"

“பிரான்சில் உள்நாட்டுப் போர்’ என்னும் நூலின் மூன்றாம் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையில் (இந்த முன்னுரை 1891 மார்ச் 18_ஆம் தேதியிடப்பட்டது, முதலில்ழிமீuமீ ஞீமீவீt இல் வெளிவந்தது), அரசு குறித்து அனுசரிக்க வேண்டிய போக்கு சம்பந்தமான பிரச்சனைகள் பற்றிச் சுவையான சில கருத்துரைகளை இடைக் குறிப்பாய்த் தருவதோடு கூட, கம்யூனின் படிப்பினைகள் பற்றிய தேர்ந்த தெளிவுடைய சுருக்கவுரையையும் அளிக்கிறார். இம்முன்னுரை எழுதப்பட்டதற்கும் கம்யூனுக்கும் இடைப்பட்ட இருபது ஆண்டுகளின் அனுபவம் அனைத்தாலும் செழுமை செய்யப்பட்ட உரை இது. ஜெர்மனியில் வெகுவாய்ப் பரவியிருந்த “அரசின் பாற்பட்ட மூடநம்பிக்கையை’ நேரடியாய் எதிர்த்து இது எழுதப்பட்டதாகும். நாம் பரிசீலிக்கும் இந்தப் பிரச்சனை குறித்து மார்க்சியம் கூறும் இறுதி முடிவு என்பதாய் இந்தச் சுருக்கவுரையை முழு நியாயத்துடன் அழைக்கலாம்.
பிரான்சில் ஒவ்வொரு புரட்சியிலிருந்தும் தொழிலாளர்கள் ஆயுதபாணிகளாய் வெளிவந்தனர் என்று எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். “ஆகவே தொழிலாளர்களை நிராயுதபாணிகள் ஆக்கு என்பதே அரசின் அதிகாரத்தில் அமர்ந்த முதலாளித்துவ வர்க்கத்தின் முதலாவது கட்டளையாய் இருந்தது. இவ்வாறு, தொழிலாளர்கள் வெற்றி பெற்ற ஒவ்வொரு புரட்சியையும் அடுத்த ஒரு புதிய போராட்டம் தொடங்கி, தொழிலாளர்களுடைய தோல்வியில் முடிவுற்றது.’33
முதலாளித்துவப் புரட்சிகளின் அனுபவம் பற்றிய இந்தச் சுருக்கவுரை இரத்தினச் சுருக்கமாய் இருப்பதோடு பொருள் வளம் மிக்கதாயும் உள்ளது. ஏனையவற்றுடன் கூட அரசு பற்றிய பிரச்சனையிலும் (ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஆயுதங்கள் பெற்றிருக்கிறதா?) சாரப் பொருள் இங்கு மிகவும் சிறப்பாய்க் கிரகிக்கப்பட்டு விடுகிறது. இந்தச் சாரப் பொருளைத்தான் முதலாளித்துவச் சித்தாந்தத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட பேராசிரியர்களும், குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தட்டிக் கழித்து விடுகிறார்கள். 1917_ஆம் ஆண்டில் ருஷ்யப் புரட்சியின்போது, முதலாளித்துவப் புரட்சிகளின் இந்த இரகசியத்தைப் போட்டு உடைத்த சிறப்பு (கவினாக் பாணியிலான சிறப்புத்தான்) “மார்க்சியவாதியாய் வேடம் பூண்ட மென்ஷிவிக்கான’ த்ஸெரெத்தேலிக்கு உரியதாகி விட்டது. ஜூன் 11_ல் த்ஸெரெத்தேலி நிகழ்த்திய “வரலாற்று முக்கியத்துவமுள்ள’ சொற்பொழிவில், அவர் பெத்ரொகிராத் தொழிலாளர்களை முதலாளித்துவ வர்க்கத்தினர் நிராயுதபாணிகளாக்க உறுதி பூண்டிருந்தனர் என்னும் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார். இதை அவர் தமது சொந்த முடிவாகவும், பொதுவில் “அரசுக்கு’ இன்றியமையாத ஒன்றாகவும் குறிப்பிட்டார்!34
திருவாளர் த்ஸெரெத்தேலியின் தலைமையில் சோஷலிஸ்டு-புரட்சியாளர்களாலும் மென்ஷிவிக்குகளாலுமான கூட்டு எப்படித் துரோகம் புரிந்து புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு விரோதமாய் முதலாளித்துவ வர்க்கத்தாரிடம் ஓடிவிட்டது என்பதற்கு 1917_ஆம் ஆண்டுப் புரட்சியின் வரலாற்று ஆய்வாளர் ஒவ்வொருவருக்கும் த்ஸெரெத்தேலியின் ஜூன்_11 ஆம் தேதிய வரலாற்று முக்கியத்துவமுள்ள சொற்பொழிவு துல்லியமான எடுத்துக்காட்டாய் அமையும் என்பதில் ஐயமில்லை.
