"

நாம் பரிசீலிக்கும் அரசெனும் பொருள் குறித்து மார்க்ஸ் 1848_51 ஆம் ஆண்டுகளின் புரட்சியிலிருந்து தாம் வந்தடைந்த முடிவுகளை லூயீ போனப்பார்ட்டின் புரூமேர் பதினெட்டு என்ற நூலில் பின்வருமாறு தொகுத்துரைக்கிறார்:
“…ஆனால் புரட்சி முற்றிலும் முறைப்படி யாவற்றையும் செய்கிறது. கழித்தொழிக்கப்பட வேண்டியவற்றை எரித்துச் சாம்பலாக்கும் நெருப்புக் கட்டத்திலேதான் இன்னமும் நடை போட்டுக் கொண்டிருக்கிறது. முறை தவறாது அது தனது பணியைச் செவ்வனே செய்கிறது. தனது தயாரிப்புப் பணியில் ஒரு பாதியை 1851 டிசம்பர் 2 ஆம் நாளுக்குள் [லூயீ போனப்பார்ட் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்திய நாள்] செய்து முடித்துவிட்டது. இப்பொழுது மற்றொரு பாதியைச் செய்து முடித்துக் கொண்டிருக்கிறது. முதலில் அது நாடாளுமன்ற ஆட்சி முறையைச் செம்மை செய்தது_இதனை வீழ்த்திடுவதற்காக. தற்போது அது இதில் சித்தி பெற்றுவிட்டதனால், நிர்வாக ஆட்சி முறையைச் செம்மை செய்து வருகிறது; கலப்பற்ற இதன் தூய வடிவுக்கு இதைத் தேய்த்துக் குறுக்கி, தனிமைப்படுத்தி, இதைத் தனக்கே எதிரான ஒரே பகையாய் அமைத்து வருகிறது _அழித்தொழித்திடுவதற்கான சக்திகள் அனைத்தையும் இதற்கு விரோதமாய் ஒன்று குவியச் செய்ய வேண்டும் என்பதற்காக [அழுத்தம் எம்முடையது]. புரட்சி தனது பூர்வாங்கப் பணியின் இந்த இரண்டாவது பாதியைச் செய்து முடித்ததும், ஐரோப்பா அதன் இருக்கையை விட்டுத் துள்ளியெழுந்து, முழக்கமிடுமே!
“இந்த நிர்வாக ஆட்சியமைப்பு பிரம்மாண்டமான அதிகார வர்க்க, இராணுவ அமைப்பைக் கொண்டது, சிக்கல் மிக்க செயற்கையான அரசுப் பொறியமைவுடன் கூடியது, ஐம்பது லட்சம் எண்ணிக்கை கொண்ட ஏராளமான அதிகாரிகளையும் மற்றும் ஐம்பது லட்சம் ஆட்களையுடைய சேனையையும் பெற்றிருப்பது. இந்த மிகக் கொடிய புல்லுருவி அமைப்பு_பிரெஞ்சு சமுதாயத்தின் உடல் பூராவும் படர்ந்து வலை போல இறுக்கி சர்வாங்கத்தையும் நெரித்துத் திணறடிக்கும் இவ்வமைப்பு _ எதேச்சதிகார முடியரசுக் காலத்தில், பிரபுத்துவ அமைப்பு சிதைந்து வந்த காலத்தில் உதித்தது, பிரபுத்துவ அமைப்பின் அழிவைத் துரிதப்படுத்த உதவியது’’ முதலாவது பிரெஞ்சுப் புரட்சி மத்தியத்துவத்தை வளரச் செய்தது; “அதே போதில் அரசாங்க அதிகாரத்தின் வீச்சையும், அதன் பரிவாரங்களையும், கையாட்களின் எண்ணிக்கையையும் அதிகமாக்கிற்று. இந்த அரசுப் பொறியமைவு நெப்போலியனால் பூரண நிறைவுடையதாக்கப்பட்டது’’. மரபுவழி முடியரசும் ஜூலை முடியரசும் “வேலைப் பிரிவினையை அதிகமாக்கியதற்கு மேல் புதிதாய் ஒன்றும் செய்யவில்லை…
“…இறுதியில் நாடாளுமன்றக் குடியரசானது புரட்சிக்கு எதிரான தனது போராட்டத்தில், அடக்குமுறை நடவடிக்கைகளுடன் கூடவே அரசாங்க அதிகாரத்தின் சாதனங்களையு-ம் அதன் மத்தியத்துவத்தையும் வலுவாக்கிச் செல்ல வேண்டியதாயிற்று. எல்லாப் புரட்சிகளும் இந்தப் பொறியமைவைத் தகர்ப்பதற்குப் பதிலாய் மேலும் செம்மையாக்கியே வந்தன’’ [அழுத்தம் எம்முடையது]. “ஆதிக்கத்துக்காக ஒன்றன் பின் ஒன்றாய்ப் போராடிய கட்சிகள் அரசெனும் இந்தப் பிரம்மாண்டமான கோட்டையைக் கைப்பற்றி வைத்துக் கொள்வதே வெற்றியாளனுக்குக் கிடைக்கும் பிரதான சன்மானமென்று கருதின.’’ (லூயீ போனப்பார்ட்டின் புரூமேர் பதினெட்டு, பக்கங்கள் 98 – 99, நான்காம் பதிப்பு, ஹாம்பர்க், 1907.)
