“சமூக -ஜனநாயகவாதி’ என்னும் பதம் விஞ்ஞான வழியில் தவறானதென்று நிலைநாட்டுகையில் எங்கெல்ஸ் இப்பொருள் குறித்துத் தமது கருத்துக்களை கூற நேர்ந்தது.
பல்வேறு பொருள் குறித்து, முக்கியமாய் “சர்வதேசப்’ பிரச்சனைகள் குறித்து 1870-_80 ஆம் ஆண்டுகளில் தாம் எழுதிய கட்டுரைகளின் பதிப்பு ஒன்றுக்கு [Internationales aus dem ‘Volksstaat]* எங்கெல்ஸ் முன்னுரை எழுதினார். இம்முன்னுரை 1894 ஜனவரி 3_ஆம் தேதியிடப்பட்டது; அதாவது, அவருடைய மறைவுக்கு ஒன்றரை ஆண்டு முன்னதாய் எழுதப் பெற்றது. தமது எல்லாக் கட்டுரைகளிலும் “சமூக- ஜனநாயகவாதி’ என்று சொல்லாமல் “கம்யூனிஸ்டு’ என்னும் பதத்தையே உபயோகித்ததாகவும், அக்காலத்தில் பிரான்சில் புரூதோனியவாதிகளும் ஜெர்மனியில் லஸ்ஸாலியர்களும்37 தங்களை சமூக- ஜனநாயகவாதிகள் என்பதாய் அழைத்துக் கொண்டதே இதற்குக் காரணம் என்றும் எங்கெல்ஸ் இந்த முன்னுரையில் எழுதினார்.
“…ஆகவே மார்க்சுக்கும் எனக்கும் எங்களுடைய தனிவகைக் கருத்தோட்டத்தைக் குறிக்க இது போன்ற வரையறையற்ற ஒரு பதத்தைக் கையாளுவது சிறிதும் பொருத்தமாய் இருக்கவில்லை’’ என்று எங்கெல்ஸ் எழுதினார். “இன்று நிலைமைகள் மாறிவிட்டன, பொதுவில் சோஷலிஸ்டாய் இருப்பதோடு அல்லாமல் முழுக்க முழுக்க கம்யூனிஸ்டாக உள்ள பொருளாதார வேலைத்திட்டத்தைக் கொண்ட ஒரு கட்சிக்கு, அரசு அனைத்தையும், மற்றும் இதன் விளைவாய் ஜனநாயகத்தையும் கூட விஞ்சுவதை இறுதி அரசியல் குறிக்கோளாய்க் கொண்ட ஒரு கட்சிக்கு இன்னமும் இப்பதம் [“சமூக -ஜனநாயகவாதி’] கறாரானதாயில்லை [unpassend, பொருந்துவதாயில்லை] என்றாலுங்கூட, இன்று இதை ஏற்கத்தக்கதாய் [mag passieren] கொள்ளலாம். ஆனால் மெய்யான [அழுத்தம் எங்கெல்சினுடையது] அரசியல் கட்சிகளுடைய பெயர்கள் ஒருபோதும் முழு அளவுக்கும் பொருத்தமாய் இருப்பதில்லை. கட்சி வளர்ந்து செல்கிறது, ஆனால் பெயர் இருந்தபடியே இருக்கிறது’’.
இயக்கவியல்வாதியான எங்கெல்ஸ், தமது இறுதிநாள் வரை இயக்கவியலை விட்டு இம்மியும் பிறழாதவராய் இருந்தார். மார்க்சிடமும் என்னிடமும் கட்சிக்கு அற்புதமான, விஞ்ஞான வழியில் துல்லியமான பெயர் இருந்தது; ஆனால் மெய்யான கட்சிதான், அதாவது வெகுஜனப் பாட்டாளி வர்க்கக் கட்சிதான் இருக்கவில்லை என்கிறார். ஆனால் இப்பொழுது (பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில்) மெய்யான கட்சி இருந்தது; ஆனால் அதன் பெயர்தான் விஞ்ஞான வழியில் பிழைபட அமைந்துவிட்டது. பரவாயில்லை, கட்சி வளர்ந்து செல்லும் வரை, விஞ்ஞான வழியில் அதன் பெயர் பிழைபட இருப்பதானது கட்சியிடமிருந்து மறைக்கப்படாத வரை, சரியான வழியில் கட்சி வளர்வதற்கு இப்பெயர் ஒரு தடங்கலாய் அமையாத வரை, இந்தப் பெயர் “எற்கத்தக்கதே’ ஆகும்.
