மார்க்சின் போதனைக்குத் தற்போது என்ன நேர்ந்து வருகிறதோ, அதுவேதான் விடுதலைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட வர்க்கங் களுடைய புரட்சிகரச் சிந்தனையாளர்களும் தலைவர்களுமானோரின் போதனைகளுக்கு வரலாற்றிலே அடிக்கடி நேர்ந்துள்ளது. ஒடுக்கும் வர்க்கங்கள் மாபெரும் புரட்சியாளர்களை அவர்களுடைய வாழ்நாளில் ஓயாமல் வேட்டையாடின; அவர்களுடைய போதனைகள் மீது காட்டுத்தனமான காழ்ப்பும் வெறித்தனமான வெறுப்பும் கொண்டு கயமையான பொய்ப் பிரசார அவதூறு இயக்கம் நடத்தின. அவர்கள் இறந்த பிற்பாடு அவர்களை அபாயமற்ற பூஜையறைப் படங்களாக்கி வழிபாட்டுக்குரியோராக்கவும், ஓரளவு அவர்களுடைய பெயர்களைப் புனிதத் திருப்பெயர்களாக்கவும் முயற்சிகள் செய்யப்படுகின்றன, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை ‘ஆன்ம திருப்தி’ பெறச் செய்வதும், அவற்றை ஏமாற்றுவதும், அதே போதில் புரட்சிப் போதனையிடமிருந்து அதன் சாரப் பொருளைக் களைந்து, அதன் புரட்சி முனையை மழுங்கடித்து, அதைக் கொச்சைப் படுத்துவதும்தான் இந்த முயற்சிகளின் நோக்கம். முதலாளித்துவ வர்க்கத்தாரும் தொழிலாளர் இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும் இன்று மார்க்சியத்தை இவ்வாறு ‘பதனம் செய்வதில்’ ஒன்றுபடுகிறார்கள். இந்தப் போதனையின் புரட்சித் தன்மையை, இதன் புரட்சி ஆன்மாவை அவர்கள் விட்டொழிக்கவோ, மூடி மறைக்கவோ, திரித்துப் புரட்டவோ செய்கிறார்கள். முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடையதை, அல்லது ஏற்புடையதாய்த் தோன்றுவதை முதன்மையானதாய் முன்னிலைக்குக் கொண்டுவந்து மெச்சிப் புகழ்கிறார்கள். சமூக- தேசிய வெறியர்கள் எல்லோருமே இப்பொழுது ‘மார்க்சியவாதிகள்’ ஆகிவிட்டனர் (சிரிக்க வேண்டாம்!). ஜெர்மன் முதலாளித்துவ அறிஞர்கள்_நேற்று வரை மார்க்சியத்தை அழித்தொழிக்கும் நிபுணர்களாய் இருந்தவர்கள்_மார்க்ஸ் ‘ஜெர்மன் தேசத்தவர்’ என்பதாய் அடிக்கடி பேசுகிறார்கள்; கொள்ளைக்கார யுத்தம் புரிவதற்கு இவ்வளவு திறம்பட ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் தொழிற் சங்கங்களுக்குப் போதமளித்தவர் என்பதாய் முழங்குகிறார்கள்!
மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலைமையில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு என்னும் பொருள் குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவதே நமது தலையாய கடமை. இதற்கு, நேரடியாக மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களிலிருந்து நீண்ட பல மேற்கோள்கள் தருவது இன்றியமையாதது. நீண்ட பல மேற்கோள்கள் வாசகத்தைக் கடினமாக்கிவிடும், சுவையாகவும் எளிதாகவும் பலரும் படிக்கத்தக்க வாசகமாக்குவதற்குத் தடையாகிவிடும் என்பது மெய்தான். ஆயினும் இம்மேற்கோள்களைத் தவிர்ப்பது சாத்தியமன்று. மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் அரசு என்னும் பொருள் குறித்துக் காணப்படும் எல்லாப் பகுதிகளையும், அல்லது அத்தியாவசியமான எல்லாப் பகுதிகளையாவது கூடுமான வரை முழு அளவில் எப்படியும் மேற்கோளாய்க் கொடுத்தாக வேண்டும். அப்பொழுதுதான் விஞ்ஞான சோஷலிசத்தின் மூலவர்களுடைய கருத்துக்களின் முழுப் பரிமாணத்தையும், அவற்றின் வளர்ச்சியையும் பற்றி வாசகர்கள் சுயேச்சையான ஓர் அபிப்பிராயத்தை வந்தடைய முடியும்; இக்கருத்துக்கள் தற்போது மேலோங்கி விட்ட ‘காவுத்ஸ்கி வாதத்தால்’ திரித்துப் புரட்டப்பட்டிருப்பதை ஆவண ஆதாரத்தால் நிரூபித்து, கண்கூடாய்ப் புலப்படுத்த முடியும். எங்கெல்சின் நூல்களில் மிகவும் பெயர் பெற்றதான ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்பதிலிருந்து தொடங்குவோம், இந்நூலின் ஆறாம் பதிப்பு 1894_லேயே ஷ்டுட்கார்ட் நகரில் வெளியிடப்பட்டது, ருஷ்ய மொழிபெயர்ப்புகள் ஏராளம் இருப்பினும் பெரும்பாலும் அரைகுறையாகவோ, சிறிதும் திருப்தியளிக்காதவையாகவோ இருப்பதால், ஜெர்மன் மூலங்களிலிருந்து மேற்கோள்களை மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது.