மார்க்சியமானது சிறப்புக்குரிய இந்த வாசகத்தில், கம்யூனிஸ்டு அறிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரியதொரு முன்னேற்ற அடி எடுத்து வைக்கிறது. கம்யூனிஸ்டு அறிக்கையில் இன்னமும் அரசு மிகப் பெருமளவுக்குக் கருத்தியலான முறையிலேதான், மிகவும் பொதுப்படையான தொடர்களிலும் வாக்கியங்களிலும்தான் பரிசீலனைக்கு எழுப்பப்படுகிறது. மேலே தரப்பட்ட வாசகத்தில் இப்பிரச்சனை ஸ்தூலமான முறையில் பரிசீலிக்கப்படுகிறது; மிக மிகத் துல்லியமான, திட்டவட்டமான, நடைமுறை சார்ந்த, கண்கூடான முடிவு பெறப்படுகிறது: முந்திய புரட்சிகள் எல்லாம் அரசுப் பொறியமைவைச் செம்மையே செய்தன, ஆனால் இந்தப் பொறியமைவு தகர்த்து நொறுக்கப்பட்டாக வேண்டும்.
இம்முடிவுதான் அரசு பற்றிய மார்க்சியப் போதனையில் தலையாயதும் அடிப்படையானதுமான அம்சம். இந்த அடிப்படை அம்சத்தைத்தான் ஆதிக்கத்திலுள்ள அதிகாரப்பூர்வமான சமூக-ஜனநாயகக் கட்சிகள் அறவே புறக்கணிக்கின்றன; மேலும் இரண்டாவது அகிலத்தின் பிரபல தத்துவவாதியான கார்ல் காவுத்ஸ்கி (பிற்பாடு நாம் காணப் போவது போல) திரித்துப் புரட்டுகிறார்.
கம்யூனிஸ்டு அறிக்கையின் வரலாற்றைப் பொதுப்படச் சுருக்கமாய்த் தொகுத்துரைக்கிறது. இந்தத் தொகுப்புரை, அரசை வர்க்க ஆதிக்கத்துக்கான உறுப்பாகக் கருத வேண்டுமென்பதை நமக்கு வற்புறுத்துகிறது. பாட்டாளி வர்க்கம் முதலில் அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றாமல், அரசியல் ஆதிக்கத்தைப் பெறாமல், அரசை ‘ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கமாய்’ மாற்றாமல், முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்த முடியாது; இந்தப் பாட்டாளி வர்க்க அரசு அதன் வெற்றியை அடுத்து உடனடியாய் உலர்ந்து உதிரத் தொடங்கிவிடும், ஏனெனில் வர்க்கப் பகைமைகள் இல்லாத ஒரு சமுதாயத்தில் அரசு தேவையில்லை, இருக்கவும் முடியாது என்கிற தவிர்க்க முடியாத முடிவுக்கு அது நம்மை இட்டுச் செல்கிறது. முதலாளித்துவ அரசு நீங்கி அதனிடத்தில் பாட்டாளி வர்க்க அரசு தோன்றுவது வரலாற்று வளர்ச்சியின் கண்ணோட்டத்தில் எப்படி நடந்தேறுமென்ற பிரச்சனை இங்கு எழுப்பப்படவில்லை.
