இந்தப் பிரசுரம் 1917 ஆகஸ்டு, செப்டம்பரில் எழுதப்பட்டது. ஏழாவதான அடுத்த அத்தியாயத்துக்கு _ “1905, 1917_ஆம் ஆண்டுகளின் ருஷ்யப் புரட்சிகளின் அனுபவம்’’ _ ஏற்கனவே திட்டம் வகுத்திருந்தேன். ஆனால் தலைப்பைத் தவிர்த்து இந்த அத்தியாயத்தில் ஒரு வரிகூட எழுத முடியவிலலை, நேரம் கிடைக்கவில்லை. 1917 அக்டோபர் புரட்சியின் தறுவாயிலான அரசியல் நெருக்கடி ‘குறுக்கிட்டு விட்டது.’ இது போன்ற ‘குறுக்கீடு’ வரவேற்கத்தக்கதே. ஆனால் பிரசுரத்தின் இரண்டாம் பாகத்தை (“1905, 1917_ஆம் ஆண்டுகளின் ருஷ்யப் புரட்சிகளின் அனுபவம்’’) நெடுங்காலத்துக்கு ஒத்திப்போட வேண்டியதாகிவிடும் போலிருக்கிறது. ‘புரட்சியின் அனுபவத்தை’ எழுதுவதைக் காட்டிலும் நேரில் வாழ்ந்து காண்பது மேலும் இனிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. ஆசிரியர் நூல் திரட்டு, தொகுதி 33, பக்கங்கள் 1–120
பெத்ரொகிராத்
1917, நவம்பர் 30
1917, ஆகஸ்டு–செப்டம்பரில் எழுதப்பட்டது
முதற் பதிப்புக்குப் பின்னுரை _ 1917 நவம்பர் 30 லும் & 3, அத்தியாயம் 2 _ 1918 டிசம்பர் 17_க்கு முன்பும் எழுதப்பட்டவை
1918_ல் ‘ழீ ஸ்ன் இ ஸ்னானியே’ பதிப்பகத்தால் தனிப்பிரசுரமாய் பெத்ரொகிராதில் வெளியிடப்பட்டது குறிப்புகள்
1. அரசும் புரட்சியும். அரசைப் பற்றிய மார்க்சியத் தத்துவமும் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும் _ முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தின் அடக்குமுறையிலிருந்து தப்புவதற்காக லெனின் தலைமறைவாய் இருக்கையில் 1917 ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இந்நூலை எழுதினார்.
அரசு பற்றிய பிரச்சனைக்குத் தத்துவார்த்த விளக்கம் தருவதன் அவசியம் குறித்து முதலில் அவர் 1916_ஆம் ஆண்டின் பிற்பாதியில் பேசினார். இளைஞர் அகிலம் என்ற தலைப்பில் அப்பொழுது அவர் எழுதிய குறிப்பில் அரசு குறித்து புகாரின் மார்க்சியத்துக்கு முரணான நிலையை அனுசரித்ததைக் கண்டன விமர்சனம் செய்து, அரசு குறித்து மார்க்சியத்தின் நிலை என்னவென்பது பற்றி விளக்கமான ஒரு கட்டுரை எழுதுவதாய் வாக்களித்திருந்தார். 1917 பிப்ரவரி 17-ல் கொலன்தாய்க்கு எழுதிய கடிதத்தில், அரசு குறித்து மார்க்சியத்தின் நிலை பற்றிய தமது நூற்பொருள் அநேகமாய்த் தயாராகிவிட்டதாய்க் கூறினார். அரசு குறித்து மார்க்சியம் என்று தலைப்பிடப்பட்ட நீல அட்டை தாங்கிய குறிப்பேட்டில் பொடி எழுத்துக்களில் இது நெருக்கமாய் எழுதப்பட்டிருந்தது. மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களும், காவுத்ஸ்கி, பெனெகக், பெர்ன்ஷ்டைன் இவர்களது புத்தகங்களிலிருந்து சில வாசகங்களும் இவை பற்றிய விமர்சனக் கருத்துரைகளும் மற்றும் லெனினுடைய முடிவுகளும் பொது நிர்ணயிப்புகளும் இதில் அடங்கியிருந்தன.
இந்தக் குறிப்புகளை லெனின் அரசும் புரட்சியும் என்ற தமது நூலுக்கு அடிப்படையாகப் பயன்படுத்திக் கொண்டார்.
லெனினுடைய திட்டத்தின்படி அரசும் புரட்சியும் ஏழு அத்தியாயங்கள் கொண்டதாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் ‘1905, 1917_ஆம் ஆண்டுகளின் ருஷ்யப் புரட்சிகளின் அனுபவம்’ என்னும் கடைசியான ஏழாவது அத்தியாயம் எழுதப்படவே இல்லை. இதற்குரிய விவரமான திட்டமும் ‘முடிவுரையின்’ திட்டமும் தான் நம்மிடம் உள்ளன. அக்டோபர் சோஷலிசப் புரட்சிக்குப் பிறகு 1918_ல் அரசும் புரட்சியும் 30,700 பிரதிகளிலான பதிப்பாக வெளியிடப்பட்டது.
இரண்டாம் அத்தியாயத்தில் ‘1852ல் இப்பிரச்சனையை மார்க்ஸ் எடுத்துரைத்தது’ என்ற தலைப்பில் லெனின் சேர்த்துக் கொண்ட புதிய பிரிவுடன் இரண்டாம் பதிப்பு 1919-ல் வெளிவந்தது
2. ஃபேபியன்கள் [Fabians] _ 1884ல் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் சீர்திருத்தவாத நிறுவனமான ஃபேபியன் கழகத்தின் [Fabian Society] உறுப்பினர்கள். ஃபேபியன் மாக்ஸிமஸ் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) என்னும் ரோமானியத் தளபதியின் பெயரை இக்கழகம் தனக்குச் சூட்டிக் கொண்டது. ஹனிபாலுக்கு எதிரான யுத்தத்தில் முடிவு கட்ட வல்ல போர்களைத் தவிர்த்துக் கொண்டு ஒத்திப்போட்டுச் செல்லும் தந்திரத்தைக் கையாண்டதால் இந்தத் தளபதி ‘தாமதவாதி’ [‘Cunctator’) என்ற பெயரைப் பெற்றார். ஃபேபியன் கழகத்தின் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் முதலாளித்துவ அறிவுத்துறையினராகிய விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் (சிட்னி வெபும் பியாட்ரீஸ் வெபும், ராம்சே மாக்டொனால்ட், பெர்னார்ட்ஷா முதலானோர்). பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம், சோஷலிசப் புரட்சி இவற்றின் அவசியத்தை ஃபேபியன்கள் மறுத்தனர்; சிறிய சமுதாயச் சீர்திருத்தங்கள், அதாவது படிப்படியான மாற்றங்கள் மூலமாய்த்தான் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்துக்கான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றனர். ஃபேபியன் கருத்துக்களை ‘மிதமிஞ்சிய சந்தர்ப்பவாதப் போக்காகும்’ என்று லெனின் குறிப்பிட்டார். 1900_ல் ஃபேபியன் கழகம் தொழிற்கட்சியுடன் இணைக்கப்பட்டது. ‘ஃபேபியன் சோஷலிசம்’ தொழிற் கட்சிக் கொள்கையின் சித்தாந்தத் தோற்றுவாய்களில் ஒன்றாகும்.
