"

சமுதாயத்துக்கு மேலானதாய் நிற்கும் தனிவகைப் பொது அதிகாரத்தின் பராமரிப்புக்காக வரிகளும் அரசுக் கடன்களும் தேவைப்படுகின்றன.

“… பொது அதிகாரமும் வரிகள் வசூலிக்கும் உரிமையும் பெற்ற அதிகாரிகள் சமுதாயத்தின் ஆட்சி உறுப்புக்கள் என்ற முறையில் சமுதாயத்துக்கு மேலானவர்களாய் நிற்கிறார்கள்’’ என்று எங்கெல்ஸ் எழுதுகிறார். “புராதன [குலச்] சமுதாய அமைப்பின் ஆட்சி உறுப்புக்களுக்கு மனம் விரும்பி சுதந்திரமாய் அளிக்கப்பட்ட மதிப்பும் மரியாதையும்_அவர்களால் இவற்றைப் பெற முடிவதாய்க் கொண்டாலுங்கூட_அவர்களுக்குத் திருப்தி அளிப்பனவாய் இல்லை…’’ அதிகாரிகளுடைய புனித நிலையையும் காப்புரிமையையும் பறைசாற்றும் தனிச்சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ‘கீழ்த்தர போலீஸ் ஊழியனுக்குக் கூட’ குலத்தின் பிரதிநிதிகளைக் காட்டிலும் அதிக ‘செல்வாக்கு’ இருக்கிறது. ஆயினும் குலத்தின் முதலாளருக்குச் சமுதாயம் அளித்த ‘வலுக்கட்டாயமற்ற மதிப்பையும் மரியாதையையும்’ கண்டு நாகரிக அரசின் இராணுவ அதிகாரத்தின் தலைவருங்கூட பொறாமை கொள்வார்.

அரசு அதிகார உறுப்புக்களான அதிகாரிகளுடைய தனி உரிமை நிலை என்கிற பிரச்சனை இங்கு எழுப்பப்படுகிறது. இங்கு சுட்டிக் காட்டப்படும் பிரதான விவரம் இதுவே: இவர்களைச் சமுதாயத்துக்கு மேலானவர்களாய் அமர்த்துவது எது? இந்தத் தத்துவார்த்தப் பிரச்சனைக்கு 1871_ல் பாரிஸ் கம்யூன் நடைமுறையில் எவ்வாறு தீர்வு கண்டது என்பதையும், பிற்போக்கான ஒரு நிலையிலிருந்து 1912_ல் காவுத்ஸ்கி எப்படி இதனை மூடி மறைத்தார் என்பதையும் பிற்பாடு நாம் பார்ப்போம்.

“… வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் காரணமாய் அரசு உதித்தது என்பதனாலும், அதே போதில் இந்த வர்க்கங்களுக்கிடையிலான மோதல்களிலிருந்தே அது உதித்தது என்பதனாலும், பொதுவாக அது மிகப் பெரும் பலம் படைத்த, பொருளாதாரத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் அரசாகி விடுகிறது. அரசின் உதவியால் இவ்வர்க்கம் அரசியல் துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமாகி, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கி வைப்பதற்கும் சுரண்டுவதற்கும் இவ்வாறு புதிய சாதனங்களைப் பெற்றுக் கொள்கிறது…’’ புராதன அரசுகளும் பிரபுத்துவ அரசுகளும், அடிமைகளையும் பண்ணையடிமைகளையும் சுரண்டுவதற்கான அமைப்புகளாய் இருந்தன. இதே போல “நவீன காலப் பிரதிநிதித்துவ அரசு கூலி உழைப்பை மூலதனம் சுரண்டுவதற்கான கருவியாய் இருக்கிறது. ஆனால் விதிவிலக்காய்ச் சில கால கட்டங்கள் ஏற்படுவது உண்டு. ஒன்றோடொன்று போரிடும் வர்க்கங்கள் ஒன்றுக்கொன்று ஏறத்தாழ சமநிலை பெறும் இக்கட்டங்களில் அரசு அதிகாரம் வெளித்தோற்றத்துக்கு நடுவர் போலாகி, சொற்ப காலத்துக்கு இரு தரப்பாரிடமிருந்தும் ஓரளவு சுயேச்சையுடையதாகிறது…’’ பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளின் வரம்பற்ற முடியாட்சி முறையும், பிரான்சில் முதலாவது, இரண்டாவது சாம்ராஜ்யங்களது போனப்பார்ட் ஆட்சியும் ஜெர்மனியில் பிஸ்மார்க் ஆட்சியும் இத்தகையனவே.

