சிங்காநல்லூரு புட்டஸ்வாமி முத்துராஜு தான் எங்க ஊரு அண்ணாவ்ரு என்றால் யார் இது என்பீர்கள். மேலே படியுங்கள், புரியும். இன்றைக்கு எங்க ஊரு அண்ணாவ்ருவின் பிறந்த நாள். அதற்காக இந்தப் பதிவு.
நாங்கள் இந்த ஊருக்கு வந்த புதிது. இந்த ஊரில் இருக்கும் எனது தோழி சொன்னார்: ‘எரடு கனஸு’ (இரண்டு கனவு) படம் கட்டாயமாகப் பாருங்கள்’ என்று.
நான் அப்போதுதான் கன்னட கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். தட்டுத்தடுமாறி பேசவும் தொடங்கிய சமயம். ‘யார் நடித்த படம்?’ என்றேன் தோழியிடம். ‘இந்த ஊரு அண்ணாவ்ரு டாக்டர் ராஜ்குமார் நடித்தது’ என்றார். ‘அப்படியென்ன அதில்?’ என்றேன் விடாமல். ‘வெளியில் எல்லோரிடமும் பேசும் கணவன் தன்னிடம் ஏன் பேசுவதில்லை’ என்று கல்பனா (இந்தப் படத்தில் ஒரு கதாநாயகி) ஒரு கத்து கத்துவார் பாருங்கள். அட, அடா! அந்த காட்சிக்காகவே பார்க்கணும், அந்தப் படத்தை!’
ஒரு சின்ன ஆச்சர்யத்துடன் தோழியைப் பார்த்தேன். இப்படி ஒரு விமரிசனம் யாராவது ஒரு படத்திற்கு செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. பக்கத்திலேயே இருந்த ஒரு வீடியோ கடைக்குப் போய் காசெட் வாங்கிவந்தேன். எனக்கும் திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. தோழி சொன்ன காரணம் மட்டுமல்ல; அண்ணாவ்ருவின் அசாத்தியமான நடிப்புத் திறன், பாடும் திறன், எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும் கன்னட உச்சரிப்பு இவற்றில் நானும் மனதைப் பறிகொடுத்து அவரது விசிறி ஆனேன். என்ன ஒரு அழுத்தம் திருத்தம் வார்த்தைகளில்! கன்னட மொழியின் அழகு அவரது குரலில், பேசும் விதத்தில் தெரிந்தது.
இவரைப் பற்றி மேலே பேசுவதற்கு முன், ‘எரடு கனஸு’ படத்தின் கதையைப் பார்க்கலாமா? அண்ணாவ்ருவின் சொந்தக்காரப் பெண் மஞ்சுளா (முதல் கதாநாயகி) இருவரும் கல்யாண செய்துகொள்ளப் போகிறோம் என்ற ஆசையில் முதல் கனவை கண்டு கொண்டிருக்கும்போது இரு குடும்பத்திற்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு, வேறு வழியில்லாமல் அண்ணாவ்ரு கல்பனாவை மணக்கிறார், அம்மாவின் நச்சரிப்புத் தாளாமல். ஆனால் தனது பழைய கனவிலேயே வாழ்ந்துவரும் அண்ணாவ்ரு கல்பனாவை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அண்ணாவ்ரு ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். (இந்த சமயத்தில்தான் என் தோழி சொன்ன அந்த காட்சி வருகிறது)
ஒருமுறை தன்னுடன் வேலை செய்யும் ஒரு நண்பனின் வீட்டிற்கு அவனது அழைப்பின் பேரில் அண்ணாவ்ரு போகும்போது அங்கு நண்பனின் மனைவியாக, ஒரு குழந்தைக்கு தாயாக மஞ்சுளாவை பார்க்கிறார். தனது தவறு புரிந்து, கல்பனாவைப் பார்க்க ஓடோடி வருகிறார். வீட்டில் கல்பனா இல்லாததைப் பார்த்து அவர் வழக்கமாகப் போகும் கோவிலுக்கு அவரைத்தேடிக் கொண்டு அண்ணாவ்ரு வர, கோவிலிலிருந்து வெளியே வரும் கல்பனா, தன் கணவன் தன்னை முதல்முறையாக பெயரிட்டு அழைப்பதைக் கேட்டு, கண்மண் தெரியாமல் ஓடிவர, இருவருக்கும் குறுக்கே ஒரு கார் வர……! (மீதியை வெள்ளித்திரையில் காண்க என்று சொல்லாலாம்….ஆனால் இதைப்படிப்பவர்கள் கன்னட படம் பார்ப்பார்களா, தெரியவில்லையே!) அடிபட்ட கல்பனா பிழைக்க வேண்டும் என்று அவரது தலைமாட்டிலேயே அண்ணாவ்ரு தவம் கிடக்க, ஒருவழியாக கல்பனா கண்ணைத் திறந்து பார்க்க………… ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?’ என்று கதை சுபமாக முடிகிறது. இரண்டாவது கனவு ஆரம்பமாகிறது.
இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். கல்பனா, மஞ்சுளா இருவருக்குமே நிஜ வாழ்க்கையில் அண்ணாவ்ரு மேல் ஒரு ‘இது’ என்பது ஊரறிந்த ரகசியம். ஆனாலும் அண்ணாவ்ரு பார்வதம்மா (அண்ணாவ்ருவின் மனைவி) கிழித்த கோட்டைத் தாண்டாதவர் என்பதும் ஊரறிந்த விஷயம். லீலாவதி இரண்டாம் தாரம். (இதுவும் எல்லோருக்கும் தெரிந்ததே) அவர்கள் படத்தில் ரஜினியின் அம்மாவாக வருவாரே அவர்தான் இந்த லீலாவதி. இத்தனை சொல்ல காரணம் கீழே!
நம் ஊர் கதாநாயகிகள் சரோஜாதேவியிலிருந்து, லக்ஷ்மி, ஜெயப்பிரதா, ஜெயந்தி, சரிதா, மாதவி, அம்பிகா, ராதா, ஊர்வசி வரை இவருடன் நடித்தவர்கள். சரிதாவுடன் நடித்த காமன பில்லு (வானவில்) படத்தில் அண்ணாவ்ரு செய்யும் யோகாசனங்கள் மிகவும் பிரசித்தம். இவரது ஆரோக்கியத்திற்கு இவர் செய்யும் ஆசனங்களே காரணம் என்று சொல்வார்கள். வீரப்பனின் பிடியில் இவர் இருந்தபோது கர்நாடகாவே ஸ்தம்பித்துப் போயிற்று.
ஆரம்பத்தில் இவருக்கு பின்னணி பாடியவர் பி.பி. ஸ்ரீநிவாஸ். போகப்போக அண்ணாவ்ரு தானே பாட ஆரம்பித்துவிட்டார். இப்படிச் செய்து அவரது பின்னணிப் பாடகர் வாய்ப்பை கெடுத்துவிட்டார் என்றும் கூட இவரது ரசிகர்களே சிலர் சொல்லுவார்கள். ஆனால் நாடக மேடையிலிருந்து திரைப்படத்திற்கு வந்தவர் ஆதலால் மிக நன்றாகப் பாடக் கூடிய திறமை படைத்தவர் அண்ணாவ்ரு. ‘ஜீவன சைத்ர’ படத்தில் தோடி ராக ஆலாபனை செய்து ராகமாலிகையில் ஒரு பாட்டுப் பாடுவார் பாருங்கள். மெய்மறக்கச் செய்யும் குரல் வளம், Bபாவம்!
பல சரித்திரப் படங்களிலும் நடித்திருக்கிறார் அண்ணாவ்ரு. பிரபலமான படங்களில் சில: B’பப்ருவாஹன’, ‘கவிரத்ன காளிதாசா’, ‘கிருஷ்ணதேவராய’. பப்ருவாஹன வில் அர்ஜுனன், அவன் மகன் பப்ருவாஹன என்று இரண்டு பாத்திரங்கள். இருவரும் யுத்தகளத்தில் பாடும் பாடல் மிகவும் பிரபலம்.
இதோ கேளுங்கள்:
யாரு திளியரு நின்ன புஜபலத பராக்ரம
கவிரத்ன காளிதாஸ படத்தை மிகவும் பாசிடிவ் ஆக முடித்திருந்தது மிகவும் ரசிக்கும் படி இருந்தது. இதோ அந்தப் படத்தில் இவரும் வாணி ஜெயராமும் பாடும் பாடல்:
https://www.youtube.com/watch?v=1jcakqbeCQg
இவரைப் பற்றி இன்னும் இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். அடுத்த வருடம் எழுதுகிறேன். இப்போது ஒரு சின்ன விஷயத்துடன் முடிக்கிறேன்.
இவர் மறைந்த போது இங்கு உலா வந்த ஒரு SMS: தனது விசிறிகளை இவர் அபிமானி தேவர்களே என்று தான் அழைப்பார். இவர் சொர்க்கம் போய்ச் சேர்ந்து அங்கிருந்து எழுதுவது போல அமைந்த அந்த SMS இதோ:
‘அபிமானி தேவர்களே! நான் இங்கு சுகமாக இருக்கிறேன். மஞ்சுளா, கல்பனா என்னை நன்றாக கவனித்துக் கொள்ளுகிறார்கள். லீலா, நீ உடனே வா. பாரு, உனக்கு அவசரமில்லை. நிதானமாக வா!’