காவுத்ஸ்கியை எதிர்த்துப் பெனெகக் ‘இடது தீவிரவாதப்’ போக்கின் பிரதிநிதிகளில் ஒருவராய் வெளிவந்தார். இப்போக்கு ரோஸா லுக்சம்பர்க், கார்ல் ராதெக் முதலானோரையும் கொண்டதாய் இருந்தது. புரட்சிகரப் போர்த்தந்திரத்தை ஆதரித்துச் செயல்பட்ட இவர்கள், கோட்பாடற்ற முறையில் மார்க்சியத்துக்கும் சந்தர்ப்ப வாதத்துக்கும் இடையே ஊசலாடிய ‘மையவாத’ நிலைக்கு காவுத்ஸ்கி சென்று கொண்டிருந்தார் என்ற உறுதியான ஒன்றுபட்ட முடிவுக்கு வந்தனர். இந்தக் கருத்து முற்றிலும் சரியானதென்பது யுத்தத்தால் நிரூபிக்கப்பட்டது. யுத்தத்தின்போது இந்த ‘மையவாத’ (தவறாக மார்க்சியமென அழைக்கப்பட்டது) போக்கு அல்லது ‘காவுத்ஸ்கிவாதம்’ அருவறுக்கத்தக்க அதன் முழு அலங்கோல வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.
வெகுஜன நடவடிக்கைகளும் புரட்சியும் என்ற தலைப்பில் அரசு பற்றிப் பிரச்சனையைக் குறிப்பிடும் ஒரு கட்டுரையில் (Neue Zeit, 1912, மலர் 30, இதழ் 2) பெனெகக், காவுத்ஸ்கியின் போக்கைச் ‘செயலற்ற தீவிரவாதம்’ என்றும், ‘செயலின்றி எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையின் தத்துவம்’ என்றும் சித்திரித்தார். ‘புரட்சியின் வளர்ச்சிப் போக்கை காவுத்ஸ்கி பார்க்க மறுக்கிறார்’ என்று பெனெகக் எழுதினார் (பக்கம் 616). இவ்விவகாரத்தை இந்த வழியில் எடுத்துரைக்கையில், நாம் கருத்து செலுத்தும் பொருளை, அதாவது அரசு சம்பந்தமாய்ப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள்ள கடமைகளின் பிரச்சனையை அணுகினார்.
“பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், அரசு அதிகாரம் பெறுவதற்காக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் மட்டுமின்றி, அரசு அதிகாரத்தை எதிர்க்கும் போராட்டமும் ஆகும்…’’ என்று அவர் எழுதினார். “பாட்டாளி வர்க்க அதிகாரக் கருவிகளின் துணை கொண்டு அரசின் அதிகாரக் கருவிகளை அழித்திடுவதும் கலைப்பதும் தான் (Auflosung) இந்தப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் உள்ளடக்கம் (பக்கம் 544)… இந்தப் போராட்டம் இதன் விளைவாய் அரசு அமைப்பு அடியோடு ஒழிக்கப்படுகிறபோது தான் ஓயும். ஆட்சி புரியும் சிறுபான்மையோரின் ஒழுங்கமைப்பை அழிப்பதன் மூலம் பெரும்பான்மையோரின் ஒழுங்கமைப்பு அப்பொழுது தனது மேம்பாட்டினை அனைவரும் அறிய நிரூபித்துக் காட்டிவிடும்.’’ (பக்கம் 548.)
பெனெகக் தமது கருத்துக்களை வகுத்தளிக்கும் வடிவத்தில் பெரிய குறைகள் உள்ளன. இருப்பினும் இதன் பொருள் தெளிவாய் விளங்குகிறது. இதற்கு காவுத்ஸ்கி எப்படி மறுப்பு உரைத்தார் என்பது கவனிக்கத்தக்கது.
“இதுகாறும் சமூக_-ஜனநாயகவாதிகளுக்கும் அராஜகவாதிகளுக்கும் இருந்துள்ள முரண்பாடு என்னவென்றால், முன்னவர்கள் அரசு அதிகாரம் வெல்ல விரும்பினர், ஆனால் பின்னவர்கள் அதை அழிக்க விரும்பினர். பெனெகக் இரண்டையும் செய்ய விரும்புகிறார்’’ என்று அவர் எழுதினார். (பக்கம் 724.)
பெனெகக்கின் விளக்கம் துல்லியமாகவும் ஸ்தூலமாகவும் இல்லை என்றாலும் _ அவருடைய கட்டுரையின் பிற குறைபாடுகளைக் குறிப்பிட வேண்டியதில்லை, அவை நமது பரிசீலனைப் பொருளுடன் சம்பந்தப்பட்டவை அல்ல _ பெனெகக் எழுப்பும் கோட்பாடு விவகாரத்தை காவுத்ஸ்கி சரியானபடி பற்றிக் கொண்டு பதிலுரைத்தார். கோட்பாடு குறித்த இந்த அடிப்படையான விவகாரத்தில் காவுத்ஸ்கி மார்க்சிய நிலையை அறவே துறந்துவிட்டு முற்றிலும் சந்தர்ப்பவாதத்திடம் ஓடிவிடுகிறார். சமூக_-ஜனநாயகவாதிகளுக்கும் அராஜகவாதிகளுக்குமுள்ள வேறுபாட்டுக்கு அவர் அளிக்கும் இலக்கணம் முழுக்க முழுக்கத் தவறானது; மார்க்சியத்தை அவர் அறவே கொச்சைப்படுத்தித் திரித்துப் புரட்டி விடுகிறார்.