முதல் உலகப் போரின் போது (1914–18) ஃபேபியன்கள் சமூக-தேசியவெறிப் போக்கை அனுசரித்தனர்.
3. பி. எங்கெல்ஸ். குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் (தமிழ் பதிப்பு, மாஸ்கோ, முன்னேற்றப் பதிப்பகம்). இதே நூலிலிருந்து லெனின் திரும்பவும் பக்கங்கள் 13, 16, 18–22ல் மேற்கோள்கள் தருகிறார் (மேற்படி பதிப்பு, பக்கம் 319–22).
4. சோஷலிஸ்டு–புரட்சியாளர் கட்சி -ருஷ்யாவில் 1901 இறுதியிலும் 1902 துவக்கத்திலும் பல்வேறு நரோத்னிக் கோஷ்டிகளையும் இணைத்து நிறுவப்பட்ட குட்டி முதலாளித்துவக் கட்சி. முதல் உலகப் போரின் போது சோஷலிஸ்டு–புரட்சியாளர்களில் பெரும்பாலோர் சமூக–தேசிய வெறிக் கருத்துக்களை ஆதரித்தனர்.
1917 பிப்ரவரி முலாளித்துவ–ஜனநாயகப் புரட்சியைத் தொடர்ந்து சோஷலிஸ்டு–புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தின் பிரதான தூண்களாய்ச் செயல்பட்டனர். சோஷலிஸ்டு–புரட்சியாளர் கட்சியின் தலைவர்கள் (கேரென்ஸ்கி, அவ்க்சேன்தியெவ், செர்னோவ்) இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினர்களாய் இருந்தனர். இக்கட்சி நிலவுடைமைப் பண்ணைகளை ஒழிக்க வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை ஆதரிக்க மறுத்தது, இந்தப் பண்ணைகள் நீடிக்க வேண்டுமென்றது. நிலவுடைமைப் பண்ணைகளைப் பிடித்துக் கொண்ட விவசாயிகளுக்கு எதிராய் இடைக்கால அரசாங்கத்தின் சோஷலிஸ்டு–புரட்சியாளர் கட்சி அமைச்சர்கள் தண்டப் படைகளை அனுப்பினர். ஆயுதமேந்திய அக்டோபர் எழுச்சியின் தறுவாயில் இக்கட்சி பகிரங்கமாகவே எதிர்ப்புரட்சி முதலாளித்துவ வர்க்கத்தாருடன் சேர்ந்து கொண்டு, முதலாளித்துவ ஆட்சியை ஆதரித்தது. இதனால் புரட்சிகர மக்கள் திரளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விட்டது.
1917 நவம்பர் இறுதியில் சோஷலிஸ்டு–புரட்சியாளர் கட்சியின் இடதுசாரியினர் சுயேச்சைக் கட்சி ஒன்றை நிறுவிக் கொண்டனர். விவசாயிகளிடம் தமது செல்வாக்கைப் பாதுகாத்துக் கொள்ள முயன்ற இவர்கள் பெயரளவுக்கு சோவியத் ஆட்சியதிகாரத்தை அங்கீகரித்து, போல்ஷிவிக்குகளுடன் ஒப்பந்தத்துக்கு வந்தனர். ஆனால் சிறிது காலத்துக்கெல்லாம் சோவியத் ஆட்சியை எதிர்த்துப் போராடத் தலைப்பட்டனர்.
5. மென்ஷிவிக்குகள் _ ருஷ்யாவின் சமூக–ஜனநாயகக் கட்சியில் இருந்த குட்டி முதலாளித்துவ, சந்தர்ப்பவாதப் போக்கின் ஆதரவாளர்கள், தொழிலாளர்கள் மீது முதலாளித்துவச் செல்வாக்கு செயல்படக் கருவிகளாய் இருந்தவர்கள். ருஷ்யாவின் சமூக–ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் இரண்டாவது காங்கிரல் (1903 ஆகஸ்டு) கட்சியின் மத்திய உறுப்புக்களுக்காக நடைபெற்ற தேர்தலில் இவர்கள் சிறுபான்மை வாக்குகளைப் பெற்று சிறுபான்மையினர் (மென்ஷின்ஸ்த்வோ) ஆனதால் போல்ஷிவிக்குகள் என்று அழைக்கப்படலாயினர்
மென்ஷிவிக்குகள் பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் உடன்பாடு காண முயன்று, தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதக் கொள்கையைக் கடைப்பிடித்தனர். 1917 பிப்ரவரி முதலாளித்துவ–ஜனநாயகப் புரட்சியைத் தொடர்ந்து மென்ஷிவிக்குகளும் சோஷலிஸ்டு–புரட்சியாளர் கட்சியினரும் இடைக்கால அரசாங்கத்தில் பதவிகள் ஏற்று, இந்த அரசாங்கத்தின் ஏகாதிபத்தியக் கொள்கையை ஆதரித்தனர்; வலுப்பெற்று ஓங்கி வந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியை எதிர்த்துப் போராடினர்.
அக்டோபர் சோஷலிசப் புரட்சிக்குப் பிறகு மென்ஷிவிக்குகள் பகிரங்கமாகவே எதிர்ப்புரட்சிக் கட்சியாகி சோவியத் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துச் சதிகளும் கலகங்களும் செய்தனர்.
6. சமுதாயத்தின் புராதனக் குடி அல்லது குல வழியிலான ஒழுங்கமைப்பு _ புராதனக் கம்யூன் அமைப்பு அல்லது வரலாற்றின் முதலாவது சமூக–பொருளாதார அமைப்பு. குலக் கம்யூனானது பொருளாதார, சமுதாயப் பிணைப்புகளால் இணைக்கப் பெற்ற இரத்த உறவினர்களது கூட்டமைப்பாகும். இந்தப் புராதனக் குடியமைப்பு தாய்வழி, தந்தைவழி சமுதாயக் கட்டங்களைக் கடந்து சென்றது. தந்தை வழி அமைப்பானது முடிவில் புரதான சமுதாயம் வர்க்க சமுதாயமாய் மாறுவதிலும் அரசின் உதயத்திலும் கொண்டுபோய் விட்டது. புராதனக் கம்யூன் அமைப்பில் உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சாதனங்களின் சமூக உடைமையையும் எல்லாப் பண்டங்களின் சரிசமத்துவ விநியோகத்தையும் அடிப்படையாய்க் கொண்டிருந்தன. இது அக்காலத்திய உற்பத்தி சக்திகளது தாழ்ந்த வளர்ச்சி நிலைக்கும் அவற்றின் தன்மைக்கும் பிரதானமாய்ப் பொருந்துவதாய் இருந்தது.
7. கா. மார்க்சின் கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனமும் (பாகம் 4) பி. எங்கெல்சின் டூரிங்குக்கு மறுப்பும் மற்றும் பெபெலுக்கு எங்கெல்ஸ் எழுதிய 1875 மார்ச் 18–28 ஆம் தேதிக் கடிதமும் இங்கு குறிக்கப்படுகின்றன.
8. கா. மார்க்ஸ். மூலதனம், தொகுதி 1.
