1847_ல் கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்ஸ் இந்தக் கேள்விக்கு அளித்த பதில் முற்றிலும் கருத்தியலானதாகவே இருந்தது. இன்னும் கறாராய்க் கூறுவதெனில், அந்தப் பதில் செய்ய வேண்டிய பணிகளைச் சுட்டிக்காட்டியதே தவிர இவற்றைச் செய்து முடிப்பதற்கான வழிகளைச் சொல்லவில்லை. இந்த இயந்திரத்துக்குப் பதிலாய் ‘ஆளும் வர்க்கமாய்ப் பாட்டாளி வர்க்கம் ஒழுங்கமைய’ வேண்டும், ‘ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி பெற’ வேண்டும் என்பதே கம்யூனிஸ்டு அறிக்கையில் தரப்படும் பதில்.
மார்க்ஸ் கற்பனைகளில் ஈடுபடவில்லை. பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாய் நிறுவன வழியில் ஒழுங்கமைவது திட்டவட்டமான எந்த வடிவங்களில் நடந்தேறும், இந்த ஒழுங்கமைப்பு ‘ஜனநாயகத்துக்கான போரில்’ முழு நிறைவான, முடிவான ‘வெற்றி பெறுவதுடன்’ இணைக்கப்படுவதற்குரிய திட்டவட்டமான முறை என்ன என்ற கேள்விக்கு வெகுஜன இயக்கத்தின் அனுபவம் பதிலளிக்குமென்று அவர் எதிர்பார்த்தார்.
கம்யூனுடைய அனுபவம் சொற்பமாகவே இருந்ததென்றாலும், மார்க்ஸ் இந்த அனுபவத்தை பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலில் மிகவும் உன்னிப்பாய்ப் பகுத்தாய்ந்தார். இந்நூலின் மிக முக்கிய வாசகங்களை மேற்கோளாய்த் தருகிறோம்.
‘நிரந்தர சேனை, போலீஸ், அதிகார வர்க்கம், சமயக் குருமார் அமைப்பு, நீதிமன்றம் ஆகிய சர்வ வியாபகச் செயலுறுப்புக்களைக் கொண்ட மத்தியத்துவ அரசு அதிகாரம்’ மத்திய காலத்தில் உதித்து, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓங்கி வளர்ந்தது. மூலதனத்துக்கும் உழைப்புக்கு-மிடையே வர்க்கப் பகைமைகள் வளர்ச்சியுற்றதைத் தொடர்ந்து ‘மேலும் மேலும் அரசு அதிகாரமானது உழைப்பை அடக்குவதற்கான பொது சக்தியின் தன்மையை, வர்க்க ஆதிக்கத்திற்குரிய பொறியமைவின் தன்மையைப் பெற்றது. வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒவ்வொரு புரட்சியையும் அடுத்து, அரசு அதிகாரத்தின் அப்பட்டமான பலவந்தத் தன்மை மேலும் மேலும் கண்கூடாய்ப் புலப்படுகிறது.’ 1848-_49 ஆம் ஆண்டுகளின் புரட்சிக்குப் பிற்பாடு அரசு அதிகாரம் ‘…உழைப்புக்கு எதிரான மூலதனத்தின் தேசியப் போர்க் கருவி’ ஆகிவிட்டது. இரண்டாவது சாம்ராஜ்யம் இதை உறுதியாக்கிற்று.
‘சாம்ராஜ்யத்துக்கு நேர்மாறான எதிர்நிலையே கம்யூன்’. ‘வர்க்க ஆதிக்கத்தின் முடியாட்சி வடிவத்தை மட்டுமின்றி, வர்க்க ஆதிக்கத்தையே அகற்றிடுவதற்கான ஒரு குடியரசுக்கு உரிய குறிப்பிட்ட ஒரு வடிவமே கம்யூன்…’
பாட்டாளி வர்க்க, சோஷலிசக் குடியரசுக்கு ‘உரிய’ இந்த வடிவம் என்ன? அது தோற்றுவிக்கத் தொடங்கிய அரசு எது?
