குடியிருப்புப் பிரச்சனை பற்றிய தமது நூலிலேயே (1872)21 எங்கெல்ஸ் கம்யூனுடைய அனுபவத்தைக் கணக்கில் எடுத்து, அரசு சம்பந்தமாய்ப் புரட்சிக்குள்ள பணிகளைப் பல இடங்களில் குறிப்பிட்டுச் செல்கிறார். இந்தப் பிரத்தியேக விவகாரம் பற்றிய பரிசீலனை தெளிவாய்ப் புலப்படுத்துபவை, கருத்தூன்றிக் கவனிக்கத் தக்கவை; ஒருபுறம், பாட்டாளி வர்க்க அரசுக்கும் தற்போதுள்ள அரசுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைக் கூறுகளையும் _ இரு சந்தர்ப்பங்களிலும் அரசெனச் சொல்வது சரியே என்பதை உறுதிப்படுத்தும் ஒற்றுமைக் கூறுகளையும் _ மறுபுறம், இவை இரண்டுக்குமுள்ள வேற்றுமைக் கூறுகளையும், அதாவது அரசு அழிந்தொழிவதற்குரிய இடைக்கால நிலையையும், இந்தப் பரிசீலனை தெளிவாய்ப் புலப்படுத்துகிறது.
“அப்படியானால், குடியிருப்புப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது எப்படி? இன்றைய சமுதாயத்தில் இது ஏனைய எந்தச் சமூகப் பிரச்சனையையும் போலவேதான் தீர்க்கப்படுகிறது: தேவையையும் அளிப்பையும் பொருளாதார வழியில் படிப்படியாய்ச் சமன் செய்வதன் மூலம் தீர்க்கப்படுகிறது. பிரச்சனையை மீண்டும் மீண்டும் அப்படியே தோற்றுவிக்கும் ஒரு தீர்வே இது. ஆகவே இது தீர்வாகவே அமைவதில்லை. சமுதாயப் புரட்சி ஒன்று இந்தப் பிரச்சனைக்கு எப்படித் தீர்வு காணும் என்பது குறிப்பிட்ட அந்தந்தச் சந்தர்ப்பத்திலும் நிலவும் சூழ்நிலையைச் சார்ந்ததென்பதோடு, மேலும் பன்மடங்கு ஆழமான பிரச்சனைகளுடன் இணைக்கப்பட்டதாகவும் இருக்கும். இவற்றில் மிகவும் அடிப்படையானவற்றுள் ஒன்று, நகருக்கும் கிராமத்துக்குமுள்ள முரண் நிலை ஒழிக்கப்படுதல். வருங்கால சமுதாய ஒழுங்கமைப்புக்கான கற்பனைவாதத் திட்டங்களைச் சிருஷ்டிப்பது எமது பணியல்ல. ஆதலால் இந்தப் பிரச்சனையை இங்கு பரிசீலிப்பது வீண் வேலையே ஆகும். ஆயினும் ஒன்று மட்டும் உறுதியாய்ச் சொல்லலாம்: பெரிய நகரங்களில் ஏற்கனவே போதிய அளவு வீடுகள் இருக்கின்றன. நல்லறிவுக்கு உகந்த நேரிய வழியில் இவை பயன்படுத்தப்படும் பட்சத்தில் மெய்யான ‘குடியிருப்புப் பற்றாக்குறை’ அனைத்தையும் உடனடியாகவே நிவர்த்தி செய்துவிடலாம். ஆனால் தற்போதுள்ள உடைமையாளர்களிடமிருந்து வீடுகளைப் பறிமுதல் செய்து வீடில்லாத தொழிலாளர்களையும் மற்றும் இடமின்றி அளவு மீறிய நெரிசலில் அவதியுறும் தொழிலாளர்களையும் இவ்வீடுகளில் குடி புகச் செய்தாலன்றி இது சாத்தியமல்ல. பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வென்றதும், பொது நலத்தை முன்னிட்டு இத்தகைய நடவடிக்கையை எடுத்து நிறைவேற்றுதல், தற்போதுள்ள அரசு வேறு துறைகளில் செய்யும் பறிமுதல்களையும் குடியிருப்பிடங்களை வசப்படுத்திக் கொள்ளுதலையும் போல எளிதில் நடைபெறும் காரியமே.’’ (1887_ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பு, பக்கம் 22.)
