மார்க்ஸ் மேலும் கூறியதாவது:
“…முதலாளித்துவ சமுதாயத்துக்கும் கம்யூனிச சமுதாயத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாய்ப் புரட்சிகர மாற்றமடையும் கட்டம் உள்ளது. இதற்கு இணையாய் அரசியல் இடைக்கால கட்டமும் ஒன்று உள்ளது. இந்த இடைக்காலத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரமாகவே அன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது…’’
தற்கால முதலாளித்துவ சமுதாயத்தின் பாட்டாளி வர்க்கம் ஆற்றும் பாத்திரத்தைப் பற்றிய பகுத்தாய்வின் அடிப்படையிலும், இந்தச் சமுதாயத்தின் வளர்ச்சி சம்பந்தமான விவரங்களின் அடிப்படையிலும், பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்குமுள்ள ஒன்றுக்கொன்று பகைமையான நலன்களிடையே இணக்கம் காண முடியாத நிலையின் அடிப்படையிலும் மார்க்ஸ் இம்முடிவை வந்தடைகிறார்.
இதன்முன் இப்பிரச்சனை பின்வருமாறு கூறப்பட்டது: பாட்டாளி வர்க்கம் தனது விடுதலையைப் பெறும் பொருட்டு முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி, அரசியல் அதிகாரம் வென்று தனது புரட்சிகரச் சர்வாதிகாரத்தை நிறுவியாக வேண்டும்.
இப்பொழுது இப்பிரச்சனை ஓரளவு வேறுவிதமாய்க் கூறப்படுகிறது: முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து _ இச்சமுதாயம் கம்யூனிசத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது _ கம்யூனிச சமுதாயத்துக்கு மாறிச் செல்வது ‘அரசியல் இடைக்காலக் கட்டம்’ ஒன்று இல்லாமல் முடியாத காரியம்; இந்த இடைக்காலக் கட்டத்தில் அரசானது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகரமாய் மட்டுமே இருக்க முடியும்.
அப்படியானால் இந்தச் சர்வாதிகாரம் ஜனநாயகத்திடம் கொண்டுள்ள உறவு என்ன?
‘பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயர்த்துவது’, ‘ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் வெற்றி பெறுவது’ என்று இரு கருத்தோட்டங்களையும் கம்யூனிஸ்டு அறிக்கை ஒருங்கே குறிப்பிடுவதுடன் நின்றுவிடுவதை நாம் ஏற்கனவே கண்டோம். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கு மாறிச் செல்கையில், மேலே கூறப்பட்டவை யாவற்றின் அடிப்படையிலும் ஜனநாயகம் எப்படி மாற்றமடைகிறது என்பதை மேலும் துல்லியமாய் நிர்ணயிக்கலாம்.
முதலாளித்துவ சமுதாயத்தில், மிகவும் சாதகமான நிலைமைகளில் அது வளர்வதாய்க் கொள்வோமாயின், ஜனநாயகக் குடியரசில் ஓரளவு முழுமையான ஜனநாயகம் இருக்கக் காண்கிறோம். ஆனால் இந்த ஜனநாயகம் எப்பொழுதும் முதலாளித்துவச் சுரண்டலால் எழுப்பப்படும் குறுகலான வரம்புகளால் இறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இது நடைமுறையில் எப்பொழுதும் சிறுபான்மையோருக்கான ஜனநாயகமாகத்தான், சொத்துடைத்த வர்க்கங்களுக்கு மட்டுமேயான, செல்வந்தர்களுக்கு மட்டுமேயான ஜனநாயகமாகத்தான் இருக்கிறது. முதலாளித்துவ சமுதாயத்தில் சுதந்திரமானது பண்டைக் கிரேக்கக் குடியரசுகளில் இருந்ததே ஏறத்தாழ அதேபோல அடிமையுடைமையாளர்களுக்கான சுதந்திரமாகத்தான் எப்பொழுதுமே இருந்து வருகிறது. முதலாளித்துவச் சுரண்டலின் நிலைமைகள் காரணமாய் தற்காலக் கூலி அடிமைகள் பட்டினியாலும் வறுமையாலும் நசுக்கப்பட்டு ‘ஜனநாயகம் குறித்துத் தொல்லைப்பட முடியாதபடி’, ‘அரசியல் குறித்துத் தொல்லைப்பட முடியாதபடி’ அவலநிலையில் இருத்தப்பட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சிகள் சாதாரணமாய், சமாதான வழியில் ஓடிக் கொண்டிருக்கையில் பெரும்பான்மையான மக்கள் பொது வாழ்விலும் அரசியல் வாழ்விலும் ஈடுபட முடியாதவாறு தடுக்கப்பட்டு விடுகிறார்கள்.
