அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை ஆராய்கையில், எர்ஃபுர்ட் நகல் வேலைத்திட்டத்தின்30 விமர்சனத்தை _ எங்கெல்ஸ் 1891 ஜூன் 29_ல் காவுத்ஸ்கிக்கு அனுப்பி வைத்த விமர்சனம் பத்து ஆண்டுகளுக்குப் பிற்பாடுதான் Neue Zeit இல் வெளியிடப்பட்டது _ கவனியாது விட முடியாது. ஏனெனில் அரசின் கட்டமைப்பு சம்பந்தமான பிரச்சனைகளில் சமூக_-ஜனநாயகவாதிகளுடைய சந்தர்ப்பவாதக் கண்ணோட்டங்களைப் பற்றிதான் இந்த விமர்சனம் பிரதானமாய்ப் பரிசீலிக்கிறது.
இதற்கிடையில் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்தும் எங்கெல்ஸ் அளிக்கும் அளவு கடந்த மதிப்புடைய ஒரு கருத்துரையை இங்கு நாம் குறிப்பிடுதல் வேண்டும். நவீன முதலாளித்துவத்தில் ஏற்படும் பல்வேறு மாறுதல்களையும் அவர் எவ்வளவு உன்னிப்பாகவும் கருத்தோடும் கவனித்து வந்தார் என்பதையும், இதன் காரணமாய் இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில் நமது கடமைகளை ஓரளவுக்கு எப்படி அவரால் முன்னறிந்து கூற முடிந்தது என்பதையும் இது காட்டுகிறது. இதோ அந்தக் கருத்துரை: நகல் வேலைத் திட்டத்தில் முதலாளித்துவத்துக்குரிய தனி இயல்பாய்க் குறிப்பிட்டுத் “திட்டமின்மை’ (Planlosigkeit) என்னும் சொல் உபயோகிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி எங்கெல்ஸ் எழுதியதாவது:
…கூட்டுப் பங்குக் கம்பெனிகளிலிருந்து நாம் முழு முழுத் தொழில்களையே தம் பிடிக்குள் கொண்டு வந்து ஏகபோக ஆதிக்கம் பெறும் டிரஸ்டுகளுக்கு வந்து சேருகையில், தனியார் பொருளுற்பத்திக்கு மட்டுமின்றி, திட்டமின்மைக்குக் கூட முடிவு ஏற்பட்டு விடுகிறது’’ (Neue Zeit, தொகுதி 20, 1, 1901-_02, பக்கம் 8).
நவீன முதலாளித்துவத்தின், அதாவது ஏகாதிபத்தியத்தின் தத்துவார்த்த மதிப்பீட்டின் மிக முக்கிய சாராம்சம், அதாவது முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாகி விடுகிறது என்பது இங்கு நமக்கு எடுத்துரைக்கப்படுகிறது. கடைசியில் குறிக்கப்படுவதை வலியுறுத்திக் கூற வேண்டும். ஏனெனில் ஏகபோக முதலாளித்துவம் அல்லது அரசு -ஏகபோக முதலாளித்துவமானது முதலாளித்துவமாய் இருக்கவில்லை, இப்பொழுது அதை “அரசு சோஷலிசம்’ என்பதாய் அழைக்கலாம் என்றும், இன்ன பலவாறாகவும் கருதும் தவறான முதலாளித்துவ -சீர்திருத்தவாதக் கூற்று மிக சகஜமாகி விட்டது. முழுநிறைவாய்த் திட்டமிடுவதற்கு டிரஸ்டுகள் என்றுமே ஏற்பாடு செய்ததில்லை, இப்பொழுதும் செய்யவில்லை, செய்யவும் முடியாது. ஆனால் அவை எவ்வளவு தான் திட்டமிட்ட போதிலும், எவ்வளவுதான் மூலதன அதிபர்கள் தேசிய அளவிலும், ஏன் சர்வதேசிய அளவிலுங்கூட பொருளுற்பத்திப் பரிமாணத்தை முன்கூட்டியே கணக்கிட்டுக் கொண்ட