இடைக்குறிப்பாய் எங்கெல்ஸ் அளிக்கும் மற்றொரு கருத்துரை மதத்தைப் பற்றியதாகும் _ இதுவும் அரசு பற்றிய பிரச்சனையை ஒட்டியதுதான். ஜெர்மன் சமூக- ஜனநாயகவாதிகள் சீரழிந்து மேலும் மேலும் சந்தர்ப்பவாதிகளாகியபோது, “மதம் தனி நபரின் விவகாரமென்று அறிவிக்கப்படுகிறது’’ என்னும் புகழ்பெற்ற சூத்திரத்துக்கு அற்பத்தனமான முறையில் பொய்யான வியாக்கியானம் தரும் நிலைக்கு மேன்மேலும் சரிந்து சென்றது தெரிந்ததே. புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சிக்குங்கூட மதம் தனி நபரின் விவகாரம் என்பதாய்ப் பொருள்படும்படி இந்தச் சூத்திரம் திரித்துக் கூறப்பட்டுவிட்டது!! பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்துக்கு இழைக்கப்பட்ட இந்த அப்பட்டமான துரோகத்தை எங்கெல்ஸ் வன்மையாய்க் கண்டித்தார். 1981_ல் அவர் தமது கட்சியில் சந்தர்ப்பவாதத்தின் மிக பலவீனமான துவக்கம் மட்டுமே தலை தூக்கக் கண்டார். ஆகவே அவர் தமது கருத்தை மிகுந்த எச்சரிக்கையோடு எடுத்துரைத்தார்:
“அநேகமாய்த் தொழிலாளர்கள் அல்லது தொழிலாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே கம்யூனில் இருந்ததால், அது ஏற்ற முடிவுகள் தீர்மானகரமான பாட்டாளி வர்க்கத் தன்மை படைத்திருந்தன. முற்றிலும் கோழைத்தனம் காரணமாய்க் குடியரசுவாத முதலாளித்துவ வர்க்கம் முன்பு செய்யத் தவறிவிட்ட சீர்திருத்தங்கள், தொழிலாளி வர்க்கத்தின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு இன்றியமையாத அடித்தளத்தை அமைத்திடும் சீர்திருத்தங்கள் _ அரசைப் பொறுத்தமட்டில் மதம் முற்றிலும் தனி நபரின் விவகாரமாகும் என்ற கோட்பாடு செயல்படுத்தப்படுவது போன்றவை – செயல்படுத்தப்பட கம்யூனின் தீர்மானங்கள் ஆணையிட்டன. அல்லது தொழிலாளி வர்க்கத்துக்கு நேரடியாய் நலம் பயப்பனவாயும், பழைய சமுதாய அமைப்பைப் பிளப்பனவாயும் இருந்த அரசாணைகளைக் கம்யூன் பிறப்பித்தது…’’
வேண்டுமென்றேதான் எங்கெல்ஸ் “அரசைப் பொறுத்த மட்டில்’ என்னும் சொற்களுக்கு அழுத்தமிட்டுக் காட்டினார்; கட்சியைப் பொறுத்தமட்டில் மதம் தனி நபரின் விவகாரம் என்பதாய்ப் பிரகடனம் செய்துவிட்ட ஜெர்மன் சந்தர்ப்பவாதத்தை நேரடியாய்ச் சாடும் பொருட்டுதான், எங்கெல்ஸ் இதைச் செய்தார். ஜெர்மன் சந்தர்ப்பவாதம் இவ்வாறு புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சியைச் சமயச் சார்பற்ற நிலைக்கு இடமளிக்கத் தயாராயிருக்கும், ஆனால் மக்களை மதிமயங்கச் செய்யும் மதமெனும் அபினியை எதிர்த்துக் கட்சி நடத்த வேண்டிய போராட்டத்தைக் கைவிட்டு விடும் மிகக் கொச்சையான “கட்டற்ற சிந்தனைக்குரிய’ குட்டி முதலாளித்துவ அற்பவாதத்தின் இழிநிலைக்குச் சீரழியும்படிச் செய்துவிட்டது.