9. முப்பதாண்டுப் போர் (1618\–48) – முதலாவது பொது ஐரோப்பிய யுத்தம் ஐரோப்பிய அரசுகளது பல்வேறு கூட்டுகளுக்கும் இடையே முரண்பாடுகள் கடுமையாகியதால் இந்த யுத்தம் எழுந்தது. புரோட்டஸ்டன்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்குமான போராட்டத்தின் வடிவத்தில் இது வெளியாகியது. ஜெர்மனிதான் பிரதான போர் அரங்கும், இராணுவச் சூறையாடலுக்கும் கொள்ளைக்காரக் கோரிக்கைகளுக்குமான இலக்கும் ஆயிற்று. இந்த யுத்தம் 1648-ல் வெஸ்ட்பாலியா சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியதுடன் முடிவுற்றது. இந்த ஒப்பந்தத்தால் ஜெர்மனி அரசியல் வழியில் மேலும் சின்னாபின்னமாய்த் துண்டாடப்பட்டது.
10. கோத்தா வேலைத்திட்டம் _ ஜெர்மனியின் சோஷலிஸ்டுத் தொழிலாளர் கட்சியின் கோத்தா காங்கிரஸ் 1875-ல் ஏற்ற வேலைத்திட்டம். கோத்தா காங்கிரஸ் ஐசனாச்சர்கள், லஸ்ஸாலியர்கள் ஆகிய இரு ஜெர்மன் சோஷலிஸ்டுக் கட்சிகளையும் ஒன்றிணைந்தது. ஐசனாச்சர்கள் ஔகுஸ்ட் பெபெல், வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட் தலைமையில் இருந்தனர்; இவர்கள் சித்தாந்த வழியில் மார்க்ஸ், எங்கெல்சின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள். கோத்தா வேலைத்திட்டம் கதம்பத் தேர்வு வாதத்தால் களங்கப்பட்டிருந்தது. ஐசனாச்சர்கள் பிரதான பிரச்சனைகளில் லஸ்ஸாலியர்களுக்கு விட்டுக் கொடுத்து லஸ்ஸாலிய நிர்ணயிப்புகளை ஏற்றுக்கொண்டு விட்டதால் இந்த வேலைத்திட்டம் சந்தர்ப்பவாதத் தன்மை கொண்டிருந்தது. 1869-ஆம் ஆண்டின் ஐசனாச்சர் வேலைத்திட்டத்துடன் ஒப்பிடுகையில் கோத்தா வேலைத்திட்டம் வெகுவாய்ப் பின்னோக்கிச் சென்று விட்டதென்று மார்க்சும் எங்கெல்சும் கருதினர். மார்க்ஸ் அவருடைய கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனத்திலும், எங்கெல்ஸ் 1875 மார்ச் 18–28ல் பெபெலுக்கு எழுதிய கடித்திலும் இந்த வேலைத்திட்டத்தைக் கடுமையாய் விமர்சனம் செய்து தாக்கினர்.
11. கடந்த நூற்றாண்டின் இறுதியிலும் இந்நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல நாடுகளில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆளும் வட்டாரங்கள் தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் பிளவுபடுத்தவும், சிறு சலுகைகள் அளித்துப் பாட்டாளி வர்க்கத்தைப் புரட்சிப் போராட்டத்திலிருந்து திசை திருப்பவும் முயன்றன. இந்த நோக்கத்துடன் அவை சோஷலிஸ்டுக் கட்சிகளின் சில சீர்திருத்தவாதத் தலைவர்களைப் பிற்போக்கு முதலாளித்துவ அரசாங்கங்களில் பங்கு கொள்ளச் செய்து சூழ்ச்சி புரிந்தன. இங்கிலாந்தில் ‘அமைச்சர் பதவிக்காகத் தம்மை முதலாளித்துவ வர்க்கத்துக்கு விற்றுக் கொண்டு தொழிலாளி வர்க்கத்துக்கு அப்பட்டமாய்த் துரோகம் புரிந்தவர்களில்’ (வி.இ. லெனின்) ஒருவரான ஜான் பெர்னஸ் 1892-ல் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்சில் சோஷலிஸ்டான அலெக்சாண்டர் எத்தியேன் மில்லரண்டு 1899-ல் வால் டெக்–ருசோவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டு முதலாளித்துவ வர்க்கம் அதன் கொள்கையைச் செயல்படுத்த உதவினார். பிற்போக்கு முதலாளித்துவ அரசாங்கத்தில் மில்லரண்டு பங்கு கொண்டதானது பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குப் பெரிதும் தீங்கு புரிந்தது. மில்லரண்டு போக்கு துரோகச் செயலும் திருத்தல்வாதமும் ஆகுமென்று லெனின் குறிப்பிட்டார். இத்தாலியில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லியோனிதா பிஸ்ஸொலாட்டி, இவனோவ் பொனொமி போன்ற சோஷலிஸ்டுகள் அரசாங்கத்துடன் கூடிக் கொள்ளும் போக்கின் பலத்த ஆதரவாளர்களாய்ச் செயல்பட்டனர். 1912-ல் இவர்கள் சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
முதல் உலகப் போரின் போது பல நாடுகளிலும் சமூக _ ஜனநாயகக் கட்சிகளின் சந்தர்ப்பவாத வலதுசாரித் தலைவர்கள் அப்பட்டமான சமூக -தேசிய வெறியர்களாகித் தமது நாடுகளின் முதலாளித்துவ அரசாங்கங்களில் பதவியேற்று அவற்றின் கொள்கையை ஆதரித்தனர்.
12. ருஷ்யாவில் 1917 பிப்ரவரி 27-ல் (மார்ச் 12) நடைபெற்ற முதலாளித்துவ -ஜனநாயகப் புரட்சியின் விளைவாய் எதேச்சதிகாரம் வீழ்த்தப்பட்டு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் நிறுப்பட்டது.
13. காடேட்டுகள் _ கான்ஸ்டிட்யூஷனல் -டெமாக்கிரட்டிக் (அரசியலமைப்புச் சட்ட -ஜனநாயக) கட்சியின் உறுப்பினர்கள். ருஷ்யாவின் மிதவாத -முடியாட்சிவாத முதலாளித்துவ வர்க்கத்தாரின் தலைமையான கட்சியான இது, 1905 அக்டோபரில் நிறுவப்பட்டது. முதலாளிகள், நிலப்பிரபுக்களைச் சேர்ந்த ஸெம்ஸ்துவோ அதிகாரிகள், முதலாளித்துவ அறிவுத்துறையினர் ஆகியோர் இக்கட்சியில் ஒன்று சேர்ந்தனர். முதல் உலகப்போரின்போது ஜார் அரசாங்கத்தின் நாடு பிடிக்கும் வெளிநாட்டுக் கொள்கைக்குக் காடேட்டுகள் முழு ஆதரவளித்தனர். 1917 பிப்ரவரி முதலாளித்துவ- ஜனநாயகப் புரட்சியின்போது முடியாட்சியைப் பாதுகாக்கப் பெருமுயற்சி செய்தனர். முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தில் தலைமை நிலை வகித்து, மக்கள் விரோத, எதிர்ப்புரட்சிக் கொள்கையைக் கடைப்பிடித்தனர். மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சிக்குப் பிற்பாடு காடேட்டுகள் சோவியத் ஆட்சியதிகாரத்தின் பரம வைரிகளாயினர்; ஆயுதமேந்திய எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் யாவற்றிலும், தலையீட்டாளர்களது இராணுவத் தாக்குதல்கள் எல்லாவற்றிலும் பங்கு எடுத்துக் கொண்டனர்.