இப்படிச் சொல்வது முற்றிலும் சரியே என்பதை வேறு எதையும்விட ஜெர்மனி மிகவும் தெளிவாய் ஊர்ஜிதம் செய்கிறது எனலாம், எப்படியெனில், அரசியல் சட்ட நெறி அங்கே குறிப்பிடத்தக்க நீண்ட காலத்துக்கு _ ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு (1871-_1914) – தொடர்ந்து நிலைத்திருந்தது. இந்தக் காலத்தில் ‘சட்ட நெறியைப் பயன்படுத்திக் கொள்வதில்’ சமூக-_ஜனநாயகவாதிகள் ஏனைய நாடுகளைவிட அங்கே மிகவும் அதிகமாய் சாதனை பெற முடிந்தது. உலகில் வேறு எங்கும் முடிந்ததைவிட அதிகமான விகிதாசாரத்தில் தொழிலாளர்களை அவர்கள் அரசியல் கட்சியாய் ஒன்று திரட்டிக் கொள்ள முடிந்தது.
முதலாளித்துவ சமுதாயத்தில் இதுகாறும் காணப்பட்டிருக்கும் அரசியல் உணர்வு படைத்த, ஊக்கமாய்ச் செயல்படும் கூலி அடிமைகளின் இந்த மிக உயர்ந்த விகிதாசாரம் என்ன தெரியுமா? ஒன்றரைக் கோடிக் கூலி உழைப்பாளர்களில் பத்து லட்சம் பேர் சமூக-_ஜனநாயகக் கட்சியில் உறுப்பினர்கள்! ஒன்றரைக் கோடிப் பேரில் முப்பது லட்சம் பேர் தொழிற்சங்கங்களில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்!
மிகச் சொற்பமான சிறுபான்மையோருக்கு ஜனநாயகம், செல்வந்தர்களுக்கு ஜனநாயகம் _ இதுதான் முதலாளித்துவ சமுதாயத்தில் நிலவும் ஜனநாயகம். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கட்டமைவை மேலும் நெருங்கிச் சென்று பார்த்தோமாயின், வாக்குரிமையின் ‘அற்ப’ _ அற்பமானவை என்று சொல்லப்படுகிற _ விவரங்களிலும் (குடியிருப்புத் தகுதி, பெண்களின் விலக்கம் முதலானவை), பிரதிநிதித்துவ உறுப்புக்களின் செயல்முறையிலும், கூட்ட உரிமைக்கு நடைமுறையில் இருந்துவரும் தடங்கல்களிலும் (பொதுக் கட்டடங்கள் ‘ஓட்டாண்டிகளுக்கு’ உதவாதவை!), நாளேடுகளின் முற்றிலும் முதலாளித்துவ முறையிலான ஏற்பாட்டிலும், இன்ன பிறவற்றிலும் எங்கும் ஜனநாயகத்துக்கு கட்டுக்கு மேல் கட்டு போடப்பட்டிருப்பதைத்தான் காண்கிறோம். ஏழைகளுக்கு இடப்பட்டுள்ள இந்தக் கட்டுகளும் விலக்குகளும் ஒதுக்கல்களும் தடங்கல்களும் அற்பசொற்பமாகவே தோன்றும், முக்கியமாய் இல்லாமையை நேரில் அறிந்திராதோருக்கும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் அவற்றின் வெகுஜன வாழ்வில் என்றுமே நெருங்கிய தொடர்பு கொண்டிராதோருக்கும் (முதலாளித்துவ நூலாசிரியர்களிலும் அரசியல்வாதிகளிலும் பத்தில் ஒன்பது பேர், ஏன் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேர் என்று கூடச் சொல்லலாம், இந்த ரகத்தவரே) இப்படித்தான் அற்பசொற்பமாகவே தோன்றும். ஆனால் ஒட்டுமொத்தத்தில் இந்தக் கட்டுகள் ஏழைகளை அரசியலிலிருந்து, ஜனநாயகத்தில் நேரடியாய்ப் பங்கு கொள்வதிலிருந்து ஒதுக்கி வெளியே தள்ளிவிடுகின்றன.