ஜெர்மன் சமூக -ஜனநாயகவாதிகளின் வருங்கால வரலாற்று ஆசிரியர், 1914_ல் இவர்கள் அவமானகரமாய்க் கையாலாகாதவர்களாய் இழிவுற்றதன் மூல காரணங்களை ஆராய்கையில், இப்பிரச்சனை குறித்துச் சுவையான தகவல்கள் நிறைய இருக்கக் காண்பார். இக்கட்சியின் சித்தாந்தத் தலைவர் காவுத்ஸ்கி எழுதிய கட்டுரைகளில் சந்தர்ப்பவாதத்துக்குக் கதவை விரியத் திறந்துவிடும் வகையில் அமைந்த மழுப்பலான உரைகள் முதலாய், 1913_ல் ‘லிஷீs-க்ஷிஷீஸீ-ரிவீக்ஷீநீலீமீ-ஙிமீஷ்மீரீuஸீரீ’ (“மதச் சபையை விட்டு விலகு’ என முழங்கிய இயக்கம்) குறித்து இக்கட்சி கடைப்பிடித்த போக்கு வரையிலாய் மிகப் பலவும் இருக்கக் காண்பார்.35
கம்யூனுக்குப் பிறகு இருபது ஆண்டுகள் கழிந்தபின், போராடும் பாட்டாளி வர்க்கத்துக்கு அதன் படிப்பினைகளை எங்கெல்ஸ் சுருக்கமாய் எடுத்துரைப்பதைக் கவனிப்போம்.
எங்கெல்ஸ் தலைமையான முக்கியத்துவம் அளித்த படிப்பினைகள் வருமாறு:
“…பழைய மத்தியத்துவ அரசாங்கத்தின் ஒடுக்கு முறை அதிகாரம்தான், சேனை,அரசியல் போலீஸ், அதிகார வர்க்கம் _ இது 1798_ல் நெப்போலியனால் தோற்றுவிக்கப் பெற்று, அது முதலாய் ஒவ்வொரு புதிய அரசாங்கத்தாலும் தக்க ஆயுதமாய் மகிழ்ச்சியோடு ஏற்கப்பட்டு தனது எதிராளிகளுக்கு விரோதமாய்ப் பிரயோகிக்கப்பட்டது _ இவற்றின் அதிகாரம்தான் முன்பு பாரிசில் வீழ்த்தப்பட்டது போலவே எங்கனுமே வீழ்த்தப்பட வேண்டியது.
“தொடக்கம் முதலாகவே கம்யூனது, அதிகாரத்துக்கு வந்துவிட்ட தொழிலாளி வர்க்கம் பழைய அரசு இயந்திரத்தைக் கொண்டே தொடர்ந்து நிர்வகித்துச் செல்வது சாத்தியமல்ல என்பதையும், தற்போது தான் வென்று கொண்ட மேலாதிக்கத்தைத் திரும்பவும் இழக்காது இருக்கும் பொருட்டு இந்தத் தொழிலாளி வர்க்கம் ஒரு புறத்தில் முன்பு தன்னையே எதிர்த்துப் பிரயோகிக்கப்பட்ட பழைய ஒடுக்குமுறை இயந்திரம் அனைத்தையும் ஒழித்துவிட்டு, மறுபுறத்தில் தனது பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோரிடமிருந்தே தன்னைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு இவர்கள் எல்லோரும் விதிவிலக்கின்றி எந்நேரத்திலும் திருப்பியழைக்கப்படக் கூடியவர்களே என்பதாய்ப் பிரகடனம் செய்ய வேண்டும் என்பதையும் அங்கீகரிப்பது இன்றியமையாததாகிவிட்டது…’’
முடியரசில் மட்டுமின்றி, ஜனநாயகக் குடியரசிலுங்கூட அரசு அரசாகவே இருந்து வருகிறது என்பதை, அதாவது அதிகாரிகளை, “சமுதாயத்தின் பணியாட்களை’, அரசின் உறுப்புக்களை சமுதாயத்தின் எஜமானர்களாய் மாற்றி விடுவதென்ற அதன் அடிப்படையான தனிப் பண்பினை இழந்துவிடவில்லை என்பதை எங்கெல்ஸ் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறார்.
