முதிர்ச்சியுற்ற மார்க்சியத்தின் முதலாவது நூல்களான மெய்யறிவின் வறுமையும், கம்யூனிஸ்டு அறிக்கையும் 1848_ஆம் ஆண்டுப் புரட்சி தொடங்கும் தறுவாயில் வெளி வந்தவை. இக்காரணத்தால் அவை மார்க்சியத்தின் பொதுக் கோட்பாடுகளை எடுத்துரைப்பதோடு, ஸ்தூலமான அக்காலத்திய புரட்சிகரச் சூழ்நிலையையும் ஓரளவு பிரதிபலித்துக் காட்டின. ஆகவே இந்நூல்களின் ஆசிரியர்கள் 1848_-51 ஆம் ஆண்டுகளின் அனுபவத்திலிருந்து முடிவுகளை வந்தடைவதற்கு உடனடியாய் முன்னதாக அரசு குறித்து என்ன சொன்னார்கள் என்பதைப் பரிசீலிப்பது இன்னுங்கூட பயனுடையதாய் இருக்கும்.
மெய்யறிவின் வறுமையில் மார்க்ஸ் எழுதினார்:
“… தொழிலாளி வர்க்கம் தனது வளர்ச்சிப் போக்கிலே பழைய முதலாளித்துவச் சமுதாயத்துக்குப் பதிலாக, எல்லா வர்க்கங்களையும் அவற்றின் பகைமையையும் விலக்கிவிடும் ஒரு சங்கத்தை அமைக்கும், முறையாகச் சொல்லக் கூடிய அரசியல் அதிகாரம் இனிமேல் இராது, ஏனெனில் அரசியல் அதிகாரம் என்பது முதலாளித்துவச் சமுதாயத்திலுள்ள வர்க்கப் பகைமையின் அதிகாரபூர்வமான வெளிப்பாடாகும்’’ (பக்கம் 182, ஜெர்மன் பதிப்பு, 1885).
வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டதும் அரசு மறைந்து விடுமென்ற கருத்தின் இந்தப் பொது விளக்கத்தை, இதற்குச் சில மாதங்களுக்குப் பிற்பாடு_துல்லியமாய்க் கூறுவதெனில் 1847 நவம்பரில்_மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்டு அறிக்கையில் காணப்படும் விளக்கத்துடன் ஒப்பிடுதல் பயனுடையது:
“… பாட்டாளி வர்க்கத்தினது வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களை விவரித்த நாம், தற்கால சமுதாயத்தில் ஏறக்குறைய திரை மறைவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை, அது பகிரங்கப் புரட்சியாய் வெடித்து, முதலாளித்துவ வர்க்கம் பலாத்காரமாய் வீழ்த்தப் படுவதன் மூலம் பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் நிலை வரையில் உருவரை தீட்டிக் காட்டினோம்…
“…பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வதுதான், ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான், தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியின் முதலாவது படி என்பதை மேலே கண்டோம்.
“பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச் சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்’’ (பக்கங்கள் 31,37, ஏழாவது ஜெர்மன் பதிப்பு, 1906).
அரசு என்னும் பொருள் குறித்து மார்க்சியத்துக்குள்ள மிகச் சிறப்பான மிக முக்கியக் கருத்துக்களில் ஒன்று, அதாவது ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ (பாரிஸ் கம்யூனுக்குப் பிற்பாடு மார்க்சும் எங்கெல்சும் இப்படித்தான் இதனை அழைக்கத் தொடங்கினர்) என்னும் கருத்து, இங்கு வரையறுத்துக் கூறப்படுவதைக் காண்கிறோம். அதோடு அரசைப் பற்றிய மிகச் சுவையான ஒரு இலக்கணமும்_மார்க்சியத்தின் ‘மறக்கப்பட்ட உரைகளில்’ இதுவும் ஒன்றாகிவிட்டது_இங்கு நமக்குத் தரப்படுகிறது: “அரசு, அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்.’’
