அரசு பற்றிய பிரச்சனை தத்துவத்திலும் நடைமுறை அரசியலிலும் இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஏகபோக முதலாளித்துவமானது அரசு ஏகபோக முதலாளித்துவமாய் மாற்றப்படும் நிகழ்ச்சிப் போக்கை ஏகாதிபத்திய யுத்தம் அளவு கடந்த வேகமும் தீவிரமும் பெறச் செய்திருக்கிறது. அனைத்து வல்லமை கொண்ட முதலாளித்துவக் கூட்டுகளுடன் மேலும் மேலும் இணைந்து ஒன்றிவரும் அரசானது உழைப்பாளி மக்களை அசுரத்தனமாய் ஒடுக்குவது மேலும் மேலும் அசுரத்தனமானதாகி வருகிறது. முன்னேறிய நாடுகள்_-அவற்றின் ‘உட்பகுதி’களைக் குறிப்பிடுகிறோம்_-தொழிலாளர்களுக்கு இராணுவக் கடுங்காவல் சிறைக் கூடங்களாகி வருகின்றன.
நீடிக்கும் யுத்தத்தின் முன்னெப்போதும் கண்டிராத கொடுமைகளும் துயரங்களும் மக்களுடைய நிலையைப் பொறுக்க முடியாததாக்கி அவர்களுடைய சீற்றத்தை உக்கிரமடையச் செய்கின்றன, உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி முற்றி வருவது தெளிவாய்த் தெரிகிறது. அரசின்பால் இதற்குள்ள போக்கு பற்றிய பிரச்சனை நடைமுறை முக்கியத்துவமுடையதாகி வருகிறது.
ஒப்பளவில் சமாதான வழியிலான வளர்ச்சி நடைபெற்ற கடந்த பல பத்தாண்டுகளில் திரண்டு பெருகிய சந்தர்ப்பவாதத்தின் கூறுகள் சமூக_-தேசிய வெறிப் போக்கினை உருவாக்கி அதற்கு ஊட்டமளித்திருக்கின்றன. இப்போக்கு உலகெங்கும் அதிகாரபூர்வமான சோஷலிஸ்டுக் கட்சிகளில் கோலோச்சுகிறது. சொல்லளவில் சோஷலிசம், செயலில் தேசியவெறி இதுதான் இப்போக்கு (ருஷ்யாவில் பிளெஹானவ், பத்ரேசவ், பிரெஷ்கோவ்ஸ்கயா, ருபனோவிச், ஓரளவு மறைமுகமான வடிவில் த்ஸெரெத்தேவி, செர்னோவ் வகையறாக்கள்; ஜெர்மனியில் ஷெய்டெமன், லெகின், டேவிட் மற்றும் பலர்; பிரான்சிலும் பெல்ஜியத்திலும் ரெனொடேல், கெட்டு, வண்டர்வேல்டே; இங்கிலாந்தில் ஹைண்ட்மன், ஃபேபியன்கள்,2 இத்தியாதி). ‘சோஷலிசத்தின் தலைவர்கள்’ ‘தமது’ தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கு மட்டுமின்றி “தமது’’ அரசின் நலன்களுக்கும் அடிபணிந்து இழிவுற்றுத் தொண்டூழியம் புரிவோராய் மாற்றமடைவது இந்தப் போக்கின் தனி விசேஷமாகும். வல்லரசுகள் எனப்படுவனவற்றில் பெரும்பாலானவை நெடுங்காலமாய் மிகப் பல சிறிய பலவீன இனங்களைச் சுரண்டியும் அடிமைப்படுத்தியும் வந்திருக்கின்றன, ஏகாதிபத்திய யுத்தம் இவ்வகைக் கொள்ளையைப் பகிர்ந்து கொள்வதற்கும் மறுபங்கீடு செய்வதற்குமான யுத்தமாகும். ‘அரசு’ குறித்த சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல், பொதுவில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும், குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று.
முதற்கண், அரசு பற்றிய மார்க்ஸ், எங்கெல்ஸ் போதனையைப் பரிசீலிக்கிறோம். இந்தப் போதனையில் கவனியாது புறக்கணிக்கப்பட்டிருக்கும் அல்லது சந்தர்ப்பவாத முறையில் திரித்துப் புரட்டப்பட்டிருக்கும் கூறுகளை மிகவும் முக்கியமாய் விளக்குகிறோம். அடுத்து, இந்தப் புரட்டல்களுக்குப் பிரதான காரணஸ்தராகிய கார்ல் காவுத்ஸ்கி குறித்து _ நடப்பு யுத்தத்தின்போது கையாலாகாததாகிப் பரிதாப முடிவை எய்தியிருக்கும் இரண்டாவது அகிலத்தின் (1889_1914) பிரபல தலைவர் அவர் _ தனிப்பட விவாதிக்கிறோம். இறுதியில், 1905_ஆம் ஆண்டு, இன்னும் முக்கியமாய் 1917_ஆம் ஆண்டு ருஷ்யப் புரட்சிகளது அனுபவத்தின் பிரதான முடிவுகளைத் தொகுத்துக் கூறுகிறோம். 1917_ஆம் ஆண்டின் ருஷ்யப் புரட்சி இப்போழுது (1917 ஆகஸ்டுத் தொடக்கம்) அதன் வளர்ச்சியினுடைய முதற் கட்டத்தின் இறுதியை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது மொத்தத்தில் இந்தப் புரட்சியை ஏகாதிபத்திய யுத்தத்தின் காரணமாய் மூளும் சோஷலிசப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் கோவையில் ஓர் இணைப்பாய் அன்றி வேறு எவ்விதத்திலும் புரிந்து கொள்ள முடியாது, ஆகவே அரசின் பால் சோஷலிசப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள்ள போக்கு குறித்த பிரச்சனை நடைமுறை அரசியல் முக்கியத்துவம் மட்டுமின்றி, இன்றைய மிக அவசர அவசியப் பிரச்சனை ஒன்றாகவும்_முதலாளித்துவக் கொடுங்கோன்மையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வெகுஜனங்கள் கூடிய சீக்கிரத்தில் என்ன செய்ய வேண்டியிருக்கும் என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லும் பிரச்சனையாகவும்_முக்கியத்துவம் பெற்று வருகிறது.
ஆசிரியர் 1917 ஆகஸ்டு