"

வல்லமை இதழில் புத்தக மதிப்புரைக்காக எழுதியது.

gopalla gramam

எழுதியவர்: கி. ராஜநாராயணன்

பதிப்பகம்: காலச்சுவடு

விலை: ரூ. 150

பக்கங்கள் : 199

வெளியான ஆண்டு: 1976

ஆசிரியர் குறிப்பு:

ஆசிரியர் திரு கி.ரா என்கிற கி. ராஜநாராயணனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கரிசல் காட்டின் வளமையை தமிழ் எழுத்துலகிற்குக் கொண்டு வந்தவர். கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்தவரின் கதைகளில் கரிசல் பூமியும் அங்கு வாழ்ந்த மக்களும்தான் கதைக் களம், கதை மாந்தர்கள். இவரது கதைகளுக்கு பின்புலம் தனது தந்தையாரிடத்தில் இவர் கேட்ட கதைகள் தாம்.

எனது பணிவான வேண்டுகோள்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்த மூத்த எழுத்தாளரை விமரிசிக்கும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை. அதனால் நான் இங்கு பகிர்ந்து இருப்பது நான் படித்து ரசித்த ‘கோபல்ல கிராமம்’ புத்தகத்தில் இருந்து சில துளிகள். என்னைக் கவர்ந்த பாத்திரங்கள், வியக்க வைத்த நிகழ்வுகள் அவ்வளவே. இதைப் படித்துவிட்டு சிலராவது இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தால் எனது ஜென்மம் சாபல்யம் பெறும். ஏற்கனவே படித்தவர்கள் என்னுடன் கூட இன்னொருமுறை கோபல்ல கிராமத்திற்குப் போய்வரலாம்.

கோபல்ல கிராமம்

ஒரு கிராமத்தின் விடியலுடன் தொடங்குகிறது கதை. ஒரு ஜீவ இயக்கத்துடன் கிராமம் பூரணமாக விழித்துச் செயல்பட ஆரம்பிப்பதை படிக்கத் துவங்கும்போது நமக்குள் தோன்றும் நவரசமான உணர்வுகள் புத்தகத்தை முடிக்கும்வரை நீடிக்கிறது.  கோட்டையார் வீடு, அதன் வாரிசுகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக நம் கண் முன் கோபல்ல கிராமம் விரிகிறது. கோட்டை கட்டி வாழ்ந்தவர்கள் இல்லை; அந்த வீட்டை சுற்றி கோட்டைச்சுவர் கட்டியிருந்ததனால் கோட்டையார். ‘ரொம்பத் தாட்டியாக வாழ்த்த குடும்பம்; இப்போது சிதிலமடைந்த வீடும், இடிபாடுகள் அடைந்த கோட்டைச் சுவரும் புராதன சின்னங்கள் போல சோகமாய் நின்று கொண்டிருக்கின்றன’. கோட்டையார் வீட்டு சகோதரர்கள் ஏழு பேர்கள். அண்ணன் தம்பி ஏழுபேரும் குடும்பத்தில் ஒவ்வொரு ‘இலாகா’வை நிர்வகித்தார்கள்.

இந்த சகோதரர்களின் கதையை வாசித்துக் கொண்டே இருக்கும்போது அந்த கதைக்குள் ஒரு கதைசொல்லியாக 137 வயதான பூட்டி மங்கத்தாயாரு அறிமுகம் ஆகிறாள்.  ‘எலும்பும் தோலுமாய் நீண்ட மூக்குடன் இருக்கும்’ மங்கத்தாயாருவை ‘பார்க்கும்போதெல்லாம் ரோமத்தை எல்லாம் இழந்துவிட்ட ரொம்ப வயசான ஒரு கழுகின் ஞாபகம் வரும்’ என்கிறார் கி.ரா.

இவள் கதை சொல்லும் அழகில் நாமும் அவளைப்போலவே நேரம் காலம் தெரியாமல் லயித்து விடுகிறோம். அந்த லயிப்பில் இவள் வர்ணிக்கும் சில அமானுஷ்யங்கள், இவள் எந்தத் தலைமுறையைச் சேர்ந்தவள் என்பதெல்லாம் கேள்வி கேட்கப்படாமல் நம்மால் ஒத்துக்கொள்ளப்பட்டுவிடுகிறது. மங்கத்தாயாரு தாங்கள் துலுக்க ராஜாவிடமிருந்து தப்பி வந்த கதையை சொல்லும்போது அந்தக் கதைக்குள்  ஒரு பெண்மணி தனது பெண் துளசியின் கதையை சொல்லுகிறார். கதைக்குள், கதைக்குள், கதை!

மங்கத்தாயாருவின் கதையின் கதாநாயகி சென்னாதேவி தன் அழகால் எல்லோரையும் தன்னை கையெடுத்துக் கும்பிடும் தேவியாக நினைக்க வைக்கிறாள். ஆனால் அத்தனை அழகு இருக்கும் பெண்ணின் வாழ்க்கை துன்பமயமாகத்தான் இருக்கும் என்று மங்கத்தாயாரு சொல்லும்போதே நம் மனம் பதறத் தொடங்கிவிடுகிறது. என்ன ஆகியிருக்கும் சென்னாதேவிக்கு? துலுக்க ராஜாவிற்கு ராணியாக வாழ்க்கைப்படும் ‘அதிர்ஷ்டம்’ உண்டாகிறது சென்னாவிற்கு. திருமணத்திற்கு முன் தினம்தான் தெரிகிறது மாப்பிள்ளை வீட்டவர்கள் பசு மாமிசத்தை தங்களுக்கு விருந்தாகக் கொடுக்க இருக்கிறார்கள் என்று! அதிர்ந்து போய் அங்கிருந்த தப்பி ஓடிவரும் இவர்கள் வந்து சேருவது ‘அரவ’ (தமிழ்) தேசத்திற்கு. அங்கு தங்களுக்கென்று ஒரு கிராமத்தை அமைத்துக் கொள்ளுகிறார்கள். இதுதான் கோபல்ல கிராமம். இந்தப் பூர்வ கதை மங்கத்தாயாருவின் மூலம் சொல்லப்படுகிறது.