‘…நிரந்தரச் சேனையை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாய் ஆயுதமேந்திய மக்களைத் தோற்றுவித்ததே கம்யூனுடைய முதலாவது அரசாணையாகும்…’
இப்பொழுது இந்தக் கோரிக்கை, தன்னை சோஷலிஸ்டு என்பதாய்க் கூறிக் கொள்ளும் ஒவ்வொரு கட்சியின் வேலைத் திட்டத்திலும் இருப்பதைக் காண்கிறோம். ஆனால் இந்தக் கட்சிகளுடைய வேலைத் திட்டங்கள் உண்மையில் எந்த அளவுக்கு மதிக்கத்தக்கவை என்பது எங்களுடைய சோஷலிஸ்டு -புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் நடந்து கொண்ட முறையிலிருந்து வெட்ட வெளிச்சமாய்த் தெரிகிறது. பிப்ரவரி 27 ஆம் நாள் புரட்சியை அடுத்து இவர்கள் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றத் தீர்மானமாய் மறுத்து விட்டனர்!
‘…அனைத்து மக்களது வாக்குரிமையின் அடிப்படையில் பாரிஸ் நகரின் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு, கம்யூன் நிறுவப்பட்டது. இந்த உறுப்பினர்கள் பொறுப்புள்ளவர்களாகவும் எந்நேரத்திலும் நீக்கப்படக் கூடியவர்களுமாய் இருந்தனர். இயற்கையாகவே அதன் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் தொழிலாளர்களாகவோ, தொழிலாளி வர்க்கத்தின் முழு ஆதரவுக்குரிய பிரதிநிதிகளாகவோதான் இருந்தனர்…
‘…இது காறும் அரசாங்கத்தின் கைக்கருவியாய் இருந்து வந்த போலீஸ் இப்போழுது திடுதிப்பென அதன் அரசியல் செயற்பாடுகள் யாவும் பறிக்கப்பட்டுப் பொறுப்புள்ள, எக்காலத்திலும் நீக்கப்படக் கூடிய கம்யூன் கைக்கருவியாய் மாற்றப்பட்டது… நிர்வாகத்தின் ஏனைய எல்லாத் துறைகளையும் சேர்ந்த அதிகாரிகளும் இதே போல மாற்றப்பட்டனர்… கம்யூன் உறுப்பினர்கள் முதலாய் எல்லோரும் தொழிலாளருக்குரிய சம்பளங்கள் பெற்றுப் பொதுச் சேவை புரிய வேண்டியதாயிற்று. அரசின் உயர் பதவியாளர்கள் மறைந்ததோடு இந்த உயர் பதவியாளர்களது தனியுரிமைகளும் சலுகைகளும் பிரதிநிதித்துவ மான்யத் தொகைகளும் மறைந்துவிட்டன… பழைய அரசாங்கத்தின் பௌதிகப் பலாத்காரக் கருவிகளான நிரந்தரச் சேனையையும் போலீசையும் ஒழித்துக் கட்டியதும் கம்யூனானது உடனே ஆன்மிக அடக்குமுறைக் கருவியையும், அதாவது குருமார்களுடைய அதிகாரத்தையும் தகர்க்க முற்பட்டது… நீதி மன்றத்தினர் போலியான சார்பற்ற நிலையை இழந்து விட்டனர்… இனி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியோரும், பொறுப்புடையோரும், நீக்கப்படக் கூடியோரும் ஆயினர்…’17
ஆக, கம்யூனானது நொறுக்கப்பட்ட அரசுப் பொறியமைவுக்குப் பதிலாய் நிறைவான ஜனநாயகத்தை நிறுவியதாய் ‘மட்டும்தான்’ தோன்றும். அதாவது, நிரந்தர சேனையை ஒழித்தது; எல்லா அதிகாரிகளையும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களாக்கி, திருப்பியழைக்கப்படக் கூடியவர்களாக்கியது. ஆனால் உண்மையில் இந்த ‘மட்டும்தான்’ என்பது ஒரு வகை நிறுவனங்களை அகற்றி அவற்றினிடத்தில் அடிப்படையிலேயே வேறொரு தன்மையதான பிற நிறுவனங்களைத் தோற்றுவிக்கும் பிரம்மாண்ட மாறுதலைக் குறிப்பதாகும். ‘அளவு பண்பாய் மாறுவதன்’ எடுத்துக்காட்டு இது. அதாவது முடிந்த அளவுக்கு முழுமையாகவும் முரணின்றியும் செயல்படுத்தப்பட்ட ஜனநாயகமானது முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகமாய் மாற்ற மடைந்து விடுகிறது; அதாவது அரசு (= குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான தனிவகை சக்தி) இனி மெய்யான அரசு அல்லாத ஒன்றாய் மாற்றமடைந்து விடுகிறது.