14. ஞிவீமீ ழிமீuமீ ஞீமீவீt (‘புதிய காலம்’) _ ஜெர்மன் சமூக- ஜனநாயகக் கட்சியின் தத்துவார்த்த சஞ்சிகை. 1883 லிருந்து 1923 வரை ஷ்டுட்கார்ட்டில் வெளியிடப்பட்டு வந்தது. 1917 அக்டோபர் வரையில் கார்ல் காவுத்ஸ்கியும், பிற்பாடு ஹென்ரிக் குனொவும் ஆசிரியர்களாய் இருந்தனர். மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதியவை சில, முதன்முதல் இந்த சஞ்சிகையில் வெளிவந்து கொண்டிருந்தன. இதன் ஆசிரியர்களுக்கு எங்கெல்ஸ் ஆலோசனைகள் கூறி வந்தார். மார்க்சியத்தை விட்டுப் புரண்டு சென்றதற்காக அடிக்கடி அவர்களைக் கண்டன விமர்சனமும் செய்தார்.
தொண்ணூறாம் ஆண்டுகளின் பிற்பாதியில் எங்கெல்ஸ் இறந்தபின் இந்த சஞ்சிகை திருத்தல்வாதக் கட்டுரைகளை முறையாய் வெளியிடத் தொடங்கிற்று. மார்க்சியத்துக்கு எதிரான திருத்தல்வாத இயக்கத்தைத் துவக்கி வைத்த பெர்ன்ஷ்டைனின் சோஷலிசப் பிரச்சனைகள் என்னும் தொடர் கட்டுரையையும் இது வெளியிட்டது. முதலாவது உலகப்போரின் போது (1914-1918) இது மையவாத நிலையை ஏற்று, சமூக–தேசிய வெறியர்களுக்கு ஆதரவு அளித்து வந்தது.
15. இங்கே குறிப்பிடப்படுவது லண்டனில் 1870 செப்டம்பர் 6-க்கும் 9-க்கும் இடையில் கா. மார்க்ஸ் எழுதிய பிரெஞ்சு-பிரஷ்ய யுத்தம் குறித்து சர்வதேச உழைப்பாளர் சங்கப் பொதுச்சபையின் இரண்டாவது உரை. ஐரோப்பாவிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலுமுள்ள சர்வதேச உழைப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு.
16. லு குகல்மனுக்கு கா. மார்க்சின் 1871 ஏப்ரல் 12 கடிதம்.
17. கா. மார்க்ஸ் பிரான்சில் உள்நாட்டுப் போர் பக்கங்கள் 63, 64, 72–73, 77–79 ல் லெனின் இதே நூலிலிருந்து மேற்கோள்கள் தருகிறார்.
18. தியேலொ நரோதா (‘மக்கள் இலட்சியம்’) சோஷலிஸ்டு -புரட்சியாளர் கட்சியின் நாளேடு. 1917 மார்ச்சிலிருந்து 1918 ஜூலை வரை பெத்ரொகிராதில் வெளிவந்தது. அடிக்கடி இதன் பெயர் மாற்றப்பட்டு வந்தது. தேசக் காப்பென்று சொல்லி சமரசவாத நிலையை ஏற்று இது முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்தது. 1918 அக்டோபரில் சமாராவில் திரும்பவும் தொடங்கி நான்கு இதழ்கள் வெளிவந்தன. 1919 மார்ச்சில் மாஸ்கோவில் 10 இதழ்கள் வெளியாயின. எதிர்ப்புரட்சி செயற்பாட்டில் இறங்கியதற்காக இந்தச் செய்தியேடு மூடப்பட்டது.
19. ஹெரஸ்திராதஸ் \ அழியாப் புகழ் பெறலாமென்று எபிசுஸில் டியானா கோயிலுக்குத் தீ வைத்து எரியவிட்ட (கி.மு 356) கிரேக்கர்.
20. ஜிரோண்டுவாதிகள் _ பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் நடைபெற்ற பிரெஞ்சு முதலாளித்துவப் புரட்சியின்போது செயல்பட்ட முதலாளித்துவ அரசியல் கோஷ்டி. மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தாரின் நலன்களைப் பிரதிபலித்தது. புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்குமிடையே இக்கோஷ்டியினர் ஊசலாடினர். முடியாட்சியுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டனர்.
21. பி. எங்கெல்ஸ் குடியிருப்புப் பிரச்சனைக்குப் பிற்பாடு பக்கங்கள் 83–84ல் லெனின் இதே நூலிலிருந்து மேற்கோள்கள் தருகிறார்.
22. பிளான்கிஸ்டுகள் _ பிரெஞ்சு சோஷலிஸ்டு இயக்கத்தில் தோன்றிய ஒரு போக்கின் ஆதரவாளர்கள்; பெயர் பெற்ற புரட்சியாளரும் பிரெஞ்சுக் கற்பனாவாதக் கம்யூனிசத்தின் பிரதிநிதியுமான லுயீ ஒகுஸ்ட் பிளான்கி [Blanquil] (1805-1881) இந்தப் போக்கிற்குத் தலைமை தாங்கினார். “கூலி அடிமை நிலையிலிருந்து மனித குலம் விடுதலை பெற பாட்டாளி வர்க்கப் போராட்டம் தேவையில்லை, சிறுபான்மை அறிவுத்துறையினரின் சிறு கோஷ்டியின் சதிகள் மூலம் இதைச் செய்து விடலாம்’’ (வி.இ.லெனின்) என்று பிளான்கிஸ்டுகள் நம்பினர். எழுச்சி வெற்றி பெற அவசியமான ஸ்தூல நிலைமைகளை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை; வெகு ஜனங்களுடன் தொடர்புகள் கொண்டிருக்க வேண்டுமென்பதை உதாசீனம் செய்தனர். புரட்சிகரக் கட்சியின் முயற்சிகளுக்குப் பதிலாய் இரகசியச் சதியாளர் கோஷ்டியின் செயல்களைக் கொண்டு புரட்சி நடத்தி விடலாமென்று நினைத்தனர்.
