என் மாமியார் ரொம்பவும் ஆசாரம் பார்ப்பவர். திருமணம் ஆன புதிதில் சமையலறைக்குள் செல்ல வேண்டுமென்றால் கையை அலம்பிக்கொண்டுதான் நுழைய வேண்டும். இது என்ன பெரிய இதுவா என்கிறீர்களா? சற்று பொறுங்கள், நான் இன்னும் மெயின் கதைக்கே வரவில்லையே!
சமையலறைக்கு வெளியே ஒரு சொம்பு இருக்கும். தங்கம், வெள்ளி, பித்தளை, மண் இவற்றால் ஆன சொம்பு அல்ல; சிமென்ட் சொம்பு! என் வாழ்க்கையில் அப்போதுதான் முதன்முதலாக சிமென்ட் சொம்பு பார்க்கிறேன். குளியலறைக்குள் போய் அந்த சொம்பில் இருக்கும் நீரில் கையை அலம்ப வேண்டும்.
சரி, கையை அலம்பியாயிற்று; உள்ளே போய் ஏதாவது எடுக்கலாம் என்றால், ‘இரு, இரு…’ என்று என் மாமியாரின் குரல் ஒலிக்கும் – அவர் எங்கிருந்தாலும் நான் சமையலறைக்குள் நுழைவது அவருக்குத் தெரிந்துவிடும். இது என்ன மாய மந்திரம் என்று இதுவரை எனக்குப் புரிந்ததே இல்லை!
அடுத்தாற்போல சமையலறையில் இருக்கும் குழாயில் கையை அலம்ப வேண்டும். அந்தக் குழாயை – விரல்களால் அல்ல – மேல் கைகளால் இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டு –– திறந்து கையை அலம்ப வேண்டும்.
ஒரொரு சமயம் இப்படியாவது கையை அலம்பி அலம்பி சமையலறையிலிருந்து ஏதாவது எடுக்க வேண்டுமா என்று தோன்றும். உள் பாத்திரங்கள், வெளி பாத்திரங்கள் என்று இருக்கும். உள் பாத்திரங்களை வெளியே கொண்டு வரக் கூடாது. வெளியில் இருப்பது உள்ளே போகக் கூடாது. வெளியே குடிக்கும் நீருக்கு தனியாக ஒரு பாத்திரம். அதில் நீர் காலியாகிவிட்டால், சமையலறைக்குள் போய் சொம்பில் (இது வேறு சொம்பு – பித்தளை சொம்பு!) இருக்கும் கொதித்து ஆறின நீரை மேலே சொன்ன முறையில் கையை அலம்பிக் கொண்டு எடுத்து வந்து வெளியில் இருக்கும் பார்த்திரத்தில் ஊற்ற வேண்டும். பொதிகை தொலைக்காட்சியில் வரும் ‘அத்தே! நான் ஸ்கூலுக்குப் போய்விட்டு வரேன்’ விளம்பர மாமியார் போல என் மாமியாரும் என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பார்.
எனக்கு சவாலாக இருந்தது அந்த சிமென்ட் சொம்பு தான். (இப்போது கூட அவ்வப்போது கனவில் வந்து ‘ஹா…..ஹா…..!’ என்று வீரப்பா ஸ்டைலில் சிரிக்கும் அந்த சொம்பு) திருமணம் ஆன அடுத்த நாள் ‘வாசல் தெளித்து கோலம் போடு’ என்றார் என் மாமியார். ‘கிணற்றிலிருந்து தண்ணி சேந்திக்கோ..!’ இது உபரி கட்டளை. கிணறு, தண்ணி இந்த இரண்டு வார்த்தைகளை வைத்துக் கொண்டு சேந்திக்கோ என்றால் இறைப்பது என்று அர்த்தம் புரிந்து கொண்டேன். (I am always good at reading in between the lines….!)
நான் கேட்க மறந்தது எதால் சேந்திக் கொள்வது? நான் மரியாதையாக (திரு திரு) முழிப்பதைப் பார்த்து ‘அந்த சிமென்ட் சொம்பு இருக்கு பாரு, அதில் சேந்திகோ..!’ என்றார் என் மாமியார்.
