அரசு ‘உலர்ந்து உதிர்வது’ பற்றி எங்கெல்ஸ் கூறிய சொற்கள் மிகவும் பிரபலமானவை; அடிக்கடி மேற்கோளாய் எடுத்தாளப்படுபவை; மார்க்சியத்தைச் சந்தர்ப்பவாதத்துக்கு இசைவானதாக்குவதற்காக வழக்கமாய்ச் செய்யப்படும் புரட்டின் சாரப்பொருளை மிகத் தெளிவாகப் புலப்படுத்துகிறவை. ஆகவே இவற்றை நாம் விவரமாய்ப் பரிசீலிக்க வேண்டும். இவை எங்கிருந்து எடுக்கப்பட்டனவோ, அந்த வாக்குவாதம் முழுவதையுமே நாம் மேற்கோளாய்த் தந்தாக வேண்டும்.
“பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி உற்பத்திச் சாதனங்களை முதலில் அரசு உடைமையாக்குகிறது. ஆனால் இதன் மூலம் அது, பாட்டாளி வர்க்கமாகத் தான் இருத்தலை ஒழித்துக் கொள்கிறது, எல்லா வர்க்க வேறுபாடுகளையும் வர்க்கப் பகைமைகளையும் ஒழித்திடுகிறது, அரசு அரசாய் இருத்தலையும் ஒழித்திடுகிறது. இதுவரை சமுதாயம் வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்திருந்ததால் அதற்கு அரசு தேவைப்பட்டது; அதாவது, குறிப்பிட்ட சுரண்டும் வர்க்கத்துக்கான ஒழுங்கமைப்பு ஒன்று தேவைப்பட்டது. இந்தச் சுரண்டும் வர்க்கத்துக்குரிய பொருளுற்பத்திப் புறநிலைகளை நிலை நாட்டுவதற்காகவும், இதன் பொருட்டு இன்னும் முக்கியமாய், சுரண்டப்படும் வர்க்கத்தை அந்தந்தப் பொருளுற்பத்தி அமைப்பாலும் (அடிமை முறை, பண்ணையடிமை முறை, கூலியுழைப்பு முறை) நிர்ணயிக்கப்படும் ஒடுக்கு முறை நிலைமைகளில் பலவந்தமாய் இருத்தி வைப்பதற்காகவும் இந்தச் சமுதாயத்துக்கு அரசு தேவைப்பட்டது. சமுதாயம் அனைத்தின் அதிகாரபூர்வமான பிரதிநிதியாக, கண்கூடான அதன் உருவகத் திரட்சியாக அரசு விளங்கிற்று. ஆனால் எந்த வர்க்கம் தன்னுடைய காலத்தில் சமுதாயம் முழுவதுக்கும் தானே பிரதிநிதியாக இருந்ததோ அந்த வர்க்கத்தின் அரசாய் இருந்த அளவுக்குத்தான், அதாவது புராதன காலத்தில் அடிமையுடைமைக் குடிகளின் அரசாக இருந்த அளவுக்குத்தான், அரசால் இவ்வாறு விளங்க முடிந்தது. இறுதியில் அரசானது சமுதாயம் முழுமைக்கும் மெய்யான பிரதிநிதியாகிவிடும் போது, அது தன்னைத் தேவையற்றதாக்கிக் கொள்கிறது. இனி கீழ்ப்படுத்தி வைக்க வேண்டிய சமூக வர்க்கம் எதுவும் இல்லாமற் போனதும், வர்க்க ஆதிக்கமும் பொருளுற்பத்தி முறையில் தற்போதுள்ள அராஜகத்தின் அடிப்படையில் நடைபெறும் தனியார் வாழ்வுப் போராட்டமும் இந்தப் போராட்டம் காரணமாய் எழும் மோதல்களும் மட்டுமீறிய செயல்களும் நீக்கப்பட்டதும், கீழ்ப்படுத்தி வைப்பதற்கு