"

போன பதிவில் நான் போட்டிருந்த படங்கள் எல்லாம் என் பெரிய மாமியார் ஜெயம்மா பெரியம்மாவின் அகத்தில் எடுத்த படங்கள். இப்போது பெரியம்மா இல்லை. அவரது பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் இந்த வீட்டில் இருக்கிறார்கள். அந்த ஊர் பெயர் சிவராமபுரம். தஞ்சாவூரில் உள்ள குற்றாலம் அருகே இருக்கும் ஊர். ஒரே ஒரு வீதிதான் சிவராமபுரம். வீதியின் ஒரு கோடியில்IMG_20130221_141238

ஊஞ்சல்!

IMG_20130221_072635

சிவராமபுரம் – ஒரேவீதிதான்!

ஸ்ரீராமனுக்கு ஒரு கோவில். கோவிலுக்கு பின்னால் காவேரி வடக்கு முகமாக ஓடுகிறாள். நிறைய படிகள் இறங்கி ஆற்றுக்குள் போகவேண்டும். அத்தனை தண்ணீர் ஒருகாலத்தில் ஓடியிருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். இப்போது ஆற்றில் நீரே இல்லை. குழந்தைகள் ஆற்றைத் தாண்டி சிவராமபுரம் அரசுப் பள்ளிக்கூடத்திற்கு வருகிறார்கள்.

சென்ற வருடம் நாங்கள் அங்கு போயிருந்த அன்று காலை ஆறிலிருந்து மாலை ஆறுவரை மின்சாரம் கட். எனது அலைபேசியில் சார்ஜ் இருந்தவரை எடுத்த படங்கள் இவை. காவிரியை எடுப்பதற்குள் சார்ஜ் போயிந்தி. சரி அரியலூருக்கு விடை கொடுப்போமா?

**********************

நான் போட்ட சத்தத்தில் சித்தியாவும் என் கணவரும் மித்தத்திற்கு வந்துவிட்டனர். சித்தியா ரொம்பவும் கோபித்துக்கொண்டார் சித்தியை. ‘என்ன நீ!  அவளைப் போயி மித்தத்துல குளிக்கச் சொல்ற. சரியே இல்ல நீ பண்றது’ என்றார். பாவம் சித்தி. ‘நான் மெட்ராசுக்குப் போய் குளிச்சுக்கறேன் சித்தி’ என்றேன் தீனமான குரலில். ‘ச்சே ச்சே…! அதெல்லாம் வேண்டாம். நான் வேறேதாவது பண்றேன். இப்ப உள்ள வா’ என்று சொல்ல எல்லோரும் உள்ளே வந்தோம்.

தளிகை உள்ளில் நுழைந்தவுடன் சித்தியின் முகம் சட்டென்று மலர்ந்தது. ‘ஒண்ணு பண்ணு. இங்க (தளி(கை) பண்ற உள்ளுல) இருக்குற மித்தத்தை ஒழிச்சுத் தரேன். இங்க குளி நீ. குழாய்ல தண்ணியும் வரும்’ என்று சொல்லிக்கொண்டே மித்தத்தில் இருந்த பாத்திரங்களை கிடுகிடுவென்று வெளியே எடுத்து வைத்தார். தளி பண்ற உள்ளின் ஒரு கோடியில் சின்னதாக ஒரு தடுப்பு சுவர். அங்கு ஒரு குழாய். ‘மாலா! மன்னிக்கு பித்தளை வாளியும் மொண்டாளியும் (நீரை முகர்ந்து கொள்ள பயன்படும் பாத்திரம்) கொண்டுவந்து குடு’ என்றார். ‘நான் தளிபண்ற உள் கதவ சாத்திண்டு போறேன். கவலைப்படாம குளி’ என்றவாறே வெளியே போனார். அன்று நான் அங்கு பார்த்த பித்தளை வாளி இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அந்த மொண்டாளிக்கு ஈடு இணை இந்த காலத்து ‘மக்’ (mug) கிற்கு வருமா?

எனக்கு அப்பாடி என்றிருந்தது. ஒரு பிரச்னை தீர்ந்தது! என் பெண்ணரசியையும் அங்கேயே குளிச்சுவிட்டேன். ‘இவாத்துல பாத்ரூமும் கிடையாதா?’ என்று நீட்டி முழக்கிக் கேட்டுக் கொண்டே குளித்து முடித்தாள். நான் எப்பவும் அதிகம் மேக்கப் போடமாட்டேன். அந்த காலத்தில் வீக்கோ டர்மரிக் க்ரீம் வரும். மெல்லிய சந்தன வாசனையுடன் ரொம்ப நன்றாக இருக்கும். குளித்து முடித்துவிட்டு வந்து தலையை வாரிக்கொண்டு முகத்திற்கு க்ரீம் போட்டுக்கொண்டேன். நான் மேக்கப் பண்ணிக் கொள்வதைப் பார்க்க நிறைய ஆடியன்ஸ்! ‘மன்னி நீங்க லிப்ஸ்டிக் போட்டுக்க மாட்டேளா?’, ‘பௌடர் போட்டுக்க மாட்டேளா?’ என்று நிறைய கேள்விகள் வேறு.

