1875 மே 5ல் பிராக்கேவுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதத்தையும் 1875 மார்ச் 28ல் பெபெலுக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதத்தையும் மேலெழுந்தவாரியாய் ஒப்பிட்டுப் பார்க்கையில், எங்கெல்சைக் காட்டிலும் அதிக அளவு மார்க்ஸ் “அரசின் ஆதரவாளராய்’ இருந்ததாகவும், அரசெனும் பிரச்சனையில் இவ்விரு ஆசிரியர்களுக்கும் கணிச அளவு கருத்து வேறுபாடு இருந்ததாகவும் தோன்றக் கூடும்.
அரசு பற்றிய எல்லாப் பேச்சையும் அறவே விட்டொழித்து விடும்படி, “அரசு’ என்னும் சொல்லையே வேலைத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டு அதற்குப் பதில் “மக்கட் சமுதாயம்’ என்னும் சொல்லை உபயோகிக்கும்படி பெபெலுக்கு எங்கெல்ஸ் ஆலோசனை கூறினார். அரசெனும் சொல்லின் சரியான பொருளில் கம்யூனானது ஒரு அரசாய் இருக்கவில்லை என்பதாகவும் எங்கெல்ஸ் கூறினார். ஆனால் மார்க்ஸ் “கம்யூனிச சமுதாயத்துக்குரிய வருங்கால அரசு’’ என்பதாய்க் கூடப் பேசினார், அதாவது கம்யூனிசத்திலுங்கூட அரசு அவசியமே என்பதாய் அவர் ஏற்றுக் கொண்டதாய்த் தோன்றக்கூடும்.
இது போன்ற கருத்து அடிப்படையிலேயே தவறானது. மேலும் நெருங்கிச் சென்று பரிசீலித்தோமாயின் அரசு குறித்தும் அது உலர்ந்து உதிரும் நிகழ்ச்சி குறித்தும் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரின் கருத்துக்களும் எந்த வேறுபாடுமின்றி முழுதும் ஒத்தவையே என்பதும், மேலே குறிப்பிடப்பட்ட மார்க்சின் தொடர் உலர்ந்து உதிர்ந்து கொண்டிருக்கும் நிலையிலுள்ள அரசைத்தான் குறிப்பதாகும் என்பதும் தெளிவாகின்றன.
“உலர்ந்து உதிரும்’ இந்த வருங்கால நிகழ்ச்சி நடைபெறும் தருணத்தை வரையறுத்துக் கூற முடியாது என்பது தெளிவு _ இது நீண்ட நெடும் நிகழ்ச்சிப்போக்காய் இருக்குமென்பது வெளிப்படையாதலால் இவ்வாறு வரையறுத்துக் கூறுவது மேலும் இயலாததாகி விடுகிறது. மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இங்கு ஏதோ கருத்து வேறுபாடு இருப்பதாய்த் தோன்றுவதற்குக் காரணம், அவர்கள் வெவ்வேறு துறைகளைப் பரிசீலித்ததும், வெவ்வேறு குறிக்கோள்களைப் பின்பற்றியதும்தான். அரசு சம்பந்தமாய் நிலவிய தப்பெண்ணங்கள் (லஸ்ஸாலே இடத்தும் இவை பெருமளவு இருந்தன) எவ்வளவு அபத்தமானவை என்பதை பெபெலுக்குக் கண்கூடாகவும் எடுப்பாகவும் முழு உருவிலும் தெரியப்படுத்த எங்கெல்ஸ் முற்பட்டார். ஆனால் மார்க்ஸ் இந்தப் பிரச்சனையைப் போகிற போக்கில் இடைநிகழ்வாகவே குறிப்பிட்டுச் சென்றார். மார்க்ஸ் கருத்து செலுத்தியது வேறொரு துறை, அதாவது கம்யூனிச சமுதாயத்தின் வளர்ச்சி பற்றிய துறை.
வளர்ச்சித் தத்துவத்தை _ அதன் முரணற்ற, முழு நிறைவான, தேர்ந்தாய்ந்த, சாரப்பொருள் வடிவில் _ நவீன முதலாளித்துவத்தின் ஆய்வுக்காகக் கையாளுதலே மார்க்சின் தத்துவம் அனைத்தும். இயற்கையாகவே இந்தத் தத்துவத்தை முதலாளித்துவத்தின் வரப்போகும் வீழ்ச்சி, வருங்காலக் கம்யூனிசத்தின் வருங்கால வளர்ச்சி ஆகிய இரண்டிலும் கையாளும் பிரச்சனை மார்க்சின் முன் எழுந்தது.
அப்படியானால், எந்த உண்மைகளை அடிப்படையாய்க் கொண்டு வருங்காலக் கம்யூனிசத்தின் வருங்கால வளர்ச்சி குறித்த பிரச்சனையைப் பரிசீலிப்பது?
கம்யூனிசமானது முதலாளித்துவத்திலிருந்து தோன்றுவதாகும், வரலாற்று வழியில் முதலாளித்துவத்திலிருந்து வளர்வதாகும், முதலாளித்துவம் பெற்றெடுத்த ஒரு சமுதாய சக்தியின் செயலால் விளைந்த பலனாகும் என்ற உண்மையை அடிப்படையாய்க் கொண்டுதான் இப்பிரச்சனையைப் பரிசீலிக்க முடியும். கற்பனைப் படைப்பை உருவாக்கும் முயற்சியினை, தெரிந்து கொள்ள முடியாத ஒன்றைப் பற்றிய பயனற்ற ஊகங்களில் இறங்கும் முயற்சியினை மார்க்சிடம் இம்மியும் காண முடியாது. உதாரணமாய் ஒரு புதிய உயிர் வகை குறிப்பிட்ட இந்த வழியில்தான் தோன்றியது, திட்ட வட்டமான இந்தத் திசையிலேதான் மாறுதலடைந்து வந்தது என்பது தெரிந்ததும், உயிரியல் விஞ்ஞானி ஒருவர் இந்த உயிர் வகையின் வளர்ச்சியைப் பற்றிய பிரச்சனையை எப்படி ஆராய்வாரோ அதே முறையில் தான் மார்க்ஸ் கம்யூனிசத்தைப் பற்றிய பிரச்சனையை ஆராய்ந்தார்.