மார்க்சியவாதிகளுக்கும் அராஜகவாதிகளுக்குமுள்ள வேறுபாடு இதுதான்:
- முன்னவர்கள் அரசை அடியோடு ஒழிப்பதை நோக்கமாய்க் கொண்டுள்ள அதேபோது சோஷலிசப் புரட்சியால் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்ட பிறகுதான், சோஷலிசம் வழி வகுக்கிறது என்பதை அங்கீகரிக்கிறார்கள். பின்னவர்கள் அரசை ஒழிப்பதற்குரிய நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமலே எடுத்த எடுப்பிலே அரசை அடியோடு ஒழிக்க விரும்புகிறார்கள்.
- முன்னவர்கள், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்று கொண்டதும் அது பழைய அரசுப் பொறியமைவை அடியோடு அழித்துவிட வேண்டுமென்பதையும், அதனிடத்தில் கம்யூன் வகைப்பட்ட ஆயுதமேந்திய தொழிலாளர்களது ஒழுங்கமைப்பாலான புதிய ஒன்றை நிறுவிக் கொள்வது அவசியமென்பதையும் அங்கீகரிக்கிறார்கள். பின்னவர்கள் அரசுப் பொறியமைவு அழிக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்துகையில், அதனிடத்தில் பாட்டாளி வர்க்கம் நிறுவப் போவது என்ன? பாட்டாளி வரிக்கம் எப்படி தனது புரட்சிகர அதிகாரத்தைப் பிரயோகிக்கப் போகிறது என்பது குறித்துத் தெளிவுடையோராயில்லை. புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்பதைக் கூட அராஜகவாதிகள் மறுக்கிறார்கள்; அதன் புரட்சிகரச் சர்வாதிகாரத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.
- முன்னவர்கள் தற்போதுள்ள அரசைப் பயன்படுத்திப் புரட்சிக்காகப் பாட்டாளி வர்க்கத்துக்குப் பயிற்சி தர வேண்டுமென்று கோருகிறார்கள். அராஜகவாதிகள் இதனை நிராகரிக்கிறார்கள்.
இந்த வாக்குவாதத்தில் மார்க்சியத்தின் பிரதிநிதியாய் விளங்குகிறவர் பெனெகக்கே அன்றி காவுத்ஸ்கி அல்ல. ஏனெனில், பழைய அரசு இயந்திரம் புதிய கரங்களுக்கு மாறி வந்துவிடுகிறது என்கிற பொருளில் பாட்டாளி வர்க்கம் அப்படியே அரசு அதிகாரத்தை வென்று கொண்டுவிட முடியாது, மாறாக அது இந்த இயந்திரத்தை நொறுக்கிவிட்டு, தகர்த்துவிட்டு, அதனிடத்தில் புதிய ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் மார்க்ஸ் போதித்தார்.
காவுத்ஸ்கி மார்க்சியத்தைத் துறந்துவிட்டு சந்தர்ப்பவாத முகாமுக்கு ஓடிவிடுகிறார். எப்படியென்றால், அரசுப் பொறியமைவு அழிக்கப்பட வேண்டுமென்பது _ சந்தர்ப்பவாதிகளுக்குச் சிறிதும் ஏற்புடையதாய் இல்லாத இது _ அவருடைய வாதத்தில் இடம் பெறாமல் பூரணமாய் மறைந்து விடுகிறது; ‘வென்று கொள்வது’ என்பதற்கு வெறுமனே பெரும்பான்மை பெறுதல் என்பதாய் அர்த்தம் கூறலாமாகையால், இவ்வழியில் அவர் சந்தர்ப்பவாதிகளுக்கு ஒரு நுழைவிடம் விட்டு வைக்கிறார்.
மார்க்சியத்தைத் தாம் திரித்துப் புரட்டுவதை மூடி மறைக்கும் பொருட்டு, காவுத்ஸ்கி வறட்டுச் சூத்திரவாதியாய் நடந்து கொள்கிறார்: நேரே மார்க்சிடமிருந்தே ஒரு ‘மேற்கோளை’ எடுத்துரைக்கிறார். 1850_ல் மார்க்ஸ் “அரசின் ஆட்சிக் கரங்களில் அதிகாரம் உறுதியாய் மத்தியத்துவமடைந்திருத்தல்’’ அவசியம் என்று எழுதினார்.50 ஆகவே காவுத்ஸ்கி வெற்றி முழக்கமிட்டுக் கேட்கிறார்: பெனெகக் ‘மத்தியத்துவத்தை’ அழித்திடவா விரும்புகிறார்?
இது ஒரு தந்திரமே அன்றி வேறல்ல. மத்தியத்துவத்துக்கு எதிராய்க் கூட்டாட்சி முறை என்பது குறித்து மார்க்சியம், புரூதோனியம் இவை இரண்டின் கருத்தோட்டங்களும் ஒன்றேதான் என்று பெர்ன்ஷ்டைன் கூற முயன்றாரே அதையொத்த ஒரு தந்திரமே ஆகும்.
