறுப்பினரானார்; பாரிஸ் கம்யூனை நசுக்கிய கொலைகாரரான ஜெனரல் கல்லிபெயுடன் ஒத்துழைத்தார்.
1904-ல் சோஷலிஸ்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் மில்லரண்டும் ஏனைய முன்னாள் சோஷலிஸ்டுகளும் (பிரியாண்ட், விவியானி) ‘சுயேச்சை சோஷலிஸ்டுகள்’ என்றொரு கோஷ்டியை அமைத்துக் கொண்டனர். 1909–10, 1912–13, 1914–15 ஆகிய ஆண்டுகளில் அமைச்சராய் இருந்தார். 1920–24ல் பிரெஞ்சுக் குடியரசின் ஜனாதிபதி.
மேரிங், ஃபிரான்ஸ் (1846-1919) – ஜெர்மன் தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய பிரமுகர். ஜெர்மன் சமூக–ஜனநாயகத்தின் இடதுசாரியினது தலைவர்கள், தத்துவவாதிகளில் ஒருவர். இக்கட்சியின் தத்துவார்த்த ஏடாகிய ஞிவீமீ ழிமீuமீ ஞீமீவீt இன் (‘புதிய காலம்’) ஆசிரியர்களில் ஒருவர். ஜெர்மன் கம்யூனிஸ்டுக் கட்சியை நிறுவுவதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்.
ராதெக், கா. பெ. (1885–1939) – இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கலீஷியாவிலும் போலந்திலும் ஜெர்மனியிலும் சமூக–ஜனநாயக இயக்கத்தில் ஈடுபட்டார். ஜெர்மன் இடதுசாரி சமூக–ஜனநாயக வெளியீடுகளை வெளியிடுவதில் பங்கு கொண்டார். முதல் உலகப் போரின் போது சர்வதேசிய நிலையை அனுசரித்தார் என்றாலும் மையவாதத்தை நோக்கி ஊசலாடினார். தேசிய இனங்களது சுய நிர்ணய உரிமை பற்றிய பிரச்சனையில் தவறான நிலையை அனுசரித்தார்.
ருசானவ், நி.ஸெ. (பிறப்பு: 1859)பத்திரிகையாளர்; முதலில் நரோத்னிக், பிறகு சோஷலிஸ்டு -புரட்சியாளர்.
ருபனோவிச், இ.அ. (1860–1920) – சோஷலிஸ்டு-புரட்சியாளர்களின் தலைவர்களில் ஒருவர். சர்வதேச சோஷலிஸ்டு பியூரோவின் உறுப்பினர். முதல் உலகப் போரின் போது (1914–1918) சமூக -தேசிய வெறியர்.
ரெனொடேல், பியேர் (1871–1935) – பிரெஞ்சு சோஷலிஸ்டுக் கட்சியின் சீர்திருத்தவாதத் தலைவர்களில் ஒருவர். முதல் உலகப் போரின் போது (1914–1918) சமூக–தேசிய வெறியர்.
லஸ்ஸால், பெர்டினான்டு (1825–1864) – ஜெர்மன் குட்டி முதலாளித்துவ சோஷலிஸ்டு. ஜெர்மன் தொழிலாளர் இயக்கத்தில் நிலவிய ஒரு வகை சந்தர்ப்பவாதமாகிய லஸ்ஸாலியத்தின் மூலவர். அகில ஜெர்மன் தொழிலாளர் சங்கத்தை நிறுவியவர் (1863). இந்தச் சங்கம் நிறுவப்பட்டதானது தொழிலாளர் இயக்கத்திற்கு ஆக்கம் தரும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருந்தது. ஆனால் இந்தச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லஸ்ஸால், இதனைச் சந்தர்ப்பவாத வழியில் அழைத்துச் சென்றார். பிற்போக்குவாத பிரஷ்யாவினது ஆதிக்கத்தின் கீழ் ஜெர்மனியை ‘மேலிருந்தபடி’ ஒன்றுபடுத்தும் கொள்கையை லஸ்ஸால் ஆதரித்தார். லாஸ்ஸாலியர்களின் சந்தர்ப்பவாதக் கொள்கை முதலாவது அகிலத்தின் செயற்பாடுகளுக்கும், ஜெர்மனியில் மெய்யான தொழிலாளி வர்க்கக் கட்சி உருவாவதற்கும், தொழிலாளர்கள் வர்க்க உணர்வு பெறுவதற்கும் தடங்கலாய் இருந்தது.
லீப்க்னெஹ்ட், வில்ஹெல்ம் [Liebknecht, Wilhelm] (1826–1900) – ஜெர்மன், சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முக்கியத் தலைவர், ஜெர்மன் சமூக–ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபகர்களிலும் தலைவர்களிலும் ஒருவர்.
லுக்சம்பர்க், ரோஸா (1871–1919) – சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர், இரண்டாவது அகிலத்தின் இடதுசாரிப் பிரிவின் தலைவர்களில் ஒருவர். போலந்து சமூக–ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபகர்களிலும் தலைவர்களிலும் ஒருவர். 1897-லிருந்து ஜெர்மன் சமூக–ஜனநாயக இயக்கத்தில் தீவிரப் பங்கு ஆற்றினார். ஜெர்மன் கம்யூனிஸ்டுக் கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். 1919 ஜனவரியில் எதிர்ப் புரட்சியாளர்களால் கைது செய்யப்பட்டுப் பேய்த்தனமாகக் கொல்லப்பட்டார்.