இந்தப் பிரச்சனையைத்தான் மார்க்ஸ் 1852_ல் எழுப்பி அதற்குப் பதிலளிக்கிறார். தமது இயக்கவியல் பொருள் முதல்வாதத் தத்துவவியலுக்கு ஏற்ப மார்க்ஸ் 1848_லிருந்து 1851 வரையிலான மாபெரும் புரட்சி ஆண்டுகளின் சரித்திர ரீதியான அனுபவத்தைத் தமது அடிப்படையாய்க் கொள்கிறார். மற்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் போலவே இங்கும் அவருடைய போதனை அனுபவத்தைத் தொகுத்துரைப்பதாகவே அமைகிறது; ஆழ்ந்த தத்துவவியல் உலகக் கண்ணோட்டத்தாலும் வரலாறு பற்றிய செழுமிய ஞானத்தாலும் இது ஒளியூட்டப்பட்டிருக்கிறது.
அரசு பற்றிய பிரச்சனை தனிப்படத் தெளிவாய் எழுப்பப்படுகிறது; முதலாளித்துவ அரசு, முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சிக்குத் தேவையான இந்த அரசுப் பொறியமைவு, வரலாற்று வழியில் உருவானது எப்படி? முதலாளித்துவப் புரட்சிகளின் போதும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய சுயேச்சையான செயல்களின் முன்னாலும் அதில் ஏற்படும் மாறுதல்களும் அதன் பரிணாமமும் என்ன? இந்த அரசுப் பொறியமைவு சம்பந்தமாய்ப் பாட்டாளி வர்க்கம் செய்ய வேண்டிய பணிகள் யாவை?
முதலாளித்துவ சமுதாயத்துக்கே உரித்தான மத்தியத்துவ அரசு அதிகாரம் வரம்பிலா முடியாட்சியின் வீழ்ச்சிக் காலத்தில் தோன்றியதாகும். அதிகார வர்க்கமும் நிரந்தரச் சேனையும் இந்த அரசுப் பொறியமைவின் இன்றியமையாத இரு அங்கங்கள். முதலாளித்துவ வர்க்கம் இவ்விரு அங்கங்களுடன் ஆயிரமாயிரம் தொடர்புகளால் இணைக்கப்பட்டிருப்பதை மார்க்சும் எங்கெல்சும் தமது நூல்களில் திரும்பத் திரும்பத் தெரியப்படுத்துகின்றனர். ஒவ்வொரு தொழிலாளியின் அனுபவமும் இந்த இணைப்பினை தெள்ளத் தெளிவாகவும் எடுப்பாகவும் நிரூபித்துக் காட்டுகிறது. தொழிலாளி வர்க்கம் கொடுமையான சொந்த அனுபவத்தின் வாயிலாய் இந்த இணைப்பினைக் கண்டறியத் தெரிந்து கொள்கிறது. எனவே தான் அது இந்த இணைப்பின் தவிர்க்க இயலாத் தன்மையைப் பற்றிய கோட்பாட்டை அவ்வளவு சுலபமாய்ச் சடுதியில் புரிந்துகொள்கிறது, ஆனால் குட்டி முதலாளித்துவ ஜனநாயக வாதிகள் அறியாமையின் காரணமாகவோ அலட்சியம் காரணமாகவோ இதனை மறுக்கின்றனர்; அல்லது இன்னுங்கூட அதிக அலட்சியமாய் இதனைப் ‘பொதுப்படையாய்’ ஒத்துக் கொண்டு அதேபோதில் உரிய நடைமுறை முடிவுகளைச் செய்யத் தவறிவிடுகிறார்கள்.