போதிலும், எவ்வளவுதான் அவர்கள் இந்தப் பரிமாணத்தைத் திட்டமிட்டு ஒழுங்கு செய்து கொண்ட போதிலும், இன்னமும் நாம் இருப்பது முதலாளித்துவமேதான் _ புதிய கட்டத்தை வந்தடைந்துவிட்ட முதலாளித்துவம் என்பது மெய்தான், ஆயினும் இன்னமும் அது சந்தேகத்துக்கு இடமின்றி முதலாளித்துவமேதான். இத்தகைய முதலாளித்துவம் சோஷலிசத்துக்கு “அண்மையதாய் இருப்பதானது’ பாட்டாளி வர்க்கத்தின் மெய்யான பிரதிநிதிகளுக்கு சோஷலிசப் புரட்சி அண்மையதும் எளியதும் நடைமுறை சாத்தியமானதும் அவசர அவசியமானதும் ஆகிவிட்டதை நிரூபிப்பதற்குரிய வாதமாய் அமைய வேண்டுமே ஒழிய, இந்தப் புரட்சி புறக்கணிக்கப்படுவதற்கும், முதலாளித்துவத்தைக் கவர்ச்சியுடையதாய்க் காட்டுவதற்கான முயற்சிக்கும் _ எல்லா சீர்திருத்தவாதிகளும் இந்தப் பணியில்தான் ஈடுபட்டிருக்கிறார்கள் _ இடந்தரும் வாதமாய் ஒருபோதும் ஆகிவிட முடியாது.
நிற்க, அரசு பற்றிய பிரச்சனைக்குத் திரும்பி வருவோம். எங்கெல்ஸ் தமது கடிதத்தில் விசேஷ முக்கியத்துவமுள்ள மூன்று மிக முக்கிய ஆலோசனைகளை அளிக்கிறார். முதலாவது, குடியரசைப் பற்றியது; இரண்டாவது, தேசியப் பிரச்சனைக்கும் அரசின் கட்டமைப்புக்குமுள்ள தொடர்பைப் பற்றியது; மூன்றாவது, வட்டாரத் தன்னாட்சியைப் பற்றியது.
குடியரசைப் பொறுத்தவரை, எங்கெல்ஸ் இதை எர்ஃபுர்ட் வேலைத்திட்டம் பற்றிய தமது விமர்சனத்தின் மையக் கூறாய்க் கொண்டார். எர்ஃபுர்ட் வேலைத்திட்டம் உலகின் எல்லா சமூக-ஜனநாயகவாதிகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவமுடையதாகியது என்பதையும், இரண்டாவது அகிலம் அனைத்துக்குமே முன்மாதிரியாகியது என்பதையும் நினைவு கூர்வோமாயின், எங்கெல்ஸ் இரண்டாவது அகிலம் அனைத்தின் சந்தர்ப்பவாதத்தைத்தான் இதன் மூலம் விமர்சித்துக் கண்டித்தார் என்று கூறுவது மிகையாகாது.
“இந்நகலின் அரசியல் கோரிக்கைகளில் ஒரு பெரும் குறைபாடு உள்ளது’’ என்று எங்கெல்ஸ் எழுதினார். “உண்மையில் எது சொல்லப்பட வேண்டுமோ அது சொல்லாமல் விடப்படுகிறது’’ [அழுத்தம் எங்கெல்சினுடையது].
ஜெர்மன் அரசியல் சட்டம் பழுத்த பிற்போக்குவாத 1850ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தின் அச்சுப் பிரதியே அன்றி வேறல்ல, வில்ஹெல்ம் லீப்னெஹ்ட் குறிப்பிட்டது போல ரைஹ்ஸ்டாக் “வரம்பிலா முடியாட்சியை மூடி மறைப்பதற்கான அலங்காரத் திரையே’ ஆகும், சின்னஞ்சிறு குட்டி அரசுகளுக்கும் சின்னஞ்சிறு குட்டி ஜெர்மன் அரசுகளுடைய கூட்டாட்சிக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கும் ஓர் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் “உழைப்புக் கருவிகள் யாவற்றையும் பொதுச்சொத்தாய் மாற்ற’ விரும்புவது “கண்கூடான அபத்தமே’ ஆகும் என்று பிற்பாடு எங்கெல்ஸ் தெளிவுபடுத்துகிறார்.