காவுத்ஸ்கி கூறும் ‘மேற்கோள்’ இங்கு சிறிதும் பொருந்தாது. மத்தியத்துவம் பழைய அரசுப் பொறியமைவு, புதிய அரசுப் பொறியமைவு இரண்டிலுமே சாத்தியமானதுதான். தொழிலாளர்கள் தாமே மனமுவந்து தமது ஆயுதப்படைகளை ஒன்றுபடுத்திக் கொண்டார்களாயின் அது மத்தியத்துவம் தானே?! ஆனால் இந்த மத்தியத்துவம் மத்தியத்துவ அரசு இயந்திரத்தை _ நிரந்தர சேனை, போலீஸ், அதிகார வர்க்கம் ஆகியவற்றை _ ‘அடியோடு அழிப்பதன்’ அடிப்படையில் அமைந்ததாய் இருக்கும். கம்யூன் குறித்து மார்க்சும் எங்கெல்சும் கூறிய வாதங்களை யாவரும் நன்கு அறிவர்; இவற்றைக் கவனியாது தட்டிக் கழித்துவிட்டு, இங்குள்ள பிரச்சனையுடன் சிறிதும் சம்பந்தப்படாத ஒரு மேற்கோளைப் பிய்த்தெடுத்துக் கூறுவதன் முலம் காவுத்ஸ்கி ஏய்த்துப் பிழைக்கும் எத்தனாய் நடந்து கொள்கிறார்.
“…அவர் [பெனெகக்] அதிகாரிகளுடைய அரசுப் பணிகளை ஒழித்துவிட விரும்புகிறாரா, என்ன?’’ என்று காவுத்ஸ்கி தொடர்ந்து எழுதுகிறார். “ஆனால் அரசு நிர்வாகம் இருக்கட்டும், கட்சியிலும் தொழிற்சங்கங்களிலுங்கூட நம்மால் அதிகாரிகள் இல்லாதபடி செய்ய முடியாதே. நமது வேலைத்திட்டம் அரசு அதிகாரிகள் ஒழிக்கப்பட வேண்டுமென்று கோரவில்லை, அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றுதான் கூறுகிறது… இங்கு நாம் விவாதிப்பது ‘வருங்கால அரசின்’ நிர்வாக இயந்திரம் எவ்வடிவம் கொண்டதாய் இருக்கும் என்பதல்ல, நமது அரசியல் போராட்டம் அரசு அதிகாரத்தை, நாம் அதைப் பிடித்துக் கொள்ளும் முன்பே [அழுத்தம் காவுத்ஸ்கியினுடையது], ஒழித்து விடுகிறதா [சொல்லைப் பெயர்த்தால் கரைத்துவிடுகிறதா _ ணீuயீறீஷீst] என்பதுதான். அதிகாரிகளோடு ஒழிக்கப்படக் கூடிய அமைச்சகம் எது?’’ பிறகு கல்வி, நீதி, நிதி, இராணுவம் ஆகியவற்றின் அமைச்சகங்களின் பட்டியல் தரப்படுகிறது. “இல்லை, அரசாங்கத்துக்கு எதிரான நமது அரசியல் போராட்டத்தால் தற்போதுள்ள அமைச்சகங்களில் எதுவுமே நீக்கப்பட்டு விடாது… தவறாய்ப் புரிந்து கொள்ளப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, திரும்பவும் கூறுகிறேன்; இங்கு நாம் விவாதிப்பது வெற்றி பெறும் சமூக-_ஜனநாயகவாதிகள் ‘வருங்கால அரசுக்கு’ அளித்திடப் போகும் வடிவம் அல்ல, நமது எதிர்ப்பினால் தற்போதுள்ள அரசு எப்படி மாற்றப்படுகிறது என்பதையே விவாதிக்கிறோம்.’’ (பக்கம் 725.)
இது ஒரு தந்திரமே என்பது தெளிவு. பெனெகக் புரட்சி என்னும் பிரச்சனையை எழுப்பினார். அவருடைய கட்டுரையின் தலைப்பும் மேற்கண்ட வாசகங்களும் இதைத் தெளிவாய்ச் சுட்டிக் காட்டுகின்றன. ‘எதிர்ப்பு’ என்னும் பிரச்சனைக்குத் தாவிச் செல்வதன் மூலம், காவுத்ஸ்கி புரட்சிக் கண்ணோட்டத்துக்குப் பதிலாய்ச் சந்தர்ப்பவாதக் கண்ணோட்டத்தைக் கொண்டு வந்து புகுத்துகிறார். அவர் சொல்வதன் பொருள் இதுதான்: தற்போது நாம் எதிர்த்தரப்பாய் இருக்கிறோம்; ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த பிற்பாடு எப்படி இருப்போம், அதை அப்புறம் பார்க்கலாம். புரட்சி மறைந்தே விட்டது! சந்தர்ப்பவாதிகள் விரும்பியது இதுவே தான்.
