"

 

வகுப்பறை என்றால் ஆசிரியர் கேள்வி கேட்கவேண்டும்; மாணவர்கள் பதில் சொல்லவேண்டும் என்று நியதி. ஆனால் நான் எடுத்த ஆங்கில (Spoken English) வகுப்புகளில் இது வேறுமாதிரி இருக்கும். ‘நீங்கள் என்னைக் கேள்வி கேட்கலாம் – ஆங்கிலத்தில் ‘ என்று அவர்களை ஆங்கிலத்தில் பேச வைப்பதற்காக சொல்லுவேன்.

 

எனது வகுப்பு என்று சொல்லும்போது பல வயதுகளில் மாணவர்கள் இருப்பார்கள். சில வகுப்புகள் எல்லோருமே சின்ன வயதுக்காரர்களாக  – கல்லூரி மாணவர்களாக அமைந்துவிடும். வகுப்பறை ‘கலகல’ தான். ஆண்கள் பெண்கள் என்று கலந்து கட்டி இருப்பார்கள். சின்னவயதுக்காரர்கள் அதிகம் இருந்து ஒன்றிரண்டு 40+ வயதுக்காரர்கள் இருந்தால் என் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். காளையர்களுக்கும், கன்னியருக்கும் வகுப்பு ஜாலியாக இருக்கவேண்டும். நாற்பது வயதினருக்கோ ‘dead serious’ ஆக இருக்க வேண்டும். நான் சொல்லுவேன்: Let’s be alive and serious. Let’s not die to be serious’ என்று. சிலசமயங்களில் ‘மேம், இந்த uncle மறைக்கிறார்’ என்று ‘அழகன்’ படத்தில் வருவது மாதிரி குற்றச்சாட்டுகளும் வரும். எல்லாவற்றையும் சவாலே சமாளிதான்!

 

சில வகுப்புகளில் வெளிநாட்டவர்களும் இருப்பார்கள். அதுவும் கொரியன் மாணவர்கள் நிறையப்பேர் வருவார்கள். டூரிஸ்ட் விசாவில் 6 மாதம் வந்துவிட்டு 3 மாதங்களில் ஆங்கிலம் கற்றுக்கொண்டு போவார்கள். அப்படி ஒரு வகுப்பில் ஒரு கொரியன் மாணவர் இருந்தார் அவர் பெயர் மின்.

 

அது ஒரு மார்னிங் மார்னிங் (காலங்கார்த்தால!) வகுப்பு. அதாவது காலை 6.30 மணிக்கு வகுப்பு ஆரம்பம். வகுப்பு தொடங்கியவுடன் வழக்கம்போல நான் ‘any questions?’ என்று கேட்டேன். மின் என்னைப்பார்த்து ‘டீச்சர் ஐ ஹவ் அ க்வெச்சின்’ என்றார்.

 

‘fire…!’ என்றேன்.

மின் துள்ளி எழுந்தார். ‘Fire…..!!!!?’

 

‘No, No, I mean fire your question!’

 

ஆசுவாசப்படுத்திக்கொண்டு உட்கார்ந்தார் மின்.

 

‘ஆர் யூ நான்-வெஜிடேரியன்?’ என்று கேட்டார். திடீரென்று வந்த இந்தக் கேள்வியில் கொஞ்சம் – இல்லையில்லை நிறையவே அதிர்ந்து போனேன். நான் மட்டுமல்ல; தூக்கக்கலக்கத்தில் இருந்த மற்ற மாணவர்களும் இந்த கேள்வியில் ‘திடுக்’கென்று விழித்துக்கொண்டனர். நான் சற்று நிதானப்படுத்திக் கொண்டு ‘why Min?’ என்றேன். அந்த மாணவர் தன்னிலை விளக்கம் கொடுப்பதற்கு முன் ‘Our teacher is pure vegetarian’ என்று விழித்தெழுந்த மாணவர்கள் சிலர் கொரியன் மாணவர் மீது பாயாத குறையாக பதிலளித்தனர். மின்னின் கவனம் இப்போது சற்று மாறி, ‘is there not-so-pure-vegetarian?’ என்ற கேள்வியாக மாறியது.

 

இன்றைக்கு யார் முகத்தில் விழித்தேன்? நரி முகத்திலா? பரி முகத்திலா? யோசிக்க ஆரம்பித்தேன். மின் தொடர்ந்தார்: ‘டீச்சர்! இரண்டு வகைதானே இருக்கிறது? வெஜிடேரியன், நான்-வெஜிடேரியன்? ப்யூர் வெஜிடேரியன், நாட் ஸோ ப்யூர் வெஜிடேரியன் என்று இருக்கிறதா?’

 

நிச்சயம் பரி முகத்தில்தான் என்ற தீர்மானத்திற்கு வந்தேன். குரலைக் கண்டிப்பாக வைத்துக்கொண்டு, ‘ஏன் மின், உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்?’ என்றேன். மற்ற மாணவர்கள் தங்களுக்குள் என்னவோ கிசுகிசுவென்று பேசத்தொடங்கிவிட்டனர். குரலை உயர்த்திச் சொன்னேன்: ‘Let’s listen to Min!’

 

‘டீச்சர் உங்கள் நெற்றியில் ஏன் சிவப்புக் கலர் வட்டம்?’

அட கஷ்டமே! என் பொட்டைப் பார்த்துவிட்டு இவருக்கு ஏன் நான்-வெஜ் சந்தேகம் வரவேண்டும்?

 

‘டீச்சர்! உணவு பொட்டலங்களின் மேல் வெஜெடரியன் என்றால் பச்சைக் கலர் வட்டமும் நான்-வெஜ் என்றால் சிவப்புக் கலர் வட்டமும் அச்சடித்துக் கொடுக்கிறார்கள், இல்லையா? நீங்கள் ஏன் சிவப்பு வட்டத்தை உங்கள் நெற்றியில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் நான்-வெஜ் என்று தெரிவிக்கத்தானே?’ என்றார் ஒரே மூச்சில்!

 

நான் நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். மற்ற மாணவர்களும் என்னுடன் சிரிப்பில் கலந்துகொள்ள மின்னுக்கு அப்போதுதான் தான் ஏதோ தவறாகக் கேட்டுவிட்டதாக தோன்றியது.

 

‘டீச்சர், நான் கேட்டது தவறா?’ என்றார். ‘தவறேயில்லை, மின். ஆனால் நம் வகுப்பில் இருக்கும் எல்லா பெண்களும் நெற்றியில் வைத்துக்கொண்டு இருக்கிறார்களே!’ என்றேன்.

 

மின் அதற்கும் சரியாக ஒரு பதில் சொன்னார். ‘அவர்கள் எல்லோரும் நீளமாக கலர்கலராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மட்டும்தான் தினமும் சிவப்புக் கலரில், வட்டமாக வைத்துக் கொண்டு வருகிறீர்கள்’.

 

 

நிஜம்தானே!

 

இனிமேல் மாணவர்களைப்பார்த்து கேள்வி கேளுன்னு சொல்லுவியா? சொல்லுவியா?

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற….. Copyright © 2014 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book