முதலாளித்துவ வர்க்கத்தாரை அடக்குவதும் அவர்களுடைய எதிர்ப்பை நசுக்குவதும் இனியும் அவசியமாகவே இருக்கிறது. கம்யூனுக்கு இது மிக மிக அவசியமாயிருந்தது. கம்யூன் இப்பணியைப் போதிய உறுதியோடு செய்யாதது அதன் தோல்விக்குரிய காரணங்களில் ஒன்றாகும். ஆனால் அடக்குவதற்கான செயலுறுப்பு இங்கு மக்களின் பெரும்பான்மைப் பகுதியே அன்றி, அடிமையுடைமைச் சமுதாயம், பண்ணையடிமைச் சமுதாயம், கூலியடிமைச் சமுதாயம் ஆகிய இவை யாவற்றிலும் இருந்தது போலச் சிறுபான்மைப் பகுதியல்ல. பெரும்பான்மை மக்கள், தாமே தமது ஒடுக்குமுறையாளர்களை அடக்குவதால், அடக்குவதற்கான ‘தனிவகை சக்தி’ ஒன்று இனி தேவையில்லை! இந்த அர்த்தத்தில் அரசு உலர்ந்து உதிரத் தொடங்குகிறது. தனிச் சலுகை படைத்த சிறுபான்மையோரது தனி வகை நிறுவனங்களுக்குப் பதிலாய் (தனிச் சலுகை பெற்ற அதிகார வர்க்கம், நிரந்தரச் சேனையின் தலைவர்கள்), பெரும்பான்மை மக்கள் நேரில் தாமே இந்தப் பணிகளை நிறைவேற்ற முடிகிறது. அரசு அதிகாரத்தின் பணிகள் மேலும் மேலும் கூடுதலாய்ப் பெருந்திரளான மக்களுக்குரியதாகும்போது, இந்த அதிகாரத்திற்கான அவசியம் மேலும் மேலும் குறைந்து விடுகிறது.
இச்சந்தர்ப்பத்தில், மார்க்ஸ் வலியுறுத்திக் கூறிய கம்யூனின் பின்வரும் நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்கனவாகும்: அதிகாரிகளுக்கான எல்லாப் பிரதிநிதித்துவ மான்யங்களையும் பண வகையிலான எல்லாத் தனிச் சலுகைகளையும் ஒழித்தல், அரசின் எல்லா ஊழியர்களது ஊதியங்களையும் ‘தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களின்’ நிலைக்குச் சமமாக்குதல். முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கு, ஒடுக்குவோரின் ஜனநாயகத்திலிருந்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய ஜனநாயகத்துக்கு, குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான ‘தனிவகை சக்தியாய்’ அமைந்த அரசிலிருந்து ஒடுக்குவோரை அடக்குவதற்கான பெரும்பான்மை மக்களது _ அதாவது தொழிலாளர்கள், விவசாயிகளது _ பொதுச் சக்திக்கு ஏற்பட்ட மாற்றத்தை ஏனைய எவற்றையும்விட இந்த நடவடிக்கைகள் மிகத் தெளிவாய்ப் புலப்படுத்துகின்றன. மிகவும் எடுப்பான இந்த விவகாரத்தில்தான், மார்க்சின் கருத்துக்கள் அறவே புறக்கணிக்கப் பட்டிருக்கின்றன! ஜனரஞ்சகமான விளக்க உரைகளில் _ இவை எண்ணில் அடங்காதவை _ இக்கருத்துக்கள் குறிப்பிடப்படுவதே இல்லை. கிறிஸ்தவர்கள், அவர்களுடைய மதம் அரசின் மதமானதும் ஜனநாயக-ப் புரட்சிகர மனப்பான்மை கொண்ட புராதனக் கிறிஸ்தவத்தின் ‘சூதறியாப் பேதைமையை மறந்து விட்டது’ போல, இதுவும் காலத்துக்கு ஒவ்வாத பழம் பாணியிலான ‘சூதறியாப் பேதைமையின்’ வகைப்பட்டதாய்க் கொள்ளப்பட்டு, இதைப் பற்றிக் குறிப்பிடாமலே மௌனமாயிருப்பதே ‘உசிதம்’ என்றாகிவிட்டது.