பிரச்சனை எதிர்ப்பும் அல்ல, பொதுவில் அரசியல் போராட்டமும் அல்ல; புரட்சிதான் பிரச்சனை. புரட்சி என்பது பாட்டாளி வர்க்கம் ‘நிர்வாக இயந்திரத்தை’, அரசு இயந்திரம் அனைத்தையுமே அழித்துவிட்டு, ஆயுதமேந்திய தொழிலாளர்களாலான ஒரு புதிய இயந்திரத்தை அதனிடத்தில் அமைப்பதில்தான் அடங்கியுள்ளது. காவுத்ஸ்கி ‘அமைச்சகங்களிடம்’ ‘மூடபக்தி’ கொண்டிருக்கிறார், இவற்றை நீக்கிவிட்டு, அனைத்து அதிகாரமுள்ள தொழிலாளர்கள், படையாட்கள் பிரதிநிதிகளது சோவியத்துகளின் கீழ் இயங்கும் நிபுணர் குழுக்களை இவற்றுக்குப் பதிலாய் அமைக்க முடியாதா?
‘அமைச்சகங்களே’ தொடர்ந்து இருக்குமா, அல்லது ‘நிபுணர் குழுக்களோ’, வேறு ஏதோ அமைப்புகளோ நிறுவப்படுமா என்பதல்ல கேள்வி _ இது எப்படி இருப்பினும் ஒன்றுதான். பழைய அரசுப் பொறியமைவு (முதலாளித்துவ வர்க்கத்துடன் ஆயிரம் ஆயிரம் இழைகளால் பின்னிப் பிணைக்கப்பட்டதும் மாறாத மாமூல்களிலும் மந்தத்திலும் ஊறிவிட்டதுமான இந்தப் பொறியமைவு) தொடர்ந்து இருந்து வருமா, அல்லது அழிக்கப்பட்டு அதனிடத்தில் புதிய ஒன்று அமைக்கப்படுமா என்பதே கேள்வி. புதிய வர்க்கம் பழைய அரசுப் பொறியமைவின் துணை கொண்டு ஆணை செலுத்தி, ஆட்சி புரிவதில் அடங்குவதல்ல புரட்சி; இந்த வர்க்கம் இந்தப் பொறியமைவை நொறுக்கிவிட்டு, ஒரு புதிய பொறியமைவின் துணை கொண்டு ஆணை செலுத்தி, ஆட்சி புரிவதில்தான் புரட்சி அடங்கியுள்ளது. மார்க்சியத்தின் இந்த அடிப்படைக் கருத்தை காவுத்ஸ்கி மூடி மெழுகி விடுகிறார், அல்லது இதைப் புரிந்துகொள்ளத் தவறி விடுகிறார்.
அதிகாரிகளைப் பற்றி அவர் எழுப்பும் கேள்வி, கம்யூனின் படிப்பினைகளையும் மார்க்சின் போதனைகளையும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்பதைத் தெளிவாய்ப் புலப்படுத்துகிறது. “கட்சியிலும் தொழிற்சங்கங்களிலும் கூட நம்மால் அதிகாரிகள் இல்லாதபடி செய்ய முடியாதே…’’
முதலாளித்துவத்தில், முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியில் நம்மால் அதிகாரிகள் இல்லாதபடி செய்ய முடியாதுதான். முதலாளித்துவத்தால் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்பட்டு இருக்கிறது, உழைப்பாளி மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். முதலாளித்துவத்தில் ஜனநாயகம் கூலி அடிமை முறையின் எல்லா நிலைமைகளாலும் மக்களுடைய வறுமையாலும் துன்பத்தாலும் கட்டுண்டு, இறுக்கப்பட்டு, குறுகலாக்கப்பட்டு, குலைக்கப்பட்டு இருக்கிறது. இக்காரணத்தினால் தான், இது ஒன்றினால்தான், நமது அரசியல் நிறுவனங்கள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் முதலாளித்துவ நிலைமைகளால் களங்கப்படுத்தப்படுகிறார்கள் _ அல்லது இன்னும் துல்லியமாய்ச் சொல்வதெனில் களங்க முறுவதற்கான போக்குடையோர் ஆக்கப்படுகிறார்கள் _ அதிகார வர்க்கத்தினராய், அதாவது மக்களிடமிருந்து பிரிந்து மக்களுக்கு மேலானோராய், தனிச் சலுகை படைத்தோராய், மாறிவிடும் போக்குடையோராகின்றனர்.
அதிகார வர்க்க அமைப்பின் சாராம்சம் இது. முதலாளிகளுடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்படுகிறவரை, முதலாளித்துவ வர்க்கம் வீழ்த்தப்படுகிறவரை, பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் கூட தவிர்க்க முடியாதபடி ஓரளவுக்கு ‘அதிகார வர்க்க மயமாக்கப்படவே’ செய்வர்.
தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் சோஷலிசத்திலும் இருப்பார் களாதலால், காவுத்ஸ்கியின் கூற்றுப்படி அதிகாரிகளும் இருக்கவே செய்வர், அதிகார வர்க்கமும் இருக்கவே செய்யும்! அவருடைய இந்தக் கூற்று முற்றிலும் தவறானது. மார்க்ஸ், கம்யூனுடைய உதாரணத்தைச் சுட்டிக்காட்டி, நிர்வாகிகள் ‘அதிகார வர்க்கத்தினராய்’ இருப்பது, ‘அதிகாரிகளாய்’ இருப்பது சோஷலிசத்தில் முடிவுற்றுவிடும் என்பதைக் காட்டுகிறார்; அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்னும் கோட்பாட்டுடன் கூட, எந்த அளவுக்கு, எந்நேரத்திலும் திருப்பியழைக்கப்படலாமென்ற கோட்பாடும் புகுத்தப்படுகிறதோ, சம்பளங்கள் சராசரி தொழிலாளியுடைய சம்பளத்தின் நிலைக்குக் குறைக்கப்படுகிறதோ, மற்றும் நாடாளுமன்ற உறுப்புகளுக்குப் பதிலாய் ‘ஒருங்கே நிர்வாக மன்றங்களாகவும் சட்ட மன்றங்களாகவும் இயங்கும் செயலாற்றும் உறுப்புகள்’ நிறுவப்படுகின்றனவோ அந்த அளவுக்கு ‘அதிகார வர்க்கத்தினருக்கும்’ ‘அதிகாரிகளுக்கும்’ முடிவு ஏற்பட்டுவிடும்.51
உண்மை என்னவென்றால், பெனெகக்குக்கு எதிரான காவுத்ஸ்கியின் வாதம் முழுதும், இன்னும் முக்கியமாய் நம் கட்சியிலும் தொழிற்சங்க நிறுவனங்களிலுங்கூட நம்மால் அதிகாரிகள் இல்லாதபடி செய்ய முடியாதே என காவுத்ஸ்கி கூறும் அதியற்புத வாதமும், பொதுவில் மார்க்சியத்தை எதிர்த்து பெர்ன்ஷ்டைன் கூறிய அந்தப் பழைய ‘வாதங்களை’ அப்படியே திருப்பிக் கூறுவதே ஆகும். அவருடைய ஓடுகாலிப் புத்தகமான சோஷலிசத்தின் முதற்கோள்களில் பெர்ன்ஷ்டைன் ‘புராதன’ ஜனநாயகத்தின் கருத்துக்களை எதிர்க்கிறார்; ‘வறட்டுச் சூத்திர ஜனநாயகம்’ என்பதாய் அவர் குறிப்பிடும் உரிமைக் கட்டளைகள், சம்பளமில்லா அதிகாரிகள், அதிகாரமில்லா மத்தியப் பிரதிநிதித்துவ அமைப்புகள் முதலானவற்றை எதிர்க்கிறார். இந்தப் ‘புராதன’ ஜனநாயகம் சரியானதல்ல என்று நிரூபிக்கும் பொருட்டு, அவர் வெப் தம்பதியர்52 தந்த விளக்கத்தை ஆதாரமாய்க் கொண்டு பிரிட்டிஷ் தொழிற்சங்கங்களுடைய அனுபவத்தைக் குறிப்பிடுகிறார். ‘பரிபூரண சுதந்திரத்தில்’ தொழிற்சங்கங்கள் எழுபது ஆண்டுக் காலம் வளர்ச்சியுற்றன என்று கூறுகிறார் (பக்கம் 137, ஜெர்மன் பதிப்பு); புராதன ஜனநாயகம் உதவாது என்பதை இந்த வளர்ச்சி அவற்றுக்கு ஐயமற உணர்த்திற்று; ஆகவே அவை இதைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக சாதாரண ஜனநாயகத்தை, அதாவது நாடாளுமன்ற அமைப்பு அதிகார வர்க்கத்துடன் இணைந்தமைந்ததை ஏற்றன என்கிறார்.
உண்மையில், தொழிற்சங்கங்கள் வளர்ந்தது ‘பரிபூரண சுதந்திரத்தில்’ அல்ல, பரிபூரண முதலாளித்துவ அடிமை முறையிலேதான். இந்த நிலைமையில், நடப்பிலுள்ள கேட்டுக்கும், வன்முறைக்கும், பொய்மைக்கும், ‘மேல்நிலை’ நிர்வாக விவகாரங்களிலிருந்து ஏழைகள் ஒதுக்கப்படுதலுக்கும் பல வழிகளிலும் அவை விட்டுக் கொடுப்பது ‘இல்லாதபடி செய்ய முடியாது’ என்பதைக் கூறத் தேவையில்லை. சோஷலிசத்தில் இந்தப் ‘புராதன’ ஜனநாயகத்தின் இயல்புகள் பலவும் தவிர்க்க முடியாதபடிப் புத்துயிர் பெற்றெழும். ஏனென்றால், நாகரிக சமுதாயத்தின் வரலாற்றிலே முதன் முதலாய் மக்கள் தொகையில் மிகப் பெருந் திரளானோர் அப்பொழுது வாக்கெடுப்பிலும் தேர்தல்களிலும் மட்டுமின்றி, அரசின் அன்றாட நிர்வாகத்திலுங்கூட சுயேச்சையாய்ப் பங்கு பெறும் நிலைக்கு உயர்ந்துவிடுவார்கள். சோஷலிசத்தில் எல்லோரும் முறை வைத்துக் கொண்டு அரசாட்சி நடத்தி விரைவில் யாருமே அரசாளாத நிலைமை ஏற்படப் பழகிக் கொண்டு விடுவார்கள்.