“ஆயினும் அதைப் பற்றிப் பேச முற்படுவது அபாயகரமானது’’ என்று எங்கெல்ஸ் மேலும் எழுதினார்; ஏனெனில் ஜெர்மனியில் ஒரு குடியரசு வேண்டுமென்ற கோரிக்கையைப் பகிரங்கமாய் வேலைத்திட்டத்தில் சேர்த்துக் கொள்வது முடியாத காரியம் என்பது எங்கெல்சுக்குத் தெரியும். அதேபோதில், “எல்லோரும்’ திருப்தியுடன் ஏற்றுக் கொண்டுவிட்ட இந்த வெளிப்படையான காரணத்தை ஏற்றுக் கொள்வதோடு நின்றுவிட எங்கெல்ஸ் மறுத்தார். மேலும் தொடர்ந்து அவர் எழுதியதாவது: “இருப்பினும், எப்படியேனும் ஒரு வழியில் இதனைச் செய்தாக வேண்டும். தற்போது இது எவ்வளவு அவசியமானது என்பதைச் சமூக-_ஜனநாயகப் பத்திரிகைகளின் ஒரு பெரும் பகுதியில் மேலோங்கி வரும் [einreissende] சந்தர்ப்பவாதம் தெளிவாய்க் காட்டுகிறது. சோஷலிஸ்டு -எதிர்ப்புச் சட்டம்31 திரும்பவும் வந்துவிடுமோ என்று அஞ்சியும், அந்தச் சட்டம் ஆட்சி புரிந்த காலத்தில் அவசரப்பட்டுக் கூறப்பட்ட பலவற்றையும் நினைவிற் கொண்டும் இவர்கள் எல்லாக் கட்சிக் கோரிக்கைகளையும் சமாதான வழியிலேயே செயல்படுத்திவிட தற்போது ஜெர்மனியிலுள்ள, சட்டமுறை போதுமென கட்சி கருத வேண்டுமென்று விரும்புகிறார்கள்…’’
சோஷலிஸ்டு- எதிர்ப்புச் சட்டம் மீண்டும் வந்துவிடுமோ என்று அஞ்சி ஜெர்மன் சமூக_-ஜனநாயகவாதிகள் இவ்வாறு நடந்து கொண்டனர் _ இந்த அடிப்படை உண்மையை எங்கெல்ஸ் முக்கியமாய் வலியுறுத்தினார். இதனைச் சந்தர்ப்பவாதமே என்று வெளிப்படையாகவே விவரித்தார். ஜெர்மனியில் குடியரசும் இல்லை, சுதந்திரமும் இல்லையாதலால், “சமாதான’ வழி பற்றிய கனவுகள் முற்றிலும் அபத்தமாகுமென்று கூறினார். எங்கெல்ஸ் தமக்குத் தளைகளிட்டுக் கொள்ளாதவாறு எச்சரிக்கையுடன் இதனைக் குறிப்பிட்டார். குடியரசு நாடுகளிலோ, மிகுந்த சுதந்திரம் நிலவும் நாடுகளிலோ சோஷலிசத்தை நோக்கி சமாதான வழியில் வளர்ச்சி காணலாமென “நினைக்கச் சாத்தியமுண்டு’ (“நினைக்க’ மட்டும் தான்!) என்று ஒத்துக் கொண்டார். ஆனால் ஜெர்மனியைப் பொறுத்தவரை, அவர் திரும்பவும் ஒரு முறை கூறினார்:
“…அரசாங்கம் அநேகமாய் அனைத்து ஆட்சியதிகாரம் படைத்ததாகவும், ரைஹ்ஸ்டாகும் ஏனைய பிரதிநிதித்துவ உறுப்புக்களும் மெய்யான அதிகாரம் இல்லாதனவாகவும் இருக்கும் ஜெர்மனியில் இவ்விதம் பிரகடனம் செய்வது, அதுவும் இவ்வாறு செய்ய எந்த அவசியமும் இல்லாதபோது இதைச் செய்வது வரம்பிலா முடியாட்சியை மறைத்திடும் அலங்காரத் திரையை நீக்கித் தானே அதன் அம்மண நிலையை மறைக்கும் திரையாய்ச் செயல்படுவதாகி விடும்.’’