23. புரூதோனியவாதிகள் \ விஞ்ஞானத்துக்கு முரணான குட்டி முதலாளித்துவ சோஷலிசப் போக்கின் ஆதரவாளர்கள். மார்க்சியத்துக்குப் பகைமையான போக்கு இது. பிரெஞ்சு அராஜகவாத ழொஸேப் புரூதோன்தான் இதன் சித்தாந்தவாதி. பெரிய முதலாளித்துவ உடைமைகளைப் புரூதோன் குட்டி முதலாளித்துவக் கருத்தோட்டத்திலிருந்து கண்டன விமர்சனம் செய்தார். சின்னஞ் சிறு தனிவுடைமையாளர்களை என்றும் நிலைத்து நீடிக்கச் செய்ய நினைத்து, ‘மக்கள்’ வங்கிகளையும் ‘பரிவர்த்தனை’ வங்கிகளையும் அமைக்க வேண்டுமென்று கூறினார். இவற்றின் துணை கொண்டு தொழிலாளர்கள் உற்பத்திச் சாதனங்களைப் பெற்றுத் தொழில் வினைஞர்களாகி, தமது உற்பத்திப் பண்டங்கள் ‘நியாய’ விலையில் விற்பனையாவதற்கு ஏற்பாடு செய்து கொள்ள முடியுமென்று வாதாடினார். பாட்டாளி வர்க்கத்திற்குள்ள வரலாற்றுப் பணியைப் புரிந்து கொள்ளத் தவறிய அவர், வர்க்கப் போராட்டத்தையும் பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையும் நிராகரித்தார். அராஜகவாதியான அவர் அரசே தேவையில்லை என்று கருதினார். முதலாவது அகிலத்தின் மீது தமது கருத்துக்களைத் திணிக்க முயன்ற புரூதோனியர்களை எதிர்த்து மார்க்சும் எங்கெல்சும் விடாப்பிடியான போராட்டம் நடத்தினர்.
24. கா. மார்க்சின் Der politische Indifferentismus (‘அரசியலின்பால் அக்கறையின்மை’) என்னும் கட்டுரையையும், எங்கெல்சின் அதிகாரம் குறித்து என்னும் கட்டுரையையும் இங்கு லெனின் குறிப்பிடுகிறார். இக்கட்டுரைகள் 1873 டிசம்பரில் இத்தாலிய ÔAlmanacco Republicano per l’anno 1874’ என்ற இதழில் வெளியிடப்பட்டன. பிற்பாடு 1913-ல் இவற்றின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு Die Neue Zeit இல் வெளிவந்தது.
25. கா. மார்க்ஸ். Der politische Indifferentismus (‘அரசியலின்பால் அக்கறையின்மை’).
26. பி. எங்கெல்ஸ். அதிகாரம் குறித்து (The Priniciple of Authorities).
27. பி. எங்கெல்ஸ். அதிகாரம் குறித்து.
28. கா. மார்க்ஸ். கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனம்
29. இங்கு குறிக்கப்படுவது கா. மார்க்சின் மெய்யறிவின் வறுமை (தமிழ் பதிப்பு, மாஸ்கோ, முன்னேற்றப் பதிப்பகம்).
30. எர்ஃபுர்ட் வேலைத்திட்டம் _ ஜெர்மன் சமூக–ஜனநாயகக்கட்சி 1891 அக்டோபரில் எர்ஃபுர்ட் காங்கிரசில் ஏற்ற வேலைத்திட்டம். கோத்தா வேலைத்திட்டத்துடன் (1875) ஒப்பிடுகையில் இது முன்னேற்றத்தைக் குறித்தது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை தவிர்க்க முடியாதவாறு வீழ்ச்சியுற்று அதற்குப் பதிலாய் சோஷலிச முறை தோன்றுமென்ற மார்க்ஸ் போதனையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் வகுக்கப்பட்டது. தொழிலாளி வர்க்கம் அரசியல் போராட்டம் நடத்துவதன் அவசியத்தையும், இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவது கட்சியின் பாத்திரமாகும் என்பதையும் இன்ன பிறவற்றையும் இது வலியுறுத்திற்று. அதேபோதில் இது சந்தர்ப்பவாதத்துக்கு முக்கிய வழிகளில் விட்டுக் கொடுக்கவும் செய்தது. இந்த வேலைத் திட்டத்தின் ஆதி நகலை எங்கெல்ஸ் தமது 1891- ஆம் ஆண்டின் சமூக -ஜனநாயக வேலைத்திட்ட நகலின் விமர்சனம் என்னும் நூலில் விவரமாய் விமர்சித்தார். மொத்தத்தில் இரண்டாவது அகிலத்தின் சந்தர்ப்பவாதம் பற்றிய விமர்சனமாய் இது விளங்கிற்று. ஆனால் ஜெர்மன் சமூக–ஜனநாயகத் தலைவர்கள் எங்கெல்சின் விமர்சனத்தைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தெரியாதபடி இருட்டடிப்பு செய்துவிட்டனர். வேலைத் திட்டத்தின் இறுதி வாசகத்தை வகுக்கையில் எங்கெல்சின் மிக முக்கிய கருத்துரைகளைக் கவனியாது ஒதுக்கிவிட்டனர். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் குறித்து எர்ஃபுர்ட் வேலைத்திட்டம் ஒன்றும் சொல்லாததுதான் அதன் பிரதான குறைபாடு என்றும், சந்தர்ப்பவாதத்துக்குக் கோழைத்தனமாய் விட்டுக் கொடுப்பதாகும் என்றும் லெனின் கருதினார்.
31. சோஷலிஸ்டு– எதிர்ப்புச் சட்டம் (சோஷலிஸ்டுகளுக்கு எதிரான விசேஷச் சட்டம்) _ ஜெர்மனியில் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் சோஷலிஸ்டு இயக்கத்தையும் எதிர்ப்பதற்காக பிஸ்மார்க் ஆட்சி 1878-ல் பிறப்பித்த சட்டம். இந்தச் சட்டத்தின்படி எல்லா சமூக–ஜனநாயகக் கட்சி நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுடைய வெகுஜன நிறுவனங்களுக்கும் தொழிலாளி வர்க்கப் பத்திரிகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது; சோஷலிச நூல்களும் வெளியீடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன; சமூக–ஜனநாயகவாதிகள் நாடு கடத்தப்படுவதும் அடங்கலாய்ப் பலவாறாகவும் அடக்குமுறைக்கு இலக்காயினர். 1890-ல் மக்களின் நிர்ப்பந்தம் காரணமாகவும் வளர்ந்து ஓங்கிவிட்ட தொழிலாளி வர்க்க இயக்கம் காரணமாகவும் சோஷலிஸ்டு-எதிர்ப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டியதாயிற்று.
32. பிராவ்தா (‘உண்மை’) _ சட்டப்பூர்மான போல்ஷிவிக் நாளேடு. இதன் முதல் இதழ் 1912 ஏப்ரல் 22-ல் (மே 5) பீட்டர்ஸ்பர்கில் வெளிவந்தது.
சித்தாந்த வழியில் லெனின் பிராவ்தாவுக்கு வழிகாட்டி வந்தார், அநேகமாய்த் தினசரி அதற்குக் கட்டுரைகள் எழுதி வந்தார். அதைப் போர்க்குணம் படைத்த புரட்சி ஏடாக்கும் பொருட்டு அதன் ஆசிரியர்களுக்கு ஆசோசனைகள் கூறி வந்தார்.
கட்சியின் ஒழுங்கமைப்புப் பணியில் ஒரு கணிசப் பகுதி பிராவ்தாவின் மூலம் நடைபெற்றது. வட்டாரக் கட்சிக் குழுக்களின் பிரதிநிதிகளுடனான மாநாடுகள் பிராவ்தா அலுவலகத்தில் கூட்டப்பட்டன. ஆலைகளில் கட்சிப் பணி பற்றிய தகவல்களும் அதற்கு வந்து சேர்ந்தன. கட்சியின் மத்தியக்குழு, பெத்ரொகிராத் குழு இவற்றின் தாக்கீதுகளை அது கட்சி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தது.