விமர்சன _ -பகுத்தாய்வு மேதையான மார்க்ஸ் கம்யூனுடைய நடைமுறை நடவடிக்கைகளில் திருப்புமுனையைக் கண்ணுற்றார். இந்தத் திருப்புமுனை சந்தர்ப்பவாதிகளை நடுங்கச் செய்கிறது. அவர்கள் தமது கோழைத்தனம் காரணமாகவும், முதலாளித்துவ வர்க்கத்துடன் முடிவாகவும் முற்றாகவும் முறித்துக் கொள்ள விரும்பாததன் காரணமாகவும் இந்தத் திருப்புமுனையை அங்கீகரிக்க விரும்பவில்லை. அராஜகவாதிகள் அவர்கள் அவசரக்காரர்களாய் இருப்பதன் காரணமாகவோ, பெரிய சமுதாய மாறுதல்களுக்கான எல்லா நிலைமைகளையும் புரிந்து கொள்ளாததன் காரணமாகவோ இந்தத் திருப்புமுனையைப் பார்க்க விரும்பவில்லை. “பழைய அரசுப் பொறியமைவை அழிப்பது குறித்து நாம் நினைக்கவே கூடாது, அமைச்சகங்களும் அதிகாரிகளும் இல்லாமல் இருக்கவும் முடியுமா?’’ என்பதே சந்தர்ப்பவாதியின் வாதம். சந்தர்ப்பவாதி குட்டி முதலாளித்துவ மனப்பான்மையில் ஊறிப்போனவன், புரட்சியிலும் புரட்சியின் ஆக்க ஆற்றலிலும் உள்ளுக்குள் நம்பிக்கையில்லாதவன், புரட்சி என்றதுமே நடுங்கிச் சாகிறவன் (நமது மென்ஷிவிக்குகளையும் சோஷலிஸ்டு-புரட்சியாளர்களையும் போல).
“பழைய அரசுப் பொறியமைவை ஒழிப்பது பற்றி மட்டுமே நாம் சிந்திக்க வேண்டும், முந்திய பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் ஸ்தூல படிப்பினைகளை அலசி ஆராய்வதிலும், அழிக்கப்பட்டதன் இடத்தில் எதை வைப்பது, எப்படி வைப்பது என்று பகுத்தாய்வதிலும் பயனில்லை’’ என்பதாய் அராஜகவாதி வாதாடுகிறான் (அராஜகவாதிகளில் சிறந்தவர்களையே கூறுகிறேன், கிரப்போத்கின்களைப் போன்றோரைப் பின் தொடர்ந்து முதலாளித்துவ வர்க்கத்துக்கு வால்பிடித்துச் செல்வோரை அல்ல). ஆகவே, அராஜகவாதியின் போர்த்தந்திரம் வெகுஜன இயக்கத்தின் நடைமுறை நிலைமைகளைக் கணக்கில் கொண்டு ஸ்தூலமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய அஞ்சாநெஞ்சம் கொண்ட புரட்சிகர முயற்சியின் போர்த்தந்திரமாய் இல்லாது, விரக்தியின் போர்த்தந்திரமாகி விடுகிறது.
இரு தவறுகளையும் தவிர்த்துக் கொள்ள மார்க்ஸ் போதனை செய்கிறார். பழைய அரசுப் பொறியமைவு அனைத்தையும் அழித்திட உன்னதத் துணிவோடு செயல்படும்படி அவர் போதனை செய்கிறார்; அதேபோது பிரச்சனையை ஸ்தூலமாய் வகுத்திட அவர் போதனை செய்கிறார்: கம்யூனானது விரிவான ஜனநாயகத்துக்கு வழி செய்யவும் அதிகார வர்க்கத்தை வேரோடு வீழ்த்திடவும் இந்த நடவடிக்கைகளை எடுத்து ஒரு சில வாரங்களுக்குள் ஒரு புதிய, பாட்டாளி வர்க்க அரசுப் பொறியமைவை அமைக்கத் தொடங்க முடிந்தது. கம்யூனார்டுகளிடமிருந்து நாம் புரட்சிகரத் துணிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்; அவர்களுடைய நடைமுறை நடவடிக்கைகளில் மெய்யாகவே அவசரமான, உடனடியாகவே சாத்தியமான நடவடிக்கைகளின் உருவரையை நாம் கண்டறிந்து கொள்ள வேண்டும்; பிறகு இந்தப் பாதையைப் பின்பற்றி நாம் அதிகார வர்க்கத்தை அடியோடு அழிப்பதில் வெற்றி பெறுவோம்.