“…அரசும் அரசின் உறுப்புக்களும் சமுதாயத்தின் பணியாட்கள் என்கிற நிலையிலிருந்து சமுதாயத்தின் எஜமானர்கள் என்கிற நிலைக்கு இவ்விதம் மாற்றப்படுவதற்கு எதிராய் _ முந்திய எல்லா அரசுகளிலும் இம்மாற்றம் தவிர்க்க முடியாதது _ கம்யூனானது பிசகாத இரு வழிகளைக் கையாண்டது. முதற்கண், அது எல்லாப் பதவிகளுக்கும் _ நிர்வாகம், நீதித் துறை, கல்வித்துறை ஆகிய எல்லாப் பகுதிகளுக்கும் _ அனைத்து மக்கள் வாக்குரிமையின் அடிப்படையிலான தேர்தல் மூலம் ஆட்களை அமர்த்தியதோடு, அவர்கள் அதே வாக்காளர்களால் எந்நேரத்திலும் திருப்பி அழைக்கப்படக் கூடியவர்களாக்கிற்று. இரண்டாவதாக, அது உயர் அதிகாரிகளாயினும் சரி, கீழ் அதிகாரிகளாயினும் சரி எல்லோருக்கும் பிற தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் அதே சம்பளங்கள்தான் கொடுத்தது. யாருக்கும் கம்யூன் அளித்த மிக உயர்ந்த சம்பளம் 6,000 பிராங்குதான்.* பிரதிநிதித்துவ உறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குக் கம்யூனால் விதிக்கப்பட்ட மீற முடியாத ஆணைகளை அன்னியில், இவ்வழியில் பதவி வேட்டைக்கும் தன்னல உயர்வு நாட்டத்துக்கும் சரியானபடி தடை எழுப்பப்பட்டது…’’
இங்கே எங்கெல்ஸ் முரணற்ற ஜனநாயகம் ஒருபுறம் சோஷலிசமாய் மாற்றப்படுவதையும், மறுபுறம் சோஷலிசம் அவசியமெனக் கோருவதையும் குறிக்கும் சுவையான எல்லைக் கோட்டினை நெருங்கி வந்துவிடுகிறார். ஏனெனில் அரசை ஒழித்திட அரசு நிர்வாக அலுவல்களை தேச மக்களின் மிகப் பெரும் பகுதியோருடைய _ நாளடைவில் ஒவ்வொரு தனியாளுடைய _ தகுதிக்கும் ஆற்றலுக்கும் உட்பட்ட எளிய கண்காணிப்பு, கணக்கீடு வேலைகளாய் மாற்றுவது அவசியமாகும். பதவி வேட்டை அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமாயின், அரசு நிர்வாக அலுவல் துறையில் லாபம் தருவனவாய் இல்லாவிட்டாலும் “மதிப்புக்குரியனவாகிய’ பதவிகள், மிக மிகச் சுதந்திரமான முதலாளித்துவ நாடுகளில் எல்லாம் இடையறாது நடைபெற்று வருவது போல, வங்கிகளில் அல்லது கூட்டுப்பங்குக் கம்பெனிகளில் கொழுத்த ஆதாயத்துக்குரிய பதவிகள் பெறுவதற்கான உந்து தளங்களாய்ப் பயன்பட முடியாதபடி செய்தாக வேண்டும்.
