காவுத்ஸ்கியின் நூல்களில் மிக அதிகமானவை சந்தேகத்துக்கு இடமின்றி, வேறு எந்த மொழியைக் காட்டிலும் ருஷ்ய மொழியில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. காவுத்ஸ்கி எழுதுவது ஜெர்மனியைக் காட்டிலும் ருஷ்யாவில் தான் அதிகமாய்ப் படிக்கப்படுகிறது என்று சில ஜெர்மன் சமூக-_ஜனநாயகவாதிகள் தமாஷ் செய்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை (இடைக் குறிப்பாய் நாம் இதைக் கூறலாம்: இந்தக் கேலி முதலில் இதைச் செய்தவர்கள் நினைப்பதைக் காட்டிலும் மிகவும் ஆழ்ந்த வரலாற்றுப் பொருளுடைத்ததாகும். ருஷ்யத் தொழிலாளர்கள் 1905_ல் உலகின் சிறந்த சமூக_-ஜனநாயகவாத இலக்கியத்தின் சிறந்த நூல்கள் வேண்டுமென்று அசாதாரணமான அளவுக்கு அதிகமாகவும் முன்பின் காணாத முறையிலும் கோரிக்கை எழுப்பியதன் மூலமும், ஏனைய நாடுகளில் கேட்டறியாத அதிக அளவில் இந்நூல்களின் மொழிபெயர்ப்புகளையும் பதிப்புகளையும் பெற்றுக் கொண்டதன் மூலமும், அதிக அளவு முன்னேறிய அண்டைநாடு ஒன்றின் அளவிலா அனுபவத்தை எங்கள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் இளம் நிலத்தில் விரைவாய்ப் பெயர்த்து நட்டனர் எனலாம்).
மார்க்சியத்தைப் பரப்புவதற்கு ஆற்றிய பணியுடன் கூட, சந்தர்ப்பவாதிகளுடன் _ பெர்ன்ஷ்டைன் அவர்கள் தலைமையில் இருந்தார் _ அவர் நடத்திய வாக்குவாதத்துக்காகவும் காவுத்ஸ்கி எங்கள் நாட்டில் குறிப்பாய்ப் பெயர் பெற்றவரானார். ஆனால் ஓர் உண்மை அநேகமாய்த் தெரியாமலே இருந்து வருகிறது. 1914_-15ஆம் ஆண்டுகள் கண்ட மாபெரும் நெருக்கடியின்போது காவுத்ஸ்கி நம்ப முடியாத அவக்கேடு மிக்க குழப்பத்துக்கும் சமூக- தேசியவெறிக்கும் ஆதரவளிக்கும் நிலைக்குமான சகதிக்குள் சரிந்தது எப்படி என்று பரிசீலிக்க முற்படுவோமாயின், இந்த உண்மையை உதாசீனம் செய்யலாகாது. இவ்வுண்மை வருமாறு: சந்தர்ப்பவாதத்தின் மிகவும் பிரபல பிரதிநிதிகளாய் பிரான்சிலும் (மில்லரண்டும் ழொரேசும்) ஜெர்மனியிலும் (பெர்ன்ஷ்டைன்) இருந்தோரையும் எதிர்த்துக் கிளம்புவதற்குச் சற்று முன்பு காவுத்ஸ்கி மிகவும் கணிசமான ஊசலாட்ட நிலையை வெளிப்படுத்தி வந்தார். 1901-_02ல் ஷ்டுட்கார்ட்டில் வெளியிடப்பட்டுப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கருத்துக்களை ஆதரித்து வந்த மார்க்சிய ஸார்யா,44 காவுத்ஸ்கியுடன் வாக்குவாதத்தில் இறங்கி, 1900_ல் பாரிசில் நடைபெற்ற சர்வதேச சோஷலிஸ்டுக் காங்கிரசில்45 அவர் முன்மொழிந்த தீர்மானம் ‘வளைந்து கொடுப்பதாய்’ இருந்ததெனக் கூற வேண்டியிருந்தது. இந்தத் தீர்மானம் சந்தர்ப்பவாதிகளுடன் இணக்கம் காணுவதாய் இருந்தது; மழுப்பலான அரைமனதுத் தீர்மானமாயிருந்தது. ஜெர்மனியில் வெளியான காவுத்ஸ்கியின் கடிதங்களும், பெர்ன்ஷ்டைனை எதிர்த்து அவர் களம் புகும் முன் அவரிடம் இருந்த தயக்கம் கொஞ்சமல்ல என்பதை வெளிப்படுத்துகின்றன.