எதுவும் இல்லாமற் போகிறது, ஆதலால் தனிவகைப் பலவந்த சக்தியை_அரசினை_அவசியமாக்கும் எதுவும் இல்லாமற் போகிறது. அரசானது சமுதாயம் முழுமையின் பிரதிநிதியாக மெய்யாகவே முன்வந்து புரிந்திடும் முதலாவது செயல்_அதாவது பொருளுற்பத்திச் சாதனங்களைச் சமுதாயத்தின் உடைமையாக்கிக் கொள்ளும் இச்செயல்_அரசு என்ற முறையில் சுயேச்சையாய் அது புரிந்திடும் இறுதிச் செயலாகவும் அமைந்துவிடுகிறது. சமூக உறவுகளில் அரசின் தலையீடு ஒவ்வொரு துறையிலுமாய்த் தேவையற்றதாகி, பிற்பாடு தானாகவே தணிந்து அணைந்து விடுகிறது. ஆட்களை ஆளும் அரசாங்கமானது பொருள்களது நிர்வகிப்பாய், பொருளுற்பத்தி வேலைகளது நடப்பாய் மாறி விடுகிறது. அரசு ‘ஒழிக்கப்படுவதில்லை’. அது உலர்ந்து உதிர்ந்துவிடுகிறது. ‘சுதந்திர மக்கள் அரசு’ என்னும் தொடர் எந்த அளவுக்கு மதிக்கத்தக்கது என்பதையும்_கிளர்ச்சியை முன்னிட்டுச் சில நேரங்களில் எந்த அளவுக்கு அதன் பிரயோகம் நியாயமென்பதையும், முடிவில் விஞ்ஞான வழியில் அது எவ்வளவு குறைபாடானதென்பதையும்_அராஜகவாதிகளுடைய கோரிக்கையாகச் சொல்லப்படும் ஒரே நொடியில் அரசு ஒழிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எந்த அளவுக்கு மதிக்கத்தக்கக்கது என்பதையும் மேற்கூறியது புலப்படுத்துகிறது.’’ (விஞ்ஞானத்தில் திருவாளர் ஒய்கென் டூரிங்கின் புரட்சி [டூரிங்குக்கு மறுப்பு], பக்கங்கள் 301-_03, மூன்றாவது ஜெர்மன் பதிப்பு).
கருத்து வளத்தில் தலைசிறந்து விளங்கும் எங்கெல்சின் இந்த வாக்குவாதத்தில் ஒரேயொரு விவரம் மட்டும்தான் நவீன கால சோஷலிஸ்டுக் கட்சிகளுடைய சோஷலிச சிந்தனையில் இடம் பெறுகிறதெனத் திடமாய்க் கூறலாம். அரசு ‘ஒழிக்கப்பட வேண்டும்’ என்னும் அராஜகவாதக் கோட்பாட்டுக்கு மாறாக, மார்க்சின் கருத்துப்படி அரசு ‘உலர்ந்து உதிர்ந்துவிடும்’ என்கிற ஒரேயொரு விவரம் மட்டும்தான் ஏற்கப்பட்டுள்ளது. மார்க்சியத்தைச் சந்தர்ப்பவாதமாய்ச் சிறுமைப்படுத்துவதே அன்றி வேறல்ல. ஏனெனில் இந்த ‘வியாக்கியானம்’ பாய்ச்சல்களும் சூறாவளிகளும் இல்லாமலே, புரட்சி இல்லாமலே, மெதுவாகவும், ஏன் பையப் பையவுங்கூட நடந்தேறும் மாறுதல் என்கிற தெளிவற்ற கருத்தை மட்டும்தான் விட்டு வைக்கிறது. அரசு ‘உலர்ந்து உதிர்வது’ பற்றி தற்போது பரவலாய்_பிரபலமாய் என்றுகூடச் சொல்லலாம்_நிலவும் கருத்தினை, புரட்சியை நிராகரிக்கும் கருத்தெனக் கொள்ளாவிடிலும், நிச்சயமாய்ப் புரட்சியை முனை மழுங்கச் செய்யும் கருத்தென்றே கொள்ள வேண்டும்.