முதலாளித்துவ ஜனநாயகத்தின் இந்தச் சாராம்சத்தை மார்க்ஸ் மிக நன்றாய் உணர்ந்திருந்தார். கம்யூனுடைய அனுபவத்தை ஆராய்கையில் ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்கும் வர்க்கத்தின் எந்தப் பிரதிநிதிகள், நாடாளுமன்றத்தில் தமது பிரதிநிதிகளாய் அமர்ந்து தம்மை அடக்கியொடுக்க வேண்டுமென்று சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தீர்மானிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்!39
தவிர்க்க முடியாதவாறு குறுகலாகவும், ஏழைகளைத் திருட்டுத்தனமாய் ஒதுக்கித் தள்ளிவிடுவதாகவும், ஆகவே கபடமாகவும் முழுக்க முழுக்கப் பொய்க் கூற்றாகவும் இருக்கும் இந்த முதலாளித்துவ ஜனநாயத்திலிருந்து முன்னோக்கிச் செல்வதற்குரிய வளர்ச்சி, மிதவாதப் பேராசிரியர்களும் குட்டி முதலாளித்துவச் சந்தர்ப்பவாதிகளும் நம்மை நம்ப வைக்க விரும்புவது போல, எளிய முறையிலும் நேரடியாகவும் ஒழுங்காகவும் ‘மேலும் மேலும் கூடுதலான ஜனநாயகத்தை’ நோக்கி நடைபெறுவதில்லை. இல்லை, முன்னோக்கிச் செல்கிற வளர்ச்சியானது, அதாவது கம்யூனிசத்துக்கான வளர்ச்சியானது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் வாயிலாகவே நடைபெறுகிறது, வேறு எவ்வழியிலும் அல்ல. ஏனெனில் முதலாளித்துவச் சுரண்டலாளர்களின் எதிர்ப்பை வேறு யாராலும் அல்லது வேறு எந்த வழியிலும் தகர்த்திட முடியாது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது, அதாவது ஒடுக்குமுறையாளர் களை அடக்குவதற்காக ஒடுக்கப்பட்டவர்களுடைய முன்னணிப் படை ஆளும் வர்க்கமாய் அமையும் ஒழுங்கமைப்பானது ஜனநாயகத்தை விரிவாக்குவதோடு மட்டும் நின்றுவிடக் கூடியதல்ல. ஜனநாயகத்தை பிரம்மாண்டமான அளவில் விரிவாக்குவதுடன், பணமூட்டைகளுக்கான ஜனநாயகமாய் இராது முதன் முதலாய் ஏழைகளுக்கான ஜனநாயகமாய், மக்களுக்கான ஜனநாயகமாய் ஆக்குவதுடன் கூடவே ஒடுக்குமுறையாளர் களும் சுரண்டலாளர்களும் முதலாளிகளுமானோரின் சுதந்திரத்துக்குப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வரிசையாகப் பல கட்டுகளை விதித்திடுகிறது. மனித குலத்தைக் கூலி அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இவர்களை நாம் அடக்கியாக வேண்டும், இவர்களுடைய எதிர்ப்பை வன்முறை கொண்டு நசுக்கியாக வேண்டும். அடக்கியாளுதல் இருக்கும் வரை, பலாத்காரம் இருக்கும் வரை சுதந்திரத்துக்கோ ஜனநாயகத்துக்கோ இடமில்லை என்பது தெளிவு.