ஆனால், இதைக் காட்டிலும் அளவு கடந்த முக்கியத்துவமுள்ள உண்மை என்னவெனில், சந்தர்ப்பவாதிகளை உதிர்த்து அவர் நடத்திய இந்த வாக்குவாதத்திலும், பிரச்சனையை அவர் வகுத்தளிப்பதிலும், அதை அவர் ஆராயும் முறையிலும், அரசு பற்றிய பிரச்சனையில்தான் சந்தர்ப்பவாதத்தை நோக்கி முறையாய்த் தடம் புரண்டு செல்லும் அவருடைய திரிபை, மார்க்சியத்துக்கு காவுத்ஸ்கி இழைத்திருக்கும் மிக அண்மைக் கால துரோகத்தின் வரலாற்றைப் பரிசீலிக்கையில் இப்பொழுது நாம் பார்க்க முடிகிறது.
சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துக் காவுத்ஸ்கி முதலில் எழுதிய முக்கிய புத்தகமான பெர்ன்ஷ்டைனும் சமூக\ஜனநாயக வேலைத்திட்டமும் என்பதை எடுத்துக் கொள்வோம். காவுத்ஸ்கி மிகவும் விவரமாய் பெர்ன்ஷ்டைனுக்கு மறுப்புரைக்கிறார். ஆனால் இதில் குறிப்பிடத்தக்க ஒன்று வருமாறு:
பெர்ன்ஷ்டைன், ஹெரஸ்திராத்திய புகழ் பெற்ற தமது சோஷலிசத்தின் முதற்கோள்களில் மார்க்சியம் ‘பிளான்கிய’ குற்றமிழைப்பதாய்க் குற்றம் சாட்டுகிறார் (இதன் பின் ருஷ்யாவில் சந்தர்ப்பவாதிகளும் மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தாரும் புரட்சிகர மார்க்சியவாதிகளையும் போல்ஷிவிக்குகளையும் எதிர்த்து ஆயிரக்கணக்கான முறை திருப்பித் திருப்பிக் கூறிவரும் குற்றச்சாட்டு இது). இச்சந்தர்ப்பத்தில் பெர்ன்ஷ்டைன் முக்கியமாய் மார்க்சின் பிரான்சில் உள்நாட்டுப் போரை எடுத்துரைத்து, ஏற்கனவே நாம் கண்டது போல, வெற்றி சிறிதுமின்றி, கம்யூனின் படிப்பினைகள் பற்றிய மார்க்ஸ் கருத்துக்கள் புரூதோனுடைய கருத்துக்களுடன் ஒத்திருப்பதாய்க் காட்ட முயற்சி செய்கிறார். கம்யூனிஸ்டு அறிக்கைக்கு 1872_ல் மார்க்ஸ் எழுதிய முகவுரையில் வலியுறுத்தும் முடிவில், அதாவது “தொழிலாளி வர்க்கம் ஏற்கனவே தயாராயிருக்கும் அரசுப் பொறியமைவை அப்படியே கைப்பற்றிக் கொண்டு அதனைத் தனது சொந்தக் காரியங்களுக்காக உபயோகித்துக் கொள்ள முடியாது’’ என்னும் முடிவில், பெர்ன்ஷ்டைன் தனிக் கவனம் செலுத்துகிறார்.
இந்த உரை பெர்ன்ஷ்டைனுக்கு மிகவும் ‘பிடித்து விட்டது’ _ தமது புத்தகத்தில் மூன்று தடவைக்குக் குறையாமல் இதை எடுத்தாளுகிறார்; படுமோசமாய்த் திரித்துப் புரட்டிச் சந்தர்ப்பவாத வழியில் இதற்கு வியாக்கியானம் கூறுகிறார்.
அரசுப் பொறியமைவு அனைத்தையும் தொழிலாளி வர்க்கம் நொறுக்க வேண்டும், உடைக்க வேண்டும், தகர்த்திட வேண்டும் (ஷிஜீக்ஷீமீஸீரீuஸீரீ, வேட்டு வைத்து வெடித்தல் _ எங்கெல்ஸ் உபயோகிக்கும் பதம்) என்பதே மார்க்ஸ் கூறிய கருத்தென்று மேலே நாம் கண்டோம். ஆனால் பெர்ன்ஷ்டைனுடைய அபிப்பிராயத்தில், அதிகாரத்தைக் கைப்பற்றுகையில் மட்டு மீறிய புரட்சி ஆர்வம் கொண்டு விடுவதை எதிர்த்து இச்சொற்கள் மூலம் மார்க்ஸ் தொழிலாளி வர்க்கத்தை எச்சரிக்கை செய்தது போலத் தோன்றுகிறதாம்.
