"

penguine

முன் குறிப்பு: தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ மலையாளப் பட விமரிசனம் என்று நினைத்தால் ஞான் – மன்னிக்கவும் – நான் பொறுப்பல்ல!

‘பிங்கு’ என்பது நானும் என் பெரிய பேரனும் மிகவும் விரும்பிப் பார்த்த கார்ட்டூன் நிகழ்ச்சி. அந்த சமயத்தில் வெறும் கார்ட்டூன் நெட்வொர்க் மட்டும்தான். போகோ, சிபிபிஸ் எல்லாம் கிடையாது. கார்ட்டூன் நெட்வொர்க்கிலேயே காலை 11 மணியிலிருந்து டைனி (TINY TV) என்று 2 மணிநேரத்திற்கு வரும். அதில் சின்ன சின்னதாக நிறைய கார்டூன்கள் வரும். அதில் ஒன்று தான் பிங்கு என்னும் ஒரு குட்டி பெங்குயின். பேச்சே கிடையாது. வெறும் இசைதான். படம் பார்த்துக் கதை சொல் தான். எடுத்தவுடன் ஒரு குட்டி பெங்குயின் வந்து தன் மூக்கை நீட்டி இரண்டுதடவை ‘பீயங்…பீயிங்..’ என்று கத்தும்.

அந்தக் குட்டி பிங்குவிற்கு ஸ்கூல் போகப் பிடிக்காது. இழுத்துப் போர்த்திக் கொண்டு ஜுரம் வந்தது போல நடிக்கும். பிங்குவின் அம்மா டாக்டரை அழைத்துக் கொண்டு வரும். டாக்டர் பெரிய – நிஜமாகவே பெரிய – ஊசியை எடுத்துக் கொண்டு வருவதைப் பார்த்து குட்டி பிங்கு பின் பக்க கதவு வழியாக ஸ்கூலுக்கு ஓடி விடும்! ஒவ்வொரு கதையும் இவ்வளவுதான்.

ஸ்னோமேன், சின்ன சின்ன பெங்குயின் வீடுகள் என்று பனிக்கட்டிகளுடன் பெங்குயின்கள் இருக்கும் அன்டார்டிகாவை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவார்கள்.

நாடி, ஆஸ்வால்ட் (ஆக்டோபஸ்), பாப் த பில்டர் என்று நிறைய வரும். பிங்குவிற்கு அடுத்தபடியாக எங்கள் இருவரையும் கவர்ந்தது ஆஸ்வால்ட். மிக மிக நல்ல ஆக்டோபஸ். தலையில் சின்னதாக ஒரு தொப்பி போட்டிருக்கும். நண்பர்களைப் பார்க்கும்போதெல்லாம் அந்த தொப்பியை கழற்றி அது ‘விஷ்’ பண்ணும் அழகே அழகு!

அதன் தோழன் ஒரு குட்டி நாய். ‘வின்னி’ என்று பெயர். நல்ல ஆங்கிலத்தில் உரையாடல்கள் இருக்கும். இவர்கள் இரண்டுபேரும் சேர்ந்து வீட்டுத் தோட்டத்தில் தக்காளிசெடி போடுவார்கள். தக்காளி அழகழகாக வரும். அடுத்த நாள் காலையில் பார்த்தால் சின்னச்சின்ன புழுக்கள் வந்து அவற்றை சாப்பிட்டிருக்கும். அலுக்காமல் சலிக்காமல் வாங்கி வாங்கி வந்து செடி நட்டு கடைசியில் எல்லாப் புழுக்களும் சாப்பிட்டது போக மீதி இருக்கும் செடியிலிருந்து தக்காளியை  ஆஸ்வால்டும், அதன் தோழன் வின்னியும்  சாப்பிடும்.

அடிதடி சண்டை, ஒருவரையொருவர் வெட்டுவது, குத்துவது என்று எதுவுமே இந்த கார்டூன்களில் இருக்காது. வரும் அத்தனை விலங்குகளும் ஒன்றுகொன்று ஒற்றுமையாக விளையாடும். நட்பு, விட்டுக் கொடுத்தல் இவைதான் முக்கிய கரு.

penguin-diner-screenshot

அடுத்து பென்னி. இதுவும் ஒரு பெங்குயின் தான். இது கார்டூன் இல்லை. ஒரு விளையாட்டு. இதன் கதை வேறு. அண்டார்டிகாவில் ட்ரெக்கிங் போகும்போது பென்னிக்கு வழி தவறிவிடும். மீண்டும் வீட்டிற்கு போக பணத்தை சம்பாதிக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு இடத்திலும் உணவகங்கள் வைத்து சமைத்து பரிமாறி பணம் சேர்த்து கடைசியில் அன்டார்டிகா போகும்.

இந்த விளையாட்டை நான் என் சின்னப் பேரனுடன் விளையாடுவேன். இதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் பென்னி பல வேலைகளை (multi-task) அழகாக கிடுகிடுவென செய்யும் பாங்கு.

