"

IMG_20130221_141212

மித்தம் என்று சொல்லும் முற்றம்

IMG_20130221_142929

வெந்நீர் உள் அங்கிருக்கும் விறகு அடுப்பில் சருவம் (ஒரு பாத்திரம்) வைத்து வெந்நீர் போடுவது வழக்கம்.

IMG_20130221_142914

முதல் முற்றம் தாண்டி உள்ளே போனால் இன்னொரு முற்றம் – இதனை இரண்டுகட்டு வீடு என்பார்கள்.

IMG_20130221_145709

திண்ணை வீடு

‘லெட்ரீன் காணோம்பா! ஸ்க்வேரா (ஸ்கொயர்) ஒரு இடம். கதவே இல்லப்பா. அங்க ஒக்காரு ஒக்காருன்னு அம்மா மெரட்டினாப்பா! இருட்டு வேற. நான் என்னப்பா பண்றது?’  என்று கண்ணீரும் கம்பலையுமா என் பெண் என் அகத்துக்காரர் கிட்ட சத்தமா சொல்றத கேட்டு நண்டுசிண்டுகள், சித்தி சித்தியா எல்லோரும் ‘கடகட’ன்னு சிரிச்சா. என் கணவர் தனக்கு வந்த சிரிப்பை அடக்கிண்டு ‘சரி விடு. அம்மாக்குத் தெரியலை. நாம தூங்கலாம், வா!’ என்று அவளை பக்கத்தில் படுக்க விட்டுக் கொண்டார். ரொம்ப நேரம் இந்த ராக்ஷசி தூங்கலைன்னு தெரிஞ்சுது. எப்படின்னு கேக்கறேளா? ‘இவாத்துல லெட்ரீன் கிடையாதாப்பா?’ என்று தூங்கிப்போன என் அகத்துக்காரரிடம் இவள் கேட்டுக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது!

அசதியில் நான் நன்றாகத் தூங்கிவிட்டேன், அடுத்தநாள் எனக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி இருக்கிறது என்று உணராமலேயே. எழுந்திருக்கும்போதே ரொம்பவும் லேட்டாகிவிட்டது. சித்தி குளித்துவிட்டு தளிகை உள்ளில் வேலையாக இருந்தார். நான் கொஞ்சம் வெட்கத்துடன், ’ஸாரி! சித்தி! மணி ஆனதே தெரியலை’, என்றேன். ‘பரவாயில்லடி, பிரயாண அலுப்பு. பல்லு தேச்சுட்டு வா! காப்பி தரேன்’ என்றார். வெளியிலிருந்த மித்தத்தில் போய் பல்லைத் தேச்சுட்டு வந்தேன். சித்தியின் கைகாப்பி மணத்தது.

‘கார்த்தால டிபன் சாப்பிட்டுப் பழக்கமா உனக்கு? இங்க டிபன் தான் கார்த்தால’ என்று கேட்டார் சித்தி. ‘இல்ல சித்தி. ஒரேயடியா பத்து மணிக்கு சாப்பாடுதான். மச்சினர்கள் எல்லாம் 9 மணிக்கு சாப்பிட்டு விட்டு ஆபீசுக்குப் போய்விடுவா. அம்மாவும் நானும் பத்து மணிக்கு சாப்பிட்டுடுவோம். அப்புறம் ஒன்றரை மணிக்கு காப்பி. 3 மணிக்கு அப்பாவிற்கு டிபன். அதையே நாங்களும் சாப்பிடுவோம்… ராத்திரி சாப்பாடு இவாள்ளாம் ஆபீசுலேர்ந்து வந்தவுடன் தான்’.

‘அங்க எல்லாரும் பெரியவா. இங்க குழந்தைகள் இருக்கா பாரு. அதனால கார்த்தால டிபன் தான். திருப்பித்திருப்பி இட்லி, தோசைதான். குழந்தைகளுக்கு வயறு ரொம்பணும் இல்லையா?’ என்றார் சித்தி.

‘நீங்க பூரி சப்பாத்தி பண்ணமாட்டீங்களா?’ என்று என் பெண் கேட்டது. ‘இன்னிக்கு ராத்திரி குழந்தைக்கு பூரி பண்ணலாமா?’ என்றார் சித்தி. ‘தொட்டுக்க என்ன?’ என்றது பெரிய மனுஷி மாதிரி. ‘உருளைக்கிழங்கு கரமது?’ ‘ஐயையே! பூரிக்கு கரமது எல்லாம் பண்ணக்கூடாது. சன்னா, ராஜ்மா, பட்டாணி மசாலா பண்ணனும்!’ என்று நீட்டி முழக்கியது நான் பெற்ற செல்வம்.