பெபெலுக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸ் இதனை மிகச் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார். “பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு தேவைப்படுவது தனது எதிராளிகளை அடக்கி இருத்துவதற்காகவே அன்றி சுதந்திரத்தின் நலன்களுக்காக அல்ல; சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாகியதும் அரசு அரசாய் இருப்பதற்கு முடிவு ஏற்படுகிறது’’ என்று இக்கடிதத்தில் எங்கெல்ஸ் கூறியது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.
மிகப் பெருவாரியான மக்களுக்கு ஜனநாயகம், சுரண்டலாளர்களையும் மக்களின் ஒடுக்குமுறையாளர்களையும் வன்முறை கொண்டு அடக்குதல், அதாவது முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லுகையில் இதுவே ஜனநாயகத்தில் ஏற்படும் மாறுதல்.
கம்யூனிச சமுதாயத்தில்தான் _ முதலாளிகளுடைய எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு, முதலாளிகள் மறைந்து போய், வர்க்கங்கள் இல்லாமற் போய்விடும் (அதாவது, சமுதாயத்தின் உறுப்பினர்களிடையே சமுதாய உற்பத்திச் சாதனங்களுடன் அவர்களுக்குள்ள உறவு சம்பந்தமாய் எந்தப் பாகுபாடும் இல்லாமற் போய்விடும்) அப்பொழுது மட்டும்தான் ‘அரசு… இருப்பதற்கு முடிவு ஏற்படுகிறது’, ‘சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாகிறது.’ அப்பொழுதுதான் மெய்யாகவே முழு நிறைவான ஜனநாயகம், விதிவிலக்கு எதுவுமில்லாத ஜனநாயகம் சாத்தியமாகிக் கைவரப் பெறுகிறது. அப்பொழுதுதான் ஜனநாயகம் உலர்ந்து உதிரத் தொடங்கும். முதலாளித்துவ அடிமை வாழ்விலிருந்தும் முதலாளித்துவச் சுரண்டலின் சகிக்கவொண்ணாத கொடுமைகளிலிருந்தும் மிருகத்தனத்திலிருந்தும் அபத்தங்களிலிருந்தும் இழுக்குகளிலிருந்தும் மக்கள் விடுபட்டு, பல நூறு ஆண்டுகளாய் அறிந்துள்ள ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் அரிச்சுவடி நீதிவிளக்கங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வந்துள்ள சமுதாய ஒட்டுறவின் சர்வ சாதாரண விதிகளைப் பற்றியொழுகச் சிறிது சிறிதாய்ப் பழகிக் கொள்வார்கள். பலாத்காரம் இல்லாமலே, பலவந்தம் இல்லாமலே, கீழ்ப்படிதல் இல்லாமலே, பலவந்தத்துக்கான அரசு எனப்படும் தனிவகை இயந்திரம் இல்லாமலே அவர்கள் இவ்விதிகளைப் பற்றியொழுகப் பழகிக்கொள்வார்கள்.
‘அரசு உலர்ந்து உதிர்கிறது’ என்னும் தொடர் நன்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இத்தொடர் இந்நிகழ்ச்சிப் போக்கின் படிப்படியாய் நடந்தேறும் தன்மை, தன்னியல்பாய்த் தானே நடந்தேறும் தன்மை ஆகிய இரண்டையும் குறிப்பிடுவதாய் உள்ளது. பழக்கத்தால் மட்டுமே இது போன்ற விளைவு ஏற்பட முடியும், ஐயப்பாட்டுக்கு இடமின்றி நிச்சயம் ஏற்படவும் செய்யும். ஏனெனில் சுரண்டல் இல்லாத போது, ஆத்திரம் உண்டாக்கக்கூடியதும் கண்டனத்தையும் கலகத்தையும் எழச் செய்து அடக்க வேண்டியதற்கான தேவையைத் தோற்றுவிப்பதும் இல்லாதபோது, மக்கள் எப்படித் தயக்கமின்றி சமுதாய ஒட்டுறவுக்கு அவசியமான விதிகளைப் பற்றியொழுகப் பழகிக் கொண்டு விடுகிறார்கள் என்பதற்கு லட்சோப லட்சக் கணக்கான எடுத்துக்காட்டுகளை நம்மைச் சுற்றிலும் காண்கிறோம்.
