இப்பொருள் குறித்து மார்க்ஸ் கூறியதை ஏற்கனவே மேற்கோளாய்க் கொடுத்திருக்கிறோம். இப்பொழுது கூடுதலாய் மேலும் சிலவற்றைத் தர வேண்டும்.
“…வரலாற்றின் புதிய படைப்புகள், அவை ஓரளவு உருவ ஒற்றுமை கொண்டிருக்கக் கூடிய சமுதாய வாழ்வின் பழைய, மரபற்று மறைந்துவிட்ட வடிவங்களின் நேர்பிரதிகளாகத் தவறாய்க் கருதப்படுகின்றன. இது பொதுவாய்ப் புதிய படைப்புகளுக்கு ஏற்படும் கதியாகும்’’ என்று அவர் எழுதினார். “இவ்வாறுதான், நவீன அரசு அதிகாரத்தைத் தகர்த்திடும் [தீக்ஷீவீநீலீt _ நொறுக்கும்] இந்தப் புதிய கம்யூனும் மத்திய காலக் கம்யூன்களுடைய மறுபிறவியாய்… சிறு அரசுகளுடைய கூட்டமைப்பாய் (மாண்டிஸ்கியேவும் ஜிரோண்டுவாதிகளும்20 கற்பனை செய்தவற்றைப் போன்றதாய்)… அதீத மத்தியத்துவத்துக்கு எதிரான பழைய போராட்டத்தின் மிகைப்பட்ட வடிவமாய்… கருதப்பட்டிருக்கிறது.
“…புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமானது, சமுதாயச் செலவில் உண்டு கொழுத்த சமுதாயத்தின் தங்குதடையற்ற இயக்கத்தைத் தடுத்திடும் ‘அரசானது’ இதுகாறும் உறிஞ்சியிழுத்துக் கொண்ட சக்திகள் அனைத்தையும் கம்யூன் அரசியல் அமைப்பு சமுதாய உடலுக்கு மீட்டளித்திருக்கும். இந்த ஒரு செயலாலேயே பிரெஞ்சு நாட்டின் புத்தெழுச்சி துவக்கி வைக்கப்பட்டிருக்கும்…
“…கம்யூன் அரசியல் அமைப்பு கிராமப்புற உற்பத்தியாளர்களை அவர்களது மாவட்ட மைய நகர்களது சித்தாந்தத் தலைமையில் கொண்டு வந்திருக்கும்; அங்கே நகர உழைப்பாளிகளின் வடிவில் அவர்களது நலன்களின் இயற்கையான காப்பாளர்களைப் பெற்றுத் தந்திருக்கும். கம்யூன் இருப்பதானது இயல்பாகவே பிரதேச சுயாட்சி நிர்வாகத்தைக் குறிப்பதாகும். ஆனால் பிரதேச சுயாட்சி இனி அரசு அதிகாரத்தின் எதிர் எடையாய் இருக்காது, ஏனென்றால் அரசு அதிகாரமே இப்பொழுது தேவையற்றதாகிவிடும்.’’
‘புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய்’ விளங்கும் ‘அரசு அதிகாரத்தைத் தகர்த்திடல்’, அதை ‘வெட்டியெறிதல்’, அதை ‘நொறுக்குதல்’; ‘அரசு அதிகாரம் இப்பொழுது தேவையற்றதாகி விடுதல்’ _ இவையே கம்யூனுடைய அனுபவத்தை மதிப்பிடுகையிலும் பகுத்தாராய்கையிலும் அரசு குறித்து மார்க்ஸ் உபயோகிக்கும் தொடர்கள்.
இவை யாவும் அரை நூற்றாண்டுக்குச் சற்றுக் குறைவான காலத்துக்கு முன்பு எழுதப்பட்டவை. திரித்துப் புரட்டப்படாத மார்க்சியத்தைப் பெருந்திரளான மக்களுக்குத் தெரியப்படுத்த இன்று அகழ்வாய்வு நடத்திப் புதைபொருள் தேடுவது போலத் தேடிப் பிடித்தாக வேண்டியிருக்கிறது. தம் வாழ்நாளில் நடைபெற்ற கடைசி பெரும் புரட்சியைக் கண்ணுற்றதிலிருந்து மார்க்ஸ் வகுத்தளித்த முடிவுகள், அடுத்த பெரிய பாட்டாளி வர்க்கப் புரட்சிகளுக்குரிய காலம் பிறந்துவிட்ட ஒரு நேரத்தில் மறக்கப்பட்டுவிட்டன.