வெளியே தெரியாதபடி இந்த ஆலோசனையை மூலையிலே ஒதுக்கி வைத்துவிட்ட ஜெர்மன் சமூக_-ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வமான தலைவர்களில் மிகப் பெரும்பாலோர் வரம்பிலா முடியாட்சிக்குத் தாம் மூடுதிரையாய்ச் செயல்படுவோரே என்பதைத்தான் காட்டிக் கொண்டுவிட்டார்கள்.
“…கட்சி திசை திருப்பி விடப்படுவதற்கே இத்தகைய கொள்கை காலப்போக்கில் வகை செய்யும். பொதுப்படையான, கருத்தியலான அரசியல் பிரச்சனைகளை முன்னணிக்குக் கொண்டுவந்து வைக்கிறார்கள். இதன் மூலம், ஸ்தூலமான உடனடிப் பிரச்சனைகளை, முதலாவது பெரும் நிகழ்ச்சிகள், முதலாவது அரசியல் நெருக்கடி ஏற்பட்டதும் தாமாகவே நிகழ்ச்சி நிரலுக்கு வந்துவிடும் இப்பிரச்சனைகளை மூடி மறைத்துவிடுகிறார்கள். தீர்மானகரமான தருணத்தில் கட்சி திடுதிப்பென நிர்க்கதியாய் நிற்க வேண்டியதாகி விடுகிறது, முக்கியமான பிரச்சனைகள் குறித்து, இப்பிரச்சனைகள் விவாதிக்கப்படாமலே இருந்துவிட்டதால், கட்சியினுள் தெளிவின்மையும் குழப்பமும் தலைதூக்கி விடுகின்றன என்பதைத் தவிர விளைவு வேறு எப்படி இருக்க முடியும்?…
“தற்போதைய கண நேர நலன்களுக்காக வேண்டி பெரிய தலையாய கருத்துக்களை இப்படி மறப்பதானது, பிற்பாடு ஏற்படப் போகிற விளைவுகளைப் பற்றிக் கவலையின்றி கண நேர வெற்றிக்கான இந்தப் போராட்டமும் முயற்சியும், எதிர்கால இயக்கத்தைத் தற்கால இயக்கத்திற்காக இப்படித் தியாகம் புரிவதானது, ‘நேர்மையான’ காரணங்களுக்காகச் செய்யப்படுவதாய் இருக்கலாம்; இருப்பினும் இது சந்தர்ப்பவாதமே அன்றி வேறல்ல. ‘நேர்மையான’ சந்தர்ப்பவாதத்தைப் போல ஆபத்தானது எதுவுமில்லை எனலாம்…
“அறுதியிட்டு நிச்சயமாய்ச் சொல்லக் கூடியது என்னவெனில், நமது கட்சியும் தொழிலாளி வர்க்கமும் ஜனநாயகக் குடியரசின் வடிவிலேதான் அதிகாரத்துக்கு வர முடியும் என்பதே. மாபெரும் பிரெஞ்சுப் புரட்சி ஏற்கனவே காட்டியுள்ளது போல, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்குரிய பிரத்தியேக வடிவமும் இதுவேதான்…’’
மார்க்சின் நூல்களில் எல்லாம் இழையோடி நிற்கும் அடிப்படைக் கருத்தினை இங்கு எங்கெல்ஸ் மிகவும் எடுப்பான முறையில் திரும்பவும் கூறுகிறார். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கு மிக அருகாமையில் இட்டுச் செல்வது ஜனநாயகக் குடியரசுதான் என்பதே இந்த அடிப்படைக் கருத்து. இத்தகைய குடியரசு மூலதனத்தின் ஆதிக்கத்தைச் சிறிதும் ஒழித்து விடுவதில்லை, ஆகவே திரளான மக்களை இருத்தும் ஒடுக்கு முறையையும் வர்க்கப் போராட்டத்தையும் இது ஒழித்து விடுவதில்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் திரள்களின் அடிப்படை நலன்கள் பூர்த்தி செய்யப்படுவதற்குரிய சாத்தியப்பாடு தோன்றியதுமே தவிர்க்க முடியாத வகையில் முற்றிலும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் மூலம், இம்மக்கள் திரள்களுக்குப் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்குவதன் மூலம் இந்தச் சாத்தியப்பாடு சித்தி பெறும்படியாய், வர்க்கப் போராட்டம் அந்த அளவுக்கு விரிந்து வளர்ந்து மலர்ச்சியுறவும் கடுமை பெறவும் ஜனநாயகக் குடியரசு வகை செய்கிறது. இவையுங்கூட இரண்டாவது அகிலம் அனைத்துக்கும் மார்க்சியத்தின் “மறக்கப்பட்டு விட்ட’ வாசகங்களாகி விட்டன. இவை மறக்கப்பட்டுவிட்டன என்பது 1917_ஆம் ஆண்டு ருஷ்யப் புரட்சியின் முதல் ஆறு மாதங்களில் மென்ஷிவிக் கட்சியினது வரலாற்றின் வாயிலாய்த் தெள்ளத் தெளிவாய் நிரூபித்துக் காட்டப் பெற்றது.