மதிய சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு அரியலூரை விட்டுக் கிளம்பினோம். சித்தி வெற்றிலைப் பாக்குத் தட்டை நீட்டினார். என் அகத்துக்காரர் அதில் இத்தனை பணத்தை வைத்து சித்தியிடம் கொடுத்தார். ‘எதுக்கு நாராயணா, இதெல்லாம்?’ என்றார். ‘வாங்கிக்கோ சீவா, குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக்கொடு’ என்றார்.

சித்தி கண்களில் நீர்மல்க விடை கொடுத்தார். ‘சித்தி! எனக்கு இங்க வந்து உங்களோட இருந்தது ஸ்ரீரங்கத்துல பாட்டியாத்துல இருந்த மாதிரி இருந்தது’ என்றேன். ‘எனக்கும் நீ எங்களோட வந்து இருந்தது ரொம்ப சந்தோஷம்டி, பொண்ணே! பட்டணத்துப் பொண்ணு, எப்படி இருப்பியோன்னு நினைச்சேன். துளிக்கூட பிகு பண்ணிக்காம நான் பண்ணிப் போட்டத சாப்பிட்டுட்டு எங்காத்து வால்களோட சுலபமாக பழகிண்டு….. குழந்தைய பாத்துக்கோ!’ என்று கையைப் பிடித்துக்கொண்டு குரல் கம்ம விடை கொடுத்தார். ‘நீங்க வாங்கோ சித்தி ஆத்துக்கு’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினோம். வறுமையில் செம்மை என்பதை அந்த இரண்டு நாட்களும் பூரணமாக அனுபவித்தோம் நாங்கள்.

அதற்குப் பிறகு எங்களுக்கு அரியலூர் போக வாய்ப்புக் கிடைக்கவில்லை.  அவ்வப்போது ஏதாவது செய்தி வரும். ஒருநாள் அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது. சுந்தரம் வீட்டை விட்டு போய்விட்டான் என்று. சின்னப் பையன் எங்கு போயிருக்க முடியும் என்று நாங்கள் எல்லாம் மனம் முழுக்கக் கவலையுடன் பேசிக்கொண்டோம். சில வருடங்கள் கழித்து சுந்தரம் திரும்பி வந்தான். நேவியில் ஆபீசராக. வீட்டை விட்டு வெளியேறி எப்படியோ நேவியில் சேர்ந்திருக்கிறான். அங்கு மேல்படிப்புப் படித்து வேலையும் தேடிக்கொண்டு கப்பல் போகும் ஊர்களுக்கெல்லாம் இவனும் போய்வந்து கொண்டிருந்தான். உலகம் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்தான். எங்களுக்கெல்லாம் வியப்பான வியப்பு.

அரியலூரில் பார்த்த பிறகு நான் அவனை மறுமுறை பார்த்தது பெங்களூரில். ஒருமுறை நான் வெளியில் போய்கொண்டிருந்தேன். மாலை நேரம். வெகு அருகில் ‘மன்னி, மன்னி’ என்று ஒரு குரல். இந்த ஊரில் யார் என்னை இப்படிக் கூப்பிடுவது என்று திரும்பிப்பார்த்தேன். ‘நான்தான் மன்னி, அரியலூர் சுந்தரம்’ என்றான். ‘அட! நீ எப்படி இங்க?’ ‘ஒரு வேலையா வந்தேன். உங்க அட்ரஸ் தேடிண்டிருந்தப்போ நீங்க இங்கு போயிண்டிருந்ததை பார்த்தேன்…..அதான் கூப்பிட்டேன்!’

ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அவனை குழந்தைகளுக்கு சித்தப்பா என்று அறிமுகப்படுத்தினேன். தன்னுடைய கடல் அனுபவங்களை குழந்தைகளிடமும் என்னிடமும் சுவாரஸ்யமான பகிர்ந்து கொண்டான்.  என் அகத்துக்காரர் அப்போது ஊரில் இல்லை. அடுத்த நாள் பிருந்தாவன் எக்ஸ்ப்ரெஸ்ஸில் மெட்ராஸுக்கு போவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

மாலாவிற்கு தபாலாபீஸில் வேலை கிடைத்திருக்கிறது என்று சித்தியா ஒருமுறை மெட்ராஸ் வந்திருந்தபோது சொன்னார். பாவம் சித்தி, கொஞ்சம் மூச்சு விட்டிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்.

ரொம்பவும் நீண்டுவிடும் போலிருப்பதால் தொடரின் முடிவு அடுத்த பகுதியில்.

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற….. Copyright © 2014 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book