அதிகார பூர்வமான சமூக- ஜனநாயகக் கட்சிகளது தற்போதைய பிரசார, கிளர்ச்சி வெளியீடுகளில் இந்த இலக்கணம் விளக்கப்படுவதே இல்லை. அது மட்டுமல்ல, வேண்டுமென்றே இது ஒதுக்கித் தள்ளப்படுகிறது. காரணம் என்னவென்றால், இந்த இலக்கணம் சீர்திருத்தவாதத்துக்குச் சிறிதும் இணங்காததாகும்; ‘ஜனநாயகத்தின் சமாதான வழிப்பட்ட வளர்ச்சி’ என்பதாய் சகஜமாய் நிலவும் சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களுக்கும் அற்பவாதக் குட்டி முதலாளித்துவ பிரமைகளுக்கும் இது முற்றிலும் புறம்பானதாகும்.
பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு வேண்டும்_எல்லாச் சந்தர்ப்பவாதிகளும் சமூக -தேசிய வெறியர்களும் காவுத்ஸ்கிவாதிகளும் இதைத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். மார்க்ஸ் இதைத்தான் போதித்தார் என்று நம்மிடம் வலியுறுத்துகிறார்கள். ஆனால் இதோடு கூட கூறப்பட வேண்டியதை அவர்கள் கூற ‘மறந்து விடுகிறார்கள்.’ முதலாவதாக, மார்க்சின் கருத்துப்படி, பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டியது உலர்ந்து உதிர்ந்து கொண்டிருக்கும் அரசு மட்டுமேதான், அதாவது உடனடியாகவே உலர்ந்து உதிரத் தொடங்குவதாகவும், உலர்ந்து உதிர்வதாய் அன்றி வேறு விதமாய் இருக்கவொண்ணாததாகவும் அமைந்த ஓர் அரசு மட்டுமேதான். இரண்டாவதாக, உழைப்பாளி மக்களுக்கு வேண்டியது ஓர் ‘அரசு’, ‘அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்’.
அரசு என்பது பலத்தின் ஒரு தனிவகை ஒழுங்கமைப்பு; ஏதோவொரு வர்க்கத்தை அடக்குவதற்கான பலாத்கார ஒழுங்கமைப்பு. பாட்டாளி வர்க்கத்தால் அடக்கப்பட வேண்டிய வர்க்கம் எது? சுரண்டும் வர்க்கம்தான், அதாவது முதலாளித்துவ வர்க்கம்தான் என்பதே இக்கேள்விக்குரிய இயற்கையான பதில். சுரண்டுவோருடைய எதிர்ப்பை அடக்குவதற்கு மட்டுமே உழைப்பாளி மக்களுக்கு அரசு தேவைப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே சுரண்டுவோருடைய எதிர்ப்பை அடக்கும் பணிக்குத் தலைமை தாங்க முடியும். ஏனென்றால், பாட்டாளி வர்க்கம்தான் முரணின்றி முற்றிலும் புரட்சிகரமான ஒரே வர்க்கம்; முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில், அவ்வர்க்கத்தை அறவே அகற்றிடுவதில், உழைப்பாளர்களும் சுரண்டப்படுவோருமான மக்கள் எல்லோரையும் ஒன்றுபடச் செய்யக் கூடிய ஒரே வர்க்கம்.
சுரண்டும் வர்க்கங்களுக்குச் சுரண்டலை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அதாவது மிகப் பெருவாரியான மக்களுக்கு விரோதமாய் மிகச் சொற்பமான சிறுபான்மையினரது சுயநலத்துக்காக, அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது. சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு, எல்லா விதச் சுரண்டலையுமே அறவே ஒழிக்கும் பொருட்டு, அதாவது மிகப் பெருவாரியான மக்களது நலன்களுக்காக வேண்டி, நவீன கால அடிமையுடைமையாளர்களாகிய நிலப்பிரபுக்களும் முதலாளிகளுமான மிகச் சொற்ப சிறுபான்மையினருக்கு எதிராய் அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது.
குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள், வர்க்கப் போராட்டத்துக்குப் பதிலாய் வர்க்க இசைவு பற்றிய பகல் கனவுகளில் ஈடுபடும் இந்தப் போலி சோஷலிஸ்டுகள், சோஷலிச மாற்றத்தையுங்கூட கனவுலகப் பாணியில் சித்திரித்தனர்_சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்துவதாய்ச் சித்திரிக்காமல், பெரும்பான்மையினர் தமது நோக்கங்களை உணர்ந்து கொண்டு விடுவதாகவும், சிறுபான்மையினர் சமாதானமாகவே அவர்களுக்குக் கீழ்ப்படிந்து விடுவதாகவும் சித்திரித்தனர். இந்தக் குட்டி முதலாளித்துவக் கற்பனை, வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது அரசு என்ற கருத்திலிருந்து பிரிக்க முடியாதது. நடைமுறையில் இந்தக் கற்பனை உழைப்பாளி வர்க்கங்களுடைய நலன்களுக்குத் துரோகமிழைக்கவே செய்தது. உதாரணமாய், 1848_1871 ஆம் ஆண்டுகளின் பிரெஞ்சுப் புரட்சிகளின் வரலாறும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, மற்றும் பல நாடுகளில் முதலாளித்துவ அமைச்சரவைகளில் ‘சோஷலிஸ்டுகள்’ பங்கு கொண்டதன் அனுபவமும்11 இதைத் தெளிவுபடுத்தின.
தற்போது ருஷ்யாவில் சோஷலிஸ்டுப் புரட்சியாளர் கட்சியாலும் மென்ஷிவிக் கட்சியாலும் புத்துயிர் ஊட்டப் பெற்றுள்ள இந்தக் குட்டி முதலாளித்துவ சோஷலிசத்தை எதிர்த்து மார்க்ஸ் தமது வாழ்நாள் முழுவதும் போராடினார். அவர் தமது வர்க்கப் போராட்டத் தத்துவத்தை அரசியல் ஆட்சியதிகாரம், அரசு பற்றிய தத்துவம் வரையிலும் முரணின்றி வளர்த்து வகுத்தார்.
முதலாளித்துவ ஆதிக்கத்தை வீழ்த்த வல்லது பாட்டாளி வர்க்கம் ஒன்றுதான். இந்த ஒரு வர்க்கம் மட்டும்தான் தனது வாழ்க்கையின் பொருளாதார நிலைமைகளால் இந்தப் பணிக்குத் தயார் செய்யப்படுகிறது, இந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குரிய சாத்தியப்பாடும் சக்தியும் அளிக்கப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கம் விவசாயிகளையும் எல்லாக் குட்டி முதலாளித்துவப் பகுதிகளையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறது; ஆனால் அது பாட்டாளி வர்க்கத்தை ஒரு சேர இணைத்து ஒன்று படுத்துகிறது, நிறுவன வழியில் ஒழுங்கமையச் செய்கிறது. பாட்டாளி வர்க்கம் மட்டும் தான்_பெருவீதப் பொருளுற்பத்தியின் அது ஆற்றும் பொருளாதாரப் பாத்திரம் காரணமாய்_உழைப்பாளர்களும் சுரண்டப்படுவோருமான மக்கள் எல்லோருக்கும் தலைவனாக வல்லது. ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்கள் அனைவரையும் முதலாளித்துவ வர்க்கம் ஒடுக்கி நசுக்கிய போதிலும், பாட்டாளி வர்க்கத்தினரைக் காட்டிலும் குறைவாக அல்ல பல சந்தர்ப்பங்களில் அதிகமாகவே ஒடுக்கி நசுக்கிய போதிலும், இவர்கள் தமது விடுதலைக்காக சுயேச்சையாய்ப் போராடும் வல்லமை இல்லாதவர்கள்.
அரசு, சோஷலிசப் புரட்சி இவற்றின் பிரச்சனையில் மார்க்ஸ் வர்க்கப் போராட்டத் தத்துவத்தைப் பிரயோகித்ததும், தவிர்க்க முடியாதபடி அது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தின், அதன் சர்வாதிகாரத்தின், அதாவது யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல், நேரடியாய் மக்களுடைய ஆயுத பலத்தை ஆதாரமாய்க் கொண்ட ஆட்சியதிகாரத்தின் அங்கீகாரத்துக்கு இட்டுச் சென்றது. பாட்டாளி வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின் தவிர்க்க முடியாத ஆவேசமான எதிர்ப்பை நசுக்கவும், உழைப்பாளர்களும் சுரண்டப்படுவோருமான மக்கள் அனைவரையும் புதிய பொருளாதார அமைப்புக்காக ஒழுங்கமைக்கவும் வல்லமை படைத்த ஆளும் வர்க்கமாக மாறுவதனால் மட்டுமே முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்த முடியும்.