அதிகார வர்க்கம் இவ்வாறு அழிக்கப்படுவதன் சாத்தியப்பாடு பின்வரும் உண்மைகளால் உத்தரவாதம் செய்யப்படுகிறது: சோஷலிசம் வேலை நேரத்தைக் குறையச் செய்யும், புது வாழ்வை மலரச் செய்து மக்கள் திரளை உயர்நிலைக்கு உயர்த்தி விடும், விதிவிலக்கின்றி ஒவ்வொருவரும் ‘அரசுப் பணிகளைச்’ செய்யக் கூடியவர்களாய் உயரும்படியான நிலைமைகளை மக்கள்தொகையில் பெரும்பான்மையோருக்கு உண்டாக்கித் தரும். பொதுவில் அரசின் ஒவ்வொரு வடிவமும் அறவே உலர்ந்து உதிர்வதற்கு இவ்விதம் வழி வகுக்கப்படும்.
“…அரசு அதிகாரத்தை அழிப்பது இதன் குறிக்கோளாய் [வெகுஜன வேலைநிறுத்தத்தின் குறிக்கோளாய்] இருக்க முடியாது’’ என்று காவுத்ஸ்கி தொடர்ந்து எழுதுகிறார். “அரசாங்கத்தைக் குறிப்பிட்ட பிரச்சனையில் இணங்கிவிடச் செய்வதே, அல்லது பாட்டாளி வர்க்கத்துக்குப் பகைமையாயுள்ள அரசாங்கத்தை நீக்கிவிட்டுப் பாட்டாளி வர்க்கத்தை இடைவழியில் சந்திக்க [entgegenkommende] விருப்பம் கொண்ட ஒன்றை அமர்த்துவதே அதன் குறிக்கோளாய் இருக்க முடியும்… ஆனால் ஒருபோதும், எப்படிப்பட்ட நிலைமையிலும், அது’’ [அதாவது, பகை அரசாங்கத்தின் மீதான பாட்டாளி வர்க்க வெற்றி] “அரசு அதிகாரத்தின் அழிவுக்கு இட்டுச் செல்ல முடியாது; அரசு அதிகாரத்தின் வரம்புக்குள் சக்திகளின் பரஸ்பர நிலையிலே ஓரளவு பெயர்ச்சியை [Verschiebung] உண்டாக்குவது மட்டுமே இதன் விளைவாய் இருக்க முடியும்… நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதன் மூலமும் நாடாளுமன்றத்தை அரசாங்கத்தின் எஜமானன் நிலைக்கு உயரச் செய்வதன் மூலமும் அரசு அதிகாரம் வெல்வதே, கடந்த காலத்தைப் போல இப்பொழுதும் நமது அரசியல் போராட்டத்தின் குறிக்கோள்.’’ (பக்கங்கள் 726,727,732.)
இது கலப்பற்ற படுமட்டமான சந்தர்ப்பவாதமே அன்றி வேறல்ல: சொல்லளவில் புரட்சி பேசி, செயலில் புரட்சியை நிராகரிப்பதே அன்றி வேரல்ல. “பாட்டாளி வர்க்கத்தை இடைவழியில் சந்திக்க விருப்பம் கொண்ட… ஓர் அரசாங்கம்’’ _ காவுத்ஸ்கியின் சிந்தனைகள் இதற்கு மேல் செல்ல முடியாதவை, “ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்’’ என்று கம்யூனிஸ்டு அறிக்கை பிரகடனம் செய்த 1847_ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குட்டி முதலாளித்துவக் கழிசடை நிலையின் திசையில் பின்னோக்கி ஓடுவதே ஆகும்.
ஷெய்டெமன்கள், பிளெஹானவ்கள், வண்டர்வேல்டேகள் _ ‘பாட்டாளி வர்க்கத்தை இடைவழியில் சந்திக்க விருப்பம் கொண்ட’ ஓர் அரசாங்கத்துக்காகப் போராட ஒத்துக் கொள்ளும் இவர்கள் எல்லோருடனும் காவுத்ஸ்கி தமது இதயங்கனித்த ‘ஐக்கியத்தை’ அடைந்தாக வேண்டும்.
ஆனால் நாங்கள் சோஷலிசத்தின் துரோகிகளான இவர்களிடமிருந்து முறித்துக் கொள்ளவே செய்வோம். ஆயுதமேந்திய பாட்டாளி வர்க்கம் தானே அரசாங்கமாகி விடும் பொருட்டு நாம் பழைய அரசுப் பொறியமைவை அடியோடு அழிப்பதற்காகப் போராடவே செய்வோம். இவை ‘இரண்டும் அறவே வேறானவை’.
‘அரசு அதிகாரத்தின் வரம்புக்குள் சக்திகளின் பரஸ்பர நிலையிலே பெயர்ச்சியை உண்டாக்கவும்’. “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறவும்’’, “நாடாளுமன்றத்தை அரசாங்கத்தின் எஜமானது நிலைக்கு உயரச் செய்யவும்’’ பணி புரியச் சித்தமாயிருக்கும் லெகின்களும் டேவிட்களும், பிளெஹானவ்களும் பத்ரேசவ்களும் த்ஸெரெத்தேலிகளும் செர்னோவ்களுமானோரின் இனிய சகவாசத்தில் காவுத்ஸ்கி இன்பம் காணட்டும். யாவற்றையும் முதலாளித்துவ நாடாளுமன்றக் குடியரசின் வரம்புகளுக்குள்ளேயே இருத்திக் கொள்வதும், சந்தர்ப்பவாதிகளுக்கு முற்றிலும் ஏற்புடைத்ததுமான இந்த இலட்சியம் மிக்கச் சிறப்பானதே.