குடியரசு ருஷ்யாவில், கேரென்ஸ்கி அரசாங்கம் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுடைய தலைமையின் காரணமாய், சோவியத்துகள் ஏற்கனவே ஆற்றலிழந்தும் முதலாளித்துவ வர்க்கம் அவற்றைக் கலைக்க இன்னமும் பலம் பெறாமலும் இருந்த ஒரு தருணத்தில், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடத் தொடங்கியது முதலாய் இத்தகையதே என்பதையும் இங்கு நாம் குறிப்பிடலாம். எங்கெல்ஸ் மேலும் எழுதுகிறார்:

ஐனநாயகக் குடியரசில் “செல்வமானது மறைமுகமாய், ஆனால் முன்னிலும் திடமாய் அதிகாரம் செலத்துகிறது’’. முதலாவதாக ‘நேரடியாய் அதிகாரிகளுக்கு லஞ்சம் தருவதன் மூலமும்’ (அமெரிக்கா), இரண்டாவதாக ‘அரசாங்கத்தைப் பங்கு மார்க்கெட்டுடன் கூட்டு சேரச் செய்வதன்’ மூலமும் (பிரான்சும் அமெரிக்காவும்) அது அதிகாரம் செலுத்துகிறது.

எல்லா வகையான ஜனநாயகக் குடியரசுகளிலும் தற்போது ஏகாதிபத்தியமும் வங்கிகளுடைய ஆதிக்கமும், செல்வத்தின் வரம்பில்லா அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும் செயல்படுத்துவதற்குமான இவ்விரு வழிகளையும் தனிப் பெருங் கலையாய் “வளரச் செய்துவிட்டன’’. உதாரணமாய், ருஷ்ய ஜனநாயகக் குடியரசின் ஆரம்ப மாதங்களில்,_ ‘சோஷலிஸ்டுகளான’ சோஷலிஸ்டுப்- புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு மாலையிட்டுக் கூட்டு அரசாங்கத்தில் கூடித் தேன்நிலவு கொண்டாடியபோது எனலாம்_திரு. பல்ச்சீன்ஸ்கி, முதலாளிகளையும், அவர்களுடைய கொள்ளைக்காரச் செயல்களையும், இராணுவக் காண்டிராக்டுகள் மூலம் அரசை அவர்கள் சூறையாடியதையும் கட்டுப்படுத்துவதற்கான ஒவ்வொரு நடவடிக்கையையும் தடுத்து நின்றார். பிற்பாடு அமைச்சரவையிலிருந்து திரு. பல்ச்சீன்ஸ்கி ராஜினாமா செய்ததும் (முற்றிலும் அவரையே ஒத்த மற்றொரு பல்ச்சீன்ஸ்கிதான் அவரிடத்தில் அமர்ந்தார் என்பதைக் கூறத் தேவையில்லை), ஆண்டுக்கு 1,20,000 ரூபிள் சம்பளத்தில் சொகுசான வேலை கொடுத்து முதலாளிகள் அவருக்கு ‘வெகுமதி’ அளித்தார்களே, அதை என்னென்பது? நேரடியான அல்லது மறைமுகமான லஞ்சம் என்பதா? அரசாங்கத்துக்கும் சிண்டிகேட்டுகளும் இடையிலான கூட்டு என்பதா? அல்லது ‘வெறும்’ நேச உறவுகள் என்பதா? செர்னோவ்கள், த்ஸெரெத்தேலிகள், அவ்க்சேன்தியெவ்கள், ஸ்கோபெலெவ்கள் ஆகியோர் ஆற்றும் பணி என்ன? இவர்கள் கஜானாவைச் சூறையாடும் கோடீஸ்வரர்களின் ‘நேரடிக்’ கூட்டாளிகளா? அல்லது மறைமுகக் கூட்டாளிகளா?

