என் கணவருக்கு அரியலூரில் ஒரு சித்தி இருந்தார். ரொம்ப நாட்களாக எங்களை அரியலூர் வரும்படி கூப்பிட்டுக் கொண்டிருந்தார். நாங்களும் பல வருடங்கள் ‘பிகு’ பண்ணிக்கொண்டிருந்துவிட்டு ஒரு வழியாக ஒரு சுபயோக சுபதினத்தில் அரியலூர் போய்ச்சேர்ந்தோம்.
சித்தியா எங்களை வரவேற்க ரயில்நிலையம் வந்திருந்தார். என் இடுப்பிலிருந்த குழந்தையை ‘சித்தியா பாரு. அவர்கிட்ட போறியா?’ என்றேன். என் பெண் கொஞ்சம் வெடுக் வெடுக்கென்று பேசுவாள். ‘சித்தியாவா? தாத்தான்னு சொல்லு’ என்றாள். நான் கொஞ்சம் அசடு வழிந்தவாறே ‘ ஸாரி……சித்தியா…..!!!!’ என்றேன். ‘பரவால்ல மா என்னைப் பாத்தா தாத்தா மாதிரிதானே இருக்கு..!’ என்று பெருந்தன்மையுடன் தாத்தாவானார். உண்மையில் அவர் சின்னத் தாத்தாதான். எங்கள் உறவுக்காரர்களில் பலருக்கு இந்த தாத்தா பாட்டி உறவு சட்டென்று பிடித்துவிடாது. ‘நான் இன்னும் பாட்டியாகலை. என்னை பாட்டின்னு கூப்பிடக்கூடாது’ என்று சொல்வார்கள். அதாவது அவர்கள் குழந்தைகளுக்குப் பேரனோ பேத்தியோ பிறந்தபின் தான் எங்கள் குழந்தைகள் அவர்களை தாத்தா பாட்டி என்று கூப்பிடலாம்!.
சித்திக்கு மூன்று பெண்கள் இரண்டு பிள்ளைகள். எல்லோருமே ரொம்பவும் சின்னவர்கள். என் மாமியாரின் கடைசி தங்கை இவர். அவரே ரொம்பவும் சின்ன வயசுக்காரர் தான். வாசலிலேயே சித்தியின் குழந்தைகள் நின்று கொண்டிருந்தார்கள். ‘மன்னி, மன்னி; என்று என்னுடன் சகஜமாக ஒட்டிக்கொண்டார்கள். என் திருமணம் ஆன புதிதில் ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு உறவில் என்னைக் கூப்பிடும். ‘மன்னி’, ‘சித்தி’, ‘மாமி’ என்று போதாக்குறைக்கு என் மாமியார் என்னை ‘புது மாட்டுப்பொண்ணே!’ என்பார். எனக்கு வியப்பாக இருக்கும். எத்தனை உறவுகள், உறவினர்கள்! திருமணம் ஒரு பெண்ணிற்கு எத்தனை அடையாளங்களைக் கொடுக்கிறது!
அரியலூர் வந்து சேர்ந்த போது மாலை நேரம். ‘என்ன சாப்பிடறே, நாராயணா?’ உபசாரம் ஆரம்பித்தது. இவர் காப்பி வேண்டுமென்றார். என் சின்ன மாமியார் காப்பி கலக்க தளிகை உள்ளிற்குப் போனார். நானும் அவருடன் கூடவே உள்ளே போனேன். மாட்டுப்பெண் என்றால் அப்படித்தானே செய்யவேண்டும்.
உள்ளே போனால்…….தலை சுற்றியது. ஒரு தட்டில் தோசைகள். ஒன்று இரண்டு அல்ல. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி அடுக்கி ஒரு ஆள் உயரத்திற்கு தோசைகள்! கொஞ்சம் அதிகம் சொல்லிவிட்டேனோ? இல்லை இன்னும் இரண்டு மூன்று தோசைகள் வைத்தால் உத்திரத்தைத் தொடும்.
‘இது என்ன இவ்வளவு தோசை?’
‘உனக்குத்தான். நீ சாப்பிடமாட்டாயா தோசை?’
எனக்கா? இத்தனையா? நான் கொஞ்சம் அகலம் தான். ஆனால் இத்தனை தோசை சாப்பிட மாட்டேன் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. தலை வேகமாகச் சுழல ஆரம்பித்தது. காப்பி டம்ப்ளரை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். என் கணவரிடம் சொன்னேன்:’சீவா சித்தி (அவரது பெயர் சீவரமங்கை – சீவா என்று கூப்பிடுவார்கள்) அடுக்கு தோசை பண்ணியிருக்கார் நாம சாப்பிட’ என்றேன்.
‘அடுக்கு தோசையா?’
‘ஆமா தோசை பண்ணி ஆளுயரத்துக்கு அடுக்கி இருக்கா…!’
என் கணவர் எழுந்து போய் பார்த்துவிட்டு வந்தார். ‘ஏய் சீவா (சித்தியை பேர் சொல்லித்தான் கூப்பிடுவார் – கிட்டத்தட்ட சம வயது என்பதால்) எதுக்கு இத்தனை பண்ணியிருக்க?’
‘நீ, ரஞ்சனி, குழந்தை சாப்பிடத்தான்!’
‘நாங்க என்ன பகாசுரனா?’
அதற்குள் சித்தியின் குழந்தைகள் சினிமா போகலாம் என்று சொல்லவே நாங்கள் கிளம்பினோம்.
‘தியேட்டர் எங்க இருக்கு?’
‘இதோ பக்கத்துல தான்’
‘தியேட்டரா? இங்க கொட்டாய் தான்’
ஒரு வாண்டு தன் அண்ணா வாண்டுவிடம் ஏதோ கேட்டது. அவனும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே ‘மன்னி மெட்ராஸ். அதனாலேதான் தியேட்டர் அப்படின்னு சொல்றா’
‘இனிமே டிக்கட் கிடைக்குமா?’ என் கேள்விக்கு ஒரு வாண்டு பதில் சொல்லிற்று. ‘நாம போனாதான் படமே ஆரம்பிக்கும்’. எப்படி?
என் கேள்விக்கு கொட்டகைக்குப் போனவுடன் பதில் கிடைத்தது?
வாசலிலேயே ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
(தொடரும்)
எனது முதல் தொடர் இது.