மார்க்சியத்தை அப்பட்டமாய்த் திரித்துப் புரட்டும் ‘வியாக்கியானமே’ ஆகும் இது. முதலாளித்துவ வர்க்கத்துக்குத்தான் இதனால் அனுகூலம். தத்துவத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கையில், உதாரணமாய் மேலே நாம் முழுமையாய் எடுத்தளித்த எங்கெல்சின் ‘தொகுப்பு உரை’ சுட்டிக் காட்டும் மிக முக்கிய நிலைமைகளையும் காரணக் கூறுகளையும் புறக்கணிப்பதையே இது அடிப்படையாய்க் கொண்டுள்ளது.
முதலாவதாக, எங்கெல்ஸ் தமது உரையின் தொடக்கத்திலேயே, பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் அது “அரசு அரசாய் இருத்தலை ஒழித்திடுகிறது’’ என்கிறார். இதன் பொருள் குறித்துச் சிந்திப்பது அவசியமெனக் கருதப்படுவதில்லை. பொதுவாய் இது சிறிதும் கவனியாது விடப்படுகிறது, அல்லது எங்கெல்சிடம் இருந்த ஒரு வகை ‘ஹெகலியப் பலவீனத்தின்’ பாற்பட்டதாய்க் கருதப்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில், இச்சொற்கள் மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளில் ஒன்றான 1871_ஆம் ஆண்டின் பாரிஸ் கம்யூனது அனுபவத்தைச் சுருக்கமாய் எடுத்துரைக்கின்றன. இது குறித்து உரிய இடத்தில் நாம் விவரமாய்ப் பேசுவோம். உண்மை என்னவெனில், எங்கெல்ஸ் இங்கு பாட்டாளி வர்க்கப் புரட்சி முதலாளித்துவ அரசை ‘ஒழித்திடுவது’ குறித்துப் பேசுகிறார். அரசு ‘உலர்ந்து உதிர்வது’ பற்றிய சொற்கள் சோஷலிசப் புரட்சிக்குப் பிற்பாடு பாட்டாளி வர்க்க அரசின் மிச்சங்களைக் குறிப்பனவாகும். எங்கெல்சின் கருத்துப்படி முதலாளித்துவ அரசு ‘உலர்ந்து உதிர்வதில்லை’; புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்கத்தால் ‘ஒழிக்கப்படுகிறது’. இந்தப் புரட்சிக்குப் பிறகு உலர்ந்து உதிர்வது பாட்டாளி வர்க்க அரசு அல்லது அரை_அரசே ஆகும்.
இரண்டாவதாக, அரசு என்பது ‘தனிவகைப் பலவந்த சக்தியாகும்’. தேர்ந்த தெளிவுடன் இங்கு எங்கெல்ஸ் இந்த அற்புதமான, ஆழ்ந்த பொருட் செறிவுள்ள இலக்கணத்தை வகுத்தளிக்கிறார். இதிலிருந்து பெறப்படுவது என்னவெனில், பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கம் அடக்குவதற்காக, கோடானுகோடியான உழைப்பாளி மக்களை ஒரு சில செல்வந்தர்கள் ஒடுக்குவதற்காக அமைந்த ‘தனிவகைப் பலவந்த சக்திக்குப்’ பதிலாய், முதலாளித்துவ வர்க்கத்தைப் பாட்டாளி வர்க்கம் அடக்குவதற்கான ‘தனிவகைப் பலவந்த சக்தியை’ (பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை) அமைத்தாக வேண்டும். ‘அரசு அரசாய் இருத்தலை ஒழித்திடுவது’ என்பதன் அர்த்தம் இதுவே, பொருளுற்பத்திச் சாதனங்களைச் சமுதாயத்தின் உடைமையாக்கிக் கொள்ளும் ‘செயல்’ இதுவேதான். ஒரு (முதலாளித்துவ) ‘தனிவகை சக்திக்குப்’ பதிலாய் மற்றொரு (பாட்டாளி வர்க்க) ‘தனிவகை சக்தியை’ இத்தகைய முறையில் அமைத்திடுவது ‘உலர்ந்து உதிரும்’ வடிவில் நடைபெறுவது சாத்தியமல்ல என்பது கூறாமலே விளங்கக்கூடியது.
