உங்கள் வீட்டு சோபாவில் என்னவெல்லாம் இருக்கும்?
கேள்வியே தப்பு! சோபாவில் ஜடப்பொருள் இருக்குமா? யாரெல்லாம் இருப்பார்கள் – உட்கார்ந்திருப்பார்கள் என்று கேட்க வேண்டும்!
சரி, நீங்கள் உட்கார்ந்திருப்பீர்கள் கூட என்னவெல்லாம் இருக்கும்?
ம்ம்…..செய்தித்தாள்?…..
அப்புறம்?
ம்ம்ம்…..
விடுங்கள்…. ரொம்ப யோசிக்க வேண்டாம். எங்கள் வீட்டு சோபாவில் என்னவெல்லாம் இருக்கும், தெரியுமா?
ம்ம்ம்.. அதே செய்தித்தாள்….கூடவே ரிமோட் கண்ட்ரோல் ஒன்றல்ல இரண்டு…. ஒன்று தொலைக்காட்சியை ஆன் செய்ய… இன்னொன்று வால்யூம் கூட்ட, சானல் மாற்ற….
கூடவே இன்னொன்றும் இருக்கும்… எனது கணவரின் இன்சுலின் பென். பொதுவாக குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும். உணவு வேளையின் போது வெளியே வரும்.
நேற்று காலை.
‘டிபன் ரெடி, நீங்க மருந்து எடுத்துக்கலாம்!’
‘என்னோட இது எங்க?’
‘உங்களோட எது எங்க?’
‘அதாம்மா… நான் போட்டுப்பேனே!’
‘மருந்து பவுச்?’
‘மருந்தைப் போட்டுப்பேனா? மருந்தை சாப்பிடுவேன். நான் கேட்கறது இன்னொண்ணு…’
சிறிது நேரம் மவுனம். கிடைத்துவிட்டதோ? சமையலறையிலிருந்து எட்டி பார்த்தேன். தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. அனுமனை மனதில் நினைத்துக் கொண்டு, பஜ்ரங் பலி, எட்டணா வைக்கிறேன், தேடுவது கிடைக்கட்டும் என்று வேண்டினேன்.
சட்டென்று கண்ணில் பட்டது. இன்சுலின் பென், சோபாவின் மேல் ரிமோட் அருகில்.
‘இதோ இருக்கே…!’ எடுத்துக் கொடுத்தேன். அப்பாடா!
சற்று நேரம் கழித்து, ‘இன்னொண்ணைக் காணுமே!’
பஜ்ரங் பலி! இன்னிக்கு உனக்கு ஒரு ரூபா வேணுமா?
இந்த மாதிரி தேடும்போதெல்லாம் எனக்கு என் அம்மாவின் நினைவு வருகிறது. சின்ன வயதில் நாங்கள் ஏதாவது தேடினால், ‘எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கணும்….’ என்பாள் அம்மா. அதேபோல நடக்கும்போது காலில் ஏதாவது இடறினால், ‘காலுக்கு கண் வைக்கணும்….!’ அந்தக்காலத்தில் ஒவ்வொரு அறையிலும் அலமாரிகள் இருக்காது. எங்கள் புத்தகங்கள் எங்கள் பைகளிலேயே இருக்கும். பைகள் அறையின் ஒரு முலையில். புத்தகங்கள் நாங்கள் எங்கு உட்கார்ந்து படிக்கிறோமோ, அங்கேயே இருக்கும். தேடுதலும் காலில் பொருட்கள் இடறுதலும் தினசரி நடக்கும் விஷயங்கள். அம்மாவின் இந்த இரண்டு வாக்கியங்களும் தினமும் கேட்டு கேட்டு பழகிப் போன ஒன்று.
‘இப்போ என்ன காணும்?’
‘ரிமோட்!’
‘அதோ இருக்கே!’
‘இன்னொண்ணு……?’
செந்தில் மாதிரி அதுதாங்க இது என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.
தீவிரமான தேடுதலைப் பார்த்துவிட்டு ஜோக் அடித்தால் எனக்கு அடி கிடைக்கும் போல இருக்கவே, சும்மா இருந்தேன்.
‘எங்க வைச்சீங்க?’
‘அது நினைவு இருந்தால் உன்னை ஏன் கேட்கிறேன்….?’
அதுவும் சரிதான்.
‘காலைலேருந்து டீவி போட்டீங்களா?’
என்னைத் திரும்பி, நீ என்ன துப்பறியும் சாம்புவா? என்பது போல ஒரு பார்வை.
‘இல்ல…..’
‘…………………………….?’
‘இங்க தான் சோபா மேல இருந்தது. டிபன் சாப்பிடறதுக்கு முன்னால இருந்தது. மூணும் ஒண்ணா….’
மூணும் ஒண்ணா இருந்ததா? கேள்வி கேட்கவில்லை. மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
‘இன்சுலினைப் போட்டுண்டு பார்க்கறேன்…காணோம்..!’
கொஞ்சம் யோசித்தேன். எங்கே போய்விடும்?
வர வர தேடுதல் அதிகமாகிவிட்டது. ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்-இல் ஒரு ஸ்டேஷனரி கடை. எந்த பொருள் கேட்டாலும் அந்த கடை சிப்பந்தி தேடுவார். அவருக்குத் தேடல் மன்னன் என்று பெயர் வைத்தேன். இப்போது என்ன ஆயிற்று தெரியுமோ? கடையின் நிஜப்பெயர் மறந்து போய் தேடல் மன்னன் கடை என்று ஆகிவிட்டது.
காலையிலிருந்து டீவியைப் போடவில்லை. எங்கே போயிருக்கும்? மறுபடியும் எங்கள் வீட்டு சோபாவைப் பார்த்தேன். ஒரு ரிமோட், பக்கத்தில் பென்சுலின் இன். கடவுளே! மறதி என்னையும் குழப்புகிறதே! இன்சுலின் பென்!
ஆ! பளிச்! மின்னல்! துப்பு கிடைத்துவிட்டது!
ஃபிரிட்ஜை திறந்தேன். ‘குளுகுளு’வென இன்சுலின் பென் இருக்குமிடத்தில் அமர்ந்திருந்தது அந்த ‘இன்னொண்ணு!’
பைதாகரஸ் போல ‘யுரேகா….’ – ச்சே! ஆர்க்கமீடிஸ் இல்லையோ யுரேகா? நமக்கு இவர்களெல்லாம் வேண்டாம். எனக்கு உதவிய அனுமனைப் போல கண்டேன் ரிமோட்டை!
எப்படிக் கண்டுபிடித்தேன் என்கிறீர்களா? நேற்று இரவு இன்சுலின் போட்டுக் கொண்டு அதை உள்ளே வைப்பதாக நினைத்துக் கொண்டு ரிமோட்டை வைத்து விட்டாரோ, என்று தோன்றியது.
என் யூகம் சரிதான். இன்சுலின் பென்னிற்கு பதிலாக ரிமோட் உள்ளே போயிருக்கிறது!
பஜ்ரங் பலிக்கு இன்று ஒரு ரூபாய்!