ஆனால் எங்கெல்ஸ் சில மார்க்சியவாதிகள் செய்யும் பிழையைச் செய்யவில்லை. அதாவது, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து சில மார்க்சியவாதிகள் அது முதலாளித்துவத்தில் சாத்தியமற்றதாயும் சோஷலிசத்தில் தேவையில்லாததாயும் விடுவதாய் வாதாடுகிறார்களே, அது போன்ற பிழையை எங்கெல்ஸ் செய்யவில்லை. வெளித் தோற்றத்துக்குக் கெட்டிக்காரத்தனமாயினும் உண்மையில் முற்றிலும் தவறான இத்தகைய வாதத்தை அதிகாரிகளுக்கு மிதமான சம்பளம் அளித்திடுவது அடங்கலாய் எந்த ஜனநாயக ஏற்பாடு குறித்தும் கூறலாம்; ஏனெனில், முரணற்ற முழு நிறை ஜனநாயகம் முதலாளித்துவத்தில் சாத்தியமற்றது, சோஷலிசத்தில் எல்லா ஜனநாயகமும் உலர்ந்து உதிர்ந்து விடும்.
மேலும் ஒரு முடி உதிர்வதால் ஒருவன் வழுக்கையாகி விடுவானா என்ற நெடுநாளைய கேலியை ஒத்த குதர்க்க வாதமே ஆகும் இது.
ஜனநாயகத்தைக் கூடுமான உச்ச நிலைக்கு வளர்த்துச் செல்லுதல், இந்த வளர்ச்சிக்கு வேண்டிய வடிவங்களைக் காணுதல், நடைமுறையின் வாயிலாய் இவற்றைச் சோதித்துப் பார்த்தல் என்பன போன்ற இவை யாவும் சமூகப் புரட்சிக்குரிய போராட்டத்தில் அடங்கிய பணிகளில் ஒன்று. தனிப்பட்ட முறையில் எவ்வகையான ஜனநாயகமும் சோஷலிசத்தைக் கொண்டு வந்துவிட முடியாது. ஆனால் எதார்த்த வாழ்வில் ஜனநாயகம் ஒருபோதும் “தனிப்பட்ட முறையில்’ மேற்கொள்ளப்படுவதில்லை; பிற பலவற்றுடன் “சேர்ந்த முறையில்தான்’ அது மேற்கொள்ளப்படும். அப்பொழுது அது பொருளாதார வாழ்வின் மீதும் செல்வாக்குச் செலுத்தும், அதனுடைய மாற்றத்தைத் துரிதப்படுத்தும், அதே போல ஜனநாயகத்தின் மீதும் பொருளாதார வளர்ச்சியும் இதையொத்த பிறவும் செல்வாக்கு செலுத்தும். இதுதான் உயிருள்ள வரலாற்றின் இயக்கவியல்.
எங்கெல்ஸ் மேலும் கூறுகிறார்:
“…முந்திய அரசு அதிகாரம் இவ்வாறு தகர்க்கப்பட்டு [ஷிஜீக்ஷீமீஸீரீuஸீரீ] அதற்குப் பதிலாய் ஒரு புதிய, மெய்யாகவே ஜனநாயகமான அரசு அதிகாரம் நிறுவப்பட்டதை உள்நாட்டுப் போரின் மூன்றாம் பதிப்பு விளக்கமாய் விவரிக்கிறது. ஆனால் இதன் கூறுகள் சிலவற்றை இங்கே சுருக்கமாய் மீண்டும் குறிப்பிடுதல் வேண்டும். ஏனெனில் குறிப்பாக ஜெர்மனியில் அரசின் பாலுள்ள மூடநம்பிக்கை தத்துவவியலிலிருந்து பொதுவாய் முதலாளித்துவ வர்க்கத்தாரின் உணர்வுக்கும், பல தொழிலாளர்களின் உணர்வுக்குங்கூட பரவி வந்துவிட்டது. தத்துவவியல் கண்ணோட்டத்தின்படி அரசு என்பது “கருத்தின் மெய்மையாக்கமாய்’, அல்லது தத்துவவியல் தொடர்களில் பெயர்க்கப்படுமாயின் “இறையருள் ஆட்சியின் பூலோக உருவாய்’, அழியாத உண்மையும் நீதியும் சித்தி பெறும் அல்லது சித்தி பெற வேண்டிய அரங்கமாய்க் கொள்ளப்பட்டது. இயல்பாகவே இதிலிருந்து அரசிடமும் அரசுடன் சம்பந்தப்பட்ட யாவற்றிடமும் மூட பக்தி பிறக்கிறது. சமுதாயம் அனைத்துக்கும் பொதுவான விவகாரங்களும் நலன்களும் கடந்த காலத்தில் கவனித்துக் கொள்ளப்பட்டது போலவே, அதாவது அரசின் மூலமும், வசதியும் வருவாயும் மிக்க நிலையிலுள்ள அதன் அதிகாரிகள் மூலமுமே அன்றி வேறு