அரசின் உயர் அதிகாரிகளுடைய சம்பளம் குறைக்கப்பட வேண்டுமென்பது சூதறியாப் பேதைமை கொண்ட புராதன ஜனநாயகத்தின் கோரிக்கையாக ‘மட்டுமே’ தோன்றுகிறதாம். நவீன சந்தர்ப்பவாதத்தின் ‘மூலவர்களில்’ ஒருவரான முன்னாள் சமூக-ஜனநாயகவாதி எடுவார்டு பெர்ன்ஷ்டைன் ‘புராதன’ ஜனநாயகம் குறித்துக் கூறப்படும் கொச்சையான முதலாளித்துவக் கேலியையும் கிண்டலையும் பன்முறை தாமும் திருப்பிக் கூறியிருக்கிறார். எல்லாச் சந்தர்ப்பவாதிகளையும் இன்றைய காவுத்ஸ்கிவாதிகளையும் போலவே அவரும் நிலைமையைப் புரிந்து கொள்ளவே இல்லை. முதலாவதாக, ‘புராதன’ ஜனநாயகத்துக்கு ஓரளவு ‘பின்னடைந்து செல்லாமல்’ (வேறு எப்படித்தான் பெரும்பான்மையோரும், பிறகு விதிவிலக்கின்றி மக்கள் அனைவரும் அரசுப் பணிகளை ஏற்று நிறைவேற்ற முற்படுவதாம்?) முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்துக்கு மாறிச் செல்வது சாத்தியமன்று என்பதையும்; இரண்டாவதாக, முதலாளித்துவம், முதலாளித்துவக் கலாசாரம் இவற்றின் அடிப்படையில் அமைந்த ‘புராதன ஜனநாயகமானது’ வரலாற்றுக்கு முற்பட்ட, அல்லது முதலாளித்துவத்துக்கு முற்பட்ட காலங்களைச் சேர்ந்த புராதன ஜனநாயகத்தைப் போன்றதல்ல என்பதையும் புரிந்து கொள்ளவே இல்லை. முதலாளித்துவக் கலாசாரம் பெருவீதப் பொருளுற்பத்தியையும், ஆலைகளையும், ரயில்பாதைகளையும், அஞ்சல் துறையையும், தொலை பேசிகளையும், இன்ன பிறவற்றையும் தோற்றுவித்திருக்கிறது. இவற்றின் அடிப்படையில் பழைய ‘அரசு அதிகாரத்தின்’ பணிகளில் மிகப் பெருவாரியானவை மிகவும் சுலபமாகிவிட்டதால், எழுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் எளிதில் செய்து விடக் கூடிய மிக மிகச் சுலபமான பதிவு செய்தல், தொகுத்து வைத்தல், சரி பார்த்தல் ஆகிய வேலைகளாய் அவற்றைக் குறுக்கிக் கொண்டுவிட முடியும். சாதாரண ‘தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களைப்’ பெற்று இந்த வேலைகளை எளிதில் செய்துவிடலாம். தனிச் சலுகைகள், ‘அதிகார ஆடம்பரங்கள்’ இவற்றில் இம்மியையும் விட்டு வைக்காமல் இந்தப் பணிகளிலிருந்து அறவே களைந்து விட முடியும் (களைந்து விடவும் வேண்டும்).