மூன்றாவதாக, அரசு ‘உலர்ந்து உதிர்வது’ பற்றியும், இன்னுங்கூட பளிச்சென விளங்கும் வண்ணம் கவர்ச்சிகரமாய் அமைந்த ‘தானாகவே தணிந்து அணைந்துவிடுவது’ பற்றியும் எங்கெல்ஸ் பேசுகையில், “பொருளுற்பத்திச் சாதனங்களைச் சமுதாயம் அனைத்தின் உடைமையாக்கிக் கொண்டதற்குப்’’ பிற்பட்ட காலத்தையே அதாவது சோஷலிசப் புரட்சிக்குப் பிற்பட்ட காலத்தையே மிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் குறிப்பிடுகிறார். இக்காலத்தில் ‘அரசின்’ அரசியல் வடிவம் முழு அளவிலான, முழு நிறைவான ஜனநாயகமாகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆகவே எங்கெல்ஸ் இங்கு ஜனநாயகம் ‘தானாகவே தணிந்து அணைந்துவிடுவது’ அல்லது ‘உலர்ந்து உதிர்ந்துவிடுவது’ பற்றிப் பேசுகிறார்; வெட்கங்கெட்ட முறையில் மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டும் சந்தர்ப்பவாதிகள் யாருடைய மண்டையிலும் இது நுழைவதே இல்லை. முதல் பார்வைக்கு இது மிக விநோதமாகவே தோன்றுகிறது. ஆனால் ஜனநாயகம் என்பதும் ஓர் அரசே ஆகும், ஆதலால் அரசு மறையும் போது அதுவும் மறைந்தே ஆக வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்காதவர்களுக்குத்தான் இது ‘புரியாததாய்’ இருக்கும். புரட்சியால் மட்டுமே முதலாளித்துவ அரசை ‘ஒழிக்க’ முடியும். பொதுவாக அரசு எனப்படுவது, அதாவது முழு அளவிலான, முழு நிறைவான ஜனநாயகம் எனப்படுவது ‘உலர்ந்து உதிரவே’ முடியும்.
நான்காவதாக, ‘அரசு உலர்ந்து உதிர்கிறது’ என்ற புகழ் பெற்ற தமது கோட்பாட்டை வகுத்தளித்ததும் எங்கெல்ஸ் இந்தக் கோட்பாடு சந்தர்ப்பவாதிகள், அராஜகவாதிகள் ஆகிய இரு சாராரின் கூற்றுக்கும் எதிரானது என்பதைத் திட்டவட்டமாய் உடனே விளக்குகிறார். இவ்வாறு விளக்குகையில், ‘அரசு உலர்ந்து உதிர்கிறது’ என்ற நிர்ணயிப்பிலிருந்து பெறப்படுவதில் சந்தர்ப்பவாதிகளுக்கு விரோதமான முடிவை எங்கெல்ஸ் முன்னணியிலே நிறுத்துகிறார்.
