சோஷலிசத்தின்பால் அராஜகவாதத்துக்குள்ள போக்கு குறித்து அராஜகவாதமும் சோஷலிசமும் என்ற தலைப்பில் பிளெஹானவ் ஒரு
தனிப் பிரசுரம் எழுதினார். 1894_ல் இது ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது.
இந்தப் பொருள் குறித்துப் பரிசீலிக்கையில் பிளெஹானவ் அராஜகவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் மிகவும் சூடான, அவசர அவசியமான, அரசியல் வழியில் இன்றியமையாத பிரச்சனையை, அதாவது அரசின்பால் புரட்சிக்குள்ள போக்கையும் பொதுவில் அரசு பற்றிய பிரச்சனையையும் அறவே தட்டிக் கழிப்பதில் வெற்றி கண்டுவிட்டார்! அவருடைய பிரசுரம் இரு வேறு பகுதிகளாய்ப் பிரிக்கப்படக் கூடியது: ஒரு பகுதி வரலாற்று வழியிலும் இலக்கிய வழியிலும் அமைந்தது, ஸ்டிர்னர், புரூதோன், மற்றும் பலருடைய கருத்துக்களின் வரலாறு பற்றிய வளமான விவரங்கள் அடங்கியது; மற்றொரு பகுதி அற்பத்தனமானது, அராஜகவாதிக்கும் கொள்ளைக்காரனுக்கும் வேறுபாடு காண முடியாதென்ற பொருள் பற்றிய அலங்கோலமான விரிவுரை அடங்கியது.
ஆய்வுப் பொருள்களின் இணைப்பில் இது மிகவும் நூதனமானது; ருஷ்யாவில் புரட்சி தொடங்கும் தறுவாயிலும் புரட்சிக் காலத்தின்போதும் பிளெஹானவின் செயற்பாடுகள் அனைத்துக்கும் எடுப்பான எடுத்துக்காட்டாய் இது விளங்குகிறது. 1905_க்கும் 1917_க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் தாம் உண்மையில் பகுதியளவு வறட்டுச் சூத்திரவாதியாகவும் பகுதியளவு குட்டி முதலாளித்துவ அற்பவாதியாகவும் இருந்து அரசியலில் முதலாளித்துவ வர்க்கத்துக்கு வால் பிடித்ததை வெளிப்படுத்திக் கொண்டு விடுகிறார்.
அராஜகவாதிகளுடன் நடத்திய வாக்குவாதத்தில் மார்க்சும் எங்கெல்சும் அரசின் பால் புரட்சிக்குள்ள போக்கு குறித்து தமது கருத்துக்களை மிகவும் தீர்க்கமாய் விளக்கினர் என்பதை மேலே நாம் கண்ணுற்றோம். மார்க்சினுடைய கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனத்துக்கு 1891_ல் எங்கெல்ஸ் தீட்டிய முகவுரையில் ‘நாம்’ (அதாவது எங்கெல்சும் மார்க்சும்) “அந்தக் காலத்தில், [முதலாவது] அகிலத்தின் ஹேக் காங்கிரஸ்42 முடிவுற்று இரண்டு ஆண்டுகள் ஆகு முன்னரே, பக்கூனினையும் அவரது அராஜகவாதிகளையும் எதிர்த்து மிகக் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்’ என்று எழுதினார்.43
பாரிஸ் கம்யூனை அராஜகவாதிகள் ‘தமக்கே’ உரியதென உரிமை கொண்டாடி தமது தத்துவத்துக்கு அது ஒரு நிரூபணமாய் அமைந்தது போலப் பேச முயன்றார். பாரிஸ் கம்யூனுடைய படிப்பினைகளையும், இந்தப் படிப்பினைகளைப் பற்றி மார்க்ஸ் அளித்த பகுத்தாய்வையும் புரிந்து கொள்ள அவர்கள் அறவே தவறிவிட்டனர். பழைய அரசு பொறியமைவு தகர்க்கப்பட வேண்டியதுதானா? அதனிடத்தில் நிறுவப்பட வேண்டியது என்ன? _ இந்த ஸ்தூலமான அரசியல் கேள்விகளுக்குரிய சரியான பதில்களுக்கு ஓரளவு அருகே வரத்தக்கதாய்க்கூட எதனையும் அராஜகவாதம் அளிக்கவில்லை.
ஆனால் ‘அராஜகவாதமும் சோஷலிசமும்’ என்பது குறித்துப் பேசப் புகுந்து, அதேபோதில் அரசு பற்றிய பிரச்சனையைத் தட்டிக்கழித்து, கம்யூனுக்கு முன்னதாகவும் அதற்குப் பிற்பாடும் மார்க்சியத்தின் வளர்ச்சி அனைத்தையும் உதாசீனம் செய்வதானது, தவிர்க்க முடியாதபடி சந்தர்ப்பவாதத்தினுள் சரிந்து செல்வதையே குறிப்பிடுகிறது. ஏனெனில் சந்தர்ப்பவாதத்துக்கு யாவற்றையும்விட முக்கியமாய்த் தேவைப்படுவது என்னவென்றால், மேலே குறிப்பிட்ட இரு கேள்விகளும் எழுப்பப்படாமல் விடப்படுவதுதான். சந்தர்ப்பவாதத்துக்கு அதுவே ஒரு வெற்றியாகும்.