மக்களது தேசிய இயைபு சம்பந்தமாகக் கூட்டாட்சிக் குடியரசு குறித்து எங்கெல்ஸ் எழுதியதாவது:
“தற்போதுள்ள ஜெர்மனியின் இடத்தில் உதித்தெழ வேண்டியது என்ன?’’ [தற்போதுள்ள ஜெர்மனி பிற்போக்கான முடியாட்சி அரசியல் அமைப்புச் சட்டமுடையது; இதே அளவுக்குப் பிற்போக்கான முறையில் சின்னஞ்சிறு குட்டி அரசுகளாய்ப் பிளவுண்டிருக்கிறது; “பிரஷ்யனியத்தின்’ தனி இயல்புகளை எல்லாம் அனைத்து ஜெர்மனியிலும் கரைந்துவிடச் செய்வதற்குப் பதிலாய், இந்தப் பிளவு அவற்றை நீடித்து நிலைக்கச் செய்கிறது]. “என்னுடைய கருத்துப்படி, பிரிக்க முடியாத ஒருமித்த குடியரசை மட்டும்தான் பாட்டாளி வர்க்கம் பயன்படுத்திக் கொள்ள முடியும். அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிரம்மாண்டப் பரப்பில், கூட்டாட்சிக் குடியரசு மொத்தத்தில் இன்னும் அவசியம்தான். ஆயினும் இந்நாட்டின் கீழ்ப் பகுதியில் ஏற்கெனவே அது தடையாக மாறி வருகிறது. இங்கிலாந்தில் அது ஒரு படி முன்னேற்றத்தைக் குறிப்பதாயிருக்கும். அங்கு இரு தீவுகளில் நான்கு தேசிய இனத்தவர்கள் வசிக்கின்றனர். தனியொரு நாடாளுமன்றம் இருப்பினும் வெவ்வேறான மூன்று சட்ட முறைகள் அடுத்தடுத்து இருந்து வருகின்றன. சின்னஞ்சிறு ஸ்விட்சர்லாந்தில் அது நீண்ட காலமாகவே தடையாய் இருந்து வருகிறது. ஐரோப்பிய அரசுகளின் அமைப்பில் ஸ்விட்சர்லாந்து முற்றிலும் செயலற்ற ஓர் உறுப்பாய் இருப்பதுடன் திருப்தியடைந்து விடுவதால்தான் இக்கூட்டாட்சி அமைப்பு சகித்துக் கொள்ளப்படுகிறது. ஜெர்மனிக்கு, ஸ்விட்சர்லாந்தின் பாணியிலான கூட்டாட்சி முறை மிகப் பெரிய பின்னடைவாய் இருக்கும். கூட்டரசு முற்றிலும் ஒன்றிணைந்த ஒருமை அரசிலிருந்து இரு வழிகளில் வேறுபடுகிறது. முதலாவதாக, கூட்டரசைச் சேர்ந்த தனி அரசு ஒவ்வொன்றும், மாநிலம் ஒவ்வொன்றும், அதற்குரிய தனி சிவில், கிரிமினல் சட்ட அமைப்பும் நீதிமன்றமும் பெற்றிருக்கிறது. இரண்டாவதாக, மக்கள் சபையுடன் கூடவே, பெரியதாயினும் சிறியதாயினும் ஒவ்வொரு மாநிலமும் தனியொன்றாக வாக்களிக்கும் ஒரு கூட்டரசு சபையும் இருக்கிறது.’ ஜெர்மனியில் கூட்டரசானது முற்றிலும் ஒன்றிணைந்த ஒருமை அரசுக்குரிய இடைக்கால வடிவமாகும். 1866, 1870_ஆம் ஆண்டுகளில் “மேலிருந்து நிகழ்ந்த புரட்சி’ திருப்பி விடப்படக் கூடாது, “அடியிலிருந்து எழும் இயக்கத்தால்’ மேலும் உறுதியூட்டப்பட வேண்டும்.’’