பிராவ்தா போலீசாரின் விடாப்பிடியான தாக்குதல்களுக்கு இலக்காகி வந்தது; 1914 ஜூலை 8-ல் (21-ல்) மூடப்பட்டது.
1917-ஆம் ஆண்டு பிப்ரவரி முதலாளித்துவ–ஜனநாயகப் புரட்சிக்குப் பிற்பாடுதான் திரும்பவும் அது வெளிவரத் தொடங்கிற்று. 1917 மார்ச் 5 (18) முதலாய் அது ருஷ்ய சமூக–ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மத்தியக்குழு, பெத்ரொகிராத் குழு இவற்றின் ஏடாய் வெளி வரலாயிற்று.
பெத்ரொகிராத் வந்து சேர்ந்ததும் லெனின் அதன் ஆசிரியர் குழுவில் சேர்ந்து கொண்டார். முதலாளித்துவ–ஜனநாயகப் புரட்சியை சோஷலிசப் புரட்சியாய் வளரச் செய்வதற்கான லெனின் திட்டத்துக்குரிய இயக்கத்தை பிராவ்தா தொடங்கிற்று.
எதிர்ப்புரட்சி இடைக்கால அரசாங்கத்தின் அடக்குமுறை காரணமாய், 1917 ஜூலையிலிருந்து அக்டோபருக்குள் அது தனது பெயரைப் பன்முறை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. லிஸ்தோக் பிராவ்தி, புரொலிட்டாரி, ரபோச்சி, ரபோச்சி பூத் ஆகிய பெயர்களில் வெளிவந்தது. மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சி வெற்றி யடைந்ததும் 1917 அக்டோபர் 27 (நவம்பர் 9) முதலாய் திரும்பவும் பிராவ்தா என்னும் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
33. பி. எங்கெல்ஸ். மார்க்சின் ‘பிரான்சில் உள்நாட்டுப் போர்’ என்னும் நூலுக்கு முன்னுரை. எங்கெல்ஸ் எழுதிய இதே முன்னுரையிலிருந்து லெனின் திரும்பவும் பக்கங்கள் 106–118 ல் மேற்கோள்கள் தருகிறார்.
34. இங்கு குறிக்கப்படுவது இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரான மென்ஷிவிக் த்ஸெரெத்தேலி 1917 ஜூன் 11 ல் (24 ல்) நிகழ்த்திய சொற்பொழிவு. சோவியத்துக்களின் முதலாவது அனைத்து ருஷ்யக் காங்கிரசின் தலைமைக் குழு, பெத்ரொகிராத் தொழிலாளர், படைவீரர் பிரதிநிதிகளது சோவியத்தின் நிர்வாகக் குழு, விவசாயிகள் பிரதிநிதிகளுடைய சோவியத்தின் நிர்வாகக் குழு, காங்கிரசில் கலந்து கொண்ட எல்லாக் கோஷ்டிகளின் குழுக்கள் ஆகியவற்றின் கூட்டு அமர்வில் அவர் சொற்பொழிவாற்றினார். பெத்ரொகிராத் தொழிலாளர்கள், படை வீரர்களது அமைதியான ஆர்ப்பாட்டங்கள் குறித்து இதைக் கூட்டு அமர்வு விவாதித்தது. போல்ஷிவிக்குகள் இந்த ஆர்ப்பாட்டங்களை ஜூன் 10 (23) ல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இந்தச் சொற்பொழிவு அவதூறாகவும் எதிர்ப்புரட்சியானதாகவும் இருந்தது. த்ஸெரெத்தேலி தமது உரையில், போல்ஷிவிக்குகள் அரசாங்கத்துக்கு எதிராகச் சதி செய்வதாகவும் எதிர்ப்புரட்சிக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டினர்; போல்ஷிவிக்குகளைப் பின்பற்றும் தொழிலாளர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதற்குத் தீர்மானகரமான நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக அச்சுறுத்தினார்.
35. முதல் உலகப் போருக்கு முன்பு ஜெர்மனியில் Los-von-Kirche-Bewegung (‘மதச் சபையை விட்டு வெளியேறு’) அல்லது Kirchenaustrittsbewegung (மதச் சபையிலிருந்து பிரிந்து விடும் இயக்கம்) பெரிய அளவுக்கு வளர்ந்துவிட்டது. திரிபுவாதியான பால் கோரே எழுதிய Kirchenaustrittsbewegung Sozialdemokratie (‘மதச் சபையிலிருந்து பிரிந்துவிடும் இயக்கமும் சமூக-ஜனநாயகமும்’) என்னும் கட்டுரையை 1914 ஜனவரியில் Die Neue Zeit வெளியிட்டு, இந்த இயக்கம் குறித்து ஜெர்மன் சமூக–ஜனநாயகக் கட்சியின் போக்கு பற்றிய விவாதத்தைத் துவக்கி வைத்தது. மதச்சபையிலிருந்து பிரிந்து விடுவதற்கான இயக்கம் குறித்து கட்சி நடுநிலைமை வகிக்க வேண்டுமென்றும், தனது உறுப்பினர்கள் மதத்துக்கும் மதச் சபைக்கும் எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டுமென்றும் வற்புறுத்திய கோரேயைக் கண்டிப்பதற்கு ஜெர்மன் சமூக–ஜனநாயகத்தின் பிரபல தலைவர்கள் தவறிவிட்டனர்.
36. சாத்தியமான சம்பளங்களை 1917 பிற்பாதியில் வழக்கிலிருந்த ரூபிள் நோட்டின் பெறுமானத்தில் லெனின் குறிப்பிடுகிறார்.
முதல் உலகப் போரின் போது ருஷ்யாவில் ரூபிள் நோட்டு வெகுவாய் மதிப்புக் குறைந்திருந்தது.
37. லஸ்ஸாலியர்கள் _ ஜெர்மன் குட்டி முதலாளித்துவ சோஷலிஸ்டு பெர்டினான்டு லஸ்ஸாலின் ஆதரவாளர்கள், ஜெர்மன் தொழிலாளர்களது பொதுச் சங்கத்தின் உறுப்பினர்கள். இச்சங்கம், தொழிலாளி வர்க்கத்தின் மீது செல்வாக்கு பெற முயன்ற முதலாளித்துவ முன்னேற்றவாதிகளை எதிர்ப்பதற்காக 1863-ல் லைப்சிகில் கூட்டப்பட்ட தொழிலாளர் நிறுவனங்களது காங்கிரசில் நிறுவப் பெற்றது. இச்சங்கத்தின் முதலாவது தலைவரே லஸ்ஸால். அதன் வேலைத்திட்டத்தையும் அதன் போர்த்தந்திரத்தின் அடிப்படைக் கூறுகளையும் லஸ்ஸால் வகுத்திட்டார். சங்கத்தின் அரசியல் வேலைத்திட்டம் அனைத்து மக்கள் வாக்குரிமைக்காகப் போராடவும், அதன் பொருளாதார வேலைத்திட்டம் அரசாங்க மானிய உதவி பெற்ற தொழிலாளர் பொருளுற்பத்திக் கழகங்களுக்காகப் போராடவும் அறை கூவின. நடைமுறையில் லஸ்ஸாலும் அவரைப் பின்பற்றியோரும் பிரஷ்யா மேலாதிக்கம் பெறத்தக்க முறையில் நடந்து கொண்டனர், பிஸ்மார்க்கின் பேரரசுக் கொள்கையை ஆதரித்தனர்.