அதிகார வர்க்கமும் நிரந்தரச் சேனையும் முதலாளித்துவச் சமுதாயத்தின் உடலில் புல்லுருவியாய் அமைந்தவை_இந்தச் சமுதாயத்தைப் பிளந்திடும் உட்பகைமைகளால் தோற்றுவிக்கப்பட்ட புல்லுருவியாய் அமைந்தவை. இந்தப் புல்லுருவி இச்சமுதாயத்தின் சர்வாங்கத்தையும் ‘நெரித்துக் திணறடிக்கிறது’. ஒரு புல்லுருவியாய் அமைந்ததே அரசென்னும் கருத்து அராஜகவாதத்துக்கு மட்டுமே உரிய ஒரு தனிக் குணத்தைக் குறிப்பதாகுமென்று அதிகார பூர்வமான சமூக- ஜனநாயகத்தில் தற்போது கோலோச்சி வரும் காவுத்ஸ்கிவாதச் சந்தர்ப்பவாதம் கருதுகிறது. மார்க்சியத்தை இவ்வாறு திரித்துப் புரட்டுவது, ‘தாயகப் பாதுகாப்பு’ எனும் கருத்தைக் கையாண்டு ஏகாதிபத்திய யுத்தம் நியாயமென நிரூபித்து, அதைச் சிங்காரித்து மினுக்கச் செய்திடும், கண்டும் கேட்டுமிராத அவக்கேடாய் சோஷலிசத்தை இழிவுபடுத்தியுள்ள இந்த அற்பர்களுக்கு மிகவும் ஆதாயமாயிருப்பது கூறாமலே விளங்கினாலும், சந்தேகத்துக்கு இடமின்றி இது ஒரு புரட்டே ஆகும்.
பிரபுத்துவத்தின் வீழ்ச்சிக்குப் பிற்பாடு ஐரோப்பா கண்டிருக்கும் எண்ணிலடங்கா முதலாளித்துவப் புரட்சிகள் யாவற்றின்போதும் அதிகாரவர்க்க இராணுவ இயந்திரம் தொடர்ந்து வளர்ச்சியுற்று செம்மையாக்கப்பட்டு வலுவடைந்தே வந்துள்ளது. குறிப்பாக, குட்டி முதலாளித்துவப் பகுதியோர் பெருமளவுக்கு இந்த அமைப்பு மூலம்தான் பெருமுதலாளிகளின் பக்கத்துக்குக் கவரப்பட்டு அவர்களுக்குக் கீழ்ப்படியலாயினர். விவசாயிகள், சிறு கைவினைஞர்கள், வணிகர்கள் முதலானோரின் மேல் மட்டப் பகுதியோருக்கு இவ்வமைப்பு ஒப்பளவில் வசதியான, அமைதி வாய்ந்த கவுரவமான உத்தியோகங்கள் அளித்து, அவர்களை மக்களுக்கு மேலானோராய் உயர்த்தி வைக்கிறது. 1917 பிப்ரவரி 27_க்குப் பிறகு வந்த ஆறு மாதங்களில் ருஷ்யாவில் நடைபெற்றதைக் கவனியுங்கள்12. முன்பெல்லாம் முன்னுரிமையாய்க் கறுப்பு நூற்றுவருக்கே அளிக்கப்பட்டு வந்த அரசாங்கப் பதவிகள் இப்பொழுது காடேட்டுகளுக்கும்13 மென்ஷிவிக்குகளுக்கும் சோஷலிஸ்டு -புரட்சியாளர்களுக்குமுரிய சன்மானங்களாகி விட்டன. உண்மையில் யாருக்கும் முக்கிய சீர்திருத்தம் எதைக்கொண்டு வருவதிலும் நாட்டம் இல்லை. சீர்திருத்தங்களை ‘அரசியல் நிர்ணய சபை கூடும் வரை’ ஒத்திப் போடவும், அரசியல் நிர்ணய சபை கூட்டப்படுவதை யுத்தம் முடிவுறும் வரை தொடர்ந்து ஒத்திப் போட்டுச் செல்லவும்தான் எல்லா