அரசின் வடிவங்கள் குறித்து எங்கெல்ஸ் கருத்தின்றி இருந்துவிடவில்லை; மாறாக, குறிப்பிட்ட ஒரு இடைக்கால வடிவம் எதிலிருந்து எதுவாக மாறிச் செல்கிறது என்பதை அதனதன் ஸ்தூலமான வரலாற்றுத் தனி இயல்புகளுக்கு ஏற்ப நிலைநாட்டும் பொருட்டு, அவர் இடைக்கால வடிவங்களை மிகவும் தீர்க்கமாய்ப் பகுத்தாராய முயன்றார்.
பாட்டாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கப் புரட்சி இவற்றின் கண்ணோட்டத்திலிருந்து இப்பிரச்சனையை அணுகி, மார்க்சைப் போலவே எங்கெல்சும் ஜனநாயக மத்தியத்துவத்தை, பிரித்திடவொண்ணாதாவறு இணைந்து ஒன்றிய குடியரசை ஆதரித்து வாதாடினார். கூட்டாட்சிக் குடியரசை அவர் விதிவிலக்காகவும் வளர்ச்சிக்கு இடையூறாகவும் கருதினார், அல்லது முடியரசிலிருந்து மத்தியத்துவக் குடியரசுக்கான வளர்ச்சியில் ஓர் இடைக்காலக் கட்டமாய், குறிப்பிட்ட சில தனி நிலைமைகளில் ஒரு “முன்னேற்றப் படியாய்க்’ கருதினார். இந்தத் தனி நிலைமைகளில் அவர் தேசிய இனப் பிரச்சனையை முதலிடத்துக்கு உரியதாய்க் குறிப்பிட்டார்.
சின்னஞ்சிறு அரசுகளின் பிற்போக்குத் தன்மையையும், குறிப்பிட்ட சில உதாரணங்களில் தேசிய இனப் பிரச்சனையால் இவற்றின் பிற்போக்குத் தன்மை மூடி மறைக்கப்படுவதையும் தயவு தாட்சண்யமின்றிக் கண்டித்து விமர்சனம் செய்தபோதிலும், மார்க்சைப் போலவே எங்கெல்சும் தேசிய இனப் பிரச்சனையை ஒதுக்கித் தள்ளிவிடலாம் என்ற விருப்பத்துக்கு _ டச்சு மார்க்சியவாதிகளும் போலந்து மார்க்சியவாதிகளும் “அவர்களுடைய’ சின்னஞ்சிறு அரசுகளின் குறுகிய குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் மீது அவர்களுக்குள்ள முற்றிலும் நியாயமான எதிர்ப்பினால் தூண்டப் பெற்று அடிக்கடி இரையாகிவிடுகிறார்களே அந்த விருப்பத்துக்கு _ ஒருபோதும் துளியளவும் இடமளித்ததில்லை.
பிரிட்டன் சம்பந்தமாகவுங்கூட _ பூகோள நிலைமைகளும் பொது மொழியும் பல நூற்றாண்டுக் கால வரலாறும் இந்நாட்டின் தனித்தனிச் சிறு பிரிவுகளில் தேசிய இனப் பிரச்சனைக்கு “முடிவு கட்டியிருக்கும்’ என்பதாய் நினைக்கத் தோன்றும் பிரிட்டன் சம்பந்தமாகவுங்கூட _ தேசிய இனப் பிரச்சனை கடந்த காலத்துக்குரியதாகி விடவில்லை என்னும் கண்கூடான உண்மையைக் கணக்கில் எடுத்து, கூட்டாட்சிக் குடியரசு நிறுவப்படுவதானது “முன்னேற்றப் படியாய்’ இருக்குமென்பதை எங்கெல்ஸ் அங்கீகரித்தார். அதேபோதில் கூட்டாட்சிக் குடியரசுக்குள்ள குறைபாடுகள் பற்றிய விமர்சனத்தை எங்கெல்ஸ் கைவிட்டு விடுகிறார் என்பதற்கோ, ஒன்றிணைந்த மத்தியத்துவ ஜனநாயகக் குடியரசுக்கான உறுதி மிக்க வாக்குவாதத்தையும் போராட்டத்தையும் துறந்து விடுகிறார் என்பதற்கோ கிஞ்சித்தும் இங்கு அறிகுறி காண முடியாது.