அரசு ‘உலர்ந்து உதிர்வது’ பற்றி படித்தோ கேட்டோ இருப்போரில் பத்தாயிரத்தில் 9,990 பேர், எங்கெல்ஸ் எடுத்துரைத்த முடிவுகள் விரோதமாயிருந்தது அராஜகவாதிகளுக்கு மட்டுமல்ல என்பதைச் சிறிதும் உணராதவர்களாகவோ, ஞாபகத்தில் வைத்திராதவர்களாகவோ தான் இருப்பார்கள் என்று பந்தயம் கட்டலாம். எஞ்சியுள்ள பத்துப் பேரில், ஒன்பது பேர் ‘சுதந்திர மக்கள் அரசு’ என்பதன் பொருள் தெரியாதவர்களாகவோ, இந்த முழக்கத்தைத் தாக்குவது சந்தர்ப்பவாதி களைத் தாக்குவதாக அமைவது ஏனென்று அறியாதவர்களாகவோதான் இருப்பார்கள். வரலாறு இவ்விதம்தான் சன்னம் சன்னமாய்ப் பொய்யாகத் திரித்துக் கூறப்பட்டு நடப்பிலுள்ள அற்பவாதத்துக்கு ஏற்றதாக்கப்படுகிறது. அராஜகவாதிகளுக்கு விரோதமான முடிவு ஆயிரக்கணக்கான முறை திரும்பத் திரும்பப் பறை சாற்றப்பட்டிருக்கிறது; கொச்சைப்படுத்தப்பட்டுப் படுமோசமான வடிவத்தில் மக்களுடைய மனதில் ஆழப் பதிக்கப்பட்டுத் தப்பெண்ணமாய் இறுகி விடும்படி வளர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் சந்தர்ப்பவாதிகளுக்கு விரோதமான முடிவு மழுங்கடிக்கப்பட்டு ‘மறக்கப்பட்டு விட்டது’!
‘சுதந்திர மக்கள் அரசு’ என்பது 1870_80 ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் சமூக- ஜனநாயகவாதிகளது வேலைத்திட்டத்தில் குறிக்கப்பட்ட கோரிக்கையாய் அமைந்து அவர்களிடையே பெருவழக்காகிவிட்ட முழக்கமாயிருந்தது, இந்த முழக்கம் ஜனநாயகம் என்னும் கருத்தோட்டத்தை ஆடம்பரமான அற்பவாதப் பாணியில் சித்திரிக்கிறதென்பதைத் தவிர வேறு அரசியல் உள்ளடக்கம் சிறிதும் இல்லாததே ஆகும். சட்ட முறையில் அனுமதிக்கப்பட்ட வழியில் சூசகமாய் அது ஜனநாயகக் குடியரசைக் குறித்தவரை, கிளர்ச்சியை முன்னிட்டுச் ‘சில நேரங்களில்’ அதைப் பிரயோகிப்பது ‘நியாயமே’ என்பதை எங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார். ஆனால் அது சந்தர்ப்பவாத முழக்கமே ஆகும். ஏனெனில் அது முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு மெருகிட்டு மினுங்கச் செய்வதுடன் நில்லாமல், பொதுவாய் அரசு குறித்த சோஷலிச விமர்சனத்தைப் புரிந்து கொள்ளவும் தவறிவிடுகிறது. ஜனநாயகக் குடியரசானது முதலாளித்துவத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு மிகச் சிறந்த அரசு அமைப்பாகுமென நாம் அதனை ஆதரிக்கிறோம். ஆனால் மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவக் குடியரசிலுங்கூட கூலியடிமையிலேதான் மக்கள் உழல வேண்டியிருக்கிறதென்பதை மறக்க நமக்கு உரிமை இல்லை. மேலும் ஒவ்வொரு அரசும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கியாளுவதற்கான ‘தனிவகை சக்தியே’ ஆகும். ஆகவே, எந்தவொரு அரசும் சுதந்திரமானதும் அல்ல, மக்கள் அரசும் அல்ல. மார்க்சும் ‘எங்கெல்சும் 1870-_80 ஆம் ஆண்டுகளில் தமது கட்சித் தோழர்களுக்கு இதைத் திரும்பத் திரும்ப விளக்கிக் கூறினர்.7