இவ்வாறாக, முதலாளித்துவ சமுதாயத்தில் இருக்கும் ஜனநாயகம் வெட்டிக் குறுக்கப்பட்ட, அலங்கோலமான, பொய்யான ஜனநாயகம்; செல்வந்தர்களுக்கு மட்டுமேயான, சிறுபான்மையோருக்கான ஜனநாயகம். கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லும் காலத்துக்குரிய பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் முதன்முதலாய் மக்களுக்கான, பெரும்பான்மையோருக்கான ஜனநாயகத்தைத் தோற்றுவிக்கிறது. அதனுடன் கூடவே சுரண்டலாளர்களான சிறுபான்மையோரைத் தேவையான அளவுக்கு அடக்கவும் செய்கிறது. மெய்யாகவே முழுநிறைவான ஜனநாயகத்தைத் தோற்றுவிக்க வல்லது கம்யூனிசம் ஒன்று மட்டுமே. எவ்வளவுக்கு எவ்வளவு இது முழு நிறைவானதாய் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சீக்கிரமாய் அது தேவையற்றதாகி தானாகவே உலர்ந்து உதிர்கிறது.
வேறு விதமாய்க் கூறினால், முதலாளித்துவத்தில் அரசெனும் சொல்லின் முறையான அர்த்தத்தைக் குறிக்கும், அதாவது ஒரு வர்க்கம் பிறிதொன்றை, அதுவும் சிறுபான்மையோர் பெரும்பான்மையோரை அடக்குவதற்கான தனிவகைப் பொறியமைவு இருக்கிறது. சுரண்டப்படும் பெரும்பான்மையோரைச் சுரண்டும் சிறுபான்மையோர் முறையாக அடக்குவதென்னும் இத்தகைய செயல் வெற்றி பெற இயற்கையாகவே, அடக்கியொடுக்கும் பணியில் அளவு கடந்த மூர்க்கமும் மிருகத்தனமும் அவசியமாகி விடுகிறது; இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓட வேண்டியதாகி விடுகிறது. இந்த வெள்ளத்தில் நடந்துதான் மனிதகுலம் அடிமைமுறை, பண்ணையடிமை அமைப்பு, கூலியுழைப்பு ஆகியவற்றின் வழியே சென்று கொண்டிருக்கிறது.
மேலும், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கு மாறிச் செல்கையிலும் அடக்க வேண்டியது இன்னும் தேவையாகவே இருக்கிறது. ஆனால் இப்பொழுது அது சுரண்டப்பட்ட பெரும்பான்மையோர் சுரண்டும் சிறுபான்மையோரை அடக்குவதாகிறது. அடக்குவதற்கான ஒரு தனிவகை இயந்திரம், ஒரு தனிவகைப் பொறியமைவு, ‘அரசு’, இன்னமும் தேவையாகவே இருக்கிறது, ஆனால் இப்பொழுது அது மாறிச் செல்லும் கட்டத்துக்குரிய அரசாய் அமைகிறது. அரசென்னும் சொல்லின் சரியான பொருளில் இனி அது அரசாய் இல்லை. ஏனெனில் சிறுபான்மையோரான சுரண்டலாளர்களை நேற்றைய கூலி அடிமைகளான பெரும்பான்மையோர் அடக்குவது ஒப்பளவில் மிகச் சாதாரணமான, எளிதான, இயற்கையான பணி ஆகுமாதலால், அடிமைகள் அல்லது பண்ணையடிமைகள் அல்லது .கூலி உழைப்பாளர்களின் எழுச்சிகளை அடக்குவதற்கு வேண்டியிருந்ததைப் போலல்லாது மிகச் சொற்ப அளவே இரத்தம் சிந்தும்படி இருக்கும், மனித குலத்துக்கு மிகச் சொற்ப சேதமே உண்டாகும். ஜனநாயகத்தை மிகவும் விரிவாக்கி மக்களில் மிகப் பிரம்மாண்டமான பெரும்பான்மையோருக்குக் கிட்டச் செய்வது இப்பணிக்கு ஒவ்வாததல்ல ஆதலால், அடக்குவதற்கான ஒரு தனிவகைப் பொறியமைவின் தேவை மறையத் தொடங்கிவிடும். இயல்பாகவே சுரண்டலாளர்களால் மிகச் சிக்கலான பொறியமைவு ஒன்று இல்லாமல் மக்களை அடக்க முடியவில்லை. ஆனால் மக்களால் மிக எளிய ‘பொறியமைவு’ கொண்டே, சுரண்டலாளர்களை அடக்கிவிட முடியும்; பெருமளவுக்குப் ‘பொறியமைவு’ இல்லாமலே, ஒரு தனிவகை இயந்திரம் இன்றியே, சாதாரண ஏற்பாடான ஆயுதமேந்திய மக்களின் ஒழுங்கமைப்பைக் கொண்டே (தொழிலாளர்கள், படையாட்கள் பிரதிநிதிகளது சோவியத்துகளைப் போன்ற ஒழுங்கமைப்பு என்று முன்னோடிச் சென்று வரப்போவதைக் குறிப்பிடலாம்), இப்பணியைச் செய்துவிடலாம்.