வரலாற்று வழிப்பட்ட தமது பகுத்தாய்வினைத் தொகுத்தளித்து எங்கெல்ஸ் கூறுவதாவது: “ஆகவே அரசானது எவ்வகையிலும் வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது வலுக்கட்டாயமாய் இருத்தப்பட்ட சக்தியல்ல; இதே போல் அது எவ்வகையிலும் ஹெகல் வலியுறுத்தும் ‘அறநெறிக் கருத்தின் எதார்த்த உருவோ’, ‘அறிவின் பிம்பமும் எதார்த்தமுமோ’ அல்ல. மாறாக, சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தச் சமுதாயம் தன்னுடனான தீராத முரண்பாட்டில் சிக்கிக் கொண்டுவிட்டது, இணக்கம் காண முடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டுவிட்டது, இந்தப் பகைமை நிலையை அகற்றத் திறணற்றதாகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகைச் சக்திகள், முரண்பட்டு மோதிக் கொள்ளும் பொருளாதார நலன்களைக் கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமுதாயத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, மோதலைத் தணித்து ‘ஒழுங்கின்’ வரம்புகளுக்குள் இருத்தக்கூடிய ஒரு சக்தியை, வெளிப்பார்வைக்குச் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியை நிறுவுவது அவசியமாயிற்று. சமுதாயத்திலிருந்து உதித்ததானாலும் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக் கொண்டு மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும் இந்தச் சக்தியே அரசு எனப்படுவது’’ (ஆறாவது ஜெர்மன் பதிப்பு, பக்கங்கள் 177_78).3
அரசின் வரலாற்றுப் பாத்திரம் குறித்தும், அரசு என்றால் என்ன என்பது குறித்தும் மார்க்சியத்தின் அடிப்படைக் கருத்தை இது தெள்ளத் தெளிவாய் எடுத்துரைக்கிறது. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு. எங்கே, எப்பொழுது, எந்த அளவுக்கு வர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம் காண முடியாதவை ஆகின்றனவோ, அங்கே, அப்பொழுது, அந்த அளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர் மறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானது வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவையாய் இருத்தலை நிரூபிக்கிறது.
மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டும் போக்கு மிகவும், முக்கியமான, அடிப்படையான இந்த விவகாரத்திலிருந்து தான் தொடங்கி இரு பிரதான வழிகளில் செல்கிறது.
ஒரு புறத்தில், முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும், குறிப்பாய்க் குட்டி முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும், எங்கே வர்க்கப் பகைமைகளும் வர்க்கப் போராட்டமும் உள்ளனவோ அங்கு மட்டுமே அரசு இருக்கிறதென்பதை மறுக்க முடியாத வரலாற்று உண்மைகளின் நிர்ப்பந்தம் காரணமாய் ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதற்கான உறுப்பே அரசு என்று தோன்றும் வண்ணம் மார்க்சுக்குத் ‘திருத்தம்’ கூறுகிறார்கள். வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்க முடிந்திருந்தால். மார்க்சின் கருத்துப்படி அரசு உதித்தும் இருக்க முடியாது, தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கவும் முடியாது. அற்பவாதக் குட்டி முதலாளித்துவப் பேராசிரியர்களும் நூலாசிரியர்களும் கூறும் கருத்துப்படி_அருள் கூர்ந்த அவர்கள் அடிக்கடி மார்க்சை ஆதாரங் காட்டுகிறார்கள்_அரசானது வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதாய்த் தோன்றுகிறது. மார்க்சின் கருத்துப்படி வர்க்க ஆதிக்கத்துக்கான ஓர் உறுப்பே, ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான ஓர் உறுப்பே அரசு; வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை மட்டுப்படுத்துவதன் வாயிலாய் இந்த ஒடுக்குமுறையைச் சட்ட முறையாக்கி, நிரந்தரமாக்கிடும் ‘ஒழுங்கை’ நிறுவுவதே அரசு. ஆனால் குட்டி முதலாளித்துவ அரசியல்வாதிகளின் அபிப்பிராயத்தில், ஒழுங்கு என்றால் ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதல்ல, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதே ஒழுங்கு; மோதலை மட்டுப்படுத்துவது என்றால் ஒடுக்குவோரைக் கவிழ்ப்பதற்கான குறிப்பிட்ட போராட்ட சாதனங்களையும் முறைகளையும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடமிருந்து பறிப்பதல்ல, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதே மோதலை மட்டுப்படுத்துவது.