வழிகளிலும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது! ஆனால் சன்மானங்களைப் பகிர்ந்து கொள்வதில், அமைச்சர்கள், துணையமைச்சர்கள், கவர்னர் -ஜெனரல்கள் போன்ற பசையுள்ள மிகப் பல பதவிகள் பெறுவதில் தாமதம் ஏற்படவில்லை, அரசியல் நிர்ணய சபைக்காகக் காத்திருக்க வேண்டி வரவில்லை! ‘சன்மானங்களைப்’ பங்கீடும் மறுபங்கீடும் செய்து கொள்வதானது மேல் மட்டங்களிலும் கீழ் மட்டங்களிலும், நாடெங்கும், மத்திய அரசாங்கத்திலும் ஸ்தல அலுவலகங்களிலும் நடைபெற்றுள்ளது. அரசாங்கம் நிறுவுவதில் பல்வேறு கூட்டுகள் சேர்ந்து ஆடப்பட்டுள்ள நாடகம் சாராம்சத்தில் இந்தப் பங்கீடும் மறுபங்கீடும் நடந்தேறுவதன் வெளியீடே ஆகும். 1917 பிப்ரவரி 27_க்கும் ஆகஸ்டு 27_க்கும் இடைப்பட்ட ஆறு மாதங்களில் நடைபெற்றுள்ளதைச் சர்ச்சைக்கு இடமின்றிப் புற நோக்குடன் சுருக்கமாய் இவ்வாறு கூறிவிடலாம்: சீர்திருத்தங்கள் ஒத்திப் போடப்பட்டன, அரசாங்க உத்தியோகங்களின் விநியோகம் முடிக்கப்பட்டது, விநியோகத்தின் போது நிகழ்ந்த ‘தவறுகள்’ ஒரு சில மறு விநியோகங்களின் மூலம் சரி செய்யப்பட்டன.
ஆனால் அதிகார வர்க்க இயந்திரம் பல்வேறு முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கட்சிளிடையே (ருஷ்ய உதாரணத்தில் காடேட்டுகள், சோஷலிஸ்டு -புரட்சியாளர்கள், மென்ஷிவிக்குகள் ஆகியோரிடையே) எவ்வளவுக்கு எவ்வளவு ‘மறுபங்கீடு’ செய்து கொள்ளப்படுகிறதோ, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் அவற்றின் தலைமையிலுள்ள பாட்டாளி வர்க்கமும் முதலாளித்துவ சமுதாயம் அனைத்துக்கும் தமக்குமுள்ள இணக்கம் காண முடியாத பகைமையை அவ்வளவுக்கு அவ்வளவு துல்லியமாய் உணர்ந்து கொள்கின்றன. ஆகவே எல்லா முதலாளித்துவக் கட்சிகளும், மிக ஜனநாயகமான, ‘புரட்சிகர -ஜனநாயகமான’ கட்சிகளுங்கூட, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்து அடக்குமுறை நடவடிக்கைகளைக் கடுமையாக்க வேண்டியதாகிறது, பலவந்தம் செய்வதற்கான இயந்திரத்தை, அதாவது அரசுப் பொறியமைவைப் பலப்படுத்த வேண்டியதாகிறது. நிகழ்ச்சிகளின் இந்தப் போக்கு புரட்சியை அரசு அதிகாரத்துக்கு விரோதமாய் ‘அழித்தொழித்திடுவதற்கான சக்திகள் அனைத்தையும் ஒன்று குவியச் செய்து கொள்ளும்படி’ நிர்ப்பந்தம் செய்கிறது; அரசுப் பொறியமைவை மேம்பாடு செய்வதையல்ல, அதனைத் தகர்த்து நொறுக்குவதையே, அழித்துவிடுவதையே தனது குறிக்கோளாய்க் கொள்ளும்படி நிர்பந்தம் செய்கிறது.