அரசு அதிகாரத்தின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் இங்கு பரிசீலிக்கப்படவில்லை, அதன் செயற்பாட்டின் உள்ளடக்கம் மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது. பறிமுதல்களும் குடியிருப்பிடங்களை வசப்படுத்திக் கொள்ளுதலும் தற்போதுள்ள அரசினாலுங்கூட ஆணையிட்டு நிறைவேற்றப்படுகின்றன. வடிவத்தைப் பொறுத்தவரை, பாட்டாளி வர்க்க அரசுங்கூட “ஆணையிட்டே’ குடியிருப்பிடங்களை வசப்படுத்திக் கொள்ளும், வீடுகளைப் பறிமுதல் செய்யும். ஆனால் பழைய நிர்வாக இயந்திரம், முதலாளித்துவ வர்க்கத்தாருடன் இணைந்து அதிகார வர்க்கமானது பாட்டாளி வர்க்க அரசின் ஆணைகளை நிறைவேற்றச் சிறிதும் ஏற்றதாய் இராதென்பது தெளிவு.
“…உழைப்பாளி மக்கள் உழைப்புக் கருவிகள் யாவற்றையும், தொழில் துறை அனைத்தையுமே ‘நடைமுறையில் கைப்பற்றுவது’ புரூதோனிய ‘மீட்புக்கு’ நேர் முரணாகும் என்பதைக் குறிப்பிட வேண்டும். பின்னதில் தனிப்பட்ட உழைப்பாளி வீட்டின், விவசாயப் பண்ணையின், உழைப்புக் கருவிகளின் உடைமையாளனாகினான்; ஆனால் முன்னதில் ‘உழைப்பாளி மக்கள்’ வீடுகளின், ஆலைகளின், உழைப்புக் கருவிகளின் கூட்டு உடைமையாளர்களாய் இருக்கிறார்கள். இடைக்காலத்திலேனும் தனி நபர்களோ, கூட்டுகளோ இந்த வீடுகள், ஆலைகள், மற்றும் பலவற்றின் பெறுமானத்துக்கு ஈடு அளிக்காமலே இவற்றை உபயோகிக்க அனுமதிப்பார்களென நினைக்க முடியாது. இதே போல, நிலத்தில் சொத்துரிமையின் ஒழிப்பு நில வாடகையின் ஒழிப்பைக் குறிக்காது; இந்த நில வாடகை, திருத்தப் பெற்ற வடிவிலேதான் என்றாலும், சமுதாயத்துக்கு மாற்றப்படுவதையே குறிக்கும். ஆகவே உழைப்புக் கருவிகள் யாவற்றையும் நடைமுறையில் உழைப்பாளி மக்கள் கைப்பற்றிக் கொண்டு விடுவதானது வாடகை உறவுகள் நீடிக்க வழியில்லாதபடி செய்து விடாது.’’ (பக்கம் 68.)
இந்த வாசகத்தில் குறிப்பிடப்படும் பிரச்சனை குறித்து, அதாவது அரசு உலர்ந்து உதிருவதன் பொருளாதார அடித்தளம் குறித்து, அடுத்த அத்தியாயத்தில் பரிசீலிப்போம். பாட்டாளி வர்க்க அரசு கட்டணமின்றியே வீடுகளை உபயோகித்துக் கொள்ள அனுமதிக்குமென “நினைக்க முடியாது’, “இடைக்காலத்திலேனும்’ அப்படி அனுமதிக்குமென நினைக்க முடியாது என்று எங்கெல்ஸ் மிகுந்த எச்சரிக்கையுடன் கூறுகிறார். மக்கள் அனைவரின் சொத்தான வீடுகளைத் தனிப்பட்டக் குடும்பங்களுக்கு வாடகைக்கு விடுவதெனில் வாடகை வசூலிப்பு, ஓரளவு கண்காணிப்பு, குடியிருப்பிடங்கள் ஒதுக்குவதில் சில நியதிகளை அனுசரித்தல் ஆகியவை அவசியமாகி விடுகின்றன. இவற்றுக்கெல்லாம் ஒரு வகை அரசு வேண்டியிருக்கும். ஆனால் தனிச்சலுகை பெற்றுள்ள அதிகார வர்க்க இயந்திரம் தனி வகை இராணுவ ஏற்பாடும் இருக்க வேண்டுமென்பதும் தேவையில்லை. வாடகை இல்லாமலே இலவசமாய்க் குடியிருப்பு வசதி செய்து கொடுப்பது சாத்தியமாகி விடும் நிலைக்கு மாறிச் செல்வது அரசு அறவே “உலர்ந்து உதிருவதைப்’ பொறுத்ததாகும்.