மார்க்சின் கருத்தை இதைக் காட்டிலும் படுமோசமாய், இதைக் காட்டிலும் கேடு கெட்டவாறு திரித்துப் புரட்டுவது கற்பனைக்கும் எட்டாதது.
ஆகவே பெர்ன்ஷ்டைனியத்துக்கு46 மிகவும் விவரமாய் மறுப்புரை கூறும் தமது நூலில் காவுத்ஸ்கி இது குறித்து என்ன செய்தார்?
இந்த விவகாரம் குறித்துச் சந்தர்ப்பவாதமானது மார்க்சியத்தை அப்பட்டமாய்த் திரித்துப் புரட்டுவதை அவர் பகுத்தராயாமலே ஒதுங்கிவிட்டார். மார்க்சின் உள்நாட்டுப் போருக்கு எங்கெல்சின் முகவுரையிலிருந்து மேற்கூறிய வாசகத்தை அவர் எடுத்துரைத்துவிட்டு, மார்க்சின் கருத்துப்படித் தொழிலாளி வர்க்கம் ஏற்கனவே தயாராயிருக்கும் அரசுப் பொறியமைவை அப்படியே எடுத்தாள முடியாது, ஆனால் பொதுவாய்ப் பேசுமிடத்து அது இதனை எடுத்தாள முடியும் என்று கூறினார் _ அவ்வளவுதான். 1852 முதலாய் மார்க்ஸ் அரசுப் பொறியமைவை ‘நொறுக்குவதையே’47 பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பணியாய் வலியுறுத்தி வந்திருந்ததையும், மார்க்சின் மெய்யான கருத்துக்கு நேர் விரோதமான ஒன்றை பெர்ன்ஷ்டைன் மார்க்சுக்குக் கற்பித்ததையும் பற்றி காவுத்ஸ்கி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.
இதன் விளைவு என்னவெனில், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பணிகள் குறித்து மார்க்சியத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்குமுள்ள மிகவும் அடிப்படையான வேறுபாடு காவுத்ஸ்கியினால் மூடி மெழுகப்பட்டுவிட்டது!
“பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரப் பிரச்சனைக்கான தீர்வினை நாம் தயங்காது, நம்பிக்கையுடன் வருங்காலத்திடம் விட்டு விடலாம்’’ என்று சொல்லி பெர்ன்ஷ்டைனை ‘எதிர்த்து’ காவுத்ஸ்கி எழுதினார் (பக்கம் 172, ஜெர்மன் பதிப்பு).
இது பெர்ன்ஷ்டைனுக்கு எதிரான மறுப்புரை அல்ல, சாராம்சத்தில் அவருக்கு விட்டுக் கொடுப்பதே ஆகும், சந்தர்ப்பவாதத்துக்குச் சரணடைவதே ஆகும். ஏனெனில் சந்தர்ப்பவாதிகள் தற்போது கேட்பதெல்லாம் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கடமைகளைப் பற்றிய எல்லா அடிப்படைப் பிரச்சனைகளையும் ‘தயங்காது, நம்பிக்கையுடன் வருங்காலத்திடம் விட்டுவிட வேண்டும்’ என்பதுதான்.
பாட்டாளி வர்க்கம் அரசுப் பொறியமைவை நொறுக்க வேண்டுமென்று மார்க்சும் எங்கெல்சும் 1852 முதல் 1891 வரை, அதாவது நாற்பது ஆண்டுகளாய் அதற்குப் போதனை செய்து வந்தனர். ஆயினும் 1899_ல் காவுத்ஸ்கி இந்த விவகாரத்தில் மார்க்சியத்துக்குச் சந்தர்ப்பவாதிகள் முற்றாகத் துரோகமிழைத்ததை எதிர்நோக்கியபோது, இந்தப் பொறியமைவை நொறுக்குவது அவசியமா என்ற பிரச்சனையை ஒதுக்கி விட்டுக் கபடமாய் அதற்குப் பதில் இந்தப் பொறியமைவை நொறுக்குவதற்கான ஸ்தூல வடிவங்கள் என்னவென்ற பிரச்சனையைக் கொண்டு வந்து நிறுத்தி, பிற்பாடு ஸ்தூல வடிவங்களை முன்கூட்டியே அறிய முடியாது என்கிற ‘மறுக்க முடியாத’ (மலடான) அற்பத்தனமான உண்மைக்குப் பின்னால் ஓடி ஒளிந்து கொள்ள முயன்றார்!!