‘எனக்குதான் கிணற்றில் நீர் சேந்த வருமே! ஸ்ரீரங்கத்தில் என் பாட்டி அகத்தில் கிணற்றில் நீர் ‘சேந்தி’ இருக்கிறேனே’ என்று மனதிற்குள் தன்னைபிக்கை ஊற்றுப் பெருக்கெடுக்க, சிமென்ட் சொம்பை தூக்கிக் கொண்டு கிணற்றை நோக்கி நடந்தேன். தாம்பக் கயிற்றில் சொம்பைக் கட்டி உள்ளே இறக்கினேன். மேலே இழுத்தால் கனமே இல்லை. சிமென்ட் சொம்பில் இத்துனூண்டு தண்ணீர்!
அசோக்நகரில் எங்கள் வீடு. MIG அடுக்குக் குடியிருப்பு. 2 பெட்ரூம் வீடு. வீட்டின் முன்னாலும் பின்னாலும் நிறைய இடம் இருக்கும். சிமென்ட் சொம்பில் வந்த நீரைப் பார்த்து எனக்கு கண்ணில் நீர்! இத்தனூண்டு இத்தனூண்டாக எத்தனை முறை நீர் சேந்தி வாசல் தெளிப்பது?
‘மொதல் தடவ சேந்தினத கீழ கொட்டிடு…!’ பின்னாலிருந்து கட்டளை. ‘ரெண்டாவது தடவ தண்ணி எடுத்து வாசல் தெளி…!’
‘ராத்திரில கிணற்றை பூதம் காவல் காக்கும். அதனால மொத தண்ணியை கொட்டிடணும்…!’ காரணம் புரிந்தது.
‘இத்துனூண்டு தண்ணி தான் வரது…’ தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்டேன். ‘இன்னொரு தடவ தண்ணி எடுத்துண்டு வா…!’
‘எத்தன தடவ?’
என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ‘சரி பெரிய பக்கெட் எடுத்துக்கோ!’ ஒரு வழியாக பெரிய பக்கெட்டில் நீர் எடுத்து வாசல் தெளித்து எனக்கு தெரிந்த ‘மாடர்ன் ஆர்ட்’ கோலத்தைப் போட்டு முடித்தேன்.
‘புள்ளிக் கோலம் வராதா?’
‘வராது…’
அரிச்சந்திரனின் தங்கை நான்!
ஒரு நாள் காலை எழுந்திருக்கும்போதே தூக்கமான தூக்கம். முதல் நாள் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வந்ததன் விளைவு.
‘ஆவ்வ்வ்….!’ என்று கொட்டவி விட்டுக் கொண்டே சிமென்ட் சொம்பை கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் இறக்கினேன். மேலே இழுத்தால் சிமென்ட் சொம்பு காணோம்! அய்யய்யோ!
சட்டென்று தூக்கம் கலைந்து, கயிற்றைப் பார்த்தால் சொம்பின் கழுத்து மட்டும் கயிற்றில்! தூக்குப்போட்டுக் கொண்டு விட்டதோ? சொம்பு கிணற்று சுவற்றில் பட்டு உடைந்து விட்டது. தூக்கக்கலக்கத்தில் எனக்கு இது உறைக்கவே இல்லை!
மாமனார் வேறு ரொம்ப கோபக்காரர். என்ன செய்வது? கயிற்றை மறுபடி கிணற்றில் இறக்கிவிட்டு – சொம்பின் கழுத்துடன் தான் – ஆபத் பாந்தவா, அனாத ரக்ஷகா என்று கணவரிடம் ஓடி – இல்லையில்லை – நடந்து தான் – போய் சொன்னேன்.
ஒரு நிமிடம் யோசித்தார். பிறகு சொன்னார்: ‘ அந்தக் (சொம்பின்) கழுத்தையும் கிணற்றில் போட்டுவிடு. அம்மாவிடம் சொம்பு கிணற்றுக்குள் விழுந்துடுத்து அப்படின்னு சொல்லிடு’ என்றார்.
மாமியாரிடம் போய் சொன்னேன் ‘சொம்பு கிணத்துக்குள் விழுந்துடுத்து!’ நான் சொன்னது மாமனாரின் காதிலும் விழுந்துவிட்டது.
மாமனார் ஏதோ கோவமாக சொல்ல ஆரம்பித்தார். மாமியார் சொன்னார் : ‘புது பொண்ணு; விடுங்கோ!’
அப்பாடி பெரிய ரிலீப். மாமனார் மாமியார் கோவிச்சுக்கலை என்பதற்காக இல்லை.
NO MORE சிமென்ட் சொம்பு!
பாவம் அந்த சொம்பு. நான் கரித்து கொட்டியதிலேயே தற்கொலை பண்ணிண்டுடுத்தோ?