ஆனால் ஜனநாயக மத்தியத்துவம் என்னும் தொடரை முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும், அராஜகவாதிகள் அடங்கலான குட்டி முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும் பயன்படுத்தும் அதிகார வர்க்க அர்த்தத்தில் எங்கெல்ஸ் இதனைப் பிரயோகிக்கவில்லை. மத்தியத்துவத்தைப் பற்றிய அவருடைய கருத்தோட்டம் அரசின் ஒற்றுமையைக் “கம்யூன்களும்’ மாவட்டங்களும் தாமே விரும்பிப் பேணிப் பாதுகாப்பதற்கும், அதேபோதில் எல்லா விதமான அதிகார வர்க்க நடைமுறைகளும் மேலிருந்து செலுத்தப்படும் எல்லாவிதமான “நாட்டாண்மையும்’ அறவே ஒழிந்து போவதற்கும் ஒருங்கே வகை செய்யும் அவ்வளவு விரிவான வட்டாரத் தன்னாட்சிக்கு முழு இடமளித்தது. அரசு பற்றிய மார்க்சிய வேலைத்திட்டக் கருத்துக்களை மேலும் விரிவுபட விளக்கி, எங்கெல்ஸ் எழுதியதாவது:
“…ஆகவே நமக்கு வேண்டியது ஒன்றிணைந்த குடியரசு _ ஆனால் தற்போதுள்ள பிரெஞ்சுக் குடியரசின் அர்த்தத்தில் அல்ல. தற்போதுள்ள பிரெஞ்சுக் குடியரசு 1798_ல் நிறுவப்பட்ட முடிப் பேரரசிலிருந்து முடிமன்னர் மட்டும் நீக்கப்பட்ட அரசேயன்றி வேறல்ல. 1792 முதல் 1798 வரையில் ஒவ்வொரு பிரெஞ்சு மாவட்டமும் ஒவ்வொரு கம்யூனும் [Gemeinde] அமெரிக்க மாதிரியிலான முழுநிறைத் தன்னாட்சி பெற்றிருந்தது _ நமக்கும் இதுவேதான் வேண்டும். தன்னாட்சி எப்படி நிறுவ வேண்டும், அதிகார வர்க்கம் இல்லாமலே எப்படி நிர்வகிக்க முடியும் என்பதை அமெரிக்காவும் முதலாவது பிரெஞ்சுக் குடியரசும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளன, இன்றுங்கூட இதை ஆஸ்திரேலியாவும் கனடாவும் ஏனைய ஆங்கிலேயக் காலனிகளும் நமக்குத் தெளிவுபடுத்தி வருகின்றன. இந்தப் பாணியில் அமைந்த மாநில [பிராந்திய], கம்யூன் தன்னாட்சியானது, உதாரணமாய் ஸ்விட்சர்லாந்து கூட்டாட்சி முறையைக் காட்டிலும் பன்மடங்கு சுதந்திரமுடையது. ஸ்விட்சர்லாந்து கூட்டாட்சி முறையில் கான்டோனானது கூட்டரசு [அதாவது, கூட்டாட்சி அரசு அனைத்தும்] சம்பந்தப்பட்ட வரை மிகவும் சுயேச்சையானதுதான், ஆனால் மாவட்டம் [Bezirk], கம்யூன் இவை சம்பந்தமாகவுங்கூட சுயேச்சையானதாகவே இருக்கிறது. கான்டோன் அரசாங்கங்கள் மாவட்டப் போலீஸ் அதிகாரிகளையும் [Bezirksstatthalter] தலைவர்களையும் நியமிக்கின்றன. ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் இதனைக் காண முடியாது; வருங்காலத்தில் நாம் பிரஷ்ய லாண்டிரேட்டுடனும் ரிகிருன்க்ஸ்ரேட்டுடனும் (கமிஷனர்கள், மாவட்டப் போலீஸ் அதிகாரிகள், கவர்னர்கள் ஆகியோரும் மற்றும் பொதுவில் மேலிருந்து நியமிக்கப்படும் எல்லா அதிகாரிகளும்) கூடவே இதையும் தீர்மானமாய் ஒழித்துவிட வேண்டும்.’’ ஆகவே எங்கெல்ஸ் இந்த வேலைத்திட்டத்தில் தன்னாட்சி பற்றிய பிரிவைப் பின்வருமாறு திருத்திக் கூற வேண்டுமென்று ஆலோசனை கூறுகிறார்: “மாநிலங்களுக்கும்’ [குபேர்னியாக்கள் அல்லது பிராந்தியங்களுக்கும்] “மாவட்டங்களுக்கும் கம்யூன்களுக்கும் அனைத்து மக்கள் வாக்குரிமையின் அடிப்படையில் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலமான முழுநிறைத் தன்னாட்சி; வட்டார, மாநில அதிகாரி எவரும் அரசால் நியமிக்கப்படுவது ஒழிக்கப்படுதல்.’