தொழிலாளி வர்க்கத்தைப் புரட்சிக்குப் பயிற்றுவிப்பதில் பாட்டாளி வர்க்கக் கட்சிக்குள்ள கடமை குறித்து மார்க்சும் காவுத்ஸ்கியும் அனுசரிக்கும் போக்குகளில் இருவருக்குமிடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உள்ளது.
காவுத்ஸ்கியின் அடுத்த, மேலும் முதிர்ச்சியுற்ற நூலை எடுத்துக் கொள்வோம். பெருமளவுக்கு இதுவும் சந்தர்ப்பவாதத் தவறுகளுக்கு மறுப்புரையாய் அமைந்ததுதான். சமுதாயப் புரட்சி என்ற அவரது பிரசுரமே இந்நூல். இந்தப் பிரசுரத்தில் ஆசிரியர் ‘பாட்டாளி வர்க்கப் புரட்சியும்’ ‘பாட்டாளி வர்க்க ஆட்சியும்’ என்னும் பிரச்சனையைத் தமக்குத் தனி ஆய்வுப் பொருளாய்த் தேர்ந்தெடுத்துக் கொண்டார். மிகுந்த மதிப்புக்குரிய பலவற்றை அவர் அளித்தார். ஆனால் அரசு பற்றிய பிரச்சனையைத் தவிர்த்துக் கொண்டு விடுகிறார். இந்தப் பிரசுரம் பூராவும் ஆசிரியர் அரசு அதிகாரம் வெல்வது குறித்துப் பேசுகிறார் _ அதோடு நின்று விடுகிறார்; அதாவது சந்தர்ப்பவாதிகளுக்கு விட்டுக் கொடுக்கும் ஓர் உபாயத்தை _ அரசுப் பொறியமைவை அழிக்காமலே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது சாத்தியமென்று ஒத்துக் கொள்ளும் வரை சந்தர்ப்பவாதத்துக்கு விட்டுக் கொடுக்கும் உபாயமே இது _ தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். கம்யூனிஸ்டு அறிக்கை கூறும் வேலைத்திட்டத்தில் எது “காலத்துக்கு ஒவ்வாதாகிவிட்டது’’ என்று 1872_ல் மார்க்ஸ் அறிவித்தாரோ48 அதையே 1902_ல் காவுத்ஸ்கி உயிர்ப்பிக்கிறார்.
பிரசுரத்தில் ஒரு தனிப் பகுதி ‘சமுதாயப் புரட்சியின் வடிவங்களும் ஆயுதங்களும்’ என்ற பொருள் பற்றியதாகும். இதில் காவுத்ஸ்கி வெகுஜன அரசியல், வேலைநிறுத்தம், உள்நாட்டுப் போர், ‘பெரிய தற்கால அரசின் வலிமையினது கருவிகள், அதன் அதிகார வர்க்கம், சேனை’ இவற்றையெல்லாம் பற்றிப் பேசுகிறார்; ஆனால் கம்யூன் ஏற்கனவே தொழிலாளர்களுக்குப் போதித்திருந்ததைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அரசிடம் ‘மூடபக்தி’ கூடாதென்று எங்கெல்ஸ் குறிப்பாய் ஜெர்மன் சோஷலிஸ்டுகளுக்கு விடுத்த எச்சரிக்கை காரணமின்றி விடுக்கப்பட்டதல்ல என்பது தெரிகிறது.