38. ருஷ்ய சமூக –ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் இங்கு குறிக்கப்படுகிறது. இது 1903 ஜூலை 17 _ ஆகஸ்டு 10 ல் (ஜூலை 30 – ஆகஸ்டு 23) நடைபெற்றது. முதல் 13 அமர்வுகள் பிரஸ்ஸெல்ஸில் நடைபெற்றன. பிற்பாடு போலீஸ் அடக்குமுறை காரணமாய், காங்கிரஸ் லண்டனில் நடைபெற வேண்டியதாயிற்று.
39. கா. மார்க்ஸ். பிரான்சில் உள்நாட்டுப் போர்.
40. ஷைலாக் _ ஷேக்ஸ்பியரின் வெனிஸ் வணிகன் நாடகத்தில் வரும் பாத்திரம். பேராசையும் பழிவெறியும் கொண்ட கடுவட்டிக்காரன், தன்னிடம் கடன் வாங்கியவரிடமிருந்து, கடன் பத்திரத்தில் குறிக்கப்பட்டதன்படி ஒரு ராத்தல் சதை வேண்டுமெனக் கோரியவன்.
41. புர்சாக்கி _ பழைய ருஷ்யாவின் மதப் பாடசாலைகளது மாணவர்கள். மதப் பாடசாலை வாழ்க்கைச் சித்திரங்கள் என்னும் புத்தகத்தில் நி.கி. பொமியாலோவ்ஸ்கி இம்மாணவர்களது முரட்டுப் பழக்கங்களை எடுத்துரைத்தார்.
42. முதலாவது அகிலத்தின் ஹேக் காங்கிரஸ் _ 1872 செப்டம்பர் 2–7 ல் நடைபெற்றது. 15 தேசிய நிறுவனங்களைச் சேர்ந்த 65 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இந்தக் காங்கிரசிற்குத் தயார் செய்கையில் மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கப் புரட்சி சக்திகளை ஒன்றுபடுத்த பெரு முயற்சிகள் மேற்கொண்டனர். அவர்களுடைய பிரேரணைக்கு ஏற்ப நிகழ்ச்சி நிரல் ஏற்கப்பட்டது. காங்கிரசிற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டது. நிகழ்ச்சி நிரலில் இரு பிரதான பிரச்சனைகள் இடம் பெற்றன: 1) பொதுச்சபையின் உரிமைகள், 2) பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் செயற்பாடு.
பொதுச் சபையின் உரிமைகளை விரிவாக்குவது குறித்தும், அதன் தலைமையகத்தை இடம் மாற்றுவது குறித்தும், இரகசிய ‘சமூக-ஜனநாயகக் கூட்டணி’ செயல்கள் குறித்தும், இன்ன பிறவற்றைக் குறித்தும் இந்தக் காங்கிரஸ் தீர்மானங்கள் ஏற்றது. பெரும்பாலான தீர்மானங்களை மார்க்சும் எங்கெல்சும் தயாரித்துக் கொடுத்தனர் ஏனையவை அவர்களுடைய பிரேரணைகளின் அடிப்படையில் வகுக்கப் பெற்றவை.
பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் செயற்பாடு பற்றிய தீர்மானம் ‘அரசியல் ஆட்சியதிகாரம் வெல்வது பாட்டாளி வர்க்கத்தின் பெரும் பணியாகி வருகிறது’ என்றும் ‘சமுதாயப் புரட்சியின் வெற்றிக்கு உறுதி செய்து, வர்க்கங்களை ஒழித்திடுவதென்ற அதன் இறுதி நோக்கத்தை அடையும் பொருட்டு’ பாட்டாளி வர்க்கம் தனது சொந்த அரசியல் கட்சியை நிறுவிக் கொண்டாக வேண்டும் என்றும் கூறியது.
எல்லா வகையான குட்டி முதலாளித்துவக் குறுங்குழு வாதத்தையும் எதிர்த்து மார்க்சும் எங்கெல்சும் அவர்களைப் பின்பற்றியோரும் பல ஆண்டுகளாய் நடத்தி வந்த போராட்டம் வெற்றிகரமாய் முடிவுற்றதை இந்தக் காங்கிரஸ் குறிப்பிட்டது. பக்கூனினும் குயில்யோமேயும் ஏனைய அராஜகவாதத் தலைவர்களும் அகிலத்திலிருந்து விலக்கப்பட்டனர்.
ஹேக் காங்கிரசின் பணிகள் அனைத்தும் மார்க்ஸ், எங்கெல்சின் தலைமயில் நடைபெற்றன. இந்தக் காங்கிரசின் தீர்மானங்கள் குட்டி முதலாளித்துவ அராஜகவாதக் கண்ணோட்டத்தின் மீது மார்க்சியம் வெற்றிவாகை சூடியதை அறிவித்தன. பல நாடுகளிலும் தொழிலாளி வர்க்கத்தின் சுயேச்சை அரசியல் கட்சிகள் உதயமாவதற்கு இத்தீர்மானங்கள் பாதையைச் செப்பனிட்டன
43. பி. எங்கெல்ஸ், கா. மார்க்சின் ‘கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனம்’ என்னும் நூலுக்கு முன்னுரை.
44. ஸார்யா (‘உதயம்’) _ ஷ்டுட்கார்ட்டில் 1901–02ல் இஸ்க்ரா ஆசிரியர்கள் வெளியிட்ட மார்க்சிய விஞ்ஞான அரசியல் சஞ்சிகை. நான்கு இதழ்கள் வெளியாயின.
இந்தச் சஞ்சிகை சர்வதேச, மற்றும் ருஷ்யத் திருத்தல்வாதத்தை விமர்சித்தும், மார்க்சியத்தின் தத்துவார்த்த அடிப்படைகளைப் பாதுகாத்தும் எழுதியது
45. இங்கு குறிப்பிடப்படுவது பாரிசில் 1900 செப்டம்பர் 23–27 ல் நடைபெற்ற இரண்டாவது அகிலத்தின் ஐந்தாவது உலக காங்கிரஸ் வால்டெக்–ருசோ எதிர்ப்புரட்சி அரசாங்கத்தில் மில்லாண்டு பங்கு கொண்டதால் விவாதத்துக்கு வந்த ‘அரசியல் ஆட்சியதிகாரம் போராடிப் பெறுவதும் முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணிகளும்’ என்னும் அடிப்படைப் பிரச்சனை குறித்துப் பெரும்பான்மைப் பிரதிநிதிகள் கார்ல் காவுத்ஸ்கியின் தீர்மானத்துக்கு ஆதரவாய் வாக்களித்தனர். இத்தீர்மானம் கூறியதாவது: ‘தனிப்பட்ட ஒரு சோஷலிஸ்டு முதலாளித்துவ அரசாங்கத்தில் பங்கு கொள்வது அரசியல் ஆட்சியதிகாரம் போராடிப் பெறுவதற்கு முறையான துவக்கமாய் அமையுமெனக் கொள்வதற்கில்லை; அவசர நிலைமையில் தற்காலிகமான, விதிவிலக்கான ஏற்பாட்டுக்கு மேல் இது அதிகமாகிவிட முடியாது.’ சந்தர்ப்பவாதிகள் முதலாளித்துவ வர்க்கத்தாருடன் தாம் ஒத்துழைப்பதற்கு நியாயம் கூற அடிக்கடி இந்தத் தீர்மானத்தை ஆதாரமாய்க் குறிப்பிட்டு வந்தனர்.
