போன பதிவின் தொடர்ச்சி
பெண்களின் எதிர்பார்ப்புகள் தொடர்கின்றன
- பழங்காலத்து வழக்கம் என்று சொல்லி எங்கள் குடும்பங்களை மரியாதைக் குறைவாக நடத்தக் கூடாது.
முக்கால்வாசி கணவன்மார்கள் வீட்டின் சொத்துக்கள் பற்றியோ, அல்லது புதிதாக ஒரு சொத்து வாங்கும்போதோ மனைவிகளை கலந்தாலோசிப்பது இல்லை. இதை ஒரு பெரிய ரகசியமாக பூட்டிப் பூட்டி வைக்கிறார்கள். எந்த ஒரு விஷயமானாலும் மனைவியின் யோசனைகளை காது கொடுத்துக் கேட்க வேண்டியது அவசியம். வீடு என்றால் அது கணவன், மனைவி இருவரும் சேர்ந்ததுதான்.
- வீட்டிற்கு ஒரு நல்லது செய்யும்போது மனைவியை கட்டாயம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
வெளி உலகில் ஆணும் பெண்ணும் பலவிதமான மன அழுத்தங்களுக்கும், போட்டிகளுக்கும் ஆளாகிறார்கள். அதனால் இருவருமாகச் சேர்ந்து தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும். நான் ரொம்ப பிசி என்று சொல்லி எந்த ஒரு ஆணும் குடும்பப் பொறுப்புகளிலிருந்து நழுவக் கூடாது. குழந்தைகளின் தினசரி வளர்ப்புகளிலும் தந்தையின் பங்கு அத்தியாவசியம்.
- அம்மாவின் கவனிப்பு குழந்தைக்கு எத்தனை தேவையோ, அதே அளவு அப்பாவின் கவனிப்பும் தேவை.
அன்பு என்பது மகளிர் தினத்தன்று மட்டுமோ, பிறந்த நாளின் போது மட்டுமோ காண்பித்துவிட்டு மறந்துவிடக் கூடிய ஒன்றல்ல. எப்போதும், எந்நாளும் கணவன் மனைவியரிடையே அன்பு நிலவ வேண்டும். ஒரு நல்ல குடும்ப உறவு வளர, மேன்மை பட குறையில்லாத அன்பு தேவை.
இப்போது ஆண்களிடம் கேட்டேன். உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
‘இப்போது சொன்னவற்றையெல்லாம் அப்படியே திருப்பிப் போடுங்கள். எங்கள் அம்மாவையும், சகோதரிகளையும் இழிவாகப் பேசக் கூடாது. இன்று வந்தவர்களுக்காக எங்களால் பிறந்ததிலிருந்து இருக்கும் உறவுகளை மறக்கவோ துறக்கவோ முடியாது. வெளிஉலகில், அலுவலகத்தில் எத்தனையோ பேர்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகும் இவர்களால் ஏன் எங்கள் அம்மாக்களையும் சகோதரிகளையும் பொறுத்துப் போக முடியவில்லை?’
இந்தக் கேள்வி நியாயம் என்றே படுகிறது எனக்கு.
கடைசியாக கேட்டேன்:
திருமணம் என்பது பிணைக்கும் பந்தமா? அல்லது கட்டுப்படுத்தும் கால்கட்டா?
‘நான் ஒரு கதை சொல்லுகிறேன்’ என்று எழுந்தாள் ஒரு பெண்.
‘மகளின் திருமணத்தின் போது அவள் அம்மா அவளிடமும், தனது மருமகனிடமும் இரண்டு வங்கி பாஸ் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு சொன்னார்:
‘உங்கள் இருவர் பேரிலும் நான் வங்கிக் கணக்கு ஆரம்பித்திருக்கிறேன். இன்று நீங்கள் இருவரும் இணையும் மகிழ்ச்சியான தருணம் என்பதற்காக ஒரு சிறிய தொகையையும் போட்டிருக்கிறேன். எப்போதெல்லாம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான, மறக்க முடியாத தருணங்கள் வருகின்றதோ அப்போதெல்லாம் ஒரு தொகையை இருவரும் உங்கள் கணக்கில் போடுங்கள். எதற்காக, எந்த இன்பமான தருணத்தில் போட்டீர்கள் என்று ஒரு சிறிய நாட்குறிப்பில் எழுதி வாருங்கள்.’
அம்மா சொன்னது போலவே இருவரும் சின்ன சின்ன சந்தோஷங்களிலிருந்து பெரிய பெரிய மகிழ்ச்சியான தருணங்களுக்கும் வங்கியில் பணம் போட ஆரம்பித்தனர். வருடங்கள் பல சென்றன. கணவன் மனைவியரிடையே சின்ன பூசல்கள். கொஞ்சம் கொஞ்சமாக இவை பூதாகாரமாக உருவெடுத்து, இருவரும் பிரிய முடிவு செய்தனர்.
பெண் தன் அம்மாவிடம் தங்களது விவாகரத்து குறித்து சொன்னாள். அம்மா சொன்னார்: ‘சரி, இருவரும் பிரிவதற்கு முன் வங்கி கணக்கில் எத்தனை சேர்ந்துள்ளது என்று பாருங்கள். இருவரும் பிரிவதற்குமுன் அதை செலவழித்து விடலாம்’.
மகள் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து வந்தாள். தான் எழுதி வைத்திருக்கும் நாட்குறிப்பையும் பார்த்தாள். அசுவாரசியமாகப் படிக்க ஆரம்பித்தவள் கண்களில் நீர்!
எனது வாழ்க்கையில் எத்தனை எத்தனை இன்பமான தருணங்கள் வந்து போயிருக்கிறது. அதையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது மணமுறிவு வரை வந்துவிட்டேனே’ என்று மனம் வருந்தினாள். எப்படியாவது தனது மண வாழ்க்கையை சரி செய்து விட வேண்டும் என்று கணவனிடம் தனது பாஸ் புத்தகத்தை கொடுத்து நடந்ததைக் கூறினாள்.
அடுத்த நாள் கணவன் அந்த பாஸ் புத்தகத்தை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டு ‘இதில் புதிதாக ஒரு தொகையை போட்டிருக்கிறேன். நாம் இருவரும் இத்தனை வருடங்கள் ஒன்றாக வாழ்ந்ததைக் கொண்டாடவும், இனிமேலும் சேர்ந்து இருக்கப் போவதைக் கொண்டாடவும் என்று இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்’ என்றான்.
இதைப் பார்த்த அம்மா கூறினார்: வாழ்க்கை என்பது தவறுகளை திருத்தி கொள்ள; உறவுகளை முறித்துக் கொள்ள அல்ல’
வகுப்பிலிருந்த அனைவரும், நான் உட்பட கைத்தட்டினோம். நீங்களும் தானே?