"

தென்றல் சசிகலா அவர்கள் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்தார் மார்ச் மாதத்தில். இப்போதுதான் எழுத முடிந்தது எங்க ஊரு பற்றி. சசியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன் இத்தனை தாமதமாக இதை எழுதியதற்கு.

DSCN0010

முதன்முதலில்1974 ஆம் ஆண்டுதான் இந்த ஊர் பற்றி எங்கள் வீட்டில் அதிகம் பேசப்பட்டது. அந்த வருடம் என் பெரியம்மா பெண்ணின் திருமணம். மாப்பிள்ளையின் அம்மாவின் ஊர் திருக்கண்ணபுரம். ‘திருக்கண்ணபுரத்திலிருந்து சம்மந்தி என்றால் கொடுத்து வைத்திருக்கணுமே’ என்று எங்கள் வீட்டில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அப்போது தெரியாது அடுத்தவருடம் நானும் அங்கேதான் வாழ்க்கைப்படப் போகிறேன் என்று.

 

திருமணத்திற்கு முன் திருக்கண்ணபுரம் போனதில்லை. திருமணம் ஆனவுடன் போகவேண்டும் என்று சொன்னபோது என் மாமியார் சொன்னார்: ’சௌரிபெருமாளை அத்தனை சீக்கிரம் நீ சேவிக்க முடியாது. பெருமாளே பார்த்து இவள் என்னை வந்து சேவிக்க வேண்டும் என்று மனசு வைத்தால் தான் நடக்கும்’ என்றார். திருமணம் நடந்தவுடன் கும்பகோணம் போய் உப்பிலியப்பனை சேவிக்கப் போனோம். என் கணவரிடம் அப்படியே திருக்கண்ணபுரம் போகலாம் என்று சொன்னேன். ‘அவ்வளவு சுலபமில்லை அது. சரியா பஸ் வசதி ஒண்ணும் கிடையாது. மெயின் ரோடுல இறங்கி ரொம்ப தூரம் நடக்கணும்’ என்றார். ரொம்பவும் ஏமாற்றமாக இருந்தது. இனி பெருமாள்தான் மனசு வைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

 

அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஒரு நாள் போனோம். அந்த முதல் விஜயம் பற்றி கணபுரத்தென் கருமணியே என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். ரொம்பவும் சின்ன ஊர். இப்போது இங்கிருந்தவர்கள் எல்லோரும் இந்த ஊரை விட்டு வெளியே போய்விட்டார்கள். மிகப்பெரிய குளம். குளத்தை சுற்றி நாலு மடிவளாகம் என்ற வீதிகள். அவ்வளவுதான் ஊர். ஊரில் நுழையும் முன் ஓர் பெரிய வளைவு. அருள்மிகு ஸௌரிராஜப்பெருமாள் திருக்கோவில் என்று எழுதியிருக்கும். 1991 இல் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. அப்போது நாங்களிருவரும் போயிருந்தோம். ஊர் நிரம்பி வழிந்தது சந்தோஷமாக இருந்தது.

 

இங்கு எப்படிப் போவது என்று கேட்பவர்களுக்கு:

 

மாயவரம் என்னும் மயிலாடுதுறைக்குப் போய் அங்கிருந்து நாகபட்டினம் போகும் பேருந்தில் போகலாம்.இன்னொரு வழி. திருவாரூரிலிருந்தும் வரலாம். உங்கள் பக்கம் அதிருஷ்டம் இருந்தால் திருக்கண்ணபுரம் உள்ளேயே வரும் பேருந்தும் கிடைக்கலாம் திருவாரூரிலிருந்து!

 

இல்லையென்றால், மாயவரம்-காரைக்கால் பேருந்தில் ஏறி திருப்புகலூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். இடது பக்கம் போனால் திருப்புகலூர். வலது பக்கம் திருக்கண்ணபுரம். பேருந்து செல்லும் முக்கிய பாதையிலிருந்து 3 அல்லது 4 கிலோமீட்டர் உள்ளே நடக்க வேண்டும். பேருந்திலிருந்து இறங்கியவுடன் உங்களை வரவேற்பது காவிரி ஆறு. நீரில்லாத ஆறு வருத்தத்தைக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் நிறைய நீர் ஓடியிருக்க வேண்டும். ஆற்றின் மேல் இருக்கும் பாலம் இதற்கு அத்தாட்சி! இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று வயல்வெளிகள். சுவாசிக்குபோதே புத்துணர்ச்சி பரவும். இதையெல்லாம் அனுபவித்தால்தான் புரியும்.

 

பெருமாள் திருநாமம் சௌரிராஜன்; தனிக்கோவில் நாச்சியார்  கண்ணபுர நாயகி. வருடத்திற்கு ஒருமுறை பத்மினித் தாயாருடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

 

முதல்முறை போயிருந்தபோது அங்கிருந்த ஒரு குடும்பத்துடன் அறிமுகம் ஏற்பட்டது. இன்றுவரை எப்போது திருக்கண்ணபுரம் போனாலும் அவர்கள் வீட்டில் தான் தங்குவோம். முதல்முறை போனபோது மாமா, மாமி இருவரும் இருந்தனர். இப்போது இருவருமே பரமபதித்துவிட்டனர். ஆனாலும் எங்களுக்கு அந்தக் குடும்பத்தின் இளைய தலைமுறையுடன் ஆன உறவு தொடர்கிறது.