எவ்வழியிலும் கவனித்துக் கொள்ளப்பட முடியாது என்பதாய் நினைக்கும்படி மக்கள் தம் பிள்ளைப் பிராயம் முதல் பழக்கப்படுத்தப்பட்டு விட்டதால், இந்த மூடபக்தி மிகச் சுலபமாய் வேரூன்றி விடுகிறது. இந்நிலையில், பரம்பரை முடியரசின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்து விடுபட்டு ஜனநாயகக் குடியரசு வேண்டுமென முழக்கமிட முற்படுவோர் தாம் அளவிலாத் துணிச்சலுடன் முன்னேறி வந்துவிட்டதாய்க் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் அரசானது ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான இயந்திரமேயன்றி வேறல்ல; முடியரசில் மட்டுமின்றி அதே அளவுக்கு ஜனநாயகக் குடியரசிலுங்கூட இதுதான் உண்மை. மிகச் சிறந்த நிலையிலும் அது, வர்க்க மேலாதிக்கத்துக்கான போராட்டத்தில் வெற்றிவாகை சூடிய பாட்டாளி வர்க்கம் முன்பு கம்யூனானது செய்தது போலவே, எவ்வளவு சீக்கிரமாய் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாய்க் கழித்துக் கட்டிவிட வேண்டியிருக்கும். பிறகு புதிய, சுதந்திர சமூக நிலைமைகளிலே வளர்ந்து ஆளாகும் தலைமுறையினர் இந்த வேண்டாத பிண்டமான அரசமைப்பு அனைத்தையுமே விட்டொழித்து விடும்படியான நிலையை வந்தடைவார்கள்.’’
முடியரசை அகற்றி அதற்குப் பதிலாய்க் குடியரசை நிறுவுகையில் பொதுவில் அரசு குறித்த சோஷலிசக் கோட்பாடுகளை மறந்துவிடக் கூடாதென்று ஜெர்மானியர்களை எங்கெல்ஸ் எச்சரிக்கை செய்தார். இன்று அவருடைய எச்சரிக்கைகள் த்ஸெரெத்தேலிகளுக்கும் சேர்னோவ்களுக்கும் சாட்டையடி கொடுப்பதாய் விளங்குகின்றன! இந்தக் கனவான்கள் அரசின்பால் தமக்கு இருக்கும் மூடநம்பிக்கையையும் மூடபக்தியையும் தமது “கூட்டு அரசாங்கச்’ செயற்பாட்டின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் இரு குறிப்புகள்:
முடியரசில் மட்டுமின்றி “அதே அளவில்’ ஜனநாயகக் குடியரசிலும் அரசு “ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான இயந்திரமாகவே’ இருக்கிறது என்று எங்கெல்ஸ் கூறியது, சில அராஜகவாதிகள் “போதனை செய்வது’ போல ஒடுக்குமுறையின் வடிவம் எதுவாயினும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒன்றேதான் என்பதாய்ப் பொருள்படவில்லை. வர்க்கப் போராட்டம், வர்க்க ஒடுக்குமுறை இவற்றின் வடிவம் அதிக விரிவும் சுதந்திரமும் கொண்டதாகவும் அதிக அளவுக்கு பகிரங்கமானதாகவும் இருப்பது, பாட்டாளி வர்க்கத்துக்குப் பொதுவில் வர்க்கங்களை ஒழித்திட அது நடத்தும் போராட்டத்தில் பெரிதும் உதவி புரிகிறது.
அரசெனும் வேண்டாத பிண்டம் அனைத்தையும் குப்பைக் குழியிலே எறியும் நிலையை ஒரு புதிய தலைமுறையால் தான் வந்தடைய முடியும் என்பது ஏன்? இந்தக் கேள்வி ஜனநாயகத்தை விஞ்சும் பிரச்சனையுடன் பிணைந்ததாகும். இனி இப்பிரச்சனையைப் பரிசீலிப்போம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

அரசும் புரட்சியும் Copyright © 2014 by jayend16; லெனின்; and Vladimir Ilyich Lenin is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book