போலிப் புரட்சிகரப் போலி ஜனநாயகத்தின் எமது போலி சோஷலிஸ்டுப் பிரதிநிதிகள் எப்படி இந்த விவகாரத்தில் (இதில் மட்டும்தானா _ இல்லவே இல்லை) ஜனநாயகத்திலிருந்து அப்பட்டமாய்த் தடம் புரண்டு விலகி ஓடிவிட்டனர் என்பதை ஏற்கனவே நான் பிராவ்தாவில்32 (இதழ் 68, மே 28, 1917) _ கேரென்ஸ்கியையும் ஏனைய “சோஷலிஸ்டு’ அமைச்சர்களையும் கொண்ட அரசாங்கம் இந்தப் பத்திரிகை வெளிவராது தடுத்து அடக்குமுறை செய்து விட்டது _ சுட்டிக் காட்டியிருக்கிறேன்.* ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தாருடன் “கூட்டுச்’ சேர்ந்து கொண்டு விட்டவர்கள் இந்த விமர்சனத்துக்குச் செவி சாய்க்காது இருந்ததில் வியப்பில்லை.
வெகுவாய்ப் பரவியிருந்த தப்பெண்ணத்தை _ முக்கியமாய்க் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளிடையே பரவியிருந்த தப்பெண்ணத்தை _ கூட்டாட்சிக் குடியரசு மத்தியத்துவக் குடியரசைக் காட்டிலும் கட்டாயமாய் அதிக அளவு சுதந்திரம் அளிப்பதாகும் என்ற தப்பெண்ணத்தை எங்கெல்ஸ் உண்மைகளை ஆயுதமாய்க் கொண்டு, மிகத் துல்லியமான உதாரணத்தின் மூலம் பொய்யென நிரூபித்துக் காட்டுவதைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். 1792_-98 ஆம் ஆண்டுகளின் மத்தியத்துவ பிரெஞ்சுக் குடியரசு குறித்தும், ஸ்விட்சர்லாந்துக் கூட்டாட்சிக் குடியரசு குறித்தும் எங்கெல்ஸ் எடுத்துரைக்கும் உண்மைகள் இந்த எண்ணம் தவறானதென்பதை நிரூபிக்கின்றன. மென்மையான ஜனநாயக முக்கியத்துவம் கொண்ட குடியரசு கூட்டாட்சிக் குடியரசைக் காட்டிலும் அதிக அளவு சுதந்திரம் அளித்தது. வேறு விதமாய்க் கூறுமிடத்து, வரலாற்றிலேயே மிகவும் அதிகமாய் வட்டார, பிராந்திய சுதந்திரம் கிடைக்கச் செய்தது மத்தியத்துவக் குடியரசேயன்றி கூட்டாட்சிக் குடியரசல்ல.
இந்த உண்மைக்கும், மற்றும் கூட்டாட்சிக் குடியரசு, மத்தியத்துவக் குடியரசு, வட்டாரத் தன்னாட்சி ஆகிய இவை குறித்த பிரச்சனை முழுவதுக்கும், நமது கட்சியின் பிரசாரத்திலும் கிளர்ச்சியிலும் போதிய கவனம் இதுகாறும் செலுத்தப்பட்டதில்லை, தற்போதும் செலுத்தப்படவில்லை.