46. பெர்ன்ஷ்டைனியம் _ சர்வதேச சமூக–ஜனநாயகத்தில் மார்க்சியத்துக்கு விரோதமான சந்தர்ப்பவாதப் போக்கு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனியில் தோன்றியது. இந்தப் போக்கு திருத்தல்வாதத்தின் பலத்த ஆதரவாளரான எடுவார்டு பெர்ன்ஷ்டைனின் பெயரைப் பெறலாயிற்று.
47. கா. மார்க்ஸ். லுயீ போனப்பார்ட்டின் புரூமேர் பதினெட்டு.
48. கா. மார்க்ஸ். பி. எங்கெல்ஸ், கம்யூனிஸ்டு அறிக்கையின் 1872 ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு முகவுரை (தமிழ் பதிப்பு, மாஸ்கோ, முன்னேற்றப் பதிப்பகம்).
49. கா. மார்க்ஸ், பிரான்சில் உள்நாட்டுப் போர்.
50. கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ். கம்யூனிஸ்டுக் கழகத்திற்கு மத்தியக் குழுவின் உரை.
51. கா. மார்க்ஸ். பிரான்சில் உள்நாட்டுப் போர்.
52. இங்கு கூறப்படுவது சிட்னி, பியாட்ரீஸ் வெப் எழுதிய ஆங்கிலேயத் தொழிற்சங்க இயக்கத் தத்துவமும் நடைமுறையும்.
53. சோஷலிஸ்டு மாத சஞ்சிகை (‘Sozialistische Monatshefte) _ ஜெர்மன் சந்தர்ப்பவாதிகளுடைய தலைமையான சஞ்சிகை, சர்வதேசத் திருத்தல்வாதத்தின் வெளியீடு. பெர்லினில் 1897 லிருந்து 1933 வரை வெளியிடப்பட்டு வந்தது. முதல் உலக ஏகாதிபத்தியப் போரின்போது (1914–18) இது சமூக–தேசியவெறி நிலையை மேற்கொண்டது.
54. ழொரேசைப் பின்பற்றியோர் _ பிரெஞ்சு சோஷலிஸ்டு இயக்கத்தின், சர்வதேச சோஷலிஸ்டு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ழான் ழொரேசைப் பின்பற்றியோர். ஏகாதிபத்திய ஒடுக்குமுறையையும் நாடு பிடிக்கும் போர்களையும் எதிர்த்து ஜனநாயகத்துக்காகவும் மக்களின் சுதந்திரங்களுக்காகவும் சமாதானத்துக்காகவும் ழொரேஸ் போராடினார். ழொரேசும் அவரைப் பின்பற்றியோரும் மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைத் திருத்த விரும்பினர். முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தால் சோஷலிசத்தைப் பெற முடியாது. ‘ஜனநாயகக் கருத்து மலர்வதன்’ விளைவாகவே பெற முடியும் என்று கருதினர். ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்குமிடையே வர்க்க அமைதி நிலவ வேண்டும் என்றனர். கூட்டுறவு இயக்கத்தைப் பற்றிய புரூதோனிய பிரமைகள் கொண்டிருந்தனர். முதலாளித்துவத்தில் கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சி படிப்படியாய் சோஷலிசத்துக்கான மாற்றத்தை ஏற்படுத்துமென நம்பினர். 1902-ல் இவர்கள் பிரெஞ்சு சோஷலிஸ்டுக் கட்சியை நிறுவினர். இந்தக் கட்சி சீர்திருத்தவாதக் கருத்துக்களை ஆதரித்தது. 1905-ல் இது பிரான்சின் கேட்டு சோஷலிஸ்டுக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய பிரெஞ்சு சோஷலிஸ்டுக் கட்சியை நிறுவிற்று. ழொரேசும் அவரைப் பின்பற்றியோரும் கொண்டிருந்த சீர்திருத்தவாதக் கருத்துக்களை லெனின் கடுமையாய்க் கண்டன விமர்சனம் செய்தார்.
நெருங்கி வந்த யுத்த அபாயத்தை எதிர்த்து, சமாதானத்துக்காக ழொரேஸ் போராடினார், இதனால் அவர் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தாரின் வெறுப்புக்குப் பாத்திரமானார். உலக யுத்தம் ஆரம்பமாகும் தறுவாயில் பிற்போக்கின் கையாட்களில் அவர் கொல்லப்பட்டார்.
முதல் உலகப் போரின்போது பிரெஞ்சு சோஷலிஸ்டுக் கட்சித் தலைமையில் ஆதிக்க நிலையில் இருந்த ழொரேசைப் பின்பற்றியோர் பகிரங்கமாகவே ஏகாதிபத்திய யுத்தத்தை ஆதரித்து, சமூக–தேசியவெறி நிலையை ஏற்றனர்.
55. பிரிட்டிஷ் சுயேச்சைத் தொழிற் கட்சி (Independent Labour Party) _ வேலைநிறுத்தப் போராட்டம் உயிர் பெற்றெழவும், தொழிலாளி வர்க்க இயக்கம் முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்து சுயேச்சை பெற முயலவும் முற்பட்ட போது 1893-ல் நிறுவிய சீர்திருத்தவாதக் கட்சி, ‘புதிய தொழிற்சங்கங்களின்’ உறுப்பினர்களும், பழைய தொழிற்சங்கங்கள் பலவற்றின் உறுப்பினர்களும், மற்றும் ஃபேபியன்களுடைய செல்வாக்கிலிருந்த அறிவுத்துறையினரும், குட்டி முதலாளித்துவப் பகுதியோரும் இதில் சேர்ந்து கொண்டனர். கியெர் ஹார்டியும் ராம்சே மாக்டொனால்டும் இதற்குத் தலைமை தாங்கினர். தொடக்கத்திலிருந்தே இக்கட்சி முதலாளித்துவ- _ சீர்திருத்தவாத நிலையை ஏற்று நாடாளுமன்றப் போராட்ட முறைகளிலும் மிதவாதக் கட்சியுடன் நாடாளுமன்ற உடன்பாடுகள் காண்பதிலும் தான் முக்கிய கவனம் செலுத்தி வந்தது. ‘மெய்யான சந்தர்ப்பவாதக் கட்சியாகும், எப்பொழுதுமே இது முதலாளித்துவ வர்க்கத்தையே சார்ந்திருந்துள்ளது’ என்று லெனின் இதைப் பற்றிக் கூறினார்.
முதல் உலகப்போர் தொடங்கியதும் இக்கட்சி யுத்த- எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டது, ஆனால் விரைவில் சமூக–தேசியவெறி நிலைகளுக்குச் சரிந்து சென்றுவிட்டது.