கம்யூனுக்குப் பிற்பாடும் அதன் அனுபவத்தினது செல்வாக்கின் கீழும் பிளான்கிஸ்டுகள்22 மார்க்சியத்தின் அடிப்படை நிலையை ஏற்றுக் கொண்டது குறித்துப் பேசுகையில், போகிற போக்கில் ஏங்கெல்ஸ் இந்த நிலையைப் பின்வருமாறு வரையறுத்துக் கூறுகிறார்:
“…வர்க்கங்களையும் அவற்றுடன் கூட அரசையும் ஒழித்திடுவதற்காகப் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் செயலும் அதன் சர்வாதிகாரமும் அவசியமாயிருக்கும்…’’ (பக்கம் 55)
“அரசின் ஒழிப்புக்கு’ அளிக்கப்படும் இந்த அங்கீகாரத்துக்கும், டூரிங்குக்கு மறுப்பு என்னும் நூலிலிருந்து மேலே தரப்பட்ட வாசகத்தில் இந்தச் சூத்திரம் அராஜகவாத நிர்ணயிப்பு என்பதாய் நிராகரிக்கப்படுவதற்கும் முரண்பாடு இருப்பதாய் விதண்டாவாதப் பிரியர்களும் “மார்க்சியத்தை ஒழித்துக் கட்டுவதில்’ முனைந்துள்ள முதலாளித்துவப் பிண்டங்களும் கருதினாலும் கருதலாம். எங்கெல்சையே கூட சந்தர்ப்பவாதிகள் “அராஜகவாதியாகக்’ கொள்வார்களாயினும் வியப்புறுவதற்கில்லை. ஏனெனில் அராஜகவாதக் குற்றமிழைப்பதாய்ச் சர்வதேசவாதிகள் மீது குற்றம் சாட்டுவது சமூக-தேசிய வெறியர்களிடையே மேலும் மேலும் சகஜமாகி வருகிறது.
வர்க்கங்கள் ஒழியும்போது அரசும் ஒழிந்துவிடுமென்று தான் மார்க்சியம் எப்பொழுதுமே போதித்து வந்திருக்கிறது. டூரிங்குக்கு மறுப்பு என்னும் நூலில் “அரசு உலர்ந்து உதிர்வது’ பற்றிக் கூறும் புகழ்பெற்ற வாசகம் அராஜகவாதிகளைச் சாடுவது அவர்கள் திடுதிப்பென “ஒரே நாளில்’ அரசை ஒழித்துவிடலாமென உபதேசிக்கிறார்கள் என்பதற்காகவே அன்றி, அரசு ஒழிவதை ஆதரிக்கிறார்கள் என்பதற்காக அல்ல.
தற்போது நிலவி வரும் ‘சமூக_-ஜனநாயகக்’ கோட்பாடானது அரசை அழிப்பது பற்றிய பிரச்சனையில் அராஜகவாதத்தின்பால் மார்க்சியத்திற்குள்ள போக்கினை அறவே திரித்துப் புரட்டுவதால், மார்க்சும் எங்கெல்சும் அராஜகவாதிகளை எதிர்த்து நடத்திய ஒரு வாக்குவாதத்தை நினைவு கூர்தல் பெரிதும் பயனுடையதாய் இருக்கும்.