ஜனநாயகக் குடியரசில் ‘செல்வத்தின்’ சக்கராதிபத்தியம் மேலும் உறுதியாகிவிடுவன் காரணம் என்னவெனில், அரசியல் பொறியமைவின் தனிப்பட்ட குறைபாடுகளையோ, முதலாளித்துவத்தின் மோசமான அரசியல் கவசத்தையோ அது ஆதாரமாய்க் கொண்டிருக்கவில்லை என்பதுதான். ஜனநாயகக் குடியரசு தான் முதலாளித்துவத்துக்கு மிகச் சிறந்த அரசியல் கவசமாகும். ஆகவே மூலதனம் இந்த மிகச் சிறந்த கவசத்தை (பல்ச்சீன்ஸ்கிகள், செர்னோவ்கள், த்ஸெரெத்தேலிகள் முதலானோர் மூலம்) பெற்றுக் கொண்டதும், அது முதலாளித்துவ-ஜனநாயகக் குடியரசின் ஆட்களிலோ, நிறுவன ஏற்பாடுகளிலோ, கட்சிகளிலோ ஏற்படும் எந்த மாற்றத்தாலும் அசைக்க முடியாதபடி திடமாகவும் உறுதியாகவும் தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்கிறது.

அனைத்து மக்கள் வாக்குரிமையை எங்கெல்ஸ் மிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்துக்குரிய கருவி என்பதாய் அழைப்பதையும் நாம் குறிப்பிட வேண்டும். ஜெர்மன் சமூக- ஜனநாயகத்தின் நெடுங்கால அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் அவர் பின்வருமாறு கூறுகிறார்: அனைத்து மக்களின் வாக்குரிமை, “தொழிலாளி வர்க்கத்தினுடைய முதிர்ச்சியின் அளவுகோலாகும். தற்கால அரசில் அது இதற்கு மேல் எதுவாகவும் இருக்காது, இருக்கவும் முடியாது’’.

நம்முடைய சோஷலிஸ்டு_புரட்சியாளர்களையும் மென்ஷிவிக்குகளையும் போன்ற குட்டி முதலாளித்துவ ஜனநாயக வாதிகளும், இவர்களுடைய உடன் பிறந்த சகோதரர்களான மேற்கு ஐரோப்பிய சமூக -தேசிய வெறியர்கள், சந்தர்ப்பவாதிகள் அனைவரும் அனைத்து மக்களின் வாக்குரிமையிடமிருந்து இதற்கு ‘மேற்பட்ட’ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். ‘இன்றைய அரசில்’ அனைத்து மக்களின் வாக்குரிமை உழைப்பாளி மக்களில் பெரும்பாலானோரின் சித்தத்தை மெய்யாகவே புலப்படுத்திக் காட்ட வல்லது, இந்தச் சித்தம் நிறைவேற வழி செய்ய வல்லது என்ற பொய்க் கருத்தை இவர்கள் கொண்டுள்ளனர்; மக்களுக்கும் இதனை ஊட்டி வருகின்றனர்.

