படம் பார்த்தாதானே என்ன படம்னு நினைவிருக்கும்? படம் பார்க்கவிடாமல் நண்டு சிண்டுகள் கொட்டம் அடித்தன. கொட்டாய் உள்ளே நுழைந்து ‘பெஞ்சு’ சீட்டுக்கு போனோமோ இல்லையோ, ‘நான் மன்னி பக்கத்துல’, ‘நான் மன்னி பக்கத்துல’ என்று முட்டி மோதி ஒண்ணோட ஒண்ணு சண்டை. ‘நா நடுவுல உக்காந்துக்கறேன், நீங்க என் ரெண்டு பக்கத்துலயும் உக்காருங்கோ’ என்றால் என் பெண் ‘ஹோ’ என்று அழுகை. ‘நாந்தான் ஒன் கப்பத்துல (பக்கத்துல) என்று. ஒரு வழியா பெஞ்சின் ஒரு கோடியில் என் அகத்துக்காரர். இந்த கோடியில் நான். நடுவில் ஐந்து வாண்டுகள். எனக்கு அப்புறம் என் பெண். என் அகத்துக்காரருக்கு அந்தப் பக்கம் சித்தியா.
கொட்டாய் உள்ளே போறதுக்கு முன்னால நடந்துதே ஒரு கூத்து அதைச் சொல்லலையே. எழுந்து நின்ற ஆள் சீட்டு உள்ள போடல என்று தெரியவந்ததும் வாண்டுகள் ‘நா போய் இடம் பிடிக்கிறேன்; நா போய் எடம் பிடிக்கிறேன்’ என்று ஒரே சத்தம். சித்தியா ஒரு அதட்டல் போட்டார். கொஞ்சம் அமைதி. என் குழந்தைக்கோ இவர்கள் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்து ஒரே சிரிப்பு. என் இடுப்பில் உட்கார்ந்து கொண்டு குதிகுதின்னு குதிச்சுண்டிருந்தா. என் அகத்துக்காரர் சித்தியாவிடம் ‘நா டிக்கட் வாங்கறேன்’ ன்னு பர்ஸை எடுத்தார். ‘அண்ணா சேர் வாங்குங்கோ…. அண்ணா….!’ என்று எல்லாம் கோரஸ்ஸாக சொன்னதுகள். ‘அம்மாவோட வந்தா நாங்கள்ளாம் தரை டிக்கட்டுல தான் படம் பார்ப்போம். மணலை குமிச்சி வெச்சி அதும்மேல உக்காந்துண்டு படம் பார்ப்போம். கண்ணம்மா (சித்தியின் கடைசிக் குழந்தை) தூங்கியே போய்டுவா!’
‘மன்னி மெட்ராஸ். அதனாலே அண்ணா சேர்தான் வாங்குவார்’ என்று என்னைப்பார்த்து சிரித்தபடியே பெரியவன் சொன்னான்.
‘மெட்ராஸ் மெட்ராஸ்’ அப்படிங்கறது பாராட்டா, கேலியான்னு எனக்குப் புரியல. ஸ்ரீரங்கம் போனாலும் எல்லோரும் எங்களை ஒருமாதிரிதான் பார்ப்பார்கள். அதுவும் கொள்ளிடத்திற்குக் குளிக்கப் போனா நாங்கள் எல்லாம் கட்டிண்டு வந்த துணியோட ஆத்துல உக்காறத பார்த்து ஒரு நமுட்டு சிரிப்புடன், ‘பட்டணத்துலேருந்து வரேளா’ என்று அங்கருக்கற மாமிகளெல்லாம் கேலியா கேட்பா. அவா மாதிரி எங்களுக்கு ஒரு துண்டை கட்டிண்டு இடுப்புப் புடவையை தோய்ச்சுக் கட்டிக்கற வித்தை தெரியாது அதனால. இங்க இந்த குழந்தைகளும் மெட்ராஸ்ன்னு சிரிக்கறதுகளே! மெட்ராஸ்காரான்னா இளப்பமா?