விதிவிலக்கின்றி எல்லா அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்படுதல், எந்நேரத்திலும் பதவியிலிருந்து திருப்பியழைக்கப்படக் கூடியவர்களாய் இருத்தல், அவர்களுடைய சம்பளங்களைச் சாதாரணத் ‘தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களின்’ நிலைக்குச் சமமாக்குதல் _ ‘கூறாமலே விளங்கும்’ இந்த சர்வ சாதாரண ஜனநாயக நடவடிக்கைகள், தொழிலாளர்களுடைய நலன்களையும் விவசாயிகளில் மிகப் பெருவாரியானோரின் நலன்களையும் முழு அளவுக்கு ஒன்றுபடச் செய்வதோடு, அதேபோது முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்துக்கு இட்டுச் செல்லும் பாலமாகவும் அமைகின்றன. அரசின் புனரமைப்பு சம்பந்தமான, முற்றிலும் அரசியல் வழியிலான சமுதாயப் புனரமைப்பு சம்பந்தமான நடவடிக்கைகளே இவை. ‘உடைமை பறிப்போர் உடைமை பறிக்கப்படுதல்’ நடைபெறுவதுடனோ, அதற்கான தயாரிப்புகளுடனோ இணைக்கப்படும்போது மட்டும்தான், அதாவது உற்பத்திச் சாதனங்களில் முதலாளித்துவத் தனியுடைமை சமுதாய உடைமையாய் மாற்றப்படுவதுடன் இணைக்கப்படும்போது மட்டுமே, இந்த நடவடிக்கைகள் அவற்றின் முழுப் பொருளையும் முக்கியத்துவத்தையும் பெறுகின்றன என்பதைக் கூறத் தேவையில்லை.
“எல்லா முதலாளித்துவப் புரட்சிகளும் எழுப்பிய அந்தக் கவர்ச்சிக் கோஷமாகிய மலிவான அரசாங்கம், என்பதைக் கம்யூனானது செலவினங்களுக்கு இரு பெரும் வழிகளாய் அமைந்த சேனையையும் அதிகார வர்க்கத்தையும் ஒழித்ததன் மூலம் நடைமுறை உண்மையாக்கிற்று’’ என்று மார்க்ஸ் எழுதினார்.
ஏனைய குட்டி முதலாளித்துவப் பகுதியினரில் எப்படியோ அது போலவே, விவசாயிகளிடமிருந்தும் மிகச் சொற்பமானோர் மட்டுமே முதலாளித்துவ அர்த்தத்தில் ‘மேல் நிலைக்கு உயருகிறார்கள்’, ‘வாழ்க்கையில் முன்னேறிச் சுகமாய் வாழ்கிறார்கள்’, அதாவது செல்வமுடையோராகவோ முதலாளிகளாகவோ அல்லது வசதி படைத்த தனிச் சலுகையுள்ள அதிகாரிகளாகவோ ஆகின்றனர். விவசாயிகள் இருந்து வரும் முதலாளித்துவ நாடு ஒவ்வொன்றிலும் (மிகப் பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் விவசாயிகள் இருக்கிறார்கள்), மிகப் பெரும் பகுதி விவசாயிகள் அரசாங்கத்தால் ஒடுக்கப்படுகிறார்கள்; அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமென, ‘மலிவான’ அரசாங்கம் வேண்டுமென ஏங்குகிறார்கள். பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே இதனைச் சித்திபெறச் செய்ய முடியும். இதைச் சித்திபெறச் செய்வதன் மூலம் பாட்டாளி வர்க்கம் அதேபோதில் அரசை சோஷலிச வழியில் புனரமைத்திடுவதை நோக்கி முன்னேறிச் செல்கிறது.