அரசுக்கும் சமுதாயத்துக்குமுள்ள உறவு பற்றிய பிரச்சனையில் கோத்தா வேலைத்திட்டம் செய்திடும் குளறுபடியை மார்க்ஸ் முதற்கண் அகற்றுகிறார். அவர் எழுதியதாவது:
“…இன்றைய சமுதாயம் முதலாளித்துவச் சமுதாயம். நாகரிகமடைந்த எல்லா நாடுகளிலும் இச்சமுதாயம் இருந்து வருகிறது; அதிகமாகவோ குற¬வாகவோ மத்திய காலக் கூறுகளின் கலப்படத்திலிருந்து விடுபட்டதாகவும், அந்தந்த நாட்டின் தனிப்பட்ட வரலாற்று வளர்ச்சியால் அதிகமாகவோ குறைவாகவோ பாதிக்கப்பட்டதாகவும், அதிகமாகவோ குறைவாகவோ வளர்ச்சியுற்றதாகவும் இருந்து வருகிறது. மறுபுறத்தில் ‘இன்றைய அரசு’ அந்தந்த நாட்டின் எல்லையைக் கடந்ததும் மாறி விடுகிறது. இது ஸ்விட்சர்லாந்தில் இருப்பதிலிருந்து பிரஷ்ய_-ஜெர்மன் சாம்ராஜ்யத்தில் மாறுபட்டதாயும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதிலிருந்து இங்கிலாந்தில் மாறுபட்டதாயும் உள்ளது. ஆகவே ‘இன்றைய அரசு’ என்பது ஒரு கற்பனையே ஆகும்.
“இருப்பினும் நாகரிகமடைந்த பல்வேறு நாடுகளிலும் இருந்துவரும் பல்வேறு அரசுகளும் வடிவில் வெவ்வேறு வகைப்பட்டதாய் இருப்பினும், இவை யாவற்றுக்கும் பொதுவானது என்னவெனில், ஒன்று இன்னொன்றைக் காட்டிலும் அதிகமாகவோ குறைவாகவோ முதலாளித்துவ வழியில் வளர்ச்சி பெற்றிருக்கிறதே தவிர, இவை நவீன முதலாளித்துவச் சமுதாயத்தின் அடிப்படையில் அமைந்தவையே. ஆதலால் இவை சில முக்கிய பொது இயல்புகளைப் பெற்றிருக்கின்றன. இந்த அர்த்தத்தில் ‘இன்றைய அரசு’ என்பதாய், இவ்வரசின் தற்போதைய மூலவேரான முதலாளித்துவச் சமுதாயம் மடிந்து மறைந்து விடும் அந்த வருங்கால அரசிலிருந்து வேறுபடுத்திப் பேசுவது சாத்தியமே.
“ஆகவே இக்கேள்வி எழுகிறது: கம்யூனிச சமுதாயத்தில் அரசில் ஏற்படப் போகும் மாறுதல் என்ன? வேறுவிதமாய்க் கூறினால், தற்போதுள்ள அரசின் பணிக்கு ஒப்பான எந்தச் சமுதாயப் பணிகள் அப்பொழுது எஞ்சியிருக்கும்? இந்தக் கேள்விக்கு விஞ்ஞான வழியில் மட்டுமே பதிலளிக்க முடியும். ‘மக்கள்’ என்னும் சொல்லை ‘அரசு’ என்னும் சொல்லுடன் ஆயிரம் வழியில் இணைப்பதன் மூலம் சாண் அளவுங்கூட இந்தப் பிரச்சனைக்குரிய தீர்வினை நெருங்கி வந்துவிட முடியாது…’’
‘மக்கள் அரசு’ என்ற எல்லாப் பேச்சுக்களையும் இவ்விதம் எள்ளி நகையாடிய பின் மார்க்ஸ் பரிசீலனைக்குரிய கேள்வியை வகுத்திட்டு, இதற்கு விஞ்ஞான வழிப்பட்ட விடை காண விரும்புவோர் உறுதியாய் நிலைநாட்டப் பெற்ற விவரங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கிறார்.
வளர்ச்சித் தத்துவம் அனைத்தாலும், மொத்தத்தில் விஞ்ஞானத்தாலும் மிகவும் துல்லியமாய் நிலைநாட்டப்பட்டிருக்கும் முதலாவது உண்மை என்னவெனில் _ இந்தஉண்மையைக் கற்பனாவாதிகள் உதாசீனம் செய்தனர், சோஷலிச புரட்சியைக் கண்டு மிரளும் இன்றைய சந்தர்ப்பவாதிகளும் இதை உதாசீனம் செய்து வருகிறார்கள் _ முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கு மாறிச் செல்வதைக் குறிக்கும், வரலாற்று வழிப்பட்ட, ஒரு தனிக் கட்டம் அல்லது இடைக்காலம் நிச்சயம் இருக்க வேண்டும் என்பதே.