டிக்கட் வாங்கின உடனே ‘உள்ள போலாம், உள்ள போலாம்’ ன்னு அமர்க்களம்.
‘படம் ஆரம்பிச்சிருக்குமா?’
‘ஊஹும். முதல்ல பீடி, சிகரெட் விளம்பரம். அப்புறம் அரசாங்க செய்திச் சுருள் வரும். ‘அஸ்ஸாமில் வெள்ளம்’, பஞ்சாபில் பஞ்சம்’ அப்படின்னு. அதுவும் சரியாத் தெரியாது. பிலிம் முழுக்க மழையா இருக்கும்!’
‘மழையா?’
‘ஆமா, மன்னி ஒரே பிலிம காமிச்சு காமிச்சு தேஞ்சு போயிருக்கும்!’
பரவாயில்ல. பசங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. ‘சீவா பசங்களா கொக்கா?’ என்றார் என் அகத்துக்காரர் என் மனசப் படிச்சா மாதிரி.
அதற்குள் ஒரு வாண்டு திடீரென நினைவிற்கு வந்தது போல சொல்லித்து: ‘போனதடவ ஒரு கேலிப்படம் காமிச்சா. அதுல ஒரு மாமா முண்டாசெல்லாம் கட்டிண்டு ரயில்ல வருவா. தன்னோட ஊர் வந்தவுடனே – ரயில் அவா ஊருல நிக்காது – அதனால ரயில்ல இருக்கற செயினப் பிடிச்சு இழுத்துடுவா. ரயில் நின்னவுடனே ஜாலியா விசில் அடிச்சுண்டே ரயில்ல இருந்து இறங்கி நடந்து போவா. அப்போ ஒரு கை நீளமா பின்னாலேருந்து வந்து அந்த மாமாவோட கழுத்தைப் பிடிச்சு அழைச்சுண்டு போயி, ஜெயில்ல போடும்…! செயினைப் பிடிச்சு இழுக்கக் கூடாதுன்னு எழுதிக் காட்டுவா’.
‘மன்னி நீங்க அந்தப் படம் பார்த்திருக்கேளா? மெட்ராஸ்ல அதெல்லாம் காட்டுவாளா?’
‘ம்ம்ம்…. காட்டுவா…’ என்றேன். அப்போது இந்தக் கேலிச்சித்திரம் தொலைக்காட்சிகளில் வந்துகொண்டிருந்தது.
ஒரு வழியா உள்ள போயி உக்காந்துண்டோம். அங்கே ஒரு அமர்களம் ஆச்சு. உண்மையிலேயே குழந்தைகள் சொன்னா மாதிரி அரசாங்கச் செய்திச் சுருள், செயினைப் பிடிச்சு இழுக்கற ஆள் என்று எல்லாப்படங்களுக்கு காண்பித்தார்கள். எனக்குக் கதை சொன்ன வாண்டு ரொம்பவும் என்ஜாய் பண்ணிண்டு ‘கிலுகிலு’ வென்று சிரித்துக் கொண்டிருந்தது. படத்தைவிட இதுகளைப் பார்க்கிறது எனக்கு பெரிய எண்டர்டெயின்மென்ட் ஆக இருந்தது.
இடைவெளில நான் சொன்னேன்: ‘குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கோ’
காதுல விழுந்துதோ இல்லையோ, ‘அண்ணா, காளிமார்க் சோடா’, ‘ இல்லண்ணா எனக்கு கோலி சோடா’ , ‘எனக்கு குச்சி ஐஸ்க்ரீம்!’ என்று ஒரே கூச்சல், கும்மாளம்.
எல்லோருக்கும் அவரவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தார். குழந்தைகளுக்கு குஷியோ குஷி.
படம் முடிஞ்சு வெளியே வந்தவுடன் இவர் கேட்டார் ‘பசிக்கறது, ராத்திரிக்கு என்ன சாப்பாடு?’
‘அடுக்கு தோசை….!’ என்றேன்.
(தொடரும்)