இந்த விவகாரங் குறித்து காவுத்ஸ்கி விரித்துரைப்பது வருமாறு: வெற்றிவாகை சூடிய பாட்டாளி வர்க்கம் ‘ஜனநாயக வேலைத்திட்டத்தைச் செயல்படுத்தி நிறைவேற்றும்’ என்கிறார். ஆனால் முதலாளித்துவ ஜனநாயகத்துக்குப் பதிலாய்ப் பாட்டாளி வர்க்கம் ஜனநாயகம் நிறுவப்பட வேண்டியது குறித்து 1871_ஆம் ஆண்டு அளித்திட்ட புதிய விவரப்பொருள் குறித்து அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. ‘ஆடம்பரமாய் ஒலிக்கும்’ அடியிற் கண்டவற்றை ஒத்த மாமூல் வழக்குகளைக் கொண்டு காவுத்ஸ்கி இப்பிரச்சனையைத் தட்டிக் கழிக்கிறார்:
‘இருப்பினும் தற்போதைய நிலைமைகளில் நாம் மேலாதிக்கம் பெறுவதற்கில்லை என்பது கூறாமலே விளங்குகிறது. புரட்சிக்கு நீண்ட நெடிய, ஆழப் பாயும் போராட்டங்கள் முன் நிபந்தனையாகும். இந்தப் போராட்டங்கள் நமது தற்போதைய அரசியல், சமுதாயக் கட்டமைப்பை மாற்றி விடும்.’
சந்தேகமில்லை, ‘கூறாமலே விளங்குவதுதான்’ இது, குதிரைகள் கொள் தின்கின்றன அல்லது வோல்கா ஆறு காஸ்பியன் கடலில் விழுகிறது என்பது எப்படியோ அது போல. ஆனால் வருந்தத்தக்கது என்னவெனில், ‘ஆழப் பாயும்’ போராட்டங்களைப் பற்றிய பொருளற்ற, படாடோபமான தொடரை உபயோகித்து, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு ஜீவாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனை, அதாவது முந்திய, பாட்டாளி வர்க்கமல்லாத பிற வர்க்கங்களின் புரட்சிகளைப் போலல்லாமல் அதனுடைய புரட்சியை அரசு சம்பந்தமாகவும், ஜனநாயகம் சம்பந்தமாகவும் ‘ஆழப் பாய்வதாய்ச்’ செய்வது எது என்கிற பிரச்சனை தவிர்க்கப்பட்டு விடுவதுதான்.
இந்தப் பிரச்சனையைத் தவிர்த்துக் கொள்வதன் மூலம் காவுத்ஸ்கி சொல்லளவில் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துக் கடும் போர்ப் பிரகடனம் செய்தபோதிலும், ‘புரட்சி என்னும் கருத்தின்’ முக்கியத்துவத்தை வலியுறுத்தியபோதிலும் (புரட்சியின் ஸ்தூலப் படிப்பினைகளைத் தொழிலாளர்களுக்குப் போதிக்க ஒருவர் அஞ்சுகிறபோது இந்தக் ‘கருத்தின்’ பயன் என்ன?), அல்லது ‘யாவற்றுக்கும் முன்னால் புரட்சிகர இலட்சிய ஆர்வம்’ என்பதாய்க் கூறிய போதிலும், அல்லது தற்போது ஆங்கிலேயத் தொழிலாளர்கள் ‘குட்டி முதலாளித்துவப் பகுதியோரை விட அதிகம் மேம்பட்டவர்களாய்’ இல்லை என்று அறிவித்த போதிலும், நடைமுறையில் சந்தர்ப்பவாதத்துக்கு இந்த அடிப்படையான விவகாரத்தில் விட்டுக் கொடுத்து விடுகிறார்.
“சோஷலிச சமுதாயத்தில் தொழில் நிலையங்களின் மிகப் பல்வேறுபட்ட வடிவங்களும் _ அதிகாரவர்க்க [??], தொழிற்சங்க, கூட்டுறவு, தனியார்… இப்படிப் பல்வேறுபட்ட வடிவங்களும் _ ஒருங்கே இருக்க முடியும்’’ என்று காவுத்ஸ்கி எழுதுகிறார். “…உதாரணமாய், அதிகார வர்க்க [??] ஒழுங்கமைப்பின்றி இருக்க முடியாத நிலையங்கள், ரயில்வேக்களைப் போன்ற நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஜனநாயக ஒழுங்கமைப்பு பின்வரும் வடிவத்தை மேற்கொள்ளலாம்: தொழிலாளர்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள், இப்பிரதிநிதிகள் ஒரு வகை நாடாளுமன்றமாய் அமைகின்றனர்; இந்நாடாளுமன்றம் செயல்முறை விதிகளை நிலைநாட்டி, அதிகார வர்க்க இயந்திரத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறது. பிற நிலையங்களின் நிர்வாகப் பொறுப்பு தொழிற்சங்கங்களுக்கு மாற்றப்படலாம். மற்றும் சில கூட்டுறவு நிலையங்களாகி விடலாம்’’ (பக்கங்கள் 148-115 ருஷ்ய மொழிபெயர்ப்பு, 1903_ல் ஜெனீவாவில் வெளியிடப்பட்டது).