‘உங்கம்மா இதெல்லாம் பண்ணுவாளா?’

‘ஊஹூம்! அம்மா ஆத்துல பாம்பே சட்னி பண்ணுவா. எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஹோட்டல சாப்பிடுவோம். அப்புறம் கோப்தா………!’

பயந்துகொண்டே சித்தியைப் பார்த்தேன். ‘என்னடிது…. வெளில ஹோட்டல்ல சாப்பிடுவீங்களா’ என்று கேட்பாரோன்னு. ஆனால் ரொம்ப டீசென்ட் ஆக விட்டுவிட்டார். அவரை அப்படியே விழுந்து சேவிக்க வேண்டும் போல இருந்தது.

என் மாமியாருக்கு வெங்காயமே உள்ளே வரக்கூடாது. பிள்ளைகள் மாமானார் எல்லோரும் சேர்ந்து எப்பவாவது வெங்காய சாம்பார் கேட்பா. அதுக்குன்னு தனியா பாத்திரங்கள், கரண்டி, ஸ்டவ் கூடத் தனிதான். தளிகை உள்ளில் பண்ணக்கூடாது. ஸ்டவ்வை வெளியே வைத்துக்கொண்டு பண்ணவேண்டும். சாம்பார் பண்ணிய பாத்திரம் ஒரு மூலையிலே இருக்கும். மற்ற உள் பாத்திரங்களுடன் சேர்க்கக்கூடாது அதை. பண்ணிமுடித்தவுடன் ஸ்டவ்வை (அந்தகாலத்திய பம்ப்பு ஸ்டவ்!) நன்றாக புளி சாணி போட்டு சித்து (சுத்தம்) பண்ணி வைக்கணும். வெங்காய சாம்பாருக்கே இத்தனை கெடுபிடின்னா எங்கேருந்து இது கேக்கற மசாலா, கோப்தா செய்யறது?

‘நான் குளிச்சுட்டு வரேன், சித்தி.  மாலா! வெந்நீர் உள் எங்கேருக்கு? கொஞ்சம் காமி’, என்று சித்தியின் பெரிய பெண்ணைக் கேட்டேன்.

இங்க வா. நா காமிக்கறேன்னு சித்தி மித்தத்திற்கு அழைச்சுண்டு போனார்.

‘இதான் எங்காத்து வெந்நீர் உள்’

மேல் ஆகாசம். சுற்றிவர வீடுகள். மறைவு என்பதே இல்லாத இடம் அந்த மித்தம். நான்கு வீடுகளுக்கும் பொது. எல்லார் வீட்டின் பின்பக்கக் கதவுகளும் அந்த மித்தத்தில் திறந்தன.

நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். ‘இங்கேயா குளிக்கணும்?’ என் குரலில் இருந்த பதைபதைப்பு சித்திக்குப் புரிஞ்சது போலிருக்கு.

‘இது பட்டணம் இல்லடி பொண்ணே! பொட்டல்காடு. இங்க வந்து நீ லெட்ரீன், வெந்நீர் உள் எல்லாம் கேட்டால் நா எங்கப் போவேன்?’

‘இங்க எப்படி சித்தி குளிக்கறது? எல்லாரும் வந்து போற இடமாச்சே!’

‘நீ கவலைப்படாம குளி. நான் எல்லோராத்துலேயும் போயி எங்க மாட்டுப்பொண்ணு குளிக்கறா. சித்த நாழிக்கு யாரும் மித்தத்திற்கு வாராதேங்கோ ன்னு சொல்லிட்டு வரேன். மாலா! ஓடிப்போயி பக்கத்தாத்து, எதித்தாத்து மாமி கிட்ட மன்னி குளிக்கப் போறா. கொஞ்சம் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கோங்கோ ன்னு சொல்லிட்டு வா!’

‘ஐயையோ! வேணாம் வேணாம்…’ நான் கிட்டத்தட்ட அலறிட்டேன். நான் மித்தத்துல குளிக்கப் போற விஷயம் பிபிசி ல வந்துடும் போலருக்கே!

(தொடரும்…..அடுத்த பகுதியுடன் நிறைவடையும் இந்தத் தொடர் என்ற சந்தோஷ செய்தியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.)

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற….. Copyright © 2014 by ரஞ்சனி நாராயணன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book