“…கம்யூனுக்கு முந்திய எல்லா அரசாங்க வடிவங்களும் சாராம்சத்தில் அடக்கி ஒடுக்கும் தன்மையானதாகவே இருந்திருக்கையில், கம்யூன் மட்டும் மிகுந்த நெகிழ்வுடைய அரசியல் வடிவமாய் இருந்ததென்பதைக் கம்யூனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பல வகை விளக்கங்களும், கம்யூனில் வெளிப்பட்ட பல வகை நலன்களும் காட்டுகின்றன. அதன் மெய்யான இரகசியம் இதில்தான் அடங்கியிருந்தது; சாராம்சத்தில் அது தொழிலாளி வர்க்க அரசாங்கமாகும், உற்பத்தியாளர் வர்க்கம் அபகரிப்பாளர் வர்க்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தின் விளைவாகும், உழைப்பானது பொருளாதார விடுதலை பெறும் பொருட்டு இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட அரசியல் வடிவமாகும்…
“இந்தக் கடைசி நிபந்தனை இல்லையேல் கம்யூன் அரசியல் அமைப்பு சாத்தியமற்றதாகவும் பகற்கனவாகவுமே இருந்திருக்கும்…’’
சமுதாயத்தை சோஷலிச முறையில் புனரமைப்பதற்குரிய அரசியல் வடிவங்களைக் ‘கண்டுபிடிப்பதில்’ கற்பனைவாதிகள் முனைந்திருந்தனர். அரசியல் வடிவங்களைப் பற்றிய பிரச்சனையையே அராஜகவாதிகள் முற்றிலும் புறக்கணித்து விட்டனர். தற்கால சமூக- ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதிகள் நாடாளுமன்ற ஜனநாயக அரசுக்குரிய முதலாளித்துவ அரசியல் வடிவங்களே இறுதி வரம்பென்றும் இவற்றுக்கு அப்பால் அடியெடுத்து வைக்கக் கூடாதென்றும் கருதிவிட்டனர். இந்த ‘முன்மாதிரியின்’ முன் மண்டியிட்டு வணங்கி மண்டையை உடைத்துக் கொண்டனர். இந்த வடிவங்களைத் தகர்த்திட வேண்டுமென்ற முயற்சி எதனையும் அராஜகவாதமெனக் கூறிக் கண்டித்தனர்.
அரசு மறைந்தே தீருமென்றும், அதன் மறைவுக்கான இடைக்கால வடிவம் (அரசுக்கும் அரசு இல்லாததற்கும் இடைப்பட்ட காலத்துக்குரிய வடிவம்) ‘ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கமாகவே’ இருக்குமென்றும் சோஷலிசம், அரசியல் போராட்டம் இவற்றின் வரலாறு முழுவதிலுமிருந்து மார்க்ஸ் முடிவுக்கு வந்தார். ஆனால் இந்த வருங்காலத்திற்குரிய அரசியல் வடிவங்களை மார்க்ஸ் கண்டுபிடிக்க முற்படவில்லை. பிரெஞ்சு வரலாற்றை உற்று நோக்கி, அதனைப் பகுத்தாய்ந்து, 1851_ஆம் ஆண்டிலிருந்து பெறப்படும் முடிவினை, அதாவது முதலாளித்துவ அரசுப் பொறியமைவு அழிக்கப்படுவதை நோக்கி விவகாரங்கள் முற்றிச் சென்றன என்னும் முடிவினை எடுத்துரைப்பதோடு நின்றுவிட்டார்.
பிறகு பாட்டாளி வர்க்கத்தின் வெகுஜனப்புரட்சி இயக்கம் வெடித்ததும் மார்க்ஸ், இவ்வியக்கம் தோல்வியுற்றதென்றாலும், குறுகிய காலத்துக்கே நடந்ததென்றாலும், தெளிவாகவே பலவீனம் கொண்டிருந்ததென்றாலும், இது கண்டுபிடித்த வடிவங்களை ஆராய முற்பட்டார்.
உழைப்பானது பொருளாதார விடுதலை பெறும் பொருட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியால் ‘இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட’ வடிவம் தான் கம்யூன்.
முதலாளித்துவ அரசுப் பொறியமைவை நொறுக்குவதற்குப் பாட்டாளி வர்க்கப் புரட்சியால் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியே கம்யூன். நொறுக்கப்படும் அரசு இயந்திரத்திற்குப் பதிலாய் அமையக் கூடியதாகவும் அமைந்தாக வேண்டியதாகவும் ‘இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட’ அரசியல் வடிவம் இதுவே.
1905_ஆம் ஆண்டு, 1917_ஆம் ஆண்டு ருஷ்யப் புரட்சிகள் கம்யூனின் பணியை வேறுவிதச் சூழ்நிலைகளிலும் வேறுவித நிலைமைகளிலும் தொடர்ந்து நடத்திச் சென்றதையும், மார்க்சின் உன்னத வரலாற்று வழிப் பகுத்தாய்வை மெய்ப்பித்து உறுதி செய்ததையும் பிற்பாடு நாம் காண்போம்.