இந்த வாதம் தவறானது; கம்யூனுடைய படிப்பினைகளை உதாரணமாய்க் கொண்டு எழுபதாம் ஆண்டுகளில் மார்க்சும் எங்கெல்சும் அளித்த விளக்கங்களுடன் ஒப்பிடுகையில் இது பின்னோக்கிச் செல்கிறது.
இன்றியமையாததாய்க் கருதிக் கொள்ளப்படும் ‘அதிகார வர்க்க’ ஒழுங்கமைப்பைப் பொறுத்தவரை, ரயில்வேக்கும், பெருவீத இயந்திரத் தொழிலைச் சேர்ந்த எந்த ஆலை, எந்தத் தொழிற்கூடம், பெரிய கடை அல்லது பெருவீத முதலாளித்துவ விவசாய நிலையத்தைப் போன்ற வேறு எந்தத் தொழில் நிலையத்துக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. இந்த எல்லா நிலையங்களின் தொழில்நுட்பம் கண்டிப்பான கட்டுப்பாட்டையும் அவரவருக்கும் ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்து முடிப்பதில் மிகக் கறாரான துல்லியத்தையும் அத்தியாவசியமாக்கி விடுகிறது. ஏனெனில் இவை இல்லையேல் நிலையம் அனைத்துமே செயல்படாது நின்று போய்விடலாம் அல்லது இயந்திரமே உற்பத்திப் பொருளோ சேதமுற்று விடலாம். இந்த எல்லா நிலையங்களிலும் தொழிலாளர்கள் நிச்சயம் ‘பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள், இப்பிரதிநிதிகள் ஒரு வகை நாடாளுமன்றமாய் அமைவார்கள்.’
ஆனால் விவகாரத்தின் மையக்கூறு என்னவெனில் இந்த ‘ஒரு வகை நாடாளுமன்றம்’ முதலாளித்துவ நாடாளுமன்ற உறுப்பின் அர்த்தத்தில் ஒரு நாடாளுமன்றமாய் இருக்காது. இந்த ‘ஒரு வகை நாடாளுமன்றம்’ காவுத்ஸ்கி கற்பனை செய்வது போல _ காவுத்ஸ்கியின் சிந்தனை முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் வரம்புகளுக்கு அப்பால் செல்லவில்லை _ ‘செயல்முறை விதிகளை நிலைநாட்டி, அதிகார வர்க்க இயந்திரத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதோடு’ நிற்காது என்பதுதான் இந்த விவகாரத்தின் மையக்கூறு. சோஷலிச சமுதாயத்தில், தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள் அடங்கிய இந்த ‘ஒரு வகை நாடாளுமன்றம்’ ‘செயல்முறை விதிகளை நிலைநாட்டும்’, ‘இயந்திரத்தின்’ ‘நிர்வாகத்தை மேற்பார்வையிடும்’ என்பது மெய்தான், ஆனால் இந்த இயந்திரம் ‘அதிகார வர்க்கப்’ பொறியமைவாய் இராது. தொழிலாளர்கள் அரசியல் அதிகாரம் வென்று கொண்ட பிறகு, அவர்கள் பழைய அதிகார வர்க்க இயந்திரத்தை நொறுக்கிவிடுவார்கள், அடியோடு அதைத் தகர்த்துத் தரையோடு தரையாக்கிவிடுவார்கள்; அதனிடத்தில் ஒரு புதிய இயந்திரத்தை, அதே தொழிலாளர்களாலும் சிப்பந்திகளாலுமான இயந்திரத்தை நிறுவிக் கொள்வார்கள்; இந்தத் தொழிலாளர்களும் சிப்பந்திகளும் அதிகார வர்க்கத்தினராய் மாறுவதை எதிர்த்துத் தடுக்க உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்நடவடிக்கைகளை மார்க்சும் எங்கெல்சும் விவரமாய் வரையறுத்தனர்: 1) தேர்தல் மட்டுமின்றி, எந்நேரத்திலும் திருப்பியழைக்கப்படுதலும் இருக்கும்; 2) சம்பளம் தொழிலாளியினுடையதை விட அதிகமாய் இல்லாதிருத்தல்; 3) எல்லோராலுமான கண்காணிப்பும் மேற்பார்வையும் உடனடியாய் நிறுவப்படுதல் _ இதன் விளைவாய், எல்லோரும் சிறிது காலத்துக்கு ‘அதிகார வர்க்கத்தினராய்’ ஆகலாம், ஆகவே எவரும் ‘அதிகார வர்க்கத்தினர்’ ஆக முடியாமற் போகும்.