காலையில் 9 மணிக்கு உணவகம் திறக்கும். மொத்தம் 5 மேசைகள். வரும் வாடிக்கையாளர்களை டேபிளில் உட்கார வைத்து ஆர்டர் எடுத்து பரிமாறி பணத்தை பெற்றுக் கொண்டு…..மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் Penguin Diner என்ற இந்த விளையாட்டு.

மொத்தம் மூன்று சுற்றுகள். முதல் சுற்று கொஞ்சம் சுலபமாகவே இருக்கும். உணவகத்தின் பெயர் Hill Top Cafe. முதல் நாள் 105 டாலர்கள் சம்பாதிக்க வேண்டும். அடுத்தநாள் இன்னும் கொஞ்சம் கூட. இந்த சுற்று முடிந்தவுடன், இரண்டாவது சுற்று.

இந்த உணவகத்தின் பெயர் Ice Rink Cafe. இப்போது இன்னும் சீக்கிரம் சீக்கிரம் விருந்தாளிகள் வருவார்கள். இரண்டிரண்டு பேர்களாக வருவார்கள். சில சமயம் நாம் சரியாக அவர்களை அமர்த்தி ஆர்டர் எடுத்து சப்ளை பண்ணவில்லையானால், அடுத்து க்யூவில் காத்திருக்கும் பெங்குயின்களின் முகம் ‘சிவப்பா’க மாறும். விருட்டென்று வெளியேறி விடுவாரகள். என் பேரன் அலறுவான்: ‘பாட்டி, பாட்டி, மூஞ்சி செவந்து போச்சு, சீக்கிரம் சீக்கிரம் உட்கார வை’. அவசரமாக மௌஸ்-ஐ இங்கும் அங்கும் நகர்த்தி……  அப்பா! பேரன் முகத்தில் சிரிப்பு வரும்.

சற்று நேரம் கழித்து இடம் காலியானவுடன் முகம் சிவந்தவர்களை  அமர்த்தி அவர்கள் கேட்டதைக் கொடுத்தால், சற்று குறைவாக டிப்ஸ் வைப்பார்கள்.

பென்னிக்கு புது ஷூக்கள் வாங்கலாம். இன்னும் வேகமாக ஓடி ஓடி சப்ளை செய்வாள்.  ஹோடேலின் உள்அமைப்புகளை மாற்றலாம். தொலைக்காட்சி பெட்டியை வைத்தால், உணவுக்குக் காத்திருக்கும் பெங்குவின்கள் சற்று பொறுமை காக்கும். விருந்தினர்கள் உட்கார்ந்தவுடன், உணவு பரிமாற தாமதமானால் அப்போதும் முகம் சிவந்து வெளியேறிவிடுவார்கள். ‘சீக்கிரம் சீக்கிரம் சாப்பாடு கொண்டு வா…ஆஅ…..’ என்பான் பேரன்.

ஒரு நாளைக்கு இவ்வளவு என்று பென்னி சம்பாதிக்க வேண்டும். குறைவாக சம்பாதித்தால், மறுபடி அதே நாளை ஆட வேண்டும். விருந்தினர்கள் வருவதும், டேபிளில் உட்கார்ந்தவுடன், அவர்கள் கையில் மெனு கார்டு வருவதும், உணவு வரும்வரை விருந்தினர்கள் காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதும் அழகோ அழகு!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விலை. பின்னணி இசை நன்றாக இருக்கும். காசை எடுத்து பாக்கெட்டில் பென்னி போடும்போது காசுகள் குலுங்கும் ஓசை; விருந்தினர்கள் ஆர்டர் எடுத்துக் கொள்ள பென்னியை கூப்பிடும் ‘ஹலோ’ எல்லாமே நன்றாக இருக்கும். நானும் என் சின்னப் பேரனும் ரசித்து ரசித்து ஆடுவோம்.

மூன்றாவது உணவகத்தின் பெயர் Ice Berg Cafe. இங்கு வரும் விருந்தாளிகள் எல்லோரும் கழுத்தில் ஸ்கார்ப் கட்டிக் கொண்டு வருவார்கள். அண்டார்டிகாவின் சமீபம் ஆயிற்றே!

மூன்றாவது சுற்றும் வெற்றிகரமாக ஆடிவிட்டால், பென்னி நமக்கெல்லாம் ‘டாடா’ காட்டிவிட்டு, சூப்பராக உடை அணிந்துகொண்டு, ஸ்டைலாக கோலா குடித்தபடியே, கப்பல் ஏறி அண்டார்டிகா போய்விடுவாள்.

இப்போது பேரன்கள் இருவரும் பெரியவர்களாகி படிப்பில் ரொம்பவும் மும்முரமாக இருக்கிறார்கள். அதனால் கார்டூன் பார்ப்பதோ, பெங்குயின் டைனர் விளையாடுவதோ இல்லை. வெறும் ஸ்பைடர் சாலிடேர் தான்!

நீங்களும் பெங்குயின் டைனர் ஆடலாம் : http://www.2dplay.com/

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற….. Copyright © 2014 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book