லுயீ நெப்போலியன் – மூன்றாம் நெப்போலியனைப் பார்க்கவும்.
லெகின், கார்ல் (1861–1920) – ஜெர்மன் வலதுசாரி சமூக–ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர், தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவர், திருத்தல்வாதி. 1890 முதல் ஜெர்மன் தொழிற்சங்கப் பொதுக் குழுவின் தலைவராகவும், 1903 முதல் அதன் செயலாளராகவும் இருந்தார். 1913 முதல் சர்வதேசத் தொழிற்சங்கச் செயலகத்தில் தலைவராக இருந்தவர். 1893-லிருந்து 1920 வரை இடையில் சிற்சில இடைவெளிகள் விட்டு, ஜெர்மன் சமூக–ஜனநாயகத்தின் பிரதிநிதியாக ரீஹ்ஸ்டாகில் உறுப்பினர். முதல் உலகப் போரின் போது தீவிர சமூக-தேசிய வெறியர். புரட்சிகரத் தொழிலாளி வர்க்க இயக்கத்தை எதிர்த்தவர், முதலாளித்துவக் கொள்கையை ஆதரித்தவர்.
லெனின், வி. இ. [லெனின், நி.] (1870-1924) – வாழ்க்கை குறித்த விவரங்கள்.
வண்டர்வேல்டே, எமீல் (1866–1938) – பெல்ஜியத் தொழிலாளர் கட்சியின் தலைவர். இரண்டாம் அகிலத்தின் சர்வதேச சோஷலிஸ்டு பியூரோவின் தலைவர். அதீத சந்தர்ப்பவாத நிலையை மேற்கொண்டார். முதல் உலகப் போரின் போது சமூக- தேசிய வெறியர், முதலாளித்துவ அரசாங்கத்தின் உறுப்பினர்.
வெப், பியாட்ரீஸ் (1859–1947) – பிரபல பிரிட்டிஷ் பொது வாழ்வுப் பிரமுகர், சீர்திருத்தவாதி. அவர் மனைவி பியாட்ரீஸ் வெப்புடன் சேர்ந்து பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு, தத்துவம் குறித்துப் பல புத்தகங்கள் எழுதினார். குட்டி முதலாளி வர்க்கத்தினர், தொழிலாளர், பிரபுக்குலத்தோர் இவர்களது சித்தாந்தவாதியான இவர் முதலாளித்துவ அமைப்பின் கட்டுக் கோப்பினுள் தொழிலாளர்களுடைய பிரச்சனைக்குச் சமாதான வழியில் தீர்வு காணலாம் என்றார். சீர்திருத்தவாத ஃபேபியன் கழகத்தை நிறுவியோரில் ஒருவர். முதல் உலகப் போரின் போது சமூக-தேசிய வெறியராய் இருந்தார். முதலாவது (1924), இரண்டாவது (1929–31) தொழிற்கட்சி அரசாங்கங்களில் உறுப்பினராய் இருந்தவர்.
வெய்டமையர், யோஸிப் (1818–1866) – ஜெர்மன், அமெரிக்கத் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் முக்கிய தலைவர்; மார்க்ஸ், எங்கெல்ஸின் நண்பர், சக ஊழியர்.
ழொரேஸ், ழான் (1859–1914) – பிரெஞ்சு, சர்வதேச சோஷலிஸ்டு இயக்கத்தின் ஒரு முக்கியத் தலைவர்; வரலாற்றியலாளர் 1885–89, 1893–98, 1902–14 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்; நாடாளுமன்றத்தில் சோஷலிஸ்டுக் கட்சிக் குழுவின் தலைவர்களில் ஒருவர். 1904-ஆம் ஆண்டில் லி’ L’ Humanite (‘மனிதகுலம்’) செய்தியேட்டை ஆரம்பித்து, தமது வாழ்வின் இறுதி வரை அதன் ஆசிரியராக இருந்து வந்தார். ஜனநாயகத்தையும் தேசங்களது சுதந்திரத்தையும் ஆதரித்தார். ஏகாதிபத்திய ஒடுக்குமுறையையும் ஆக்கிரமிப்பு யுத்தத்தையும் எதிர்த்துச் சமாதானத்துக்காக நின்றார். சோஷலிசம் ஒன்றால் மட்டுமே யுத்தங்களுக்கும் காலனியாதிக்க ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்ட முடியுமென அவர் நம்பினார். ஆனால் சோஷலிசம் வெற்றி பெறுவதற்கு வழி, முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போராட்டமல்ல; ‘ஜனநாயகக் கருத்து மலர்ச்சியடைவதன்’ விளைவாக இவ்வெற்றி வரப் பெறுமென அவர் கருதினார். ழொரேஸைச் சந்தர்ப்பவாதப் பாதையில் இழுத்துச் சென்ற அவரது இந்தச் சீர்திருத்தவாதக் கருத்தை லெனின் கடுமையாகக் கண்டித்து விமர்சித்தார்.
நெருங்கி வந்த யுத்த அபாயத்தை எதிர்த்துப் போராடிய ழொரேஸ், ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்தின் வெறுப்புக்குப் பாத்திரமானார். முதல் உலகப்போர் வெடிக்கும் தறுவாயில் அவர் பிற்போக்கின் கையாட்களால் கொலை செய்யப்பட்டார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

அரசும் புரட்சியும் Copyright © 2014 by jayend16; லெனின்; and Vladimir Ilyich Lenin is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book