நகைச்சுவையாளர் ஒருவர் போல்ஷிவிக்குகளாகிய நமக்கு எங்கெல்சின் பாணியிலே ஆறுதல் கூற முன்வரலாம்: மெய்யான கட்சி ஒன்று நம்மிடம் இருக்கிறது; இது சிறப்பான வளர்ச்சி கண்டுவருகிறது; ஆகவே அர்த்தமில்லாத, எழிலற்ற “போல்ஷிவிக்’ என்பது போன்ற பெயருங்கூட, 1903 பிரஸ்ஸெல்ஸ் -லண்டன் காங்கிரசில்38 நாம் பெரும்பான்மை பெற்றோம் என்ற சந்தர்ப்பவச உண்மையைத் தவிர்த்து வேறு எதனையும் குறிக்காத இப்பெயருங்கூட “ஏற்புடையதே ஆகு’ மென அவர் கூறலாம். குடியரசுவாதிகளும் “புரட்சிகரக்’ குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் ஜூலையிலும் ஆகஸ்டிலும் எங்கள் கட்சி மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்குமுறையானது “போல்ஷிவிக்’ என்னும் பெயரை அனைவரும் மதித்துப் போற்றும் பெயராக்கியுள்ளதாலும், அதோடு இந்த அடக்குமுறையானது எங்கள் கட்சி அதன் மெய்யான வளர்ச்சியில் கண்டிருக்கும் வரலாற்றுச் சிறப்புடைத்த மகத்தான முன்னேற்றத்தைக் குறிப்பதாலும், இன்று இன்று நான் முன்பு ஏப்ரலில் எங்கள் கட்சியின் பெயரை மாற்ற வேண்டுமென்று கூறிய ஆலோசனையை வற்புறுத்தத் தயங்குவேன் என்றே நினைக்கிறேன். என் தோழர்களுக்கு ஒரு “சமரச வழியை’, அதாவது எங்கள் கட்சியைக் கம்யூனிஸ்டுக் கட்சி என்று அழைத்து அதேபோதில் “போல்ஷிவிக்குகள்’ என்னும் சொல்லையும் அடைப்புக் குறிகளுக்குள் இருத்திக் கொள்வோமென்று ஆலோசனை கூறலாமென நினைக்கிறேன்…
ஆனால் கட்சியில் பெயர் பற்றிய பிரச்சனை, அரசு குறித்துப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் போக்கு பற்றிய பிரச்சனையைவிட ஒப்பிடற்கரிய சொற்ப முக்கியத்துவமே வாய்ந்தது.
அரசு பற்றிய வழக்கமான வாக்குவாதங்களில் மீண்டும் மீண்டும் ஒரு தவறு இழைக்கப்படுகிறது. இந்தத் தவறு குறித்து எங்கெல்ஸ் எச்சரிக்கை செய்தார்; மேலே போகிற போக்கில் இதனை நாம் சுடடிக்காட்டியுள்ளோம். அரசின் ஒழிப்பு ஜனநாயகத்தின் ஒழிப்பையும் குறிப்பதாகும், அரசு உலர்ந்து உதிர்வது ஜனநாயகம் உலர்ந்து உதிர்வதையும் குறிப்பதாகும் என்பது மீண்டும் மறக்கப்பட்டு விடுவதுதான் இந்தத் தவறு.
இவ்வாறு சொல்வது மேலெழுந்தவாரியாய்ப் பார்க்கையில் மிக விநோதமாகவும், புரிந்து கொள்ள முடியாததாகவும் தோன்றுகிறது. ஏன், சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கீழ்ப்படியும் கோட்பாடு கடைப்பிடிக்கப்படாத ஒரு சமுதாய அமைப்பு உதிக்கப் போவதாய் எதிர்பார்க்கிறோம் என்கிற சந்தேகங்கூட சிலருக்கு நம் மீது எழலாம் _ ஏனெனில், இந்தக் கோட்பாட்டை அங்கீகரிப்பதுதானே ஜனநாயகம்.
இல்லை, ஜனநாயகமும், சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கீழ்ப்படிதலும் ஒன்றல்ல. சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கீழ்படிதலை அங்கீகரிக்கும் அரசுதான் ஜனநாயகம் எனப்படுவது; அதாவது, ஒரு வர்க்கம் பிறிதொன்றின் மீது, மக்கள் தொகையில் ஒரு பகுதி பிறிதொன்றின் மீது, முறைப்படி பலாத்காரத்தைப் பிரயோகிப்பதற்கான ஒழுங்கமைப்பே ஜனநாயகம் எனப்படுவது.
அரசை ஒழிப்பதே, அதாவது ஒழுங்கமைந்த முறைப்படியான எல்லா பலாத்காரத்தையும், பொதுவில் மக்களுக்கு எதிராய்ப் பிரயோகிக்கப்படும் எல்லா பலாத்காரத்தையும் ஒழிப்பதே நமது இறுதி இலட்சியம். சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கீழ்ப்படியும் கோட்பாடு அனுசரிக்கப்படாத ஒரு சமுதாய அமைப்பு உதிக்கப் போவதாய் நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நாம் சோஷலிசத்துக்காகப் பாடுபடுகையில், இது கம்யூனிசமாய் வளர்ச்சியுறும், ஆகவே பொதுவில் மக்களுக்கு எதிரான பலாத்காரத்தின் தேவையும், ஒரு மனிதர் பிறிதொருவருக்கும், மக்களின் தொகையில் ஒரு பகுதி பிறிதொன்றுக்கும் கீழ்ப்படியும் தேவையும் அறவே மறைந்து போய்விடும்; ஏனெனில் பலாத்காரம் இல்லாமலே, கீழ்ப்படிதல் இல்லாமலே மக்கள் சமுதாய வாழ்வின் சர்வ சாதாரண நெறிமுறைகளை அனுசரித்து நடக்கப் பழக்கப்பட்டுவிடுவார்கள் என்பதில் எங்களுக்கு ஐயப்பாட்டுக்கு இடமில்லை.
பழக்கத்தின் பாற்பட்ட இந்த அம்சத்தை வலியுறுத்தும் பொருட்டு எங்கெல்ஸ் ஒரு புதிய தலைமுறையினர் குறித்து, “புதிய, சுதந்திர சமுதாய நிலைமைகளில் வளர்ந்து ஆளாகும்’ தலைமுறையினர் குறித்துப் பேசுகிறார். இந்தப் புதிய தலைமுறையினர் ஜனநாயக_-குடியரசு அமைப்பும் அடங்கலாய் எல்லா வகைப்பட்டதுமான “இந்த வேண்டாத பிண்டமான அரசமைப்பு அனைத்தையுமே விட்டொழித்து விடும்படியான நிலையை வந்தடைவார்கள்’.
இதை விளக்க, அரசு உலர்ந்து உதிர்வதற்குரிய பொருளாதார அடிப்படையைப் பகுத்தாய்வது அவசியமாகும்.