இங்கு இந்தப் பொய்க் கருத்தைச் சுட்டிக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறோம். எங்கெல்சின் முற்றிலும் தெளிவான, கறாரான, ஸ்தூலமான உரை ‘அதிகாரப் பூர்வமான’ (அதாவது சந்தர்ப்பவாத) சோஷலிஸ்டுக் கட்சிகளின் பிரசாரத்திலும் கிளர்ச்சியிலும் இடையறாது திரித்துப் புரட்டப்படுவதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம். எங்கெல்ஸ் இங்கு உதறியெறியும் இந்தக் கருத்து முழுக்க முழுக்கப் பொய்யானதென்பதை ‘இன்றைய’ அரசு குறித்த மார்க்ஸ், எங்கெல்சின் கருத்துக்களைப் பற்றி மேலும் தொடர்ந்து நாம் கூறுவதிலிருந்து விவரமாய்ப் புலப்படும்.

எங்கெல்ஸ் தமது கருத்துக்களை மிகவும் பெயர் பெற்ற தமது நூலில் பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்:

“ஆகவே அரசு அனாதிக் காலம் முதலாய் இருந்துள்ள ஒன்றல்ல. அரசின்றியே நிலவிய சமுதாயங்கள், அரசையும் அரசு அதிகாரத்தையும் அறியாத சமுதாயங்கள் இருந்திருக்கின்றன. பொருளாதார வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில்_சமுதாயம் வர்க்கங்களாய்ப் பிளவுண்டதுடன் இணைந்த ஒரு கட்டத்தில்_அரசு இந்தப் பிளவின் காரணமாய் இன்றியமையாததாகியது. இந்த வர்க்கங்கள் பொருளுற்பத்திக்கு இன்றியமையாத் தேவையாய் இருப்பது மறைவதோடு, நேரடியாகவே இடையூறுமாகி விடும் ஒரு கட்டத்தைப் பொருளுற்பத்தி வளர்ச்சியில் இப்பொழுது நாம் விரைவாய் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். முந்தைய ஒரு கட்டத்தில் வர்க்கங்கள் தவிர்க்க முடியாதவாறு உதித்தெழுந்தது போலவே தவிர்க்க முடியாதவாறு அவை மறைந்தொழியும். அவற்றுடன் கூடவே அரசும் தவிர்க்க முடியாதவாறு மறைந்தொழியும். சமுதாயமானது உற்பத்தியாளர்களுடைய சுதந்திரமான, சரிசமத்துவமான கூட்டமைப்பின் அடிப்படையில் பொருளுற்பத்தியைப் புனரமைத்து, அரசுப் பொறியமைவு அனைத்தையுமே அதற்கு அப்பொழுது உரித்தான இடத்தில், அதாவது தொல்பொருள் காட்சிக்கூடத்தில், கைராட்டைக்கும் வெண்கலக் கோடரிக்கும் பக்கத்திலே கொண்டுபோய் வைத்துவிடும்’’.

இன்றைய சமூக_ஜனநாயகவாதிகளின் பிரசார, கிளர்ச்சி வெளியீடுகளில் இந்த மேற்கோளைக் காண்பது அரிதாகிவிட்டது. அப்படி இது காணப்படும்போது கூட, பூஜையறைப் படத்தைத் தொழுதெழுகிறவரின் பாணியிலேதான், அதாவது சம்பிரதாய முறையில் எங்கெல்சுக்கு மரியாதை செலுத்தும் பாணியிலேதான் பெரும்பாலும் எடுத்தாளப்படுகிறது. ‘அரசுப் பொறியமைவு அனைத்தையும் தொல்பொருள் காட்சிக் கூடத்தில்’ கொண்டுபோய் வைப்பதில் அடங்கியுள்ள புரட்சியின் வீச்சையும் ஆழத்தையும் மதிப்பிட்டறிய எம்முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. அரசுப் பொறியமைவு என்று எங்கெல்ஸ் குறிப்பிடுவதன் அர்த்தத்தைப் புரிந்து கெள்வதாகக்கூட பல சந்தர்ப்பங்களில் தெரியக் காணோம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

அரசும் புரட்சியும் Copyright © 2014 by jayend16; லெனின்; and Vladimir Ilyich Lenin is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book