"

தீபாவளி என்றால் ஒரு சம்பவம் தவறாமல் எனக்கு நினைவுக்கு வரும்.

 

ஒருமுறை நானும் என் தோழியும் ‘கல்யாணப்பரிசு’ படம் பார்க்கப் போயிருந்தோம்.  என் தோழிக்கு ரொம்பவும் இளகிய மனது. சோகப் படம் என்றால் பிழியப் பிழிய அழுவாள். அழுது அழுது சினிமா அரங்கமே அவளது கண்ணீரில் மிதக்கும். எனக்கோ அவளைப் பார்க்கவே சிரிப்பாக இருக்கும்.

 

கல்யாணப்பரிசு படம் பாதிவரை நன்றாகவே இருந்தது. தங்கவேலு, சரோஜாவின் நகைச்சுவைக் காட்சிகளை ரொம்பவும் ரசித்துக் கொண்டிருந்தோம். அப்புறம் வந்தது படத்தில் ஒரு திடீர் திருப்பம்.

 

தான் விரும்பும் ஜெமினி கணேசனையே தன் அக்காவும் (விஜயகுமாரி) விரும்புவது தெரிந்து தங்கை சரோஜா தேவி தன காதலைத் தியாகம் செய்கிறார். (இந்த இடத்தில் என் தோழியின் அழுகையும் ஆரம்பித்தது.) ஜெமினியும் விஜயகுமாரியும் திருமணம் செய்துகொண்டு வெளியூரில் குடும்பம் நடத்தச் செல்லுகிறார்கள். ரயில் நிலையத்தில் இருவரையும் வழி அனுப்ப வரும் சரோஜாதேவி கண்ணீருடன் கையை அசைத்து அவர்களுக்கு விடை கொடுப்பார். பின்னணியில் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்’ பாட்டு ஒலிக்கும்.

 

என் தோழியால் அழுகையை அடக்கவே முடியவில்லை. பொதுவிடம் என்பதையும் மறந்து விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள். என் சமாதானங்கள் அவளிடம் செல்லவேயில்லை. சொல்லப்போனால் அரங்கம் முழுவதுமே சோகமான சூழல் தான். பலரும் ‘ப்ச்…ப்ச்’…..’ என்று சரோஜாதேவியின் நிலைக்கு வருந்திக் கொண்டிருந்தார்கள்.

 

அடுத்த சீன். வெளியூரில் விஜயகுமாரியும், ஜெமினியும் குடித்தனம் நடத்துவதைக் காட்டினார்கள். ஜெமினி சோகமான முகத்துடன் சாப்பிட உட்காருவார். வி.குமாரி சாதம் போடுவார். திடீரென்று அரங்கத்தில் ஒரு குரல்: ‘சாம்பார் ஊத்தும்மா…!’ என்று.

 

அடுத்த கணம் அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ரொம்பவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். என் தோழிக்கோ ஒரே கோவம். ‘ச்சே! என்ன மனிதன்! அங்க ஒருத்தி கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும்போது இப்பிடியா ஜோக் அடிக்கிறது!’ என்று பொரிந்து தள்ளினாள். நான் சிரிப்பது அவளது கோவத்தை இன்னும் அதிகமாக்கியது. ‘மனசாட்சி இருந்தால் நீ இப்படி சிரிக்க மாட்டே!’ என்று என்னை கோபித்துக் கொண்டாள்.

 

‘ஏய்! இது வெறும் சினிமா. இதற்கு ஏன் உனக்கு இவ்வளவு கோவம் வரது?’ என்று நான் கேட்டவுடன் தான் அவள் கொஞ்சம் நிதானத்திற்கு வந்தாள்.

 

இந்தப் படத்தில் வரும் அழகான தீபாவளி பாட்டு இதோ உங்களுக்கு.

 

முதலில் சந்தோஷமாகப் பாடப்படும் இந்தப்  பாடல் பிறகு சோகமாகவும் பாடப்படும். நான் சந்தோஷத்தை மட்டுமே உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்.

 

சில நாட்களாக இணையத்திற்கு வர முடியாத நிலை. இந்த நிலை இன்னும் பல நாட்கள் தொடரும் என்று தோன்றுகிறது. இதனால் பலருடைய பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் போட முடியவில்லை. எல்லோரிடமும் மன்னிப்பு வேண்டுகிறேன்.

 

தீபாவளி வாழ்த்துகளை தெரிவிக்கவாவது ஒரு பதிவு போட வேண்டாமா? அதனால் இந்தப் பதிவு.

 

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற….. Copyright © 2014 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book