இந்த விவகாரம் இம்முறையில் எடுத்துரைக்கப்படுவதற்கு வழிகோலியது, 1848-_51- ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளது எதார்த்த வளர்ச்சிப் போக்கே அன்றி, இவ்வாண்டுகளில் கிடைத்த நடைமுறை அனுபவமே அன்றி, தர்க்கவாத முறையிலான காரண காரிய ஆய்வு அல்ல. எவ்வளவு கண்டிப்பாய் மார்க்ஸ் வரலாற்று அனுபவமெனும் உறுதி வாய்ந்த அடிப்படையிலே நின்றார் என்பதை, தகர்த்து நொறுக்கப்படும் அரசுப் பொறியமைவுக்குப் பதிலாய்த் தோன்றப் போவது எது என்னும் பிரச்சனையை 1852_ல் திட்டவட்டமான முறையில் இன்னும் அவர் எழுப்பாமல் இருந்ததிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்தப் பிரச்சனையை எழுப்பிப் பதில் காண்பதற்கு வேண்டிய உண்மை விவரங்களை இன்னமும் அனுபவம் அப்பொழுது அளித்தாகவில்லை. பிற்பாடு தான், 1871_ல் தான் வரலாறு இப்பிரச்சனையை நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டு வந்தது. 1852_ல் வரலாற்று விஞ்ஞானப் பார்வையின் பிழையற்ற துல்லியத்துடன் நிலைநாட்ட முடிந்ததெல்லாம், பாட்டாளி வர்க்கப் புரட்சியானது ‘அழித்தொழித்திடுவதற்கான சக்திகள் அனைத்தையும்’ அரசு அதிகாரத்தை எதிர்த்து ‘ஒன்று குவியச் செய்யும்’ பணியினை நெருங்கி வந்துவிட்டது என்பது தான்.
இங்கே ஒரு கேள்வி எழலாம்: மார்க்ஸ் கண்ட அனுபவத்தையும் அவர் கண்ணுற்றவற்¬யும் அவர் வந்தடைந்த முடிவுகளையும் பொதுப்படக் கொள்வது சரியா? 1848_க்கும் 1851_க்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளிலான பிரெஞ்சு வரலாற்றைக் காட்டிலும் விரிவான ஓர் அரங்கில் அவற்றைக் கையாளுவது சரியா? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முற்படு முன், நாம் எங்கெல்ஸ் கூறிய ஒரு குறிப்பை நினைவுபடுத்திக் கொண்டு, பிறகு உண்மைகளைப் பரிசீலிப்போம்.
புரூமேர் பதினெட்டின் மூன்றாம் பதிப்புக்குரிய தமது முன்னுரையில் எங்கெல்ஸ் எழுதினார்:
“…வரலாற்றுச் சிறப்புடைத்த வர்க்கப் போராட்டங்கள் வேறு எங்கேயும்விட பிரெஞ்சு நாட்டில்தான் ஒவ்வொரு தடவையும் இறுதி முடிவு வரை நீடித்து நடைபெற்றுள்ளன; ஆகவே, இந்தப் போராட்டங்களது இயக்க வரைகளாகி இப்போராட்டங்களின் பலாபலன்கள் தொகுத்தளிக்கப்படும் மாறிய வண்ணமுள்ள அரசியல் வடிவங்கள் வேறு எங்கேயும்விட இங்கு மிகத் தெளிவான உருவரைகளில் குறிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய காலத்தில் பிரபுத்துவத்தின் கேந்திரமாகவும், மறுமலர்ச்சிக்குப் பிற்பாடு சமூகப் படிநிலைகளை அடிப்படையாய்க் கொண்ட ஒன்றுபட்ட முடியாட்சிக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த பிரெஞ்சு நாடு, மாபெரும் புரட்சியின்போது பிரபுத்துவத்தைத் தகர்த்திட்டு வேறு எந்த ஐரோப்பிய நாடும் கண்டிராத கலப்பற்ற அவ்வளவு தூய வடிவில் முதலாளித்துவ ஆதிக்கத்தை நிறுவிக் கொண்டது. தலைதூக்கி வந்த பாட்டாளி வர்க்கமானது ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நடத்தும் போராட்டம் வேறெங்கும் கண்டிராத உக்கிர வடிவில் இங்கு மூண்டது,’’ (பக்கம் 4, 1907_ஆம் ஆண்டுப் பதிப்பு.)
இறுதியில் கூறப்படுவது காலம் கடந்ததாகிவிட்டது. ஏனெனில் 1871_க்குப் பிறகு பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது. இது நீடிப்பதாகவே இருப்பதானாலுங்கூட, இறுதி முடிவு வரை வர்க்கப் போராட்டத்தை நடத்திச் செல்வதில் பிரெஞ்சு நாடு வரப்போகிற பாட்டாளி வர்க்கப் புரட்சியில் முன்னுதாரணமாய்த் திகழும் சாத்தியப்பாடு இதனால் இல்லாமற் போய்விடவில்லை.