ஐந்தாவதாக, அரசு உலர்ந்து உதிர்வது பற்றிய கருத்து_யாரும் மறக்காது நினைவில் கொண்டுள்ள இந்தக் கருத்து_காணப்படும் எங்கெல்சின் அதே நூலில், பலாத்காரப் புரட்சியின் முக்கியத்துவம் குறித்த கருத்தும் அடங்கியிருக்கிறது. பலாத்காரப் புரட்சியின் பாத்திரம் குறித்து எங்கெல்ஸ் அளிக்கும் வரலாற்று வழிப்பட்ட பகுத்தாய்வு, பலாத்காரப் புரட்சியைப் போற்றும் மெய்யான புகழுரையாகி விடுகிறது. இது ‘யாருக்கும் நினைவில் இல்லை’. நவீன கால சோஷலிஸ்டுக் கட்சிகளில் இந்தக் கருத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசுவதும், ஏன் நினைப்பதுங்கூட தகாததாகி விட்டது. இக்கட்சிகள் மக்களிடையே நடத்தும் அன்றாடப் பிரசாரத்திலும் கிளர்ச்சியிலும் இக்கருத்துக்கு எவ்விதப் பங்கும் அளிக்கப்படுவதில்லை. ஆயினும் இக்கருத்து அரசு ‘உலர்ந்து உதிரும்’ கருத்துடன் பிரிக்க முடியாதபடி இணைந்ததாகும்.
இதோ இருக்கிறது எங்கெல்சின் கருத்து:
“… ஆனால் வரலாற்றில், பலாத்காரம் இன்னொரு பாத்திரமும்’’ [பேய்த்தனமான சக்திக்குரிய பாத்திரத்தை அன்னியில் இன்னொன்றும்] “ஆற்றுகிறது; புரட்சிப் பாத்திரமும் ஆற்றுகிறது. மார்க்சின் சொற்களில் கூறுவதெனில், புதிய சமுதாயத்தைக் கருக் கொண்டுள்ள ஒவ்வொரு பழைய சமுதாயத்துக்கும் அந்தப் பலாத்காரம் மருத்துவத் தாதியாய்ச் செயல்படுகிறது8; சமூக இயக்கமானது செத்து மடிந்து இறுகிப் போய்விட்ட அரசியல் வடிவங்களைத் தகர்த்துக் கொண்டு பலவந்தமாய்த் தனக்குப் பாதை வகுத்துக் கொள்ள உதவும் கருவியாய்ச் செயல்படுகிறது. இவையெல்லாம் குறித்து திருவாளர் டூரிங் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. சுரண்டலை அடிப்படையாய்க் கொண்ட ஒரு பொருளாதார முறையைக் கவிழ்க்கப் பலாத்காரம் ஒருவேளை அவசியமாகி விடலாமென்று ஏக்கத் தவிப்புக்கும் முனகலுக்கும் இடையே ஒருவாறு அவர் ஒத்துக் கொள்கிறார்_இது துரதிர்ஷ்டமே என்கிறார், ஏனெனில் பலாத்காரத்தின் எவ்வகையான பிரயோகமும் அதைப் பிரயோகிப்பவரைச் சீரழியச் செய்கிறதாம். வெற்றிகரமான ஒவ்வொரு புரட்சியும் அறநெறித் துறையிலும் ஆன்மிகத் துறையிலும் அளவு கடந்த ஆர்வமும் வேகமும் அளித்திடுவதைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிட்டுக் கூறப்படுகிறது இது! அதுவும் ஜெர்மனியிலே, முப்பதாண்டுப் போரின்9 அவக்கேட்டைத் தொடர்ந்து தேச மனோபாவத்தில் ஊடுருவிவிட்ட அடிமைப் புத்தியானது பலாத்கார மோதலால்_மக்கள் இதில் இறங்கும்படியான நிர்ப்பந்தம் ஏற்படுவது சாத்தியமே_ஒழித்துக் கட்டப்படுமென்ற அனுகூலமாவது கிட்டும் நிலையிலுள்ள ஜெர்மனியிலே, இது கூறப்படுகிறது. பாதிரியாருக்குரிய உப்புச்சப்பில்லாத, செயலிழந்த, கிழடு தட்டிய இந்தச் சிந்தனை இதுவரை வரலாறு கண்டறிந்த கட்சிகளில் மிகவும் புரட்சிகரக் கட்சியின் மீது தன்னை இருத்திக் கொண்டு விடலாமென நினைக்கிறது!’’ (பக்கம் 193, மூன்றாவது ஜெர்மன் பதிப்பு, பாகம் 2, அத்தியாயம் 4_ன் முடிவில்.)