முடிவில், கம்யூனிசம் ஒன்று மட்டும்தான் அரசை அறவே தேவையற்றதாக்கும். ஏனெனில் கம்யூனிசத்தில் அடக்கப்பட வேண்டியவர்கள் யாரும் இல்லை \ ஒரு வர்க்கம் என்ற அர்த்தத்தில், மக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு எதிராய் முறையான போராட்டம் நடத்துவது என்ற அர்த்தத்தில் ‘யாரும் இல்லை’. நாங்கள் கற்பனாவாதிகளல்ல; தனிநபர்கள் அடாச்செயல்கள் புரியக்கூடும், இது சாத்தியமே, தவிர்க்க முடியாததே என்பதையோ, இத்தகைய அடாச் செயல்களைத் தடுத்து நிறுத்துவது அவசியமே என்பதையோ நாங்கள் ஒரு போதும் மறுக்கவில்லை. ஆனால் முதலாவதாக, அடக்குவதற்கான ஒரு தனிவகைப் பொறியமைவு, ஒரு தனிவகை இயந்திரம் இதற்குத் தேவையில்லை; ஆயுதமேந்திய மக்கள் தாமே இதனைச் செய்துவிடுவார்கள் _ நாகரிகமடைந்த மக்கள் திரள் எதுவும் நவீன சமுதாயத்தில் உடனே தலையிட்டு அடிதடிச் சண்டையை நிறுத்துவது போல, அவர்கள் இதனைச் சுலபமாகவும் உடனடியாகவும் செய்து விடுவார்கள். இரண்டாவதாக, சமுதாய ஒட்டுறவுக்குரிய விதிகளை மீறுவதால் வரும் விளைவான இந்த அடாச்செயல்களின் அடிப்படை சமுதாயக் காரணம் மக்கள் உட்படுத்தப்பட்டுள்ள சுரண்டலும் அவர்களை வதைக்கும் இல்லாமையும் வறுமையுமேதான் என்று நமக்குத் தெரியும். இந்தப் பிரதான காரணம் நீக்கப்பட்டதும் அடாச்செயல்கள் தவிர்க்க முடியாதவாறு ‘உலர்ந்து உதிரத்’ தொடங்கிவிடும். எவ்வளவு விரைவாய், எந்த வரிசையில் நடந்தேறும் என்பது தெரியாது, ஆனால் அவை உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பது நமக்குத் தெரியும். அவை உலர்ந்து உதிரும்போது அரசும் உலர்ந்து உதிரும்.
கற்பனாவாதப் படைப்புகளை எழுப்பாமல், மார்க்ஸ் இந்த வருங்காலத்தைப் பற்றி இப்பொழுது வரையறுத்துச் சொல்லக்கூடியதை, அதாவது கம்யூனிச சமுதாயத்தின் கீழ்க் கட்டத்துக்கும் உயர் கட்டத்துக்கும் (படிகள், நிலைகள்) இடையிலுள்ள வேறுபாட்டை மேலும் பூரணமாய் வரையறுத்துச் சொன்னார்.