உதாரணமாய், 1917_ஆம் ஆண்டுப் புரட்சியின் போது அரசின் முக்கியத்துவத்தையும் பாத்திரத்தையும் பற்றிய பிரச்சனை உடனடிச் செயல்_அதுவும் வெகுஜன அளவிலான செயல்_தேவைப்பட்ட நடைமுறைப் பிரச்சனையாய் அதன் முழுப் பரிமாணத்திலும் எழுந்த போது, எல்லா சோஷலிஸ்-டு_புரட்சியாளர்களும்4 மென்ஷிவிக்குகளும்5 ‘அரசானது’ வர்க்கங்களிடையே ‘இணக்கம் உண்டாக்குகிறது’ என்னும் குட்டி முதலாளித்துவத் தத்துவத்துக்கு உடனே சரிந்து சென்று விட்டனர். இவ்விரு கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளுடைய எண்ணற்ற தீர்மானங்களும் கட்டுரைகளும் இந்த அற்பத்தனமான குட்டி முதலாளித்துவ ‘இணக்கம் காணும்’ தத்துவத்திலே மூழ்கித் திளைத்தன. குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின், தனது எதிர் சக்தியுடன் (தன்னை எதிர்க்கும் வர்க்கத்துடன்) இணக்கம் கொள்ள முடியாததாகி விட்ட குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கான ஓர் உறுப்பே அரசு என்பது குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் ஒருபோதும் புரிந்து கொள்ள இயலாத ஒன்றாகும். எமது சோஷலிஸ்டுப் புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் சோஷலிஸ்டுகளே அல்ல (போல்ஷிவிக்குகளாகிய நாம் எப்பொழுதுமே கூறி வந்துள்ள விவரம் தான் இது), ஓரளவு சோஷலிசப் பதங்களைப் பிரயோகிக்கும் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளேயன்றி வேறல்ல என்பதற்கு, அரசு சம்பந்தமாய் அவர்கள் அனுசரிக்கும் போக்கு மிகவும் எடுப்பான எடுத்துக்காட்டுகளில் ஒன்று.
மறுபுறத்தில், மார்க்சியத்தைப் பற்றிய ‘காவுத்ஸ்கி வாதப்’ புரட்டு இன்னும் நுண்ணயம் வாய்ந்தது. அரசானது வர்க்க ஆதிக்கத்துக்கான ஓர் உறுப்பு என்பதையோ, வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை என்பதையோ ‘தத்துவார்த்தத்தில்’ இப்புரட்டு மறுப்பதில்லை. ஆனால் அது பாராமுகமாய் விட்டொழிப்பது அல்லது பூசி மெழுகிச் செல்வது இதுதான்: வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆகியதன் விளைவே அரசு என்றால், அது சமுதாயத்துக்கு மேலானதாய் நின்று ‘மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும்’ சக்தியாகும் என்றால், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலை பலாத்காரப் புரட்சியின்றி சாத்தியமில்லை என்பதோடு, ஆளும் வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்டதும் ‘அயலானாய் இருக்கும்’ இந்நிலையின் உருவகமானதும் ஆன அரசு அதிகாரப் பொறியமைவை அழித்திடாமலும் இந்த விடுதலை சாத்தியமில்லை என்பது தெளிவு. தத்துவார்த்த வழியில் தானாகவே வெளிப்படும் இந்த முடிவினைப் புரட்சியின் கடமைகளைப் பற்றிய ஸ்தூலமான வரலாற்று வழிப்பட்ட பகுத்தாய்வின் அடிப்படையில் திட்டவட்டமாய் எடுத்துரைத்தார் மார்க்ஸ்_இதனை நாம் பிற்பாடு காணப் போகிறோம். இந்த முடிவைத் தான்_பிற்பாடு நாம் விவரமாய்க் காட்டப் போவது போல_காவுத்ஸ்கி ‘மறந்துவிடுகிறார்’, திரித்துப் புரட்டுகிறார்.