பலாத்காரப் புரட்சியைப் போற்றும் இந்தப் புகழுரையை எங்கெல்ஸ் 1878_க்கும் 1894_க்கும் இடையில்_அதாவது அவர் இறக்கும் தருணம் வரையில்_ஜெர்மன் சமூக -ஜனநாயகவாதிகளின் கவனத்துக்கு ஓயாது கொண்டுவந்த வண்ணமிருந்தார். இதனையும் அரசு ‘உலர்ந்து உதிரும்’ தத்துவத்தையும் இணைத்து ஒருமித்த ஒரே தத்துவமாக்குவது எப்படி?
வழக்கமாய்க் கதம்பத் தேர்வுவாத வழியில், முதலில் ஒன்றும் பிற்பாடு மற்றொன்றுமாய்த் தான்தோன்றித்தனமாய் (ஆதிக்கம் செலுத்துவோர் மகிழும் பொருட்டு) கொள்கை கோட்பாடின்றி அல்லது குதர்க்கவாத முறையில் தேர்வு செய்யப்பட்டு இவை இரண்டும் இணைக்கப்படுகின்றன. நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சந்தர்ப்பங்களிலும் அதற்கும் கூடுதலாகவும் ‘உலர்ந்து உதிரும்’ கருத்து முன்னணியிலே நிறுத்தப்படுகிறது. இயக்கவியல் கைவிடப்பட்டு அதற்குப் பதிலாய்க் கதம்பத் தேர்வுவாதம் கைக்கொள்ளப்படுகிறது_மார்க்சியம் சம்பந்தமான அதிகாரபூர்வமான இன்றைய சமூக -ஜனநாயக வெளியீடுகளில் இதுவே மிகவும் பரவலாகக் காணப்படும் சர்வ சாதாரண நடைமுறை. இவ்வகையான மாறாட்டம் ஒன்றும் புதியதல்ல; முதுபெரும் கிரேக்கத் தத்துவவியலின் வரலாற்றிலே கூடக் காணப்பட்டதுதான். சந்தர்ப்பவாத முறையில் மார்க்சியத்தைப் புரட்டிப் பொய்யாக்குவதில், இயக்கவியலுக்குப் பதிலாய்க் கதம்பத் தேர்வுவாதத்தைக் கைக்கொள்வதுதான் மக்களை ஏமாற்ற மிகவும் எளிய வழி. இது பிரமையான போலி மனநிறைவு அளிக்கிறது. நிகழ்ச்சிப் போக்கின் எல்லாத் தரப்புகளையும், வளர்ச்சியின் எல்லாப் போக்குகளையும், முரண்பட்டு மோதிக் கொள்ளும் எல்லாச் செயற்பாடுகளையும், இன்ன பிறவற்றையும் இது கணக்கில் எடுத்துக் கொள்வதாய்த் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது சமூக வளர்ச்சிப் போக்கைப் பற்றி முழுமையான ஒருமித்த புரட்சிகரக் கருத்தோட்டம் தருவதே இல்லை.