ஆனால் நாங்கள் சந்தர்ப்பவாதிகளிடமிருந்து முறித்துக் கொள்வோம். வர்க்க உணர்வு கொண்ட பாட்டாளி வர்க்கம் அனைத்தும் எங்களுடன் சேர்ந்து போராடும் _ “சக்திகளின் பரஸ்பர நிலையில் பெயர்ச்சியை உண்டாக்குவதற்காக’’ அல்ல, முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்துவதற்காக, முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை அழிப்பதற்காக, கம்யூனை முன்மாதிரியாகக் கொண்ட ஜனநாயகக் குடியரசு அல்லது தொழிலாளர்கள், படையாட்களது பிரதிநிதிகளின் சோவியத்துகளுடைய குடியரசுக்காக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரத்துக்காகப் போராடும்.
***
சர்வதேச சோஷலிசத்தில் காவுத்ஸ்கிக்கு வலப்புறத்தில் ஜெர்மனியில் சோஷலிஸ்டு மாத சஞ்சிகை53 (லெகின், டேவிட், கோல்ப் மற்றும் ஸ்டாளிங், பிராண்டிங் ஆகிய ஸ்காண்டினேவியர்களும் அடங்கலான ஏனைய பலரும்); பிரான்சிலும் பெல்ஜியத்திலும் ழொரேசைப் பின்பற்றியோரும்54 வண்டர்வேல்டேயும்; இத்தாலியக் கட்சியின் டுராட்டியும் திரெவெசும் பிற வலதுசாரிகளும்; பிரிட்டனில் ஃபேபியன்களும் ‘சுயேச்சையாளர்களும்’ (‘சுயேச்சைத் தொழிற் கட்சி’55 எப்பொழுதுமே, உண்மையில், மிதவாதிகளைச் சார்ந்ததாகவே இருந்துள்ளது), இன்ன பிறரும் உள்ளனர். இந்தக் கனவான்கள் எல்லோரும் நாடாளுமன்ற வேலையிலும் இவர்களுடைய கட்சிப் பத்திரிகைகளிலும் பெரும் பங்கு, பல சந்தர்ப்பங்களில் முதன்மையான பங்கு, ஆற்றுகிறவர்கள்; இவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை அறவே புறக்கணித்துவிட்டு, ஒளிவுமறைவற்ற சந்தர்ப்பவாதக் கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள். இந்தக் கனவான்களின் கண்களில் பாட்டாளி வர்க்கச் ‘சர்வாதிகாரம்’ ஜனநாயகத்துக்கு ‘முரணானது’!! இவர்களுக்கும் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கும் உண்மையில் அடிப்படை வேறுபாடு எதுவும் இல்லை.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், இரண்டாவது அகிலம், அதாவது அதன் அதிகாரபூர்வமான பிரதிநிதிகளில் மிகப் பெருவாரியான பிரிவு, முழுக்க முழுக்கச் சந்தர்ப்பவாதத்தில் மூழ்கிவிட்டது என்று முழு நியாயத்துடன் முடிவு செய்யலாம். கம்யூனின் அனுபவம் புறக்கணிக்கப்பட்டதோடு அல்லாமல், திரித்துப் புரட்டவும் பட்டிருக்கிறது. பழைய அரசுப் பொறியமைவை நொறுக்கி அதனிடத்தில் புதிய ஒன்றை அமைக்கத் தொழிலாளர்கள் செயல்பட வேண்டும், இவ்வழியில் அவர்கள் தமது அரசியல் ஆட்சியை சமுதாயத்தின் சோஷலிசப் புனரமைப்புக்குரிய அடித்தளமாக்கிக் கொள்ள வேண்டும், இதற்குரிய தருணம் அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது என்கிற கருத்தைத் தொழிலாளர்களுடைய மனதில் பதிய வைப்பதற்குப் பதிலாய், உண்மையில் இதற்கு நேர் விரோதமான ஒன்றைத்தான் இப்பிரதிநிதிகள் வெகுஜனங்களுக்குப் பிரசாரம் செய்து, சந்தர்ப்பவாதத்துக்கு ஆயிரக்கணக்கான நுழைவிடங்கள் விட்டு வைக்கும் விதத்தில் ‘ஆட்சியதிகாரம் வெல்வதற்கான போராட்டத்தைச்’ சித்திரித்துள்ளனர்.
ஏகாதிபத்திய போட்டியின் விளைவாய் விரிந்து வளர்ந்து விட்ட இராணுவ இயந்திரத்தைக் கொண்ட அரசுகள் இராணுவ பூதங்களாகி, உலகை ஆள வேண்டியது பிரிட்டனா, ஜெர்மனியா _ இந்த நிதி மூலதனமா அல்லது அதுவா _ என்னும் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இப்பூதங்கள் இலட்சோப இலட்சம் மக்களை அழித்தொழித்திடும் ஒரு நேரத்தில், அரசின்பால் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள்ள போக்கு குறித்த பிரச்சனையைத் திரித்துப் புரட்டுவதும் மூடி மறைப்பதும் மிகப் பெரும் பாத்திரம் ஆற்றாது இருக்காது*