 

முதல்முறை போனபோது இரவு பெருமாளுக்கு தினம்தோறும் அமுது செய்யும் முநியதரையன் பொங்கல் கிடைத்தது. ஐந்து அரிசி, மூன்று பச்சைபயறு, இரண்டு நெய் என்ற அளவில் செய்யப்படுகிறது இந்தப் பொங்கல். அரிசியும் பருப்பும் நன்றாகக் குழையக் குழைய வேக வைக்கப்படுகிறது. பயறு அதில் இருப்பது தெரியவே தெரியாது.  அதில் நெய்யை ஊற்றி ஐந்து உருண்டை செய்கிறார்கள். ஒரு உருண்டையை மூன்று நான்கு பேர்கள் சாப்பிடலாம். கொஞ்சம் சாப்பிடும் போதே வயிறு நிரம்பிவிடும்.

 

மிகப்பெரிய கோவில். சேவிக்கத்தான் ஆளில்லை. ஒவ்வொருமுறை போகும்போதும் அங்கேயே தங்கிவிடலாம் என்று தோன்றும். அப்படி ஒரு அமைதி; ஒரு மன நிறைவு. எப்போதும் நீர் நிறைந்திருக்கும் திருக்குளம். ஒவ்வொருமுறை போகும்போதும் அங்கு நிச்சயம் தீர்த்தமாடுவோம்.

 

பெருமாளுக்கென்று நிறைய நிலபுலங்கள் இருக்கின்றன. ஆனால் விளைச்சலைக் கொடுக்க மனிதர்களுக்கு மனம் வருவதில்லை.

 

நித்ய புஷ்கரிணியில் எப்படி இவ்வளவு நீர் என்ற என் கேள்விக்கு மாமியிடமிருந்து பதில் கிடைத்தது. காவிரியில் நீர் வரத்து மிகும் போது அந்த உபரி நீர் இங்கு வரும்படியாக செய்திருந்தனர். அதைத்தவிர மழை பெய்யும்போது கோவிலில் விழும் நீர் நேரடியாக திருக்குளத்தில் வந்து சேருமாறு அமைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே மழை நீர் அறுவடை! திருக்குளத்தில் பெருமாளுக்கு தெப்போற்சவம் உண்டு.

 

திருவிழா சமயங்களில் வரும் பாகவதர்களின் கூட்டம் அப்படியொரு பக்தியில் திளைக்கும். ஆட்டம், பாட்டம் என மெய்மறந்து பெருமாளை சேவிப்பார்கள். குலசேகர ஆழ்வாரின் ‘மன்னுபுகழ் கோசலைதன்’ பாடலைப் பாடி ஆடியபடியே வீதிவலம் வருவார்கள்.

 

பெருமாள் வீதி உலா முடித்துவிட்டு திரும்பவும் கோவிலுக்குள் வரும்போது பெருமாளுக்கு வெந்நீரில் திருவடித் திருமஞ்சனம் நடைபெறும். வெளியே போய்வந்த அலுப்பு தீர இந்த உபசாரம். உடனே தோசை அமுது செய்யப்படும். அந்த தோசையின் ருசி ஆஹா!

 

குலசேகர ஆழ்வார் இந்தப் பெருமாளை ஸ்ரீராமனாக நினைத்து தாலாட்டுப் பாடினார். திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் இந்தப்பெருமாளை நினைத்து உருகுகிறார். பெருமாள் சந்நிதிக்கு பின்னால் திருமங்கையாழ்வார் சந்நிதி இருக்கிறது. விளகேற்றக்கூட ஆள் இல்லை.

 

மாசிமகத்தன்று பெருமாள் தீர்த்தவாரிக்கு திருமலைராயன் பட்டினத்திற்கு (கடற்கரை ஊர்) எழுந்தருளுவார் பெருமாள். அங்கு மீனவர்களின் மாப்பிள்ளையாக பெருமாளுக்கு ஏகப்பட்ட உபசாரம் நடக்கும். பெருமாள் தங்கள் ஊருக்கு எழுந்தருளும் ஆனந்தத்தை கொண்டாட பெருமாளை அப்படியே தூக்கித் தூக்கிப் போட்டு தங்கள் தோள்களில் பிடிப்பார்களாம். இதுவரை சேவித்தது இல்லை.

 

வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தப் பெருமாளை சேவித்துவிட்டு வாருங்கள். அந்த அழகு உங்களை மறுபடி மறுபடி அழைக்கும்.

 

இதைத் தொடர நான் அழைக்க விரும்புபவர்கள்:

திருமதி சித்ரா

திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் 

திரு பாண்டியன் 

திருமதி ராதா பாலு 

 

என் அழைப்பை ஏற்று எழுத வருமாறு அழைக்கிறேன்.

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற….. Copyright © 2014 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book