பலாத்காரப் புரட்சி தவிர்க்க முடியாததென்ற மார்க்ஸ், எங்கெல்சின் போதனை முதலாளித்துவ அரசைக் குறித்ததாகும் என்பதை ஏற்கனவே நாம் கூறியிருக்கிறோம். பிற்பாடு இன்னும் விவரமாய்ச் சொல்வோம். முதலாளித்துவ அரசை நீக்கி அதனிடத்தில் பாட்டாளி வர்க்க அரசை (பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை) நிறுவுவது ‘உலர்ந்து உதிரும்’ நிகழ்ச்சிப் போக்கின் வாயிலாய் நடந்தேற முடியாது; பொது விதிக்கு இணங்க இது பலாத்காரப் புரட்சியின் வாயிலாகவே நடந்தேற முடியும். பலாத்காரப் புரட்சியைப் போற்றும் எங்கெல்சின் புகழுரை மார்க்ஸ் திரும்பத் திரும்பக் கூறியதற்கு முற்றிலும் இசைவானதே (மெய்யறிவின் வறுமை, கம்யூனிஸ்டு அறிக்கை இவற்றின் கடைசி வாசகங்கள் பலாத்காரப் புரட்சி தவிர்க்க முடியாததென்பதைப் பெருமிதத்தோடும் பகிரங்கமாகவும் பறைசாற்றுவதைப் பார்க்கவும்; இதன் பின் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிற்பாடு, 1875_ஆம் ஆண்டின் கோத்தா வேலைத்திட்டத்தை10 விமர்சனம் செய்கையில் அந்த வேலைத் திட்டத்தின் சந்தர்ப்பவாதத் தன்மையைத் தயவு தாட்சண்யமின்றிக் கண்டித்து மார்க்ஸ் எழுதியதைப் பார்க்கவும்). எங்கெல்சின் இந்தப் புகழுரை வெறும் ‘உணர்ச்சி வேகமோ’, உத்வேக முழக்கமோ, சண்டப் பிரசண்டமோ அல்ல, பலாத்காரப் புரட்சி பற்றிய திட்டவட்டமான இதே கருத்தோட்டத்தை முறையாய் வெகுஜனங்களின் மனதில் ஆழப் பதியச் செய்வது அவசியமென்பது மார்க்ஸ், எங்கெல்சின் போதனை அனைத்தின் ஆணி வேர் போன்றதாகும். இவர்களுடைய போதனைக்குத் தற்போது நடப்பிலுள்ள சமூக -தேசிய வெறிப் போக்கும் காவுத்ஸ்கிவாதப் போக்கும் இழைத்து வரும் துரோகமானது, இந்தப் போக்குகள் இத்தகைய பிரசாரத்தையும் கிளர்ச்சியையும் கைவிட்டு விட்டதில் மிகவும் எடுப்பாய் வெளிப்படுகிறது.
பலாத்காரப் புரட்சி இல்லாமல் முதலாளித்துவ அரசு பாட்டாளி வர்க்க அரசாய் மாற முடியாது. பாட்டாளி வர்க்க அரசு, அதாவது பொதுவில் அரசெனப்படுவது, ‘உலர்ந்து உதிரும்’ நிகழ்ச்சிப் போக்கின் மூலமாகவே அன்றி வேறு எவ்வழியிலும் அகற்றப்பட முடியாதது.
குறிப்பிட்ட புரட்சிகரச் சூழ்நிலை ஒவ்வொன்றையும் பரிசீலித்ததன் மூலமும், குறிப்பிட்ட புரட்சி ஒவ்வொன்றின் அனுபவத்தைப் பகுத்தாய்ந்ததன் மூலமும் மார்க்சும் எங்கெல்சும் இந்தக் கருத்துக்களை விவரமாகவும் ஸ்தூலமாகவும் விளக்கினர். சந்தேகத்துக்கு இடமின்றி இதுவே அவர்களுடைய போதனையின் மிக முக்கியப் பகுதி. இனி இந்த முக்கியப் பகுதிக்குச் செல்வோம்.