“கம்யூனானது நாடாளுமன்ற உறுப்பாயிராது, செயலாற்றும் உறுப்பாய் இருக்கும், ஒருங்கே நிர்வாக உறுப்பாகவும் சட்டம் இயற்றும் உறுப்பாகவும் இருக்கும்’’49 _ மார்க்சின் இச்சொற்கள் குறித்து காவுத்ஸ்கி சிந்தனை செய்து பார்க்கவே இல்லை
முதலாளித்துவ நாடாளுமன்ற முறைக்கும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்குமுள்ள வித்தியாசத்தை காவுத்ஸ்கி புரிந்து கொள்ளவே இல்லை. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை ஜனநாயகத்தை (மக்களுக்கானது அல்ல) அதிகார வர்க்கத்துடன் (மக்களுக்கு எதிரானது) இணைத்திடுகிறது. பாட்டாளி வர்க்க ஜனநாயகம் அதிகார வர்க்கத்தை வேரளவுக்கு வெட்டிக் குறுக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கும்; இந்த நடவடிக்கைகளை அவற்றின் இறுதி முடிவு வரை செயல்படுத்திச் செல்லவும், அதிகார வர்க்கத்தை முழுமையாய் ஒழித்திடவும், மக்களுக்கு முழுநிறை ஜனநாயகத்தைச் செயல்படுத்தவும் கூடியதாய் இருக்கும்.
காவுத்ஸ்கி இங்கு அரசிடம் அந்தப் பழைய ‘மூட பக்தியையும்’ அதிகார வர்க்கத்தில் அதே ‘மூடநம்பிக்கையையும் தான்’ வெளிப்படுத்துகிறார்.
இனி சந்தர்ப்பவாதிகளுக்கு எதிரான காவுத்ஸ்கியின் நூல்களில் இறுதியானதும் சிறந்ததுமான ஆட்சி அதிகாரம் பெறும் பாதை என்னும் அவருடைய பிரசுரத்துக்கு வருவோம். (இது ருஷ்ய மொழியில் பெயர்க்கப்படவில்லை என்று நினைக்கிறேன், ஏனெனில் எங்கள் நாட்டில் பிற்போக்கு உச்சநிலையில் இருந்த 1909_ல் வெளியான நூல் இது.) இந்தப் பிரசுரம் ஒரு பெரிய முன்னேற்றப் படியாகும். ஏனெனில் இது, பெர்ன்ஷ்டைனுக்கு எதிரான 1899_ஆம் ஆண்டு பிரசுரத்தைப் போல, பொதுவில் புரட்சிகர வேலைத்திட்டம் குறித்துப் பரிசீலிக்கவில்லை; 1902_ஆம் ஆண்டு பிரசுரமான சமுதாயப் புரட்சியைப் போல சமுதாயப் புரட்சி நடைபெறும் காலத்தைக் கருதாமலே சமுதாயப் புரட்சியின் கடமைகள் குறித்தும் பரிசீலிக்கவில்லை; ‘புரட்சிகளின் சகாப்தம்’ உதித்துக் கொண்டிருக்கிறது என்பதை அங்கீகரிக்கும்படி நம்மை வற்புறுத்தும் ஸ்தூல நிலைமைகளை இது பரிசீலிக்கிறது.