சுரண்டலாளர்களுடைய எதிர்ப்பை நசுக்குவதற்கும் சோஷலிசப் பொருளாதாரத்தை ‘ஒழுங்கமைப்பதில்’ மாபெரும் திரள்களான மக்களுக்கு_விவசாயிகளும், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரும், அரைகுறைப் பாட்டாளி வர்க்கத்தினருமானோருக்கு_தலைமை தாங்குவதற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு அரசு அதிகாரம், பலத்தின் மத்தியத்துவ நிறுவன ஒழுங்கமைப்பு, பலாத்காரத்தின் நிறுவன ஒழுங்கமைப்பு தேவைப்படுகிறது.
மார்க்சியமானது தொழிலாளர் கட்சிக்குப் போதமளிப்பதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைக்குப் போதமளிக்கிறது. ஆட்சியதிகாரம் ஏற்று அனைத்து மக்களுக்கும் தலைமை தாங்கி சோஷலிசத்துக்கு அழைத்துச் செல்ல, புதிய அமைப்பை நெறிப்படுத்தி ஒழுங்கமைக்க, உழைப்பாளர்களும் சுரண்டப்படுவோருமான மக்கள் அனைவரும் முதலாளித்துவ வர்க்கம் இல்லாமலும் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்தும் தமது சமுதாய வாழ்வினை ஒழுங்கமைத்துக் கொள்வதில் அவர்களுக்குப் போதகனாகவும் வழிகாட்டியாகவும் தலைவனாகவும் செயலாற்ற வல்லமை படைத்த இந்த முன்னணிப் படைக்கு அது போதமளிக்கிறது. தற்போது ஆதிக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதமானது, இதற்கு மாறாய், தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களை உயர்ந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுடைய பிரதிநிதிகளாய்ச் செயல்படுவதற்கு_வெகுஜனங்களுடன் தொடர்பு இழந்து, முதலாளித்துவத்தில் எப்படியோ ஓரளவு ‘நல்லபடியாகவே’ இருந்து, எச்சில் துண்டுக்காகத் தமது பிறப்புரிமையையே விற்கும், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து மக்களது புரட்சிகரத் தலைவர்களாய்த் தாம் ஆற்ற வேண்டிய பாத்திரத்தைத் துறந்துவிடும் இத்தகைய பிரதிநிதிகளாய்ச் செயல்படுவதற்கு_பயிற்றுவிக்கிறது.
‘அரசு, அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்’ பற்றிய மார்க்சின் தத்துவம் வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்துக்குரிய புரட்சிப் பாத்திரம் குறித்த அவருடைய போதனை அனைத்துடன் இரண்டறக் கலந்ததாகும். இந்தப் பாத்திரத்தின் இறுதி நிலையே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம்.
ஆனால் பாட்டாளி வர்க்கத்துக்கு, முதலாளித்துவத்துக்கு எதிரான பலாத்காரத்தின் ஒழுங்கமைப்புக்குரிய தனிவகை வடிவமான அரசு தேவைப்படுவதால், பின்வரும் முடிவு தானாகவே எழுகிறது: முதலாளித்துவ வர்க்கத்தினர் தமக்கென உருவாக்கிக் கொண்ட அரசுப் பொறியமைவை முதலில் ஒழித்திடாமல், தகர்த்தெறியாமல் இத்தகைய ஒழுங்கமைப்பினை உருவாக்க முடியுமென நினைக்கலாமா? கம்யூனிஸ்டு அறிக்கை நேரடியாக இந்த முடிவுக்கே இட்டுச் செல்கிறது. 1848_51 ஆம் ஆண்டுகளின் அனுபவத்தைத் தொகுத்துக் கூறுகையில் மார்க்ஸ் இதே முடிவைத்தான் எடுத்துரைக்கிறார்.