நிகழ்காலத்தில் நடக்கும் கதை இரண்டாம் அத்தியாத்தில் தொடங்குகிறது. ‘காதுல பாம்படம் போட்டுக்கொண்டு, சேப்புக் கண்டாங்கிச் சேலை கட்டியிருக்கும் ஈருசுரு ஆள்’ மங்கம்மா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வருகிறாள். வழியில் ஊருணியில் இறங்கி நீர் குடிக்கும்போது ஒரு வழிப்போக்கனால் கொல்லப்படுகிறாள் அவளது காதுகளில் தொங்கும் பாம்படங்களுக்காக. முதல் அத்தியாயத்திலேயே கோபல்ல கிராமத்தின் பஞ்சாயத்து பற்றி ஆசிரியர் விலாவாரியாகச் சொல்லிவிடுவதால் இந்தக் கொலைக்கு என்ன தண்டனை, அது எப்படி நிச்சயிக்கப்படுகிறது, எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதெல்லாம் நமக்குள் கதையை ஊன்றிப் படிக்க உத்வேகம் கொடுக்கும் விஷயங்கள். பூர்வ கதைக்கும் இப்போது நடக்கும் கதைக்கும் நடுவில் வேறு வேறு மனிதர்களின் கதைகள் – எல்லாமே கோபல்ல கிராமத்தின் கதைதான்.

சீரியஸ்ஸான கதையாக இருக்குமோ என்று இந்தப் புத்தகத்தைப் படிக்க யோசிப்பவர்களுக்கு இந்த கோபல்ல கிராமத்தின் காமெடியன் அக்கையாவின் வேடிக்கை வினோதங்கள் நல்ல சிரிப்பு விருந்து. சுந்தரப்ப நாயக்கரை ‘புதூச் சுண்ணாம்பு எடுத்துக்க…’ என்று சொல்லி ஏமாற்றுவதும், தான் ரொம்பவும் அழகி என்ற இறுமாப்பால் இவரை மதிக்காமல் இருக்கும் துண்டபண்டு (கோவைப்பழம் போல சிவப்பாக இருந்ததால் வந்த பெயர்) வெங்கிடம்மாவை விளையாட்டாக ஒரு பொய்யைச் சொல்லி பழி வாங்குவதும் இவரது முத்திரை காமெடிகள். இவர் வெறும் காமெடியன் மட்டுமல்ல; ஒரு கண்டுபிடிப்பாளியும் கூட! கோடை உழவு முடிந்து, முதல் மழை பெய்ததும் விதைப்புக்குத் தயாராக்க நிலத்தை உழ ஆரம்பிக்கும் உழவுக்கு எழுப்படிப்பு என்று சொல்லுவார்கள். இதற்கு ஒத்தைக் கலைப்பையை வைத்துக் கொண்டு உழுவதால் உழுது முடிக்கும் முன்பு மழை வந்துவிடும். மழைக்கு முன் உழுது முடிக்க அன்று அக்கையாவால் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைக் கலப்பை கரிசல் காட்டில் பெருத்த மாறுதலையும், பரபரப்பையும் அந்த நேரத்தில் உண்டு பண்ணியது. அக்கையா சொல்லும் ராஜகுமாரனின் கதை நிச்சயம் படித்து, ரசித்து, சிரித்து மகிழ வேண்டிய ஒன்று. அக்கையாவின் தலைமையில் கிராம மக்கள் தீவட்டிக் கொள்ளைக்காரர்களுடன் ‘சந்திப்பு’ நடத்துவது இந்நாளைய திரைப்படங்களில் வரும் ‘க்ளைமேக்ஸ்’ காட்சிகளுக்கு சற்றும் சளைத்ததில்லை!

ஜோஸ்யம் எங்க்கட்ராயலு, மண்ணுதின்னி ரெங்க நாயக்கர், பச்சைவெண்ணெய் நரசய்யா, பயிருழவு பங்காரு நாயக்கர், வைத்தி மஞ்சையா, வாகடம் புல்லையா, ஜலரங்கன் யாரைச் சொல்ல, யாரை விட? இவர்களது ஒவ்வொரு பெயருக்கும் ஒரு கதை! ஒரு நிகழ்வு! இப்படி பல பாத்திரங்கள் நம்முடன் சகஜமாக உலா வருகிறார்கள். எழுத்தாளருக்கும் நமக்கும் இடையில் இடைவெளி என்பதே இல்லை என்பதே இந்தக் கதையின் சிறப்பம்சம்.

நான் இங்கு சொன்னது 25% அவ்வளவே. மீதி 75% புத்தகம் வாங்கி நீங்களாக படித்து ரசிக்க வேண்டியவை. திரு கிரா வின் நடையின் கோபல்ல கிராமம் நம் கண் முன் உயிர்த்தெழுந்து வருகிறது என்று சொன்னால் மிகைப்படுத்தல் இல்லை.

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற….. Copyright © 2014 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book