பொதுவில் வர்க்கப் பகைமைகள் முற்றித் தீவிரமடைந்திருப்பதையும், இத்துறையில் குறிப்பிடத்தக்க முக்கிய பங்காற்றும் ஏகாதிபத்தியத்தையும் ஆசிரியர் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டுகிறார். மேற்கு ஐரோப்பாவில் ‘1789_1871ஆம் ஆண்டுகளின் புரட்சிக் கட்டத்துக்குப்’ பிற்பாடு, கிழக்கில் 1905_ல் இதையொத்த ஒரு கட்டம் ஆரம்பமாயிற்று என்று கூறுகிறார். அச்சுறுத்தும் வேகத்தில் ஓர் உலக யுத்தம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. ‘இனி பாட்டாளி வர்க்கம் அகாலப் புரட்சி குறித்துப் பேச முடியாது.’ ‘நாம் புரட்சிகரக் கட்டத்தில் நுழைந்துவிட்டோம்.’ ‘புரட்சிகர சகாப்தம் தொடங்குகிறது.’
இந்த உரைகள் தெள்ளத் தெளிவானவை, ஏகாதிபத்திய யுத்தத்துக்கு முன்னதாய் ஜெர்மன் சமூக-_ஜனநாயகவாதிகள் எவ்வளவு நம்பிக்கை அளிப்போராய் விளங்கினர் என்பதையும், யுத்தம் ஆரம்பமானதும் இவர்கள் _ காவுத்ஸ்கியும் அடங்கலாய் _ எவ்வளவு- கேவலமாய்ச் சீரழிந்துவிட்டனர் என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க காவுத்ஸ்கியின் இந்தப் பிரசுரம் ஓர் அளவுகோலாய்ப் பயன்பட வேண்டும். ‘நாம் [அதாவது ஜெர்மன் சமுக_-ஜனநாயகவாதிகள்] மெய்யாகவே இருப்பதைக் காட்டிலும் அதிக அளவு ‘மிதமாய்’ இருப்பதாய் எளிதில் தோன்றும் அபாய மிக்கது தற்போதைய நிலைமை’ என்று பரிசீலனையிலுள்ள இந்தப் பிரசுரத்தில் காவுத்ஸ்கி எழுதினார். உண்மையில் ஜெர்மன் சமூக-_ஜனநாயகக் கட்சி அது தோன்றியதைக் காட்டிலும் கூடுதலாக மிதமானதென்பதும் சந்தர்ப்பவாதம் கொண்டதென்பதும் தெரிய வந்தது!
ஆகவே, புரட்சிகளின் சகாப்தம் ஏற்கனவே தொடங்கி விட்டது என்று அவ்வளவு வெளிப்படையாய்க் காவுத்ஸ்கி பிரகடனம் செய்தபோதிலும், ‘அரசியல் புரட்சி’ குறித்து ஆய்வதற்கென எழுதப்பட்டதாய் அவரே கூறிக் கொண்ட இந்தப் பிரசுரத்தில் திரும்பவும் அவர் அரசு பற்றிய பிரச்சனையை அணுகாது அறவே தவிர்த்துக் கொண்டதானது மேலும் குறிப்பிடத்தக்க பண்பறிகுறியாய் விளங்குகிறது.
இப்பிரச்சனையில் இந்தத் தட்டிக்கழிப்புகளும் சொல்லாமல் விட்டவைகளும் மழுப்புதல்களும் சேர்ந்து தவிர்க்க முடியாதபடி முழு அளவுக்கும் சந்தர்ப்பவாதத்திடம் ஓடி விடுவதில் முடிவுற்றன. இது குறித்து இனி நாம் பரிசீலித்தாக வேண்டும்.
ஜெர்மன் சமூக_-ஜனநாயகவாதிகள் காவுத்ஸ்கியின் மூலம் இப்படி அறிவித்ததாய்த் தோன்றுகிறது; புரட்சிகரக் கருத்தோட்டங்களைப் பற்றியொழுகுகிறேன் (1899), பாட்டாளி வர்க்கத்தின் சமுதாயப் புரட்சி தவிர்க்க முடியாததென்பதை யாவற்றுக்கும் முதலாய் ஏற்றுக் கொள்கிறேன் (1902), புரட்சிகளின் புதிய சகாப்தம் பிறப்பதை ஒத்துக் கொள்கிறேன் (1909), ஆயினும், 1852_லேயே மார்க்ஸ் கூறியதற்கு மாறாய்ச் செல்கிறேன், ஏனெனில் அரசு குறித்துப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள்ள கடமைகளைப் பற்றிய பிரச்சனை எழுப்பப்படுகிறது (1912).
பெனெகக்குடன் காவுத்ஸ்கி நடத்திய வாக்குவாதத்தில் இந்த நேர்முகமான முறையில்தான் இப்பிரச்சனை போடப்பட்டது.