நிற்க, பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்திலும் முன்னேறிய நாடுகளது வரலாற்றைப் பொதுவில் பார்வையிடுவோம். அதே வளர்ச்சிப்போக்கு இன்னும் மெதுவாகவும், பலதரப்பட்ட வடிவங்களிலும், பரவலான அரங்கிலும் நடைபெறுவதைக் காண்கிறோம். ஒருபுறம் ‘நாடாளுமன்ற ஆட்சி முறை’ குடியரசு நாடுகளிலும் (பிரான்ஸ், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து), முடியரசுகளிலும் (பிரிட்டன், ஓரளவுக்கு ஜெர்மனி, இத்தாலி, ஸ்காந்தினேவிய நாடுகள் முதலானவை) வளர்ச்சியுறுவதைக் காண்கிறோம். மறுபுறத்தில், முதலாளித்துவச் சமுதாயத்தின் அடித்தளங்களின் எந்த மாற்றமுமின்றி அரசாங்கப் பதவிச் ‘சன்மானங்களை’ விநியோகமும் மறு விநியோகமும் செய்து கொண்ட பல்வேறு முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கட்சிகளிடையே ஆட்சியதிகாரத்துக்கான போராட்டம் நடைபெறக் காண்கிறோம். முடிவாக, ‘நிர்வாக அதிகாரம்’, அதன் அதிகாரிகளாலான அமைப்பு, இராணுவம் இவற்றின் இயந்திரம் செம்மை செய்யப்பட்டு உறுதியாக்கப்படுவதைக் காணலாம்.
இந்தப் போக்குகள் எல்லா முதலாளித்துவ அரசுகளின் நவீன காலப் பரிணாமம் முழுவதுக்கும் பொதுவானவை என்பதில் துளியும் சந்தேகமில்லை. முதலாளித்துவ உலகு அனைத்துக்கும் தனி விசேஷமாய் அமைந்த அதே வளர்ச்சிப் போக்குகள் அதிவிரைவான, கூர்மையான, செறிவு மிக்க வடிவில் 1848_க்கும்- 1851_க்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் பிரான்சில் நடந்தேறின.
ஏகாதிபத்தியமானது_வங்கி மூலதனத்தின், பிரம்மாண்ட முதலாளித்துவ ஏகபோகக் கம்பெனிகளின், ஏகபோக முதலாளித்துவம் அரசு -ஏகபோக முதலாளித்துவமாய் வளர்வதன் சகாப்தம் இது_ ‘அரசுப் பொறியமைவு’ அசாதாரணமாய்ப் பலம் பெறுவதையும், முடியாட்சி நாடுகளில் மட்டுமின்றி மிகுந்த சுதந்திரம் படைத்த குடியரசு நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராய் அடக்குமுறை நடவடிக்கைகள் கடுமையாகிவிட்டதையொட்டி அரசாங்க அதிகார வர்க்க, இராணுவ இயந்திரம் முன்பின் கண்டிராத அளவுக்கு வளருவதையும் குறிப்பதாகும் என்பது தெளிவாய்ப் புலனாகியுள்ளது.
அரசுப் பொறியமைவை ‘அழித்தொழிப்பதற்காக’ 1852_ஐக் காட்டிலும் தற்போது ஒப்பீடில்லாப் பெரிய அளவில் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ‘எல்லா சக்திகளும் ஒன்று குவிக்கப்படுவதை’ நோக்கி உலக வரலாறு நடை போடுகிறது என்பதில் ஐயமில்லை.
அழித்தொழிக்கப்படும் அரசுப் பொறியமைவின் இடத்தில் பாட்டாளி வர்க்கம் அமர்த்தப் போவது என்னவென்பதை பாரிஸ் கம்யூன் அளித்திடும் படிப்பினை மிக்க விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

அரசும் புரட்சியும் Copyright © 2014 by jayend16; லெனின்; and Vladimir Ilyich Lenin is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book