என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ஆங்……கொட்டாய் வாசலில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். உங்களை மாதிரிதான் நானும் எங்களுக்காக அவர் காத்திருக்கிறார் என்று நினைத்தேன். எங்களைப் பார்த்ததும் எழுந்து நின்றார். அவர் எழுந்து நிற்கக் காரணம் என் புடவை என்றால் நம்புவீர்களா? நிஜம். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
அன்று நான் கட்டிக்கொண்டிருந்தது வெள்ளையில் லைட்டாகப் பூப்போட்ட காட்டன் புடவை. நன்றாக ஸ்டார்ச் செய்து பெட்டி போட்டு மொடமொடவென்று இருந்தது அந்தப் புடவை. எழுந்து நின்றவரைப் பார்த்து எங்கள் சித்தியா சொன்னார்: ‘ஒக்காருப்பா, ஒக்காரு. எழுந்தெல்லாம் நிற்கவேண்டாம். சீட்டு போட்டிருக்கியா?’ என்ற கேள்வியுடன் எங்களைப் பெருமையாகப் பார்த்தார். இந்த ஊர்ல என் செல்வாக்கு எப்படி? என்று. அந்த ஆள் சொன்ன பதில் எல்லோரையும் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ‘அட! உங்களப் பார்த்து யார் ஸார் எழுந்தது? இந்த அம்மாவ தூரத்துலேருந்து பார்க்கும்போது வெள்ளை பொடவ கட்டிக்கிட்டு கலெக்டர் மாதிரி தெரிஞ்சாங்க. அதான்….!’ வாண்டுகளுக்கெல்லாம் சந்தோஷம் தாங்கவில்லை. ‘ஹை! கலெக்டர் மன்னி! கலெக்டர் மன்னி!’ என்று என்னைச்சுற்றி வந்து கும்மி அடிக்காத குறை! ‘அப்போ அண்ணா யாரு?’ ‘டவாலி!’ என்றது ஒரு விஷம வாண்டு. ‘சூ! அப்படியெல்லாம் சொல்லக்கூடாது!’ என்று நானே அடக்கினேன்.
ஆனாலும் இந்த வாண்டுகள் ரொம்பத்தான் பேசுகின்றன. கொட்டாய்க்கு வரும் வழியில் முதல் பெண் – பத்து வயசிருக்கும் கேட்டது:’மன்னி உங்களுக்கு கல்யாணம் ஆனவுடனே பார்த்த முதல் சினிமா எது?’ என்று.
‘ஊட்டி வரை உறவு’ என்றேன். ‘ஐயையோ அப்போ ஊட்டிக்குப் போகாதேங்கோ’ ‘ஏண்டி?’
‘உறவு முடிஞ்சுடுமே!’ ஊட்டி வரைக்கும் தானே உறவு!’ எனக்கு ஒரு மாதிரி இருந்தாலும் சின்ன மாமியார் குழந்தைகள். ஒண்ணும் சொல்லக்கூடாது என்று சும்மா இருந்தேன். அதைப் பார்த்து அடுத்த பெண்,
’ஏய் மாலா! மன்னிக்கு ஓம் மேல கோவம்! பாரு பேசாம வரா!’ என்றது.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. ‘எனக்கு யார் மேலேயும் கோவம் இல்லம்மா!’ என்றேன். நண்டு சிண்டுகள் எங்கேயாவது சிண்டு முடிந்து விடப்போகிறதுகளே என்று பயம்!
நல்லகாலம் கொட்டாய் வந்துவிட்டது. பேச்சும் முடிந்தது. இங்கே வந்தால் கலெக்டர் வரவேற்பு. என் கணவர் வாண்டுகளிடம் சொன்னார்: ‘மன்னி ரெண்டாவது தடவையா கலெக்டர் ஆயிருக்கா!’ என்று. ஏற்கனவே வாண்டுகள் ‘கெக்கேபிக்கே’ன்னு சிரிக்கறதுகள். இவர் வேற என்று நினைத்துக்கொண்டேன்.
ஒருமுறை ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போயிருந்தோம். கோவிலில் அதிகம் கூட்டமில்லை. கருட மண்டபம் தாண்டி உள்ளே நுழைந்தோம். என் கணவர், குழந்தைகள், என் அத்திம்பேர் எல்லோருமாகத் தான் போனோம். அவர்கள் எல்லோரும் பேசிக் கொண்டே வர எனக்கு துவஜஸ்தம்பத்தின் அருகே இருக்கும் ஆஞ்சநேயரை சேவிக்க வேண்டும். அதனால் முன்னால் போய்கொண்டிருந்தேன். என்னைப்பார்த்தவுடன் அந்த டவாலி விருட்டென்று ஒரு சல்யூட் அடித்தார். நான் தூக்கி வாரிப்போட்டுக் கொண்டு பின்னால் திரும்பிப் பார்த்தேன். பின்னால் வந்துகொண்டிருந்த என் அத்திம்பேர் ‘பகபக’ன்னு சிரிச்சுண்டே சொன்னார்: ’ரஜினியை கலெக்டர் கரியாலின்னு நினைச்சுட்டாரு போல!’ என்று. உடனே டவாலியும் அசடு வழியச் சிரித்துக் கொண்டே ‘நீங்க கலெக்டர் அம்மா இல்லையா? மன்னிச்சுக்குங்க!” என்றார். ‘உத்தியோகத்திலேயே இல்லாத இந்த அம்மாவை ஒரு நொடில கலெக்டர் ஆக்கிட்ட! உனக்கு இவங்க தாங்க்ஸ் தான் சொல்லணும்’ என்று என் அத்திம்பேர் ஜோக்கடித்தார்.
பரவாயில்லை இந்த வெள்ளைப் புடைவை நமக்கு கலெக்டர் பதவியைக் கொடுக்கிறது ஒவ்வொரு தடவை இதைக் கட்டிக் கொள்ளும்போதும் என்று நினைத்துக் கொண்டேன். வாண்டுகளுக்கு இன்னும் சிரிப்பு அடக்கமுடியாமல் போயிற்று.
என்ன சினிமா பார்த்தோம் என்று இப்போது நினைவில்லை.
(தொடரும்)